பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 5 - அப்படி ஒரு


அது ஒரு ஓட்டைக் குடிசை. அதில் ஒரு கணவனும் மனைவியும் இருந்தார்கள். கூட இரண்டு சிறிய பையன்களும். கணவனும் 
மனைவியும் என்று சொல்வதைவிட, மனைவியும், அவளுடன் அவள் கணவனும் இருந்தார்கள் என்றே சொல்லவேண்டும். 
கணவன் ஒரு முழுச் சோம்பேறி. தொட்டது துலங்காது. அதனால் எந்த வேலையிலும் நிலைத்து நிற்கமாட்டான். பேருந்து 
நிறுத்துமிடத்தில், மரத்தடியில் நின்றுகொண்டு, தூக்கமுடியாத பைகளை யாரேனும் முதியவர்கள் தூக்கிவந்தால் அவர்களுக்கு 
உதவி செய்து, அவர்கள் தரும் ஐந்தோ பத்தோ - அதனைப் பெற்றுக்கொண்டு, பீடி குடித்துப் பொழுதினைப் போக்குவான்.
 
மனைவிதான் நாலு வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்த்து அவர்கள் தரும் மீந்துபோன உணவைக் கொண்டுவந்து 
பிள்ளைகளுக்குக் கொடுத்து மீந்துபோனதைச் சாப்பிடுவாள். எப்போதாவது அடுப்புமூட்டி குருணை அரிசியைக் குழைய 
ஆக்கி, குப்பைகளில் கிடைக்கும் கீரையைப் பறித்து வந்து அதனை வேகவைத்து, கடையில் வாங்கிவந்த ஊறுகாயைத் 
தொட்டுக்கொண்டு குடும்பமாகச் சாப்பிடுவார்கள்.

இந்தப் பஞ்சத்திலும் அந்த மனைவி ஒரு காரியம் செய்வாள். மாதச் சம்பளம் என்று கிடைக்கும்போது அதில் ஒரு பத்து 
ரூபாய்க்கு ஒரு பரிசுச்சீட்டு வாங்குவாள். அவளுக்கு ஓர் அற்ப ஆசை – அவளைப் பொருத்தமாட்டில் பெருத்த ஆசை - 
என்றைக்காவது ஒரு நாள் இந்தப் பஞ்சப்பாடு ஓயாதா என்று. பரிசுச்சீட்டு வாங்கிய தேநீர்க்கடையில், குலுக்கல் முடிவு 
வெளியான அன்று, யாரிடமாவது ஒருவரிடம் தன் சீட்டை நீட்டி, முடிவைத் தெரிந்துகொண்டு ‘அடுத்துப் பார்ப்போம்’ 
என்ற நம்பிக்கையுடன் இன்னொரு புதிய சீட்டை வாங்கிச் செல்வாள். ஒருநாள் அவளுக்குப் பரிசு கிடைத்தே விட்டது. 
அதுவும் முதற்பரிசு – ரூபாய் ஒரு கோடி. 

அப்புறம் என்ன? பரிசுத்தொகை, பிடித்தம் போகக் கிடைத்ததை ஒரு வங்கியில் போட்டுவைத்தாள். முதலில் அருகிலேயே 
ஒரு நல்ல வீடு பார்த்து வாங்கி அங்குக் குடியேறிவிட்டாள். பிள்ளைகளை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்துவிட்டாள். 
எல்லாருக்கும் நல்ல துணிமணிகள் வாங்கினாள். வீட்டுக்குத் தேவையான பல பொருள்களை வாங்கிப்போட்டாள். எல்லாம் 
மாறிப்போயின – கணவனின் குணத்தைத் தவிர. அவன் இப்போது பீடியை விட்டு உயர்ந்த மதுவுக்குத் தாவிவிட்டான்.

