பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 17 - சும்மாடு


“கீர, கீர, கீரேய், அரைக்கீர, தண்டங்கீர, மொளகுதக்காளி, பொன்னாங்கண்ணீ”.
அந்தக் கீரைக்கூடைக்காரி, அந்த நீண்ட தெருவுக்குள் நுழைந்ததும் உரத்த குரலில் கூவினாள். இருப்பினும் அந்தத் தெருவில் 
வேறு யாரும் கீரை வாங்கமாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும் – ஒரே ஒரு வீட்டைத் தவிர. அந்த வீட்டுக்கு முன்னால் 
வந்து சுற்றுச் சுவர் கதவின் தாழ்ப்பாளை அகற்றி, உள்ளே நுழைந்து மேல் படிக்கட்டில் கூடையை இறக்கிவைத்தாள். 
கூடையோடு சேர்ந்து அவளது தலையுச்சியில் இருந்த சும்மாடு கூடையில் ‘தொப்’பென விழுந்தது. விழுந்த சும்மாட்டை 
எடுத்துப் பிரித்து, ஒரு உதறு உதறி முந்தானையாகத் தோளின் மேல் போட்டுக்கொண்டாள். 

“அக்கா, கீர” மீண்டும் குரல் கொடுத்தாள் அவள்.

வீட்டின் வாசல்கதவு திறந்தது. ஓர் இளம்பெண் வெளிப்பட்டாள். 

“ஒரு கட்டு அரைக்கீரை, ஒருகட்டு பொன்னாங்கண்ணி, சீக்கிரம் கொடு” என்று அவசரப்படுத்தினாள். கொடுத்த 
கீரைக்கட்டுகளை வாங்கிக்கொண்டு, கையோடு கொண்டுவந்திருந்த காசையும் கொடுத்துவிட்டு அவசரமாய் உள்ளே 
திரும்பினாள்.

“அக்கா, கொஞ்சம் கூடயத் தூக்கிவிட்டுருங்க, இன்னக்கி வேற எங்கயும் எறக்கல, பாரம் சாஸ்தி” என்று தன் முந்தானையை
எடுத்துச் சுருட்ட ஆரம்பித்தாள். 

“சீக்கிரம், அடுப்புல வேல இருக்கு” என்று மீண்டும் அவசரப்படுத்தினாள்.

“கொஞ்சம் பொறு’க்கா! சும்மாட்ட இறுக்கக் கட்டிக்கிறேன். இன்னும் நாலு தெருவரைக்கும் தாங்கணும்’ல” என்ற கீரைக்காரி,
சேலைத்தலைப்பை இடது கையில் லாவகமாகச் சுற்றி வட்டமாகச் சும்மாடு கட்டித் தலையில் வைத்துக்கொண்டாள்.

கீரைக்கூடையைத் தூக்கிவிட்ட பின்னர் வீட்டுக்குள் நுழைந்து அடுப்படியை நோக்கி விரைந்தவளை அவள் கணவன் 
கேள்வியால் மறித்தான்.

“அதென்ன சும்மாடு?”

தோசைச்சட்டி அடுப்புல இருக்கு. நாலு தோசை சுட்டுக்கிட்டு வர்ரேன், சாப்பிட்டுக்கிட்டே இருங்க, சொல்றேன்” என்று 
சொல்லிவிட்டு அடுப்படிக்குள் நுழைந்த அவள் சற்று நேரத்துக்குப் பின் தோசையுடன் வந்து சாப்பாட்டு மேசைக்கு அவனை 
அழைத்தாள்.

அவன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவள் கூறினாள்,

“கூடைய வெறும் தலையில வச்சா, தலைய அது அழுத்தும்’ல. அது தலைய அழுத்தாம இருக்குறதுக்கு, பொம்பளங்க 
சேலை முந்தானையை இப்படிச் சுருட்டித் தலையில வச்சுக்குறுவாங்க” என்று சொல்லித் தன் சேலை முந்தானையை 
எடுத்து இடது கை விரல்களைச் சுற்றிச் சுற்றிச் சுருட்டிக் காண்பித்தாள். 

