அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                          அகநானூறு - 18

பாடல் 18. குறிஞ்சித் திணை  பாடியவர் - கபிலர்

துறை - தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது.

 மரபு மூலம் - பகல் நீ வரினும் புணர்குவை

	நீனிறங் கரப்ப வூழுறு புதிர்ந்து
	பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்றுக்
	கராஅந் துஞ்சுங் கல்லுயர் மறிசுழி
	மராஅ யானை மதந்தப வொற்றி
5	வுராஅ யீர்க்கு முட்குவரு நீத்தங்
	கடுங்கட் பன்றியி னடுங்காது துணிந்து
	நாம வருந்துறைப் பேர்தந் தியாமத்
	தீங்கும் வருபவோ வோங்கல் வெற்ப
	வொருநாள் விழும முறினு வழிநாள்
10	வாழ்குவ ளல்ல ளென்றோழி யாவது
	மூறில் வழிகளும் பயில வழங்குநர்
	நீடின் றாக யிழுக்குவ ரதனா
	லுலமரல் வருத்த முறுதுமெம் படப்பைக்
	கொடுந்தே னிழைத்த கோடுயர் நெடுவரைப்
15	பழந்தூங்கு நளிப்பின் காந்தளம் பொதும்பிற்
	பகனீ வரினும் புணர்குவை யகன்மலை
	வாங்கமைக் கண்ணிடை கடுப்பயா
	யோம்பின ளெடுத்த தடமென் றோளே

 சொற்பிரிப்பு மூலம்

	நீர் நிறம் கரப்ப ஊழுறுபு உதிர்ந்து
	பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று
	கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி
	மராஅ யானை மதம் தப ஒற்றி
5	உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
	கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து
	நாம அரும்துறைப் பேர்தந்து யாமத்து
	ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப
	ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள்
10	வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும்
	ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
	நீடு இன்று ஆகா இழுக்குவர் அதனால்
	உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பைக்
	கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை
15	பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில்
	பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
	வாங்கு அமைக் கண் இடை கடுப்ப யாய்
	ஓம்பினள் எடுத்த தட மென் தோளே

அடிநேர் உரை 
	
	நீரின் நிறம் மறைந்துபோகும்படி, முதிர்வுற்று உதிர்ந்த
	அழகிய மலர்கள் நெருக்கமாக அமைந்த, விரைவான ஓட்டமுள்ள காட்டாற்றில்
	முதலைகள் படுத்திருக்கும் பாறைகளில் உயர எழுந்து மோதித் திரும்பும் சுழிகளை உடையதும்
	தன் கூட்டத்தோடு சேராத யானையின் மதம் கெட மோதி
5	வலியுற்று இழுக்கும் அச்சம் தருவதுமான வெள்ளத்தை
	அஞ்சாமையுள்ள ஒரு காட்டுப்பன்றியைப் போல நடுங்காமல் துணிவுடன்
	அச்சம்தரும் அரிய துறையைத் தாண்டி, நள்ளிரவில்
	இங்கு வருபவர்களும் உளரோ? உயர்ந்த மலையைச் சேர்ந்தவனே!
	ஒருநாள் (நீ) துன்பம் அடைந்தாலும், அடுத்த நாள்
10	வாழ்பவள் அல்லள் என் தோழி, ஒருசிறிதும்
	இடையூறு இல்லாத வழிகளில்கூட, பலமுறை போய்வருபவர்கள்
	நீண்ட நாட்கள் அவ்வாறின்றித் தவறிவிடுவர், அதனால்
	துன்புற்று வருத்தம் அடைகிறோம் – எம் தோட்டத்தை அடுத்துள்ள
	வளைந்த தேனிறால் கட்டப்பட்ட உச்சி உயர்ந்த நெடிய மலையில்
15	பழங்கள் தொங்குகின்ற செறிவான மரங்கள் உள்ள காந்தள் பூத்துள்ள சோலையில்
	பகலில் நீ வந்தாலும் பொருந்தலாம் – அகன்ற மலையின்
	வளைந்த மூங்கிலின் கணுக்களின் இடைப்பகுதியைப் போன்ற, எம் தாய்
	போற்றி வளர்த்த அகன்ற மெல்லிய தோள்களை.

