அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 17

பாடல்  17. பாலைத் திணை    பாடியவர் - கயமனார்

துறை - மகள் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

  மரபு மூலம் - சிலம்பார் சீறடி வல்லகொல் செல்ல

	வளங்கெழு திருநகர்ப் பந்துசிறி தெறியினு
	மிளந்துணை யாயமொடு கழங்குட னாடினு
	முயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ
	மயங்குவியர் பொறித்த நுதலட் டண்ணென
5	முயங்கினள் வதியும் மன்னே வினியே
	தொடிமாண் சுற்றமு மெம்மு முள்ளா
	ணெடுமொழித் தந்தை யருங்கடி நீவி
	நொதும லாள னெஞ்சறப் பெற்றவென்
	சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி
10	வல்லகொல் செல்லத் தாமே கல்லென
	வூரெழுந் தன்ன வுருகெழு செலவி
	னீரி லத்தத் தாரிடை மடுத்த
	கொடுங்கோ லுமணர் பகடுதெழி தெள்விளி
	நெடும்பெருங் குன்றத் திமிழ்கொள வியம்புங்
15	கடுங்கதிர் திருகிய வேய்பயிற் பிறங்கற்
	பெருங்களி றுரிஞ்சிய மண்ணரை யாஅத்
	தருஞ்சுரக் கவலைய வதர்படு மருங்கி
	னீளரை யிலவத் தூழ்கழிப் பன்மலர்
	விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்
20	நெய்யுமிழ் சுடரின் கால்பொரச் சில்கி
	வைகுறு மீனின் றோன்று
	மைபடு மாமலை விலங்கிய சுரனே

 சொற்பிரிப்பு மூலம்

	வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்
	இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்
	‘உயங்கின்று அன்னை! என் மெய்’ என்று அசைஇ
	மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென
5	முயங்கினள் வதியும் மன்னே, இனியே
	தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
	நெடுமொழித் தந்தை அரும் கடி நீவி,
	நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
	சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
10	வல்லகொல் செல்லத் தாமே - கல்லென
	ஊர் எழுந்து அன்ன உரு கெழு செலவின்
	நீர் இல் அத்தத்து ஆர் இடை மடுத்த
	கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி
	நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும்
15	கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல்
	பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
	அரும் சுரக் கவலைய அதர் படு மருங்கின்
	நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்
	விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
20	நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி
	வைகுறு மீனின் தோன்றும்
	மை படு மா மலை விலங்கிய சுரனே.

அடிநேர் உரை 
	
	வளப்பம் பொருந்திய அழகிய மாளிகையில் பந்தைச் சிறிதுநேரமே எறிந்து விளையாடினாலும்,
	இளைய துணைகளான தோழியருடன் கழங்கு ஆட்டத்தைச் சேர்ந்து ஆடினாலும்,
	வருந்துகின்றது அன்னையே என் உடம்பு என்று தளர்ந்துபோய்,
	கொட்டுகின்ற வியர்வைத் துளிகள் கோத்துநிற்கும் நெற்றியை உடையவள், சில்லெனும்படியாக
5	தழுவினவளாய் அமர்வாள் – (அதெல்லாம் போச்சே!) இப்போதோ,
	தோள்வளை அணிந்த சிறந்த தோழியர் கூட்டத்தையும், என்னையும் நினைக்காதவளாய்,
	மிக்க புகழையுடைய (தன்) தந்தையின் கடுமையான கட்டுக்காவலையும் மீறி,
	(ஓர்)அன்னியனின் உள்ளத்தை முழுவதுவாய்ப் பெற்ற என்
	சிறிய அறிவுசான்ற மகளின் சிலம்பு ஒலிக்கும் சிறிய அடிகள்
10	வலிமை கொண்டனவோ? – நடந்துசெல்வதற்கு, பேரிரைச்சலுடன்
	ஊரே ஒன்றுசேர்ந்து வருவதைப் போன்ற அச்சம் மிக்க பயணத்தை மேற்கொண்ட,
	நீரற்ற காட்டுவெளியின் கடுமையான பாதையில், ஒன்றுசேர்ந்த,
	கடிய தார்க்குச்சிகளையுடைய, உப்புவணிகர் தம் காளைகளை அதட்டும் தெளிந்த குரல்கள்
	உயர்ந்த பெரிய மலையில் மோதி எதிரொலிக்கும்
15	கடுமையான ஞாயிற்றின் கதிர்கள் முறுகிய மூங்கில் நிறைந்த வறண்ட மலைகளில்,
	பெரும் களிறு உரசிய மண்ணையுடைய நடுப்பகுதியைக் கொண்ட யா மரங்களை உடைய,
	அரிய பாலைநிலத்தில் கிளைத்துச் செல்லும் வழிகளையுடைய நீண்ட பாதையின் ஓரங்களில்,
	நீண்ட நடுப்பகுதியை உடைய இலவமரங்களில் பூத்து முடிந்த பல மலர்கள் -
	திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த முதிய ஊரில்
20	நெய்யைக் கக்கும் தீச்சுடர்கள் (அணைவது)போன்று - காற்று மோதுவதால் மிகச்சிலவாகி,
	வைகறைப் பொழுதின் வானத்து மீனைப் போன்று தோன்றும் -
	மேகங்கள் தங்கும் பெரிய மலைகள் எதிர்நிற்கும் வழியில்

அருஞ்சொற் பொருள்:

