பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 15 - விருந்துக்கு வரக் கரைந்த காக்கை


ஆக்கி முடிந்தவுடன் ஒரு பெரிய தட்டில், இரண்டு பெரிய அகப்பைச் சோற்றை அள்ளிப்போட்டாள் அவள். சோற்றில் 
ஆவி பறந்தது. வாயைக் குவித்துக்கொண்டு ‘பூ பூ’’ வென்று ஊதிச் சூட்டைக் குறைத்தாள். சின்னத் தூக்குப்போணியைத் 
திறந்து கொஞ்சம் நெய்சேர்த்துப் பிசைந்துவிட்டாள். பின்பு அதனை வேகமாக முற்றத்துக்கு எடுத்துச் சென்றாள். கூரைக்கு 
வெளியே நீட்டிக்கொண்டிருந்த குச்சியின்மீது அமர்ந்தவண்ணம் ஒரு காக்கை “கா கா” - வென்று 
கரைந்துகொண்டேயிருந்தது. அவள் தட்டை வைத்துவிட்டுச் சற்று ஒதுங்கி நின்றாள். ‘சட்’டென்று கீழே குதித்த காக்கை, 
அவளை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தது. பின்னர் இரு கால்களையும் சேர்த்து இரண்டு தாவுத் தாவி சோற்றினருகே 
வந்து தன் அலகால் சோற்றுக்குவியலைக் கொத்தி வாயில் போட்டுக்கொள்ள ஆரம்பித்தது.

“என்னடீ? இன்னிக்கிப் புதுசா காக்காவுக்குச் சோறு?”

அடுத்த வீட்டுப்பெண் இடையிலிருக்கும் குட்டையான மண்சுவற்றுக்கு மேல் எட்டிப்பார்த்துக் கேட்டாள்.

“காலயிலயிருந்து இது கத்திக்கிட்டு இருக்குடீ. வாசத்தெளிக்கும்போதே தலைக்குமேலே ஒக்காந்துகிட்டு கத்துச்சு. இப்ப 
என்னடான்னா, கூரையில வந்து ஒக்காந்துகிட்டு கத்திக்கிட்டே இருக்கு. பாக்க பாவமா இருந்துச்சு” என்றாள் இவள்.

“பெரீய பாவம் பாக்குறவ! எனக்குத் தெரியாதா ஒந்நினப்பு? காக்கா கத்தினா விருந்தாளிக வருவாக. ஒனக்கு இப்ப யாரு 
விருந்தாளி? வீட்டுக்காரரு வெளியூரு போய் கொள்ள நாளாச்சு. இப்ப காக்கா கத்துது. அவரு வரப்போறாரு. அந்த நல்ல 
சேதியச் சொன்னதுக்கு இந்தக் காக்காயிக்கு விருந்து வைக்கிற. என்ன நான் சொல்றது?”

இவளுக்கு ‘குப்’பென்று இரத்தம் முகத்துக்கு ஏற கன்னங்கள் சிவந்துபோயின. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் 
விழித்தாள்.

“வய்யி, வய்யி, இந்தச் சோறெல்லாம் பத்தாது. வீட்ல இருக்கிற மூட்டய அவுத்து எல்லா நெல்லயும் அவிச்சுக் குத்தி 
ஆக்கிப்போட்டாக்கூட இந்தக் காக்கா சொன்ன சேதிக்கு ஈடாகுமா? எப்படியோ, இந்தக் காக்கா கத்தி ஒன் வீட்டுக்காரரு 
வந்து, ஒன் ஏக்கமெல்லாம் தீந்து நீ பழய மனுஷியா ஆனாச் சரி”. சொல்லிவிட்டு தலையை இழுத்துக்கொண்டு 
போய்விட்டாள் அவள். 

வீட்டில் காக்காய் கத்தினால் வீட்டுக்கு விருந்தாளி வருவார் என்பது தமிழ் நம்பிக்கை. இன்றைக்குமட்டுமா? ஈராயிரம் 
ஆண்டுகளாக இருந்துவருகிறது இந்த நம்பிக்கை. இந்தக் குறுந்தொகைப் பாடலைப் பாருங்கள்.

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வர கரைந்த காக்கையது பலியே – குறுந்: 210

இதன் பொருள்:

திண்ணிய தேரையுடைய நள்ளியின் புஞ்செய்க்காட்டிலுள்ள இடையர்களின்
கூட்டமான பசுக்கள் கொடுத்த நெய்யோடு, தொண்டி
முழுவதும் ஒருசேர விளைந்த வெண்ணெல்லால் ஆக்கிய சூடான சோற்றை
ஏழு பாத்திரங்களில் வைத்து ஏந்திக் கொடுத்தாலும், அது சிறிதாகும் என் தோழியே!
உனது பெரிய தோள்களை நெகிழ்த்த துன்பம் தீர
விருந்தினர் வரும்படி கரைந்த காக்கைக்கு இடும் பலி - 

பிரிந்து சென்ற கணவன் இன்றைக்குத் திரும்பி வருவான் என்ற பொருள்படும்படி வீட்டு வாசலில் வந்து கரையும் 
காக்கைக்கு, வெண்ணெல்லால் சோறாக்கி, பசுநெய்யை நிறைய விட்டுப்பிசைந்து, ஏழு பாத்திரங்களில் சுடச்சுடக் 
கொடுத்தாலும் அது மிகச் சிறிதே என்று இந்த சங்கத்தோழி, தலைவியைக் கேலி செய்கிறாள்.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!