அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 32

பாடல்  32. குறிஞ்சித் திணை    பாடியவர் - நல்வெள்ளியார்

துறை - (1) பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது.
	(2) தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉமாம்.
.
  மரபு மூலம் - அண்கணாளனை நகுகம் யாமே 

	நெருநல் லெல்லை யேனற் றோன்றித்
	திருமணி யொளிர்வரும் பூணன் வந்து
	புரவலன் போலுந் தோற்ற முறழ்கொள
	யிரவன் மாக்களின் பணிமொழி பயிற்றிச்
5	சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண்
	குளிர்கொள் தட்டை மதனில புடையாச்
	சூரர மகளிரின் நின்ற நீமற்
	றியாரை யோவெம் மணங்கியோ யுண்கெனச்
	சிறுபுறங் கவையின னாக வதற்கொண்
10	டிகுபெயல் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென்
	னுள்ளவ னறித லஞ்சி யுள்ளில்
	கடிய கூறிக் கைபிணி விடாஅ
	வெரூஉமான் பிணையி னொரீஇ நின்ற
	என்னுரத் தகைமையின் பெயர்த்துப்பிறி தென்வயிற்
15	சொல்ல வல்லிற்று மிலனே யல்லாந்
	தினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோ னின்றுந்
	தோலாவா றில்லை தோழிநாஞ் சென்மோ
	சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே
	மாசின் றாதலு மறியா னேசற்
20	றென்குறைப் புறனிலை முயலும
	மண்க ணாளனை நகுகம் யாமே


 சொற்பிரிப்பு மூலம்

	நெருநல் எல்லை ஏனல் தோன்றித்
	திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து
	புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
	இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றிச்
5	சிறுதினைப் படு கிளி கடீஇயர் பன் மாண்
	குளிர் கொள் தட்டை மதன் இல புடையாச்
	சூர் அரமகளிரின் நின்ற நீ மற்று
	யாரையோ எம் அணங்கியோய் உண்கு எனச்
	சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு
10	இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என்
	உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல்
	கடிய கூறிக் கைபிணி விடாஅ
	வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற
	என் உரத் தகைமையின் பெயர்த்துப் பிறிது என்வயின்
15	சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து
	இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
	தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ
	சாய் இறைப் பணைத் தோள் கிழமை தனக்கே
	மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்று
20	என் குறைப் புறனிலை முயலும்
	அண்கணாளனை நகுகம் யாமே


அருஞ்சொற் பொருள்:

நெருநல் = நேற்று; எல்லை = பகல்; ஏனல் = தினைப்புனம்; குளிர், தட்டை = கிளி விரட்டும் கருவிகள்; 
மதன் = வலிமை; சிறுபுறம் = பிடரி, முதுகு; கவையினன் = அனைத்துக்கொண்டனன்; இகு = கீழிறங்கு; 
ஞெகிழ்பு = நெகிழ்ந்து; அஞர் = வருத்தம்; ஒரீஇ = விலகி; அல்லாந்து = அலமந்து, துன்பமுற்று; 
தோலாவாறு < தோலா ஆறு = தோற்காது இருத்தல்; சாய் இறை = பக்கவாட்டில் தாழும் இறப்பு; 
பணை = பெரிய; கிழமை = உரிமை; ஏசற்று = வருத்தமுற்று; குறை = தேவை; புறனிலை = பின்னிற்றல், 
தாழ்ந்து நிற்றல்; அண் கணாளன் < கண் அணாளன் = கண் அண்மையில் இருப்பவன். (அண்மை = சமீபம்).

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	தினைப்புனத்தில் காவல்காத்துக்கொண்டிருக்கும் தலைவியைத் தலைவன் கண்டதும் 
காதல்கொள்கிறான். தலைவிக்கும் அதே உணர்வுதான். ஆனால் அவள் அதை வெளிக்காட்டாமல் இருக்கிறாள். 
இந் நிலையில் தலைவன் தன் விருப்பத்தை அவளிடம் உரைத்து அவள் கழுத்தைத் தழுவுகிறான். அவளோ, 
தன் விருப்பத்தை வெளிக்காட்டாமல், மனதைக் கல்லாக்கிக்கொண்டு, அவன் கையை உதறிவிட்டு வெருண்டு 
விலகிக் கடிந்து கூறுகிறாள். தலைவன் வேறொன்றும் சொல்லாமல் மனம் நொந்து திரும்பிச் செல்கிறான்.

