அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 8

பாடல்  8. குறிஞ்சித் திணை    பாடியவர் - பெருங்குன்றூர்க் கிழார் 

துறை - தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.

  மரபு மூலம் - பானாள் கங்குலும் அரிய அல்ல

	ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த
	குறும்பி வல்சிப் பெருங்கை யேற்றை
	தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின்
	பாம்புமதன் அழியும் பானாட் கங்குலும்
5	அரிய அல்லமன் இகுளை பெரிய
	கேழல் அட்ட பேழ்வா யேற்றை
	பலாவமல் அடுக்கம் புலவ ஈர்க்கும்
	கழைநரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு
	வாழை யோங்கிய தாழ்கண் அசும்பில்
10	படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலிய
	பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்
	விண்டோய் விடரகத் தியம்பும் அவர்நாட்
	டெண்ணரும் பிறங்கல் மானதர் மயங்காது
	மின்னுவிடச் சிறிய ஒதுங்கிய மென்மெலத்
15	துளிதலைத் தலைஇய 1மணியே ரைம்பால்
	சிறுபுறம் புதைய வாாக் குரல்பிழியூஉ
	நெறிகெட விலங்கிய நீயிர் இச்சுரம்
	அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறினே

 சொற்பிரிப்பு மூலம்

	ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
	குரும்பி வல்சிப் பெரும் கை ஏற்றை
	தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்
	பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும்,
5           அரிய அல்லமன் இகுளை! ''பெரிய
	கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை
	பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
	கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு
	வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,
10     	படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய
	பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
	விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
	எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
	மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,
	துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால்
15         சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ,
	நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்,
	அறிதலும் அறிதிரோ?'' என்னுநர்ப் பெறினே.

அடிநேர் உரை 
	
	ஈசல்புற்றின் ஈரமான வெளிப்பக்கத்தில் தங்கிய
	புற்றாஞ்சோறை உணவாகக் கொண்ட பெரிய கையை உடைய ஆண்கரடியின்
	தொங்கும் தோலின் நுனியில் உள்ள பெரிய நகம் கவ்விப் பிடிப்பதால்
	பாம்பு தன் வலிமையை இழக்கும் பாதிநாளாகிய இரவும்
	நமக்கு அரியது அல்ல, தோழி! பெரிய
	ஆண்பன்றியைக் கொன்ற பிளந்த வாயையுடைய ஆண்புலி,
	பலா மரங்கள் நெருக்கமாய் இருக்கும் குன்றுகள் புலால் நாற இழுத்துச்செல்லும்,
	மூங்கில்கள் ஒலிக்கும் மலைச் சரிவில், சுரபுன்னையோடு
	வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில்
	அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க
	பெண்யானை, படியாக அமைக்க ஒடிக்கும் பெரிய மரத்தின் ஓசை
	விண்ணளாவிய மலையின் குகைகளில் ஒலித்து அதிரும் அவருடைய நாட்டில்,
	எண்ணிலடங்காக் குன்றுகளிலுள்ள விலங்குகள் நடந்த நெறிகளில் வழிதவறாமல்,
	மின்னலடிக்கும்போது சிறிதே ஒதுங்கிக்கொண்டு, மெள்ளமெள்ள நடந்து,
	மழைத்துளிகளைக் கொண்ட நீலமணி போன்ற அழகிய கூந்தலைப்
	பின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து,
	நேர்வழிகள் குலைய, குறுக்கும் நெடுக்குமாகக்கிடக்கும் இந்தக் காட்டுப்புறத்தை நீவிர்
	அறியவும் அறிவீரோ என்று கேட்பாரைப் பெறின்.

அருஞ்சொற்கள்:

இறுத்த = தங்கிய; குறும்பி = புற்றாஞ்சோறு; வல்சி = உணவு; தூங்கு = தொங்கு; துதிய = கூரிய நுனிகளை உடைய; வள் = பெரிய; 
உகிர் = நகம்; கதுவலின் = கவ்விப் பிடித்தலின்; மதன் = வலிமை; பானாள் = பாதிநாள்; கங்குல் = இருட்டு; இகுளை = தோழி; 
கேழல் = காட்டுப்பன்றி; அட்ட = கொன்ற; பேழ்வாய் = பிளந்த பெரிய வாய்; அமல் = நெருக்கமாக இரு; 
அடுக்கம் = மலைகளுக்கிடையே உள்ள சமதளம்; கழை = மூங்கில்; நரல் = ‘கிரீச்’சென ஒலிக்கும்; சிலம்பு = மலைச்சரிவு; 
வழை = சுரபுன்னை மரம்; தாழ் கண் = பள்ளமான இடம்; அசும்பு = வழுக்கு நிலம்; சொலிய = நீக்க; பிடி = பெண்யானை; 
விடர் = மலைக்குகை; இயம்பு = எதிர் ஒலி, சத்தம்செய்; பிறங்கல் = மொட்டை மலை; அதர் = வழி; சிறுபுறம் = முதுகு; குரல் = கூந்தல்; 
விலங்கு = (வழிகள்) ஒன்றற்கொன்று குறுக்காகப் பின்னிக்கிடத்தல்.

பாடலின் பின்புலம்

	தினைப்புனத்துக் காவலை முன்னிட்டுத் தன் தோழியருடன் சென்ற தலைவி அங்கு ஆண்மகன் ஒருவனைச் சந்திக்க நேர்ந்து, 
அவர்களுக்குள் காதல் மலர்கிறது. பகல்நேரத்தில் தினைப்புனமே அவர்கள் சந்தித்து மகிழும் இடமாயிற்று. தினைக்கதிர்கள் அறுக்கப்பட்ட பின் 
தலைவியால் வெளியில் செல்ல இயலாத நிலையில், இரவில் அவர்கள் சந்தித்துக்கொள்ள இரவுக்குறியாக ஓர் இடம் குறிக்கப்படுகிறது. 
இப்படியே எத்தனை நாள் ஓட்டுவது? ஒரு நாள் இரவுக்குறிக்குத் தலைவி தோழியுடன் சற்று சீக்கிரமாக வந்துவிட்டாள். மழைவேறு 
பிடித்துக்கொண்டது. ஏறக்குறைய நள்ளிரவு. நனைந்த தலைமுடியை விரலால் கோதிவிட்டு, ஒன்றுசேர்த்து முறுக்கிப் பிழிந்தாள் அவள். 
அப்போது தலைவன் வரும் சப்தம் கேட்டது. அங்கு வந்தும் அவன் இவர்களைப் பார்க்கவில்லை. தலைவி ஓர் உபாயம் செய்தாள். 
அவனுக்குக் கேட்கிறமாதிரி தோழியுடன் பேசுவது போல் பேச ஆரம்பித்தாள். அவளின் கூற்றாக அமைந்ததே இப்பாடல்.

