பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 21. நடுக்கத்தப் பாரு


அலுவலகம் முடிந்து அவன் மிக்க களைப்புடன் வீட்டுக்குத் திரும்பினான். வாசலில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதைக்
கண்டும் காணாமல் வீட்டுக்குள் நுழைந்து, உடையை மாற்றிக் கைகால் கழுவிக்கொண்டு நடு அறையில் இருக்கும் சோபாவில் 
வந்து ‘தொப்’பென்று அமர்ந்தான்.

“ரொம்பக் களைப்பாயிருக்கு’ம்மா, சூடா ரெண்டு சப்பாத்தி செஞ்சு தாயேன்” என்று தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

அவள், அந்த அறையில் ஒரு மூலையில் தரையில் அமர்ந்து, பிள்ளைகள் எழுதும் சாய்வுப்பலகையில் தன் மாணவிகளின்
விடைத்தாள்களை வைத்துத் திருத்திக்கொண்டிருந்தாள். அவள் ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியை.

“எனக்கு ரொம்ப வேலை இருக்குங்க. இன்னிக்கு இரவுக்குள்ள அம்பது, அறுபது தாள் திருத்தணும். உப்புமா செஞ்சு மேசயில 
வச்சிருக்கேன். எடுத்துப்போட்டு சாப்பிடுங்க” என்றாள் விடைத்தாள்களை விட்டுத் தன் கண்களை எடுக்காமல்.

“உப்புமாவா? சே! அத நீயே சாப்பிடு!” என்றான் அவன் சிறிது கோபத்தோடு. 

சாய்வுப்பலகையைத் தள்ளிவைத்துவிட்டு, மெள்ள அவனருகில் வந்தாள் அவள். தன் ஒரு முழங்காலை மடக்கிச் சோபாவில் 
இருத்தியவாறு அவனை நோக்கிக் குனிந்தாள். குனிந்துகொண்டிருந்த அவனது முகத்தின் நாடியைப் பிடித்துச் சிறிது உயர்த்தி 
அவன் கண்களைப் பார்த்தாள். அவன் தன் கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.

“உப்புமா’ன்னதும் கோபத்தப் பாரு, என் ராசாவுக்கு” என்று மெல்லச் சிரித்தாள்.

அப்படியே அவன் தோள்களைப் பிடித்து அவனை எழுப்பி, அவன் முதுகுக்குப் பின்னால் நின்று அவனை மேசைக்குத் 
தள்ளிக்கொண்டே சென்று அங்குள்ள நாற்காலியில் அமர்த்தினாள்.

“இன்னிக்கு ஒரு நாளக்கி, வேல இருக்கு’ன்னு சொல்றேன்’ல, கொஞ்சம் என்னோட ஒத்துழைங்க, எடுத்துப்போட்டுச் 
சாப்பிடுங்க” என்றாள்.

வேண்டா வெறுப்பாக, அந்த வெப்பச் சட்டி (Hotpack) யின் மூடியைத் திறந்தான் அவன். 

சப்பாத்தி!

“ஒரு நிமிசம் என்ன எவ்வளவு ஏமாத்திட்ட பாத்தியா?”

“கொஞ்சம் ஒங்களோட வெளயாடலாம் போலத் தோணுச்சு, அதான் அப்படிச் சொன்னேன். அடேயப்பா! உப்புமா’ன்னதும் 
கோபத்தப் பாக்கணுமே!” அவள் சிரித்தாள்.

அவன் சப்பாத்தியைப் பிய்த்து வாயில் போட்டு மென்றவாறு விழுங்குவதற்கு முன்னர், “ஆமா ஒரு கேள்வி” என்றான்.

“பொரப்போயிரப் போகுது, மெல்லச் சாப்’டுட்டுக் கேளுங்க” என்றாள் அவள்.

மென்றதை விழுங்கிய பின் அவன் கேட்டான், “ஆமா, நாம் மொத’ல்ல கோபப்பட்டதும் என்ன சொன்ன?”

அவள் சிறிது யோசனைக்குப் பின்னர் கூறினாள், ““உப்புமா’ன்னதும் கோபத்தப் பாரு’ன்னு சொன்னேன்”

“இங்க இருக்கிறது நானும் நீயும்தான். பிள்ளைகள் வெளியில வெளயாடிக்கிட்டு இருக்காங்க. கோபத்தப் பாரு’ன்னா, யாரப் 
பாக்கச் சொல்ற?”