	இது முதல்நாள் நடந்தது. மறுநாள் காலையில் தலைவி தோழியருடன் காவலுக்குப் புறப்பட்டுச் 
செல்கிறாள். செல்கிறவழியில் தனக்குத்தானே சிரித்துக்கொண்டே இருக்கிறாள். தோழியர் காரணம் கேட்கிறார்கள்.
இவளோ சிரித்துக்கொண்டே இருக்கிறாள். “இதோ பார், சிரித்துவிட்டுச் சொல்லு, இல்லையென்றால் 
சொல்லிவிட்டுச் சிரி” என்று ஒரு நிழலில் நின்றுவிடுகிறார்கள். அப்போது நடந்ததைக் கூறுகிறாள் தலைவி. 
ஒருவேளை தலைவிக்குக் காதலில் உடன்பாடு இல்லையோ என்று தோழியர் நினைத்துவிடுவார்களோ என்று 
எண்ணிய தலைவி, “பாவம், கழுத்தைக்கூடத் தொடமுடியாமல் போய்விட்டான் - இந்தப் பெரிய தோள்களே 
அவனுக்குச் சொந்தம்தான் என்பதை அறியாமல்!, எனக்கு என்ன தேவையோ, அதை என்னிடமே பணிந்து 
கேட்கிறானே! இன்றும் வந்து தோற்றுத்தான் போகப்போகிறான். அவனை எண்ணிச் சிரித்துக்கொண்டே 
செல்வோம் வாருங்கள்” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாற்போல் அமைகிறது இப் பாடல்.

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	நெருநல் எல்லை ஏனல் தோன்றித்
	திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து
	புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
	இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றிச்
5	சிறுதினைப் படு கிளி கடீஇயர் பன் மாண்
	குளிர் கொள் தட்டை மதன் இல புடையாச்
	சூர் அரமகளிரின் நின்ற நீ மற்று
	யாரையோ எம் அணங்கியோய் உண்கு எனச்
	சிறுபுறம் கவையினன் ஆக 

	நேற்றுப் பகலில் தினைப்புனத்தில் தோன்றி,
	அழகிய மணிகள் ஒளிரும் அணிகளைப் பூண்டவனாய் வந்து,
	அரசன் போன்ற (தனது)தோற்றத்துக்கு மாறாக
	இரத்தல் செய்யும் மக்களைப் போல பணிவான சொற்களைப் பலமுறை கூறி,
5	“சிறுதினையில் படியும் கிளிகளைக் விரட்டுவதற்கு, பலவிதமான உயர்ந்த
	குளிருடன் கூடிய தட்டைகளை வலுவில்லாமல் அடித்துக்கொண்டு,
	சூர்கொண்ட தெய்வமகளிர் போல நிற்கின்ற நீ
	யாரோ, என்னை வருத்துகின்றவளே, (உன்னை)விழுங்கட்டுமா?” என்று
	என் கழுத்தை வளைத்துப் பிடித்தவனாக,

	ஒருவரைப் பற்றி நாம் பேசும்போது, அவரைப் பற்றிய உயர்ந்த பண்புகளை எடுத்துக் கூறினால், 
அவரை நாம் மதிக்கிறோம் அல்லது அவரை நமக்குப் பிடித்திருக்கிறது என்று பொருள். இங்கும் தலைவி, 
தான் கண்ட ஓர் இளைஞனைப் பற்றிக் கூறும்போது திருமணி ஒளிர்வரும் பூணன், புரவலன் போலும் 
தோற்றம் என்று கூறுவதைப் பார்க்கிறோம். ஆண்கள் ஒரு புதிய நபரைப் பார்க்கும்போது முதலில் அவர் யார் 
என்னும் நோக்கில் அவர் முகத்தைப் பார்ப்பர். ஆனால் பெண்கள் பெரும்பாலும் முதலில் அவர் அணிந்திருக்கும் 
உடை, அணிகலன்கள் முதலியவற்றையே பார்ப்பர். 

