பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 8 - வகையா அமைஞ்சிருக்கு


மாடு வாங்க ஒரு விவசாயி சந்தைக்குப் போகிறார். நெடு நேரம் தேடியும் நல்ல மாடு கிடைக்கவில்லை. எதிரில் வந்த அவர் 
நண்பர் கேட்கிறார், “என்ன, ஒண்ணும் அமையலையா?” “ஒன்றிரண்டு பார்த்தேன், வகையா ஒண்ணும் அமையல” எனப் 
பதிலுரைக்கிறார் இவர். 

ஒருவர் வீடு வாங்க நினைக்கிறார். ஒரு தரகரைக் கூட்டிக்கொண்டு அலைகிறார். பலவீடுகளைத் தரகர் காட்டியும் வாங்க 
நினைப்பவருக்குப் பிடிக்கவில்லை. இறுதியில் ஒருவீடு – வாங்க நினைப்பவர் எதிர்பார்த்தபடியே -அமைந்தது. தரகருக்கு 
மிக்க மகிழ்ச்சி. “சார் நீங்க நெனச்சபடியே வகையா அமைஞ்சிபோச்சு” என்கிறார்.

இங்கே, ‘அமை' என்ற சொல்லுக்கு, எத்தனை விதமான பொருள் உரைத்தாலும் அதன் நேர்ப்பொருளைச் 
சொற்களைக்கொண்டு புரிந்துகொள்வதைவிட, மனத்தளவில் உணர்ந்துதான் புரிந்துகொள்ள முடியும். 

‘வகையாக அமைதல்' என்பதற்கு, ‘மிகச் சிறப்பாக அமைதல், நினைத்தபடியே அமைதல்', ‘பொருத்தமாக அமைதல்' 
என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். ‘வகை அமை' என்ற சொற்றொடருக்கு, ‘மிக நன்றாக அமையப்பெற்ற' என்ற 
பொருள் கொண்டு கீழ்க்கண்ட வரிகளைப் படித்துப் பாருங்கள்.
 
	1. நகை தாழ்பு துயல்வரூஉம்  வகை அமை பொலம் குழை - திரு 86
	2. வயிறு சேர்பு ஒழுகிய  வகை அமை அகளத்து - சிறு 224
	3. புடை அமை பொலிந்த  வகை அமை செப்பில் - மது 421
	4. கவவொடு பிடித்த  வகை அமை மோதகம் - மது 626

இவ்வரிகள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களினின்றும் எடுக்கப்பட்டவை. 
இவற்றின் பொருள் :
 
1. ஒளி தங்கி அசையும் (வேலைப்பாட்டில்) வகையாக அமைந்த பொன்னாலான மகரக்குழை -
2. வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட (தொழில் திறத்தில்)வகையாக அமைந்த குடத்தின் மேல் உள்ள -
3. புடைத்தல் அமைந்து பொலிவுள்ள (வடிவத்தில்)வகையாக அமைந்த செப்புக்களில் -
4. பூரணத்தோடு பிடித்த (ருசியில்) வகையாக அமைந்த கொழுக்கட்டைகளையும் - 

	ஒருவீட்டில் ஓர் அம்மா கொழுக்கட்டை செய்கிறாள். என்னதான் கையில் பிடித்துக் கவனமாகச் செய்தாலும் 
ஒவ்வொரு கொழுக்கட்டையும் ஒவ்வொரு வடிவத்தில் அமைகிறது. அதில் ஒன்று வெகு சிறப்பாக அமைந்துவிட்டது. 
அந்த அம்மாளுக்கு மிக்க மகிழ்ச்சி. “சே, இது ரொம்ப வகையா அமைஞ்சிபோச்சு” என்று சொல்லமாட்டார்களா? 
 ‘வகை அமை மோதகம்’ என்ற சங்க வரிகள் இன்றும் நம் சாப்பிடும் பண்டத்தில் ஒலிக்கிற அதிசயம்தான் என்னே!
பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!