அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 34

பாடல்  34. முல்லைத் திணை    பாடியவர் - மதுரை மருதன் இள நாகனார்

துறை - வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
.
  மரபு மூலம் - பிரியாயாயின் நன்றுமன் 

	சிறுகரும் பிடவின் வெண்டலைக் குறும்புதற்
	கண்ணியின் மலருந் தண்ணறும் புறவிற்
	றொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன
	யிருதிரி மருப்பி னண்ண லிரலை
5	செறியிலைப் பதவின் செங்கோல் மென்குரல்
	மறியாடு மருங்கின் மடப்பிணை யருத்தித்
	தெள்ளறல் தழீஇய வார்மண லடைகரை
	மெல்கிடு கவுள துஞ்சுபுறங் காக்கும்
	பெருந்தகைக் குடைந்த நெஞ்ச மேமுறச்
10	செல்க தேரே நல்வலம் பெறுந
	பசைகொல் மெல்விரற் பெருந்தோட் புலைத்தி
	துறைவிட் டன்ன தூமயி ரெகினந்
	துணையொடு திளைக்குங் காப்புடை வரைப்பிற்
	செந்தார்ப் பைங்கிளி முன்கை யேந்தி
15	யின்றுவர லுரைமோ சென்றிசினோர் திறத்தென
	யில்லவ ரறித லஞ்சி மெல்லென
	மழலை யின்சொற் பயிற்றும்
	நாணுடை யரிவை மாணலம் பெறவே

 சொற்பிரிப்பு மூலம்

	சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
	கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்
	தொடுதோல் கானவன் கவை பொறுத்து அன்ன
	இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
5	செறி இலைப் பதவின் செம் கோல் மென் குரல்
	மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தித்
	தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை
	மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
	பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச்
10	செல்க தேரே நல் வலம் பெறுந -
	பசை கொல் மெல் விரல் பெரும் தோள் புலைத்தி
	துறை விட்டு அன்ன தூ மயிர் எகினம்
	துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில்
	செம் தார்ப் பைம் கிளி முன்கை ஏந்தி
15	இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என
	இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
	மழலை இன் சொல் பயிற்றும்
	நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே

அருஞ்சொற் பொருள்:

பிடவு = பிடவம் என்ற சிறுமரம்-Randia malabarica; புறவு = முல்லைநில வெளி; 
தொடுதோல் =காலில் தொடுக்கப்படும் தோல், வார் உள்ள செருப்பு= ; கவை = Y வடிவக் கம்பு; இரு = பெரிய; 
மருப்பு = கொம்பு; பதவு = அறுகம்புல்; மெல்கிடு = மெல்லு; கவுள = புடைத்த கன்னம்; பசை = கஞ்சி; 
புலைத்தி = வண்ணார்ப் பெண்; துறை = ஆறு/குளங்களில் சலவை செய்யுமிடம்; எகினம் = அன்னம்; 
காப்பு = காவல்; வரைப்பு =  மதில்; செந்தார் = கழுத்தில் மாலை போன்ற சிவப்புநிற வளைய அமைப்பு; 
இல்லவர் = வீட்டார்.

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	வினை மேற்கொண்டு தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், வினை முற்றிய பின் தேரில் ஊர் 
திரும்புகிறான். வருகின்ற வழியில் இணையாகத் திரியும் மான்களைக் கண்டவன் தலைவியை எண்ணி 
ஏங்குகிறான். அதைப் போலவே வீட்டில் இருக்கும் அன்னமும் அதன் பேடையும் சேர்ந்திருக்கும் காட்சி 
தலைவியை வருத்துமே என்று எண்ணி வருந்துகிறான். தேர் மெதுவாகச் செல்வதுபோல் அவனுக்குத் 
தோன்றுகிறது. அதன் பாகனை நோக்கித் தேரை விரைந்து செலுத்துமாறு கூறுகிறான். 

