பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 20. கால்கழுவு


அந்தத் தமிழ்ப்பேராசிரியைக்கு ஒரு மகன் பிறந்து வளர்ந்து ஓடியாடத் தொடங்கியதும் அவனுக்கு அவள் வைத்த பெயர் 
‘வாலு’ – அவ்வளவு சுட்டி. இப்பொழுது இரண்டாவதும் மகன் பிறந்து அவனும் வளரத்தொடங்கி, ‘மூத்தது மோழை, 
இளையது காளை” என்றாற்போல படுசுட்டியாக வளரத் தொடங்கியதும், இப்போது அந்தப் பிள்ளைகளுக்குப் பெயர் 
‘பெரிய வாலு, சின்ன வாலு’.

அந்தப் பெரிய வாலு – ஆறு வயதிருக்கும் – ஒரு கால்பந்தை ‘டொப் டொப்’ என்று கைப்பந்து போல் வீட்டில் 
தட்டிக்கொண்டு இருக்கும். “டேய் வீட்டுக்குள் தட்டாதே” என்று யாராவது அதட்டினால், பந்தைத் தூக்கிக்கொண்டு 
தெருவுக்குப் போய்விடும். அவர்கள் வீடு ஊருக்கு வெளியில் இருக்கும் விரிவாக்கப் பகுதி. எனவே, சாலைகள் 
தாரிடப்படாமல் புழுதிக்காடாகவே இருக்கும். அந்தப் புழுதியான தெருவில் பந்தை எத்திக்கொண்டும், உதைத்துக்கொண்டும்
அவன் விளையாண்டுவிட்டு, பொழுது சாய்ந்ததினாலோ, போதுமென்று நினைத்ததினாலோ வீட்டுக்குள் திரும்பிய பொழுது
அவனது அப்பா கத்தினார், “டேய், முழங்கால் வரைக்கும் புழுதி, பாத்ரூமில் போய் காலைக் கழுவு”.

இப்போது அவனது அம்மா உரத்துக் கூறினாள், “டேய், பாத்ரூமில சின்னவாலு ஒக்காந்திருக்கு. கொஞ்சம் பொறு. 
அவனுக்குக் கால்கழுவிவிட்ட பிறகு போ”. அவர்கள் வீட்டில் குளியலறைக்குள்ளே கழிப்பறைப் பகுதியும் இருந்தது. 
சிறிதுநேரத்தில் தாய் குளியலறைக்குள் இருக்கும் சிறியவனுக்குக் கால்கழுவிவிட்டபின், பெரியவனையும் உள்ளே 
அழைத்து அவன் கால்களைக் கழுவிட்டாள்.

பின்னர், நடு அறையில் நீண்ட சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த கணவனுக்கு அருகில் சென்று 
அமர்ந்தாள் அவள். 

செய்தித்தாளைக் கீழே வைத்துவிட்டுக் குறும்பாக அவளை நோக்கி ஒரு சிரிப்புச் சிரித்தான் அவன்.

“என்ன சிரிப்பு?” என்றாள் அவள்.

“வீட்டைக் கட்டினான் – வீடு கட்டினான் – என்ன வித்தியாசம்?”

“இது ஒரு பத்தாம் வகுப்பு மாணவனுக்குக் கூடத் தெரியுமே! ஏன் என்னைக் கேக்குறீங்க?”

“ஒரு சங்கதி இருக்கு, பதில் சொல்லு”