கழங்கு = கழற்சிக்காய் கொண்டு பெண்கள் திண்ணையில் அமர்ந்து ஆடும் ஓர் ஆட்டம்; உயங்கு = வருந்து; நுதல் = நெற்றி; 
வதி = தங்கு; தொடி = தோள் வளை; நெடுமொழி = பெரும்புகழ்; கடி = காவல்; நீவி = கடந்து; நொதுமலாளன் = அந்நியன், stranger; 
முதுக்குறைவி = அறிவுள்ளவள்; உரு = அச்சம்; செலவு = பயணம்; அத்தம் = கடிய வன்புலம்; ஆரிடை = அரிய வழி; 
மடுத்த = கூடிய; கொடும் கோல் = கொடுமையான குச்சி; உமணர் = உப்பு வணிகர்; பகடு = காளை; தெழி = அதட்டு; 
தெள்விளி = தெளிவான பேச்சு; இமிழ் = எதிரொலி; இயம்பு = உருமு; திருகிய = முறுகிய; வேய் = மூங்கில்; 
பயில் = மிகுதியாக வளர்ந்துள்ள; பிறங்கல் = வறண்ட மலைப்பகுதி; உரிஞ்சு = உராய்; அரை = நடுப்பகுதி; 
யா = ஒருவகை காட்டு மரம்; சுரம் = பாலைநிலம்; கவலை = பிரிந்து செல்லும் வழிகள்; அதர் = நெடுவழி; மருங்கு = பக்கம்; 
இலவம் = இலவமரம்; ஊழ்கழி = மலர்தல் கழிந்த; விழவு = திருவிழா; விறல் = சிறப்பியல்பு, distinctiveness; 
மூதூர் = பழமையான ஊர்; சுடர் = தீக்கொழுந்து; கால் = காற்று; பொர = மோத; சில்கி = (எண்ணிக்கையில்) சிலவாகி;
 வைகுறு = வைகறை; மீன் = விண்மீன்; மை = மேகம்; விலங்கிய = எதிர்நிற்கும்.

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	இது பாலைத்திணைப் பாடல். அத்தம், ஆரிடை, கடுங்கதிர், பிறங்கல், யா, இலவம், அருஞ்சுரம் எனப் பாலை 
நிலத்தின் பல கூறுகள் இப் பாடலில் இடம்பெற்றுள்ளன. பாலைத் திணை பிரிவைப் பற்றிப் பேசுவது. இங்கே பிரிந்து 
சென்றவள் தலைவி. தந்தை வீட்டின் அருங்கடியையும் நீவியவளாய், வளர்த்த தாயையையும், உடன் விளையாடிய 
ஆயத்தையும் விட்டுப் பிரிந்து, தலைவனுடன் உடன்போக்காய்ச் சென்றுவிடுகிறாள். தலைவியை நினைத்து, அவளை
வளர்த்து ஆளாக்கிய செவிலித்தாய் ஏங்கிப் புலம்பும் புலம்பலாக இப் பாடல் அமைந்துள்ளது.

	செவிலித்தாய் என்பவள் குழந்தையை வளர்க்க வீட்டாரால் நியமிக்கப்பட்டவள். வீட்டோடு இருந்து குழந்தையைக்
கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வருகிறாள் இந்தத் தாய். தலைவி தன் தோழியருடன் விளையாடும்போதுகூட அவள் 
அருகிலேயே இருக்கிறாள். விளையாட்டு நேரத்தில் தலைவி களைப்படைந்து வரும்போது அவள் நெற்றி வியர்வையைத் 
துடைத்துவிடுகிறாள். தன்னைக் கட்டிப்பிடிக்கும் அவளை அணைத்து, தன் உடல் வெம்மையால் அவளுக்கு உயிர்ப்பூட்டுகிறாள். 
அப்படி வளர்த்த அன்பு மகள் இன்று யாரோ ஒரு பேர் தெரியாத பயலுடன் போய்விட்டாள். எப்படி மறந்தாள் தன்னையும், 
அவளுடன் விளையாண்டு திரிந்த அன்புத் தோழியரையும் என்று எண்ணி எண்ணி மாய்ந்துபோகிறாள் இந்தத் தாய். 
“கால் அமுக்கிக் கை அமுக்கிப் பொத்திப் பொத்தி வளர்த்த மகள் - இன்று காட்டு மூங்கிலும் கருகிப்போகும் கடும் வெயிலில், 
பூக்கள்கூட உதிர்ந்து, மரங்கள் புல்லென்று காட்சிதரும் கரட்டு வழியில்,  சிலம்பு ஒலிக்கும் தன் சீறடியை எடுத்துவைத்து, 
எப்படித்தான் நடந்துசென்றாளோ - என் அறிவுக்கொழுந்தான அருமை மகள்” என்று நீட்டிய காலும், நீள்பெருமூச்சுமாய் 
அமர்ந்திருக்கும் ஒரு முதிய பெண்ணை உள்ளத்தில் கொண்டுவாருங்கள் -  அப்படியே  உருகிப்போவீர்கள்!

பாடலின் பொருள் விளக்கம்

	வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்
	இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்
	உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ
	மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென
5	முயங்கினள் வதியும் மன்னே --

	வளமை கொண்ட செல்வம் நிறைந்த வீட்டில், சிறிதளவு நேரமே (தோழியருடன்) பந்து ஆடினாலும், 
	இளைய துணையாகிய அத் தோழியருடன் சேர்ந்து கழங்கு ஆடினாலும், 
	‘அன்னை, என் மேனி வருத்தமுறுகின்றதே’ என்று தளர்வுற்று, 
	வியர்க்கும் நெற்றியுடன் செவிலித்தாயை அணைத்துக்கொள்வாள் தலைவி.