ஒருநாள் காலை – முந்தின நாள் இரவில் குடித்த மயக்கம் முழுமையும் தீராமல் படுக்கையில் புரண்டு 
படுத்துக்கொண்டிருந்த கணவனைத் தட்டி எழுப்பினாள். அவளைத் திட்டித்தீர்த்துக்கொண்டே எழுந்த கணவனைத் தலையில் 
ஒரு தட்டுத் தட்டி, “போன மாசம் இந்நேரம் அப்படி ஒரு பஞ்சம்! இப்ப ஒனக்கு இம்புட்டுச் சொகுசு கேக்குதா?” என்று 
சாடினாள். 

அதென்ன ‘அப்படி ஒரு பஞ்சம்’? ‘சொல்லமுடியாத பஞ்சம்’ என்பதற்குக் கிராமத்து மக்கள் வைத்திருக்கும் பெயர். பஞ்சம் 
என்பது ஒரு இழிவான நிலை. இந்த இழிவான நிலையைப் புன்மை என்கின்றன இலக்கியங்கள். ‘அப்படிப்பட்டது’ 
என்பதனை இலக்கியங்கள் ‘அன்னது’ என்று சொல்லும். எனவே ‘அப்படி ஒரு பஞ்சம்’ என்ற கூற்று இலக்கியவழக்கில் 
‘அன்னதோர் புன்மை’ என்றாகிறது. இன்றைய இந்தக் கிராமத்து வழக்கம், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் 
இலக்கியத்திலும் இருந்திருக்கிறது என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.

வறுமையில் வாடிய பொருநன் ஒருவன் தன் குடும்பத்துடன் ஒரு மன்னனைப் பார்க்கச் செல்கிறான். பொருநன் என்பவன் 
கூத்துப்போடுபவன். பொதுவாக இந்தப் பொருநர்கள் பலவித இன்னிசைக் கருவிகளை வைத்திருப்பார்கள். அவற்றை 
எடுத்துக்கொண்டு நீண்ட பயணம் மேற்கொண்ட பொருநன் குடும்பம், இறுதியில் மன்னனின் அரண்மனையை அடைகிறது. 
மன்னன் ஒரு பெரிய வள்ளல். அதிலும் இசைக் கலைஞர்களைப் பெரிதும் போற்றுபவன். பொருநர்களின் இசையைக் 
கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த மன்னன், அவர்களின் கிழிந்த ஆடைகளைக் களைந்து பட்டாடைகளை உடுத்துவிக்கிறான். 
பசியால் வாடிப்போன வயிறுகளைப் பலவித உயர்ந்த உணவுவகைகளால் நிரப்புகிறான். இறுதியில் கள்ளினையும் 
வேண்டிய அளவு கொடுத்து அரண்மனையில் ஒரு பக்கத்தில் தூங்கவைக்கிறான்.

மறுநாள் காலையில் அரைத்தூக்கத்தில், மயக்கம் முழுக்கத் தீராத நிலையில் எழுந்த பொருநன் சுற்றுமுற்றும் பார்த்துத் 
திகைத்துப் போகிறான். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனது பழைய தரித்திர நிலையே இன்னமும் 
அவனுக்குள் நிழலாடிக்கொண்டிருக்கிறது. பின்பு தன் பட்டாடைகளைப் பார்த்துப் பரவசமடைகிறான். கொஞ்சம் கொஞ்சமாக 
அவனுக்கு நடந்தவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன. அவன் கூறுகிறான்,

மாலை அன்னதோர் புன்மையும், காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
கனவு என மருண்ட என் நெஞ்சு – பொருநராற்றுப்படை – 96-98

இதன் பொருள்:

(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு சிறுமையும், காலையில்
கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும்,
கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு

இந்த ‘அன்னதோர் புன்மை’ என்ற சொல்வழக்கைத்தான் இன்றைய படிப்பறிவில்லாத மக்கள் ‘அப்படி ஒரு பஞ்சம்’ 
என்கிறார்கள்.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!