அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
ஏதேனும் ஒரு பாடல் எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 5

பாடல்  5. பாலைத் திணை    பாடியவர் - பாலை பாடிய பெருங்கடுங்கோ

துறை - பொருள்வயின் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.

  மரபு மூலம் : பாவை மாய்த்த பனி நீர் நோக்கம்

	அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள்
	விளிநிலை கொள்ளா டமியண் மென்மெல
	நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
	குறுக வந்துதற் கூரெயிறு தோன்ற
5	வறிதகத் தெழுந்த வாயன் முறுவலட்
	கண்ணிய துணரா வளவை யொண்ணுதல்
	வினைதலைப் படுதற் செல்லா நினைவுடன்
	முளிந்த வோமை முதையலங் காட்டுப்
	பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
10	மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப
	வுதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன்
	மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப்
	பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்
	விரனுதி சிதைக்கு நிறைநிலை யதர
15	பரன்முரம் பாகிய பயமிற் கான
	மிறப்ப வெண்ணுதி ராயி னறத்தா
	றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
	யன்ன வாக வென்னுநட் போல
	முன்னங் காட்டி முகத்தி னுரையா
20	வோவச் செய்தியி னொன்றுநினைந் தொற்றிப்
	பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ
	டாகத் தொடுக்கிய புதல்வற் புன்றலைத்
	தூநீர் பயந்த துணையமை பிணையன்
	மோயின ளுயிர்த்த காலை மாமலர்
25	மணியுரு விழந்த வணியழி தோற்றங்
	கண்டே கடிந்தனஞ் செலவே யொண்டொடி
	யுழைய மாகவு மினைவோட்
	பிழையலள் மாதோ பிரிதுநா மெனினே


 சொற்பிரிப்பு மூலம்

	அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்
	விளி நிலை கொள்ளாள் தமியள் மென்மெல
	நலம் மிகு சேவடி நிலம் வடு கொளாஅ
	குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற
5	வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள்
	கண்ணியது உணரா அளவை ஒள்நுதல்
	வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
	முளிந்த ஓமை முதையல் அம் காட்டு
	பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி
10	மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப
	உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்
	மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
	பாத்தி அன்ன குடுமி கூர்ம் கல்
	விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர
15	பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம்
	இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு
	அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி
	அன்ன ஆக என்னுநள் போல
	முன்னம் காட்டி முகத்தின் உரையா
20	ஓவ செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி
	பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு
	ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை
	தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
	மோயினள் உயிர்த்த காலை மா மலர்
25	மணி உரு இழந்த அணி அழி தோற்றம்
	கண்டே கடிந்தனம் செலவே ஒண்டொடி
	உழையம் ஆகவும் இனைவோள்
	பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே


அடிநேர் உரை 
	
	{பொருள்தேட வெளியூர் செல்லலாம் எனத் தலைவன் எண்ணுகிறான். இதை உணர்ந்த தலைவி அவன்மீது கோபம்கொள்கிறாள். 
	தனது பிரிவை அவள் தாங்கமாட்டாள் என்று எண்ணிய தலைவன் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறான். இந் நிலையில் அவன், 
	தான் செல்லவில்லை என்பதைச் சொல்ல நினைத்து அவளை அழைக்கிறான்.}
	