	இளம் துணை ஆயமொடு என்பதைப் பந்துக்கும், கழங்குக்கும் பொதுவாகக் கொள்ளவேண்டும். பந்தெறியும் ஆட்டம் 
வீட்டு முற்றத்தில் ஓடியாடி விளையாடுவது. அதில் களைத்துப்போய், திண்ணையில் அமர்ந்தவாறே கழங்கு ஆடி, அதிலும் 
களைத்துப்போய், அருகிலிருக்கும் வளர்ப்பு அன்னையின் மடியில் சாய்ந்துகொள்கிறாள் தலைவி. வியர்க்கும்போது அதிகமான 
நீர் வெளியே வருவதால் உடம்பு குளிர்ந்துபோகிறது. அதோடு தாயை அணைக்கும்போது, தலைவியின் குளிர்ந்த உடம்பு தாய்க்குச் 
சில்லென்று இருக்கிறது. தண்ணென முயங்கினள் என்பதன் பொருள் இதுவே. மன்னே என்பது இப்படியெல்லாம் நடந்ததே என்று 
ஏக்கத்துடன் கூறுவதாகப் பொருள்தரும்.

	சிறிய கள் பெறினே எமக்கீயும் மன்னே
	பெரிய கள் பெறினே
	யாம் பாடத் தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே 

	என்று அதியமான் இறந்த பிறகு ஔவையார் அவனை நினைத்து அழும்போது கூறுகிறாரே – அது போல.
	
	  --  இனியே
	தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
	நெடுமொழித் தந்தை அரும் கடி நீவி
	நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
	சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
10	வல்லகொல் செல்லத் தாமே -- 

	(அப்படியெல்லாம் இருந்த மகள்) இப்பொழுது, 
	தோள்வளை அணிந்த தன் தோழியரையும், (வளர்த்த) என்னையும் நினைத்துப்பார்க்கவில்லை - 
	ஊரார் புகழும் தன் தந்தையின் அரிய கட்டுக்காவலையும் மீறி, 
	ஓர் அந்நியனின் மனதை முழுதுமாய்க் கவர்ந்த என் அறிவுடைச் சிறுமகளின் சிலம்பொலிக்கும் சிறிய பாதங்கள் 
	(அவனுடன்) நடந்துசெல்லும் அளவுக்கு வலிமை பெற்றுள்ளனவோ?

	முதுக்குறைவன் என்பது பேரறிவாளனைக் குறிக்கும். சிறு முதுக்குறைவி என்பது அறிவுள்ள இளம்பெண் என்ற 
பொருள் தரும். தாய் தன் மகளை, ‘என் குட்டி அறிவுக்கொழுந்தே!’ என்று கொஞ்சுவது இல்லையா? – அது போல.

	   -- கல்லென
	ஊர் எழுந்து அன்ன உரு கெழு செலவின்
	நீர் இல் அத்தத்து ஆர் இடை மடுத்த
	கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி
	நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும்--

	ஓர் ஊரே நடந்து செல்வதைப் போன்று, காண்போர் அச்சங்கொள்ளத்தக்க வகையில் செல்லுகின்றன 
	உமணரின் தொடர் மாட்டுவண்டிகள். 
	நீரில்லாத நிலப்பரப்பில், செல்ல முடியாத கடினமான பாதையில், 
	மாடுகளை அதட்டி ஓட்டுவதற்காக, சாட்டைகளைக் கையில்கொண்ட உமணர்கள் உரப்பி எழுப்பும் ஒலி, 
	மலை உச்சிகளில் பட்டு எதிரொலிக்கும் -

	உமணர் என்போர் உப்பு வணிகர். உப்பளங்களிலிருந்து உப்பு மூடைகளை மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டு, 
ஊரூராய்ச் சென்று விற்று வருவர்.

				
			நன்றி : 17thcenturysiam.blogspot.com, www.indianoldphotos.in 

15	கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல்
	பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
	அரும் சுரக் கவலைய --

	(ஞாயிற்றின்) கடுமையான கதிர்களால் முறுகிப்போன மூங்கில்கள் நிறைந்த வறண்ட மலைநிலங்களில், 
	பெரிய களிறுகள் தம் மேனி மண்ணைத் தேய்த்ததால் மண்ணாகிப்போன நடுப்பாகங்களைக் கொண்ட யா மரங்கள் நிற்கும் 
	அரிய பாலைநிலத்தில் கிளைத்துச் செல்லும் பல வழிகளைக் கொண்ட –

	பிறங்கல் என்பதற்கான விளக்கமும் படமும் அகம் பாடல் 8 – இற்கான படவிளக்கவுரையில் காண்க.
	
	-- அதர் படு மருங்கின்
	நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்
	விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
20	நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி
	வைகுறு மீனின் தோன்றும் -

	நெடிய வழிகளின் இரு பக்கங்களிலும், 
	நீண்ட நடுமரத்தை உடைய இலவமரங்களில், மலர்ந்து முடித்த பூக்கள் - 
	திருவிழா நடைபெறும் பழமையான சிறப்பு வாய்ந்த முதிய ஊர்களில் 
	எண்ணெய் கொண்டு எரியும் விளக்குச் சுடர்களைப் போன்று - காற்று ஓங்கி வீசுவதால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துபோய், 
	வைகறைக் கால வானத்து விண்மீன்களைப் போன்று தோன்றும் -

	மை படு மா மலை விலங்கிய சுரனே
	
	மேகங்கள் நிறைந்த பெரிய மலைகள் குறுக்கே நிற்கும் வறண்ட பாலை நிலத்தில்.

10	வல்லகொல் செல்லத் தாமே – 
	-----------------------
22 	மை படு மா மலை விலங்கிய சுரனே

	என்று பாடல் நிறைவு பெறும். 

	தலைவி இன்னும் நெடுந்தொலைவு நடக்க-வேண்டும் – எதிரே இன்னும் பல பெரிய மலைகள் குறுக்கே நிற்கின்றனவே. 
விலங்குதல் என்பது குறுக்கே நிற்றல்.

