அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                          அகநானூறு - 33

பாடல் 33. பாலைத் திணை  பாடியவர் - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

துறை - தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
.
 மரபு மூலம் - பிரியாயாயின் நன்றுமன் 

	வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி
	மனைமாண் கற்பின் வாணுத லொழியக்
	கவைமுறி யிழந்த செந்நிலை யாஅத்
	தொன்றோங் குயர்சினை யிருந்த வன்பறை
5	வீளைப் பருந்தின் கோள்வல் சேவல்
	வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரு
	மிளிதேர் தீங்குர லிசைக்கு மத்தஞ்
	செலவருங் குரைய வென்னாது சென்றவள்
	மலர்பா டான்ற மையெழில் மழைக்கண்
10	டெளியா நோக்க முள்ளினை யுளிவாய்
	வெம்பர லதர குன்றுபல நீந்தி
	யாமே யெமிய மாக நீயே
	வொழியச் சூழ்ந்தனை யாயின் முனாஅது
	வெல்போர் வானவன் கொல்லி மீமிசை
15	நுணங்கமை புரையும் வணங்கிறைப் பணைத்தோள்
	வரியணி யல்குல் வாலெயிற் றோள்வயின்
	பிரியா யாயின் நன்றுமன் தில்ல
	வன்றுநம் மறியா யாயினு மின்றுநஞ்
	செய்வினை யாற்றுற விலங்கி
20	னெய்துவை யல்லையோ பிறர்நகு பொருளே

 சொற்பிரிப்பு மூலம்

	வினை நன்று ஆதல் வெறுப்பக் காட்டி
	மனை மாண் கற்பின் வாள் நுதல் ஒழியக்
	கவை முறி இழந்த செம் நிலை யாஅத்து
	ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை
5	வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
	வளை வாய்ப் பேடை வருதிறம் பயிரும்
	இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
	செலவு அரும்குரைய என்னாது சென்று அவள்
	மலர் பாடு ஆன்ற மை எழில் மழைக் கண்
10	தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய்
	வெம் பரல் அதர குன்று பல நீந்தி
	யாமே எமியம் ஆக நீயே
	ஒழியச் சூழ்ந்தனை ஆயின் முனாஅது
	வெல் போர் வானவன் கொல்லி மீமிசை
15	நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள்
	வரி அணி அல்குல் வால் எயிற்றோள்வயின்
	பிரியாய் ஆயின் நன்றுமன் தில்ல
	அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம்
	செய்வினை ஆற்று உற விலங்கின்
20	எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே

அருஞ்சொற் பொருள்:

வினை = பொருள் ஈட்டும் செயல்; வெறுப்ப = மிகுதியாக; கவை = கிளைத்துப் பிரியும் இடம்; முறி = தளிர்; 
வன் பறை = வேகமாகப் பறக்கக்கூடிய; வீளை = சீட்டியடிக்கும் ஒலி; கோள் = இரையைப் பற்றுதல்; 
பயிரும் = அழைக்கும்; இளி = இராகவகைகளில் ஒன்று; அத்தம் = காட்டுவழி; குரைய = அசை; 
முனாஅது = முன்னையது, மிகப் பழையது; நுணங்கு = ; அமை = மூங்கில்; 
செய்வினை = பொருள் செய்வதற்கு மேற்கொண்டுள்ள செயல்; ஆறு = வழி; 
ஆற்றுற = நடுவழியில் இருக்கும்போது; விலங்கின் = மாறுபட்டால், விலகினால்; 

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

பொருள் தேடவேண்டும் என்ற அவா மிகக் கொண்டு தலைவன் தலைவியைப் பிரிந்து செல்கிறான். 
இடைவழியில் அவன் பிரிவினை எண்ணித் தடுமாறுகிறான் – திரும்பிப் போய்விடலாமா என்று யோசிக்கிறான். 
அவ்வாறு திரும்பிச் சென்றால், ஊராரின் நகைப்புக்கு இடமாகிப்போய்விடுவோமே என்று தொடர்ந்து செல்ல 
முடிவுசெய்கிறான். இதைத் தலைவனின் மனதுக்கும் நெஞ்சிற்கும் நடக்கும் போராட்டமாகக் கொண்டு புலவர் 
இப்பாடலைப் புனைந்துள்ளார். 

