பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 26 - அவல் உப்புமா


அன்றைய நாள் கடைசிப் பாட வகுப்பில் இருந்தாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை. பரணர் எழுதிய ஒரு புறநானூற்றுப் 
பாடலை நடத்திக்கொண்டே வந்தவளுக்குத் திடீரென்று மனத்துக்குள் ஒரு கேள்வி தோன்றியது. அதற்கு விடையும்
தெரியவில்லை. தமக்கு முந்தி யாராவது ஒரு மாணவி அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டால்? 
யோசித்துக்கொண்டிருக்கும்போதே வகுப்பு முடியும் மணி அடித்தது. அந்தத் தமிழ்ப்பேராசிரியைக்கு ஒரு நிம்மதி.
நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம். சில சமயங்களில் வகுப்பு முடியும்போது, மாணவர்களுக்கு இருப்பதைக் காட்டிலும்
ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அதிகம் கிடைப்பது வழக்கம். இது அந்தத் தமிழ்ப்பேராசிரியைக்கு அன்றைக்கு நடந்தது.

உடனடியாக வீட்டுக்குக் கிளம்பினாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை. வீட்டில் கணவர் காத்துக்கொண்டிருப்பார். 
வீட்டிற்குச் சென்று அவர் வாங்கிவைத்திருக்கும் மாலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு அவருடன் உடனே வெளியே
கிளம்பவேண்டும். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு விரிவாக்கப்பகுதியில் அவர்கள் வீடுகட்டிக்கொண்டிருந்தார்கள். 
அன்று முக்கியமான மேல் தளம் போடும் வேலை.

நாள் முடியப்போகும் நேராமாதலால், வீட்டுவேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. சித்தாள்கள் தலையில் 
சிமெண்ட் கலவையைச் சுமந்தவண்ணம் வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். திடீரென்று கொத்தனார் ஒரு 
அதட்டுப் போட்டார். சித்தாளான ஒரு இளம்பெண்ணைப் பார்த்து “அதென்ன வாய்க்குள்ள? என்னத்தப்போட்டு 
அதக்கிக்கிட்டு இருக்க?” என்று அதட்டினார். அந்தச் சித்தாளின் கன்னம் ஒரு பக்கம் கொஞ்சம் 
புடைத்துக்கொண்டிருந்தது. ”அரிசி” என்று நன்றாக வாயைத் திறக்காமல் ஒரு முனகலாக அந்தச் சித்தாள் 
பதிலிறுத்தாள். “எத்தன தடவ சொல்லியிருக்கேன்? இன்னிக்குத் தளம் வேல. எவளும் அரிசி, கிரிசிய வாய்க்குள்ள 
ஒதப்பிக்கிட்டுத் திரியக்கூடாது’ன்னு. அத முழுங்கு, இல்லன்னா போய்த் துப்பிட்டு வந்து வேலயப் பாரு” 

“என்ன கொத்தனாரே! இவங்களுக்கு டிபன் வாங்கித்தரல்லியா? ஏன் அரிசியத் திங்கிறாங்க?” என்றார் என் கணவர்.

“இந்தப் பொம்பளய்ங்களுக்கு இதே வேலைய்யா! பெரிசுக, வெத்தலையப் போட்டுக்கிட்டு, ‘புளிச் புளிச்’ன்னு 
எந்தநேரமும் துப்பிக்கிட்டே இருக்குங்க. சிறிசுக, அரிசி, அவல் இந்த மாதிரி எதையாவது வாய்க்குள்ளே 
ஒதுக்கிக்கிட்டே இருக்குங்க. வெத்தல போட்டா பரவாயில்ல. வாய்க்குள்ள இருக்குற அரிசி ஒண்ணுரண்டு 
சிந்திச்சுன்னா, இப்ப ஒண்ணும் தெரியாது. கொஞ்சநாள் கழிச்சு அது ஊறிப்போயி பூச்ச வெடிக்க வச்சிரும். 
அப்புறம் நீங்க என்னயக் கூப்பிட்டு “என்ன வேல பாத்திருக்கீங்க?” எம்பீங்க. இதுகளால நமக்கும் பொல்லாப்பு, 
வேலயும் கெட்டுப்போயிரும்." 