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்
	கண்ணியின் மலரும் தண்நறும் புறவில்

	சிறிய கரிய பிடவஞ்செடியின் வெள்ளை நிறத் தலையை உடைய சிறிய புதர்
	தலைமாலை போல மலரும் குளிர்ந்த மணமிக்க முல்லை நிலத்தில்

	கார்காலத் தொடக்கத்தில் தலைவன் முல்லைநிலக் காட்டுப்பாதையில் தேரில் வந்துகொண்டிருக்கிறான். 
வேனிலில் வாடிக்கிடந்த தாவரங்கள் கார் மழையில் புத்துணர்ச்சி பெற்று தழைத்துக் கிளைத்து நிழல் பரப்பி நிற்கின்றன.
 மாலைநேரமும் நெருங்குவதால் சுற்றுப்புறம் ‘தண்’-ணெனக் குளிர்ந்து கிடக்கிறது. மரம், செடி, கொடிகள் பூவிட்டு மலரச் 
சிரிப்பதால் அந்தக் காட்டுப்பகுதியே மணம் கமழ்ந்து மகிழ்விக்கிறது. புலவர் கூறும் தண்ணறும் புறவில் என்ற சொற்கள் 
கார்காலம் இயற்கைக்குச் செய்த மந்திரமாற்றங்களைக் கூறாமல் கூறிநிற்கின்றன.  

				

				

	முல்லைநிலத்து நிலபுலன்களுக்கிடையே பிடவக் குறுமரங்கள் புதர் போல் மண்டிக்கிடக்கின்றன 
(குறும் புதல்). பிடவு என்பது Randia malabarica அல்லது Benkara Malabarica என்று அழைக்கப்படும் ஒரு 
குட்டையான மரவகைத் தாவரம். இது மரவகையைச் சேர்ந்தாலும் இதன் கிளைகள் சிறியன – அவற்றின் 
மேற்புறம் கருஞ்சாம்பல் நிறத்தது (சிறு கரும் பிடவு). அது கிளைகளில் பூக்காமல் கிளை உச்சியில் சிறிய 
வெண்மையான மலர்களைக் கொத்துக்கொத்தாய்ப் பூக்கும் (வெண் தலைக் குறும் புதல்). அது ஆண்கள் தலையில் 
அணிந்துகொள்ளும் கண்ணியைப்போல் காட்சியளிக்கிறது (கண்ணியின் மலரும்).

	தொடுதோல் கானவன் கவைபொறுத்து அன்ன
	இருதிரி மருப்பின் அண்ணல் இரலை

	தொடுதோல் என்பது காலில் தொடுக்கப்பட்ட தோல் – வார் வைத்துக் கட்டிய செருப்பு. 
இன்றைக்கும் கிராமத்திலிருப்போர் பொதுவாகக் காலணிகள் அணியமாட்டார். அடர்ந்து வளர்ந்திருக்கும் முட்புதர்களை 
அகற்றவேண்டிய தேவை ஏற்பட்டால், முட்செடிகளைத் தூருடன் வெட்டிச் சாய்ப்பார்கள். அப்போது சிதறிக்கிடக்கும் 
முட்கள் காலைப் பதம்பார்க்கும். அதினின்றும் காத்துக்கொள்ள காலில் பாதுகாப்புக்காக இறுக்கிக் கட்டப்பட்ட தோல்தான் 
தொடுதோல். 