பாடல் பொருள் விளக்கம்

தலைவி தோழி உரையாடல்

தலைவி: தோழி!, இவ்வளவு நேரமாகியும் இன்னும் அவரைக் காணவில்லையே?

தோழி: வந்துவிடுவார். வரும்வழியில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டிருக்கலாம் அல்லது வழி தவறிப்போயிருக்கலாம்.

தலைவி: இவ்வாறு அவர் வரும் வழியைப் பற்றியும், அதன் ஊறுகளைப்பற்றியும் ஒவ்வொரு முறையும் இன்னும் எத்தனை 
நாட்களுக்குத்தான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது? 

தோழி: சீக்கிரமே மணம் முடித்தால் இவ்வளவு துயரம் நமக்கு இல்லையே!

தலைவி: அதைப்பற்றித்தான் அவர் சிந்திப்பதாகக்கூடத் தெரியவில்லையே! பேசாமல் அவர் இருக்கும் இடத்திற்கு நாமே போய்விடலாமா?

தோழி: இந்த நடுச்சாமத்திலா? அங்கே பார், ஒரு பாம்பு நெளிகிறது.

தலைவி: பயப்படாதே. அதற்கு வலிமை இல்லை. ஈசல் புற்றின் மேல் உள்ள குரும்பியைத் திரட்டித் தின்னும் கரடி, புற்றுக்குள் கைவிடும்போது, 
கரடியின் கைநகங்கள், அதன் கழுத்தைக் கௌவிப்பிடித்ததால் அது மதன் அழிந்து நெளிகிறது. இந்த நட்டநடுச் சாமத்தின் கும்மிருட்டு எனக்கு 
ஒரு பொருட்டல்ல.

தோழி: அதென்ன சலசலப்புச் சத்தம்? ஏதோ முடைநாற்றம் வேறு அடிக்கிறதே!

தலைவி: வேறொன்றுமில்லை. காட்டுப்பன்றியைக் கொன்று இழுத்துச்செல்லும் புலி, மூங்கில் புதருக்குள் போகிறது. அப்போது அது மூங்கிலைத் 
தட்டிச் செல்ல, மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசுவதால் எழும்பும் ஒலிதான் அது. பழுத்த பலாக்களின் அருமையான நல்மணத்தையும் மீறி, 
இறைச்சியின் கவிச்சி நாற்றம்தான் ஊரைக்கூட்டுகிறது!

தோழி: ஐயோ!, அதென்ன, மலையுச்சியில் ‘டமடம’வென்ற பேரொலி?

தலைவி: இதற்குப்போய் பயந்துவிட்டாயா? இந்த ஒலி மலையுச்சியிலிருந்து வரவில்லை. இதோ, அருகில் உள்ள வழுக்குப் பள்ளத்தில் 
விழுந்துவிட்ட ஆண்யானையைக் காப்பாற்ற, பெண்யானை படிக்கட்டுகள் அமைக்கப்பார்க்கிறது. அதற்கு, பக்கத்தில் இருக்கும் சுரபுன்னை மரத்தின் 
பெருங்கிளைகளை ஒடிக்கிறது. மரக்கிளைகள் முறிக்கப்படும் ஒலி, மலையுச்சியின் குகைகளில் எதிரொலிக்கிறது. வேறொன்றுமில்லை.

தோழி: உனக்கு அச்சமே ஏற்படவில்லையா?

தலைவி: இல்லை. ஆனால்…

தோழி: என்ன ஆனால்?

தலைவி: மழைபிடித்துவிட்டது. சீவி முடித்த கொண்டையைப் பற்றிக்கூடக் கவலை இல்லை. தலையைத் தட்டிவிட்டால் போதும். முதுகை 
மறைத்துத் தொங்கும் கூந்தலைக் கோதிவிட்டு, சேர்த்து முறுக்கிப் பிழிந்துவிடவேண்டும். 

தோழி: சரி, ஆனால் உன் கவலைதான் என்ன?

தலைவி: இதோ, மின்னல் வெளிச்சத்தில் கண்முன்னே தெரியும் எண்ணற்ற ஏற்ற இறக்கங்களின் ஊடாகச் செல்லும் விலங்குப்பாதைகளின் 
வழியே மெல்ல மெல்லச் சென்றுவிடலாம். இருப்பினும் குறுக்கு நெடுக்காகப் பல திசைகளிலும் செல்லும் அந்தப் பாதைகளில் எது நம் தலைவன் 
ஊருக்கு நம்மை இட்டுச்செல்லும்? இந்த வழிகள் உமக்குத் தெரியுமா என்று நம்மிடம் கேட்பவர் யாராவது கிடைக்கமாட்டார்களா?

தோழி: கிடைத்தால்?

தலைவி: அப்படி ஒருவரை நாம் பெற்றால், இந்தக் காட்டுவழிப் பாதைகளின் கடுமைகளும், நடுச்சாமத்துப் பேரிருட்டும் எனக்கு அரியன அல்ல.

தலைவியின் சொல்நயம்

	தலைவன் இருப்பதை அறியாதவள் போல், தலைவி பேசும் பேச்சு பொருள் பொதிந்தது. கரடி, புலி, களிறு ஆகியவற்றைப் பற்றிக் 
கூறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும், தலைவனுக்குத் தன் நிலையை எடுத்துக்கூறத் தலைவி செய்யும் உபாயங்கள்.

1. இறைச்சிப்பொருள்

	“ஈசல் புற்றின் மேல் உள்ள குரும்பியைத் திரட்டித் தின்னும் கரடி, புற்றுக்குள் கைவிடும்போது, கரடியின் கைநகங்கள், பாம்பின் 
கழுத்தைக் கௌவிப்பிடித்ததால் அது மதன் அழிந்து நெளிகிறது.”

	பகற்குறியில் எளிதாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்ந்த தலைவன், இப்போது இரவுக்குறி நேரத்தில் இன்னும் மகிழ்ச்சியைப் பெற 
விழைகிறான். அவன் வரும் வழியைப் பற்றிய கவலையில் தலைவி துயருறுகிறாள். இதுவே தலைவி தலைவனுக்கு உணர்த்த விரும்பும் செய்தி.
கரடி வேண்டுமென்றே பாம்பின் கழுத்தைப் பிடிக்கவில்லை. இருப்பினும் அதன் மேலும் உணவு தேடும் முயற்சி பாம்புக்கு இன்னல் அளிக்கிறது. 
“உனக்கு என்னை வருத்தவேண்டும் என்ற நோக்கம் இல்லையாயினும், நான் படும் துன்பம் உன்னால் விளைந்ததுதானே” என்று குறிப்பால் தன் 
எண்ணத்தைத் தலைவனுக்கு வெளிப்படுத்துகிறாள் தலைவி. இதுவே இறைச்சிப்பொருள் ஆகும்.

