அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                          அகநானூறு - 39

பாடல் 39. பாலைத் திணை  பாடியவர் - மதுரைச் செங்கண்ணனார்

துறை - பொருண் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.

 மரபு மூலம் - வறும் கை காட்டிய வாய் அல் கனவு

	ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிபடர்ந்
	துள்ளியு மறிதிரோ வெம்மென யாழநின்
	முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவ லழுங்க
	நோய்முந் துறுத்து நொதுமல் மொழியனின்
5	னாய்நல மறப்பெனோ மற்றே சேணிகந்
	தொலிகழை பிசைந்த ஞெலிசொரி யொண்பொறி
	படுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை
	முளிபுல் மீமிசை வளிசுழற் றுறாஅக்
	காடுகவர் பெருந்தீ யோடுவயி னோடலி
10	னதர்கெடுத் தலறிய சாத்தொ டொராங்கு
	மதர்புலி வெரீஇய மையல் வேழத்
	தினந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு
	ஞான்றுதோன் றவிர்சுடர் மான்றாற் பட்டெனக்
	கட்பட ரோதி நிற்படர்ந் துள்ளி
15	யருஞ்செல வாற்றா வாரிடை ஞெரேரெனப்
	பரந்துபடு பாயல் நவ்வி பட்டென
	யிலங்குவளை செறியா யிகுத்த நோக்கமொடு
	நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண்
	டின்னகை யினைய மாகவு மெம்வயி
20	னூடல் யாங்குவந் தன்றென யாழநின்
	கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி
	நறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து
	வறுங்கை காட்டிய வாயல் கனவி
	னேற்றேக் கற்ற வுலமரல்
25	போற்றா யாகலிற் புலத்தியா லெம்மே

 சொற்பிரிப்பு மூலம்

	ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழி படர்ந்து
	உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின்
	முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க
	நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின்
5	ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து
	ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
	படு ஞெமல் புதையப் பொத்தி நெடு நிலை
	முளி புல் மீமிசை வளி சுழற்று உறாஅக்
	காடு கவர் பெரும் தீ ஓடு வயின் ஓடலின்
10	அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு
	மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
	இனம் தலைமயங்கிய நனம் தலைப் பெரும் காட்டு
	ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு எனக்
	கள் படர் ஓதி நின் படர்ந்து உள்ளி
15	அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரெனப்
	பரந்து படு பாயல் நவ்வி பட்டு என
	இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு
	நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு
	இன்_நகை இனையம் ஆகவும் எம் வயின்
20	ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின்
	கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி
	நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
	வறும் கை காட்டிய வாய் அல் கனவின்
	ஏற்று ஏக்கற்ற உலமரல்
25	போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே

அருஞ்சொற் பொருள்:

ஒழித்தது = செய்யத்தகாதது என்று கழித்தது; துவர் = பவளம், செந்நிறம்; அழுங்க = அழிய, கெடும்படியாக; நொதுமல் = புறம்பானது; 
ஞெலி = தீக்கடைகோல், மூங்கில்; ஞெமல் = சருகு; முளி = உலர்ந்த; சாத்து = வணிகர் கூட்டம்; மதர் = செருக்கு; மையல் = மதம்; 
ஆரிடை = கடிய பாதை; நவ்வி = பெண்மான்; இகுத்த = தாழ்ந்த; குவவு = திரண்டு குறுகு; உளரிய = கோதிய; 
உலமரல் = மனச்சுழற்சி, வருத்தம். 

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

வினைமேற் பிரிந்துசென்ற தலைவன் தலைவியின் நினைவாகவே இருக்கிறான். வினை முடிந்து வீடு திரும்பியவனுடன் ஊடல் 
கொள்கிறாள் தலைவி. அவளது ஊடலைத் தீர்க்கும் வண்ணம் அவன் கூறும் மொழிகளே இப் பாடல்.

	‘உம்’-மென்று முகத்தை வைத்துக்கொண்டு, “என்னைத் தனியே விட்டுவிட்டுப் போனீரே, போகிறவழியில் என்னை 
நினைத்தாவது பார்த்தீரா என்று கேட்கிறாயே!

	“வந்ததும் வராததுமாக முந்திக்கொண்டு என்னை வாட்டும் சொற்களைக் கூறுகிறாயே! இந்த அழகுச் செல்வத்தை 
நான் மறப்பேனா?