“ஏங்க அப்படி ஒரு பேச்சுக்குச் சொல்றது இல்லயா? நம்ம புள்ளக சின்னப்பிள்ளையா இருக்குறப்ப, தூக்கிவச்சுக் கொஞ்சுறபோது,
அதுக சிரிச்சுச்சுன்னா, ‘சிரிப்பப் பாரு, செல்லம்’ அப்படீன்னு கேட்டது இல்லயா? யாராவது வந்து பாருங்க’ன்னா அதுக்கு 
அர்த்தம்? நேத்துக்கூட, சினிமாவுல, ஒரு கன்னிப்பொண்ணுகிட்ட, அவ கல்யாணத்தப் பத்தி பேசுறப்ப, அவ வெக்கப்பட்டதுக்கு,
அவளோட அப்பா, ‘கல்யாணம்’னு சொன்னதும் வெக்கத்தப்பாரு, செல்லக்குட்டிக்கு’ அப்படீ’ன்னு சொன்னாரே, 
கவனிக்கலையா?” அது ஒரு விளையாட்டுப் பேச்சு?

“அப்ப நான் கோபப்படுறது ஒனக்கு வெளயாட்டா?”

“கொஞ்சம் மாத்திச் சொல்லுங்க, ஒங்கள கோபப்படுத்துனது எனக்கு வெளயாட்டு. உண்மையிலேயே சப்பாதிதான் 
இருக்கு’ங்கிறது தெரியாம, உப்புமாவாக்கும்’னு நெனச்சு நீங்க கோபப்பட்டது எனக்கு வெளையாட் …”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளுடைய முகம் சற்று மாறியது. 

பேச்சு தடைப்பட்டவுடன் அவன் நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன ஆச்சு?” என்று வினவினான்.

“கொஞ்சம் பொறுங்க” என்று சொல்லிவிட்டு அவள் வேகமாக படிப்பு அறைக்குள் நுழைந்தாள். சற்று நேரத்திற்குப் பின், 
ஒரு புத்தகத்தைப் புரட்டியவாறே திரும்பி வந்தாள். கலித்தொகை என்று அதன் அட்டையில் பெரிதாக எழுதியிருந்தது.

“இங்க பாருங்க, இருட்டுல இருக்குறப்ப, யாரோ சட்டுன்னு விளக்கப் போட்டதுமாதிரி இருக்கு”

அவள் தொடர்ந்து பேசினாள்.

“நான் பொதுவா, செய்யுள் நடத்துறப்ப, அதிலும் சங்க இலக்கியம் நடத்துறப்ப, அதுக்குப் பொதுவாப் பொருள்மட்டும் சொல்லாம,
அதுல இருக்கிற ஒவ்வொரு அடிக்கும், அந்த அடியில இருக்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள்சொல்லி, அதுல இருக்கிற
நயத்த விளக்கிச் சொல்லுவேன். அப்படி நடத்தும்போது, கலித்தொகையில வர்ர இந்தப் பாட்டுல ஒரு சொல், ஏன் அதப் 
புலவர் சொல்றார்’னு தெரியாம இருந்துச்சு. மொதல்ல உரையில பாக்குறப்ப அங்கயும் ஒண்ணும் இல்ல. அதனால நான் 
அத அப்படியே விட்டுட்டுப் பாடத்த நடத்திட்டேன். இப்பத்தான் எனக்குத் தோணிச்சு அந்தச் சொல்ல ஏன் அங்க புலவர் 
சொல்றார்’னு. ஒங்க உப்புமாக் கோபத்துக்கு ரொம்ப நன்றிங்க” என்று தன் இரு கைகளையும் மடக்கிச் சற்று உயர்த்தி, 
மகிழ்ச்சியுடன் குதிகுதியென்று குதிக்கத் தொடங்கினாள்.

“யம்மா, கொஞ்சம் விளக்கமாச் சொன்னா நானும் சேர்ந்து குதிப்பேன்’ல” என்றான் அவன்.

“சொல்றேன். இது கலித்தொகையில 17-ஆவது பாட்டு. ‘படை பண்ணிப் புனையவும்’னு ஆரம்பிக்கும். ஒரு அரசன், அரசி 
இருக்காங்க. அரசனுக்கு ஒரு நண்பனான இன்னொரு அரசன். அந்த நண்பனோட நாட்டுல கொஞ்சம் உள்நாட்டுக் குழப்பம். 
அதத் தீத்துவைக்க நம்ம அரசனை வேண்டுறான் அவன். நம்ம அரசனும் அந்த நாட்டுக்குப் படையோட போகத் தயாராகுறான்.
மொதல்ல தன் ஆயுதங்களையெல்லாம் செம்மை செஞ்சு எண்ணெய் பூசி வைக்கச் சொல்றான். அதப் பத்தியே நெனச்சுக்கிட்டு
இருக்குறதால படுக்கையில கூட அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக்கறான். அந்த அரசி அவன் முதுகத் தொட்டாலே அவன் 
பெருமூச்சு விடுறான் அவனுக்குத் தன்னோட மனைவி தான் புறப்பட்டுப் போறத எப்படி எடுத்துக்குறுவாளோ’ங்கிற தயக்கம்.
அந்தப் பிரிவை அவள் தாங்கிக்குறுவாளா என்கிற ஐயம். இத மறுநாள் அந்த அரசி தன் தோழிகிட்ட சொல்றா. அவர் மனசுல
என்ன இருக்கோ’ன்னு சொல்லிட்டு நடுங்குறா. இதச் சொல்லவந்த புலவர் சொல்றதக் கொஞ்சம் கேளுங்களேன்” என்று 
சொல்லிவிட்டுப் புத்தகத்திலிருந்து அந்தப் பாடலின் சில அடிகளை அவள் வாசித்தாள்.

