பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 28 - மூச்சுவிடமாட்டேன் 


“கீர, கீர, கீரேஏஏஏஏய்” என்ற கீரைக்காரியின் குரல் தெருமுனையிலிருந்து இலேசாகக் கேட்டது. சமையலறையில் இருந்த
அவள் அவசரம் அவசரமாக வேலையை முடிக்கத் தொடங்கினாள். ‘இன்னிக்கி அரைக்கீர வாங்கிக் கடையணும்’ என்று 
தனக்குள் சொன்னவாறு வாசலுக்கு வரத் தயாரானாள். அதற்குள் வாசலுக்கு வந்துவிட்ட கீரைக்காரி “கீர” என்று தான் 
வந்துவிட்டதைத் தெரிவிக்க மெல்லக் குரல்கொடுத்தாள். ”இந்தா வந்துட்டேன்” என்று சொல்லியவாறு வாசலுக்கு விரைந்த
அவள், வந்து கீரைக் கூடையை இறக்கிவைக்கக் கைகொடுத்தாள். “ஒனக்குப் பிடிச்ச கலர்ப் பொன்னாங்கண்ணி இருக்கு தாயீ”
என்றாள் கீரைக்காரி. “இன்னக்கி அரைக்கீர மட்டும் போதும்” என்று சொன்ன அவளின் கையில் ஒரு நல்ல அரைக்கீரைக்
கட்டினை எடுத்துக்கொடுத்தாள் கீரைக்காரி. 

வீட்டுக்குள் எட்டிப்பார்த்த கீரைக்காரி “ஐயாவுக்கு மேலுக்குச் சேட்டமில்லையா?” என்று வினவினாள். ஹாலுக்குள் தெருவைப் 
பார்த்தபடி நன்றாகப் போர்த்திக்கொண்டு அவன் உட்கார்ந்திருந்தான். “அதெல்லாம் ஒண்ணுமில்ல. லேசான காய்ச்சல். 
சாதாரணக் காய்ச்சல்தான்’னு நெனய்க்கிறேன். மாத்திர கொடுத்திருக்கேன். சரியாயிடும். நீ வெளிய - கிளிய சொல்லிறாத. 
இந்தக் கொரோனா காலத்துல யாராவது கார்ப்பரேசன்காரன் கேட்டான்னா வந்து அள்ளிக்கிட்டுப் போயிருவான். அப்புறம் 
ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலையுறது யாரு?” என்று கிசுகிசுத்தாள் அவள். “ஆத்தாடி, நான் மூச்சுவிடமாட்டேன். 
ஐயாவோட நல்ல மனசுக்கு அதெல்லாம் வராது” என்று சொன்ன கீரைக்காரி, மீண்டும் அவள் கைகொடுத்துத் தூக்கிவிட, 
கூடையைத் தூக்கித் தலையில் வைத்தவாறு போய்விட்டாள்.

வீட்டுக்குள் வந்த அவள், “அதான் சொன்னேன், வாசலப் பாத்து ஒக்காராதீங்கன்’னு. கேக்கிறீங்களா? கொஞ்சம் உள்ள 
தள்ளி ஒக்காருங்க” என்று தன் கணவனைப் பார்த்து ஓர் அதட்டுப்போட்டாள். “அதென்ன, மூச்சுவிடமாட்டேன்’னு 
கீரக்காரி சொல்லிட்டுப் போறா, மூச்சுவிடாட்டி எப்படி உயிரோட இருக்கிறது?” என்று ஐயத்தைக் கிளப்பினான் அவன். 

“மூச்சுவிடமாட்டேன்’னா ஒண்ணுமே பேசமாட்டேன்’னு அர்த்தம். இதுகூடத் தெரியாம எங்கதான் வளந்தீங்களோ?” 
என்று அங்கலாய்த்தாள் அவள். ”இதப்பத்தி இலக்கியத்தில ஏதாவது சொல்லியிருக்கா?” அவளைச் சீண்டினான் அவன். 
“எனக்கு ஒண்ணும் இப்பத் தோணலீங்க. வேல தலைக்குமேல கெடக்கு” என்று சொல்லிவிட்டுச் சமையலறைக்குள் 
நுழைந்துவிட்டாள்.

நாலைந்து நாட்கள் கழித்து ஒரு நாள் இரவு, சாப்பாட்டிற்குப் பிறகு இருவரும் அவரவர் வேலைக்குள் மூழ்கிவிட்டனர். 
அவன் தன் மடிக்கணினியை இயக்கியவண்ணம் ஹால் சோஃபாவில் அமர்ந்துவிட்டான். அவள் தன் படிப்பறையில் ஏதோ
புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டாள். வீடு கட்டும்போதே அவளுக்கென்று ஒரு சிறிய படிப்பறையைக் கட்டிக்கொண்டாள் - 
தமிழ்ப்பேராசிரியை ஆயிற்றே.