“வீட்டைக் கட்டினான் என்கிறதுல, வீட்டை என்கிறது ‘ஐ’ என்கிற இரண்டாம் வேற்றுமை உருபோட வருது. வீடு 
கட்டினான் என்கிறதுல அந்த ‘ஐ’ என்கிற இரண்டாம் வேற்றுமை உருபு இல்ல. அதாவது தொக்கி நிக்குது. அதனால, 
வீடு கட்டினான் என்கிறத இரண்டாம் வேற்றுமைத் தொகை அப்படீன்னு சொல்றோம். தொகை அப்படீன்னா, தொக்கி 
நிக்கிறது, அதாவது வெளிப்படையா சொல்லாம. வீட்டைக் கட்டினான்’னு அந்த இரண்டாம் வேற்றுமை உருபை 
வெளிப்படையாவேயும் சொல்லலாம். அப்ப அத இரண்டாம் வேற்றுமைத் தொடர் அப்படீன்னு சொல்றோம். நான் 
மதுரைக்குப் போறேன்’னு சொல்றமாதிரி, நான் மதுர போறேன்’னும் சொல்லலாம். தமிழ்ல இது சாத்தியம்.”

“நான் அதெல்லாம் கேக்கல, ரெண்டுக்கும் அர்த்தத்துல என்ன வித்தியாசம்?”

“பொருள்’ல இரண்டும் ஒண்ணுதான்”

“அப்ப, காலைக் கழுவு’ன்னு சொல்றதுக்கும், கால்கழுவு’ன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இல்லையா?”

சட்டென்று அவனைக் கூர்ந்து பார்த்தாள் அவள். கொஞ்சம் யோசித்தாள். பின்னர் கூறினாள்.

“இங்க கொஞ்சம் வேறுபாடு இருக்கு. ஏன்’னா, காலைக் கழுவு அப்படீங்கிறது, நான் சொன்ன மாதிரி இரண்டாம் 
வேற்றுமைத் தொடர். காலை அப்படீங்கிறதுல இருக்குற ‘ஐ’ என்கிற இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படயாகவே 
இருக்கு. ஆனா, கால்கழுவு அப்படீங்கிறத ரெண்டுவிதமாச் சொல்லலாம். கால் கழுவு அப்படீன்’னு இடையில் கொஞ்சம் 
நிறுத்திச் சொன்னாலோ, இல்லாட்டி இரண்டுக்கும் இடையில ஒரு இடைவெளிவிட்டு எழுதினாலோ அதுதான் காலைக் 
கழுவுறது. அது இரண்டாம் வேற்றுமைத் தொகை. கால்கழுவு’ன்னு ரெண்டுக்கும் இடையில நிப்பாட்டாம ஒரே சொல்லாச் 
சொன்னாலோ, எழுதினாலோ அதுக்குப் பொருள் வேற. இங்க அந்த உருபு தொக்கிநிக்குது’ன்னு சொல்ல முடியாது. 
இது ஒரு மரபுத்தொடர்”

“மரபுத்தொடர்’னா?”

“ஒரு சொல் அல்லது சொற்றொடருக்கு நேரான பொருள் இல்லாம, வேற ஒரு பொருள் இருந்தா அது மரபுத் தொடர். 
நீங்க idiom னு சொல்றீங்களே அது. ஆங்கிலத்துல நெறய இருக்கு. தமிழ்லயும் சொல்லலாம். “ஏன்’டா வாயப் 
பொழந்துகிட்டு நிக்கிற?” அப்படீன்னு சொல்றோம். அதுக்கு நேரான பொருள்தான், அதாவது வாயத் திறந்துகிட்டு நிக்கிறது. 
ஆனா, அவன் வாயப் பொழந்துட்டான்’னா, செத்துட்டான்’னு பொருள் இல்லையா? அது போல கால்கழுவு’ன்னா 
கால மட்டும்’னு இல்ல, இடுப்பச் சுத்தி பின்பக்கத்தச் சுத்தம் செய்யுறது’ன்னு பொருள். அதாவது அசிங்கத்தச் சுத்தமாக்கு 
அப்படீங்கிறது வழிவழியா வர்ர மரபு. தமிழ் இலக்கணத்துல இத இடக்கரடக்கல்’னு சொல்லுவாங்க. அதாவது நேரிடையாச்
சொன்னா அசிங்கம்’னு அதை ஒட்டி இருக்கிற வேற சொல்ல வச்சுச் சொல்றது. ஆங்கிலத்துல இத Euphemism’னு 
சொல்வாங்க.”

