பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 23 - போர் மாடு


யானைமலை ஒத்தக்கடையை நோக்கி வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவன் நீதிமன்றம் அருகே 
வந்தபோது, சடக்கென்று வேகத்தைக் குறைந்து வண்டியை ஓரங்கட்டினான். காரணம் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் 
அவனுடைய நண்பன் நின்றுகொண்டிருந்ததுதான். இவன் வண்டியை நிறுத்தியதைப் பார்த்த அந்த நண்பன் விரைவாக 
நடந்து வண்டியருகே வந்தான். 

“என்னப்பா, இந்தப் பக்கம் போற?” என்று நண்பன் இவனை வினவினான்.

“ஒத்தக்கடை போறேன். நீ எதுக்கு இங்க நிக்கிற?” என்று இவன் கேட்டான்.

“மாட்டுத்தாவணிக்குப் போகணும். அங்க இன்னிக்கி மாட்டுச் சந்தை”

“மாட்டுச் சந்தயில போயி நீ என்ன செய்யப்போற?”

“எனக்கு அங்க ஒண்ணும் வேலை இல்ல. கிராமத்தில இருந்து எங்க பெரியப்பா அங்க வர்ராரு - மாடு வாங்க. எங்கிட்ட
பேசணும்’னு சொன்னாரு. மாட்ட வாங்கிக்கிட்டு நேர ஊருக்குப் போயிருவாராம். என்னயக் கொஞ்சம் அங்க 
இறக்கிவிட்டுரு” என்று பின்பக்க இருக்கையில் ஏறி அமர்ந்தான் அந்த நண்பன்.

“ஒங்க கிராமத்துப் பெரியப்பாவா? நானும் அவரப் பாத்து ரொம்ப நாளாச்சு. நானும் ஒங்கூடவே சந்தைக்கு வர்ரேன்”

இருவரும் சந்தைக்குப் போனார்கள். அங்கே, கொஞ்சம் சுற்றிவந்து பெரியப்பாவையும் கண்டுபிடித்தார்கள்.

“என்ன பெரியப்பா? நல்லா இருக்கீங்களா?” என்று வினவினான் நண்பன். இவனும் அவருக்கு வணக்கம் செலுத்தினான்.

பெரியப்பா இவனைப் பார்த்துப் பாசத்துடன் நலம் விசாரித்தார். அப்புறம் நண்பனுடன் பேசலானார்.

“என்னப்பா? வீட்ல எல்லாரும் சவுக்கியமா? ஒரு நல்ல பசுமாடு வாங்கணும்’னு ஒங்க பெரியம்மா ஒரே பிடிவாதம். 
சுத்தமான பசும்பால் வேணுமாம். நான் அப்பவே வந்துட்டேன். நாலஞ்சு மாட்டப் பாத்தேன். ஒண்ணும் வாகா 
அமையல” என்றார்.

“ந்தா, அங்ககூட நாலஞ்சு பசுமாடு நிக்கிதே பெரியப்பா” என்று அருகில் நிறுத்தியிருந்த சில பசுமாடுகளை நண்பன் 
காட்டினான்.

நின்ற இடத்தில் இருந்தவாறே, அந்த பசுமாடுகளைப் பார்த்து, பெரியப்பா விளக்க ஆரம்பித்தார்.

“அந்தா நிக்குதே வெள்ள. அதனோட கன்டுக்கு வயசாச்சு. இன்னும் கொஞ்ச நாள்தான் பால் குடுக்கும். அப்புறம் வெத்து 
மாட்ட வச்சுக்கிட்டு என்ன பண்றது? அடுத்து நிக்குற மயிலைக்கு இது அஞ்சாம் ஈத்தாம். மாட்டுக்கே வயசாச்சு. 
அங்க நிக்குதே செவல. அதுக்குக் காளங்கன்னு. கிடாரிக்கன்டா இருந்தாப் பரவாயில்ல. அந்தக் காரிப் பசுவப் பாத்தாலே 
பிடிக்கல” 

அப்போது பெரியப்பாவை ஒருவர் வந்து அழைத்தார்.

“ந்தா, பொறுப்பா, இவரு தரகரு, என்னத்தயோ காட்டணும்’ங்கிறாரு” என்று சொல்லியவாறே பெரியப்பா நகர்ந்தார்.

“என்னப்பா ஒன் பெரியப்பா பேசுறாரு, ஒண்ணும் புரியல” என்றான் இவன்.

நண்பன் சிரித்தான். “எல்லாம் மாட்டப் பத்தின பேச்சுதாம்’ப்பா. பட்டணத்துலயே பொறந்து வளந்த ஒனக்கு ஒண்ணும் 
புரியல. சொல்றேன். காரி’ன்னா கருப்பு. மயிலை’ன்ன ஒருமாதிரி சாம்பல் நிறம். செவல’ன்னா செகப்பு. நெறத்த 
வச்சுத்தான் மாடுகளைக் குறிப்பிடுவாங்க”

“கன்டு’ன்னா?”