	(நாம்)கனிவுடன் இருக்கும் நிலையை ஏற்காமல், பூசல் கொண்ட முகத்தவளாய்,
	(அன்புடன்)விளிக்கும் நிலையை மனதில் கொள்ளாளாய், தனித்தவளாய், மெதுவாக
	அழகு மிக்க சிவந்த அடிகளை நிலத்தில் அழுந்தத் தடம் பதித்து,
	மிக அருகில் வந்து, தன் கூரிய பற்கள் தோன்ற
5      	சிறிதே தன் உள்ளத்தில் எழுந்த பொய்மையான முறுவலை உடையவள்,
	(நாம்)எண்ணியதை முழுதும் உணர்வதற்கு முன்னரேயே, ஒள்நுதல் தலைவி,
	(நாம்) பொருள்தேடச் செல்லுதலை ஏற்றுக்கொள்ளா எண்ணத்துடன் -
	உலர்ந்துபோன ஓமை மரங்களுள்ள பழமையான (அழகிய) காட்டில்
	பளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்
10    	முகடுகளில் இருக்கும் பாறையில், (சிறுவரின்)பல கோலிக்குண்டுகள் போன்று 
	உதிர்ந்து கிடக்கும் - ஞாயிற்றின் கதிர்கள் காயும் - உச்சிமலைச் சரிவுகளில்
	(சாணையால்) தேய்க்கப்பட்டது போல் மழுங்கிய நுனைகளை வெளியே காட்டி,
	பாத்திகட்டியதைப் போல் இருக்கும் குடுமியை உடைய கூர்மையான கற்கள்
	விரல்களின் நுனியைச் சிதைக்கும் நிரைத்த நிலையிலுள்ள வழிகள் உடைய
15    	பரற்கற்களைக் கொண்ட மேட்டுநிலமாகிய பயனற்ற காட்டுநிலத்துவழியில்
	செல்ல எண்ணுவீராயின், அது அறத்தின்பாற்பட்டது
	அன்று என மொழிந்த பழமையான முதுமொழி
	பழம்பேச்சாகவே ஆக என்று சொல்பவள் போல
	(தன்)உட்கிடக்கையைக் காட்டி, முகக்குறிப்பால் உரைத்து
20     	ஓவியத்தின் நிலை போல ஒன்றையே நினைத்தவளாய் (என்னை)உரசிக்கொண்டு
	கண்ணின் கருவிழிகள் மறைத்த, துளிர்த்த நீருடனான பார்வையோடு
	(தன்) மார்பில் ஒடுக்கிய தன் புதல்வனின் சிறிய தலையிலுள்ள
	தூய நீர் தந்த துணையோடு அமைந்த (இரட்டை வடமாகப்)பின்னிய மாலையை   
	மோந்து பெருமூச்சுவிட்ட நேரத்தில், (அதன் வெப்பத்தால்)அந்த சிறந்த மலர்கள்
25    	பவளம் போல் ஒளி இழந்து தம் அழகு அழிந்த தோற்றத்தைக்
	கண்டு தவிர்த்துவிட்டோம் நாம் செல்வதை, ஒளிரும் தொடியுடையாள்
	(நாம்)அருகிலிருக்கும்போதே இங்ஙனம் ஆகிவிட்டவள்
	பிழைத்திருக்கமாட்டாள் அல்லவா பிரிந்துசென்றோம் நாம் எனின்.

அருஞ்சொற்கள்:

அளி - கருணை, அன்பு; அமரிய - மாறுபாடுடைய, be with strife; கண்ணியது - கருதியது; முளிந்த - உலர்ந்த, முற்றிய, வாடிய நிலையிலுள்ள; 
முதையல் - பழங்காடு, ancient wild jungle; மோட்டு - முகட்டிலுள்ள; ஈட்டு - கூட்டம், திரள், flock, swarm; வட்டு - உருண்டையான பொருள், 
சிறுவர் விளையாடும் கோலிக்குண்டு; தெறு - சுடு; கவாஅன் - மலை உச்சியை ஒட்டிய சரிவு; மாய்த்த - தீட்டிய, உரசித்தேய்த்த; 
மழுகு - மழுங்கிய; பாத்தி - பரப்பி, பகுத்து வைக்கப்பட்டது; நுதி - முனை; முரம்பு - கட்டாந்தரையான மேட்டுநிலம்; 
முன்னம் - குறிப்பு, எண்ணம், கருத்து; ஓவச்செய்தி - ஓவியத்தின் படம்; ஒற்றி - அணுகி, ஒட்டிக்கொண்டு; பாவை - கண்ணின் கருவிழி; 
மாய்த்த - மறைத்த; ஆகத்து - மார்பினில்;    