அருஞ்சொற் பொருள்:

கரப்ப = மறைய; ஊழுறுபு = மலர்ந்து; கஞலிய = நெருங்கிய; கராஅம் = முதலை; கடுங்கண் = அச்சமின்மை; நாமம் = அச்சம்; 
பேர்தந்து = பேர்ந்து; விழுமம் = துன்பம்; பயில = மிகுதியாக; உல்மரல் = மனக்கலக்கம், துன்பம்; படப்பை = தோட்டம்; 
கோடு = உச்சி; நளிப்பு = செறிவு; பொதும்பு = சோலை; வாங்கு அமை = வளைந்த மூங்கில்; கண் = மூங்கிலின் கணு; 
இடை = இரண்டு கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதி; கடுப்ப = போல; யாய் = எமது தாய்.

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	பகலில் தலைவியைச் சந்திக்க நேர்ந்த தலைவனும் தலைவியும் பகற்குறிக்காலம் முடிந்தபின்னர் இரவில் 
சந்திக்கிறார்கள். ஆனால், விரைவாக மணம் முடிப்பதில் நாட்டம் கொள்ளாத தலைவன் நெடுநாள் இரவில் வந்து சந்திப்பதையே 
வழக்கமாகக் கொள்கிறான். அவனை விரைவில் மணம் முடிக்கச் செய்வது எவ்வாறு? சிந்தித்துப் பார்த்த தோழி ஒரு வழியைக்
 கண்டுபிடிக்கிறாள்.

	“தலைவனே, அச்சம்தரும் வழியில் ஒவ்வொரு நாளும் வருகிறாய். உனக்கு ஏதாவது ஊறு நேர்ந்தால் தலைவி 
உயிர்வாழ மாட்டாள். நீ எவ்வளவுதான் துணிவுள்ளவனாக இருந்தாலும், ஒருநாள் போல் ஒருநாள் இராது. எனவே நாங்கள் மிக்க 
மனக்கலக்கம் அடைகிறோம். அதனால், இனிமேல் நீ பகலில் தேன்கூடுகள் உள்ள, உயர்ந்த உச்சியை உடைய மலையில் இருக்கும் 
பழங்கள் கொண்ட மரங்கள் அடர்ந்த காந்தள் மலர்ந்திருக்கும் சோலையில் இவளைச் சந்திக்க வருவாயாக” என்கிறாள் தோழி.

	“நல்லதாய்ப் போயிற்று, நாளையிலிருந்து நான் பகலிலேயே வருகிறேன்” என்று தலைவன் சொல்லிவிட்டால்? 
தோழி என்ன அவ்வளவு விபரம் தெரியாதவளா? அவள் எப்படிப் பொடிவைத்துப் பேசுகிறாள் என்பதை அறியத் தொடர்ந்து படியுங்கள்.

பாடல் விளக்கம்

	நீர் நிறம் கரப்ப ஊழுறுபு உதிர்ந்து
	பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று –

	கரத்தல் என்பது மறைத்தல். ஊழ்தல் என்பது முதிர்வடைதல். கஞலுதல் என்பது நெருக்கமாக இருத்தல். காட்டாற்றின் 
கரையோரம் இருக்கும் மரங்களின் மலர்கள் நன்றாக முழுதும் மலர்ந்து நீரின் மேல் உதிர்கின்றன. அந்த மலர்கள் மிகவும் 
நெருக்கமாக மிதந்து வருவதால், நீரின் மேற்பரப்பு மறைக்கப்பட்டுள்ளது. அதனால் கலங்கி வரும் காட்டாற்று வெள்ளத்தின் 
உண்மையான நிறம் வெளித்தெரியவில்லை. எனவே ஆற்றைக் கடந்து செல்ல நினைப்போர், நீரின் உண்மையான ஆழத்தைத் 
தெரிந்துகொள்ள முடியாமல் திகைப்பர். இந்த ஆறும் கடுமையான வேகத்தில் அடித்துப்புரண்டு வருகிறது. ஆழமும் தெரியாத, 
வேகமும் மிகுந்த காட்டாற்றை நீந்தித்தான் கடக்க முடியும்.

	கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி --

	கராம் என்பது ஒரு வகை முதலை. முதலை, கராம், இடங்கர் என்ற மூன்று வகை முதலைகள் உண்டு. 