	“மூங்கில் உரசிய தீப்பொறி பரவிக் காட்டையே கொளுத்த, பாதையை விட்டுப் பதறியோடும் சாத்துகளோடு, அனல் 
பொறுக்காமல் புலிகள் ஓட, அதைக் கண்டு அஞ்சி யானை வெருண்டோட, இவ்வாறு அனைத்துயிர்களும் கலங்கித் தவிக்கும் 
இருட்டுவேளையிலும், படுத்துக் கண்மூடும் முன் என் பார்வைக்குள் நீ வந்தாய். கனவிலும் ஊடல்கொண்டு கால் கீறக் குனிந்து 
நின்றாய். உன் புருவத்தையும், நெற்றியையும் நீவிவிட்டவாறு, நறுங்கதுப்பு உளரிய அந்த நல்ல நேரம்பார்த்து விழிப்பு வந்து 
வேதனைப்பட்டேன். இவ்வாறு கனவிலும் உன்னை மறக்காமல் நினைந்துகொண்டிருந்ததைப் போற்றாமல் என்னைப் 
புறக்கணிக்கிறாயே!” என்று தலைவன் தன் தேற்றும் மொழிகளால் அவளது பிணக்கத்தைத் தெளிவுபடுத்த முனையும் 
கூற்றுகளைக் கொண்டது இப் பாடல்.

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிபடர்ந்து
	உள்ளியும் அறிதிரோ எம்என யாழநின்
	முள்எயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க
	நோய்முந் துறுத்து நொதுமல் மொழியல்நின்
5	ஆய்நலம் மறப்பெனோ மற்றே

	செய்யலாகாது என்று ஒழித்த கொள்கையைப் பழித்த நெஞ்சமோடு, பயணம் மேற்கொண்டு
	நினைத்தும் அறிந்தீரோ என்னை என்று, உன்
	கூரிய பற்களை உடைய சிவந்த வாயின் முறுவல் அழிய
	நோவினை ஏற்படுத்தி அன்பற்றவற்றைப் பேசாதே-உன்
	தேடிநுகரும் அழகினை மறப்பேனோ-மாட்டேனே!

	கட்டினவளைக் கண்கலங்கவிட்டுவிடக்கூடாது’ என்ற முன்னோர் கூற்றின்படி, வெளியூர்ப் பயணங்கள் வேண்டா 
என்று அவற்றை ஒழித்துவிட்ட கொள்கையை எள்ளிய உள்ளத்தினனாய் உன் வழியே நீ போய்விட்டாய் – அங்கே உனக்கு 
என்னை நினைத்துப்பார்க்கவும் தோன்றியதோ?’ எனக் கேட்கின்றாள் தலைவி. வெளியூர்ப் பயணத்தை முடித்து வீடுதிரும்பும் 
தலைவன், தலைவி தன்னை அகமும் முகமும் மலர வரவேற்பாள் என்று எண்ணிக்கொண்டு வருகிறான். அவனைப் 
பார்த்ததும் அவளின் சிவந்த உதடுகள் சிரித்து மலரும் – வெளுத்த பற்கள் விரியச் சிரிக்கும் – என எதிர்பார்த்திருந்தவனுக்கு 
முதலில் கிடைத்தது முள்ளாய்க் குத்திய சொற்கள் (நோய்முந் துறுத்து). ஆதரவான அணைப்பைத் தேடி வந்த என்னிடம் இப்படி 
அன்பற்ற சொற்களைக் கூறுகிறாயே என்று நொந்துபோய்ச் சொல்லுகிறான் தலைவன். பார்த்துப் பார்த்து ரசிப்பேனே 
உன் அழகை – எப்படி அதை மறந்துவிட்டேன் என்று எண்ணுகிறாய்?

	----------------- ---------------- -------------- சேண்இகந்து
	ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி
	படுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை
	முளிபுல் மீமிசை வளிசுழற்று உறாஅக்
	காடுகவர் பெரும்தீ ஓடுவயின் ஓடலின்
	10	அதர்கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு
	மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
	இனம்தலை மயங்கிய நனம்தலைப் பெரும்காட்டு
	ஞான்றுதோன்று அவிர்சுடர் மான்றால் பட்டுஎனக்

	நெடுந்தூரம் கடந்து,
	தழைத்த மூங்கில்கள் உரசிக்கொண்டதால், மூங்கில்கழை சொரிந்த ஒள்ளிய தீப்பொறி
	மிகுந்த சருகுகளுக்குள் விழுந்து தீ மூள, நாட்பட்ட
	காய்ந்துபோன புல்லின் மீது காற்று சுழற்றிப் பரவச்செய்ய
	காட்டையே சூழ்ந்த பெரும் தீ காற்றடிக்கும் பக்கமெல்லாம் பரவியதால்,
	பாதையைத் தவறவிட்ட வணிகக் கூட்டத்தாருடன் சேர்ந்து
	செருக்குற்ற புலியைக் கண்டு அஞ்சிய மதங்கொண்ட யானைகளின்
	கூட்டம் சிதறுண்டு திரியும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டில்,
	தொங்குவதுபோல் தோன்றிய ஞாயிறு மயங்கி மறைந்திட –