விளக்கம்

1 – 7 :- தலைவன் பிரிந்து சென்றுவிடுவானோ என்ற எண்ணத்துடன், கொண்ட கோபத்தை முகத்தினில் காட்டி, செல்லமாகக் கோப நடை போட்டு, 
	தலைவன் அருகே வந்து நிற்கும் தலைவியின் நிலை;
8 - 15: - தலைவன் செல்லவிருக்கும் கானத்தின் நிலை;
16 - 21:- தலைவியின் பிரிவுத்துயர நிலை.
22 - 28:- தலைவன் பிரிந்து செல்லும் எண்ணத்தைக் கைவிடும் நிலை.

	இவ்வாறாக, 28 அடிகளைக்கொண்ட இப்பாடலில், ஏறக்குறைய ஒவ்வொரு கால்பகுதிக்கும் (7 அடிகளுக்கும்) ஒருகாட்சியை அமைத்து, 
நான்கு காட்சிகளாக இப்பாடலை இயற்றியிருக்கும் புலவரின் காட்சி அமைப்பு இவர் ஒரு சிறந்த திரைக்கதை அமைப்பாளர் எனக் காட்டவில்லையா? 

	முதல் காட்சி – தள்ளி நிற்கும் தலைவியின் பூசல்கொண்ட முகம் – பின்னர் நிலம் அதிர நடந்துவரும் பாதங்கள் – பின் பொய்யாகப் 
பல்லைக்காட்டும் வெறுமைச் சிரிப்பு – வினைதலைப்படுதல்(பிரிந்து செல்லல்) செல்லா(உடன்படாத) அவள் நினைவை நமக்குத் தெள்ளிதின் 
காட்டவில்லையா? 

	அடுத்த காட்சி (காட்சி மாற்றம்) – உலர்ந்த ஓமை மரங்கள் – காய்ந்த பாறைகளில் கருகிக்கிடக்கும் பளிங்கு நெல்லி – கூரிய 
முனைகளை மறைத்துப் பாத்தியாய்ப் பரந்துகிடக்கும் பரற்கற்கள் – வெறுமையாய் நீண்டுகிடக்கும் வெட்டவெளிப் பாதை – ‘உன்னை விட்டுப் 
பிரிந்திருக்கும் துயரம் ஒரு பக்கம் – நீ செல்லும் பாதையை எண்ணி நடுங்கும் நடுக்கம் மறு பக்கம்’ என்று தலைவி கூறுவதாக அமையவில்லையா?

	மூன்றாம் காட்சி – திரை முழுதும் காட்டப்படும் தலைவியின் முகம் – முன்னம் காட்டி முகத்தின் உரைக்கிறது – முகம் நெருங்கிவர - 
கண்ணின் கருவிழிகள் – அவற்றைக் கலக்கித் துளிர்விடும் கண்ணீர்த்துளிகள் – இனிமேலும் தலைவன் செல்லத்தான் போகிறானா என்ற ஏக்கத்தை 
நம்முள்ளும் ஏற்படுத்தவில்லையா?

	இறுதிக் காட்சி – தன் கண்ணீரை மறைக்க, மார்பினில் இருக்கும் புதல்வன் சூடியுள்ள மாலையை மோப்பது போல் அவள் குனிகிறாள். 
கண்ணீரை வேண்டுமானால் மறைக்கலாம், கலக்கத்தை மறைக்கமுடியுமா என்பது போல் அவளையும் மீறி வெளிப்படும் நீண்ட பெருமூச்சு – கடிந்தனம்
செலவே என்று தலைவன் கூறும் மொழி – பாடலைப் படிக்கும் நமக்கு மனநிறைவு அளிக்கவில்லையா?

	இவ்வாறாகக் காட்சிகள் மூலம் கதைசொல்லும் நேர்த்தியில் ஒரு கைதேர்ந்த இயக்குநராகப் புலவர் காட்சியளிக்கவில்லையா?

