அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு 

# 0. கடவுள் வாழ்த்து  பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்.

#0  மரபு மூலம்

	கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
	தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
	மார்பி னஃதே மையில் நுண்ஞாண்
	நுதல திமையா நாட்டம் இகலட்டுக்
5	கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
	வேலும் உண்டத் தோலா தோற்கே
	வூர்ந்த தேறே சேர்ந்தோ ளுமையே
	செவ்வா னன்ன மேனி யவ்வா
	னிலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்
10	றெரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை
	முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி
	மூவா அமரரும் முனிவரும் பிறரும்
	யாவரும் அறியாத் தொன்முறை மரபின்
	வரிகிளர் வயமான் உரிவை தைஇய
15	யாழ்கெழு மணிமிடற் றந்தணன்
	தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே.

#0 சொற்பிரிப்பு மூலம்

	கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர்
	தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
	மார்பினஃதே மை இல் நுண் ஞாண்
	நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு
5	கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
	வேலும் உண்டு அ தோலாதோற்கே
	ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே
	செ வான் அன்ன மேனி அ வான்
	இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
10	எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை
	முதிரா திங்களொடு சுடரும் சென்னி
	மூவா அமரரும் முனிவரும் பிறரும்
	யாவரும் அறியா தொல் முறை மரபின்
	வரி கிளர் வயமான் உரிவை தைஇய
15	யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்
	தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே

#0 அடிநேர் உரை 

	கார்காலத்தில் மலரும் கொன்றை மரத்தின் பொன்னை ஒத்த புதிய மலர்களாலான
	குறுமாலையன்; நீள்மாலையன்; சூடிய தலைமாலையன்;
	மார்பின்கண் உள்ளது குற்றமற்ற நுண்ணிய பூணூல்;
	நெற்றியில் உள்ளது இமைக்காத கண்; பகைவரைக் கொல்லும்,
5   	கையில் இருப்பது, குந்தாலியுடன் கோடரி, மூன்று கூறுகளையுடைய
	சூலாயுதமும் உண்டு அந்தத் தோல்வி இல்லாதவருக்கு;
	ஏறிச்செல்வது காளை; சேர்ந்து இருப்பது உமையவள்;
	சிவந்த வானத்தைப் போன்ற மேனி; அந்த வானத்தில்
	ஒளிரும் பிறை போன்ற நேர்குறுக்கான வெண்மையான கூரிய பற்கள்;
10  	நெருப்பு அகைந்து எரிவதைப் போன்ற மின்னிப் பிரகாசிக்கும் முறுக்கிய சடைமுடி;
	இளம்பிறையுடன் ஒளிரும் நெற்றி;
	மூப்படையாத அமரரும், முனிவரும், பிறரும் (ஆகிய)
	அனைவரும் அறியாத தொன்மையான மரபினையுடைய;
	கோடுகள் அழகுடன் விளங்கும் வலிய புலியின் தோலை உடுத்த;
15  	யாழ் (இசையின் இனிமை)வாய்ந்த நீலமணி(போன்ற) மிடற்றை உடைய அந்தணன்
	(ஆகிய சிவபெருமானின்)மாசற்ற அடிகளின் நிழலில் உலகமக்கள் உறைகின்றனர்.

அருஞ்சொற்கள்:

கொன்றை - சரக்கொன்றை மரம், Indian laburnum - Cassia fistula - the national tree of Thailand and its flower is 
Thailand's national flower, also state flower of Kerala. தார் - chaplet, கழுத்தை ஒட்டி மார்பு வரை சூடும் மாலை. 
மாலை - கழுத்திலிருந்து இடுப்பு வரை கீழே தொங்கும் மாலை கண்ணி - ஆண்கள் தலையில் சூடும் பூ வடம் அல்லது மாலை. 
கணிச்சி - குந்தாலி, Pick-axe;  மழு - போர்க் கோடரி, Battle-axe. விலங்கு - வளைவான, நேர்குறுக்கான, crosswise, transverse; 
வால் - வெண்மை; வை - கூர்மை; அகைதல் - கிளைத்து எரிதல்; இலங்கு, அவிர், விளங்கு, சுடர் = ஒளிவிடுதல் (பார்க்க - விளக்கம்).
சென்னி - நெற்றி;  கிளர் - அழகுடன் பொலிந்து விளங்குதல், having beauty with splendor; 
உரிவை - (விலங்குகளின்)உரிக்கப்பட்ட தோல். கெழு = சாரியை, euphonic increment; மிடறு - தொண்டை; தா - குறை,மாசு.