படைபண்ணிப் புனையவும், பா மாண்ட பயில் அணைப்
புடைபெயர்ந்து ஒடுங்கவும், புறம் சேர உயிர்ப்பவும்,
உடையதை எவன்கொல் என்று ஊறுஅளந்தவர் வயின்
நடைசெல்லாய், நனி ஏங்கி நடுங்கல் காண் நறுநுதால்! - கலித். 16/1-4

இதுக்குப் பொருளும் சொல்றேன்.

தலைவன் தன் படைக்கலங்களைச் செம்மை செய்து அலங்கரிக்கவும், பலவகையிலும் சிறப்புடைய பலவான மெத்தைகளில்
ஒரு பக்கம் திரும்பிப் படுத்துக்கொள்ளவும், நீ அவன் முதுகினைத் தழுவும்போது பெருமூச்சுவிடவும்,
இவர் உள்ளத்தில் உள்ளது யாதோ என்ற உன் துயரத்தை மனத்தில் ஆராய்ந்து காணும் அவரிடம்
அவரின் போக்குப்படி நடந்துகொள்ளாமல் மிகவும் ஏங்கி நடுங்குகிறாயே, நறிய நெற்றியையுடையவளே!

இங்கதான் புலவர் பொடிவைக்கிறாரு. ‘நடுங்கல் காண் நறுநுதால்’ அப்படீங்கிறதுல வர்ர நடுங்கல் காண் என்கிறதுக்குச் 
சரியான பொருள் மொதல்ல தெரியாமத்தான் சமாளிச்சிட்டு வந்தேன். இது அரசன் மனசுல என்னமோ வச்சுருக்கான்’னு 
அரசி நடுக்கத்தோட சொன்னப்ப, அதுக்குத் தோழி சொல்றது. “நடுக்கத்தப் பாரு, இந்த அழகு ராணிக்கு” அப்படீன்னு தோழி 
சொல்ற மாதிரி இல்லையா?

“சரி, சிரிப்பப் பாரு, வெக்கத்தப்பாரு, கோபத்தப்பாரு’ன்னு சொல்றப்ப ஒரு வெளயாட்டுத்தனம் இருக்குது’ல்லயா? அது இங்க
இருக்கா?

“இருக்கே! அதுதாங்க இங்க சிறப்பு. மொத நாள் இரவுல அரசன் நடந்துகிட்டதப் பத்தி அரசி தோழிகிட்ட மறுநாள் பகல்ல 
சொல்றா. ஆனா அதுக்குள்ள, அரசன் படையெடுத்துப் போகிறதத் தெரிஞ்சுகிட்ட தோழி, அரசன்கிட்ட போய்ப் பேசுறா. நீங்க 
இவள விட்டுப் பிரிஞ்சுபோனா நீங்க திரும்பி வர்ர வரைக்கும் இவ உயிர் வாழமாட்டா, ஏக்கத்துலயே செத்துறுவா’ன்னு
வலுவான மூணு காரணங்களச் சொல்லி அவன் மனச மாத்துறா. அரசனும் மனசு மாறி போகவேண்டாம்’னு முடிவு 
செஞ்சாய்ச்சு. இது பாடல்ல பின்னாடி வருது. இது தோழிக்கு மட்டும்தான் தெரியும். இது தெரியாம, அரசன் பிரிஞ்சு 
போயிருவானோ’ன்னு அரசி நடுங்குறதப் பாத்த தோழிதான் வெளயாட்டாக் கேக்குறா, “நடுக்கத்தப்பாரு, இந்த நல்ல 
பொண்ணுக்கு”. 

பாடல்ல இருக்குற சிறப்பே தோழி செய்யுற இந்தக் குறும்புத்தனம்தான். ஐயோ! இப்பவே போயி எம் புள்ளங்க கிட்டச் 
சொல்லிடணும்’னு துடிக்கிறேங்க. எல்லாத்துக்குமே காரணம் ஒங்க உப்புமாக் கோபம் தாங்க. திரும்பத் திரும்ப அதுக்கு 
ரொம்ப நன்றிங்க. பாத்தீங்களா? நாம இன்னிக்கும் பேசுற பேச்சு வழக்கு, இரண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி 
இலக்கியத்திலயும் இருக்கிறதப் பாக்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியா இருக்குங்க”

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்! 

என்னே தமிழின் இளமை!