கயமனார் காட்டும் மூன்று காட்சிகள்

	போனவள் போய்விட்டாள்; இருக்கிறவளுக்கு எத்தனை கவலைகள்? பெற்ற மனம் பித்துப்பிடித்ததா என்று தெரியவில்லை. 
ஆனால் வளர்த்த மனம் வாய்மூடாமல் புலம்பிக்கொண்டிருகிறது. தொட்டு விளையாடிய தொடி மாண் சுற்றத்தையும், தூக்கி வளர்த்த 
தொத்தாவையும் துறந்துவிட்டுப் பிள்ளை மனம் கல்லாகிப் போய்விட்ட அவள் வாழ்ந்த வாழ்க்கை என்ன, இருந்த இருப்பு என்ன என்று 
அசைபோட்டு எண்ணிப் பார்த்த தாய்மனம், அடுத்து இப்பொழுது எங்கே இருக்கிறாளோ, என்ன செய்துகொண்-டிருக்கிறாளோ என்று 
கற்பனை செய்துகொண்டு கண்ணீர்விட ஆரம்பிக்கிறது. இந் நிலையில் மூன்று காட்சிகளை அடுத்தடுத்து வைக்கிறார் புலவர்.

	1. நீரில் அத்தத்து ஆரிடையில் உப்பு வண்டிகளை இழுக்க முடியாத காளைகளை உமணர் அதட்டும் ஒலி உயர்ந்த மலையில் 
மோதி எதிரொலிக்கிறதாம். இது இங்கு எதற்கு?

	ஊருக்கு வெளியில் போகும் நெடுவழியில், ஊர்ந்து செல்லும் உமணரின் உப்பு வண்டிகளின் பேரிரைச்சலைத் தாய் கேட்கிறாள். 
நெடுவழிப் பயணமாதலால், ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருந்துகொள்ளவும், ஆறலைக் கள்வரினின்றும் காத்துக்கொள்ளவும், 
பத்து-இருபது வண்டிகளில் ஒன்றுசேர்ந்து, நீண்ட தொடர்வண்டி போல, உமணர் ஊர் ஊராய்ப் போய்க்கொண்டிருப்பர் - இன்றைய caravan 
மாதிரி. கற்களும், மணலும் நிறைந்த கரடு முரடான நிலத்து வழியில் (ஆரிடை) செல்லும்போது மாடுகள் வண்டியை இழுக்க மிகுந்த 
சிரமப்படும். அப்போது, எல்லா வண்டிக்காரர்களும் ஒரே வண்டி அருகில் வந்து சக்கரங்களைப் பிடித்து உருட்டியும் தள்ளிவிட்டும் 
உதவிசெய்வார்கள். அப்படியும் இழுக்க முடியாத மாடுகள், கால்கள் வழுக்கி, மண்டிகால் போட்டுப் படுத்துவிடும். அவற்றை 
ஆசுவாசப்படுத்தி, ‘தோ, தோ’ என்று பரிவுடன் தடவிக்கொடுப்பர். பின்னர், சிறிது நேரம் கழித்து, அந்த மாட்டை ஒருவாறு எழுப்பிவிட்டு, 
மீண்டும் முன்பு போல் முயற்சிசெய்வர். அப்போது, மாடுகளுக்கு உற்சாகம் கொடுக்கிற மாதிரி, “இந்தா, பிடி, தள்ளு, ஆச்சு, கொஞ்சம்…” 
என்று உரக்க ஒலி எழுப்புவர். இதைத்தான் தாய் பகடு தெழி தெள் விளி என்கிறாள். ஊரே கூடி வந்ததைப் போல் இவர்கள் கூடி எழுப்பும் 
ஒலி மலையுச்சியில் எதிரொலிக்கும். இவ்வாறு அரிமணல் ஞெமரக் கல் பக நடக்கும் பெருமிதப் பகடுகளும் தடுமாறும் பாதையில் என் 
அன்பு மகள் எவ்வாறு நடந்துபோகப் போகிறாளோ என்று மயங்குகிறாள் தாய். “சிறிது பந்து எறிந்தாலும் கால் நோகும் – கொஞ்சம் 
கழங்கு ஆடினாலும் கை நோகும் – அப்படிப்பட்ட செல்ல மகள் அந்தக் கரட்டுப் பாதையில் எட்டெடுத்து வைத்து எப்படி நடப்பாளோ? - 
இழுக்க முடியாத மாடுகளைத் தார்க்குச்சியின் முள்ளினால் குத்திச் செலுத்தும் கொடும்கோல் உமணரைப் போல அன்றி, நோவெடுத்த 
கால்களுள்ள என் நுதல் வியர் செல்வியை அந்த நொதுமலாளன் நொடிக்காமல் அழைத்துச் செல்லவேண்டுமே” என்று தாய் 
கலங்குவதாகக் கொண்டால், பாடலின் முதலில் வரும் சில அடிகளுக்கும், இந்த உமணர் காட்சிக்கும் உள்ள தொடர்பு புரியும்.