	கொடுந்தாள் முதலையும், இடங்கரும், கராமும் – குறி 257

	என்று இதே கபிலர் குறிஞ்சிப்பாட்டில் இந்த மூவகை முதலைகளையும் குறிப்பிடுகிறார். காட்டாறு என்பதால், 
அதன் நடுவே பாறைகள் உயர்ந்து நிற்கலாம். நீரை நீந்திக் கடக்கும்போது அவற்றில் சிறிது ஓய்வுபெறலாம் என்று எண்ணினால் 
அது முடியாது – இந்தப் பாறைகளில் முதலைகள் படுத்திருக்கும். இரை பிடிக்காத நேரத்தில் முதலைகள் தூங்குவது போல் 
படுத்திருக்கும். எனவே கராம் துஞ்சும் கல் என்கிறார் புலவர். இந்தக் கற்களில் நீர் மோதுவதால் நீரில் சுழல்கள் உண்டாகும். 
இதனையே மறி சுழி என்கிறார்.

				

	மராஅ யானை மதம் தப ஒற்றி
5	உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் --

	மராஅ என்பது மருவாத என்பதன் மரூஉ. மருவுதல் என்பது தழுவுதல். தன் இனத்தைச் சேராத ஒற்றை யானை 
எனலாம். அல்லது பெண்யானையைச் சேராத ஆண்யானை எனலாம். அது அவ்வாறு இருப்பதால், அதற்கு மதம் பிடித்திருக்கும். 
மதம் பிடித்த யானைகள் அசுர பலம் பெற்றிருக்கும். எனினும், அவற்றின் மதம் அடங்குகிறாற் போல் ஆற்று நீர் யானையை 
இழுத்துச் செல்லும். உரவு என்பதன் மரூஉ உராஅ. உரவு வலிமை. உட்குதல் என்பது அஞ்சுதல். உட்குவரு நீத்தம் என்பது 
அச்சம்தரும் வெள்ளம்.

	கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து
	நாம அரும்துறைப் பேர்தந்து யாமத்து
	ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப --

	கடுங்கண் என்பது ஒரே சொல். அஞ்சாமை என்பது அதன் பொருள். இங்கே பன்றி என்பது காட்டுப் பன்றி. மிகவும் 
முரட்டுக் குணம் கொண்டது. இந்தப் பன்றி எப்படிப்பட்ட வெள்ளமாயினும் துணிந்து இறங்கி நீந்திச் செல்லும். 

				
 									நன்றி: www.orkive.org

	அதைப் போலத் தலைவனும் ஆற்றை நீந்திக் கடப்பான். ஆற்றில் ஒருசில இடங்களில்தான் இறங்க முடியும். 
அதற்குத் துறை என்று பெயர். உண்துறை, சலவைத்துறை, படித்துறை, குளித்துறை என்ற சொற்களை அறிவோம். இங்கே 
நாம் காண்பது அரும்துறை. இறங்குவதற்கு அரிய துறை. புதர்கள் நிரம்பிய வழுக்கல் நிலமாக இருக்கலாம். இது 
நாம அரும்துறை எனப்படுகிறது. இன்றைய வழக்கில் ‘பயங்கரமான’ இடம். நாமம் என்பது அச்சம். இந்த இடத்தில் இறங்கி 
ஆற்றைக் கடக்கவேண்டும். பேர்தந்து என்பது பெயர்ந்து என்ற பொருள்தரும். 

	கல்லென் சும்மையர் ஞெரேரென புகுதந்து - அகம் 86/18
	படர் கொள் மாலை படர்தந்து ஆங்கு - அகம் 303/14

	புகுந்ததைப் புகுதந்து எனவும், படர்ந்ததைப் படர்தந்து எனவும் கூறுவது சங்க இலக்கிய மரபு. பெயர்ந்து என்பது 
பேர்ந்து என்றாகி, பேர்தந்து என்று இங்கு வழங்கியது. இத்தனை இடையூறுகளையும் தாண்டிப் பகலில் வருவதே அரிது. 
இரவில் - அதுவும் நடுஇரவில் வந்தால்? 

	யாமம் என்பது நள்ளிரவு. விடியல், நண்பகல், எற்பாடு என்பவை பகற்பொழுதுகள். மாலை, யாமம், வைகறை 
என்பவை இரவுப் பொழுதுகள். 

