பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 11 - கம்முனு


அன்று வெள்ளிக்கிழமை. அவன் அலுவலகத்துக்குப் புறப்படும்போதே அவள் அடிபோட்டாள். மாலையில் சீக்கிரம் 
வந்துவிடவேண்டுமென்றும், வரும்போது, மறக்காமல் – சாக்குப்போக்குச் சொல்லக்கூடாது – மறக்காமல் மல்லிகைப் பூ 
வாங்கிவரவேண்டும் என்றும்.

அவன் அலுவலகத்துக்குச் சென்ற கொஞ்ச நேரத்தில் நிலைமை மாறிவிட்டது. தணிக்கைக்குழு வருகிறதென்றும், எவ்வளவு 
நேரமானாலும் இருந்து முடித்துக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டுமென்றும் செய்திவந்தது. உடனே மனைவியை 
கைபேசியில் அழைத்துச் செய்தியைச் சொன்னான். எப்படியும் இரவு ஏழு மணிக்குள் திரும்புவதாகச் சொன்னான். 
“அந்தப் பூ விஷயம்?” “நீயே சமாளித்துக்கொள்” என்று கூறிவிட்டான்.

மாலை களைத்துப்போய் ஏழரை மணிவாக்கில் வீடுதிரும்பிக் கதவைத் தட்டினான். அவள் கதவைத் திறந்துவிட்டவுடன், 
அவன் அப்படியே அசந்து நின்றுவிட்டான். எங்கிருந்தோ அவள் மல்லிகைப்பூ வாங்கித் தலைநிறைய வைத்திருந்தாள். 
சுவாசத்தை நன்றாக உள்ளே இழுத்தான். “அப்பா! என்னா வாசனை! வீடே ‘கம்’முனு இருக்கு!”

இங்கே ‘கம்’ என்பதை gum என்பதுபோல் சொல்லவேண்டும். அதிகப்படியான நறுமணம் என்பதை இச்சொல் குறிக்கும்.

இதில் இன்னொரு ‘கம்’ உண்டு. 

இன்னொரு மனிதர் மாலையில் வீடுதிரும்பும் நேரம். அவருக்கு இரண்டு பையன்கள். இரண்டும் சரியான வாலுகள். 
அவர்களுக்குள் 2 வயதுதான் வித்தியாசம். மூத்தவனுக்கு 6 வயது. இரண்டுபேருக்கும் எப்போதும் போட்டிதான். இவன் 
வைத்திருப்பதை அவன் பிடுங்குவான். அவன் வைத்திருப்பதை இவன் கேட்டு அழுவான். வீடு எப்போதும் களேபரமாகத்தான் 
இருக்கும். அன்று என்னவோ அவர்களுக்குள் ஒற்றுமை தலைதூக்கிற்று. இரண்டுபேரும் அமைதியாக சோபாவில் அமர்ந்து 
சிறுவர்க்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். சாத்தியிருந்த கதவைத் திறந்து வீட்டுக்குள் புகுந்த 
மனிதர் தன்னையே நம்பாமல் அப்படியே நின்றுவிட்டார். சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த மனைவி முந்தானையில் கையைத் 
துடைத்துக்கொண்டே “என்ன அப்படிப் பாக்குறீங்க” என்றாள். “நம்ம வீடுதானா இது’ன்னு நின்னுட்டேன். பசங்க என்ன 
இன்னிக்கிச் சத்தமே போடாம, வீடே கம்முனு இருக்கு” என்றார் அவர். 

இங்கே ‘கம்’ என்பதை gum என்றோ kum என்றோ சொல்லலாம். ரொம்ப நிசப்தமாக என்பதை இச்சொல் குறிக்கும்.

இடத்தைப்பொருத்து இதன் பொருளை உணர்ந்துகொள்வது எளிது.

இப்போது இவற்றைப் பாருங்கள்:

காடே கம்மென்றன்றே - அகநானூறு 23/5
கானமும் கம்மென்றன்றே - நற்றிணை 154/1

இப்போது இவற்றின் பொருளைப் புரிந்துகொள்ளச் சூழலைப் பார்க்கவேண்டும். அதற்கு,, மற்ற அடிகளைப் படிக்கவேண்டும்.

முதலில் அகநானூறைப் பார்ப்போம்.

புதல்மிசைத் தளவின் இதல் முள் செந்நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணியவிழ
காடே கம்மென்றன்றே

இதன் பொருள்:

புதரின் மீது படர்ந்த செம்முல்லையினது காடைக்கோழியின் கால் முள்ளைப் போன்ற சிவந்த அரும்புகள், 
நெருங்கிய குலையினையுடைய பிடவ மரத்தின் அரும்புகளோடு சேர்ந்து கட்டு அவிழ்ந்து மலர, 
காடு முழுவதும் கம்மென்று மணம் வீசுகின்றது.

எனவே இங்கே ‘கம்’ என்ற சொல்லுக்கு நிறைந்த மணம் வீசுதல் என்ற பொருள் கிடைக்கிறது.

இப்போது இதைப் பாருங்கள்:

காடே கம்மென்றன்றே வானமும்
வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பிப்
பல் குரல் எழிலி பாடு ஓவாதே

இதன் பொருள்:

காடு கம்மென்று ஒலியடங்கிப்போய் கிடக்கிறது. வானமும் 
மலைக் குகை போன்ற கரிய இருளைப் பரப்பிப் 
பலவான இடிமுழக்கத்தையுடைய மேகம் முழங்குவதும் இல்லாமல் போயுள்ளது.

பார்த்தீர்களா? இங்கே ‘கம்’ என்றால் அமைதி என்ற பொருள். 

இன்றைக்கும் நாம் இடத்தைப் பொருத்துக் ‘கப்’பென்று பொருளைப் பிடித்துக்கொள்ளும் இந்தக் ‘கம்’ என்ற சொல், 
ஈராயிரம் ஆண்டுகளாய் நம்மோடு ‘கம்’மென்று சத்தங்காட்டாமல் வந்துகொண்டிருப்பதை எண்ணிப்பார்க்க நெஞ்சம் 
‘கம்’மென்று மணக்கவில்லையா?

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!