				

	பின் அந்த முட்செடிகளை வேறு இடங்களுக்கு இழுத்துச் செல்லவேண்டும் அல்லவா? முட்கள் கையைக் 
குத்துமே! எனவே அவற்றை ஒரு கவையைக்கொண்டு தள்ளிக்கொண்டு  செல்வார்கள். நீளமான ஒரு கழி – அதன் 
தலை ஆங்கில எழுத்தான Y போலப் பிளந்து இருக்கும். அதுதான் கவை. பணிக்காக இதை மட்டும் எடுத்துச் 
செல்லும்போது, அதைத் தோள்மீது சாய்த்துத் தூக்கிச்செல்வார்கள். அப்போது முதுகுப்பக்கம் சாய்வாக 
நீட்டிக்கொண்டிருக்கும் கவைப் பகுதியைப் போல இரலை மான்களின் கொம்புகள் இருக்கின்றனவாம். என்ன அழகிய 
கற்பனை வளமுள்ள ஒப்பீடு பாருங்கள்! 
     
				

5	செறிஇலைப் பதவின் செம்கோல் மென்குரல்
	மறி ஆடு மருங்கின் மடப்பிணை அருத்தித்
	தெள்அறல் தழீஇய வார்மணல் அடைகரை
	மெல்கிடு கவுளத் துஞ்சுபுறம் காக்கும்
	பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற

	பதவு என்பது அறுகம்புல். நெடுக உயர்ந்து வளராமல், தரையில் படர்ந்து வளர்வது. அவ்வாறு படர்ந்து 
செல்லும்போது அங்கங்கே கணுக்களில் வேர்விட்டுத் தரையில் பதித்துப் பிடிமானத்துடன் சுற்றுவட்டாரத்தையே வளைத்து 
மறைக்கும். மற்ற புற்களைக் காட்டிலும் விலங்கினங்கள் அறுகம்புல்லை விரும்பியுண்ணும். சினை மாடுகளுக்கும், 
கறவைமாடுகளுக்கும் கொடுத்தால் நன்கு பால் சுரக்கும் என்பர். 

				

	தலைவன் காண்பது ஓர் இரலை இணை. பெண்மான் நிறை சூலி. புடைத்து இருக்கும் வயிற்றுப் பக்கங்களில் 
உள்ளிருக்கும் குட்டி உருண்டுருண்டு முட்டுகிறது. ஈனப்போகும் குட்டிக்கு நிறைப் பால் கொடுக்கவேண்டுமல்லவா! 
ஆண்மான் தன் பிணையை அறுகம்புல் கிடைக்கும் பகுதிக்குப் பக்குவமாக இட்டுச்சென்று, அங்கே மேயவிடுகிறது 
(மடப்பிணை அருத்தி). அருந்து என்பது உண்ணல். அருத்து என்பது உண்பித்தல். தன் மடப்பிணை அருந்துவதற்குத் 
தோதான இடங்களுக்குக் கூட்டிச் செல்கிறதாம் ஆண்மான்! அண்மையில் பெய்த மழையில் செழிப்பாக வளர்ந்துகிடக்கிறது புல் 
(செறி இலைப் பதவு). இருப்பினும் நீளவாக்கில் தரையில் பதிந்துகிடக்கும் தண்டுப்பகுதி முற்றிப்போய்ச் சற்றுக் காய்ந்திருக்கும். 
அப்படியின்றி, இப்போதுதான் முளைவிட்ட பகுதி மெல்லியதாய்க் கதிர்விட்டுப் பூத்திருக்கும் (மென்குரல்) இந்த மென்குரல்களின் 
அடித்தண்டு சற்றே சிவந்திருக்கும் (செங்கால்). இவ்வாறு அடர்ந்து பூத்திருக்கும் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அங்கே தன் 
பிணையை மேயவிட்டுப் பெருந்தன்மையுடன் தான் ஒதுங்கி நிற்கிறதாம் அந்த இரலை. 

				

	தன் பிணைக்கு வயிறு நிறைந்துவிட்டதா என்று பார்க்கும் ஆண்மான், வயிற்றுக்குள் குட்டி முட்டுவதைக் கண்டு 
மகிழ்கிறது. பின்னர் தெளிந்த நீரோடை (தெள் அறல்)வழியே அதை நடத்திச் சென்று, அப்போதுதான் மழைநீரில் அடித்துக் 
கொணரப்பட்டு நீளவாக்கில் குவித்துவைக்கப்பட்டிருக்கும் தூய மணல்மேட்டில் (வார்மணல் அடைகரை)படுக்கவைக்கிறது. 