ஒரு கற்பனைக் காட்சி: 

	நீங்கள் ஒரு தாய். உங்கள் அன்பு மகள் - 12 வயது உடையவள் - ஏதோ தனக்குப் பிடித்த ஒரு வேலையில் மும்முரமாக மூழ்கியிருக்கிறாள் - 
அவளை அவசரமாக ஒரு வேலையாக வெளியில் அனுப்பவேண்டும் - அவளிடம் சொல்ல அவளை அழைக்கிறீர்கள் - அவள் வர மறுக்கிறாள் - 
செல்லமாக ‘என் கண்ணுல்ல வாடா' என்று அழைக்கிறீர்கள் – திரும்பத் திரும்ப நீங்கள் கனிவுடன் அழைப்பதைக் கேட்ட அவள் வேண்டா வெறுப்பாக 
உங்களை நோக்கி வருகிறாள் - அவள் எப்படி நடந்து வருவாள்?- முகத்தைக் கோணலாக்கிக் கொண்டு - கைகளை உதறிக்கொண்டு - கால்களைத் 
தூக்கித்தூக்கித் தரையில் ‘டம் டம்’-என்று அழுந்த வைத்து – குறும் அடிகளாகக் காலை எடுத்து வைத்து - உங்கள் மிக அருகே வந்து - 
‘என்ன்ன்னம்ம்ம்ம்மா¡¡¡¡ ..' என்று செல்லமாகச் சிணுங்கியவாறே வருவாள் இல்லையா? ஒரு கைதேர்ந்த உளவியல் வல்லுநரைப் போன்று புலவர் 
தலைவியின் நிலையை வருணிப்பதைப் பாருங்கள். 

	தலைவன் பிரிந்து செல்லப்போகிறான் என்று தலைவி நினைக்கிறாள். எனவே கோபத்துடன் இருக்கிறாள். தலைவன் அவளைக் கனிவுடன் 
அழைக்கிறான். அவனது கனிவான நிலையை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
	
	முகத்தைக் கடுகடுப்புடன் வைத்துக்கொள்கிறாள்.

	அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்

	தலைவன் அழைப்பதை அவள் கண்டுகொள்ளவில்லை. எல்லாவற்றையும் இழந்து தனிமைப்பட்டவள் போல் தன்னைக் காட்டிக்கொள்கிறாள்.

	விளி நிலை கொள்ளாள் தமியள்

	கால்களை உதறிக்கொள்வது போல் ‘டம் டம்'-என்று தரையில் நிலம் அதிர, சின்னச் சின்ன எட்டுகள் எடுத்துவைத்துத் தலைவனின் 
மிக அருகில் வந்து நிற்கிறாள்.

	மென்மெல
	நலம் மிகு சேவடி நிலம் வடு கொளாஅ

	குறுக வந்து
	ஒரு பொய்யான வறட்டுச் சிரிப்புச் சிரிக்கிறாள். 

	தன் கூர் எயிறு தோன்ற
	வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள்
	
	இவ்வாறு ஒவ்வொரு சிறு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்து, மொத்தக் காட்சியையுமே மனதில் உருவாக்கிப் பார்த்தால்தான் 
புலவரின் கூர்த்த மதி நன்கு புலனாகும். காட்சிகளை மட்டுமல்ல, நிகழ்ச்சிகளையும் சொற்களாலேயே வடித்து, ஓர் அற்புதமான ஒலி-ஒளிக் காட்சியை 
அமைத்துக்காட்டும் புலவரின் திறம் வியந்து போற்றத் தக்கது. சொல்லோவியம், சொற்சிற்பம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இது ஒரு சொல் விழியம்.