	2. அடுத்து, கடுங் கதிரால் தீய்ந்து போன மூங்கில்கள் உள்ள வறண்ட மலைப்பகுதியில் நின்றிருக்கும் யா மரத்தில் தம் 
முதுகினை உரசும் யானைகளைக் காண்பிக்கிறார் புலவர். நீர் இல் அத்தத்து ஆரிடையில், நீரைத் தேடி அலைந்த யானைகள் சேறும் 
சகதியுமான ஓர் இடத்தைக் காண்கின்றன. மூங்கிலும் தீய்ந்துபோகும் கடுங் கதிரின் வெப்பத்தைத் தாங்கமாட்டாத யானைகள் சேற்று நீரை 
உறிஞ்சி உடம்பின் மேல் தூவிக்கொள்கின்றன. சேறு காய்ந்த பின் தோலை இறுக்குகிறது. இதனால் தினவெடுத்த யானைகள் சொறிந்துவிட 
இடம் தேடி அலைந்து, யா மரத்தில் உரசிக்கொண்டு தங்கள் மேனியைத் தேய்த்துவிடுகின்றன. “பெருங் களிறுக்கே இந்தக் கதி - ஓரளவு 
நெற்றி வியர்த்தாலும், ஓடி என் அருகில் வந்து, ‘உயங்கின்று அன்னை, என் மெய்’’ என்று என் மகள் என்னை அணைத்து அமர்வாளே, 
என் சீறடிச் செல்ல மகள் அந்த அருஞ் சுரத்தின் கவர்த்த பாதைகளில் என்ன பாடு படுகின்றாளோ, இப்போது” என்று தாய் கலங்குவதாகக் 
கொண்டால், பாடலின் முதலில் வரும் சில அடிகளுக்கும், இந்த யானைக் காட்சிக்கும் உள்ள தொடர்பு புரியும்.

	3. மூன்றாவதாக, புலவர் ஓர் இலவமரக் காட்சியைக் காண்பிக்கிறார். யா மரங்கள் நிற்கும் கிளைப்பாதைகளைக் கொண்ட 
நெடுவழியின் ஓரத்தில் இலவமரங்கள் நிற்கின்றன. அதன் நீள் அரையின் உச்சியில் இலவ மலர்கள் மலர்ந்துள்ளன. பொதுவாக 
இலவமரங்கள் மலர் விடும் காலத்தில் இலைகளை உதிர்த்துவிடும் என அறிவோம் (பார்க்க – பாடல் 11). அந்த மலர்களும் முழுவதுமாய்ப் 
பூத்து முடியும் காலம் அது (ஊழ் கழி). அப்போது காற்று வேகமாக வீசுகிறது. ஏற்கனவே, பிடிமானம் தளர்ந்திருந்த பூக்கள் ஒவ்வொன்றாய் 
உதிரத் தொடங்கின. நீரில்லா நெடுவழியில் தன் நெஞ்சு நேர்பவனுடன் நடந்து செல்லும் தலைவி காண்பது முதலில் வெயிலில் 
தீய்ந்துபோன மூங்கில் மரங்கள். அடுத்து யானைகள் உரசிக்கொண்டிருக்கும் யா மரங்கள். அதனையும் அடுத்து பூத்து முடியப்போகும் 
இலவமரங்கள். ஏற்கனவே இலை இழந்த மரங்கள். அவற்றில் இருக்கும் பூக்களும் உதிர்ந்து ஏறக்குறைய மொட்டையாய் நிற்கின்றன. 
வளம் கெழு திருநகரின் குளிர் நிழலில் தங்கி வளர்ந்தோள் - இந்த நீள் அரை மொட்டை மரங்களில், நிழலுக்கு எங்கே ஒதுங்குவாள் 
என் மகள் எனக் கலங்குவதாகக் கொண்டால், பாடலின் முதலில் வரும் சில அடிகளுக்கும், இந்த இலவமரக் காட்சிக்கும் உள்ள 
தொடர்பு புரியும்.

காட்சிகள் கூறும் உள்ளுறைச் செய்திகள்

	உமணர் செல்லும் காட்டு வழி, காட்டு வழியில் நிற்கும் யா மரங்கள், அவற்றின் மருங்கில் பூத்திருக்கும் இலவமரங்கள் 
என்ற தொடர் காட்சிகள் தலைவியின் சிறுவயது வாழ்க்கையுடன் எவ்வாறு தொடர்பு கொண்டவை என்பதைப் பார்த்தோம். ஆனால், 
இக் காட்சிகளை, தலைவியின் செயலால் ஏற்படவிருக்கும் பின்விளைவுகளை எண்ணிப் பார்க்கும் தாயின் சொற்களாகவும் கொள்ளலாம்.

	1. உப்பு வணிகரின் உரத்த பேச்சின் ஒலி உயர்ந்த மலையில் எதிரொலிக்கும் என்ற தாயின் கூற்று, தலைவி வீட்டைவிட்டுச் 
சென்றதால் ஊர் மக்கள் பேசும் பழிச்சொல் எட்டூரைத் தாண்டிக் கேட்குமே என்று தாய் அஞ்சுவதாகக் கொள்ளலாம்.

	2. யானைகள் யா மரத்தில் உராய்ந்து உராய்ந்து தம் உடம்பின் சேற்றை மரத்தில் ஏற்றிவிட்டுச் செல்வது போல, ஊர்மக்களின் 
ஏளனப்பேச்சு உயர்ந்த குடும்பத்தின் மீது சேற்றை வாரிப் பூசிவிடுவது போல் அமைந்துவிடுமே என்று தாய் கலங்குவதாகவும் கொள்ளலாம்.

	3. வீசுகிற பெருங்காற்றால் இலவமரத்தின் பூக்கள் உதிர்ந்து ஒருசிலவே மரத்தில் தங்கியிருப்பது போன்று, ஊர்மக்கள் 
அலர் தூற்றுவதால் தந்தையின் குடிக்கு இருந்த பெருமையெல்லாம் பெரும்பாலும் சில்கிச் சிறுத்துப்போய்விடாதா என்று தாய் 
வருந்துவதாகவும் கொள்ளலாம்.

	இவ்வாறு காட்சிகளை மறைமுகமாக இறைச்சிப்பொருள் தருவனவாகவும், நேர்ப்பொருளில் உள்ளுறை உவமமாகவும் 
அமைத்திருக்கும் புலவரின் திறன் போற்றுதற்குரியதன்றோ?

