பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 24 - சாடு


அந்தப் பெண்கள் கல்லூரியில் வகுப்பு தொடங்குவதற்கான மணி அடித்ததும், அதுவரை வெளியில் வாசலில் 
நின்றுகொண்டிருந்த தமிழ்ப்பேராசிரியை வகுப்புக்குள் நுழைந்தார். கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த மாணவியர், 
தம் சத்தத்தை நிறுத்திவிட்டு, எழுந்து நின்றனர். அவர்களைக் கையமர்த்தியவாறு, தன் மடிக்கணினியைத் திறந்தார் 
அந்தப் பேராசிரியை. வகுப்பறையை நோக்கி மதிலில் மாட்டப்பட்டிருந்த திரையுடன் சேர்ந்திருந்த சாதனத்தில் தன் 
மடிக்கணினியைப் பொருத்தி, அதனை இயக்கினார். பின்னர் கணினியின் விசைப்பலகையைச் சற்று நேரம் தட்டினார். 
திரையில் சில எழுத்துக்கள் தோன்றலாயின.

பதிற்றுப்பத்து 77

அரசன் பெருஞ்சேரல் இரும்பொறையைப் புலவர் அரிசில் கிழார் பாடியது.

இதற்குக் கீழ் அந்தப் பாடல் முழுக்கத் தோன்றியது. பேராசிரியை அதில் சில அடிகளை மட்டும் திரையில் பெரிதாகக் 
காட்டினார்.

கந்துகோள் ஈயாது, காழ் பல முருக்கி
உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடிச்
சேண் பரண் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்
ஆ பரந்தன்ன பல் செலவின்
யானை காண்பல் அவன் தானையானே

இதன் அடிநேர் உரை

தறிகளில் கட்டிப்போட விடாமல், குத்துக்கோல்களை முறித்துப்போட்டு,
உயரப்பறக்க மேலெழும் பருந்தின் நிலத்தில் படியும் நிழலைச் சினந்து பாயும்,
வெகு தொலைவுக்கு பரல்கற்களையுடைய மேட்டுநிலத்தில், வளைத்து இழுக்கும் தொறட்டிக் கம்பினையுடைய 
கொங்கர்களின்
பசு மாடுகள் பரந்து செல்வதைப் போன்று நடந்துபோகின்ற, பலவான
யானைகளைக் காண்கிறேன் அவனுடய சேனையில்.

திரையில் படிந்த எழுத்துக்களைப் பேராசிரியை வரி வரியாகப் படிக்க, மாணவிகள் ஆர்வத்துடன் திரையை 
உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

பின்னர் பேராசிரியை விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

“இது சேரமன்னனின் யானைப்படையின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறது. அந்த யானைகளை எதிலும் 
கட்டிப்போடமுடியாது. கந்துகோள் என்பது யானைகளைக் கட்டிப்போடும் தறி. யானைகளை அங்குசத்தால் குத்தி 
வழிநடத்துவர். காழ் என்பது அங்குசம். எந்த அங்குசத்தையும் அந்த யானை ஒடித்துப்போடுமாம். முருக்கி என்றால் 
ஒடித்து என்று பொருள். இந்த அடியைப் பார்த்தீர்களா?

உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி

“உக என்றால் மேலே உயர்தல் ascend என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தரையிலும் மரக்கிளைகளிலும் 
அமர்ந்திருந்த பருந்துகள், யானைகளின் சந்தடியைக் கேட்டு உயர எழுவதற்குத் தாவிப் பறக்கின்றன. அப்போது 
அவற்றின் நிழல்கள் கீழே நிலத்தில் விழுகின்றன. அந்த நிழல்களைப் பார்த்து, அந்த யானைகள் சீறிப் பாய்கின்றனவாம்.
சாடி என்பது சாடு என்பதன் எச்சம். சாடுதல் என்பது சினந்து பாய்தல் …. 
இவ்வாறு பேராசிரியை சொல்லிக்கொண்டிருக்கும்போது, பின் வரிசையில் இருந்த ஒரு மாணவி கையை உயர்த்தினாள்.

“என்னம்மா, ஐயமா?” பேராசிரியை வினவினார்.

அந்த மாணவி எழுந்து சொன்னாள். 

“இந்தச் சாடு என்கிற சொல்லை எங்க தெருப்பக்கம் அதிகமாச் சொல்லுவாங்க” என்றாள் அந்த மாணவி.

“எப்படிச் சொல்வாங்கம்மா, எந்தச் சூழ்நிலையில சொல்வாங்கன்னு சொல்லமுடியுமா?” பேராசிரியை கேட்டார்.