	தன் இருப்பிடத்திலிருந்து நெடுந்தொலைவுக்கு வந்துவிட்ட தலைவன், காய்ந்துகிடக்கும் மூங்கில் காடுகள் நிறைந்த 
மலை ஒன்றைக் கடந்துசெல்கிறான். வேகமாக வீசுகிற காற்றில் தடித்த மூங்கில் கழைகள் ஒன்றோடொன்று உரசித் தீப்பொறி 
உண்டாகிச் சிதறி விழுகிறது. ஞெலி என்பது தீ உண்டாக்குவதற்காகக் கடையப்படும் மூங்கில். மலைவாழ் மக்கள் காய்ந்த 
மூங்கில் கட்டைகளை அழுத்தித் தேய்த்துத் தீப்பொறி உண்டாக்குவது வழக்கம். காய்ந்த மூங்கில்கள் உரசிக்கொள்வதால் 
தாமாகவே ஏற்படும் தீப்பொறி பெரும் காட்டுத்தீயை உண்டாக்குவதை இன்றும் காணலாம். அத்தகைய காட்டுத்தீ தலைவன் 
காட்டைக் கடக்கும் நேரத்தில் ஏற்படுகிறது. மூங்கில் உரசியதால் ஏற்பட்ட ‘பளிச்’சென்ற பெரிய தீப்பொறி (ஒண்பொறி) கீழே 
கிடக்கும் சருகுகளில் விழுந்து புதைந்துபோகிறது (படுஞெமல் புதைய). அப் பொறி கொஞ்சம் கொஞ்சமாகச் சருகுகளைக் 
கரித்துக்கொண்டே புகையை எழுப்புகிறது. காற்றும் வாகாக வீச, ‘குப்’பென்று தீப்பிடித்துக்கொள்கிறது (பொத்தி). தீப்பிடித்த 
சருகுகள் சுழன்றடிக்கும் காற்றால் சிதறியடிக்கப்பட்டு (வளிசுழற்று உறாஅ), நீண்ட நாட்களாய்க் காய்ந்து கிடக்கும் புல்வெளியின்
(முளி புல்) மீது படர்கிறது. காற்றடிக்கும் திசையெல்லாம் பரவிஎழுந்த தீ (ஓடுவயின் ஓடலின்) காட்டையே சுழ்ந்துகொள்கிறது 
(காடுகவர்). அந்தப் பக்கம் சென்றுகொண்டிருந்த வணிகர் கூட்டம் பாதையை விட்டுப் பதறியடித்துக்கொண்டு ஓடுகிறது
(அதர்கெடுத்து அலறிய சாத்து). கூடவே மதர்த்த புலிகள் ஓட, தீயையும் புலியையும் ஒருசேரக் கண்ட யானைக்கூட்டம் 
கிறுக்குப்பிடித்த கிலியுடன் (மையல் வேழத்து இனம்)அவற்றுடன் சேர்ந்து ஓடுகின்றது. இந்தப் பேரமளிப் பெருங்காட்டு மேற்றிசைக் 
கீழ்வானில் – வானிலும் இல்லாமல், மலையையும் தொடாமல், அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் (ஞான்றுதோன்று) 
அவிர்சுடர் செஞ்ஞாயிறு, தனக்கு எதிரே தன்னையும் மிஞ்சும் வண்ணம் செஞ்சுடர் உயர்ந்தெழும் செக்கர் வானத்தைக் கண்டு 
மனமயக்கம் கொண்டதுவாய் (மான்று)கீழ்வானில் சென்று மறைகிறது (பட்டு).

			

	காட்டுத்தீ எவ்வாறு உருவாகிறது என்பதையும், அதனால் உயிரினங்கள் படும் பாட்டையும் எத்துணை விளக்கமாகவும், 
துல்லியமாகவும், அழகாகவும், அச்சமூட்டுவதாகவும் நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார் புலவர் என்பதைத் திரும்பத் 
திரும்பப் படித்து இன்புறலாம்.