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தமிழ்ப்பேராசிரியையின் முகம் மலர்ந்தது. “புரிஞ்சுபோச்சு” என்றாள் 
சன்னமாக. ஆச்சரியத்துடன் அவளைத் திரும்பிப் பார்த்த தன் கணவரிடம் “அப்புறம் சொல்றேன்” என்றாள் 
மெதுவாக.

சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு, அவர்கள் வீடு திரும்பினார்கள். அது விரிவாக்கப் பகுதியாதலால் சாலை 
இன்னும் போடப்படவில்லை. கார் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கி மெதுவாகவே வந்தது. இருப்பினும் ஓரிடத்தில் 
சட்டென்று நின்றுவிட்டது. மொத்தமாக அணைந்தும் விட்டது. எவ்வளவு முயன்றும் அது உயிர்பெறவில்லை. 
”ஏங்க, மெக்கானிக் இப்போ கிடைப்பாரா?” என்றாள் அவள் கவலையுடன். “பார்ப்போம் என்று சொன்னவன் 
கைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்தான். இடத்தைச் சொன்னான். “இருட்டுறதுக்குள்ள ஆள் வந்திருவான். 
நாம கொஞ்சம் இறங்கி நிப்போம்” என்றான் அவன். காரை விட்டு அவர்கள் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தார்கள். 

அப்போது பக்கத்துக் குடிசையிலிருந்து இரண்டு சிறுவர்கள் - வயது 10, 12 இருக்கும் - வெகு வேகமாக வெளியே 
ஓடிவந்து இவர்களை உரசிக்கொண்டு ஓடி மறைந்தனர். கையில் ஒரு குச்சியுடன் ஓர் இளம்பெண் குடிசையிலிருந்து
வெளியே வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். கண்ணுக்கெட்டியவரை அவர்களைக் காணாததால், 
“ஓடியா போயிட்டீங்க? எங்க ஓடிப்போவீங்க? பசிச்சுன்னா மொக்கிக்கிற இங்கதான வரணும்” என்றவள் 
முந்தானையை ஒரு உதறு உதறி, இடுப்பில் செருகிய வண்ணம் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.

இதைக் கேட்ட அந்தப் பேராசிரியை நன்றாகவே சிரித்தாள். “என்ன? ரொம்பப் புரிஞ்சிருச்சா? என்னமோ ஒன் 
மனசுல நினைப்பு ஓடிக்கிட்டே இருக்கு, அது ஒவ்வொண்ணாத் தெளிவாகுது. என்ன நான் சொல்றது சரியா?” 
என்றான் அவள் கணவன். தன் மனைவியின் மனப்போங்கு - சிந்தனை எப்போதும் தமிழைப் பற்றியே இருக்கும்
அவளுக்கு என்பது - அவனுக்குத் தெரியாமல் இருக்குமா? ”வீட்டுக்கு வாங்க, சொல்றேன்” என்று அவள் 
சொன்னாள்.

சற்று நேரத்தில் காரைச் சரிசெய்பவர் வந்து பார்த்து, என்னென்னமோ செய்து காருக்கு உயிரூட்டிவிட்டார். 
அவர்கள் இருட்டும் முன்னரே வீடு வந்து சேர்ந்தனர். வந்ததும், சாய்விருக்கையில் ஓய்வாகச் சரிந்தவன், 
தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினான். அவள் அறைக்குள் உடைமாற்றச் சென்றாள். தொலைக்காட்சிப் 
பெட்டியில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில், ஒரு பேராசிரியை நாட்டுப்புறப்பாடல் ஒன்றை உரக்கப் பாடிக்கொண்டிருந்தார்.
அவன் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு மாறினான். உள்ளேயிருந்து வேகமாக வந்த அவள், “ஏங்க, அந்த நாட்டுப்புறப் 
பாடலை மறுபடியும் போடுங்க” என்றாள். ”அந்தம்மா பாடி முடிச்சிருப்பாங்க” என்றான் அவன்.. “இல்ல, திரும்பத்
திரும்ப அதப் பாடுவாங்க, நீங்க முதல்ல அதப் போடுங்க” என்று அவனை அவள் அவசரப்படுத்தினாள். 
அரைமனதாக அவன் அந்த நிகழ்ச்சியை மீண்டும் திரைக்குக் கொண்டுவந்தான். அந்தப் பாடல் மீண்டும் ஒலித்தது.

