பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 22. கலர்ப்பூ


இருசக்கர வாகனத்தில் கணவனின் தோளைப் பற்றியவாறு சென்றுகொண்டிருந்தவள், “அந்தப் பூக்காரிகிட்ட கொஞ்சம் 
நிறுத்துங்களேன்” என்றாள்.

வண்டியின் வேகத்தைக் குறைத்து, சாலையோரம் அமர்ந்திருந்த பூக்காரியின் அருகில் வண்டியை நிறுத்தினான் அவன்.
வண்டியை விட்டுக் கீழே இறங்கியவள், பூக்காரியின் அருகில் சென்று, “மல்லி, நூறு எவ்வளவு’ம்மா?” என்று கேட்டாள்.

“அம்மா, இன்னிக்கி முகூர்த்த நாளு, வெல சாஸ்தி, நூறு அம்பது ரூவா’ம்மா” என்றாள் அந்தப் பூக்காரி.

“என்னதான் முகூர்த்தம்’னாலும் அம்பது ரொம்ப அதிகம்’மா, அப்ப பூ வேணாம்” என்று சொல்லியவாறு திரும்ப 
முயன்றாள் அவள்.

“அம்மா, அம்மா, இந்தக் கலர்ப்பூவ வேணும்னா வாங்கிட்டுப்போமா, கொறச்ச வெலக்கித் தாரேன்” என்று அருகில் 
வைத்திருந்த கனகாம்பரத்தைக் காட்டி இறைஞ்சினாள் அந்தப் பூக்காரி.

“இல்லம்மா, கலர்ப்பூவெல்லாம் வச்சுக்கிறமாட்டேன்” என்று சொல்லிவிட்டு வண்டிக்குத் திரும்பினாள் அவள்.

வண்டி கிளம்பி ஒரு சிற்றுண்டிக் கடைக்குச் சென்றது.

வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டு இருவரும் அந்த இட்லிக் கடைக்குள் நுழைந்தனர். ஆளுக்கு இரண்டு இட்லி 
சொல்லிவிட்டுக் கைகழுவி அமர்ந்தனர்.

இட்லி வந்தது. கூடவே கோப்பைகளில் சாம்பாரும், சட்னிகளும் – வெள்ளை நிறத்தில் தேங்காய்ச் சட்னியும், பச்சை 
நிறத்தில் புதினாச் சட்னியும்.. அவள் இட்லியைப் பிய்த்துக் கோப்பைகளுக்குள் இருந்தவற்றை இலேசாகத் 
தொட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவன் இதற்கு நேர் மாறாக, இட்லிகளைப் பிய்த்து உதிர்த்துப் பரப்பி, 
அந்தச் சட்னிகளை அதன்மேல் கவிழ்த்தான். சேர்த்துப் பிணைந்து ஒரு வெட்டு வெட்ட ஆரம்பித்தான். சிறிது நேரத்தில்
சட்னி தீர்ந்துவிட்டது. சிப்பந்தியை அழைத்து, “கலர்ச் சட்னி மட்டும் கொண்டுவாப்பா” என்றான்.

அவள் சிரித்தாள்.

“என்ன சிரிக்கிற? நான் இப்படித்தான் சாப்பிடுவேன்னு தெரியும்’ல?” என்றான்.

“நான் அதுக்குச் சிரிக்கல, இங்க, வெள்ளை, பச்சை’னு ரெண்டு நிறத்துல  சட்னி இருக்கு. நீங்க பொதுவா, கலர்ச் 
சட்னி’ன்னு சொன்னீங்க. அவனும் சரின்’ட்டுப் போயிட்டான்”

என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிப்பந்தி பச்சைநிறப் புதினாச் சட்னியை வைத்துவிட்டுச் சென்றான். 
அவள் சிரிப்பு அதிகமானது.

“பூக்காரிகூடச் சொன்னாளே, வெள்ளை நிற மல்லிகை வேண்டாம்;னா ஆரஞ்சு நிறக் கனகாம்பரத்த வாங்குங்க’ன்னு 
சொல்றதுக்குக் கலர்ப்பூவ வாங்கிட்டிப்போங்க’ன்னுதானே சொன்னா” என்றான் அவன்.

அவனே தொடர்ந்தான்.

“போன வாரம் என் நண்பன்கூட அவனோட கிராமத்துக்குப் போயிருந்தேன்’ல. அங்க எல்லாரும் அவனுக்குத் 
தெரிஞ்சவங்க. ஒரு கடையில தாகத்துக்கு ஏதாவது குளிர்பானம் குடிக்கலாம்’னு நின்னோம். அந்தக் கடைக்காரர் 
என் நண்பனைப் பாத்து, “வாங்க தம்பி, சவுக்கியமா? ஒரு கலர்க் குடிங்க’ன்னார். நான் அவங்கிட்ட மெதுவாக் 
கேட்டேன். கலர்’னா என்னடா’ன்னு. ‘எல்லாம் உள்ளூர்ச் சரக்கு. மஞ்சள், பச்சை, சிவப்பு’ன்னு பல நிறத்துல 
இருக்கும். சோடா தவிர மத்ததெல்லாம் அவங்களுக்குக் கலர்தான்’ன்னு அவன் சொன்னான்.