	இத்தனை அமளிக்கு இடையே அங்கே இன்னொரு காட்சியையும் புலவர் காட்டுகிறார். இது ஒரு ஓரடிக் கவிதை. 
மாலை ஞாயிற்றைப் பற்றியது. உச்சியிலிருந்து கீழிறங்கிய ஞாயிறு இன்னும் மறையவில்லை. தீப்பிழம்பாக அடிவானத்திற்கு 
மேலே தோன்றும் ஞாயிறு எதையோ பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது போல் தெரிகிறதாம். ஞால் என்பதன் எச்சம் ஞான்று 
என்று வந்தது. ஞால் என்பது தொங்குதல் – be suspended. இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு, மூன்று மாடிக்கட்டிடத்தில் வேலை 
பார்க்கும் ஒருவர், தவறிக் கீழே விழுந்தால் (God forbid) தரைக்குச் சில அடிகள் தூரத்தில் - கயிற்றின் நீளம் குட்டையானதால் 
– ‘டக்’-கென்று நின்று ஆடிக்கொண்டிருப்பார் அல்லவா! அதுபோல் விரைவாகக் கீழிறங்கிய ஞாயிறு, அடிவானத்துக்கு மேலே 
ஆடாமல் தொங்கிக்கொண்டிருக்கிறதாம். ஞான்று தோன்று அவிர்சுடர் ! என்ன அழகிய வருணனை! அப்படி நின்ற ஞாயிறு தனக்கு 
எதிரில் கீழே தெரியும் செந்நிறப் பேரொளியைக் கண்டு திகைத்துப் போகிறது. இன்னும் சிறிது நேரத்தில் எங்கணும் இருள் 
கவியவேண்டும். ஆனால் இங்கே வேறென்னவோ நிகழ்கிறதே என்று மான்று நிற்கிறதாம் அது! மால் என்றால் கலங்கு, மயங்கு 
என்று பொருள் – be perplexed. இதன் எச்சம் மான்று. குழப்பத்தில் வந்த தெளிவற்ற நிலை. சற்று நேரம் தொங்கிக்கொண்டே 
பார்த்துக்கொண்டிருந்த ஞாயிறு, குழப்பம் தீராமல் கீழிறங்கி மறைந்துபோனது. 

	கள்படர் ஓதி நின்படர்ந்து உள்ளி
15	அரும்செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரெனப்
	பரந்துபடு பாயல் நவ்வி பட்டுஎன
	இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு
	நிலம்கிளை நினைவினை நின்ற நின்கண்டு
	இன்நகை இனையம் ஆகவும் எம்வயின்
20	ஊடல் யாங்குவந் தன்றுஎன யாழநின்
	கோடுஏந்து புருவமொடு குவவுநுதல் நீவி
	நறும்கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
	வறும்கை காட்டிய வாய்அல் கனவின்
	ஏற்று ஏக்கற்ற உலமரல்
25	போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே

	வண்டுகள் சூழும் கூந்தலினாய்! உன்னை நாடி நினைத்து
	அரும் பயணமும் இயலாமற்போன அந்த அரிய வழியில், ‘சட்’டென்று
	படுத்துக் கண்மூடிய தூக்கத்தில் – ஒரு பெண்மான் கண்ணிற்பட்டாற் போன்ற
	மின்னும் கைவளையல்களைச் சேர்த்து மேலிழுத்து, குனிந்த பார்வையுடன்,
	நிலத்தைக்காலால் கிளறிக்கொண்டு சிந்தனைசெய்துகொண்டிருந்த உன்னைக் கண்டு
	‘இனிய முறுவல் கொண்டவளே!, நான் இவ்வாறு வருந்தியிருக்கவும், என்னுடன்
	(உனக்கு)ஊடல் எங்ஙனம் வந்தது?’ என்று உன்
	பக்கம் உயர்ந்த புருவங்களுடன் திரண்டு குறுகிய நெற்றியை நீவிவிட்டு,
	மணமுள்ள பக்கக் கூந்தலைக் கோதிவிட்ட நல்ல நேரத்தில்
	வெறுங்கையாய் ஆக்கிய அந்தப் பொய்க் கனவினின்றும்
	கண்விழித்து உள்ளம் நலிவடைந்த துயரத்தை
	ஏற்றுக்கொள்ளாததினால் ஊடல்கொள்கிறாய் என்னுடன்.

	“அத்துணை அமளிகளுக்கு நடுவிலும், இரவுநேரம் ஆகிவிட்டதால் ஒரு பாதுகாப்பான இடத்தில் படுக்கைவிரித்துக் 
கண்ணை மூடினேன். என் உள்ளம் உன்னையே நாடிச் சென்றது (படர்ந்து உள்ளி). நடந்துவந்த களைப்பால் உடனே தூக்கம் என்னை 
மேற்கொண்டது. தூக்கத்தில் கனவில் நீ வந்தாய். உன்னையே படர்ந்து உள்ளிப் படுத்ததினால், படுத்த மாத்திரத்தில் நீ ஒரு 
பெண்மானைப்போல் தோன்றினாய். பிரிவுத்துயரால் மெலிந்துவிட்ட உன் கைகளின் வளையல்கள் கழன்றுவிழப்போக, அவற்றைச் 
சேர்த்துப்பிடித்து கைகளில் நீ ஏற்றிவிட்டவாறு, குனிந்த பார்வையினளாய், கால் கட்டைவிரலால் தரையில் கீறிக்கொண்டே 
சிந்தனைவயப்பட்டவளாய் நின்றுகொண்டிருந்தாய். கனவினில் உன்னருகில் நான் வந்தேன். ‘என்னைப்பார், உன் நினைவால் நான் 
எத்துணை துயரம் கொண்டிருக்கிறேன். இருந்தும் என் மீது ஏன் இப்படிக் கோபம் கொள்கிறாய்?’ எனக் கேட்டேன். அவ்வாறு 
கேட்டவாறே உனது புருவத்தையும் நெற்றியையும் நீவிவிட்டு, மணமிக்க உன் பக்கவாட்டுக் கூந்தலில் என் கைவிரல்களை 
நுழைத்துக் கோதிவிட்டேன். அந்த நல்ல சமயத்தில், ‘சட்’டென்று விழிப்பு வந்து கனவு முடிந்து உள்ளம் நொந்துபோனேன். இது 
தெரியாமல் நீ என்னுடன் இன்னும் ஊடல் கொண்டிருக்கின்றாயே!”