ஒரு பாலைக் காட்சி

	கவான் என்பது மலையுச்சியைச் சார்ந்த சரிவுப்பகுதி. அங்கு ஞாயிற்றின் கதிர்கள் சுட்டுப்பொசுக்குகின்றன. மேடும் பள்ளமுமாக இருக்கும் 
அந்தப் பகுதில் ஒரு சிறு கரட்டின் முகட்டில் பெரிய பாறை ஒன்று உள்ளது. அந்தப் பாறையில் வெயிலின் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்று 
எண்ணிப்பாருங்கள்! அங்கே பல நெல்லிக்காய்கள் உதிர்ந்து, பரற்கற்களைப் பரப்பிவைத்தது போல் பரந்துகிடக்கின்றன. சாணைக்கல்லில் தேய்த்து 
வழுவழுப்பு ஆக்கியது போல், மழுங்கிய நுனைகளை மேற்புறம் காட்டிக்கொண்டிருக்கும் அந்தக் கற்கள், கீழே குடுமி போன்ற கூரிய முனைகளைக் 
கொண்டிருக்கின்றன. அவற்றின் மேற்புறத்தைப் பார்த்து ஏமாந்து கால்களை வைத்தால், விரல்கள் அவற்றுக்குள் சிறிது புதைய, அந்தக் கூரிய 
குடுமிகள் விரல்களைப் பதம்பார்த்துவிடுகின்றன.

			

	இந்தப் பாலைநிலம் முதையல் அம் காடு எனப்படுகிறது. அம் என்பது இங்கே அசை. 

	பொதுவாக, காடு என்பது மரங்களடர்ந்த பகுதி (forest)யைக் குறிக்கும். பேரகராதி காடு என்பதற்கு forest, jungle, desert என்ற பொருள்களைத் 
தருகிறது. புன்செய்நிலம் (dry land) எனப்படும் வானம்பார்த்த பூமியில் விளைவதைக் காட்டுவெள்ளாமை என்பர். சுடுகாடு, வயற்காடு என்று இன்றும்
நாம் குறிப்பிடுகிறோம். எனவே, காடு என்பது ஓர் திறந்த வெளியையே குறிக்கும். முல்லைக்குரிய நிலம் காடும் காடு சார்ந்த இடமும் எனப்படுகிறது. 
இதுவே வானம்பார்த்த பூமி. பொதுவாக இவ்வகை நிலங்கள் மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் மேடான பகுதிகளாக இருக்கும். நீண்ட வறட்சியின்போது 
‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்’. அப்படிப்பட்ட நிலம் ஒன்று தான் நம் கண்முன் காட்டப்படுகிறது. 
இது முதையல் காடு எனப்படுகிறது. முதை என்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னர் சாகுபடிக்காகப் பக்குவப்படுத்தப்பட்ட இடம் என்று பொருள். 
அண்மையில் பக்குவப்படுத்தப்பட்ட நிலத்தை இதை என்பர். பொதுவாக முதை என்பது மேடான பகுதிக்குத்தான் அடையாக வருகிறது - 
(முதைச் சுவல், முதைப் புனம்). மனிதன் முதன்முதலில் சாகுபடிக்கென்று வெட்டிச் சமப்படுத்திய பூமிதான் இது. பின்னர்தான் நீர்பாய்ச்சும் பாசன 
முறையைப் பழகியிருக்கவேண்டும். இந்த வறண்டுபோன முல்லைக்காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓமை மரங்கள் காய்ந்துபோய் காணப்படுகின்றன.
இது முதையல் காடு அல்லவா! எனவே நெடுநாட்களாய் நிற்கும் அந்த மரங்களில் சில முளிந்த நிலையில் இருக்கின்றன. முளி என்பதற்கு முற்றிப்போதல், 
உலர்ந்து போதல் என்ற பொருள் உண்டு. அந்த இரண்டு நிலைகளிலுமே அந்த ஓமை மரங்கள் நிற்கின்றன. இந்த முதையலை அடுத்துப் பாறைகள் நிறைந்த 
மலையடிவாரம் காணப்படுகிறது. கதிரவன் கதிர்களால் காய்ந்துகிடக்கும் இந்தப் பாறைகளில் பளிங்கு போன்ற பல காய்களைக் கொண்ட நெல்லி 
மரங்களினின்றும் காய்கள் உதிர்ந்து கிடக்கின்றன. ஆம்லா எனப்படும் இந்த நெல்லி மரங்கள் February-March மாதங்களில் பூக்கத்தொடங்கி, April-July 
மாதங்களில் காய்த்துக் குலுங்கும் எனத் தாவரவியல் நூல்கள் கூறுகின்றன. அதுதானே வேனில்காலம்.

