அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 4

பாடல்  4. முல்லைத் திணை    பாடியவர் - குறுங்குடி மருதனார்   

துறை - தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது.

  மரபு மூலம் - கவின் பெறு கானம்

	முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு
	பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ
	விரும்புதிரித் தன்ன மாவிரு மருப்பிற்
	பரலவ லடைய விரலை தெறிப்ப
5 	மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
	கருவி வானங் கதழுறை சிதறிக்
	கார்செய் தன்றே கவின்பெறு கானங்
	குறங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
	நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்
10	பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
	தாதுண் பறவை பேதுற லஞ்சி
	மணிநா வார்த்த மாண்வினைத் தேர
	னுவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடற்
	கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது
15 	நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
	போதவி ழலரி னாறு
	மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே

 சொற்பிரிப்பு மூலம்

	முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு
	பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ
	இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின்
	பரல் அவல் அடைய இரலை தெறிப்ப
5 	மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப
	கருவி வானம் கதழ் உறை சிதறி
	கார் செய்தன்றே கவின் பெறு கானம்
	குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி
	நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய
10 	பூத்த பொங்கர் துணையொடு வதிந்த
	தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
	மணி நா ஆர்த்த மாண் வினை தேரன்
	உவ காண் தோன்றும் குறும் பொறை நாடன்
	கறங்கு இசை விழவின் உறந்தை குணாது
15 	நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள்
	போது அவிழ் அலரின் நாறும்
	ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தே


அடிநேர் உரை 
	
	முல்லைக்கொடியில் கூரிய நுனியையுடைய (அரும்புகள்) தோன்ற, தேற்றாமரத்துடன்,
	பசிய காம்புகளைக் கொண்ட கொன்றைமுகைகள் தம் மெல்லிய கட்டுகள் அவிழ,
	இரும்பை முறுக்கினாற் போன்ற கரிய பெரிய கொம்பினையுடைய,
	பரற்கற்கள் உள்ள பள்ளங்களை அடுத்துள்ள, இரலை மான்கள் துள்ளிவிளையாட,
5      	பொலிவுபெற்ற நிலம் (வறட்சித்)துன்பத்தைப் பின்துரத்த,
	கூட்டமான மேகங்கள் சீறிவரும் மழைத்துளிகளைச் சிதறி
	கார்கால மலர்ச்சியைச் செய்தன கவின் பெற்ற கானத்தை;
	வளைந்த தலையாட்டத்தால் பொலிவுற்ற, கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள்
	நரம்புகளைச் சேர்த்தது போன்ற, வளைந்த கடிவாளத்துடன் விரைந்து ஓடுகின்ற,
10    	பூத்திருக்கும் சோலைகளில் துணையோடு தங்கி வாழும்
	பூந்தாது உண்ணும் பறவை(வண்டுகள்) கலக்கமடைவதை(எண்ணி) அஞ்சி,
	மணிகளின் நாவுகளைச் சேர்த்துக்கட்டிய, சிறந்த வேலைப்பாடுள்ள, தேரையுடைவன்
	உங்கு பார், வந்துவிடுவான் - குறிய மலைகளையுடைய நாட்டைச் சேர்ந்தவன்
	சுற்றுப்புறம் எங்கிலும் ஒலிக்கும் இசையுடன் விழா நடக்கும் உறந்தையின் கிழக்கே
15    	நெடிய பெரிய குன்றத்தில் நெருக்கமாய் வளர்ந்த காந்தள்
	மொட்டு அவிழ்ந்த மலரைப் போன்று மணக்கும்
	ஆய்ந்த தோள்வளையையுடைய அரிவையாகிய நின் சிறந்த அழகினை நினைத்து.