“ஒரு மெரூன் கலர் சேலையில, கத்தரிப்பூ கலர் பார்டர், அங்கங்க புட்டா வச்சு – கட்டிட்டு வந்திருந்தாளே 
ஒருத்தி, அவளப் பாத்தியா?”

“யாரு, அந்த வக்கப்பிரி செயினும், பவளங்கோத்த தொங்கட்டானும் போட்டிருந்தாளே அவளா?”

	இப்படித்தான் போகும் அவர்களின் உரையாடல். இங்கும் முதலில் ஓர் இளைஞனைப் பார்க்கும் 
தலைவியை முதலில் கவர்ந்தது அவன் பூண்டிருந்த அணிகலன்கள்தான். “அப்படியே பளபள’ன்னு ஜொலிக்கிற 
மாதிரி அள்ளிப்போட்டுகிட்டு வந்திருந்தாண்டி அவன்” என்கிறாள் அவள் (திரு மணி ஒளிர்வரும் பூணன்).

	அப்புறம்தான் அவன் முகத்தைப் பார்த்திருக்கிறாள் அவள். “சும்மா ராஜா கணக்கா ஜம்’னு வந்து 
நின்னாண்டி” என்கிறாள் (புரவலன் போலும் தோற்றம்).  புத்திசாலி தோழி அப்போதே புரிந்திருப்பாள், 
“அம்மா கவுந்துட்டா”.

	தன் மனதுக்குப் பிடித்தவன் தன்னிடம் குழைந்து பேசுவது பெண்களுக்குப் பிடித்துப்போகிறது – 
இப்பேர்ப்பட்ட அழகன் என் அழகில் மயங்கியிருக்கிறான் என்று அவர்கள் தம் அழகில் பெருமிதம் கொள்கிறார்கள். 
இவளும் அவ்வாறுதான் – இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி  - என்று சொல்லிப் 
பெருமைப்பட்டுக்கொள்கிறாள்.

	அவனும் வார்த்தையாலேயே அவளை வளைத்துப்போடுகிறான். “இத்துணை அருமையான கருவிகளை 
வைத்துக்கொண்டு (பன் மாண் குளிர் கொள் தட்டை), இப்படி மென்மையாகத் தட்டினால் (மதன் இல புடையா) 
கிளி எப்படிப் பயந்து ஓடும்? என்பதுபோல் அவளது கருவிகளின் சிறப்பையும், அவள் கைகளின் மென்மையையையும் 
பாராட்டுகிறான். அதன்பின், அவளது முழு அழகையும் போற்றும் வண்ணம், “தேவலோக மங்கைபோல் இருக்கிறாய் 
(அரமகளிரின்). இருந்தாலும் வருத்துகின்ற வான்மங்கையாய் இருக்கிறாயே (சூர்). உன் அழகு என்னைப் பாடாய்ப் 
படுத்துகிறது (எம் அணங்கியோய்). “நீ யாரோ?” (நீ மற்று யாரையோ) என்று வினவுகிறான். திடீரென்று ஒரு 
பெண்ணிடம் சென்று, “உன் பேர் என்ன?” என்று கேட்டால், ஒரு முறைப்புத்தான் பதிலாக வரும். கண்ணாலே கண்ட 
கணமே, உயிர்க் காதல் கொண்ட மனத்தினராய், நெடுநாள் பேசமுடியாமல் இருந்து, ஒருநாள் தனிமை 
கிடைக்கும்போது முதலில் அவன் கேட்பான், “ஒம் பேரு என்ன?”. இதை அவள் எதிர்பார்ப்பாள். அவன் அப்படிக் 
கேட்காவிட்டால்தான் ஏமாந்துபோவாள்.