			

	இந்த நெல்லிமரங்களில் காய்த்த காய்கள் அருகிலிருக்கும் பாறைகளில் உதிர்ந்துகிடக்கின்றன. பாறையின் வெப்பத்தால் அந்தக் காய்கள் 
காய்ந்துபோய் தம் நீர்ப்பதத்தை இழந்திருக்கும். வழிச்செல்வோருக்கு அவற்றால் எந்தவிதப் பயனும் இல்லை. எனவேதான் புலவர் பின்னர் 
பயம் இல் கானம் என்கிறார். பயம் என்பது பயன். அடுத்து வரும் அடிகளில் புலவர் எத்துணை நுணுக்கமாக அந்தப் பாலைவழியை உற்றுநோக்கி 
வருணிக்கிறார் பாருங்கள்!
	
	மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
	பாத்தி அன்ன குடுமிக் கூர்ம் கல்
	விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர
	
	மாய் என்பதற்கு தீட்டு (grind and sharpen) என்ற பொருள் உண்டு. மழுகு என்பது கூர் மழுங்கு என்ற பொருள் தரும். தீட்டுவதால் 
எப்படிக் கூர் மழுங்கிப்போகும்? ஒழுங்கற்ற பக்கங்களை உடைய கற்களை எவ்வாறு வழுவழுப்பாக்குவது? கற்களின் முனைகளைச் சாணைக்கல்லில் 
திரும்பத் திரும்பத் தேய்த்து அவற்றை வழுவழுப்பாக்கலாம். அவ்வாறு தேய்த்ததைப் போல இந்தக் கற்கள் வழுவழுப்பாக இருக்கின்றனவாம். 
நெடுங்காலமாக, அவ்வப்போது பெய்யும் மழையால் அடித்துச் செல்லப்படும் அந்தக் கற்கள் நீரில் உருண்டு புரண்டு ஒன்றற்கொன்று மோதும்போது 
முனைகள் மழுங்கி வழுவழுப்பாகி இருக்கின்றன. இருப்பினும் அந்தக் கற்கள் மருதநிலத்து ஆற்றுப்படுகைகளில் காணப்படும் கூழாங்கற்கள் போல் 
முழுதும் வழுவழுப்பாகவில்லை. எனவே, அவற்றின் கீழ்ப்புறத்தில் கூர்மையான பகுதிகள் குடுமி போல் நீட்டிக்கொண்டிருக்கின்றன. மேலாக 
வழுவழுப்பைக் காட்டிக்கொண்டு இருக்கும் அந்தக் கற்களை மழுகு நுனை தோற்றி என எவ்வளவு அழகாகக் குறிப்பிடுகிறார் பாருங்கள்! இந்த 
வழுவழுப்பை நம்பி, இவற்றின் மீது கால் வைத்தால் அவை உள்ளங்கால்களை ஒன்றும் செய்யமாட்டா. மாறாக, அந்தக் கற்களுக்கிடையே பதியும் 
விரல் நுனிகளை அந்தக் கூரிய குடுமிகள் குத்திச் சிதைத்துவிடும். இவற்றினுமின்றும் தப்பி, ஒதுக்குப்புறமாக நடக்கலாம் என்றால், இந்தக் கற்கள் 
பரப்பிவைத்தது போன்று (பாத்தி அன்ன) வரிசை வரிசையாக வழியெங்கும் கிடக்கின்றன (நிரை நிலை). 

	மாய்த்த போல மழுகு நுனை தோற்றி  –  இது ஒரு அண்மைக் காட்சி (close up). 

	பாத்தி அன்ன குடுமிக் கூர்ம் கல்  - இது ஒரு நடுக்காட்சி (medium shot).

	நிரை நிலை அதர  -   இது ஒரு தொலைவுக் காட்சி (long shot).