	வயிறு நிறைய மெல்லிய புல்லை மேய்ந்துவிட்டு, தெளிந்த நீரையும் குடித்துவிட்டுக் களைத்துப் படுத்திருக்கும் 
பெண்மான் அசைபோடத்தொடங்குகிறது. பசியுடன் வரும் கணவனுக்கு ஆசையாசையாய்ச் சோறுபோட்டு, அதை அவன் 
அள்ளிஅள்ளித் தின்னும் அழகை அருகிருந்து பார்த்து மகிழும் அன்பு மனைவியின் பரிவுடன், இந்த ஆண்மான் அசைபோடும் 
பிணையை அன்புடன் பார்க்கிறது. தொண்டையை ஒரு எக்கு எக்கி, இரைப்பையுள் இருக்கும் அரைகுறையாய் மென்று விழுங்கிய 
புல்குழைவை ஓர் அழுத்தம் கொடுத்து வாய்க்குள் இழுக்கிறது பிணை. ஒரு உருண்டையாக உணவுக்குழாயில் உருண்டுகொண்டே 
ஏறி வாய்க்குள் வரும் அந்த உருண்டை. வந்த உருண்டையை வாய்க்குள் ஒருபுறம் ஒதுக்கி வைத்துக்கொண்டு, கொஞ்சம் 
கொஞ்சமாகத் திரும்பத் திரும்பப் பற்களால் அரைக்கிறது பெண்மான். வாய்க்குள் நிறைய வெற்றிலையைக் 
குதப்பிக்கொண்டிருக்கும் வயதான பாட்டிபோல், கன்னங்கள் புடைக்க, திருகை சுற்றுவது போல் சுழன்றுகொண்டிருக்கும் 
(மெல்கிடு கவுள)பிணையின் வாயழகைப் பார்த்துப் பார்த்துப் வயிறு நிறைந்து பூரித்துப்போகிறது கலைமான். 

				

	உண்ட களைப்பில் உறங்கிப்போகிறது பிணை. அதன் உறக்கம் கெட்டுப்போகாமல் சுற்றுமுற்றும் பார்த்தவண்ணம் 
விழிப்புடன் காவல் காத்துநிற்கிறது அந்த அழகிய ஆண்மான். அந்த ஆண்மானின் சிறந்த பண்பைப் பார்த்த தலைவனின் நெஞ்சம் 
நெகிழ்ந்துவிடுகிறது (பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம்)

           தேர் ஓடும் வேகத்தில் இத்தனை காட்சிகளையும் நின்று நிதானமாகப் பார்த்துக்கொண்டா இருந்தான் தலைவன்? 
அவன் பார்த்தது கடைசிக் காட்சி - புடைத்த வயிறுடன் களைத்து உறங்கும் பெண்மானைக் காத்துநிற்கும் இரலையை. என்ன 
நடந்திருக்கும் என்பதை அவன் கற்பனை செய்து பார்க்கிறான். ஒரு காட்சியைப் பார்த்து, அதன் பின்னணியை யூகிப்பது ஒருவரின் 
கற்பனை வளத்தைப் பொருத்தது என்றாலும், அவரின் அப்போதைய மனநிலையையும், மன ஓட்டத்தையும் பொருத்தது அல்லவா! 
எனவே, போகிறபோக்கில் ஒரு மானிணையைப் பார்த்த தலைவன் இவ்வாறெல்லாம் சிந்தித்தால், அவன் அப்போது தலைவியின் 
நிலையைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்திருக்கிறான் என்பது தெளிவாகிறது. 