	பொதுவாக, அகப்பாடல்கள் இரண்டு கதைமாந்தரைக் கொண்டிருக்கும். அதில் ஒரு பாத்திரம் அடுத்த 
பாத்திரத்திடம் சொல்லும் கூற்றாகவே இப் பாடல்கள் அமையும். எனவே, ஒரு பாத்திரம் தனக்குத்தானே 
பேசிக்கொள்ளும் சூழ்நிலையையும், அப்பாத்திரத்தின் மனம் நெஞ்சுக்குக் கூறுவதாகவே புலவர்கள் படைக்கின்றனர். 
இத்தகைய உத்தி இன்றைய நாடகங்கள், திரைப்படங்கள் சிலவற்றில் இன்னும் கையாளப்படுகிறது. 

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	வினைநன்று ஆதல் வெறுப்பக் காட்டி
	மனைமாண் கற்பின் வாள்நுதல் ஒழியக்

	பொருளீட்ட மேற்கொள்ளவிருக்கும் செயல் நன்மை உடைத்தாதலை வெகுவாக உணர்த்தி
	மனையில் இருக்கும் சிறந்த கற்பினையுடைய ஒளிரும் நெற்றியை உடையோளைப் பிரிந்து,

	வினை என்பது பொருளீட்டுவதற்காகச் செய்ய இருக்கின்ற செயல். இதில் அயலூருக்கான பயணமும் 
அடங்கும். எனவே அதன் பொருட்டுத் தலைவியைப் பிரிவது தவிர்க்கமுடியாதது. இருப்பினும் அச்செயல் நன்மை 
பயக்கும் என்பதை நெஞ்சு வலியுறுத்திக்கூறுகிறது. வெறுப்ப என்பது மிகுதியைக் குறிக்கும். 

	கவைமுறி இழந்த செம்நிலை யாஅத்து
	ஒன்றுஓங்கு உயர்சினை இருந்த வன்பறை
5	வீளைப் பருந்தின் கோள்வல் சேவல்
	வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும்
	இளிதேர் தீம்குரல் இசைக்கும் அத்தம்
	செலவு அரும்குரைய என்னாது சென்று 

	கவடுகளில் முளைவிடும் தளிர்களும் இல்லாத, செங்குத்தாக நிற்கும் யாமரத்தின்
	ஒரே தண்டாக ஓங்கி உயர்ந்த மரத்தின் (உச்சிக்) கிளையில் இருக்கும், வலிய பறத்தலையுடைய
	சீட்டி ஒலி எழுப்பும் பருந்தின் (இரையைக் குறிபார்த்துக்)கவர்வதில் திறமைமிக்க ஆண் பறவை
	வளைந்த வாயை உடைய பெண்பருந்தை அழைப்பதற்காக மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
	இளி என்ற சுரத்தைத் தேரும் இனிய குரல் ஒலிக்கும் அருஞ்சுரம்
	செல்வதற்கு மிகவும் கடினமானது என்று எண்ணாமல் பயணத்தை மேற்கொண்டு,