	இத்துடன் பாடல் முடிவடைகிறது. தலைவி சமாதானம் ஆனாளா எனத் தெரியவில்லை. அவ்வாறு ஆகியிருந்தால் 
இது பாலைத்திணைப் பாடல் ஆகாது. எனவே, தலைவன் தன் பிரிவுத்துயரத்தைக் கூறுவதுடன் பாடல் முடிகிறது. இருப்பினும் 
தலைவனும் தலைவியும் கூடி மகிழும் (கனவுக்) காட்சிகள், பிரிந்த தலைவனுக்காகத் தலைவி காத்திருக்கும் நிலை, திரும்பி 
வந்த தலைவனிடம் தலைவி ஊடுகின்ற நிலை, கனவிலும்கூட தலைவியைக் கூட முடியாமல் தலைவன் இரங்கும் நிலை 
ஆகிய குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் ஆகிய திணைக் காட்சிகளை வைத்துப் பாலைத்திணையைப் புனைந்திருக்கும் 
புலவரின் திறம் போற்றுதற்கு உரியது அன்றோ!

புலவரின் தேர்ந்த சொல்திறம்

1. ஞகரச் சொற்கள்

	தமிழில் ‘ஞ’கரத்தை முதலெழுத்தாகக் கொண்ட சொற்கள் மிகக் குறைவு. அப்படியிருந்தும், 
ஞெலி – ஞெமல் – ஞான்று – ஞெரேரென – என்ற நான்கு சொற்களை இப் பாடலில் பொருத்தமாக நுழைத்துள்ளார் புலவர் 
செங்கண்ணனார். மேலும், இச் சொற்களை

	ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி யொண்பொறி (6)
	ஞான்றுதோன் றவிர்சுடர் மன்றாற் பட்டென (13)

	என்று எதுகை நயத்துடன் இச் சொற்களை அமைத்திருப்பது அருமைக்கு அழகு சேர்க்கிறது.

2. நோய் முந்துறுத்து – 

	ஊடலின்போது சொற்களைக் காட்டிலும் ‘சுரீர்’-என்று உறைப்பது பார்வையே. ஆசையுடன் வீடு திரும்பும் தலைவன், 
தன் அழகுப் பெட்டகத்தை அள்ளியணைக்கும் ஆர்வத்துடன் நெருங்குகிறான். “வழி படர்ந்து உள்ளியும் அறிதிரோ எம்?” என 
நொதுமல் மொழிகிறாள் தலைவி. ஆனால் அதற்கெல்லாம் முன்னரேயே அவளின் முள்ளெயிற்றுத் துவர்வாயில் அழுங்கிப்போன 
முறுவலால் நோய் அவனை முந்துறுத்துகிறது. நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் என்ற தலைவன் கூற்றில் ‘சொல்லாலேயே 
என்னைக் கொன்றுபோட்டாயே’ என்கிற வேதனை ஒலிக்கிறதே!

3. ஓதியும் கதுப்பும்

	தலைவன் ஓரிடத்தில் “கள் படர் ஓதி! நிற்படர்ந்துள்ளி” என்கிறான். கள் என்பது இங்கு வண்டு என்ற பொருள் தரும். 
ஓதி என்பது கூந்தல். கள் படரும் கூந்தல் என்பது மலர்கள் நிறையச் சூடிய கூந்தல் என்றாகிறது. இங்கு ஓதி என்பது 
அன்மொழித்தொகை ஆகி கூந்தலையுடைய பெண்ணைக் குறிக்கிறது. அடுத்து வேறோரிடத்தில், கனவினில் அவன் அவளின் 
கூந்தலைக் கோதிவிட்டதைப் பற்றிக் கூறும்போது, “நறுங்கதுப்பு உளரிய நன்னர் அமையத்து –“ என்கிறான். இங்கும் கதுப்பு 
என்பது கூந்தல் என்று பொருள்கொள்ளப்படுகிறது. எனில், ஓதி என்றால் என்ன வகைக் கூந்தல் – கதுப்பு என்றால் என்ன 
வகைக் கூந்தல்?