“இதுதான் சும்மாடு. இந்தப் பட்டணத்துக்காரங்களுக்கு என்னதான் தெரியுது?” என்று வேடிக்கையாகக் கேலியும் செய்தாள்.

“நீதான் பெரீய தமிழ்ப் பேராசிரியை ஆச்சே! ஒங்க இலக்கியத்தில இதெல்லாம் சொல்லியிருக்கா?” அவன் அவளைச் 
சீண்டினான். ஆம், அவள் தமிழ் படித்து ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாக இருப்பவள்.
 
“அதென்ன ஒங்க இலக்கியம்? நம்ம இலக்கியம்’னு சொல்லுங்க. இருக்கு சொல்றேன்”, ஒவ்வொரு தோசையாக அவனுக்குப்
போட்டுக்கொண்டே அவள் விவரிக்க ஆரம்பித்தாள்.

“ஓர் இடையர் வீட்டுப்பெண். விடியற்காலையில் எழுந்து, உறைத்துவைத்த தயிரை எடுத்து, ஒரு பெரிய பானையில் ஊற்றி,
கயிறு கட்டிய மத்தினால் ‘சர் சர்’ரென்று கடைந்து நுரையாக வரும் வெண்ணெயை எடுத்துச் சேமித்து வைத்துக்கொண்டு
புள்ளி புள்ளியாக மோர்த்துளிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தப் பானையைத் தூக்கித் தன் சும்மாட்டில் இருக்கவைத்து 
அன்றைக்குரிய மோரை விற்கப் புறப்பட்டுச் செல்கிறாள் என்கிறது பெரும்பாணாற்றுப்படை என்கிற பத்துப்பாட்டு நூல் ஒன்று”

கல்லூரியில் பாடம் எடுப்பதுபோல் தன் கணவனுக்கும் பாடம் எடுத்து மூச்சுவிட்டாள் அவள். 

“இது நேற்று நான் நடத்திய பாடம். பாடல் வரிகூட நல்லா நெனைவிருக்கு” என்ற அவள் சொல்ல ஆரம்பித்தாள்:

நள் இருள் விடியல் புள் எழப் போகி,
புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 155 – 160

“இதுக்குள்ள அர்த்தத்தையும் சொல்றேன்” என்று அந்த அடிகளின் பொருளையும் கூறினாள் அவள். அவள் வாயசைவின் 
அழகையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவள் கூறினாள்,

செறிந்த இருள் (போகின்ற)விடியற்காலத்தே பறவைகள் துயிலெழ எழுந்து சென்று,
புலி(யின் முழக்கம் போன்ற) முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து,
குடைக்காளானுடைய வெண்மையான மொட்டுக்களை ஒத்த குவிந்த மொட்டுக்களையுடைய
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
அன்றைய மோரை விற்கும், நல்ல மா நிறமுடைய மேனியுள்ள பெண்”

“சுமட்டு’ன்னு சொல்றியே அதுதானா இது?” என்று அவன் வினவினான். 

“சுமடு, அப்படீங்கறது சொல். அதத்தான் இப்ப சும்மாடு’ன்னு சொல்றாங்க. சுமட்டு’ன்னா சும்மாடுல’ன்னு அர்த்தம்”

“பாத்தீங்களா, நம்ம தமிழ் எத்தனை காலத்துக்கு இன்னும் இளமை மாறாம இருக்கு’ன்னு!” பெருமையோடு பேசி முடித்த
அவளைப் பார்த்து, “இன்றைக்கு காலைச் சாப்பாட்டைவிட உன் கன்னித்தமிழ்ப் பேச்சு ரொம்ப ஜோர்” என்று முடித்தான்
அவன்.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!