’தத்திங்கம் தத்திங்கம் கொட்டுவாளாம்
தயிரும் சோறும் திம்பாளாம்
ஆப்பம் சுட்டால் தின்னுவாளாம்
அவல் இடிச்சால் மொக்குவாளாம்’

அப்படியே பாடலை உள்வாங்கிக்கொண்ட அவள், அவன் அருகில் அமர்ந்தாள்.
அவன் தொலைக்காட்சிப்பெட்டியின் ஒலியைக் குறைத்தான். அவள் பேச ஆரம்பித்தாள்
“சில நாட்கள்ல நாம நினைச்சது ஒவ்வொண்ணாத் தட்டிக்கிட்டே போகும், ஆனா, சில நாட்கள்ல நாம 
நினைக்காததுகூட ஒவ்வொண்ணா எதிரே வந்துகிட்டே இருக்கும்” என்று சொன்ன அவளின் முகத்தையே 
பார்த்துக்கொண்டிருந்த அவன், இன்றைக்கு ஒரு நல்ல கதை கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் 
ஆர்வத்துடன் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் சொல்ல ஆரம்பித்தாள்.

”இன்றைக்குக் கடைசி வகுப்புல பாடம் எடுத்துக்கிட்டு இருந்தேன். புறநானூற்றுல பரணர் எழுதிய பாடல். 
பாடல் 63. ரெண்டு பெரிய வேந்தர்கள் சண்டைபோட்டுக்கிட்டு இருக்கிற போர்க்களம். ரெண்டு பக்கமும் பெரிய 
அழிவு, சேதம். ’இந்த ரெண்டு பேரு வீம்புனால எத்தனை பெரிய இழப்பு! இனிமேல் இந்த ரெண்டுபேரின்
நாடுகளும் என்ன ஆகுமோ’, அப்படீன்னு சொல்ல வந்த புலவர், ஒரு இயற்கைக் காட்சியைக் காண்பிக்கிறாரு.

’என்னாவது-கொல் தானே, கழனி
ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கி தண் புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே’

இதுக்கு அர்த்தம்,

என்ன ஆகுமோ? வயலில் இருக்கும்
ஆம்பல் தண்டினால் செய்த வளையலை அணிந்த கையையுடைய பெண்கள்
பச்சை அவலை வாய் நிறைய வைத்துக் கொண்டு குளிர்ந்த நீரில் பாய்ந்து குளிக்கின்ற,
எப்போதும் புதுமை பொங்க விளங்கும் ஊர்களின்
அழகிய இடங்களையுடைய இந்த வேந்தர்களின் பெரிய நாடுகள்.
(என்ன ஆகுமோ?)

முதல்ல வந்த சந்தேகம், இந்தப் பெண்கள் ஏன் அவலை வாய் நிறைய வச்சுக்கிட்டு இருக்காங்க? அந்த சந்தேகம்
நம்ம வீடு கட்டுற இடத்துல தீர்ந்துபோச்சு.

“எப்படித் தீர்ந்துச்சு?” அவன் இடை மறித்தான்.