	ஒருவேளை அவன் கூதிர்காலம் முடிந்து வினைமேல் சென்றிருக்கலாம். பனிக்காலமும் வேனிற்காலமும் முடிந்து 
எட்டு மாதங்கள் கழித்து வீடு திரும்பலாம். பிரியும் முன் அவர்கள் இருந்த அந்த நெருக்கமான நேரங்களின் விளைவாக அவள் 
கருக்கொண்டிருந்திருக்கலாம். இப்போது எட்டுமாத நிறைசூலியாய் அவளை நினைத்துப் பார்க்கிறான். இத்தனை நாளும் அருகிருந்து 
அவளைக் கவனிக்கமுடியவில்லையே என்ற ஏக்கம் அவனைக் கவ்வுகிறது. இந்த நிலையில் அந்த மானிணைக் காட்சி அவன் 
நெஞ்சைப் பிசைகிறது எனக் கொள்ளலாம். 

10	செல்க தேரே நல்வலம் பெறுந

	மானிணைக் காட்சியின் விளைவாக வேறு உலகத்துக்குப் போய்விட்ட தலைவனைத் ‘தடதட’-வென்று ஓடும் தேரின் 
சத்தம் இந்த உலகுக்கு மீண்டும் கொணருகிறது. ‘சட்’-டென்று ‘விழி’த்தவனுக்குத் தேர் விரைவாகப் போகவில்லைபோல் 
தோன்றுகிறது. அல்லது, இவ்வளவு நாளையும்தான் வெளியூரில் கழித்துவிட்டோம் – இனிமேலாவது அவளை நன்கு 
கவனிக்கவேண்டும் – என்ற எண்ணத்தில், “வண்டியை வேகமா ஓட்டுப்பா” என்று சொல்ல நினைக்கிறான். திறமைசாலிகளை 
வேலைவாங்குவது சற்றுக் கடினம். கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினாலேயே, “இந்தாங்க சார், நீங்களே பாத்துக்கங்க” என்று 
போட்டது போட்டபடி போய்விடுவார்கள். இந்த வலவன் திறமையுள்ளவன். அவன் ஏதும் தவறாக நினைத்துக்கொள்ளக்கூடாதே 
என்ற எண்ணத்தில், “தேர் வேகமாகப் போகட்டும் – அதுக்குத்தானே ஒன்ன மாதிரி வலுவுள்ளவனக் கூப்புட்டுட்டு வந்திருக்கேன்” 
(செல்க தேரே, நல் வலம் பெறுந) என்கிறான். 

	பசைகொல் மெல்விரல் பெரும்தோள் புலைத்தி
	துறைவிட்டு அன்ன தூமயிர் எகினம்
	துணையொடு திளைக்கும் காப்புஉடை வரைப்பில்

	இப்போது தலைவனுக்கு மீண்டும் தலைவியைப் பற்றிய நினைப்பு வந்துவிடுகிறது. “வீட்டில் இப்போது அவள் என்ன 
செய்துகொண்டிருப்பாள்?” உடனே வீடு கண்முன் வருகிறது. சுற்றிலும் உயரமான சுவர் – வெளி வாயிலில் ஒரு காவலன் 
(காப்புடை வரைப்பில்). 

				

	வெளி முற்றத்தில் விளையாடும் அன்னப்பறவைகள் – ஆணும் பெண்ணுமாய். என்ன விளையாட்டு? ஓடிப்பிடித்துக் 
கூடித்திளைக்கும் இன்ப விளையாட்டு. அந்த அன்னங்களை நினைத்துப் பார்க்கிறான் – என்ன வெளுத்த மயிர்? ‘துறையில 
வண்ணாத்தி கழுவிட்ட கஞ்சி மிதக்குற மாதிரி!’ இந்த அன்னங்களின் திளைப்பால் ஈர்க்கப்பட்டு கவலைப்படுகிற 
பெண் அல்ல அவள். அவள் அந்த வீட்டைப் போன்றவள் – காப்புடை வரைப்பு – தற்காப்பவள் – சொற்காப்பவள் – 
தற்கொண்டானையே எண்ணிக்கொண்டிருப்பவள்.