விளக்கம்

1.  தார், மாலை, கண்ணி -

தார் - ஆண்கள் கழுத்தைச் சுற்றியும் கழுத்தின் கீழே சிறிதளவே தொங்குமாறும் மார்பு வரை போடும் மாலை தார் எனப்படுகிறது.
பார்க்க :

உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் - திரு 11

	அதே போல், யானை, குதிரை போன்ற விலங்குகளின் கழுத்தில் அணியப்படும் மாலையும் தார் எனப்படும். 
கழுத்தைச் சுற்றியும், கீழே சிறிதளவே தொங்கும்படியும் இது போடப்படும். 
பார்க்க:

	தாரொடு பொலிந்த வினை நவில் யானை - மலை 227
	தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப - நற் 181/11 

மாலை - கழுத்திலிருந்து இடுப்பளவு தொங்குவது

மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் - கலி 33/30

கண்ணி - ஆண்கள் தலையில் சூடுவது

	பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் - திரு 44
	மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் - பட் 109
	கார் நறும் கடம்பின் கண்ணி சூடி - நற் 34/8


2. அவிர், இலங்கு, சுடர்

	இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
	எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை
	முதிரா திங்களொடு சுடரும் சென்னி

அவிர், இலங்கு, சுடர் என்ற மூன்றுமே ஏறக்குறைய ஒளிருதல் என்ற ஒரே பொருளை உடையனவெனினும் 
அவற்றுக்கிடையே வேறுபாடு உண்டு. இவற்றுக்கான பேரகராதிப் பொருள்கள்.

	இலங்கு - பிரகாசி, To shine, emit rays, gleam, glitter; to be bright
	அவிர் - பிரகாசி - To glitter, glisten, shine, Splendour
	சுடர் - ஒளிவிடு, To give light; to burn brightly; to shine, as a heavenly body; to sparkle, as a gem; to gleam.

	இங்கு மூன்று சொற்களுக்கும் ஏறக்குறைய ஒரே பொருள் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். உரைகளிலும் இவற்றுக்கு 
‘விளங்குகின்ற' என்ற பொருள்தான் பெரும்பாலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவை மூன்றனுமே இழை, தொடி ஆகிய 
சொற்களுக்கு அடைகளாக வருவதைக் காணலாம்.

	இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய - மது 779
	மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க - நற் 221/9
	சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும் - மது 512
	ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை - புறம் 337/5
	பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவி - குறு 364/3
	நிழல் திகழ் சுடர் தொடி ஞெகிழ ஏங்கி - நற் 371/6
	இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி - பெரும் 349
	காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் - பதி 40/29

	இலங்கு என்ற சொல் சங்க இலக்கியங்களில் 154 தடவை வருகிறது. இவற்றுள் இலங்கு வளை (30), இலங்கு எயிறு (21 ), 
இலங்கு (வெள்) அருவி (15) , இலங்கு மருப்பு (9), இலங்கு நிலா (6) என பெரும்பான்மையான இடங்களில் வெண்மையைச் 
சிறப்பித்துக் கூற இச் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால், அவிர் வளை, அவிர் எயிறு, அவிர் மருப்பு என 
வருமிடங்கள் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். எனவே இலங்கு என்பது பளிச்சிடும் வெண்மைக்கு ஏற்ற அடையாக
இருப்பதை உணராம். இவ்வாறு ‘பளிச்' என்ற தோற்றத்தைக் குறிக்க, கண்ணைப்பறிக்கும் பிரகாசத்தை உடைய என்ற பொருள் 
இலங்கு என்பதற்கு ஒத்துப்போகும் என அறியலாம்.