	காய்ந்திருக்கும் மரங்கள் முதலில் தளிர்விடும்போது, தளிர்கள் கிளைகளின் கவடுகளில்தான் தோன்றும். 
இதனையே கவை முறி என்கிறார் புலவர். நீர் இன்மையால் அப்படி முளைத்த தளிர்களும் வாடி உதிர்ந்துவிட்டதால், 
மரங்கள் முறி இழந்தன என்கிறார். யா மரங்கள் வளைந்து நெளிந்து வளர்வதில்லை. தேக்கு மரங்களைப் போல் 
நேராக நிமிர்ந்து நிற்கின்றன. இதுவே செந்நிலை. இப்படிச் செங்குத்தாக வளரும் மரத்தண்டுகளினின்றும் பக்கங்களில் 
கிளைகள் பிரிவதில்லை. இவ்வாறு ‘நெடு நெடு’-வென்று வளர்ந்த மரத்தின் உச்சியில்தான் கிளைகள் படர்ந்து இருக்கும். 
இவ்வாறு மிக உயரத்துக் கிளையில் இருக்கும் பருந்து, தரையில் ஒரு சிறிய எலி அல்லது கோழிக்குஞ்சு 
போன்றவற்றைக் கண்டால், அம்பு போல் நேராக விரைந்து பாய்ந்து கீழிறங்கித் தன் இரையைக் கொத்திச் செல்லும். 
இதனையே வன்பறைச் சேவல் என்கிறார் புலவர். இவ்வாறு பாய்ந்து இரையைக் கொள்வதில் பருந்து தப்பாதது 
என்பதனையே கோள்வல் பருந்து என்கிறார் புலவர். கிராமத்தினர் தம் நாவை மடக்கிக் கீச்சுக்குரலில் நீளமான 
ஒலி எழுப்புவர். அது சீட்டி அல்லது சீழ்க்கை ஒலி எனப்படும். அதுவே வீளை எனப்படுகிறது இங்கே. பருந்துகள் 
சாதாரணமாக இவ்வாறு நீண்ட ஒலிகளி எழுப்பிக்கொண்டிருக்கும். எனவேதான் அது வீளைப்பருந்து எனப்படுகிறது. 
இவ்வாறு உச்சக்குரலில் வீளையிடும் ஆண்பருந்து, தன் பேடையை அழைக்கும்போதுமட்டும் சற்று இறங்கிய குரலில் 
குறுகிய ஒலி எழுப்புகிறது. அவ் ஒலி இளி எனப்படுகிறது. தன்னுடைய வழக்கமான வீளைக் குரலை விட்டு, தனது 
பேடையை அழைக்க இளி என்ற சுரத்தைத் தெரிவுசெய்கிறதாம் பருந்து! பருந்தின் அழைப்புக்குரல் கேட்ட 
தலைவனுக்குத் தன் தலைவியின் நினைப்பு வந்துவிட்டது!

			

	சாதாரணமாக ஒரு நாய் ‘வள் வள்’-என்று குரைக்கும்போது அதனை யாரும் பெரிதாக 
எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், சில நேரங்களில் ஒரு நாய் ‘ஊஊஊ’-வென்று ஊளையிடும்போது அது அனைவரின் 
கவனத்தையும் பெறுகிறது. பருந்துகள் நிறைய வழங்கும் காட்டுப்பாதையில் அவற்றின் வீளை ஒலிகள் கேட்டவண்ணம் 
இருக்கும். ஆனால் ஏதோ ஓர் ஆண் பருந்து இளி குரல் எழுப்பித் தன் பேடையை அழைக்கும்போது அது ‘சட்’-டென்று 
தலைவனின் கவனத்தைக் கவர்கின்றது. உடனே அவன் நெஞ்சம் தலைவியை எண்ணி ஏங்க ஆரம்பித்துவிட்டது.

	இளி என்பது தமிழ் இசையின் ஒரு கூறு. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவை 
தமிழிசையின் ஏழு கூறுகளாம். கர்நாடக இசையின் ஏழு சுரங்களான சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், 
தைவதம், நிஷாதம் என்பவற்றுக்கு இணையானவை. இங்கே குரல் என்பது சட்ஜம் என்பர். எனில், இளி பஞ்சமம் ஆகும். 
ஆனால் குரல் என்பது மத்தியமம் என்பாரும் உளர். அப்படியெனில் இளி என்பது சட்ஜம் ஆகிறது.

		அவள்
	மலர்பாடு ஆன்ற மைஎழில் மழைக்கண்
10	தெளியா நோக்கம் உள்ளினை -------------

	தலைவியின்
	மலரின் பெருமையைக் குலைக்கும் வகையில் அமைந்த, மையிட்ட அழகிய குளிர்ந்த கண்களின்
	தெளிவில்லாத பார்வையை நினைத்துப்பார்க்கிறாய் -

	பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவர்களின் கண்கள் மலர்ச்சியுடன் இருக்கும். இதனையே மலர்ந்த 
கண்கள் – மலர் போன்ற கண்கள் – என்பர் புலவர். ஆனால் அந்தப் பூவின் மலர்ச்சியையும் மிஞ்சிவிடுகிறதாம் 
தலைவியின் கண்கள் (மலர் பாடு ஆன்ற). மலர்ந்த முகத்துடனும், மையிட்ட அழகிய கண்களுடனும்(மை எழில்), குளிர்ந்த 
பார்வையுடனும் (மழைக்கண்) வீட்டில் வலம்வரும் தலைவி, தலைவன் பிரியும் நாளில் தன் துயரத்தையெல்லாம் 
அடக்கிக்கொண்டு எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாதவளாய் இருக்கின்றாள். அந்தப் பார்வையையே புலவர் 
தெளியா நோக்கம் என்கிறார். பருந்தின் இளிகுரல், தலைவனுக்கு இந்தப் பார்வையை நினைவூட்டுகிறது.