அருஞ்சொற்கள்:

இல்லம் - தேற்றாமரம், (தேத்தான்கொட்டை மரம்)strychnos potatorum;  மருப்பு - கொம்பு;  பரல் - பருக்கைக்கல், pebble;  
அவல் - பள்ளம்;  அடைய - ஓரத்தில் இருப்பன;  இரலை - திரி மருப்பு மான், Blackbuck (Antilope cervicapra); 
உவக்காண் - உங்கு பார் - 
அங்கு என்பது தொலைவில் உள்ளது. இங்கு என்பது அருகில் உள்ளது. உங்கு என்பது இரண்டிற்கும் இடையில் உள்ளது;  
குணாது - கிழக்கில் உள்ளது; 

பொருள் சுருக்கம்

	கார்காலம் தொடங்கிவிட்டது. தலைவன் வந்துவிடுவான் – உன் அழகு மேனியின் நினைப்பால்.

பொருள் விரிவு

	வேனில் காலத்தில் வாடிக்கிடந்த கானகத்தின் செடி, கொடி, மரங்களும், விலங்கினங்களும் மகிழ்ந்து பூரிக்க, கார்கால மழை 
பெய்து கானகத்தை அழகுபெறச் செய்துள்ளது. பிரிவுத் துயரத்தால் வாடியிருக்கும் உன் அகமும் புறமும் பொங்கிப் பூரிக்க, தலைவனும் 
சீக்கிரம் திரும்பி வந்து உன்னை மகிழச் செய்வான்.
	விரைந்து வரும் குதிரைகளின் கழுத்தில் இருக்கும் மணிகள் ஒலிப்பதால், இனிதாகக் கூடி மகிழ்ந்திருக்கும் வண்டினங்கள் 
கலக்கமடையுமோ என்று அஞ்சி, மணிகளின் நாவுகளை இறுக்கிக் கட்டியிருப்பான் உன் தலைவன். அவ்வாறு வண்டினங்கள்கூடக் 
கலக்கமடைவதைப் பொறுக்காத உன் தலைவன், நீ கலக்கமடைவதைப் பொறுப்பானோ? மாட்டான். இதோ, விரைவில் விரைந்து 
வந்துவிடுவான்.

விளக்கம்

	கார்காலம் தொடங்கிவிட்டால் போர்கள் நின்றுவிடும். எனவே போர்மேற் சென்ற தலைவன் திரும்பிவிடுவான். போருக்குச் சென்ற 
தலைவனைப் பிரிந்த தலைவி ஆறாத்துயர் அடையமாட்டாள். திரும்ப வரும்வரை பொறுமையுடன் காத்திருப்பாள். ஆனால் கார்காலம் 
தொடங்கியவுடன் அவள் தலைவன் வருகைக்காக ஏங்க ஆரம்பித்துவிடுவாள். எனவேதான் இப்பிரிவு முல்லைத்திணையைச் சேர்ந்தது 
என்கிறோம். கவின்பெறு கானம் என்பது முல்லைத் திணைக்குரிய புன்செய்க் காடு. கார் செய்தன்றே என்பது கார்ப் பருவம் வந்துவிட்டதைக் 
குறிக்கின்றது. எனவே நிலம், பொழுது ஆகிய இரண்டு முதற்பொருள்களும் ஒரே அடியில் வந்து, இது முல்லைத் திணை என்பதை 
உணர்த்துகின்றன.

			