கயமனாரின் உவமை நயம்

	கயமனார் தான் காட்டிய மூன்று காட்சிகளில் இறுதிக் காட்சியான இலவமரக் காட்சிக்கு ஓர் அருமையான உவமையைக் 
கையாள்கிறார். நமது ஊர்ப்புறச் சிற்றூர்களில் ஒருசிலவே தனித்தன்மையும் பழமையும் வாய்ந்தவையாக இருக்கும் 
(பழவிறல் மூதூர் – தேனி மாவட்ட வீரபாண்டி போன்று). அப்படிப்பட்ட ஊர்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதனை ஒட்டி கரகாட்டம், 
ஒயிலாட்டம், முளைப்பாரி, கும்மியாட்டம், சிலம்பம், பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம் போன்ற பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். 
அவை பெரும்பாலும் இரவு நேரங்களில் நடைபெறும். அப்போது நிகழ்ச்சிகளுக்காகவும், மக்கள் நடமாட்டத்துக்காகவும் ஆங்காங்கே 
கம்பங்களில் விளக்குகள் ஏற்றிவைத்திருப்பார்கள். ஊர் முழுதும் ‘ஜகஜ்ஜோதியாய்’ இருக்கும். அந்த விளக்குகளுக்கு அவ்வப்போது 
எண்ணெய் ஊற்றிக்கொண்டிருப்பார்கள். நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக முடிய முடிய, இரவும் முடியும் நேரத்தில் விளக்குகளுக்கு எண்ணெய் 
வார்ப்பதை நிறுத்திவிடுவார்கள். அந்த விளக்குகள் ஒவ்வொன்றாக அணையத் தொடங்கும். கழன்று விழும் நிலையிலுள்ள இலவமரத்துப் 
பூக்களின் மீது காற்று வேகமாக வீசும்போது அவை ஒவ்வொன்றாக உதிர்ந்து விழுவது, திருவிழாக்காலத்து நெய்விளக்குகள் 
ஒவ்வொன்றாய் அணைந்துபோவது போல இருக்கின்றதாம் புலவருக்கு. இவ்வாறு பெரும்பாலான பூக்கள் உதிர்ந்து ஒருசில பூக்களே 
ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த இலவம் பூக்கள், வைகறை விண்மீன்களைப் போல் காட்சியளிக்கின்றனவாம். நிலவு இல்லாத 
ஒரு நாள் விடியற்காலை நான்கு மணியளவில் எழுந்து கீழ்வானத்தைப் பாருங்கள். எண்ண முடியாத விண்மீன்கள் 
மின்னிக்கொண்டிருக்கும். நேரம் ஆக ஆக, அடிவானத்தில் எழும் ஞாயிற்றின் கதிரொளி தோன்றத் தோன்ற விண்மீன்கள் தம் ஒளியை 
இழப்பதினால் அவை ஒவ்வொன்றாய்க் ‘காணாமல்’ போய், அவற்றின் எண்ணிக்கை சிறுத்துக்கொண்டே வரும் – இருப்பனவும் ஒளி 
குன்றி இருக்கும். இவ்வாறு இலவமரத்துப் பூக்கள் ஒவ்வொன்றாய் உதிர்வதற்கும், இருக்கின்ற பூக்களின் இயல்பு குன்றிய நிலைக்கும் 
ஆக இரண்டு உவமைகளை அடுத்தடுத்துப் பயன்படுத்தியிருக்கும் புலவரின் உவமைத் திறன் பாராட்டுதற்குரியது அல்லவா!

கயமனாரின் சொல் திறன்

	சில திரைப்படங்களில் இயற்கைக்கு முரணான சில காட்சிகளைக் காண்பிப்பார்கள் – எங்கிருந்தோ ஒரு சேலை நீண்டு வந்து 
ஒரு பெண்ணின் உடம்பைச் சுற்றிக்கொள்கிறது போல. முதலில், உடுத்திக்கொண்டிருக்கிற சேலையை உருவுவது போல் படம் பிடித்து 
அதை எதிர்த்திசையில் (reverse direction) ஓட்டி அதையும் படம்பிடித்துக் காட்டுவது இம்முறையில் அமையும். இப் பாடலில், 
சொல்லமைப்பில் புலவர் reverse direction – இல் சிந்தித்திருப்பதை இப் பாடலில் காணலாம். ஒருவர் ஆணும் பெண்ணுமாய்ச் 
சில ஆடுகளை வளர்க்கிறார். சில ஆண்டுகளில் ஆடுகள் குட்டிபோட்டு, குட்டிகள் பெரிதாகி அவையும் குட்டிபோட்டு என ஆடுகளின் 
எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகமாகும். இதைப் பல்கிப் பெருகுதல் எனலாம். இதுவே எதிர்த்திசையில் நடந்தால்? தொழு நிறைய 
ஆடுகள் இருந்து, ஏதோ நோய் தாக்கியதால், அவை ஒவ்வொன்றாய் இறந்துபோக, அவற்றின் எண்ணிக்கை நாளாவட்டத்தில் 
குறுகிக்கொண்டே போகும் இல்லையா? இதைச் சில்கிச் சிறுகுதல் என்று சொல்லலாமா?  புலவர் சொல்கிறார். காற்று வீசுவதால் பூக்கள் 
ஒவ்வொன்றாய் உதிர்ந்துபோவதைக் கால் பொரச் சில்கி என்கிறார் புலவர். சங்கப் பாடல் வேறெதிலும் காணப்படாத சில்கு என்ற 
இச் சொல் புலவரின் சொல்லாக்கத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு. 