		

	இவை அத்தனையும் சேர்ந்தது தலைவியின் பார்வை!!

	------------ ------------ ---------- உளிவாய்
	வெம்பரல் அதர குன்றுபல நீந்தி
	யாமே எமியம் ஆக நீயே
	ஒழியச் சூழ்ந்தனை ஆயின் 
	
	உளியின் வாயைப்போன்று (கூர்மையான)
	சூடான பரல்கற்களைக் கொண்ட பாதைகளையுடைய குன்றுகள் பலவற்றைக் கடந்து,
	(இப்போது இங்கே)நான் தனியனாய் இருக்க, நீ மட்டும்
	(என்னை)விட்டுப் போக எண்ணுகிறாய் என்றால்

	பாதை நிறையப் பரல்கற்கள். பார்த்து மிதிக்காவிட்டால் காலைப் பதம்பார்த்துவிடும். அவையும் வெயிலின் 
வெப்பத்தால் சூடேறிப்போய் இருக்கின்றன. இந்தச் சூட்டில் வழுக்கைக் கற்கள் மீதே கால்வைக்க முடியாது. அவையும் 
கூர்மையாகவேறு இருந்தால்? இப்படிப்பட்ட பாதையைக் கொண்ட குன்றுகள் பலவற்றைக் கடந்த பின்னர், இப்போது 
இடைவழியில் திரும்பிப் போக நினைத்தால் என்னாகும்? மனம் கூறுகிறது நெஞ்சத்தைப் பார்த்து -

			முனாஅது
	வெல்போர் வானவன் கொல்லி மீமிசை
15	நுணங்குஅமை புரையும் வணங்குஇறைப் பணைத்தோள்
	வரிஅணி அல்குல் வால்எயிற் றோள்வயின்
	பிரியாய் ஆயின் நன்றுமன் தில்ல

	மிகப் பழமையான,
	வெற்றிப்போர்களின் சேரமன்னனின் கொல்லிமலையின் உச்சியில் உள்ள
	சிறிய கெட்டிமூங்கில் போன்ற வளைந்த பக்கங்களையுடைய பருத்த தோள்களையும்,
	தேமலைக்கொண்ட அல்குலையும், வெண்மையான பற்களையும் கொண்ட தலைவியைவிட்டுப்
	பிரியாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,

	சேரமன்னர்களின் எல்லையை ஒட்டி இருப்பது கொல்லிமலை. மிகப் பழமையானது என்று கூறப்படுவது. 
கரூர் சேரர்களின் தலைநகரம். சேலம் கரூர் ஆகிய இடங்களுக்கு நடுவில் இருக்கும் நாமக்கல்லை அடுத்து இருப்பது 
கொல்லிமலை. கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதி. அங்கு விளையக்கூடிய கெட்டிமூங்கில் சிறியதாக 
இருக்கும்போலும். நுணங்கு அமை என்கிறார் புலவர். 

	இறை என்பது கழுத்திலிருந்து இரண்டு பக்கங்களிலும் இறங்கும் கைகள். பருமூங்கில் போன்ற பருத்த 
தோள்களைக் கொண்ட வணங்கு இறை (வணங்கு இறைப் பணைத் தோள்) என்கிறார் புலவர். இறை என்பதற்கு 
முன்கை எனப் பொருள்கொண்டு, வணங்கு இறை என்பதை வளைந்த முன்கை என்பர் உரையாசிரியர். முன்கை 
எப்படி வளைவாக இருக்கும்? இந்த வணங்கு இறையும் நுணங்கு அமை போன்றது என்கிறார் புலவர். அமை 
என்பது கெட்டி மூங்கில். நுணங்கு என்பது நுண்மையான என்ற பொருள் தரும். இங்கே சிறிய என்ற பொருள் 
கொள்ளப்படுகிறது. தோள்கள் பணைத்திருக்க, இறை எப்படி நுணங்கி இருக்கும்?