	“யாரென்று கேட்காததேனோ, யாரானால் என்னென்று தானோ?” – இந்த அருமையான பார்த்திபன் கனவு 
திரைப்படப் பாடல் வரிக்கு இப்போது பொருள் தெரிகிறதா?

	அப்புறம் “உண்கு” என்கிறான். ‘நின்னை நுகர்வேன்’ என்று அவன் கூறுவதாக உரைகள் கூறுகின்றன. 
இது கொஞ்சம் அதிகம். இப்படி அவன் சொல்லியிருப்பானா?. அடுத்துவரும் சொற்களைக் கவனியுங்கள். 

	“உண்கு எனச் சிறுபுறம் கவையினனாக” என்கிறார் புலவர். சிறுபுறம் என்பது முதுகு. பிடரி என்றும் 
கொள்ளலாம் – கழுத்தின் பின்பக்கம். அவன் கொஞ்சம் துணிச்சல் உள்ளவன். அவளது எதிர்பார்வையிலேயே 
அவளின் சம்மதத்தைத் தெரிந்துகொள்கிறான். அதனால், தன் வலது கையை நீட்டி, அவளது கழுத்துக்குப் பின்புறம் 
மடக்கி வைத்து வளைத்து, அவளது முகத்தைச் சற்றுத் தன் பக்கம் இழுத்து அருகில் கொணர்ந்து, அவளையே 
உற்றுப்பார்த்து, “மாம்பழக் கன்னம் - அப்படியே கடிச்சுத் திங்கலாம்போல இருக்கு” என்கிறான்.

			அதன் கொண்டு
10	இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என்
	உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல்
	கடிய கூறிக் கைபிணி விடாஅ
	வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற
	என் உரத் தகைமையின் பெயர்த்துப் பிறிது என்வயின்
15	சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து
	இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
	தோலாவாறு இல்லை தோழி,

	அதன் காரணமாகக்
10	கொட்டும் மழை பெய்த மண்ணைப்போல நெகிழ்ந்து வருந்திய என்
	உள்ளத்தை அவன் அறிதலை அஞ்சி, (என்)உள்ளத்தில் இல்லாத
	கடுஞ்சொற்களைக் கூறி (அவனது) கையின் பிணைப்பினை விடுவித்து
	வெருளும் பெண்மானைப் போல் விலகி நின்ற
	என் உறுதியின் தன்மையினால் (அவன்)தன்னிலைக்கு வந்து, வேறு என்னிடம்
15	சொல்ல வலுவுள்ள சொற்கள் எதுவும் இல்லாதவனாய், அலமந்து
	(தன்)கூட்டத்திலிருந்து நீங்கும் களிற்றைப் போல் சென்றவன், இன்றைக்கும்
	தோற்காதிருத்தல் இல்லை, தோழியே!

	‘சட சட’-வென்று மழை ஓங்கி நெடுநேரம் அடித்தால், இறுகிக்கிடந்த மண்ணும் இளகிப்போய்விடும். 
பெயல் என்றால் மழை. அதென்ன இகு பெயல்? இகுதல் என்பது தாழ்தல், இறங்குதல் என்ற பொருள் தரும். 
சில நாட்களில் மழை மேகங்கள் முதலில் ஒன்றுகூடும். சேர்ந்த மேகத்தின் ஒருபகுதி அப்படியே ஒரு பெரிய தூண் 
போலக் கீழிறங்கும். தொலைதூரத்தில் இதனைப் பார்க்கலாம். கொஞ்சம் தள்ளி இருப்பவர்கள், “டே, மழ எறங்கிருச்சு, 
சீக்கிரம் கெளம்பு” என்பார்கள். அப்படி இறங்கி அடிக்கும் மழை பலத்ததாக இருக்கும். அப்படிப் பலத்த மழையில் 
மண்ணெல்லாம் நெகிழ்ந்து சேறாய் ஆகிவிடும். அப்படி ஆகிவிட்டதாம் தலைவியின் உள்ளம். இறுகிய மண் 
இளகுவதன் காரணம் என்ன? அது ஈரத்தை உள்வாங்கிக்கொள்கிறது. பாறையில் விழுந்த மழை சிதறிப்போய் 
வெளியில் விழும். எனவே தலைவியின் உள்ளம் தலைவனின் காதலை உள்வாங்கிக்கொண்டதால் இளகிவிடுகிறது. 
அப்படி ஞெகிழ்ந்த உள்ளம் அஞர் உற்றது என்கிறாள் தலைவி. காதலால் நெகிழ்ந்த உள்ளம் மகிழ்கொள்ள வேண்டும் 
அல்லவா? உள்ளம் ஏன் அஞர் உறுகிறது? அஞர் என்பது நடுக்கம் - shivering. 

	நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே – குறுந் 354/6
	நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு – கலி 110/15
	நடுங்கு அஞர் தீர முயங்கி – அகம் 62/11

	என்ற அடிகள் இதனை உணர்த்தும். என்னதான் அவன் கண்ணுக்கு இனியவன் என்றாலும், அவன் 
புதியவன் – இவளைப் பொறுத்தமட்டிலும் அவன் முதல்வன். முதன் முதலில் ஓர் ஆடவன் கை அவள் மேல் 
பட்டவுடன் அவள் உடல் அவளை அறியாமல் நடுங்குகிறது – புதிய தொடுகையால் (ஸ்பரிசம்). அவன் புதியவன் – 
அவன் நல்லவனா, நம்பிக்கைக்கு உரியவனா என்று தெரியாத உள்ளம் நடுங்குகிறது. இந்த மகிழ்ச்சி கலந்த அச்ச 
உணர்வினால் ஏற்பட்ட பாதிப்பை அவன் கண்டுவிடுவானோ என்று அஞ்சி அவள் தன் உள்ளத்து உண்மையான 
உணர்வுகளை மறைத்து, வெளிக்குக் கோபம் கொண்டவளைப் போல் “அடச் சீ” என்று அவன் கையைத் 
தட்டிவிடுகிறாள் (உள் இல் கடிய கூறிக் கைபிணி விடாஅ). வெருண்ட பெண்மானைப் போல மிரண்டு 
ஒதுங்குகிறாள் (வெரூஉ மான் பிணையின் ஒரீஇ). 

			

	அவள் வாயிலிருந்தும் தெறித்த வன் சொல் (கடிய கூறி), அவன் கையைத் தட்டிவிட்ட கடுமை 
(கைபிணி விடாஅ), தீயை மிதித்ததுபோல் திடுக்கிட்டுத் திரும்பிய வேகம் (பிணையின் ஒரீஇ) ஆகியவற்றை என் 
உரத் தகைமை என்கிறாள் தலைவி. இதைப் பார்த்த அவன் நிலைகுலைந்துவிட்டான் (பெயர்த்து). இனி அவளிடம் 
சொல்ல வலிமையுடைய ஒரு சொல்கூட அவனிடம் இல்லை (வல்லிற்றும் இலன்). இந்தச் சூழ்நிலையில் 
வலிமையுடைய சொல் என்றால் என்ன? செய்வதையும் செய்துவிட்டு, “இப்ப நான் என்னா செஞ்சுட்டேன்’னு 
இந்தப் பதறு பதற்’ரே, இது என்ன ஒலகத்துல நடக்காததா?” என்று அவன் மிஞ்சலாம். அதுதான் வலிய சொல். 
இப்படிச் சொல்ல அந்த நற்குணத் தலைவனுக்கு மனம் வராது. அதிகமாய்ப் போனால் மெலிவான சொற்களைச் 
சொல்லலாம். “தெரியாம நடந்துருச்சு, கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன்” என்று கெஞ்சலாம். அதற்கு அவனது 
ஆண்மை இடந்தராது. 

	கையில் இருக்கும் காசெல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில், யாராவது ஒருவர் கடன் கேட்டு வந்தால், 
“ஐயோ, வள்ளுசா தீந்துபோச்சே” என்பர். அப்படி, பேசுவதற்கு ஒரு சொல்லும் இல்லாமல் திகைத்துப்போய் அவன் 
இருக்கும் நிலையையே தலைவி சொல்ல வல்லிற்றும் இலன் என்று கூறுவதாகவும் கொள்ளலாம்.