	முல்லை, இல்லம், கொன்றை, இரலை, கருவி வானம், வண்டினம், காந்தள், தேரில் தலைவன் திரும்புதல் ஆகியவை 
முல்லைத்திணைக்கு உரியவைகளாம். இந்தக் கருப்பொருள்கள், இது முல்லைத்திணை என்பதை உறுதிசெய்கின்றன. 
இது சங்க அகப் பாடல்களின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு திணைக்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைக் கொண்டு 
நிகழ்ச்சிகளைப் புனைந்து காட்சிகளைக் கண்ணுக்கு முன்னால் கொண்டுவந்து காட்டும் சங்கப்புலவர் கவித்திறம் ஈடு இணை இல்லாதது.
இந்தப் பாடலிலும் தலைவன் போர்மேற் சென்றிருக்கிறான். கார்காலம் தொடங்கிவிட்டது. நீண்ட வேனில் கால வறட்சிக்குப் பின்னர் பெய்யும் 
முதல் மழையிலேயே மரம்,செடி,கொடிவகைகள் ‘குப்'பென்று தழைத்து பசுமையுடன் பளபளக்கும். தெருக்களில் தூசுகளை மழை 
அடித்துக்கொண்டு போக ஊரே ‘பளிச்'சென்று இருக்கும். இதைத்தான் புலவர் மலர்ந்த ஞாலம் என்கிறார். காய்ந்து கிடந்த கானத்தில் 
கருவி வானம் கதழ் உறை சிதற, ஓரிரு நாட்களில் முல்லை மொட்டுவிடுகிறது, இல்லமும், கொன்றையும் மொட்டுவிட்டு, அவை மலரவும் 
தொடங்கிவிட்டன. பரல்கற்களையுடைய பள்ளங்களை அடுத்துள்ள இரலை மான்கள் கால்களை உதறித் துள்ளி எழுகின்றன. பொதுவாகக் 
கார்காலத்துக் காட்சிகள்தான் இவை என்றாலும் இவை ஒன்றற்கொன்று தொடர்புள்ளன. இல்லம் என்பது தேற்றாமரம். அதன் பழங்களினின்று 
கிடைக்கும் கொட்டையை தேத்தாங்கொட்டை என்று இப்பொழுது கூறுகின்றனர். கலங்கலான நீருள்ள பானையில் இதனைப் போட்டுவைத்தால், 
கலங்கல் படிந்து நீர் தெளிவானதாகவும் இனிமையானதாகவும் ஆகும் என்பர். மேலும் தேற்றா மரத்தின் இலையை மான்கள் - 
அதுவும் குறிப்பாக இரலை மான்கள் - விரும்பி உண்ணும் என்று உயிரியலார் கூறுவர். இவைகளை எல்லாம் புலவர் இணைப்பதின் 
நோக்கம் என்ன? 

			

	ஒரு பள்ளம் - அதன் அருகில் தேற்றா மரமும் கொன்றை மரமும் இருக்கின்றன. அம் மரங்களில் முல்லைக்கொடி ஏறிப் 
படர்ந்திருக்கிறது. முல்லையும் கொன்றையும் காட்டிற்கு அழகு சேர்ப்பன. தேற்றா மரம் இங்கு எதற்கு? சங்க இலக்கியங்களில் 
முல்லை 109 தடவையும், கொன்றை 49 தடவையும் வருகின்றன. அவற்றுள் பெரும்பான்மையானவை அகப்பாடல்களில் முல்லைத்திணையில் 
வருபவை. ஆனால் இல்லம் என்ற தேற்றாமரத்தைப் பற்றி மூன்று இடங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. எனவே இங்கு தேற்றா 
கூறப்பட்டுள்ளதற்கு ஏதேனும் ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறதா என்று பார்க்கலாம். தேற்றா மரத்தின் பழங்கள் பழுத்துக் காய்ந்துபோய் 
பள்ளத்திலுள்ள நீருள் விழுகின்றன - அவற்றின் கொட்டைகள் அந்த நீரைத் தூய்மைப்படுத்துகின்றன - அதனால் விலங்குகள் அந்த நீரைத் தேடி 
வருகின்றன - இரலை மான்கள் தேற்றா இலைகளைத் தின்று நீரில் தண்ணீர் குடிப்பது வழக்கம். இப்போதோ, மழை பெய்து வெள்ளத்தால் 
அடித்துக்கொண்டுவரப்பட்ட பரற்கற்கள் அந்த அவலை நிறைக்கின்றன - பழக்கத்தால் அந்த அவல் பக்கம் வந்த இரலைகள் தயங்கித் தயங்கி 
அதன் ஓரத்திற்கு வருகின்றன (அடைய) - அங்குள்ள பரலைக்கற்களில் கால் வைத்தவுடன் கற்கள் அசைந்துகொடுக்க, கால் சற்று வழுக்கி, 
கற்களுக்கிடையே அமிழ்ந்து விடுகிறது. பதட்டத்துடன் மான் துள்ளிக்குதிக்கிறது (தெறிப்ப).