	இரும் கழை இறும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த
	நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிர் – அகம் 97/9,10 

	என்னும் மாமூலனாரின் கூற்றுப்படி, இந்த மூங்கில் சிறிய மூங்கில் மட்டும் அல்ல -சிறிய கணுக்களையும் 
உடையது. அமை என்ற கெட்டிமூங்கிலில் சிறிய கணுக்கள் கொண்டதையே நுணங்கு அமை என்று கூறினர் எனலாம். 
புயம் என்று சொல்லப்படுகிற முழங்கைக்கும் தோளுக்கும் இடையே உள்ள பகுதி மிக நீளமாக இல்லாமல் சிறிய 
கணுவைக்கொண்ட மூங்கில் போல் இருத்தல் சிறப்பு எனக் கருதினர் போலும். 

			

	வணங்கு இறை எப்படி இருக்கும்? இங்கு வணங்கு என்பதற்கு வளையும் என்பது பொருள். 
நிமிர்ந்து நிற்கும் ஒரு பொருளைச் சற்று வளைத்தால் அதனை வணக்குதல் என்பார்கள். அதுவாகவே வளைந்தால் 
வணங்குதல் ஆகிறது. படத்தில் காணப்படுவதுதான் வணங்கு இறை ஆக இருக்குமோ?

			

	இலக்கியங்களில் பலவகையான ‘இறை’-கள் கூறப்படுகின்றன.

	வணங்கு இறை பணை தோள்
	வீங்கு இறை பணை தோள்
	நேர் இறை முன்கை / நேர் இறை பணை தோள்
	மெல் இறை பணை தோள்
	சாய் இறை பணை தோள்
	திருந்து இறை பணை தோள்
	நீடு இறை நெடு மென் தோள்
	நுணங்கு இறை

	என்ற தொடர்கள் பெண்களின் கை அமைப்பில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்பதையும் அவை 
அனைத்தையும் புலவர்கள் தம் பாடல்களில் பாடி மகிழ்ந்துள்ளனர் என்பதையும் காட்டுகின்றன. ஒரு பெண்ணின் இறை 
இந்தப் பண்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவைகளையும் கொண்டிருக்கலாம்.

		

	சாய் இறை பற்றி அகநானூறு பாடல் 32 – இல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தையும் பாருங்கள்.

	இப்போது உங்களுக்கு ஒரு test!!

	‘சட்’-டென்று கண்களை மூடிக்கொண்டு, உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நபரை உங்கள் மனக்கண்ணுக்குள் 
கொண்டுவாருங்கள். அவரையே ‘பார்’த்துக்கொண்டிருங்கள். சிறிது நேரம் கழித்து, அவர் உடலில் இருக்கும் சில 
சிறப்புக் கூறுகளை எண்ணிப்பாருங்கள். இப்போது கண்விழித்து, நீங்கள் கண்டவற்றை மீண்டும் நினைவுக்குக் 
கொண்டுவாருங்கள். நீங்கள் பார்த்தவர் யார் என்று கேட்கமாட்டேன்! உங்கள் மனக்கண் காட்சியில் முதலில் அவர் எந்த 
நிலையில் இருந்தார்? நின்றுகொண்டா – படுத்துக்கொண்டா – அமர்ந்துகொண்டா? அவரின் சிறப்புக் கூறுகளாக நீங்கள் 
நினைத்தவை எவை? இப்போது கீழ்க்கண்ட காட்சியுடன் ஒத்துப்பாருங்கள்.