2.அ உள்ளுறை உவமம்

	“காட்டுப்பன்றியைக் கொன்று இழுத்துச்செல்லும் புலி, மூங்கில் புதருக்குள் போகிறது. அப்போது அது மூங்கிலைத் தட்டிச் செல்ல, 
மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசுவதால் எழும்பும் ஒலிதான் அது. பழுத்த பலாக்களின் அருமையான நல்மணத்தையும் மீறி, இறைச்சியின் 
கவிச்சி நாற்றம்தான் ஊரைக் கூட்டுகிறது!”

	தலைவியைச் சந்திக்கத் தலைவன் வரும் வருகைகளால் ஊர்மக்கள் புறங்கூறிப் பேசும் பேச்சு எழுகிறது. மூங்கில் நரலுவதைப் போல 
ஊருக்குள் அலரின் சலசலப்பு ஏற்படுகிறது. “உன்னால் ஏற்பட்ட அலரால், மிகுந்த புகழை உடைய என் குடும்பம் இகழ்ச்சிப் பேச்சுக்கு ஆளானது” 
என்று தலைவி கூறும் உள்ளுறைப் பொருள் இது.

2.ஆ உள்ளுறை உவமம்

	“அருகில் உள்ள வழுக்குப் பள்ளத்தில் விழுந்துவிட்ட ஆண்யானையைக் காப்பாற்ற, பெண்யானை படிக்கட்டுகள் அமைக்கப்பார்க்கிறது. 
அதற்கு, பக்கத்தில் இருக்கும் சுரபுன்னை மரத்தின் பெருங்கிளைகளை ஒடிக்கிறது. மரக்கிளைகள் முறிக்கப்படும் ஒலி, மலையுச்சியின் குகைகளில் 
எதிரொலிக்கிறது.”

	காதல் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்த தலைவன் களவொழுக்கம் என்ற பள்ளத்தில் விழுந்துவிடுகிறான். அவனால் அதைவிட்டு மீடேற 
முடியவில்லை. தலைவனை மீட்பதற்கு ஒரே வழி, தலைவி அறத்தொடு நின்று, அவனை மணப்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
“உனக்காக நான் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் ஊரெல்லாம் பரவிவிட்டது” என்று தலைவி நொந்துபோய்ச் சொல்லும் செய்திதான் இது.

2.இ உள்ளுறை உவமம்

	 “மழைபிடித்துவிட்டது. சீவி முடித்த கொண்டையைப் பற்றிக்கூடக் கவலை இல்லை. தலையைத் தட்டிவிட்டால் போதும். முதுகை 
மறைத்துத் தொங்கும் கூந்தலைக் கோதிவிட்டு, சேர்த்து முறுக்கிப் பிழிந்துவிடவேண்டும்.”

	“நம் தலைமீது விழுந்திருக்கும் பழிச்சொல் துளிகளைக் கூடத் தட்டிவிட்டுப் போய்விடலாம். நம் நெஞ்செல்லாம் நிறைந்திருக்கும் 
குடும்பப் பாசத்தை முறுக்கிப் பிழிந்து உதறிவிட்டுப் போகவேண்டியிருக்கிறதே” எனத் தலைவி தோழியிடம் புலம்பித் தெரிவிக்கும் செய்திதான் இது.

	இவ்வாறு உள்ளுறையாகவும் இறைச்சியாகவும் ‘ஒருவண்டிச்’ செய்திகளை உள்ளடக்கிய அருமையான பாடல் இது.

புலவரின் சொல்வளமும் சொல்திறமும்

	இந்த அருமையான பாடலில் புலவர் மிக அருமையான சொற்களைத் தெரிவுசெய்து பயன்படுத்தியிருக்கிறார்.

1. இறு

	ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த குறும்பி வல்சி – இறு என்பதற்குத் தங்கு என்பது பொருள். குறும்பி என்னும் புற்றாஞ்சோறு 
புற்றுக்குள்தான் இருக்கும். அது புற்றின் ஈரமான வெளிப்பகுதியில் எப்படித் தங்கியிருக்கும்? ஒருவேளை, மழை பெய்து, மழைநீர் புற்றினுள் புகுந்து, 
இந்தக் குறும்பி அதில் மிதந்தவண்ணம் வெளியில் வந்திருக்கலாம். அப்படித் தங்கிய புற்றாஞ்சோறை, கரடி வல்சியாகக் கொண்டது என்பது 
ஏற்றுக்கொள்ளமுடியாதது. ஏனெனில், புற்றைக் கிளறி, குறும்பியை வெளிக்கொணர்ந்து, அதனை மண் ஒட்டாமல் எடுத்துத்தின்னும் வழக்கம் 
கொண்டது கரடி.  எனவே, ஈர்ம்புறத்து இறுத்த என்ற தொடர் குறும்பிக்கு அடைமொழியாக அமையும் என்பது பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது. 
ஈர்ம்புறத்து இறுத்த குறும்பி வல்சி பெருங்கை ஏற்றை என்பதை – ஈர்ம்புறத்து இறுத்த ஏற்றை – குறும்பி வல்சி ஏற்றை - பெருங்கை ஏற்றை – 
எனக் கொண்டு, ஈரமான வெளியில் தங்கிய கரடி - அது பெரிய கையைக் கொண்டது - குறும்பியை வல்சியாகக் கொண்டது என்று பொருள் 
கொள்வதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. அதாவது, இறுத்த என்பதை கரடிக்கு ஏற்றிக் கொள்வது பொருத்தமானது. குறும்பியை உணவாகக் 
கொண்டதும், பெரிய கைகளை உடையதும் ஆன கரடி, ஈசல் புற்றின் ஈரமான வெளிப்புறத்தில் தங்கியிருக்கிறது. அவ்வப்போது புற்றிலிருந்து 
வெளிவரும் ஈசல்களைக் கைநிறையப் பிடித்துத் தின்கிறது. சிலவேளைகளில் ஈசல் வெளிப்படாதபோது, தன் கையை புற்றுக்கு உள்ளே நுழைத்துத் 
துழாவுகிறது. அப்போது புற்றுக்குள் பதுங்கியிருக்கும் பாம்பை, கரடியின் கூரிய நகங்கள் கௌவிப்பிடிக்கின்றன. ஈசல் புற்றுக்குள் பாம்புகள் வசிக்கும். 
பாம்புகள் ஈசலைப் பிடிக்க வருவதும் உண்டு. கிராமங்களில் மழைக்காலத்தில் ஈசல் புற்றுக்கு வெளியில் சிறிய பள்ளம் அமைத்து, பக்கத்தில் 
ஒரு சிறிய விளக்கையும் ஏற்றிவைத்துச் செல்வர். புற்றிலிருந்து வெளிவரும் ஈசல்கள் வெளிச்சத்தால் கவரப்பட்டு, அந்தப் பள்ளத்தில் விழுந்து 
குவியலாகக் கிடக்கும். காலையில், அங்கு வரும் ஆட்கள், பள்ளத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும் ஈசல் குவியல்களை, இரு கைகளாலும் வாரி எடுத்துப் 
பைகளில் நிரப்புவர். அப்படிச் செய்யும்போது, பள்ளத்தில், ஈசல் குவியலுக்குள் சுருண்டு கிடக்கும் பாம்பினால் கடிக்கப்பட்டு ஆட்கள் இறந்துபோவதும் 
உண்டு. ஆனால், பாடலில் வரும் பாம்பு, புற்றுக்குள் சுருண்டு கிடக்கிறது. எனவே, அதனால் தலையை உயர்த்தி ஓங்கிக் கரடியின் கையைக் கொத்த 
முடியாது. எனவேதான் அது கரடியின் கைகளில் சிக்குண்டு தன் வலிமையை இழக்கிறது என்று பாடல் கூறுகிறது. 