	காலையும் பகலும் கையறு மாலையும்
	ஊர்துஞ்சு யாமமும் விடியலும் ………….. – குறுந்தொகை – 32/2

	என்ற குறுந்தொகை அடிகள் யாமம் என்பது இரவுப் பொழுதுகளில் ஒன்று என்கிறது. ஆறு சிறுபொழுதுகள் 
ஒவ்வொன்றும் நான்கு மணிநேரம் கொண்டவை. எனவே, இரவு 10 முதல் காலை 2 மணிவரை உள்ள பொழுதே யாமம். 
யாமம் என்பது, ஒரு நாளில் 40 நாழிகைக்கு மேல் 50 நாழிகை வரையுள்ள பொழுது. (நாமதீப. 599) என்கிறது 
தமிழ்ப் பேரகராதி (60 நாழிகை – 1 நாள்). இதையும் முதல், இடை, கடை என்ற மூன்றாகப் பிரித்து நடுவில் உள்ள பொழுதை 
இடையாமம் அல்லது நடுயாமம் என்பர். இன்றைய வழக்கில் இது நடுச்சாமம் எனப்படுகிறது. யாமம் > சாமம் என்றானது. 
கிராமத்தார் கூறும் சாமம் தமிழ்ச்சொல். நடுச்சாமம், சாமக்கோழி என்னும்போது அது யாமத்தைக் குறிக்கும். சாமம் என்பது 
ஜாமம் என்ற வடசொல்லின் தமிழாக்கம் என்பது தவறு. ஜாமம் என்பது மூன்று மணிநேர அளவைக் கொண்ட 
(மூன்று மணிநேரம் = 7½ நாழிகை) ஒரு கால அளவு. அவ்வளவுதான். யாமம் வேறு – ஜாமம் வேறு. 

YAmam is the 4 hour period between 10.00 p.m and 2.00 a.m while JAmam is a unit measure of time consisting of 3 hours.

	உயர்ந்த மலைப்பகுதியைச் சேர்ந்தவனைத் தோழி ஓங்கல் வெற்ப என்று விளிக்கிறாள்.

	ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள்
10	வாழ்குவள் அல்லள் என் தோழி --

	இவ்வாறு வரும்வழியில் ஏதாவது ஒருநாள் உனக்கு ஊறு நேர்ந்தாலும், மறுநாள் என் தோழியாகிய தலைவி உயிர் 
வாழமாட்டாள் என்கிறாள் தோழி. வழிநாள் என்பது மறுநாள் – அடுத்தநாள். ஒருநாள் இரவு தலைவன் வராவிட்டால், அவனுக்கு 
ஏதோ தீங்கு நடந்துவிட்டது என்று முடிவு செய்து, மறுநாள் காலையிலேயே தலைவி உயிரோடு இருக்கமாட்டாள் என்கிறாள் தோழி. 

		-- யாவதும்
	ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
	நீடு இன்று ஆகா இழுக்குவர் --

	சிறிதளவுகூட இடையூறு இல்லாத வழிகளில், அடிக்கடி சென்றுவருகிறவர்கள்கூட, அதிக நாட்களுக்கு அவ்வாறு 
இல்லாமல் (ஒருநாள்) இன்னலைச் சந்திப்பர் என்ற பொதுவான சொல்வழக்கை இங்கே தோழி தலைவனுக்கு நினைவூட்டுகிறாள். 

	 	 -- அதனால்
	உலமரல் வருத்தம் உறுதும் –

	அதனால் மனக்கலக்கமும் துயரமும் அடைவோம் என்று தோழி கூறுகிறாள். உலமரல் என்பதை suffering, distress 
எனலாம். ஒரு துன்பமான நிகழ்ச்சியின்போது ஒருவருக்கு ஏற்படும் மனநிலைப் பாதிப்பு அது. வருத்தம் என்பதை sadness, sorrow 
எனலாம். அது ஒருவரின் உள்ள உணர்வு. பொதுவாக இறப்பு போன்ற நிகழ்ச்சிகளின்போது இவ்விரண்டாலும் ஒருவர் பெரிதும் 
பாதிக்கப்படுவார். இந்த இடத்துக்கு எத்துணை பொருத்தமான சொல்லாட்சி பாருங்கள்!

