பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 18 - எத்து


எந்தவித அரவமும் இல்லாமல் இருந்த வீட்டில், திடீரென்று அமைதியைக் கிழித்துக்கொண்டு சின்னவனின் கீச்சுக்குரல் ஓங்கி 
ஒலித்தது.

“அம்மா, அண்ணன் என்ன எத்துராம்’மா”

அடுப்படியில் இருந்தவாறே அம்மாக்காரி கத்தினாள்.

“டே, பெரியவனே! சின்னவன் ஒனக்கு என்ன பந்தாடா? அவன எதுக்குடா எத்துற? வந்தேன், முதுகுத்தோலை 
உரிச்சுப்போடுவேன்”

பதிலுக்குப் பெரியவனும் உரத்த குரலில் முறையிட்டான்.

“அம்மா, இவந்தா’ம்மா மொதல்’ல என்னய ஒதைச்சான்”

அம்மாக்காரி இப்போது சின்னவனை அதட்டினாள்.

“டே சின்ன வாலு! நீ என்ன கழுதையாடா? அண்ணன ஏன்’டா ஒதச்சே? ரெண்டுபேரும் இப்ப தள்ளிப்போயி 
வெளயாடுங்கடா” அடுப்படியில் இருந்தவாறே அந்த முறையீட்டு மன்றம் தன் தீர்ப்பினை வழங்கியது.

இங்கே பார்த்தீர்களா? தம்பி அண்ணனை உதைத்திருக்கிறான். அதற்கு அண்ணன் தம்பியை எத்துகிறான். உதைப்பதற்கும் 
எத்துவதற்கும் என்ன வேறுபாடு? 

எத்து என்றால் உதை என்று அகராதிகள் பொருள் தருகின்றன. ஆனால் இரண்டும் வெவ்வேறானவை. உதைத்தல் என்பது 
காலை மடக்கி, முன்பக்கம் தூக்கிப் பாதத்தால் விசையுடன் தாக்குதல். இதைப் பின்பக்கமாகவும் செய்யலாம். பால் 
கறக்கும்போது சில பசுமாடுகள் இவ்வாறு உதைக்கும். எத்துதல் என்பது காலைப் பின்பக்கம் இழுத்து காலின் முன்பகுதி 
அல்லது கால் கட்டைவிரலை ஒட்டிய பக்கவாட்டுப் பகுதியினால் விசையுடன் தாக்குதல். கால்பந்து விளையாட்டின்போது 
பந்தைத் தொலைதூரத்துக்கு அனுப்ப இவ்வாறு செய்வர்.

இந்த எத்து என்பதன் இலக்கிய வழக்கு எற்று ஆகும். பாய்விரித்துச் செல்லும் ஒரு நாவாய், நடுக்கடலில் அடித்த 
பெருங்காற்றால் அலைக்கழிக்கப்படுவதை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார் மதுரைக்காஞ்சிப் புலவர் 
மாங்குடி மருதனார்.

“பாய்மரத்தை இழுத்துக் கட்டிய வலிமையுள்ள கயிறுகளை அறுத்துப்போடுகிறது கடும் காற்று. பாய்களைப் படபடவென்று 
அடித்துக் கிழித்துப்போடுகிறது. கப்பல் நடுவில் நடப்பட்டுள்ள உயரமான பாய்மரம் அடியோடு சாய்கிற அளவுக்கு அதன் 
அடிப்பகுதியில் ஓங்கி ஒரு எத்துவிடுகிறது. இவ்வாறு சினங்கொண்ட கடுங்காற்று நாற்றிசையிலும் சுழன்று அடிக்கிறது” 
என்கிறார் புலவர். 

வீங்குபிணி நோன்கயிறு அரீஇ இதைபுடையூ
கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துஉடன்
கடும்காற்று எடுப்ப - மது 376-378

இதன் பொருள்:

இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்
பாய்மரம் அடியில் முறியும்படி எற்றித்தள்ளி வெகுண்டு ஒருசேரக்
கடிய காற்று எடுக்கையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,

காற்று மோதிய மோதலில் பாய்மரம் அடியோடு சாய்ந்து விழுந்தது. இதனையே ‘கூம்பு முதல் முருங்க’ என்கிறார் 
புலவர். ‘கூம்பு’ என்பது பாய்மரம் (mast of the vessel). ‘முதல்’ என்பது மரத்தின் முதல், அதாவது அடிமரம். 
நின்றுகொண்டிருக்கும் ஒருவனைக் கீழே காலின் அடியில் ஓர் எத்து எத்தினால் அவன் அடியோடு சாயமாட்டானா? 
அதைப் போலவே நின்றுகொண்டிருக்கும் பாய்மரத்தை  அடியில் காற்று எற்றியதால் அது அடியோடு சாய்ந்தது 
என்பதனைக் குறிக்கவந்த புலவர் ‘எற்று’ என்ற சரியான சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைப் பாருங்கள்.
மிகவும் அருமையான இந்தச் சொல் நுட்பமான பொருள் கொண்டது அல்லவா? இன்றும் சிறுவர்கள்கூட இதனைத் 
தக்கவிதத்தில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்களே!

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்! 

என்னே தமிழின் இளமை!