	மேலும், இறுத்தல் என்பது தங்குதல் என்ற பொருளில், அங்குமிங்கும் சென்று, பின்னர் ஓரிடத்தில் சென்று தங்குவது என்றே பொருள்தரும். 

	யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து - மது 150
	பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து - பதி 32/11
	சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த - கலி 149/14
	வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த - அகம் 125/17
	அம்பு சென்று இறுத்த அறும் புண் யானை - புறம் 19/9

	என்ற அடிகள் இதனை வலியுறுத்தும். உணவைத் தேடி அலையும் கரடி, அங்குமிங்கும் அலைந்து திரிந்து, பின்னர் ஈயல் புற்றத்து 
ஈர்ம்புறத்திற்குச் சென்று தங்கியது என்ற பொருள் இங்கு பொருத்தமானது எனத் தோன்றுகிறது.

2. வல்சி

	அடுத்து வல்சி என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். வல்சி என்பது உணவு. பொதுவாக ஒருவர் வழக்கமாகச் சாப்பிடும் ஆகாரம் வல்சி 
எனப்படுகிறது எனலாம். கீழ்க்கண்ட அடிகள் இதனை வலியுறுத்தும்.

	இல் எலி வல்சி வல் வாய் கூகை - அகம் 122/13.
	கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர் - அகம் 290/3.
	வித்தா வல்சி வீங்கு சிலை மறவர் - அகம் 377/4
	வேளை வெந்ததை வல்சி ஆக - புறம் 246/8
	தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் - மது 395
	ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
	குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை

	என்ற அடிகள் கரடியின் வழக்கமான உணவு குரும்பி எனக் கூறுகின்றன. ஈசல் புற்றுக்குள் கரையான்கள் வசிக்கும். 
இந்தப் புற்றுக்கறையான்கள்தான் வளர்ச்சியடைந்து சிறகு முளைத்து ஈசல்களாக மாறுகின்றன. மழைக்காலத்தில் இவை ஆயிரக்கணக்கில் புற்றை விட்டு 
வெளியே பறந்து வரும். எனவேதான், ‘குபுகுபு'வென்று கூட்டமாக வெளிவரும் மனிதரைப் பார்த்து, ‘புற்றீசல் போன்று வரும் கூட்டம்' என்கிறோம். 
நன்றாக ஓடும் ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சி முடிந்தவுடன் உள்ளிருந்து வெளிவரும் கூட்டத்தை இதற்கு ஒப்பிடலாம். ஒரு குற்றவாளியைப் பிடித்து 
விசாரிக்கும்போது மேலும் மேலும் வெளிவரும் அடுக்கடுக்கான மற்ற குற்றங்களையும் இவ்வாறு குறிப்பிடலாம். இந்தக் கரையான்கள் ஆயிரக்கணக்கில் 
முட்டையிடும். அந்த முட்டைகளின் மேலுள்ள ஒருவிதப் பசையினால் அவை ஒட்டிக்கொண்டிருக்கும். இந்த முட்டைகள் மிகுந்த புரதச்சத்து கொண்டவை. 
எனவே, புற்றுகளை அழித்து, இவற்றை எடுத்து உண்பர். இதுவே இங்கு குறும்பி, புற்றாம்பழச்சோறு எனப்படுகிறது (Comb of white ants' nest).

	பெரிய உருவம் கொண்ட கரடிகள் சின்னஞ்சிறு கறையான் முட்டைகளைத் தேடித் தின்னவேண்டிய அவசியம் என்ன? 
விலங்கியலாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

	Why would a large animal such as a Black Bear want to consume small insects? Because the larva of insects such as ants, 
termites, beetles, yellow jackets, bees, wasps contain 80% to 90% protein. To put this into perspective, beef is about 20% protein, so 4 or 5 grubs 
will give a bear the same protein as a full size burger (grub is basically the larva of beetles, bees and wasps). When you see bears flipping 
rocks or digging into logs, this is generally the reason for them doing so. 

	Black Bears dig up ant colonies in spite of the ants' defensive formic acid onslaught to consume their pupae and larvae 
(collectively known as brood). They dig up hornets' nests to retrieve the brood comb that contains the larvae, and they suffer the persistent stings. 
A bears skin is tough and their fur is very thick so the only places that a black bear can be stung so that it really feels it is on the lips, near 
the eyelids, and on the tip of the ears. 

	In Summer, ant pupae and larvae become abundant. Ant brood is a major food from late spring until mid to late summer. 
Ants undergo complete metamorphosis, much like that of butterflies, where they pass from egg to larva to pupa before maturing into an adult ant. 
Bears consider this as a top favorite food source and is a huge part of their diet at this time of year. It is a delicacy for cubs eating their 
first solid foods.

	Bears find brood by keying in on pheromones and other chemicals that ants use for communication and defense. 
Bears attempt to eat brood cleanly without getting a lot of soil, debris, and adult ants. They do this most easily with colonies under rocks, 
moss, and ground litter. They flip over the rocks or other cover and get the brood with a few flicks of their sticky tongues.

	இத்தனை விளக்கங்களையும் ‘குறும்பி வல்சி’ என்ற இரு சொற்கள் தாங்கிநிற்கின்றன. 