		-- எம் படப்பைக்
	கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை
15	பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில்
	பகல் நீ வரினும் புணர்குவை -

	இரவில் வராதே என்கிறாள் தோழி. அப்புறம் இதற்கு என்ன தீர்வு? “ஏன் பகலில் வந்தால் சந்திக்க முடியாதா?” 
என்கிறாள். “எங்கே?” என்று கேட்க நினைக்கும் தலைவனுக்கு இடத்தையும் கூறுகிறாள். “எங்கள் வீட்டுப் பின்பக்கத் 
தோட்டத்தை (படப்பை) அடுத்து தேனடைகள் உள்ள உயர்ந்த மலை இருக்கிறது. பழங்கள் உள்ள மரங்கள் அடர்ந்த (நளிப்பின்) 
சோலை (பொதும்பு) இருக்கிறது. அங்கே காந்தளும் மலர்ந்துகிடக்கிறது. மலர்ப் படுக்கையில், தேனும் பழமும் உண்டுகொண்டே
நீ மகிழ்ச்சியுடன் தழுவலாமே” –

				

		-- அகல் மலை
	வாங்கு அமைக் கண் இடை கடுப்ப யாய்
	ஓம்பினள் எடுத்த தட மென் தோளே.

	“-- அகன்ற மலையில் வளரும், வளைந்த மூங்கிலின் இரு கணுக்களுக்கு இடையே உள்ள பகுதியைப் போன்ற, 
எமது தாய் போற்றிப் போற்றி வளர்த்த பெரிய மென்மையான தோள்களை” என்று சொல்லி முடிக்கிறாள் தோழி. 

	குழந்தைகளையும், சிறுமியரையும் குளிப்பாட்டும்போது கைகளை அழுத்தி நீவிவிடுவார்கள்
 (யாய் ஓம்பினள் எடுத்த தோள்). பெண்களின் கைகள் – குறிப்பாக- தோள்கள் பருத்து இருப்பது அவர்களுக்கு அழகு தரும். 
ஆண்களின் தோள்கள் புடைத்துக்கொண்டும், இறுக்கமாகவும் இருக்கவேண்டும். மாறாக, பெண்களின் தோள்களோ, மூங்கில் போல் 
வழுவழுப்பாக – ஆனால் – மென்மையாக இருப்பது அழகு. 

				

கபிலரின் உளவியல் குறிஞ்சி

	குறிஞ்சித்திணைப் பாடல்கள் புனைவதில் கபிலர் வல்லவர். வெண்பாவுக்குப் புகழேந்தி, விருத்தத்துக்கு உயர் கம்பன், 
பாலைக்குப் பெருந்தேவனார் என்பது போல் குறிஞ்சிக்குக் கபிலன் என்ற பெயர் இவருக்கு உண்டு. இப் பாடலில் கடு வரல் 
கான்யாறு உண்டு; கடுங்கண் காட்டுப்பன்றி உண்டு; கோடுயர் நெடு வரை உண்டு; கொடுந்தேன் இழைத்ததும் உண்டு; நளிப்பின் 
பொதும்பு உண்டு; நாறு மலர் காந்தள் உண்டு; அகல் மலை உண்டு; அதில் வளரும் அமை கடுக்கும் தோள் உண்டு; இத்தகைய 
அழகிய குறிஞ்சிப் பின்புலத்தை அமைத்துக் கொடுத்த புலவர், தலைவனின் துணிவு கலந்த சாமர்த்தியத்தைத் தோழியின் பணிவு 
கலந்த சாமர்த்தியம் எவ்வாறு மேற்கொள்கிறது என்பதை நுட்பமான உளவியல் (psychology) கூறுகளால் நுண்ணிதாக 
உணரவைக்கிறார்.

	மழை பெய்துகொண்டிருக்கிறது. முற்றத்துக் கூரையினின்றும் ஒழுகும் நீரில் கைகால்களை நனைத்துக்கொண்டு 
குழந்தை குதியாட்டம் போடுகிறது. உள்ளே கைவேலையாய் இருக்கும் தாய் குழந்தையை உள்ளே வரும்படி அழைக்கிறாள்.