	அம் சில் ஓதி ஆயிழை நமக்கே – அகம் 129/18

	போன்ற பல விளக்கங்கள் கிடைக்கின்றன. அழகிய சிலவாகிய கூந்தல் என்ற பொருளில் இது கூறப்படுகிறது. 
ஒலி கூந்தல், தழைத்த கூந்தல் என்பது கூந்தலுக்கு அழகு. சிலவாகிய கூந்தல் எப்படி அழகாகும்? பதில் வேறு அடிகளில் 
கிடைக்கிறது.

	நன் நுதல் உலரிய சின் மெல் ஓதி – நெடு 138
	திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி – நற் 160/7
	ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறுமகள் – குறு 70/1
	ஓதி ஒண் நுதல் பசப்பித்தோரே – ஐங். 67/5
	சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/4
	ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் – பதிற்.74/17
	இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பே – அகம் 102/19
	பாதிரி கமழும் ஓதி ஒண் நுதல் – புறம் 70/14 ?

	இவ்வாறு ஓதி என்பது நுதலுடன் இணைத்துப் பேசப்படுகிறது. எனவே, ஓதி என்பது நெற்றியை ஒட்டிய முன்தலையில் 
உள்ள மயிர் எனப் பெறப்படுகிறது. 

	ஓதியைக் குறித்த உவமைகள் ஏதேனும் கிடைத்தால் அதனின்றும் வேறு செய்திகள் கிடைக்கலாம். சிறுபாணாற்றுபடை 
ஓதி பற்றிப் பேசுகிறது.

	மால்வரை ஒழுகிய வாழை, வாழைப்
	பூவெனப் பொலிந்த ஓதி – சிறு21/22

	என்ற அடிகளால் ஓதி என்பது வாழைப்பூவைப் போன்றது என அறிகிறோம். மேலும்,

	வாழை ஈன்ற வைஏந்து கொழுமுகை
	மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
	பூவொடு துயல்வரும் மால்வரை நாடனை – நற்.225/2-4

	என்ற அடிகள் ஓதியைப் பற்றிய கூடுதல் செய்திகளைத் தருகின்றன. பொதுவாக வைநுதி என்பார்கள். ஆனால் இங்கு 
வை ஏந்து முகை எனப்படுகிறது. பொதுவாக வாழை மரத்தில் தார்கள் தரையை நோக்கி வளரும். எனவே, அதன் முகை குனிந்தவாறு 
இருக்கும். இங்கோ புலவர் வை ஏந்து முகை என்பதினால், மேல்நோக்கி வளரும் முகை எனக் கொள்ளலாம். அவ்வாறு வளரும் 
முகையின் தலைப்பகுதியிலிருந்து இதழ்கள் விரிந்து பூவின் சூல்கொள்ளும் பகுதிகள் வெளித்தோன்றும். இவையே பின்னர் காயாகிப் 
பழுக்கும். இந்த நிலையில் உள்ள வாழைப்பூவைப் போன்றது ஓதி எனப்படும் கொண்டைத் தலையலங்காரம் என்று பெறப்படுகிறது. 

			

	இத்தகைய அலங்காரத்துக்கு முடியை இழுத்து இறுக்க முடியவேண்டும். முடிகள் நன்றாகப் படிய அவற்றுக்கு நெய்பூச 
வேண்டும். எனவேதான், மை ஈர் ஓதி, ஒடுங்கு ஈர் ஓதி, பின் ஈர் ஓதி என்றெல்லாம் ஓதி வருணிக்கப்படுகிறது. இவ்வாறு இழுத்து 
முடியப்பட்ட கூந்தல், நேரம் ஆக ஆகத் தன் இறுக்கம் தளரும்போது, இந்தப் பிடிப்பினின்றும் விடுபட்ட சில மயிர் இழைகள் நெற்றியில் 
புரளலாம். அதனைத்தான் நன்னுதல் உலறிய சின் மெல் ஓதி என நெடுநல்வாடை கூறுவதாகக் கொள்ளலாம். (இரண்டாவது படத்தில் 
இருக்கும் கொண்டை இன்னும் சற்றுக் கூமாச்சியாக இருக்கிற மாதிரி கற்பனை செய்துகொள்க!)

	இந்த ஓதியின் அடிப்பக்கத்தில் சூடியுள்ள பூக்களை வண்டுகள் மொய்ப்பதால், கள்படர் ஓதி எனத் தலைவன் நம் பாடலில் 
தலைவியை விளிக்கிறான்.