3. துதி

	அடுத்து, கரடியின் கூர்மையான விரல்நகங்களைப் பற்றிக் கூறும்போது புலவர், தூங்குதோல் துதிய வள்ளுகிர் என்கிறார். 
கரடியின் புறங்கை மட்டுமன்றி, கையின் ஒவ்வொரு விரலுமே நிறைந்த மயிரால் மூடப்பட்டிருக்கும். மயிரால் மூடப்பட்ட விரலின் நுனியிலிருந்து 
நகம் வெளியில் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும். இது தோல் உறையிலிருந்து துருத்திக்கொண்டிருக்கும் கத்திமுனையைப் போன்று இருக்கிறதாம்! 
என்ன அருமையான சொல்லாட்சி பார்த்தீர்களா?

			

4. நரல்

	பன்றியை அடித்து இழுத்துச் செல்லும் புலி, மூங்கில் புதருக்குள் போகிறது. அப்போது அந்த மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி ஒலி 
எழுப்புகின்றன. இதனைப் புலவர் கழை நரலுகின்றது என்கிறார். பொதுவாகக் காற்றினால் அலைக்கழிக்கப்படும் மூங்கில்கள் ஒன்றோடொன்று 
உரசுவதால் ஏற்படும் ‘கிரீச்’ என்ற ஒலியே நரலுதல். இதனை creaking sound எனலாம். அதாவது, இது high-pitched, screeching noise. 
சங்க இலக்கியங்கள், அசைகின்ற மூங்கில்கள் எழுப்பும் ஒலியை நரல் ஒலி என்கின்றன. இதோ சில எடுத்துக்காட்டுகள்.

	அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மலை 161
	வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை - கலி 40/10
	அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து - அகம் 47/4
	ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர் - புறம் 120/18

	இதைத் தவிர, சங்குகளும், குருகு, அன்றில், மயில் போன்ற பறவைகளும் எழுப்பும் ஒலியும், யானை கொட்டாவி விடும் ஒலியும் 
நரலுதலே என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

	வளை நரல வயிர் ஆர்ப்ப - மது 185 ( வளை = சங்கு)
	குருகு நரல மனை மரத்தான் - மது 268
	அன்றிலும் என்பு உற நரலும் - நற் 335/8
	வேர்ப் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
	கந்துபிணி யானை அயா உயிர்த்து அன்ன – நற்றிணை 62-1
	கான மஞ்ஞை கமம் சூல் மாப்பெடை
	அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும் - அகம் 177/10,11

	அந்தக் காலத்தில் இவ்வகை ஒலிகள் மக்களுக்குப் பழக்கப்பட்டதாக இருந்திருக்கலாம். இப்போது இவற்றைக் கேட்க ஏதாவது 
விலங்கியல் பூங்காவுக்குச் சென்று விடியவிடியக் காத்திருக்கவேண்டும். எனினும் இன்னுமோர் எடுத்துக்காட்டு இதனைப் புரியும்படி விளக்கும்.

	மேடைக் கச்சேரியில், ஒரு புதிய வீணை வித்துவான் வந்து அமர்ந்து, தனது வீணைக்குச் சுருதிகூட்டுவதைக் கேட்டிருக்கிறீர்களா?
‘டொய்ங், டோய்ங், டீய்ங், டய்ங்ங்’ என்று பலவித கீச்சுக்குரல்களை எழுப்பி, நரம்பைச் சரிசெய்வதுவே சுருதிகூட்டல். அதிலும், எதை, எப்படி, 
எந்த அளவு தட்டவேண்டும் என்று முற்றிலும் அறியாத ஒரு புதிய பாடகர் எழுப்பும் ஒரு கர்ணகடூரமான சுருதிபேத ஒலியே நரலுதல்.
இந்த நற்றிணை அடிகளைக் கூர்ந்து கவனியுங்கள்.

	விருந்தின் பாணர் திருந்து இசை கடுப்ப
	வலம்புரி வான்கோடு நரலும் – நற். 172-7,8

	‘புதியராய் வந்த பாணர், இசைத்தற்கு எடுத்த திருந்திய இசை போல, வலம்புரியாகிய வெண்சங்குகள் ஒலிக்கும்’ என்று 
ஔவை.துரைசாமியார் இதனை விளக்குகிறார். ‘விருந்து – புதுமை. திருந்திசை – சிறந்த முறையில் இசைக்கக் கருதி எடுக்கும் இசை, 
இதனை இந்நாளில் சுருதி என வழங்குப’ என மேலும் அவர் விளக்குகிறார். 

	எனவே சுருதிபேதம் மிகுந்த, கேட்பதற்கு இனிமை அற்ற ஒலியே நரலுதல் என்பது தெளிவாகிறது.

	இதைப் பற்றி இராம.கி. அவர்கள் கூறுவதையும் பாருங்கள்.

	நரம்பு என்ற சொல் கற்றாழையின் நாரான நரல் என்பதில் இருந்து எழுந்தது. நரலை யாழில் கட்டுவார்கள். (யாழ்தல் என்ற 
வினைச் சொல்லுக்குக் கட்டுதல் என்றே பொருள். ஒவ்வொரு சுரத்திற்கும் ஒரு நரல்; நரலுதல் என்றாலே ஒலித்தல். நரலுகின்றவன் நரன். 
இந்தச் சொற்கள் எல்லாமே தமிழ். ஓவ்வொரு நரலும் யாழில் வெவ்வேறு ஒலித்தானங்களைக் கொண்டுவரும். இன்றைக்கு ச,ரி,க,ம,ப,த,நி 
என்று சொல்லப்படுபவை அன்று ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்றே குறிக்கப் பட்டன. இந்த ஏழு இசையைக் குறிப்பன ஏழு நரம்புகள் 
(நரல் +ம் +பு = நரம்பு). இது நரல் கருவியில் ஏற்பட்ட சுரத்தானம். இராம.கி. 

நன்றி: http://valavu.blogspot.in/2006_12_01_archive.html

5. இயம்பு

	இதுவும் ஒருவகை ஒலித்தலே. பள்ளத்துக்குள் சறுக்கி விழுந்த ஆண்யானையைக் காப்பாற்ற, பெண்யானை மரக்கிளையை 
முறிக்கும் ஒலி, உயரத்தில் இருக்கும் மலைக்குகையில் மோதி எதிரொலிக்கின்றது. இதனை,

	படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய
	பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
	விண் தோய் விடரகத்து இயம்பும்

	ஊர்ப்புறத்தில் உடுக்கடிப்போர், உடுக்கு அடிக்கும்போது ‘கும்ம், கும்ம்ம்’ என்று ஒரு ஒலி உண்டாகுமே அதுதான் 
இயம்புதல் (reverberating sound). 