நண்பன் உரக்கவே சிரித்தான். கன்னுக்குட்டியத்தான் கன்டு’ன்னு சொல்லுவாங்க. காளங்கன்னு’ன்னா ஆண் 
கன்னுக்குட்டி. கிடரி’ன்னா பெண் கன்னுக்குட்டி. கிடரி’ன்னா நல்லது. பசுவுக்கு வயசாகும்போது, இது வயசுக்கு 
வந்துரும். ஈத்து’ன்னா ஈனுறது, அதாவது, குட்டி போடுறது” என்று நண்பன் விளக்கிக்கொண்டிருக்கும்போதே 
பெரியப்பா திரும்பி வந்தார்.

“என்னப்பா, அது போர் மாடு. போர்’னாலே ஒங்க பெரியம்மாவுக்குப் பிடிக்காது”

இவன் மறுபடியும் புரியாமல் விழித்தவாறு நண்பனை நோக்கினான்.

நண்பன் சொன்னான், “போர்’னா புள்ளி புள்ளியா இருக்கிறது. பொதுவாக் கருப்பும் வெள்ளையும் கலந்து 
திட்டுத்திட்டா ஒடம்பு முழுக்க இருக்கும்”

“சரி அத எதுக்குப் போர்’னு சொல்லணும். போர்’னா சண்டையின்னுதானே அர்த்தம்?” இவன் ஐயத்தைக் 
கிளப்பினான்.
“அதான் வீட்லயே இருக்காங்களே தமிழ்ப் பேராசிரியை. அங்க போயிக் கேளு இதெல்லாம்” என்று நழுவினான் 
நண்பன்.

ஒருவாறு அன்றைய சந்திப்பு முடிந்து, அவன் தன் வேலைகளையும் முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தும் 
சேராமலும் தன் மனைவியை நோக்கிக் கேள்விக்கணையை வீசினான்.

“போர்’னா என்ன?”

“என்ன இது? வந்ததும் வராததுமா? யார்கூடவாவது சண்ட போட்டீங்களா?”

“அதெல்லாம் இல்லை. கேட்டதுக்குப் பதில் சொல்லு, போர்’னா என்ன?”

“சின்னப்புள்ளய்க்குக்கூடத் தெரியும். போர்’னா சண்டை, யுத்தம்”

“அப்பப் போர் மாடு’ன்னா?”
“போர் மாடா? ஒருவேளை ஜல்லிக்கட்டுக் காளையா இருக்குமோ?”

“இல்ல, இது பசு மாடு. அதனோட நெறத்தைக் குறிக்குது”

“போர்’னு ஒரு நெறம் இருக்கிறதா எனக்குத் தெரியலீங்க”

“இருக்கே! மாட்டோட மேனி முழுக்கக் கருப்பும் வெள்ளையுமா திட்டுத்திட்டா இருந்தா அது போர் மாடு”

அந்தத் தமிழ்ப் பேராசிரியை சற்று யோசித்தாள். அவள் முகம் மலர்ந்தது.

“போர்’னா என்ன’ன்னு திரும்பச் சொல்லுங்க?”

அவன் மீண்டும் முன்னர்க் கூறியதை அப்படியே சொன்னான்.

அவள் சிரித்தாள். 

“இது பேச்சு வழக்கு’ங்க. புகர் அப்படீங்கிறதத்தான் அவங்க போர்’னு சொல்றாங்க. புகர்’னா புள்ளி அப்படீ’ன்னு 
பொருள். யானை முகத்தப் பாத்திருக்கீங்களா? நெத்திக்குக் கீழே புள்ளி புள்ளியா இருக்கும். அதனால யானைய, 
‘புகர் முக வேழம்’னு சொல்லுவாங்க” என்று சொன்னவள் அருகிலிருந்த ஒரு புத்தகத்தைத் திறந்து பக்கங்களைப் 
புரட்டினாள்.

“புகர் முக வேழம் புலம்பத் தாக்கி’ன்னு நற்றிணை 158-ல வருது. இன்னும் சொல்லப்போனா யானைக்குப் புகர்முகம்
அப்படீன்னே ஒரு பேரு இருக்கு.”

அவள் வேறு ஒரு புத்தகத்தைப் புரட்டினாள்.

“பொறி வரி புகர்முகம் தாக்கிய வயமான் அப்படீன்னு பெரும்பாணாற்றுப்படையில 448-ஆவது அடி சொல்லுது. 
இங்க புகர்முகம்’னா யானை. வயமான்’னா சிங்கம், புலி. இந்தப் புகர்’ங்கிற சொல்லத்தான் இப்பப் பேச்சு வழக்குல 
போர்’னு சொல்றாங்க. இப்பச் சொல்லுங்க, வெளியில என்ன நடந்துச்சு?. எங்க போனீங்க? போர் மாட்டை எங்க 
பாத்தீங்க? யாரு அதப் போர் மாடு’ன்னு சொன்னா?”

அவள் அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டாள்.

அவனும் பொறுமையாக நடந்ததைச் சொன்னான்.

“பாத்தீங்களா? நம்ம கிராமத்து மக்கள் பேச்சு வழக்குல இதப்போல இன்னும் எத்தனையோ சங்கத் தமிழ் சொற்கள் 
இன்னக்கி வரைக்கும் உயிரோட வாழ்ந்துகிட்டு இருக்குங்க”.

பெருமையுடன் தமிழ் பற்றிப் பேசியபோது அவளின் முகத்தில் புதியதொரு பொலிவு வந்து குடிகொண்டது.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்! 

என்னே தமிழின் இளமை!