திடீரென்று அவள் தன் அறையை விட்டு வெளியே வந்து அவனைப் பார்த்துக் கூறினாள். “அன்னக்கிக் கீரக்காரி 
மூச்சுவிடமாட்டேன்’னு சொன்னதப் பத்திக் கேட்டீங்களே - இலக்கியத்தில இருக்கா’ன்னு. இப்பக் கெடச்சிருக்குங்க” 
என்று சொல்லியவாறு அவனருகே அமர்ந்தாள். அவன் தன் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு அவள் சொல்வதைக் 
கேட்கத் தயாரானான். 

“ஒரு இளம்பெண், ஒருநாள் தன் காதலனுடன் போயிட்டா. அவள வளத்த செவிலித்தாயி ஒரு சமயம் வீதியில 
போயிக்கிட்டு இருக்கா. அப்ப அவளப் பாத்துச் சாட பேசியிருக்காங்க”

“சாட பேசுறதுன்’னா?” அவன் அவளை இடை மறித்துக் கேட்டான். 

“நேரிடையாப் பேசாம, ஜாடமாடையா பேசுறதுதான் சாட பேசுறது”

“புரியல்ல”

“இப்ப அந்தப் பொண்ணு வீட்டவிட்டுப் போயிட்டா. தாயி தெருவுல போயிட்டு இருக்கா?. அப்ப அங்க இருக்கிற 
பொம்பளய்ங்க ‘ஏம்மா’, ஒம் மக வீட்ட விட்டுப் போயிட்டாளாமே’ன்னு கேக்கிறது நேரிடயாக் கேக்கிறது. அப்படி 
யாரும் கேக்க மாட்டாங்க. கேலியாப் பேசுவாங்க. திண்ணயில ஒக்காந்திருக்கிற ஒருத்தி, ‘பொத்திப் பொத்திக் கிளிய 
வளத்தாளாம், அது போயிருச்சாம் பறந்துகிட்டு’ அப்படீன்னு சொல்ல, பக்கத்துல் இருக்கிறவங்க ’கொல்’லுனு சிரிக்க,
அதுதான் சாட பேசுறது. இப்படி ஊர்க்காரிக சாடமாடயாப் பேசுறத அலர்’னு இலக்கியம் சொல்லுது. இதவே ஊர் 
முழுக்கப் பேசுனா அத அம்பல்’னு இலக்கியம் சொல்லுது. அப்ப அந்த செவிலித்தாய் சொல்றா, “இப்படி அலர் பேசுற
பொம்பளய்ங்க கிட்ட சண்டக்கிப் போகாம, ஒண்ணுந் தெரியாதவ மாதிரி மூச்சுவிடாம வந்துட்டேன்”’னு. இதச் 
சொல்ல வர்ர புலவர் சொல்றார்.

அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன்னுரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன் - நற் 143/7-9

இங்க ’உயிரேன்’ அப்படீங்கிற சொல்லுக்கு ’மூச்சுவிடலை’ அப்படீன்னு அர்த்தம்.

“உயிர்’ங்கிறது பெயர்ச்சொல் இல்லயா?” அவன் ஐயத்தைக் கிளப்பினான்.

பெயர்ச்சொல்தான். அதுவே வினைச் சொல்லாகவும் வருது. பாம்பு ‘புஸ்ஸு,புஸ்ஸு’ ன்னு சீறுறத 

	அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் - திரு 149

அப்படீன்னு திருமுருகாற்றுப்படை சொல்லுது.

தெரியாதவ போல மூச்சுவிடாம வந்துட்டேன் அப்படீன்னு செவிலித்தாய் சொல்றதத்தான் 
”அறியேன் போல உயிரேன்” அப்படீன்னு அவ சொல்றதாப் புலவர் சொல்றார். இந்த உரையக் கவனிச்சங்களா. 
இதுக்கு உரை சொல்ற பின்னத்தூர் நாராயணசாமி’ங்கிறவர் சொல்றார்,

அம்பல் மிக்க இப் பழைய ஊரின்கண்ணுள்ள அலர் தூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியர் பலரும் ஒருசேரக் கூடிக் 
கூறுகின்ற கொடிய இனிய உரை கேட்ட சில நாளளவும் யாதொன்றையும் அறியாதேன் போல மூச்சுவிட்டேனுமில்லேன்.

”பாத்தீங்களா! ’உயிரேன்’ அப்படீங்கிறதுக்கு 'மூச்சுவிட்டேனுமில்லேன்’னு அவரே பொருள் சொல்றார். ஆக ஒண்ணும்
பேசாம இருக்கிறதுக்கு மூச்சுவிடமாட்டேன்  அப்படீங்கிறது இன்னக்கி நேத்து இல்லீங்க இரண்டாயிரம் வருசமா 
தொடந்து வருது.” என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.

”இனிமேல் நீ என்னய என்ன சொன்னாலும் மூச்சுவிடமாட்டேன்” என்று அவன் பொய்யாக வாயைப் பொத்திக் கூற 
அங்கு எழுந்த சிரிப்பொலி அடங்க வெகுநேரமாயிற்று.

இதுதான் நம் தமிழின் சிறப்பு. எத்தனை காலமானாலும் - எத்தனை மாற்றங்கள் அடைந்தாலும் - என்றும் மாறா 
இளமைத் துடிப்புடன் இருப்பது.

என்னே தமிழின் இளமை.