	எனவே அவன் அல்லாந்து இடம்பெயர்கிறான். அவ்வாறு சென்றவனை, இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் 
என்கிறாள் தலைவி. காட்டு யானைகள் எப்போதும் கூட்டமாகவே வாழும். அவற்றுக்குள் ஏதேனும் பிளவு 
ஏற்படும்போது, மோதல் ஏற்பட்டு, அதில் தோற்கும் யானை கூட்டத்தைவிட்டு ஒதுக்கப்படும். அதனை 
இனம் பிரி ஒருத்தல் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. பேச்சுவழக்கில் ஓரி என்பர். 

	இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் – மலை 297
	ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் – கலி 21/2

	என்ற வழக்குகளை ஒப்பு நோக்குக. இங்கும், தன் காதல் முயற்சியில் தோற்றுச் செல்லும் தலைவனைத் 
தலைவி இனம் தீர் களிறு என்பது பொருத்தம்தானே!

			

	அன்று சென்றவன் இன்றும் வந்து அதே போல் ஏதாவது செய்து இன்றும் தோற்றுத் திரும்பப்போகிறான் 
என்று தலைவி ஏளனமாகக் கூறுவதுபோல் கூறுகிறாள். இன்றும் தோலாவாறு இல்லை என்கிறாள் அவள். இன்றும் 
கட்டாயம் தோற்பது உண்டு என்னாமல், தோற்காமல் இருப்பது இல்லை என இரண்டு எதிர்மறைச் சொற்களைக் 
கொண்டு கூறுகிறாள் தலைவி.

	இன்று அவன் தோற்பான் - என்பதன் எதிர்மறை என்ன?

	இன்று அவன் வெல்வான் - என்பது சரி ஆகாது. சில போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி 
முடியலாம் (draw). எனவே இதற்குச் சரியான விடை- இன்று அவன் தோற்கமாட்டான். 

	இப்போது - இன்று அவன் தோற்கமாட்டான் – என்பதற்கு எதிர்மறை என்ன? ஏற்கனவே சொன்னது போல 
இன்று அவன் வெல்வான் என்பது சரி ஆகாது. எனவே, இதற்குச் சரியான விடை – இன்று அவன் தோற்கமாட்டான் 
என்பது இல்லை. இது - இன்று அவன் தோற்பான் – என்பதற்குச் சமமானது. Double negatives make one positive. 
இதனைப் பாடல் 29-இலும் கண்டோம். நேர்முறைக் கூற்றாகச் சொல்வதற்கும், அதனையே இரண்டு எதிர்மறைக் 
கூற்றுகளாகச் சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டையும் பாடல் 29-இல் கண்டோம். தமிழின் பெருமையைப் பற்றிக் 
கூறும் Dr.George Hart கூறுகிறார், 

	“No one who reads Sangam literature can be unimpressed by the extraordinary richness of the language
and culture ..“. (On Jun 3, 2013, at 1:16 PM, George Hart wrote: Re:[ctamil]). 

	இதனையே அவர், 

	“ Every one who reads Sangam literature can be impressed by the extraordinary richness of the language and culture” 

	என்று சொல்லியிருக்கலாம். அதைக் காட்டிலும் அதனையே இரண்டு எதிர்மறைக் கூற்றுகளாக ஆக்கும்போது 
கூற்றின் உண்மையும், உறுதிப்பாடும் இரண்டுமடங்காகிறது என்பதையே இது காட்டுகிறது. தெரியாமலா (பிற்கால) 
ஔவையார் சொன்னார், “ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்”.  

	வேறு வழியில் சொன்னால் – காலையில் கண்டிப்பாக வா – என்று சொல்லிவிட்டு, அதனை உறுதிப்படுத்த – 
வராமல் இருந்திராதே என்றும் கூறுவோம். எனவே, தோலாவாறு இல்லை என்று மிக உறுதியாகச் சொல்கிறாள் தலைவி. 