	தொலைவிலிருந்து Camera – வை zoom – செய்து, கத்திமுனைக் கற்களைக் காட்டி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக, lens – ஐப் 
பின்னோக்கி இழுத்து, மொத்தக் காட்சியையும் நம் கண்முன் காட்டுகிறார் புலவர். ஒரு திறமை மிக்க ஒளிப்பதிவாளர் (Camera man) போல, 
ஒரு பாலைநிலத்தின் பல்வேறு அம்சங்களை, அண்மைக்காட்சி, நடுக்காட்சி, தொலைவுக்காட்சி எனப் பல்வேறு கோணங்களில் மனக்கண் முன்னால் 
காட்டும் புலவரின் வருணனைத் திறம் வியந்து பாராட்டத் தகுந்தது இல்லையா!

ஓர் உவமைக் காட்சி

	பாலைநிலத்தில் காய்த்து உதிர்ந்து கிடக்கும் நெல்லிக்காய்களை அருமையான உவமைகளால் புலவர் வருணிக்கிறார்.

	பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி
	மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப
	உதிர்வன .. .. 
	
	நெல்லிக்காய்கள் பளிங்கு உருண்டைகள் போல் இருக்கின்றன என்கிறார் புலவர். 

			

	இங்கு பளிங்கு என்று புலவர் குறிப்பிடுவது அதன் உருவம், நிறம், பளபளப்பு ஆகியவற்றை நெல்லிக்காயுடன் ஒப்பிடுவதற்கே. 
இந்தப் பளிங்கு சிறுவர் விளையாடும் கோலிக்குண்டினைப் போல் இருப்பதைப் பார்க்கிறோம். புலவர் அதனையும் விட்டுவைத்தாரில்லை. 
இந்த நெல்லிக்காய்கள் பாறையில் உதிர்ந்து கிடப்பது சிறுவர்களின் கோலி விளையாட்டின் போது குண்டுகள் சிதறிக்கிடப்பது போல் 
இருக்கிறது என்கிறார்.   

			

	கோலி விளையாட்டில் பலவகை உண்டு. ஒரு சமதளத்தில் ஆங்காங்கே சிறு குழிகளைப் பறித்து, அவற்றுக்கிடையே குண்டுகளைப் 
பரப்பி, ஒரு குண்டை வைத்து, விரல்களால் தெறித்து, மற்ற குண்டுகளை குழிகளுக்குள் செலுத்துவது ஒரு வகை. இவ்வாறு குண்டுகள் 
பரவிக்கிடப்பதைப் போல் நெல்லிக்காய்கள் பாறையில் உதிர்ந்து கிடக்கின்றன என்று புலவர் கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம். இங்கு உதிர்வன 
என்பதற்கு உதிர்ந்து கிடப்பன எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இந்த ஆட்டத்துக்கு ஆரம்பமாக, ஒரு சிறு கல்லைச் சாய்வாக நிறுத்தி, ஒவ்வொரு 
சிறுவனும் தன் நெற்றி உயரத்திலிருந்து ஒரு கோலிக்குண்டை அந்தக் கல்லின் மீது விழப்பண்ணும்போது, அது தெறித்து ஓடும் தொலைவில், 
மிக அதிகமான தொலைவைப் பெறும் சிறுவனே ஆட்டத்தைத் தொடங்கவேண்டும் என்பது விதி. இவ்வாறு குண்டுகள் விழுந்து தெறிப்பது போல், 
மரத்திலிருந்து காய்கள் பாறையின் மேல் உதிர்கின்றன என்றும் இதற்குப் பொருள்கொள்ளலாம். இங்கு உதிர்வன என்பதற்கு கீழே விழுவன எனப் 
பொருள் கொள்ளப்படுகிறது.

	எப்படி இருப்பினும் அன்றாட வாழ்க்கையின் ஒரு சிறு விளையாட்டை ஓர் அருமையான உவமைக்குப் பயன்படுத்தியுள்ள புலவரின் 
திறம் போற்றத்தக்கது.