பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 14 - அன்னக்கித்தொட்டு


ஒழுகுகின்ற கண்ணீரைத் தன் சட்டையால் துடைத்துக்கொண்டே உள்ளே நுழையும் தன் மகனை ஓடிவந்து 
அணைத்துக்கொண்டாள் அந்த அன்னை. அவள் கேட்டாள், “என்ன நடந்துச்சு? யாராச்சும் அடிச்சாங்களா?” இன்னும் 
விசும்பல் குறையாத சிறுவன் தலையைமட்டும் ஆட்டினான். “யாரு? அந்த தடிப்பய சிவனாண்டியா?” ஆங்காரத்துடன் 
கேட்டு அவனை உலுப்பினாள் அன்னை. அழுகை இன்னும் சற்று ஓங்கி எழ, அவன் கால்சட்டையைச் சற்றுத் தூக்கிக் 
காண்பித்தான். செக்கச் செவேலென்று அந்த இடம் கன்னிப்போயிருந்தது. “இங்க கிள்ளி வச்சுட்டாம்’மா” அவன் குரல் 
ஒங்கி ஒலித்தது. “அவன் இந்தப் பக்கம் வரட்டும் பேசிக்கிறேன். நீ வா ராசா” என்று அவனை அழைத்துக்கொண்டு 
மாடக்குழியிலிருந்த எண்ணெய்ச் சீசாவை எடுத்து அதினின்றும் சிறிது எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி, அவனது 
காலில் சிவந்த இடத்தில் தேய்த்துவிட்டாள்.

“நான் அன்னிக்கித்தொட்டு சொல்லிக்கிட்டே இருக்கேன், அவய்ங்கூடச் சேரவாணாமுன்னு” 

“அவய்ந்தான் முந்தாநாத்தொட்டு என்னய வம்புக்கிழுத்துக்கிட்டே இருந்தாம்’ம்மா”

“சரி, சரி, அப்பா வரட்டும் சொல்லலாம், அவங்க அப்பாருகிட்டச் சொல்லச்சொல்லி”

இங்கே தாயும் மகனும் ‘தொட்டு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.
 
‘தொட்டு’ என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றில், ‘அது தொட்டு’ என்றால் ‘அது முதல்’ என்ற 
ஒரு பொருள் உண்டு. தொடக்கம் என்பதன் அடிச்சொல் இது. ஆனால் இப்போது ‘தொட்டு’ போய் ‘முதல்’ 
நிலைத்துவிட்டது. ஆனால் கிராமங்களில் இச் சொல் இன்றைக்கும் வழக்கிலிருக்கிறது. ஏதாவது ஒரு நிகழ்ச்சியைச் 
சொல்லி, “அது தொட்டு அவன் அதைச் செய்வதில்லை” என்பார்கள். 

கரிகால் வளவன் சங்க காலத்துச் சோழ மன்னன். மிகவும் சிறிய வயதிலேயே பட்டத்துக்கு வந்துவிட்டவன். இதனைப் 
பிறந்து தவழக் கற்றுக்கொண்டது முதலே தன் நாட்டைச் சுமக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டான் கரிகால் சோழன் 
என்கிறது ஒரு சங்கப் பாடல். பெரும்பாணாற்றுப்படை என்னும் அந்த நூலில் வரும் அடிகளைப் பாருங்கள்;

பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல்
நாடு செகில் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப – பெரும் 136,137

‘செகில்’ என்பது தோளின் மேற்பகுதி. ‘பிறந்து தவழ் கற்றதன் தொட்டு’ என்றால் ‘பிறந்து தவழக் கற்றுக்கொண்டது 
முதல்’ என்பது பொருள். சிறுவயதிலிருந்தே அரசபாரத்தை அவன் சுமந்தான் என்பதை நயமாக எடுத்துரைக்கிறார் 
புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இன்றைய ‘தொட்டு’ ஈராயிரம் ஆண்டுகளாய் அதே பொருளில் அன்றுதொட்டு 
வழங்கிவருவதைத்தான் இது காட்டுகிறது

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!