“இப்ப ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தர் மெதுவா ஒண்ணு சொல்றார். அதுக்கு அடுத்தவர் 
ரொம்பக் கோபமா நிறையப் பேசுறார். இன்னொருத்தர் வர்ரார். இப்ப மொதல்ல பேசுனவரு அந்த இன்னொருத்தர்கிட்ட,
‘நான் ஒண்ணும் தப்பாச் சொல்லல. அவரு மகனப் பத்தி, அதுவும் நல்லவிதமாத்தான் சொன்னேன். அதுக்கு இந்த 
ஆளு என்னய ரொம்ப சாடிப்புட்டாரு’ அப்படீன்னு சொல்வாரு. இந்த சாடிப்புட்டாரு’ங்கிறதுல வர்ர சாடுதான் 
நீங்க சொல்ற சாடு’’னு நினைக்கிறேன்”

“ரொம்ப சரி’ம்மா, இங்கயும் சாடு’ங்கிறது சீறிப்பாய்’னு தான் பொருள் கொடுக்குது” என்றார் பேராசிரியை.

அது ஒரு கிராமத்தை ஒட்டிய கல்லூரி. எனவே கிராமத்து மாணவியர் நிறையப்பேர் அங்கு உண்டு.

இன்னொரு மாணவி எழுந்து நின்றாள்.

“சொல்லு” என்றார் பேராசிரியை.

“இன்னிக்கிக் காலயில கூட எங்கம்மா எங்கிட்ட இதச் சொன்னாங்க. நான் எங்கப்பாகிட்ட சுற்றுலா போறதுக்குப் 
பணம் கேட்டேன். எவ்வளவு’னாரு. நான் சொன்னேன். ரொம்ப அதிகமா இருக்கு, கட்டாயம் போகணுமா’ன்னாரு. 
வகுப்புல எல்லாரும் போறாங்கப்பா’ன்னேன். அப்புறம் பாக்கலாம்’னு சொல்லிட்டுப் போயிட்டாரு. எனக்கு ஒரே 
கோவம். அத அம்மாகிட்ட காட்டுனேன். அதுக்கு, எங்கம்மா, எதுக்குடீ, அப்பாகிட்ட இருக்குற கோவத்துக்கு 
என்னயப்போட்டு சாடுற’ன்னாங்க. இதுவும் அதே சாடுதான’ம்மா?”

பேராசிரியையின் முகம் மிகவும் மலர்ந்தது.

“அதே சாடுதான் இதுவும். பாத்தீங்களா? நம்ம இலக்கியத்துல வர்ர ஒரு சொல்ல இன்னிக்கும் நாம் 
பயன்படுத்திக்கிட்டு இருக்கோம்” என்றார் அவர்.

அப்போது இன்னொரு மாணவி எழுந்தாள்.

“இந்த சாடு’ங்கிற சொல்லு வேற இலக்கியத்துல வருதா’ம்மா?” என்று கேட்டாள்.

உடனே அந்தப் பேராசிரியை, தனது கணினியைச் சிறிது நேரம் தட்டினார். அதனை உற்றுப்பார்த்தார். பின்னர்க் 
கூறினார்.

கலித்தொகையில நெறய இடத்துல இது வருது. எடுத்துக்காட்டுக்கு ஒண்ணு சொல்றேன்” என்று சொல்லிவிட்டுக் 
கணினியிலிருந்து ஏதோ குறிப்பெடுத்து வாசித்தார்.

	“நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உற சாடி
	கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு - கலி 105/33,34

இது முல்லைக்கலியில் வருவது. இப்பொழுது நாம் சொல்கிறோமே ஜல்லிக்கட்டு என்று அதனை அப்பொழுது 
ஏறுதழுவுதல் என்று கூறுவார்கள். அதில் வருகிற ஒரு காளை, தன் மேல் வந்து அணைய வருகிறவர்களைக் 
கொம்பால் குத்தித் தள்ளிவிட்டதாம். அதைத்தான் ‘நீள் மருப்பு உறச் சாடி’ என்று புலவர் சொல்கிறார். மருப்பு 
என்றால் கொம்பு. கொம்பால் முட்டித்தள்ளுவதைத்தான் ‘மருப்புறச் சாடி’ என்று புலவர் சொல்கிறார். இங்கேயும் 
சாடு என்றால் சீறிப்பாய் என்றுதான் பொருள் தருகிறது.” 

“நீங்க எதப் பாத்து இதக் கண்டுபிடிச்சீங்க” என்று ஒரு மாணவி கேட்டார். 

“அது ஒரு இணையதளம். எல்லாம் உடனே கிடைக்கும்”

என்று பேராசிரியை சொல்லிக்கொண்டிருக்கும்போது மணி அடித்தது. 

“பாத்தீர்களா? இந்தச் சாடு என்கிற சொல் இப்பொழுது இல்லை, இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் கூட 
வந்துகொண்டே இருக்கிறது. அதுதான் தமிழின் தனிச் சிறப்பு. நாளை பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு, 
தன் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார் அந்தப் பேராசிரியை.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்! 

என்னே தமிழின் இளமை!