பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 7 - அவனெல்லாமொரு ஆளு


அடுப்படியில் நெருப்போடு போராடிக்கொண்டிருந்த பொன்னம்மாள் வாசலில் மகனின் அழுகைக் குரல் கேட்டுப் பதறிப்போய் 
வந்தாள். குடிசை வாசலில் அவளின் ஏழு வயது மகன் அழுதுகொண்டு நின்றிருந்தான். கைகாலெல்லாம் புழுதி மயம். 
கூட வந்தவன் சொன்னான், “ஆத்தா, அடுத்த தெரு சின்னப்பாண்டியும் இவனும் மல்லுக்கட்டுனாய்ங்க, அவன் இவன 
‘ணங்கு ணங்கு’ன்னு குத்திப்புட்டான்”. சொல்லிவிட்டு அவன் ஓடிவிட்டான். முந்தானையை உதறி மகனின் முகத்தைத் 
துடைத்துவிட்டாள் அவள். “யாரு? அந்தச் செவனம்மா மகனா?” என்று கேட்டாள். இவன் விசும்பிக்கொண்டே தலையை 
ஆட்டினான். “ஏண்டா, ஒனக்கு ஏழு குத்துக்கு எளயவன், அவனெல்லாம் ஒரு ஆளு’ன்னு அவங்கிட்ட அடிவாங்கிட்டு 
அழுதுகிட்டு நிக்கறயே? வெக்கமாயில்ல?” 

அது ஒரு கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்துப்போட்டி. முதல் ஆட்டம். பல ஆண்டுகள் பரிசுபெற்ற ஒரு பிரபலமான 
கல்லூரியின் குழு முதலில் இறங்கிவிட்டது. ஒரே கைதட்டல். ஆனால் அக் குழுவின் தலைவனை மட்டும் காணவில்லை. 
எதிர்த்தாடும் அணி – புதிதாகத் தொடக்கப்பட்ட ஒரு கல்லூரியின் அணி – மிகவும் சோதா என்று கருதப்படுவது. பிரபல 
கல்லூரியின் குழுத்தலைவனைத் தேடி இழுத்துவந்தார்கள். அவனிடம் ஒரு தயக்கம். உடற்பயிற்சி இயக்குநர் அவனிடம் 
கேட்டார், “என்ன ஆச்சு ஒனக்கு? பதட்டமாத் தெரியுற” அவன் சொன்னான், “சார் அவய்ங்களப் பாருங்க, ஒவ்வொருத்தனும் 
எவ்வளவு ஒயரம்! கொஞ்சம் நெர்வசா இருக்கு சார்”. இயக்குநர் சிரித்தார், “ஏம்ப்பா, வளந்துட்டா போதுமா? புது டீமுப்பா. 
டோர்னமெண்டுக்கே இப்பத்தான் வர்ராங்க. இதெல்லாம் ஒரு டீமுன்னு இதுக்குப்போயி நெர்வசாகுறயே!”

அது ஒரு போர்க்களம். படையெடுத்து வருபவன் சேரமன்னன் இளஞ்சேரல் இரும்பொறை. போர்க்களம் முழுக்க 
குதிரைப்படையும், யானைப்படையும் பரந்து நிற்கின்றன. எதிரி மன்னன் தன் கோட்டையின் உச்சியிலிருந்து பார்க்கிறான். 
எத்தனை பெரிய படை? அவன் மேனி நடுங்குகிறது. இதுவரை எத்தனையோ சிற்றரசர்கள் இதுபோல் படையெடுத்து 
வந்திருக்கிறார்கள். அப்போழுதெல்லாம் கோட்டை மீதிருந்து நோட்டம்விட்டு இளக்காரமாய்ச் சொல்வான், 
“இது எல்லாம் ஒரு படை!” ஆனால் இப்போது அவ்வாறு எண்ணமுடியவில்லை. சேரமன்னனின் வலிமையை உணர்ந்து 
மயங்குகிறான். இந்த நிலையைப் பார்த்த புலவர் பெருங்குன்றூர்க்கிழார் சேரமன்னனிடம் கூறுகிறார்,

பன் மா பரந்த, புலம் ஒன்று என்று எண்ணாது
வலியையாதல் நற்கு அறிந்தனர் – பதிற்றுப்பத்து 84: 9,10

இதன் பொருள்:

பலவான குதிரைகளும் யானைகளும் பரந்திருக்கின்றன; எனினும் உன்னுடைய நாட்டைக் கொள்வது எளிய செயல் என்று 
எண்ணாமல் நீ மிக்க வலிமையுடையவன் என்பதனை நன்கு அறிந்திருக்கின்றனர் உன் பகைவர்;

‘புலம் ஒன்று என்று எண்ணாது’ – என்பதற்கு இதெல்லாம் ஒரு புலம் என்று எண்ணாமல் என்று பொருள் கொள்ளலாம். 
அதாவது, இந்தப் புலத்தைக் கைப்பற்றுவது எளிதல்ல என்று இதற்கு விளக்கம் கூறுகின்றனர் உரையாசிரியர். எனினும், 
இவனெல்லாம் ஒரு ஆளு, இதெல்லாம் ஒரு டீமு என்ற இன்றைய வழக்கின் ஏளனத் தொனிதான் இந்த இலக்கிய 
வழக்கிலும் தொனிக்கிறது இல்லையா?

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!