	செம்தார்ப் பைம்கிளி முன்கை ஏந்தி
15	இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்துஎன
	இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
	மழலை இன்சொல் பயிற்றும்
	நாண்உடை அரிவை மாண்நலம் பெறவே

	அவளின் முன்கையில் ஒரு கிளி அமர்ந்திருக்கிறது. பச்சைக்கிளி அது. கழுத்தில் பவளம் கோத்தது போல் ஒரு சிவப்பு 
வளையம். Indian ringneck parrot என்பர். பறவையியலார் அதைப் பற்றி அவர்கள் கூறுவதைப் பாருங்கள் : 

	The Indian Ringneck (Psittacula krameri manillensis) is a very intelligent bird and does make an entertaining pet. 
They can be taught to speak, whistle, perform tricks and mimic other sounds (both sexes seem just as good at this), however 
they can be very vocal and quite loud, so not best suited to an apartment or flat.
	(oetallybirds.webs.com/indianringneckinfo.htm)

				

	இந்தக் கிளி சொல்லிக்கொடுத்தால் (can be taught to speak) சொல்லிக்கொடுக்கும் விதத்தில் (mimic other sounds) 
நன்கு பேசக்கூடியது. எனவே அதை முகத்தருகே கொண்டுவந்து (முன்கை ஏந்தி), “பிரிந்து சென்ற தலைவரைக் குறித்து-
‘இன்று அவர் வருவார்’- எனச் சொல்லுவாய்” என்று கிசுகிசுத்த குரலில் (மெல்லென) கூறுகிறாள் தலைவி. இந்தக் கிளி 
இருக்கிறதே – ரொம்பப் பொல்லாதது. உரத்த குரலில் பேசி ஊரைக் கூட்டிவிடும் (can be very vocal and quite loud). 
அப்புறம் வீட்டார் கேலிக்கு ஆளாகவேண்டும் (இல்லவர் அறிதல் அஞ்சி). எனவேதான் அவள் கிசுகிசுத்த குரலில் (மெல்லெனச்) 
சொல்லுகிறாள். அதைக்கேட்டு அவளைப் போலவே அதுவும் பேசும் என்ற எண்ணத்தில். இப்படிச் சொல்லும்போதே அவளுக்கு 
வெட்கம் வந்துவிடுகிறது (நாணுடை அரிவை). தோழியரிடமோ, வேறு இல்லவரிடமோ தலைவன் வருவதைப் பற்றிப் பேசும்போது 
அவளுக்கு வெட்கம் வரலாம் – ஒரு கிளியிடம் பேசும்போதுகூடவா? இதுதான் ஒரு தமிழ்ப்பெண்ணுக்குத் தாய் கொடுக்கும் சீதனம்.

திணை விளக்கம்:

	முல்லைத்திணைக்குரிய உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும். எனவே, பிரிந்திருந்தாலும் பிரிவை எண்ணி 
இரங்காது பொறுத்திருத்தல் வேண்டும். அந்தப் பொறுத்தலிலும் ஒரு பொறுமையின்மை இருக்கும். ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் 
பொறுக்காதல்லவா? இதுதான் முல்லைத் திணையின் சாரம்.