	தலைவன் தலைவியைக் கனவினில் கண்டு, அவள் கோடேந்து புருவமொடு குவவு நுதல் நீவி, நறும் கதுப்பு உளர்கிறான். 
இங்கு கதுப்பு என்பதுவும் கூந்தல் எனப்படுகிறது. உளர்தல் என்பது கோதுதல் - நீவிவிடுதல். மழையில் நனைந்த காக்கை, எங்காவது 
ஒதுங்கி, இரண்டு சிறகுகளையும் விரித்துப் படபடவென்று அடித்து நீரைக் கழிக்கும். பின்னர், ஒரு பக்கச் சிறகை நன்றாக விரித்துக் 
கழுத்தை வளைத்துத் தன் அலகைச் சிறகின் இறகுகளுக்கு இடையே விட்டு இழுத்துவிடும். அவ்வாறு செய்யும்போது 
ஒட்டிக்கொண்டுள்ள இறகுகள் தனித்தனியாகும். 

	தலைக்குக் குளித்த பெண்கள் கூந்தல் ஈரத்தைப் புலர்த்தியபின்னர், ஒரு சிறுகோல் கொண்டு இவ்வாறு செய்வர். எனவே 
கதுப்பு என்பது நீண்டு தொங்கும் தலைமயிர் என்றாகிறது.

	ஐதுவீழ் இகுபெயல் அழகுகொண்டருளி
	நெய்கனிந்திருளிய கதுப்பின், கதுப்பென
	மணி வயின் கலாபம் பரப்பி – சிறு 13-15

	என்ற சிறுபாணாற்றுப்படை அடிகள் கதுப்பு என்பது இறங்குகின்ற மேகம் போன்றும், தாழ்ந்துவிழும் மயில்தோகை 
போன்றும் இருப்பதாகக் கூறுகின்றன. 

	கால்வீழ்த்தன்று நின் கதுப்புறழ் புயலே – அகம் 323/13

	என்ற அகநானூற்று அடியும் இதனை உறுதிப்படுத்தும்.

			

	கள்படர் ஓதி என்று அழைத்த தலைவன், பின்னர் அவளில் கதுப்பை எங்ஙனம் உளர்வான்? கள் படர் ஓதி என்னும்போது 
அவன் அவளை நனவில் விளிக்கிறான். எனவே அவன் திரும்பி வீடுவரும்போது அவள் ஓதி அலங்காரத்துடன் இருக்கிறாள். ஆனால் 
அவளின் நறுங்கதுப்பு உளரியது அவனது கனவில். எனவே இரண்டும் வெவ்வேறு காலத்தவை. 

	இருப்பினும் தலைமுடியை மூன்றாகப் பிரித்து, நடுப்பகுதியை ஓதியாகவும், மீதியுள்ளவற்றைப் பக்கவாட்டில் கதுப்பாகவும் 
தொங்கவிடவும் முடியும் அல்லவா?

	இங்கு ஆசையுடன் தலைவியை நெருங்கும் தலைமகன், முதலில் அவளது புருவத்தையும் நெற்றியையும் நீவிவிட்டுப் 
பின்னர் பக்கங்களில் தொங்கும் தலைமயிரில் தன் கை விரல்களை நுழைத்துக் கூந்தலைக் கோதிவிடுகிறான். 

			

4. கோடேந்து புருவம் – குவவு நுதல்

	கனவிலும் ஊடல்கொள்ளும் தலைவியின் பிணக்கத்தைக் குறைக்க, தலைவன் அவளது புருவங்களையும் நெற்றியையும் 
நீவிவிடுகிறான். தலைவியின் புருவங்களைக் கோடேந்து புருவம் என்றும் நெற்றியைக் குவவு நுதல் என்றும் புலவர் வருணிக்கிறார். 

	கோடேந்து என்ற தொடர் சங்க இலக்கியங்களில் 11 முறை வருகிறது. அவற்றில் 9 முறை அது கோடேந்து அல்குல் 
என்ற தொடராகவே வருகிறது. ஒரு முறை அது கோடேந்து ஒருத்தல் என யானையைக் குறிப்பதாக உள்ளது. இப் பாடலில் 
மட்டுதான் இந்தத் தொடர் பெண்ணின் புருவத்தைக் குறிப்பதாக வருகிறது. எனவே புலவர் தம் காலத்திய வழக்கமான 
முறையினின்றும் மாறுபட்ட ஒரு சொல்லாட்சியைக் கையாண்டிருக்கிறார் எனத் தெரியவருகிறது. 