	இலங்கு என்ற சொல்லை விளக்கும் ஓர் உவமை மூலமும் இதனை உறுதிப்படுத்தலாம்.
	
	மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் - புறம் 57/8

	இடியுடன் சேர்ந்து வரும் மின்னல் மேகத்திலிருந்து தரையை நோக்கிப் பாய்கிறது. இதைத்தான் மின்னு நிமிர்ந்து என்று புலவர் 
குறிப்பிடுகிறார். அப்போது அது கண்ணைப்பறிக்கும் ஒளியுடன் விளங்கும் என்பதை அறிவோம்.  அதைப் போல இலங்கியதாம் 
அந்தப் பளபளப்பான வேல். இங்கு வேல் என்பது வேலின் நுனிப்பகுதியான இலை போன்ற பகுதியைக் குறிக்கும்.

	இலங்கு இலை வெள் வேல் விடலையை - நற் 305/9

என்ற அடி இதனை மேலும் உறுதிப்படுத்தும்.

இலங்கு ஒளி என்பதைக் கண்ணைப் பறிக்கும் ஒளி என்று சொன்னால், அவிர் ஒளி என்பதைக் கண்ணைக் கவரும் அல்லது 
மயக்கும் ஒளி என்று சொல்லலாம். இதைப் பாருங்கள்:-

	அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட - கலி 22/19

	பொன் தகடு எவ்வாறு மின்னும்? அதன் ஒளியே அவிர் ஒளி. அடர் என்பது தட்டி உருவாக்கிய தகடு. இங்கு காண்பது அடர் பொன். 
அதன் பிரகாசம் கண்களைக் கூசவைப்பதல்ல. கண்களைக் கவர்வது.

	அறல் அவிர்ந்து அன்ன தேர் நசைஇ ஓடி - அகம் 395/9

	என்ற அடி அவிர்தல் என்பதை நன்கு விளக்கும்.
	அறல் என்பது அறுத்துச் செல்லும் நீர். அறுத்துச் செல்லும் நீர் அலை அலையாக ஒழுகும். அதன்மீது சூரிய ஒளி படும்போது 
அது பளபளவென்று மின்னும். இதனை அவிர்கின்ற அறல் என்கிறார் புலவர். வறண்ட வெளியில் ஞாயிற்றின் கடுமையான 
கதிர்களின் வெப்பத்தால் தகிக்கின்ற நிலத்தின் மீது சூடான ஆவி எழ, அதன்மீது சூரியக்கதிர்கள் பட்டு நீர்போலத் தோற்றம் அளிக்கும். 
அதனைக் கானல்நீர் என்கிறோம். அதையே இங்கு புலவர் தேர் என்கிறார். தேர் என்பது பேய்த்தேர், அதாவது கானல்நீர். 
இவை இரண்டுமே கண்களைக் கூசவைக்காவிட்டாலும், பார்ப்பவர் கண்களைக் கவர்பவை அல்லது மயக்குபவை. கடுமையான 
வெப்பத்தினால் வெட்டவெளியில் ஏற்படும் வெம்மையின் பளபளப்பையும் அவிர் என்கின்றனர் புலவர். 

	நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு - அகம் 11/2

	என்ற அடி இதனை வலியுறுத்தும். சங்க இலக்கியங்களில் அவிர் என்ற சொல் 111 தடவை வருகிறது. இவற்றில், அவிர் அறல் (12), 
அவிர் உருப்பு (26) என்பவையே பெருவாரியாக வருபவை. 

	மின் அவிர் ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை - நெடு 168,9

	என்ற அடியில் அவிர்தல் என்பது மின்னலின் ஒளிக்கும் கூறப்படுகிறது. 