	தலைவியைப் பிரிந்து வினைமேற் சென்றவன் வீடு திரும்புகிறான். அவன் வருவது வலவன் ஓட்டும் ஒரு தேரில். 
வரும்வழியில் ஆணும் பெண்ணுமாய் இருக்கும் மான் இணையைக் காண்கிறான் – அதுவும் சூல்கொண்டுள்ள தன் பிணையைப் 
பாசத்துடன் கவனித்துக்கொள்ளும் அண்ணல் இரலையின் பாசத்தையும் பரிவையும் கண்ட தலைவனுக்குத் தன் தலைவியைச் 
சீக்கிரம் காணவேண்டும் என்ற தவிப்பு உண்டாகிறதாம். ஏன், இதுவரை அவளின் நினைப்பு அவனுக்கு வராமலாபோயிருக்கும்? 
இருந்தாலும் வேலைப்பளு – அதனால் ஏற்படும் களைப்பு, அசதி, சோர்வு – சீக்கிரத்தில் நிறையக் காசு சேர்க்கவேண்டுமே என்ற 
தவிப்பும் கவலையும் – இத்தனை காரணங்களினால் தலைவியைப் பற்றிய நினைவு வந்தாலும் வேறு வழி இல்லை – 
பொறுத்துத்தான் இருக்கவேண்டும் என்ற நிலை. எனவே ஆக்கப் பொறுத்திருந்தான். இப்போது அத்தனை பணிகளும் முடிந்து வீடு 
திரும்பும் வேளை. மனமெல்லாம் அவளருகில். வேறு சிந்தனைகள் இல்லை. போதாக்குறைக்கு இந்த மான்கள் வேறு அவன் 
தவிப்பைத் தூண்டிவிட – அவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை – ஒரு மானே இத்துணை அன்புடன் தன் பிணையைக் 
கவனித்துக்கொள்கிறதே என்று அவனது நெஞ்சம் உடைந்துபோகிறதாம்!! (பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம்) “திறமை மிக்க 
பாகனே! உன் திறமையை எல்லாம் கூட்டித் தேரை நீ விரைந்து செலுத்து” என்கிறான். தன்னிடம் பணிபுரியும் பணியாளன் 
என்றுகூடப் பார்க்காமல் அவன் தன் தவிப்பை வெளிப்படையாகக் கூறுகிறான். பாகன் தலைவனைக் கேலிசெய்யப்போவதில்லை. 
எனினும் மனதுக்குள் சிரித்துக்கொள்ளமாட்டானா? அதைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை.

	ஆனால் தலைவியின் நிலை என்ன? அதாவது, தலைவியைப் பற்றித் தலைவன் நினைப்பதாக இருக்கும் நிலை. 
அவளும்தான் துணையொடு திளைக்கும் தூ மயிர் எகினத்தைப் பார்க்கிறாள். அவள் இருப்பது காப்புடை வரைப்பில் – காவலுள்ள 
மதில்களுக்குள். அவள் மனமும் பெண்மை என்ற காவலுள்ள கோட்டைக்குள்தான் இருக்கிறது. அன்னங்களைப் பார்த்து அவள் 
பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. இருப்பினும் அடிமனதில் ஒரு சலனம் ஏற்பட்டிருக்குமோ? தன் கையில் இருக்கும் கிளியைப் 
பார்த்து அவள் சொல்கிறாள் “இன்றைக்கு அவர் வருவார் என்று சொல்லேன்”. அதையும் மெல்லெனச் சொல்கிறாள். ஏன்? 
இல்லவர் அறிதல் அஞ்சி. நம் வீட்டுக்காரர்கள்தானே – தெரிந்தால் என்ன? தன்னுடைய அவசரம் அவர்களுக்குத் தெரிந்தால்? – 
“பொண்ணுக்கு அவசரத்தப் பாத்தியா?” என்ற கேலிப்பேச்சு எழாதா? - அதை எண்ணிப் பார்க்கையிலேயே அவள் கன்னங்கள் 
சிவந்துவிடுகின்றன (நாணுடை அரிவை) – இதுதான் இருத்தல் – ஆற்றியிருத்தல் – முல்லைத்திணை - இதுதான் தமிழச்சியின் 
மாண்பு. தமிழ் மரபின் மாண்பு – இதைப் பாடலின் உரிப்பொருளாக – பாடுபொருளாக – கொண்ட தமிழ் இலக்கியத்தின் மாண்பு.