	பெண்களின் புருவம் மேலே எழுந்து, பின் கீழே தாழும். எனவே அவை கீழ்நோக்கி வளைந்து இருக்கும். எனில், அவை 
யானைத் தந்தங்கள் போல் மேல்நோக்கி வளைந்து இருந்தன எனப் புலவர் குறிப்பது எங்ஙனம்? எனவே, இங்கு புலவர் வழக்கமான 
பொருளில் இத் தொடரைக் கூறவில்லை என உணரலாம். மாறுபட்ட சொல்லாட்சியைப் போன்றே, அவர் மாறுபட்ட பொருளையும் 
இங்கு கொள்கிறார் எனத் தெரிகிறது. 

	கோடு என்பதற்கு கதுப்பு, முனை என்ற பொருள் இருப்பினும், முகடு என்ற பொருளும் உண்டு. 

	கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின் – அகம் 266/1
	கோடு உயர் பிறங்கு மலை – புறம் 232/5

	ஆகிய அடிகளில் கோடு என்பது உச்சி, முகடு என்ற பொருளில் வந்துள்ளமை காண்க. 

	ஏந்து என்பதற்கு (கையில்)தாங்கு என்ற பொருள் இருப்பினும், உயர்ந்திரு (rise high, be exalted) என்ற பொருளும் உண்டு.

	வாழை ஈன்ற வை ஏந்து கொழுமுகை- நற்.225/3
	சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் – அகம் 249/6
	எளிய ஆக ஏந்து கொடி பரந்த – அகம் 397/6

	என்ற அடிகள் இதனை வலியுறுத்தும். எனவே புலவர் கோடு ஏந்து புருவம் என்றபோது, (வளைந்த புருவத்தின்) 
உச்சி (முகடு)உயரமாக அமைந்த புருவம் என்றே பொருள்கொள்கிறார் எனவும் தோன்றுகிறது. 

			

	ஆண்களுக்குப் பெரும்பாலும் நெற்றி நீள்சதுர வடிவில் அமைந்திருக்கும். ஆனால் பெரும்பாலான பெண்களின் நெற்றி 
குவிக்கப்பட்ட மணல்மேடு போல் அமைந்திருக்கும். அதுவே குவவு நுதல்.

	தலைவன் தலைவியுடன் நெருக்கமாக இருக்கும் வேளையில், அவன் தன் இரண்டு விரல்களை ஒன்றுசேர்த்து, 
நடு நெற்றியில் வைத்து, பின்னர் இரு விரல்களையும் இருபக்கங்களிலும் இழுத்துப் புருவங்களை நீவிவிடுகிறான். அவ்வாறு 
செய்யும்போது அவன் தன் விரல்களை உயர்த்தி வளைக்கவேண்டியிருக்கிறது. பின்னர், அப்படியே இரண்டு விரல்களையும் 
பிரித்தவாறே நெற்றியில் அழுத்தி, உயரக்கொண்டுபோகிறான். இதனையே புலவர் கோடேந்து புருவமொடு குவவு நுதல் நீவி 
எனக் கூறுகிறார். அவ்வாறு செய்தபின் கையை வலப்பக்கம் இறக்கித் தொங்கிக்கொண்டிருக்கும் கூந்தலுக்குள் விரல்நுழைத்துக் 
கோதிவிடுகிறான். புலவரின் நயம் கலந்த சொற்கள் நமக்கும் இன்பமூட்டுகின்றன அன்றோ?

5. வறுங்கை காட்டிய வாய் அல் கனவு

	உள்ளங்கையை மடக்கி மூடிக்கொண்டு, ஒருவரிடம் நீட்டி, “இந்தா, எடுத்துக்கொள்” என்று ஒருவர் கூற, ஆசையுடன் 
மற்றவர் அருகில் வந்து, தான் விரும்புவதில் இது எதுவாக இருக்குமோ என்று கற்பனையை வளர்த்துக்கொண்டு, “என்ன அது?” 
என்று கேட்க, முதலாமவர் கையை விரித்து வெறுங்கையைக் காட்டினால் அடுத்தவருக்கு ஏற்படும் ஏமாற்றத்தைப் போல, கனவு 
வந்து காதலியைக் காட்ட, கனிந்த நெஞ்சுடன் அவன் அவளின் புருவமொடு நுதல் நீவி, மணங்கமழும் கதுப்பு உளர, ‘சட்’-டென்று 
கனவு கலைந்து விழிக்கும்போது, இத்துணை நேரம் தான் கண்டது வறுங்கையாய்ப் போய்விட்டதே என்று ஏக்கற்ற உலமரல் 
கொள்ளும் தலைவன் நிலையை வறுங்கை காட்டிய வாயல் கனவு என்று புலவர் நடைமுறைக் கதையை நனவோடைச் சித்திரமாக 
வருணித்துக் கூறும் அழகைச் சொல்லி மாளாது – சுவைத்துத்தான் தெரிந்துகொள்ளவேண்டும்.