அவள் முகம் சற்று மாறியது. “ஏங்க இந்தக் கலர்ப்பழக்கம் இன்னிக்கு நேத்து இல்லீங்க, காலங்காலமா நம்மகூட 
வந்துகிட்டிருக்கு, வீட்டுக்கு வாங்க சொல்றேன்” என்று சொன்னாள். 

சிற்றுண்டியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் தன் அறைக்குள் நுழைந்து சில புத்தகங்களை அள்ளிக்கொண்டு
நடு அறைக்கு வந்த அந்தத் தமிழ்ப் பேராசிரியை, அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவற்றைப் புரட்டத்தொடங்கினாள்.

இதற்குள் உடை மாற்றிக்கொண்டு வந்த அவன், “என்ன? மறுபடியும் ஏதாவது தமிழின் இளமையா?” என்று கேட்டு 
அவளருகே அமர்ந்தான்.

அவள் பேசத் தொடங்கினாள்.

“இங்க பாத்தீங்களா? நம்ம நாட்டுல கரடி கருப்பாத்தானே இருக்கும். இந்தப் புலவர் சொல்றார் 

‘குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்’. 

இது திருமுருகாற்றுப்படையில 313-ஆவது அடி. இதுக்குப் பொருள் சொல்லும்போது 

‘கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும், வளைந்த அடியினையுமுடைய கரடி’ 

அப்படீங்கிறார் நச்சினார்க்கினியர். 

“அப்ப, குரூஉ’ன்ன கருப்பு நிறம்’னு அர்த்தமாயிருக்கும்” அவன் ஐயத்தைக் கிளப்பினான்.

“இல்லயே! இங்க பாருங்க, செம்மண் நிலத்துல மாட்டுக்கூட்டம் போகுது. அப்பப் புழுதி கிளம்புது. அந்தப் புழுதி எந்த 
நெறத்துல இருக்கும்?”

“செவப்பாத்தான் இருக்கும்”

“இங்க புலவர் சொல்றார், ‘சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள்’. இது அகநானூற்றுல 79-ஆவது பாட்டுல வருது. 
துகள்’னா புழுதி. இங்க குரூஉத் துகள்’னா சிவப்புப் புழுதி. இன்னொண்ணக் கேளுங்க. புலி என்ன நெறத்துல இருக்கும்?”

“அதயும் குரூஉப்புலி’ங்கிறாரா புலவர்?”

“ஆமாங்க, ‘குரூஉப்புலி பொருத புண்கூர் யானை’ அப்படீன்னு மலைபடுகடாம் 517-ல்ல வருது.”

“இதுக்கு என்ன சொல்றாரு அந்த உரைகாரரு?”

“இதுக்கு வேற உரையைப் பாக்கலாம். இவரு பெருமழைப் புலவர்’னு ஒருத்தர். பெரிய அறிஞர். இவரு சொல்றாரு, 

‘நிறத்தையுடைய புலியால் கொல்லப்பட்ட புண் மிக்க யானை”

அவளே தொடர்ந்தாள். 

“எல்லா நிறக் குளிர் பானத்தையும் கலர்’னு நம்ம கிராமத்துக்காரங்க பொதுவா சொல்ற மாதிரி, நாம கலர்ப்பூ, 
கலர்ச் சட்னி அப்படீன்னு சொல்ற மாதிரி, எந்த நிறத்தையும் குறிக்கிறதுக்கு அன்னிக்கு இலக்கியத்துல குரூஉ 
அப்படீன்னு சொல்லியிருக்காங்க. ஆங், இன்னொண்ணு ஞாபகம் வருது. பொதுவா ஆத்துல தண்ணி தெளிவாப் போகும்.
ஆனால் மழை பேஞ்சு, புதுத்தண்ணி கலங்கலா வரும்போது அத, ‘தண்ணி கலரா வருது’ன்னு சொல்லுவோம்’ல!
மயிலாடம்பாறையில மழை பேஞ்சு, கிழக்கு நோக்கி வேகமா வர்ர வைகையப் புலவர் மாங்குடி மருதனார் 
மதுரைக்காஞ்சியில சொல்றாரு ‘குணகடற்கு இவர்தரூஉம் குரூஉப் புனல்’ இங்க கலங்கலான கலர்த் தண்ணியும் 
குரூஉப் புனல்தான். இன்னிக்கும் நாம பேசிக்கிட்டு இருக்கிற வழக்கம் என்னிக்கோயிருந்து நம்மகூட வந்துகிட்டே 
இருக்குங்க, என்ன! இன்னிக்குக் கலர்’னு ஆங்கிலத்துல சொல்றோம். அதையே குரூஉ அப்படீன்னு அன்னிக்குச் 
சொல்லியிருக்காங்க” என்று சொல்லி முடித்தாள் அவள்.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்! 

என்னே தமிழின் இளமை!