			நாம் சென்மோ
	சாய் இறைப் பணைத் தோள் கிழமை தனக்கே
	மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்று
20	என் குறைப் புறனிலை முயலும்
	அண்கணாளனை நகுகம் யாமே
	
	நாம் செல்வோமாக,
	வளைந்து இறங்கும் பெரிய (என்)தோள்களின் உரிமை தனக்கே
	களங்கமின்றி உடையது என்பதையும் அறியான், வருத்தமுற்று
	என் தேவையை (என்னிடமே) இரந்து நிற்க முயலும்
	(என்)கண் முன்னே வந்து நிற்பவனை நகையாடுவோம் யாம்.

	கழுத்தினின்றும் இரண்டு பக்கமும் இறங்கும் அமைப்பே இறை எனப்படுகிறது. ஒரு குடிசையின் இரண்டு 
பக்கங்களிலும் இறங்கும் கூரையின் அமைப்பும் இறைதான். அவ்வாறு குறுகலான கூரைகளைக் கொண்ட குடிசையைக் 
குறி இறைக் குரம்பை (பெரும்-265) என்பர். ஒரு மனிதனின் கழுத்திலிருந்து இரண்டு பக்கங்களிலும் இறங்கும் கைகளின் 
அமைப்பையும் இறை என்னும் நம் சங்க இலக்கியங்கள். சாய் இறை என்பது வளைந்த இறை எனப்படுகிறது. ஆனால் 
வணங்கு இறை என்பதுவும் வளைந்த இறை எனப்படுவதால், சாய் என்பதற்கு வேறு பொருள் பார்க்கவேண்டும். சாய் 
என்பதற்கு வளைந்த என்ற பொருளோடு, மெலிகின்ற – grow thin, emaciated என்ற பொருளும் உண்டு. பணைத் 
தோள்களாகப் பெருத்து இருக்கும் புயங்கள் அதே அளவில் கீழிறங்கினால் எப்படி இருக்கும்? பார்க்கச் சகிக்காது! எனவே 
பருத்த புயங்கள் கீழே செல்லச்செல்ல மெலிந்துகொண்டே செல்கின்றன என்பதுவே சாய் இறை பணைத்தோள் என்பதற்குச் 
சரியான பொருளாக இருக்கும் எனக் கொள்ளலாம்.

			

			

	கிழமை என்பது உரிமை. ஞாயிறுக்கு உரித்தான நாள் ஞாயிற்றுக் கிழமை. எனவேதான் பணைத்தோள் கிழமை 
தனக்கே (அவனுக்கே) என்கிறாள். இந்தத் தோள்களை வேறு எந்த ஆடவனும் தொட்டால் அவை களங்கப்பட்டுவிடும். 
ஆனால் அவை இவனுக்குரியவைதானே. எனவே அவன் தொட்டதினால் அவை களங்கமடைவதில்லை என்ற பொருளில் 
மாசு இன்றி ஆதல் என்கிறாள். எனக்கு அவன் முயக்கம் தேவை. அது எனக்குக் கிடைக்காவிடில் அது என் குறை. ஆனால் 
அதை அடைய அவன் என்னையே இரந்துநிற்கிறானே என்ற பொருளில் என் குறைப் புறனிலை முயலும் என்கிறாள் அவள். 
அந்த எண்ணம்தான் அவளுக்குச் சிரிப்பு மூட்டுகிறது. எனவே நகுகம் யாமே என்கிறாள். முந்தைய நாள் அவன் 
பார்த்துவிட்டுச் சென்ற பின்னர், அவனது உருவம் அவள் கண்ணுக்குளேயே இருக்கிறது என்கிறாள். அவன் கண்களுக்கு மிக 
அருகில் இருக்கிறான் – கண் அண் ஆளன் > அண் கண் ஆளன் > அண்கணாளன்– என்கிறாள். கண்ணாளன் என்பது 
அன்பையும் நெருக்கத்தையும் குறிக்கும் சொல். அவன் எனக்கு மிக அண்மையில் (என் நெஞ்சுக்குள்ளே) இருக்கிறான் 
என்பதனையே அண் கண்ணாளன் > அண்கணாளன் என்று அவள் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.