	“உள்ள வாடா”

	“முதியாது”

	“மழயில நனஞ்சா பூதம் புடிச்சிட்டுப் போயிரும்”

	“நான் டுஷும் டுஷும் பன்னிருவேன்”

	“அடுத்த வீட்டு பாபுகூட வீட்டுக்குள்ளதான் விளயாடுறான்”

	“எனக்கு மழை பிடிக்கும்”

	“இனி ஒரு வார்த்த எதுத்துப் பேசுன, அம்மா ஊருக்குப் போயிடுவேன்”

	“சரி, போ”

	…………………………………………………….
	…………………………………………………….

	“மழயில நனஞ்சாக் காச்ச வரும். உனக்குக் காச்ச வந்தா அம்மா அழுவேன்”. 

	கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அம்மா விசும்புகிற மாதிரி நடிக்கிறாள். குழந்தை மெதுவாகக் கிட்டே வந்து 
கைகளை விலக்க முயற்சிக்கிறது.

	இதுதான் Effective Communication.

	“Don’t do it”, “It is wrong to do it”, “If you do it, you will fall down”

	என்றெல்லாம் கூறுவதைவிட, 

	“I will be extremely happy and will be relieved of my tension, if you don’t do it”, 

	என்று கூறுவது மிகப் பெரிய பலனைத் தரும். 

	இந்தக் கூற்றில் மூன்று பகுதிகள் உண்டு.

	1. What OTHERS do or don’t do.
	2. How I feel about it.
	3. What is its TANGIBLE EFFECT on ME.

	இதற்கு, ‘I’ statement என்று பெயர். ஏதோ ஒரு வரிசையில் இந்த மூன்றும் அமைகிற மாதிரி வாக்கியங்கள் 
உருவாக்கப் பழகிக்கொள்ளுங்கள். கொஞ்சம் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கலாம். ஆனால், இப்படிப் பேசக் கற்றுக்கொண்டால், 
பெரும்பாலான உரையாடல்கள் மனக்கசப்பில் முடியமாட்டா.

	இப் பாடலில் கபிலரின் தோழி என்ன முறையைக் கையாள்கிறார் என்று பார்ப்போம்.

	தலைவனே, நீ வரும் வழியில் உள்ள காட்டாறு கன வேகமாய் ஓடிவருகிறது (கடுவரல் கான்யாறு)
	நீர் எவ்வளவு ஆழம் என்று கண்டுபிடிக்க முடியாது – பூக்களால் மூடப்பட்டிருக்கும் (பூ மலர் கஞலிய)
	நீந்திக் கடக்கும் வழியில் இடையில் பாறையில் ஏறிக்கொள்ள முடியாது (கராம் துஞ்சும் கல்)
	நீர்ச்சுழல்கள் வேறு சுழன்றுகொண்டிருக்கும் (கல் உயர் மறி சுழி)
	யானையையே இழுக்கும் அளவுக்கு வேகமாய் வரும் வெள்ளம் (யானை ஈர்க்கும் நீத்தம்)

	இப்படியெல்லாம் பயமுறுத்தினால், “நான் காட்டுப்பன்றியின் துணிச்சலுடன் அந்த ஆற்றை நடுச்சாமத்திலும் 
நீந்தி வருவேன்” என்று தலைவன் சொன்னாலும் சொல்லுவான் என்று அதனையும் தோழியே கூறிவிடுகிறாள் 

	(பன்றியின் நடுங்காது துணிந்து, பெருந்துறை பேர்தந்து, யாமத்து வருப)

	இதுவரை தோழியின் கூற்று முன்னர்க் கண்ட மூன்று பகுதியில் முதற்பகுதியே. பார்த்தீர்களா? 

	இதற்கெல்லாம் தலைவன் மசியமாட்டான் – மழையில் நனையும் குழந்தையைப் போல.

	எனவே, அடுத்து தோழி விடுகிறாள் அடுத்த அம்பு.

	“உனக்கு ஒன்று நடந்தால், என் தோழி உயிர் வாழ மாட்டாள்” – tangible effect – மூன்றாம் பகுதி

	உடனே தலைவன் பணிந்துவிடுவானா? கொஞ்சம் வேண்டுமானால் இறங்கிவரலாம். 

	தலைவன், “ஐயையோ! எனக்கு ஒன்றும் நேராது” என்று கூறியிருக்கலாம். 

(சங்கப் பாடல்களில் உரையாடல் இருக்காது – கலித்தொகை தவிர. ஒரே ஒருவரின் கூற்றாகவே முடியும் – இங்கே 
தோழியின் கூற்று)

	மீண்டும் முதற்பகுதிக்குப் போகிறாள் தோழி – அறிவுரைப் பகுதி.

