பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 6 - மூக்கு முட்ட


அது ஒரு திருமண மண்டபம். எல்லாம் முடிந்து சாப்பாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அருமையான அசைவச் சாப்பாடு. 
என்ன காரணத்தினாலோ எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. பிரியாணி எனப்படும் ஊன்சோறு மிகவும் மிஞ்சிவிடும் போல் 
இருந்தது. திருமண வீட்டாருக்கு மிக்க கவலை. சீக்கிரத்தில் மண்டபத்தைக் காலிசெய்யவேண்டும். தெரிந்தவரிடம் யோசனை 
கேட்டால் ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள். எல்லாமே வெகு நேரம் பிடிக்கும். உடனடியாகச் சாப்பாட்டைக் 
காலிசெய்ய என்ன செய்வது? 

அப்போது ஓர் இளைஞன் வந்தான். 

“நான் ஒரு யோசனை சொல்வேன், கோபித்துக்கொள்ளமாட்டீர்களே?” என்றான் தயக்கத்துடன். 

“சாப்பாடு உடனே காலியாகுமா?”

“இப்பொழுதே காலியாகிவிடும்”

“சரி சொல்”

தயக்கத்துடன் அவன் ஆரம்பித்தான். 

“வெளியில் ஒரு ஐம்பது, அறுபது பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள், எச்சில் இலைகளை எதிர்பார்த்தபடி. ஆளுக்கு ஐந்து ஆள் 
சாப்பாடு சாப்பிடுவார்கள். மீதம் இருந்தால் அவர்களே எடுத்துக்கொண்டும் சென்றுவிடுவார்கள்”

திருமணவீட்டுக்காரர் முதலில் சற்றுத் தயங்கினார்.

“ஒரு அரை மணி நேரத்தில் அத்தனையும் காலியாகிவிடும்” இளைஞன் எடுத்துக்கொடுத்தான். 

சிறிது யோசனைக்குப் பின்னர், “சரி” என்றார் வீட்டுக்காரர்.

“பின்கதவு வழியாகச் சந்தடி செய்யாமல் கூட்டிக்கொண்டுவா, வெளியில் யாருக்கும் தெரியவேண்டாம்”

மீதத்தை அந்த இளைஞன் பார்த்துக்கொண்டான். காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தது போல் என்பார்களே, அந்த 
மாதிரி ‘திபுதிபு’-வென்று நுழைந்த கூட்டம் வெளுத்தக்கட்டத் தொடங்கியது.

சிறிது நேரங்கழித்து, திருமணவீட்டுக்காரர் பந்தி நடக்கும் இடத்துக்குச் சென்றார். எச்சில்கை என்றும் பாராமல் அவரை 
அனைவரும் கையெடுத்துக் கும்பிட்டார்கள். அங்கிருந்த ஒருவனைப் பார்த்து “திருப்தியா சாப்பிடுங்க” என்றார் அவர். 
அவன் மறுமொழி பேசவில்லை. மாறாக, இடதுகை பெருவிரலையும், சுட்டுவிரலையும் தொண்டைக்கருகே கொண்டுசென்று 
தொண்டையை இலேசாகப் பிடித்து ஒரு அமுக்கு அமுக்கிக் காண்பித்தான்.

“ஐயா, அவன் வாயைத் தொறந்த தொண்டக்குழியில சோறு தெரியும்’யா” என்றால் பக்கத்திலிருப்பவன்.

இன்னொருவன் சோற்றை ஒதுக்கிவிட்டு, வெறும் கறித்துண்டுகளை வாய்நிறையப் போட்டு அதக்கிக்கொண்டிருந்தான்
. 
“ஐயா, ஏரு உழுகிறது கணக்கா உழுதுகிட்டு இருக்கான்யா, டே பல்லு தேஞ்சு போயிறப்போகுதுடா” என்று 
இன்னொருத்தனையும் கேலிசெய்தான் அவன்.

இன்னொரு பெண் முடித்துவிட்டு எழுந்து வந்தாள்.

“ஐயா, இப்படி மூக்கு முட்டச் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுய்யா. நீங்களும் ஒங்க புள்ளகுட்டிகளும் ரொம்ப நல்லா இருப்பீக 
ஐயா” என்றாள் கண்களில் நீர் மல்க.

ஏறக்குறைய இப்படி ஒரு காட்சியை ஒரு புலவர் வருணிக்கிறார் பொருநராற்றுப்படை என்ற சங்க இலக்கியத்தில்.

பலநாள் பட்டினி கிடந்த ஒரு பொருநன் கூட்டம் ஒரு மன்னனிடம் செல்கிறது. பெரும் வள்ளலாகிய அந்த மன்னன் 
அவர்களை வரவேற்று, அவர்களின் ஆடல்பாடல்களில் மகிழ்ந்து, பின்னர் ஒரு பெரும் விருந்து படைக்கிறான். பல நாள்கள் 
அங்குத் தங்கி, தொடர்ந்து விருந்து உண்கிறது அந்தக் கூட்டம். பாருங்கள் அந்தக் காட்சியை,

பரல் வறை கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை பயின்று இனிது இருந்து
கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅது - 

இதன் பொருள்:

பருக்கைக் கற்கள் போன்று நன்கு பொரித்த பொரிக்கறி தொண்டையில் மிதக்கும்படி	
உண்டபொழுதின், இடையறாது பழகி இனிதாக உடனுறைந்து,
கொல்லை நிலத்தில் உழுத கொழுப் போன்று, பற்கள்
பகலும் இரவும் இறைச்சியைத் தின்று முனை மழுங்கி,
மூச்சு விடுவதற்கும் இடம்பெறாது -

காடியின் மிதப்ப என்ற தொடரைக் கவனித்துப் பார்த்தீர்களா? காடி என்றால் தொண்டை. பொரித்த கறித்துண்டுகள் போக 
இடமில்லாமல் தொண்டைக்குழிக்குள் மிதந்துகொண்டிருக்கின்றனவாம். எந்த நேரமும் எதனையாவது அரைத்துக்கொண்டே 
இருப்பவனைப் பார்த்து, “பல்லு தேஞ்சுறப் போகுதுடா” என்போம் இல்லையா? “பல்லே, எல்லையும் இரவும் ஊன் தின்று 
மழுங்கி” என்ற தொடரைப் பார்க்கும்போது அது இன்றைய பேச்சு வழக்காய்த் தோன்றவில்லையா? எல்லை என்பது பகல். 

‘உயிர்ப்பிடம் பெறாது’ என்கிறார் புலவர். உயிர்ப்பு என்பது மூச்சு. உயிர்ப்பிடம் என்பது மூச்சு விடும் இடம், அதாவது மூக்கு.
‘உயிர்ப்பிடம் பெறாது’ என்றால் ‘மூக்குப் பிடிக்க’ என்று பொருள்.

வார்த்தைகள்தான் வேறு. வருணனை ஒன்றுதான் – இந்த ஈராயிரம் ஆண்டுகளாக.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!