	திருவிழாக் காலத்தில் தெருக்களில் ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை நெய் உமிழ் சுடர் என்கிறார். உமிழ்தல் என்பது 
துப்புதல், வெளிவிடுதல் என்ற பொருள் தரும். ஆழமான கிணற்றிலிருக்கும் நீரை, குழாய் அமைத்து, இயந்திரங்கள் மூலம் உறிஞ்சி 
வெளிக்கொணர்வர். இந்த இயந்திரங்கள் உள்ளிருக்கும் நீரை உறிஞ்சி, மேலே கொணர்ந்து துப்புகின்றன என்று சொல்லலாமா? 
அகல் விளக்குகள், அகலுக்குள் இருக்கும் எண்ணெயைத் திரியின் மூலம் உறிஞ்சி, நுனிக்குக் கொண்டுவந்து, அந்த எண்ணெயைத் 
தீக்கொழுந்தாய்த் துப்புகின்றன. நெய் உமிழ் சுடர் என்ற தொடர் இந் நிகழ்ச்சியை எத்துணை அழகாக எடுத்துரைக்கின்றது பாருங்கள்!

அருஞ்சொல் பொருள் விளக்கம்

1. பந்து எறிதல்

	சங்க காலத்து மகளிர் விளயாட்டுகளில் ஒன்றாகப் பந்து எறிதல் என்ற விளையாட்டைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் 
கூறுகின்றன. பல பந்துகளை மாறிமாறித் தூக்கிப்போட்டு அவை கீழே விழாமல் பிடித்து மீண்டும் தூக்கிப் போடும் jugglary போன்ற 
விளையாட்டு இது என்பர். இதே போல பந்தை உருட்டுதல், பந்தைத் தூக்கிக் கொண்டு ஓடுதல், பந்தை அடுத்தவர் மேல் எறிதல் போன்ற 
பலவகையான பந்துவிளையாட்டுகளை மகளிர் ஆடியதாக அறிகிறோம். 

	வான் தோய் மாடத்து வரிப் பந்து அசைஇ - பெரும் 333
	ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி - நற் 324/7
	கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி - கலி 51/3
	பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி - அகம் 275/3

	என்ற அடிகள் இதனை உணர்த்தும்.

	சிலப்பதிகாரம் 29 கந்துகவரி என்னும் தலைப்பின் கீழ் 3 பாடல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று.

	பொன்னி லங்கு பூங்கொ டிபொ லஞ்செய் கோதை வில்லிட
	மின்னி லங்கு மேக லைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும்
	தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்று பந்த டித்துமே
	தேவ ரார மார்பன் வாழ்க வென்று பந்த டித்துமே.

	இந்தப் பாடலைச் சந்தத்துடன் பாடுவது பந்து ஆடுவது போன்று இல்லையா? பிற்காலத்தில், இவ்வாறு பாடிக்கொண்டு 
பந்து ஆடும் விளையாட்டு அம்மானை எனப்பட்டது.

2. கழங்கு ஆடுதல்
	கழங்கு என்பது கழற்சிக்காய் விதை என்பர் (molucca bean). இது கொடியில் காய்ப்பது. பொதுவாக இந்தக் கழங்கு 
உருண்டையாக இருக்கும். முத்து, ஆலி எனப்படும் ஆலங்கட்டி போன்றவை பெரிதாக இருப்பின் அவை கழங்குக்கு ஒப்பிடப்பட்டன. 

	கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம் - அகம் 126/12
	வட்டக் கழங்கின் தாஅய் - அகம் 241/14
	கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி - அகம் 334/8

	என்ற அடிகளால் இதனை அறியலாம்.

	இந்த விதைகளைச் சங்க மக்கள் இருவிதமாகப் பயன்படுத்தினர் என அறிகிறோம். அவை 

அ. மகளிர் விளையாட்டு, ஆ. வேலன் குறிசொல்லல்

	அ. கழங்குகளைக் கொண்ட பல விளையாட்டுகள் மகளிரால் ஆடப்பட்டன. அந்த ஆட்டங்கள் அனைத்துமே கழங்காட்டம் 
அல்லது கழங்கு எனப்பட்டன. வீட்டுத் திண்ணைகளிலும், ஆற்று மணலிலும் கழங்காட்டங்கள் ஆடப்பட்டன.

	திண்ணையின் சமதளப் பரப்பில், ஒரு காலை மடக்கியும், அடுத்த காலை மடக்கிப் பின்புறம் நீட்டியும் அமர்ந்துகொண்டு, 
கழங்குகளை உள்ளங்கைகளில் அடக்கிக் குலுக்கி, சாய்வாக உருட்டிவிடுவர். ஒரே ஒரு கழங்கை மட்டும் எடுத்து, அதனைச் சற்று 
உயரத் தூக்கிப்போட்டு, அது கீழே விழுவதற்குள் சிதறிக் கிடக்கும் காய்களில் ஒன்றை மட்டும் பொறுக்கவேண்டும். பின்னர், மேலே 
சென்று கீழிறங்கும் கழங்கைத் தரையில் விழாமல் பிடித்துக்கொள்ளவேண்டும். அப்போது மற்ற காய்களைத் தொடக்கூடாது. இவ்வாறு 
ஓவ்வொன்றாகப் பொறுக்கிய பின், மீண்டும் இதேபோல் இரண்டிரண்டாக, மூன்றுமூன்றாக, என்று கூட்டிக்கொண்டே செல்வார்கள். 
இறுதியில் அனைத்தையும் ஒரே வாரில் வாரி எடுக்கவேண்டும். இதனைத் தட்டாங்கல் என்பர். 

	திண்ணையில் செவ்வக வடிவில் பள்ளங்களை அமைத்து, அவற்றில் கழங்குகளை ஒவ்வொன்றாக இட்டு ஆடும் ஆட்டமான 
பல்லாங்குழி ஆட்டம் இன்றும் சில இடங்களில் ஆடப்படுகிறது. இதற்கென பல்லாங்குழிப் பலகைகளும் உண்டு. ஆற்று மணலிலும் 
குழிகள் பறித்து மகளிர் ஆடுவர் எனத் தெரிகிறது.

	பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் - புறம் 36/4 (தெற்றி = திண்ணை)
	-நெடு வேய்க்
	கண்விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
	கழங்கு உறழ் தோன்றல பழம் குழி தாஅம் - அகம் 173/15
	முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் - பெரும் 335
	மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம் - நற் 79/3
	பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு - ஐங் 249/1

	என்ற அடிகள் கழங்குகளைக் கொண்டு திண்ணையிலும், மணலிலும் பல்லாங்குழி ஆடுவர் என்பதனை உணர்த்தும்.

				

கழங்குகளைத் தூக்கிப்போட்டு ஆடுவதும் ஒருவகைக் கழங்காட்டம்.

	அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்
	வட்டக் கழங்கில் தாஅய்த் துய்த் தலைச்
	செம்முக மந்தி ஆடும் – அகம் 241/13-15

	என்ற அடிகள் குரங்குகளும் நெல்லிக்காய்களைக் கொண்டு ஒரு வகைக் கழங்காட்டம் ஆடின என்பதை 
நகைச்சுவையுடன் கூறும்.

ஆ. சோழி என்ற ஒருவகைச் சிப்பிகளை (cowrie) உருட்டிவிட்டு, அதன்மூலம் குறிசொல்லுவோர் இன்றும் உண்டு. 

	சங்க காலத்தில் வேலன் கழங்குகளை உருட்டி, எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. 
இதுவும் கழங்கு எனப்பட்டது.

	அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி - நற் 47/8
	மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே - நற் 268/9
	அணங்கு உறு கழங்கின் முது வாய் வேலன் - நற் 282/5
	கழங்கினான் அறிகுவது என்றால் - ஐங் 248/3
	பொய் படுபு அறியா கழங்கே மெய்யே - ஐங் 250/1
	கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம் - அகம் 195/15

	என்ற அடிகளால், கழங்கின் மூலம் குறிசொல்லப்பட்டது என்று அறிகிறோம். 

3. யா மரம் 

	சால மரம் (Shorea robusta) அல்லது ஆச்சா மரம் என்று கூறப்படும் மரம் இதுவே என்பர். ஆனால், தமிழ்ப் பேரகராதி 
யா என்பது ஒருவகை மரம் என்று மட்டுமே கூறுகிறது. இந்த மரத்தின் பட்டை நீர்ப்பசை மிக்கது. எனவே, பாலை நிலத்திலும் 
இந்த மரம் செழித்து வளர்ந்து இருக்கிறது.  இதனைப் பற்றி Tamil Virtual Academy – யின் பாடப்புத்தகம் கூறுவது:

	யாமரம் :இம்மரம் பாலை நிலத்துக்குரியது. வயிரமுடையதாகவும் பொரிந்த அடியை உடையதாகவும் கூறப்படும். 
யானை இதன் பட்டையை உரித்து உண்டு, அதில் உள்ள நீரினால் நீர் வேட்கையைத் தணித்துக் கொள்ளும். சிறுபான்மை குறிஞ்சி 
நிலத்திலும் இது காணப்படும். அங்கே கானவர் இதனை வெட்டி விட்டுத் தினையை விதைப்பர்.
	நன்றி : http://www.tamilvu.org/slet/l1200/l1200pd1.jsp?bookid=22&auth_pub_id=101&pno=1043

				
				நன்றி : en.wikipedia.org                   www.haryana-online.com

	(1) பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து - அகம் 17/16
	(2) இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து - அகம் 31/5
	(3) கவை முறி இழந்த செம் நிலை யாஅத்து - அகம் 33/3
	(4) நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள் - அகம் 59/8
	(5) மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை - அகம் 65/13
	(6) கவை ஒண் தளிர கரும் கால் யாஅத்து - அகம் 187/15
	(7) குறும் பொறை எழுந்த நெடும் தாள் யாஅத்து - அகம் 193/7 
	(8) மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து - அகம் 257/14
	(9) நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம் - அகம் 263/8
	(10) ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த - அகம் 287/11 
	(11) யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின் - அகம் 333/1.
	(12) சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த - அகம் 337/1)
	(13) நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை - அகம் 343/10

	எனக் கிடைக்கும் அடிகளால், யாமரம் மிகவும் உயர்ந்தது, உயரத்தில் மிக்க பரந்த கிளைகளை உடையது, 
சிவந்த தளிர்களை விடக்கூடியது, கரிய நடுமரத்தை உடையது, என அறிகிறோம்.

4. இலவ மரம்

	இலவ மரத்தைப் பற்றிய சில செய்திகளை முன்னர்க் கண்டிருக்கிறோம் (அகம் 11). இப் பாடலில் நீள் அரை இலவம் 
என்று குறிப்பிடப்பட்டிருப்பது எத்துணை பொருத்தமானது என்று பாருங்கள்! அது நெருக்கமாய் அமைந்த பல மலர்களை உடையது 
எனவும் காண்கிறோம். காற்று ஓங்கி வீசும்போது இந்த மலர்கள் ‘பொல பொல’வென்று உதிராமல் ஒன்றொன்றாய்க் கழன்று 
விழுமாம் – ஒவ்வொன்றாய் அணைகிற திருவிழாத் தீப்பந்தங்கள் போல! வைகறை வானத்துத் தாரகைகளைப் போல 
அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காட்சியளிக்குமாம்!

				
				நன்றி: memoirsofaponderingheart.blogspot.com     kanak7.wordpress.com 

				
				நன்றி: www.thelovelyplants.com