	முழவு அதிர முரசு இயம்ப - பட் 157
	நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் - மலை 310
	நல் ஏறு இயங்கு-தொறு இயம்பும் - குறு 190/6
	அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப - புறம் 126/19

	என்ற அடிகளால் இதனை உணரலாம்.

6. சொலித்தல்

	யானையின் வருத்தம் தீர என்று சொல்ல வந்த புலவர், களிற்றின் வருத்தம் சொலிய’ என்கிறார். சொலி என்றால்
 (பட்டையை அல்லது தோலை) உரி என்று பொருள் (peel off, strip off). பட்டை அல்லது தோல் என்பது ஒரு பொருளின் மீது படர்ந்து 
அதனை மூடியிருப்பது. பட்டையை உரித்தால் அப்பொருள் ‘பளிச்’சென்று தெரியும். அதைப் போல, பள்ளத்தில் விழுந்த யானையின் 
உள்ளத்தை வருத்தம் மூடிக்கொண்டுள்ளது. அந்த வருத்தத்தை உரித்தெடுத்துவிட்டால் உள்ளம் தெளிவாகும். எனவே, வருத்தம் என்ற 
மேல்தோலை உரித்து எடுக்கிறதாம் பெண்யானை. என்ன அருமையான கற்பனை கலந்த சொல்லாட்சி பாருங்கள்!

7,8,9.. அடுக்கம், சிலம்பு, பிறங்கல்

	அடுக்கம் என்பது பக்கமலை எனப்படுகிறது. சிலம்பு என்பது மலைச்சரிவு எனப்படுகிறது. பிறங்கல் என்பது குன்று எனப்படுகிறது. 
இருப்பினும் இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை நாம் இங்கு காணலாம்.

	அடுக்கம் என்ற பக்கமலை என்பது, ஒரு பெரிய மலைக்கு அருகில் அமைந்த சிறிய மலை என பால்ஸ் தமிழ் அகராதி கூறுகிறது. 
தமிழ்ப் பேரகராதியும் அவ்வாறே கூறுகிறது. அடுக்கம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் வரும் பெரும்பாலான இடங்களில், அங்கு மரங்கள் 
அடர்ந்து வளர்ந்திருக்கும் என்ற குறிப்பு கிடைக்கிறது.

	பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் - அகம் 8/7
	கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் - அகம் 82/9
	தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு - அகம் 143/5
	வேய் பயில் அடுக்கம் புதைய கால்வீழ்த்து - அகம் 312/9
	வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் - அகம் 328/1

	என்ற அடிகளால் இதனை அறியலாம். மரங்கள் அடர்ந்து வளரும் மலைப்பகுதி, ஓரளவுக்குச் சமதளப் பகுதியாக இருக்கவேண்டும். 
மேலும், 

	இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
	கரும்பு எனக் கவினிய பெருங்குரல் ஏனல் – அகம் 302 9,10

	என்ற அடிகள் அடுக்கத்தில் தினைப்புனங்கள் இருந்தன என்று கூறுகின்றன. எனவே அடுக்கம் என்பது, உயரமான மலைகளுக்கு 
இடையே இருக்கும் அகன்ற வெளி என்பது பெறப்படுகிறது. இத்தகைய பகுதிகளில் மனிதக் குடியிருப்புகள் இருக்கும். கொடைக்கானல் மலையில், 
உச்சியில் இருக்கும் கொடைக்கானல் ஊருக்கும், அடிவாரப் பகுதியில் இருக்கும் கும்பக்கரை என்ற ஊருக்கும் இடையே அடுக்கம் என்ற ஊர் 
இருக்கிறது. கொடைக்கானல் மலையின் உயரம் சுமார் 7000 அடி. இந்த அடுக்கம் கிராமம் 4000 அடியில் அமைந்துள்ளது. இது இரண்டு பக்கங்களிலும் 
அமைந்த மலைச்சரிவுகளுக்கு இடையில் உள்ள சமதளப்பகுதியாக உள்ளது. (கீழே உள்ள பெரிய படம் அடுக்கம் மலைச் சரிவையும், அதன் உள் 
இடப்பட்டிருக்கும் சிறிய படம் அடுக்கம் என்ற ஊரையும் காட்டும்)

	

	இதைப்போன்றே, நாமக்கல் மாவட்டப்பகுதியில் கொல்லிமலையில் அடுக்கம் என்ற ஊர் அமைந்துள்ளது. எனவே, அடுக்கம் என்பது 
பெரிய மலைத்தொடர்ப் பகுதியில், மலைகளுக்கு இடையே அமைந்துள்ள மனிதர் வசிக்கக்கூடிய சமதளப் பகுதி என்பது தெளிவாகிறது.

	சிலம்பு என்பதையும் பக்கமலை என்றே அகராதிகளும் உரைகளும் கூறுகின்றன. இங்கே பக்கமலை என்பது mountain slope 
எனப்படுகிறது. Slope என்றவுடன் சாய்வான மலைச் சரிவு என்று எண்ணத்தான் தோன்றுகிறது. ஆனால், சிலம்பு என்பது மலைச்சரிவில் அமைந்த 
ஒரு ஏறக்குறைய சமதளமான அகன்ற பகுதி (கண் அகல் சிலம்பு) என்றுதான் தோன்றுகிறது.

	வெண்ணெல் அருந்திய வரிநுதல் யானை
	தண்ணறும் சிலம்பில் துஞ்சும் – நற்றிணை 7 - 7,8

	என நற்றிணை கூறுகிறது. யானை படுத்துத்தூங்கும் பகுதி சாய்வான மலைச்சரிவாக இருக்கமுடியாது. கீழ்க்கண்ட அடிகளாலும் 
இதனை உணரலாம்.

	காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு - பெரும் 372
	கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் - மலை 14
	வாழை அம் சிலம்பின் வம்பு பட குவைஇ - நற் 176/7
	படு நீர் சிலம்பில் கலித்த வாழை - நற் 188/1
	வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் - நற் 222/7

	எனவே, இரண்டு பக்கமும் உயரமான மலைச் சரிவுகளைக்கொண்டு, அவற்றுக்கு இடையே உள்ள அகன்ற வெளி அடுக்கம் என்பது 
போல, ஒரு உயரமான மலைச்சரிவில், இடையே அமைந்த ஒரு சிறிய சமவெளிப்பகுதியைச் சிலம்பு எனலாம். 