	மின்னலின் ஒளி இலங்கு ஒளி என்று கண்டோம். மின்னல்களில் பல வகை உண்டு. ஒன்று மேகத்திலிருந்து கீழே தாக்குவது. 
இது கண்களைக் கூசவைப்பது. இதை நேரில் பார்க்கக்கூடாது என்பர். அடுத்தவகை மேகங்களுக்கிடையே கொடி போல் ஒடி மறைவது. 
இது பார்ப்பதற்கு வெகு அழகாக இருக்கும். இது பொன்னைப்போல் பளபளவென்று இருக்கும். 
இதன் ஒளியே இங்கு கூறப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம். 
	இந்த விளக்கங்களை ஒட்டி, இலங்கு இழை, அவிர் இழை என்பவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டைக் காண முயல்வோம். 
வைரம், முத்து, போன்ற விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பெற்று, கண்ணைப்பறிக்கும் ஒளியுடன் விளங்கும் அணிகலன்களை 
இலங்கு இழை என்றும், தூய தங்கத்தால் மட்டும் செய்யப்பட்டு கண்ணைக் கவரும் ஒளியுடன் விளங்கும் அணிகலன்களை 
அவிர் இழை என்றும் அழைத்தனர் என்று தோன்றுகின்றது.



	சுடர் என்ற சொல் சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் விளக்கு, அதன் ஒளி, வான் பொருள்களின் ஒளி போன்ற பெயர்ச்சொல்லாகவே 
வருவதை காண்கிறோம். காண்க:-

	பாவைவிளக்கில் பரூஉச் சுடர் அழல - முல் 85 
	சுடர் சினம் தணிந்து குன்றம் சேர - நற் 369/1
	சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி - அகம் 43/2

	எனினும் பல இடங்களில் சுடர் என்பது வேறொரு சொல்லின் அடையாகவோ அல்லது வினைச்சொல்லாகவோ வருவதையும் காணலாம். 
சுடர் என்பது மிகப் பரவலாக சுடர் நுதல், சுடர்ப் பூ என நெற்றிக்கும், பூக்களுக்கும் கொடுக்கப்பட்டிருப்பதையும் காணலாம். 
நெற்றியும், பூவும் ஒளிவிட மாட்டா. எனினும் அத்தகைய இடங்களில் சுடர் என்பதற்கு ஒளிவிடும், பிரகாசிக்கும் என்ற பொருளைவிட 
பிரகாசமாய்த் தோன்றும் என்ற பொருள் பொருத்தமாக இருக்கும். 
காண்க:- 

	மதி இருப்பு அன்ன மாசு அறு சுடர் நுதல் - அகம் 192/1
	முள் தாள சுடர் தாமரை - மது 249



	சுடர் என்ற சொல்லைக்கொண்ட உவமைகளின் மூலமும் இதனை உறுதிப்படுத்தலாம்.

	சுடர் புரை திரு நுதல் பசப்ப - நற் 108/8
	விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை - நற் 310/1

	இலங்கு, அவிர், சுடர் என்பவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டை கீழ்க்காணும் படங்கள் நன்கு விளக்கும்.



உவமை நயம்

	1. கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர், தாரன் ...
	
	சிவபெருமானின் மார்பில் தவழும் மாலை கொன்றைப்பூவினால் ஆனது. Indian laburnum என்று அழைக்கப்படும் 
கொன்றையின் அறிவியல் பெயர் Cassia fistula. இது golden shower tree என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பூக்கள் பொன் நிறத்தவை. 
பூவிதழ்கள் பொற்காசு போன்ற அமைப்பு உள்ளவை. எல்லா இதழ்களும் ஏறக்குறைய ஒரே அளவினதாக இருப்பதே இதன் சிறப்பு.
 இவற்றின் இணுக்குகளை இணுங்கி மாலையாகக் கோத்தால் பொன்னால் செய்த காசுமாலை போன்று இருக்கும். 
பொதுவாகக் கழுத்தில் போடும் காசுமாலை மார்பளவே தொங்கும். அதுதான் தார் எனப்படுகிறது. 
சிவனின் கழுத்தில் தொங்கும் கொன்றைத் தார் ஒரு காசுமாலை போல் சிவனின் கழுத்தை அலங்கரிக்கிறது என்று சொல்லாமல் சொல்லும் 
புலவரின் நுட்பம் வியந்து பாராட்டத்தகுந்தது.