“வழிவழியா வர்ர மரபு அப்படீன்னா இலக்கியத்துல இருக்கா?”

“நீங்க இதுக்கு வருவீங்க’ன்னு தெரியும். கொஞ்சம் பொறுங்க வர்ரேன்” என்று சொல்லிவிட்டு, உள் அறைக்குள் சென்று 
தன் கணினியைத் தட்டி ஏதோ பார்த்துவிட்டுப் பரபரப்போடு ஒரு புத்தகத்துடன் திரும்பி வந்தாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை.

“இருக்குங்க, சங்க இலக்கியத்துல ரெண்டு இடத்துல வருது” என்றவள் விவரிக்க ஆரம்பித்தாள்.

“ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு முல்லைக்காடு, அதாவது புன்செய் நிலம். அங்க ஒரு தோப்பு. நம்ம ஊர் மக்கள்தான் 
ஒதுக்குப்புறம்’னாலே விடமாட்டாங்களே! அங்கங்க அசிங்கம் பண்ணி வச்சிருக்காங்க. ஒருநாள் ஒரு பெரிய மழை பெய்யுது.
பெரிய வெள்ளம் வந்து அந்த அசிங்கத்தையெல்லாம் அடிச்சுட்டுப் போகுது. அந்தப் புலவர் சொல்றாரு, 
‘அந்த மழை அந்தத் தோப்புக்குக் கால்கழுவிவிட்டுச்சாம்!”

‘கெக்கெக்கெக்கே’ என்று அவன் சிரித்தான்.

“நல்லாத்தான் இருக்கு, மழைத்தண்ணி நிலத்துக்குக் கால்கழுவிவிடுறது” என்று மீண்டும் சிரித்தான்.

“ஓரூரிலிருந்து இன்னோரூருக்குப் போகிற பாணர்கூட்டம் வழியில ஒரு தோப்பில இளைப்பாறிக்கிட்டிருக்கிற காட்சியைச் 
சொல்ல வந்த புலவர் பெருங்கௌசிகனார், தன்னுடைய மலைபடுகடாம் என்கிற பாடல்’ல இப்படிச் சொல்றாரு” என்று
சொன்ன அவள், தன் கையிலிருந்த புத்தகத்தைத் திறந்து அதில் ஒரு பக்கத்தைப் புரட்டி வாசிக்க ஆரம்பித்தாள்.

புனல் கால்கழீஇய மணல் வார் புறவில் – மலைபடுகடாம் 48

‘பெருகும் நீர் அழுக்கைக் கழுவிப் போன மணல் ஒழுங்குபட்ட இக் காட்டகத்தே’ ன்னு இதுக்குப் பெருமழைப்புலவர் 
உரை சொல்லியிருக்காரு. கழீஇய’ன்னா கழுவிய’ன்னு பொருள்.”

“அப்புறம் அந்த இன்னொரு இடம்?” அவன் விடாமல் கேடான்.

அவள் அதே புத்தகத்தில் வேறொரு பக்கத்தைப் புரட்டிப் படித்தாள்.

“இதுவும் ஒரு சோலயப் பத்தித்தான்.

புனல் கால்கழீஇய பொழில்தொறும் – பெரும்பாணாற்றுப்படை 380

அப்படீன்’னு சொல்றார் பெரும்பாணாற்றுப்படைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இதுக்கு, ‘நீர் பெருகிய காலத்தே 
ஏறிய இடத்தைத் தூய்தாக்கிப்போன பொழில்கள்தோறும்’ அப்படீன்’னு அதே உரைகாரர் சொல்றாரு.

“பொதுவா அசிங்கங்களக் கழுவிச் சுத்தம் செய்யுறத கால்கழுவுறது’ன்னு இரண்டாயிரம் வருசமா நாம சொல்லிக்கிட்டு
இருக்கோம்” என்று சொல்லி முடித்தாள் அவள்.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!