	பருந்துச் சேவலின் பயிரும் ஒலியைக் கேட்ட தலைவனுக்குத் தலைவியின் நினைவு வந்துவிடுகிறது. 
தலைவியைத் மனக்கண் முன் கொண்டுவந்து பார்க்கிறான். அங்கே அவளின் முழு உருவம் நிழலுருவமாய்த் தெரிகிறது. 
அவன் பார்ப்பது அவள் உடலின் outline. பணைத் தோள்களினின்று இறங்கும் வணங்கு இறை. அவள் உடம்பே அதனுள் 
அடக்கம்தானே! அப்புறம் அவளிடம் தான் கண்ட புதுமைகளை எண்ணிப்பார்க்கிறான். என்ன அருமையான குறுகிய 
புயங்கள்! – கொல்லிமலைச் சிறுமூங்கிலின் குட்டிக் கணுக்கள் போல்! அப்புறம் அவனுக்குப் பிடித்த அந்த அடியிடுப்பின் 
அழகுத் தேமல் – திதலை (வரி அணி அல்குல்)! அதைத் தடவிக்கொடுக்கும்போது அவள் கூச்சத்துடன் நெளிந்து 
குறுஞ்சிரிப்புச் சிரிப்பாளே – அப்போது ஒளிரும் அந்த வெள்ளிய பற்கள்! (வால் எயிறு). சே! அவளைப் பிரிந்திராமல் 
இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்? (பிரியாய் ஆயின் நன்றுமன்) 

	அன்றுநம் அறியாய் ஆயினும் இன்றுநம்
	செய்வினை ஆற்றுஉற விலங்கின்
20	எய்துவை அல்லையோ பிறர்நகு பொருளே

	பிரிந்த நாளில் என்னைப்பற்றி நீ சரியாக அறிந்திருக்கவில்லை. எனினும் இன்று நாம்
	மேற்கொண்டுள்ள பணியை நடுவழியில் விலக்கிவைத்தால்
	அடையமாட்டாயோ, பிறர் எள்ளி நகையாடும் நிலையை?

	இதோ பார்! நெஞ்சே! இந்த மனம் ஒரு செயலில் இறங்குவதற்கு முன்னர் நன்கு சிந்தித்தே முடிவெடுக்கும். 
அவ்வாறு முடிவெடுத்துவிட்டால் பின்னர் அதனின்றும் பின்வாங்காது. என்னைப் பற்றி இது தெரியாமல், இந்த 
வினை நன்று ஆதலை வெறுப்பக் காட்டியது நீதான். அப்போது உனக்குத் தெரியவில்லை – இந்த அத்தம் செல்ல அரியது 
என்று. இப்போது அந்த மை எழில் மழைக்கண்ணாளை எண்ணி, வெம்பரல் அதர்கள் கொண்ட வெம் கட மலைகளைக் 
கடக்கும்போது, வீடு திரும்ப எண்ணுகிறாய். நான் வரமாட்டேன். இப்போது நீ பாதி வழியில் திரும்பிச் சென்றால் பிறர் 
பரிகசிக்கும் பொருளாய் ஆய்விடுவாய்.

பருந்தின் வீளையும் – பெடையை வருதிறம் பயிரும் சேவல் பருந்தின் இளி தேர் தீங்குரலும்.

Sound of Indian Kite. (கீழே உள்ள தளத்தின் பெயரைப் பிரதியெடுத்து ஏதேனும் ஓர் உலாவி (Browser) மூலம் காணுங்கள்)

	http://ibc.lynxeds.com/species/black-kite-milvus-migrans?only=sounds#sounds

	Sounds என்ற பெருந்தலைப்பில் மூன்று சிறுதலைப்புகளைக் காணலாம். அவற்றில் உள்ள முக்கோணத்தைச் 
சொடுக்கினால் பருத்தின் வீளைச் சத்தத்தைக் கேட்கலாம். பேடையொடு இணையும்போது உண்டாக்கும் ஒலியையும் 
கேட்கலாம்(இரண்டாவது முக்கோணம்). பேடை வருதிறம் பயிர் குரல் இதுவா எனத் தெரியவில்லை. ‘இளி’ பற்றி 
அறிந்தவர்கள் இதனை உற்றுக்கேட்டு உணரலாம். 

	They have a distinctive shrill whistle followed by a rapid whinnying call.[4]
	https://en.wikipedia.org/wiki/Black_Kite

	இங்கே rapid whinnying call என்பதுதான் இளிதேர் தீங்குரலோ? (இரண்டாவது முக்கோணத்தைச் சொடுக்கக் 
கிடைப்பதில் இரண்டாம் பகுதி)