	கொன்றை மரம் வேனில்காலத்தில் தன் இலைகளை உதிர்த்து வேனிற்கால இறுதியில் மீண்டும் தளிர்க்கும். 
கார்காலத் தொடக்கத்தில் புதிதாகப் பூக்கத் தொடங்கும். வேனிலில் வாடிய மரங்கள் கார்கால மழை பெய்ததும்
‘குப்'பெனப் பூத்து நிற்கும் காட்சி கண்கொள்ளாதது. அதிலும் பொன் நிறப்பூகள், பொற்காசுகளின் வடிவில் சரம் சரமாகத் தொங்கும் காட்சி 
கண்ணைக்கவரும். கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர் என்ற தொடரின் ஒவ்வொரு சொல்லும் எத்துணை ஆழமுள்ளது 
என்று வியந்து பாராட்டலாம்.

	2. இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
	
	இலங்கு என்ற சொல்லுக்கான பொருள் விளக்கத்தை நினைவு கொள்க. வால் என்பது வெண்மை. 
வை என்பது கூர்மை. விலங்கு என்பதற்கு இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். பொதுவாக இ, உ சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்களை 
எழுதும்போது (கி, கு) அகர மெய்யுக்கு மேலும் கீழுமாக வளைவான கோடுகள் போடுகிறோம் அல்லவா! அவற்றைக் மேல்விலங்கு, கீழ்விலங்கு 
என்று பெயர். எனவே விலங்கு என்பது வளைவான உருவத்தைக் குறிக்கும். பற்கள் தெரியும்படி புன்சிரிப்பு சிரிக்கும்போது உதடுகளுக்குள்ளே 
வளைந்து தெரியும் பல்வரிசையை வளைந்த பிறைநிலவுக்கு ஒப்பிடுகிறார் புலவர் எனலாம். நிறத்துக்கும் உருவத்துக்குமான உவமம் இது.



	3. எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை

	அகை என்பதற்கு கிளைத்து எரிதல், கப்புவிட்டு எரிதல் என்று உரைகாரர்கள் பொருள்கூறுகின்றனர். 
பரந்து எரியும் தீயில் பல்வேறு உயரங்களில் தீநாக்குகள் கொழுந்துவிட்டு எரியும். இதனையே கப்புவிடுதல் என்கிறோம். 
சிவனின் விரித்துவிட்ட சடைமுடி பரந்து நீண்டிருப்பதால் அது தீ நாக்குகள் போல் கிளைத்து இருப்பதாகப் புலவர் கூறுகிறார். 
அதுமட்டுமல்ல, அந்தச் சடை முடி பொன்னிறத்தில் ‘தகதக'வென்று மின்னுகிறதாம். தீயின் நாக்குகளுக்கு உருவத்திலும் நிறத்திலுமே 
ஒப்புமை காண்கிறார் புலவர். இங்கு நிறமும் உவமிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கவே அவிர்ந்து விளங்கு சடை என்கிறார் புலவர். 
அவிர் என்பதற்கான பொருளை மேலே காண்க. அழுக்கேறிப்போன பித்தளைப் பாத்திரத்தைப் புளி கொண்டு தேய்த்துத் துலக்குவார்கள். 
இதனை பாத்திரம் விளக்குதல் என்பார்கள். விளக்குதல் என்பது விளங்கச் செய்வது - ஒளியேறச் செய்வது. ஆனால், விளங்குதல் என்பது 
இயற்கையாகவே ஒளிவிடுதல். செந்நிறத்தில் ஒளிறும் சடை முடியையே அவிர்ந்து விளங்கு சடை என்கிறார் புலவர்.