	புலவர் இதனை எல்லாம் கூறவில்லையே என்கிறீர்களா? இல்லை, கூறவே செய்திருக்கிறார். அவர் கூறியிருக்கும் அழகைப் பாருங்கள்! 
புலவர் கூறுகிறார்:-

	இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின்
	பரல் அவல் அடைய இரலை தெறிப்ப

	(இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின்) (இரலை) தெறிப்ப என்றுதான் அவர் கூறியிருக்கவேண்டும். 
அதுதான் இயல்பான முறை (natural order). இரலைக் குரிய அடைமொழி தான் அதன் கொம்புகளைப் பற்றிய வருணனை. இவை இரண்டுக்கும் 
இடையே பரல் அவல் அடைய என்ற தொடரைப் புலவர் ஏன் அமைக்கவேண்டும்? அடை என்பதற்கு ஓரம், விளிம்பு, கரை என்ற பொருள் உண்டு. 

	எரி சினம் தவழ்ந்த இரும் கடற்று அடை முதல் - அகம் 75/4
	வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் - அகம் 389/17
	கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த - அகம் 399/6

	என்ற அடிகளால் இதனை அறியலாம். இங்கு அடைய என்பதற்கு ‘எல்லா இடங்களிலும்’ என்ற பொருள் உரைகாரர்களால் 
கொள்ளப்படுகிறது. அப்படியெனில் இத்தொடர் இங்கு தேவையற்ற ஒரு இடைப்பொருள். புலவர் இத்தொடரை வலிந்து இடையில் நிறுத்தியிருப்பதற்கு
ஒரு வலுவான காரணம் வேண்டும். அது முன்னர்க் கூறியதாக எடுப்பது சிறப்பானதாக அமையும். எனவே, இரும்பை முறுக்கினாற் போன்ற கரிய 
பெரிய கொம்பினையுடைய, பரற்கற்கள் உள்ள பள்ளங்களை அடுத்துள்ள, இரலை மான்கள் துள்ளிவிளையாட என்ற பொருளே ஏற்றதெனத் தெரிகிறது.
இதே போன்று இன்னோர் இடத்திலும் இடைச் செருகிய தொடர் ஒன்றைக் காண்கிறோம்.

	குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவல் புரவி
	நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய
	பூத்த பொங்கர் துணையொடு வதிந்த
	தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
	மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் 		(8 - 12)

	இந்த அடிகளின் தொடர்களை உரைகாரர்கள் எடுத்துக்கொண்ட முறை இதுதான்:- 

	குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவல் புரவி
	வாங்கு வள் பரிய
	பூத்த பொங்கர் துணையொடு வதிந்த
	நரம்பு ஆர்த்து அன்ன 
	தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
	மணி நா ஆர்த்த மாண் வினை தேரன்	

	இந்த எடுத்துக்காட்டில் இரண்டாவது அடியில் வரும் நரம்பு ஆர்த்து அன்ன என்ற தொடர், நான்காவது அடியில் உள்ள தாது உண் பறவை 
என்ற தொடருக்கு அடைமொழியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நரம்பு என்பது யாழ். அதன் இசையை வண்டுகளின் ஓசைக்கு ஒப்பிடுவர்.

	நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு - திரு 212
	நரம்பு ஆர்த்து அன்ன தீம் கிளவியனே - ஐங் 185/4
	வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப - கலி 36/3
	நரம்பு ஆர்த்து அன்ன வண்டு இனம் முரலும் - அகம் 355/5

	என்ற அடிகளும், இதனைப் போன்ற பல அடிகளும் இதனை வலியுறுத்தும். எனவேதான் வழக்கமான முறையில் நரம்பு ஆர்த்து அன்ன 
என்ற தொடர் இடம் மாறி எடுத்துக்கொள்ளப்படுகிறது. பொதுவாகச் சங்கப்பாடல்கள் ஆற்றொழுக்கான (இயல்பான) முறையில்தான் எழுதப்பட்டுள்ளன. 
ஒரோவழி விதிவிலக்குகள் இருக்கலாம் - அதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு எனக் கொள்ளலாம். ஆனால், ஓர் அடி தள்ளி வரவேண்டிய தொடரை, 
புலவர் முன்னரேயே கூறிவிடுவதன் காரணம் என்ன? தெரியவில்லை. எனவே, இதற்கு இயல்பான முறையிலேயே பொருத்தமான பொருள் 
காணமுடியுமா? சிந்திப்போம்.

	மணி நா ஆர்த்த என்ற தொடரில் மணிகளின் நாவை ஒலியாமற் கட்டிய என்று பொருள் கொள்ளப்படுகிறது. மணிகள் ஒலிக்காமல் 
இருக்க அதன் நாவை இழுத்துக் கட்டியிருக்கிறார்கள் என்பது இதன் பொருள். எனவே ஆர்த்த என்ற சொல்லுக்கு இங்கே இழுத்துக் கட்டிய என்று 
பொருள் ஆகிறது. இதே பொருளை நரம்பு ஆர்த்து அன்ன என்ற தொடருக்கும் கொள்ளலாமா? அதாவது, யாழின் நரம்புகளை இழுத்துக் கட்டியதைப் 
போல என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இது அடுத்த தொடருடன் இயைபு உள்ளதாக இருக்கவேண்டுமே! அடுத்த தொடர் வாங்கு வள் பரிய 
என்பது. வாங்கு என்பதற்கு வளைந்த என்று பொருள் கொள்ளலாம். வள் என்பது கடிவாளம். பரி என்பது ஓட்டம். பரிய என்பது ஓட்டத்தை உடைய 
எனப் பொருளாகும். ஓடுகின்ற குதிரையை நிறுத்த அதன் கடிவாளத்தை இழுத்துப் பிடிப்பார்கள். அப்பொழுது கடிவாளம் இழுவையினால் 
தொய்வில்லாமல் நேராக இருக்கும். ஆனால் குதிரை வேகமாக ஓடும்போது கடிவாளத்தைத் தொய்வாக விட்டிருப்பார்கள். இந்தத் தொய்வான 
கடிவாளம்தான் வாங்கு வள் எனப்படுகிறது.

			

	குதிரையை ஒரே கதியில் (gait, pace) செலுத்துவதற்குக் கடிவாளத்தை ஓரளவு இழுத்துப் பிடித்துத் தேவையான வேகத்தில் 
செலுத்துவார்கள். இந்த நடையும் பரி என்றே சொல்லப்படுகிறது. ஆனால் மிகவும் வேகமாகச் செல்லும் குதிரையின் கடிவாளம் என்று காட்டத்தான் 
வாங்கு வள் பரி என்று கூறப்பட்டுள்ளது. ஒரு குதிரைக்கு இரண்டு கடிவாளங்கள் உண்டு. தேரில் பூட்டப்பட்ட இரண்டு அல்லது நான்கு குதிரைகளின் 
கடிவாளங்களை ஒரு கையில் சேர்த்துப் பிடித்து, மறு கையில் சாட்டையைக் கொண்டு குதிரைகளை விரட்டும் காட்சியை நினைத்துப்பாருங்கள். 
அப்பொழுது ஓட்டுபவரின் கையில் உள்ள கடிவாளங்கள் யாழ் நரம்புகளை சேர்த்துப் பிடித்ததைப் போல் இல்லையா? எனவே நரம்பு ஆர்த்து அன்ன 
என்ற தொடருக்கு (யாழின்)நரம்புகளை இழுத்துச் சேர்த்துக் கட்டியதைப் போன்ற என்ற பொருள் ஒத்துப்போவது போல் தெரிகிறது. ஆனால் யாழின் 
நரம்புகளைச் சேர்த்துப் பிடித்தால் அவை இழுவையுடன் நேராக இருக்கும். கடிவாளங்கள் அமைப்பினில் நரம்புகளைப் போல் இருந்தாலும், இழுவையில் 
நேராக இல்லாமல், தொய்வாக உள்ளன என்பதைக் குறிக்கத்தான் வாங்கு வள் என்று புலவர் கூறியுள்ளார். 

