பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 2 - நல்லா இருக்கு


மூன்று பெண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி மற்ற இரண்டுபேரும் ஏற்றுக்கொள்ளாத ஒன்றனைக் 
கூறுகிறாள். அதைக் கேட்ட மற்றொருத்தி கூறுவாள், “நல்லா இருக்கு நீ சொல்றது!” அப்படியென்றால் முதலாமவள் 
சொன்னது நன்றாக இருந்தது என்றா பொருள்? இல்லையே! அது நேர் எதிர்மறையைக் குறிக்கிறது அல்லவா!

ஒருவனை நம்பித் தன் வாழ்க்கையை ஒப்படைக்கிறாள் ஒரு பெண். சிறிது நாள் கழித்து அவன் போக்கு மாறுகிறது. 
“உன்னை நம்பி வந்தேன் பாரு, என்னை நல்லாத்தான் வச்சிருக்க” என்கிறாள் அந்தப் பெண். இங்கும் அந்தப் பெண் கூறுவது 
நேர் எதிர்மறைப் பொருளில் அமைகிறது. இது இன்றைய பேச்சு வழக்கு.

இந்த இன்றைய பேச்சு வழக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் இலக்கிய வழக்கிலும் இருந்திருக்கிறது என்பதுதான் விந்தை.

தலைவன் ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணான தலைவியை மணம் முடித்துக்கொள்ளாமல் காலம் தாழ்த்துகிறான். 
தலைவனின் போக்கு கண்டு வருந்திய தோழி அவனைப் பழித்துக்கூறுகிறாள். “நீ கூறியதை எல்லாம் நம்பிய என் 
தோழியின் கண்கள் இப்போது நன்றாக இருக்கின்றன” என்கிறாள் தோழி தலைவனிடம். அவள் கூற வந்தது, 
தலைவியின் கண்கள் ஏக்கத்தால் ஒளிமங்கிப்போயின என்பதாகும். அதனை இனிய நடையில் வடித்திருக்கிறார் 
ஐங்குறுநூறு என்ற தொகையில் நெய்தல் திணைப் பாடல்களைப் பாடிய புலவர் அம்மூவனார்.

பாடல் இதுதான்:

பெரும் கடற்கரையது சிறு வெண் காக்கை
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம்
மெல்லம்புலம்பன் தேறி
நல்ல ஆயின நல்லோள் கண்ணே – ஐங்குறுநூறு 166

இதன் உரை இது:

பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
வரிகளையுடைய வெண்மையான சோழிகளைக் கண்டு வலையோ என்று எண்ணி வெருளும்
மென்மையான நெய்தல்நிலத் தலைவனின் சொற்களை நம்பி
தம் நலம் இழந்தனவாயின இந்த நல்லவளின் கண்கள்.

‘நல்ல ஆயின நல்லோள் கண்ணே’ என்ற அந்த அடிக்கு, இன்றைய வழக்கில் “ஒன்ன நம்புன இந்த நல்ல புள்ளயின் கண்ணு 
ரொம்ப நல்லாத்தான் இருக்கு போ” என்று கொள்ளலாமா?

என்னே தமிழின் இளமை!