			

	பிறங்கல் என்பதுவும் மலை எனப்படுகிறது. ஆனால்,

	வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே - குறு 285/8
	கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி - அகம் 393/1

	என்ற அடிகளின் மூலம் பிறங்கல் என்பது மலையின் ஒருவகை என அறிகிறோம். பிறங்கல் என்ற சொல் சங்க இலக்கியங்களில் 
19 தடவை வருகிறது. அவற்றில் மிகப் பெரும்பாலான இடங்கள் பாலைத் திணையைக் கூறும் பாடல்களாகவே இருக்கக் காண்கிறோம். 
பாலைத்திணை வறண்ட நிலப்பகுதிக்கு உரியது. எனவே, பிறங்கல் என்பது மரங்கள் அற்ற, ஓரளவு சிறிய புதர்களைக் கொண்ட மலை 
எனக்கொள்ளலாம்.

	கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் - அகம் 17/15
	காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல் - அகம் 399/16

	என்ற அடிகளும் இதனை வலியுறுத்தும். பிறங்கல் மலை என்பதை விளங்குகின்ற மலை என்றே உரைகள் கூறுகின்றன. 
மலை எவ்வாறு விளங்கும்? அழுக்கான பாத்திரத்தை விளக்கலாம். அது பளிச்சென்று இருக்கும். அது விளக்கிய பாத்திரம். 
விளங்கிய என்பது தானாகவே பளிச்சென்று இருத்தல். மரங்கள் அடர்ந்த மலை இருளடைந்து இருக்கும். மரங்கள் அற்ற மலையோ 
பளிச்சென்றுதானே இருக்கும். எனவே, பிறங்கு மலை என்பது மரங்கள் இல்லாமல் வெட்டவெளியாக இருக்கும் மலை எனலாம். 
மரங்கள் அடர்ந்த மலையில் பசும்புல்லும் பரந்து வளர்ந்திருக்கும். அவற்றின் மேல் விலங்குகள் நடந்தால் விலங்குகளின் கால்தடம் பதியாது. 
ஆனால், இங்கே புலவர் பிறங்கல் மானதர் எனக் கூறுகிறார். மான் என்பது பொதுவாக விலங்குகளைக் குறிக்கும். அதர் என்பது உயிரினங்கள் 
நடப்பதால் ஏற்படும் கால்தடப் பாதை.

	களிறு வழங்கு அதர கானத்து அல்கி - பொரு 49
	மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் - பெரும் 106
	நெறி விலங்கு அதர கானத்தானே - ஐங் 355/5
	ஆன் இனம் கலித்த அதர் பல கடந்து - புறம் 138/1

	என்ற அடிகளால் இதை அறியலாம். எனவே விலங்குகள் நடந்ததால் பாதை உண்டாகும் எனில், அந்த நிலம் புல்வெளியாக 
இருக்கமுடியாதன்றோ.

			

புலவரின் வருணனைத் திறம்

	சில நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறும்போது, அவற்றின் ஒவ்வொரு சிறிய பகுதியையும் விளக்கமாகக் கூறுவது சிலர் வழக்கம். 
புலவர் பெருங்குன்றூர்க் கிழார் அப்படிப்பட்டவர். புலி பன்றியை அடிக்கும் நிகழ்ச்சியை அவர் எவ்வாறு விளக்குகிறார் என்று பார்ப்போம்.

1. புலியின் வேட்டை

	கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை
	பலா அமல் அடுக்கம் புலவ ஈர்க்கும்
	கழை நரல் சிலம்பின் - 

	என்று புலியின் வேட்டையைப் பற்றிப் புலவர் கூறுகிறார். 

	புலி வேட்டையாடும்போது திறந்தவெளியில் மேயும் விலங்குகளைத்தான் தெரிந்தெடுக்கும். பின்னர், தன் இரையை விரட்டிப் பிடித்துக் 
கொன்ற பின்னர், அதனை வாயால் கவ்விப்பிடித்து, அருகிலிருக்கும் புதர்களுக்குள் இழுத்துச் செல்லும். அவ்வாறு இழுத்துச் செல்வதற்கு ஏற்ற 
பெரிய வாயைக் கொண்டது புலி. எனவே, இங்கு புலியை பேழ்வாய் ஏற்றை என்கிறார் புலவர். ஈர்க்கும் என்பது இழுக்கும் என்ற பொருள்தரும். 
அருகில் உள்ள மூங்கில் புதருக்குள் பன்றியை இழுத்துச் செல்லும்போது, புலியும், பன்றியின் உடலும் மூங்கிலின் மேல் உரசுவதால் மூங்கில்கள் 
சலசலக்கின்றன என்று அந்த சிறிய ஒலியையும் குறிப்பிடும் புலவரின் நுணுக்கமான பார்வையைக் கவனித்தீர்களா? அது மட்டுமல்ல, புலியைப் 
பேழ்வாய் ஏற்றை என்றும், கரடியைப் பெருங்கை ஏற்றை என்றும் அதனதன் சிறப்பியல்புகளை வைத்து அவற்றை விவரிக்கும் திறத்தையும் 
கவனித்தீர்களா?

			

			

2. பெண்கள் தலை உலர்த்தல்

	பொதுவாகப் பெண்கள் தலையை நனைக்கமாட்டார்கள். காரணம், நனைந்த தலைமயிரை உலரவைப்பது மிகக் கடினம். 
எப்போதாவது அவர்கள் நனைந்த தலையை எவ்வாறு உலர்த்துகிறார்கள் என்று கவனித்திருக்கிறீர்களா? இதோ புலவர் இங்குக் கூறுகிறார்.

	துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால்
	சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ

	தலைவனைச் சந்திக்க வரும் தலைவி, தன்னை நன்றாக அலங்கரித்து வருகிறாள். தலைமுடியை ஐந்தாகப் பகுத்து, 
சிலவற்றைக் கொண்டையாக முடித்து, சிலவற்றைக் கூந்தலாகப் பின்புறம் தொங்கவிட்டிருக்கிறாள். இந்த வகைத் தலையலங்காரம் ஐம்பால் 
எனப்படும். மழைத்துளிகள் தலையில் பட்டு, கொண்டையை நனைத்துவிடுகின்றன. கொண்டையின் ஈரமான பகுதிகள், மின்னல் வெளிச்சத்தில் 
நீலமணிகளைப் போல் பளபளக்கின்றன. தலைமுடியின் ஒருபகுதி முதுகை மறைத்துத் தொங்கவிடப்பட்டிருக்கிறது. நனைந்து தொங்கும் கூந்தலின் 
இழைகள் ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொள்கின்றன. அவற்றைத் தன் கையால் கோதிவிட்டபடி கூந்தலை நெகிழ்த்துவிடுகிறாள். பின்னர் கூந்தலைச் 
சேர்த்து முறுக்கிப் பிழிகிறாள். துவட்டுவதற்குத் துணியோ வேறு பொருள்களோ இல்லாத நேரத்தில் பெண்கள் எவ்வாறு தம் ஈரமான தலையை 
உலர்த்துவார்கள் என்பதை எத்துணை அழகாகவும் நுணுக்கமாகவும் வருணிக்கிறார் புலவர் என்று பாருங்கள்.