  	பருமம் களையா பாய் பரி கலி மா - நெடு 179
	கடு மான் பரிய கதழ் பரி கடைஇ - நற் 149/7
	கடும் பரி நெடும் தேர் கால் வல் புரவி - ஐங் 422/1

	என, குதிரைகளின் வேகமான ஓட்டத்தைக் குறிக்க எத்தனையோ சொற்கள் இருப்பினும், அவற்றுக்கெல்லாம் முற்றிலும் மாறாக, 
தொய்வான கடிவாளங்களை உடைய ஓட்டம் என முற்றிலும் மாறுபட்ட அடைமொழியுடன், அதற்கேற்ப நரம்புகளைச் சேர்த்ததுபோன்ற என்ற 
முற்றிலும் புதிய ஓர் உவமையையும் கையாண்டிருக்கும் புலவரின் திறன் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.

	தலைவியின் அழகைப் போற்றிக்கூறும் தோழி, “காந்தள் மலரின் மணத்தைப் போல் மணக்கும் உன் சிறந்த அழகு” என்கிறாள். 
அந்தக் காந்தள் மலர் எங்கு பூத்தால் என்ன? உறந்தையின் கிழக்கே உள்ள நெடிய பெரிய குன்றின் மேல் பூத்திருக்கும் காந்தள் என்கிறாள்.

	உறந்தை குணாது
15 	நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள்

			

(நன்றி: கூகுள் படம்)

	குணதிசை என்பது கிழக்கு. திருச்சி மாநகரின் ஒரு பகுதியாக இருக்கும் உறையூர் என்ற இடமே அன்றைய உறந்தை என்பது அறிஞர் 
கருத்து. இந்த உறையூருக்குக் கிழக்கே, அப்படி என்ன பெரிய உயரமான குன்று இருக்கிறது?  திருச்சிக்காரர்களுக்குத் தெரியும் – அது இன்றைய 
மலைக்கோட்டை அமைந்திருக்கும் மலை. தெரியாதவர்கள் ஏதோ புலவர் சொல்கிறார் என்று எண்ணிக் கடந்துசெல்ல வேண்டாம். இருக்கவே 
இருக்கிறது கூகுள் படம். அது காட்டுவதைப் படத்தில் பாருங்கள். 

	குன்று என்பது பாறைகளால் அமைந்த மலை – திருப்பரங்குன்றம் போல. இந்த நெடும் பெரும் குன்றமும் அது போலத்தான் 
இருக்கவேண்டும். எனவே, இது உறையூருக்குக் கிழக்கே உள்ள -  உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ள குன்றம்தான். அது உறையூருக்கு 
நேர் கிழக்கே இருப்பதைப் படம் காட்டுகிறது. சங்கப் புலவர்கள் கூற்று எத்துணை துல்லியமானது என்பதை விளக்க இதைவிட வேறென்ன வேண்டும். 
அந்த நெடும் பெரும் குன்றமும் இதுதான்.

