பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 10. பைய பையப்பைய


பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அந்தச் சிறுவன் தோளில் பையைத் தூக்கிப்போட்டுக்கொண்டு ஒரே ஓட்டமாய் விரைந்து 
வீட்டைநோக்கி ஓடிவந்தான். வந்தவன் வாசற்படியை ஒரே தாவலாகத் தாவ எண்ணியவன் ‘தடால்’ எனத் தடுக்கி 
விழுந்தான். பதறிப்போய் அம்மா ஓடிவந்து பிள்ளையைத் தூக்கிவிட்டாள். “என்ன அவசரம் ஒனக்கு? பாத்துப் பைய 
வரக்கூடாதா?” என்று செல்லமாய் மகனைக் கடிந்துகொண்டாள். 

இங்கே ‘பைய’ என்னும் சொல்லுக்கு ‘மெதுவாக, மெல்ல’ என்று பொருள். இப்பொழுதெல்லாம் படித்தவர்கள் 
“கொஞ்சம் ஸ்லோ-வாக வந்தால் என்னடா?” என்பார்கள். ஆக, இந்தப் ‘பைய’ என்ற சொல், பையப்பைய வழக்கிழந்து 
வருகிறது. அதென்ன ‘பையப்பைய’? இலக்கணம் அறிந்தோர் இதனை அடுக்குத்தொடர் என்பார்கள். ‘பையப்பைய’ 
என்றால் மிக மிக மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக என்று பொருள் கொள்ளலாம். பொழுதுபோகாதவர்கள் 
மாலைநேரத்தில் மறைகின்ற சூரியனைப் பார்த்துக்கொண்டிருந்தால் அது பையப்பைய மேற்கு வானில் மறைவதைக் 
கண்டு இரசிக்கலாம்.

இளம்பெண் ஒருத்தி காதல்கொண்டிருக்கிறாள். வீட்டில் சொன்னால் ஒத்துக்கொள்வார்களா என்ற பயத்தில் வெளியில் 
காட்டிக்கொள்ளவில்லை. காதலனுக்கோ அவளை உடனே கட்டிக்கொள்ளவேண்டும் என்ற நினைப்பு. ஒருநாள் 
பின்னிரவில் வீட்டுக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் தன் காதலனோடு வீட்டுக்குத் தெரியாமல் சென்றுவிடுகிறாள். 
முதலில் அவர்கள் எப்படி நடந்திருப்பார்கள்? ‘விறுவிறு’-வென்று ஓட்டமும் நடையுமாகத்தான் சென்றிருப்பார்கள். 
ஊர் எல்லையை விட்டு வெகுதொலைவு கடந்தபின் அவர்களின் வேகம் குறைந்திருக்கும். விடிந்து சூரியனும் தகிக்கத் 
தொடங்கியவுடன் அந்தப் பெண்ணின் நடை மிகவும் தளர்ந்துபோய்விடுகிறது.
 
மை அணல் காளையொடு பைய இயலி – ஐங். 389/2

என்கிறது ஐங்குறுநூறு. மை அணல் என்பது கரிய குறுந்தாடி. அடையாளம் தெரியாதிருக்க அந்த இளைஞன் 
வளர்த்துக்கொண்டிருப்பான் போலும். தன் காதலனுடன் மிக மெதுவாக அவள் நடந்து சென்றாள் என்பதனை எத்துணை 
இயல்பான மொழியில் இலக்கியக் கூற்றாய் ஆக்கியிருக்கிறார் புலவர் பாருங்கள்! 

மழை பெய்து ஓய்ந்த ஒரு மாலை நேரத்தில், ஊருக்கு வெளியில் ஒரு ஒற்றையடிப்பாதையில் சிலர் ஒருவர்பின் 
ஒருவராக நடந்துவருகிறார்கள். நிலமோ வழுக்கு நிலம். எனவே அவர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்தவராக 
மெல்ல மெல்ல ஒவ்வோர் அடியாக எடுத்தெடுத்து வைத்து மிகக் கவனமாக நடந்து செல்கிறார்கள். அவருள் 
கடைசியாக வருபவன் முன்னால் செல்பவர்களைப் பார்த்துக் கூவுகிறான், “கைப்பிடியை விடாமல் மெல்ல மெல்லக் 
காலை எடுத்துவையுங்கள்” இப்படியொரு காட்சியை மலைபடுகடாம் என்ற சங்கப் பாடல் கூறுவதைப் பாருங்கள்:
 
கை பிணி விடாஅது பைபயக் கழிமின் - மலை 383

இங்கே ‘பைபய’ என்பதுதான் இன்றைக்கு நாம் வழங்கும் ‘பையப்பைய’.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!