	“நல்ல சாலைகளில் நாளும் போகிற பேருந்துகளும் விபத்துக்குள்ளாவதில்லையா – 
	(ஊறு இல் வழிகளும், பயில வழங்குநர், வழுக்குவர்)

	இதனாலும் அதிகப் பலன் ஒன்றும் இல்லை.

	இப்பொழுது, தோழி தொடுக்கிறாள் இறுதி அம்பு. 

	“அதனால், நாங்கள் மனக்கலக்கத்துடன் கூடிய வருத்தம் அடைகிறோம் (உலமரல் வருத்தம் உறுதும்)” – 
இது இரண்டாம் பகுதி.

	‘I’ statement – முழுமை பெறுகிறது.

	இனிமேல் தலைவன் பேசமுடியாது. 

	This is effective communication. You see how effectively the friend puts forward her argument. 

	இது கபிலரின் திறன். அவர் என்ன என்னைப் போல் Effective Communication – இல் எட்டு வாரக் கோடைப் பயிற்சி 
வகுப்பிலா படித்தார்? வாழ்க்கையின் உண்மைகளையும், மனித மன ஆழங்களையும் தங்கள் உள்ளுணர்வால் தெளிந்து தேர்ந்த 
மாமேதைகளின் வரிசையில் வந்தவர் அவர். இவர்கள் எழுதிவைத்து விட்டுப்போன இலக்கியங்களின் ஆழங்களையும், 
அகலங்களையும், உயரங்களையும் அவற்றின் உன்னதங்களையும் முழுதும் உணர்ந்துகொள்ள நாம்தான் இன்னும் எவ்வளவோ 
படிக்கவேண்டியுள்ளது.

தோழி போட்ட தூண்டில்

	பகலில் வந்து தலைவியைச் சந்திக்கும்படி தலைவனிடம் கூறுகிறாள் தோழி. அவள் எண்ணமோ எப்படியாவது 
அவனைச் சீக்கிரம் திருமணம் செய்யவைக்கவேண்டும் என்பதே. இரவுச் சந்திப்பின் இன்னல்களையும் அதனால் தாம் உறும் 
அலமரல் வருத்தங்களையும் விளக்கிக்கூறி, இரவுக்குறி ஏற்புடையதல்ல என்று முதலில் தலைவனை ஒத்துக்கொள்ளச் செய்கிறாள்
தோழி. பின்னர்தான் பகலில் சந்திக்கும் ஏற்பாட்டை எடுத்துரைக்கிறாள் அவள். அவள் சொல்கிற இடம், வீட்டுக்குப் பின்புறம் 
உள்ளது. அது தேனீக்கள் கூடுகட்டியிருக்கும் கோடு உயர் நெடு வரை. மரங்கள் அடர்ந்த சோலை அங்கு உள்ளது. அதில் பழங்கள் 
பழுத்துத் தொங்கும். அதோடு, சோலையில் காந்தள் பூத்திருக்கும். இங்கே நீ வரலாம் என்கிறாள் தோழி. 

	தேன்கூடுகள் நிறைந்திருந்தால் அவற்றில் மலைத்தேன் எடுக்க மக்கள் வரமாட்டார்களா?

	மரங்களில் பழங்கள் தொங்கினால், அவற்றைப் பறிக்க ஆட்கள் வரமாட்டார்களா?

	சோலையில் செடிகள் பூத்திருந்தால், பூக்களைக் கொய்ய பூவையர் வரமாட்டார்களா?

	இவர்களில் குறைந்தது யாராவது ஒருவர் வந்தாலே காரியம் கெட்டுவிடும். இப்படி ஒன்றுக்கு மூன்றாய் இடைஞ்சல்கள் 
இருக்கிறபோது அங்கு வர எப்படி மனம் துணியும்?

	“இது நடக்கிற காரியமா?” என்று தலைவன் கேட்கமாட்டானா?

	கேட்டால், “ஏன்யா, ராத்திரி வேணாம், பகலும் கூடாது’-ன்னா, பேசாமக் கூட்டிட்டுப்போயி குடும்பம் நடத்து” என்று 
கேட்கத்தான் தோழி இந்தத் தூண்டிலைப் போடுகிறாள்.