			

	இந்த மொட்டை மலையிலேயே காந்தள் பூத்து மணமும் வீசுகிறது. உன் தலைவன் போருக்குச் சென்றபின், பொலிவிழந்து மொட்டை 
மலையாய் நிற்கும் உன் மேனி அழகும் மலர்ந்து (உன் தலைவனுக்கு) மணம் வீசும் – அவன் திரும்பி வந்துகொண்டிருக்கின்றான் – எங்கே என்று 
ஜன்னல் வழி எட்டிப் பார்க்காதே – அவன் இங்கு இல்லை – ஓ அங்கேயா என்றும் ஆயாசப்படாதே – அவன் அங்கு இல்லை – புறப்பட்டுவிட்டான் - 
இடையே இருக்கிறான் – உவக்காண் – உங்கே – என்கிறாளோ தலைவி??

அங்கு – (மொக்கு)  -- இங்கு – (மலர்)  -- உங்கு – (அரும்பு)

			

	தலைவன் அங்கு இருக்கும்போது மொக்குப் போல் மூடியிருந்த முகம், இங்கு வந்த பின்னர் மலர் போல் மலரப் போகின்ற முகம், 
அவன் இடையில் உங்கு இருக்கும்போது, அரும்பு தோன்றியது போல் இருக்கிறது. முல்லை வை நுனை தோன்ற என்ற பாடலின் தொடக்கச் 
சொற்கள் எத்துணை பொருள் பொதிந்தவை எனத் தெரிகின்றதா!

சொன்னதும் -- சொல்ல நினைத்ததும்

	Poetry is the beauty in the space between its words என்ற பொருள்படும் ஒரு கூற்று உண்டு. அழகு என்பதே அதைக் காண்பவரின் 
கண்களுக்குத் தெரிவது. அதிலும் இல்லாத சொற்களில் உள்ள அழகு என்பது, அதைப் படிப்பரின் தேர்ச்சியையும் பயிற்சியையும் பொருத்தது. 
குறிப்பாகச் சங்க இலக்கியங்களின் முழு அழகைக் காண மிக்க பயிற்சியும் அதில் தேர்ச்சியும் தேவை. நான் அடைந்திருக்கும் ‘தேர்ச்சி’-யின் 
அளவில் எனக்குத் தெரிந்த காணாச் சொற்களின் அழகைப் பார்ப்போம்.

	ஒருவர் சொன்னதும், உண்மையில் சொல்ல நினைத்ததும் என்று வேடிக்கையான துணுக்குகள் வார இதழ்களில் வெளிவருவதுண்டு. 
இங்கே குறுங்குடி மருதனார் சொன்னதும், அவர் சொல்ல நினைத்ததாக நான் எண்ணியதும் காண்போம்.

	முல்லை வை நுனை தோன்ற
	 --  உன் முகத்தில் சிறு புன்னகை அரும்ப

	இல்லமொடு,  பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ 
	–  உன் அகமும் புறமும் பிரிவுத் துயர் என்னும் இறுக்கத்தினின்றும் மெல்ல விடுபட,

	இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின் பரல் அவல் அடைய இரலை தெறிப்ப
	 – அவர் எப்போ வருவார் என்ற திருக்குற்ற ஐயங்களைக் கொண்ட உன் உள்ளம் மகிழ்ச்சிப் பரல் நெகிழ்ந்ததினால் துள்ளிக் குதிப்ப,

	 மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப
	 -  களிப்புற்ற உன் நினைவுலகம் தன் தனிமைத் துயரைப் புறந்தள்ள

	கருவி வானம் கதழ் உறை சிதறி,  கார் செய்தன்றே கவின் பெறு கானம்
	 -  இருண்டு கிடந்த மனம் இன்பப் புன்னகை சிந்த, கார்கால மலர்ச்சியைப் பெற்றது உன் கவின் பெற்ற மேனி.

	கார்காலம் வருவதைக் கவினுற வருணிக்கும் அடிகள், உண்மையில், தலைவன் வருகையினால் தலைவியின் மனம் களிப்புற்றதையே 
காட்டி நிற்கின்றன எனக் கொள்ளலாமே!

	இதேபோல், பின்பாதி அடிகள் சொல்லவரும் செய்தியை நீங்களே உய்த்துக் கண்டு உவகை கொள்ளுங்கள்.