	ஐம்பால் என்ற தலையலங்காரத்தில், தலைமுடி ஐந்துவகையாகப் பகுக்கப்படுகிறது. பின்னர் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக 
முடியப்படுகிறது. இப்பகுதிகள் குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்று அழைக்கப்படும். குழல் வகுத்துச் சுருட்டி முடிக்கப்படுவது. 
அளகம் வகுத்துத் தொங்கவிடப்படுவது. கொண்டை சுழற்றித் தொகுக்கப்படுவது. பனிச்சையும் துஞ்சையும் விரித்துப் பின்னலாக முடிக்கப்படுவது 
என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார் (சீவக. 2436 உரை). கொண்டை, சுருள், குழல், பனிச்சை, வார்மயிர்'' எனத் திவாகர நிகண்டு (12:71) ஐம்பாலை 
வகைப்படுத்துகிறது. பிங்கல நிகண்டு முடி, குழல், தொங்கல், பனிச்சை, சுருள் (5:345) எனச் சுட்டுகிறது. 
(நன்றி - முனைவர் ம.பெ.சீனிவாசன், தினமணி – தமிழ்மணி - : 24 June 2012)

3. குறிப்புச் செய்திகள்

	இவ்வாறு, விரிவாக விளக்காமல், புலவர் குறிப்பாகக் கூறும் செய்திகளும் உள்ளன. 

	வழையொடு,
	வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில்
	படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய

	வழை என்பது சுரபுன்னை மரம். இதன் பூ  Long-leaved two-sepalled gamboge எனப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் 
Ochrocarpus longifolius. வழையும், வாழையும் உயர்ந்து வளர்ந்த தாழ்வான வழுக்குநிலத்தில் ஒரு களிறு வழுக்கி விழுந்துவிட்டது. 
வழுக்கிப் பள்ளத்துக்குள் விழுந்துவிட்ட யானை என்னாமல், வழையும் வாழையும் ஏன் கூறப்படுகின்றன? ஓங்கி வளர்ந்த வாழைமரத்தின் 
பழத்தை உண்ணக் களிறு உயரே பார்த்துத் துதிக்கையைத் தூக்கவேண்டும். அப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அடியெடுத்து வைத்து முன்னே 
செல்கிறது. மேலேயே பார்த்துக்கொண்டு அடியெடுத்து வைப்பதால், கீழே உள்ள சகதியையும் அதை அடுத்துள்ள பள்ளத்தையும் களிறு 
கவனிக்கவில்லை. சேறு வழுக்கிவிட, யானை பள்ளத்தில் விழுந்துவிட்டது. வாழை சரி, வழை எதற்கு? வழுக்கி விழுந்த களிறு தானாகவே 
மேலே ஏறி வரமுடியாது. பொதுவாக இதுபோல் பள்ளத்துக்குள் விழுந்த யானைகள் சுற்றியிருக்கும் மண்ணைக் குத்தி இடித்து, குழியில் சரிவான 
பாதை அமைத்து வெளியே வந்துவிடும். ஆனால், இதுவோ தாழ் கண் அசும்பு. அசும்பு எனப்படுவது நீர்ப்பொசிவு உள்ள மண். எப்பொழுதும் ஈரமாக 
இருக்கும் தாழ்ந்த இடத்தில் யானையால் காலூன்றிக்கூட நிற்கமுடியாது அல்லவா? எனவே, பள்ளத்தில் படிக்கட்டுகள் அமைக்க மரக்கிளைகள் 
தேவை. எனவேதான் அங்கே வழை உயர்ந்து நிற்கிறது என்கிறார் புலவர். அதுமட்டுமல்ல, நாகப்பூ எனப்படும் சுரபுன்னை மலர் வயிறு 
செரிமானத்துக்கு உதவும் மருத்துவக் குணம் கொண்டது என்று கூறப்படுகிறது. ஆசைப்பட்டு அதிகமான வாழைப்பழங்களைத் தின்ற யானை, 
பின்னர் வழைப்பூக்களையும் சாப்பிட்டுச் செல்லுமோ?

			

தலைவியின் விருப்பம் தரம்தாழ்ந்ததா?

	தமிழ்ப் பெண்கள் தாம் விரும்பும் ஆணிடம் தம் காதலை வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். பானையினின்றும் பொசியும் நீர் போல 
அவர்களின் விருப்பம் சிறிதளவே வெளிப்படும். இது பண்டைய தமிழ் மரபு. ஏறக்குறைய 50 ஆண்டுகட்கு முன்பு வரை அப்படித்தான் இருந்தது – 
திரைப்படம் நாடகம் உட்பட. இப்போதோ ஒலிபெருக்கி வைத்து ஊர்முழுக்க ஓடிச் சொல்வதே நாகரிகம். 

	இப்பாடலில் வரும் தலைவி, ‘இந்த இருட்டெல்லாம் எனக்கு ஒரு பொருட்டல்ல, வழிகாட்டுவோர் மட்டும் இருந்தால், இப்போதே அவர் 
ஊருக்குச் சென்றுவிடுவேன்” என்று தன் தோழியிடம் கூறுகிறாள். இது தலைவனுக்குக் கேட்கவேண்டும் என்பது அவள் நோக்கம்.
 இவ்வாறு ஒரு பாடல் அமைவது நம் மரபா? அகத்திணைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் இதனையும் சிந்தித்துப் பார்த்திருக்கிறார். 
இந்த மாதிரிக் கூற்றை அவர் அறக்கழிவுடையன என்று வகைப்படுத்தியிருக்கிறார்.

	அறக்கழிவுடையன பொருட்பயம்படவரின்
	வழக்கென வழங்கலும் பழித்தன்று என்ப -. தொல். பொருளியல் - 24

	உலகவழக்கத்திற்குப் பொருத்தமில்லாத கூற்றுக்கள் அகப்பொருட்குப் பயமுடைத்தாக வருமாயின், அவற்றை வழக்கென்றே 
புலனெறி வழக்கஞ் செய்தலும் பழியுடைத்தன்றென்று கூறுவாராசிரியர் என்பர் நச்சினார்க்கினியர். 

	‘மறத்திற்கும் அஃதே துணை’ என்ற வள்ளுவர் போல, இந்த அறக்கழிவு, திருமணத்தை வேண்டியே கூறப்பட்டதால் இது ஏற்புடையது 
என்று நச்சினார்க்கினியர் இதற்கு விளக்கமும் அளித்திருக்கிறார். 

	(எனவே, நம் பெரியதிரை, சின்னத்திரை கதாநாயகிகள் செய்வதுவும் சரிதானோ?!!!!!)