“அதாங்க, அந்த சித்தாள் வாயில அரிசிய ஊறவச்சுக்கிட்டு இருந்தது. இதுதான் தமிழ்நாட்டு இளம்பெண்கள் 
வழக்கம். அன்னக்கி இருந்து இன்னிக்கி வரை தொடர்ந்து வருது”

அடுத்து வந்த சந்தேகம், இந்தப் பெண்கள் அவலை வாயில அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறத புலவர் சொல்றாரு,
’மகளிர் பாசவல் முக்கி’. இந்த முக்கு அப்படீங்குற சொல்ல நமக்குத் தெரியும். ஒருத்தன் கஷ்டப்பட்டு ஒரு 
வேலை செஞ்சான்னா, ‘ஏண்டா, இந்த முக்கு முக்குற?’ அப்படீங்குறோம். அடுத்து, தண்ணிக்குள்ள ஒண்ண 
முழுசா அமுக்குனா, அதத் தண்ணிக்குள்ள முக்குறது’ன்னு சொல்றோம். இவரு வாய்க்குள்ள ஒண்ண நெறயா 
அடச்சுவச்சா, அத முக்குறது’ன்னு சொல்றாரு.

“யாரு?” அவன் மீண்டும் இடைமறித்தான்.

“இந்தப் பாட்டு எழுதின புலவர்தான். பாடல்ல அப்படி வருது. இதத்தான் நாம இப்போ மொக்குறது-ங்கிறோம். 
அந்தக் குடிசைக்காரப் பொண்ணு சொன்னாளே நெனைவிருக்கா, நான்கூட கேட்டுட்டிச் சிரிச்சேனே! ஓடிப்போன 
தம் பிள்ளங்களப் பாத்து அவ சொன்னாளே! - ’ஓடியா போயிட்டீங்க? எங்க ஓடிப்போவீங்க? பசிச்சுன்னா 
மொக்கிக்கிற இங்கதான வரணும்’

”வாய் நெறயா வச்சு அமுக்குறத நாம மொக்குறது என்கிறோம். அது உண்மையில முக்குறது-தான். அது 
சங்க காலத்துச் சொல். முக்கு அப்படிங்கிறதுக்கு அது மூணாவது பொருள். இப்ப ரெண்டாவது சந்தேகமும் 
தீர்ந்துபோச்சு.

”எனக்குக் கொஞ்சநஞ்சம் இருந்த சந்தேகத்தையும் இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி நாட்டுப்புறப் பாடல் 
தீர்த்துவச்சுருச்சு.

’ஆப்பம் சுட்டால் தின்னுவாளாம்
அவல் இடிச்சால்? -----  மொக்குவாளாம்!!’

”முதல் சந்தேகம் அவலப் பத்தி. ரெண்டாவது சந்தேகம் முக்கு அல்லது மொக்குறதப் பத்தி. இந்த ரெண்டயும் 
தீத்துவச்சது இந்த நாட்டுப்புறப்பாடல். ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னால எழுதின ஒரு சங்க காலப் பாடல்ல 
சொன்ன இந்த அவல் முக்குறது, இப்ப இருக்கிற நாட்டுப்புறப் பாடல்ல இருக்கு பாத்தீங்களா?”

அவள் சொல்லி முடிக்க அவளைப் பெருமையுடன் பார்த்த அவன் சொன்னான், “இன்னிக்கு இரவுச் சாப்பாடு 
அவல் உப்புமா, நான் ஒரு மொக்கு மொக்கப்போறேன்”

அவன் தொலைக்காட்சிப்பெட்டியின் ஒலியைக் கூட்டினான். இப்போது நிகழ்ச்சி மாறியிருந்தது. அது ‘திரைப்பாடல்கள்’.
அப்போது கதாநாயகி கதாநாயகனைக் கேலி செய்தவாறு பாடிக்கொண்டிருந்தாள்.

“வக்கனையா சோறு பொங்கி ஆக்கி வச்சாக்கா,
நீ முக்குவேயே மூக்குப்பிடிக்க மிச்சம் வைக்காம”

அப்போது அங்கு எழுந்த சிரிப்பலை அடங்க வெகுநேரமாயிற்று.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்! 

என்னே தமிழின் இளமை!