அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 2

பாடல்  2. குறிஞ்சித் திணை    பாடியவர் - கபிலர்

துறை - பகல்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாவியது

  மரபு மூலம்- “குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய ”

	கோழிலை வாழைக் கோண்முதிர் பெருங்குலை
	யூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த
	சாரற் பலவின் சுளையொ டூழ்படு
	பாறை நெடுஞ்சுனை விளைந்த தேற
5	லறியா துண்ட கடுவ னயலது
	கறிவளர் சாந்த மேறல் செல்லாது
	நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங்
	குறியா வின்ப மெளிதி னின்மலைப்
	பல்வேறு விலங்கு மெய்து நாட
10	குறித்த வின்ப நினக்கெவ னரிய
	வெறுத்த வேஎர் வேய்புரை பணைத்தோ
	ணிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்
	டிவளு மினைய ளாயின் றந்தை
	யருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக்
15	கங்குல் வருதலு முரியை பைம்புதல்
	வேங்கையு மொள்ளிணர் விரிந்தன
	நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே

 சொற்பிரிப்பு மூலம்

	கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை
	ஊழுறு தீம் கனி உண்ணுநர் தடுத்த
	சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு
	பாறை நெடும் சுனை விளைந்த தேறல்
5	அறியாது உண்ட கடுவன் அயலது
	கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
	நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
	குறியா இன்பம் எளிதின் நின் மலை
	பல் வேறு விலங்கும் எய்தும் நாட
10	குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய
	வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள்
	நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு
	இவளும் இனையள் ஆயின் தந்தை
	அரும் கடி காவலர் சோர் பதன் ஒற்றி
15	கங்குல் வருதலும் உரியை பைம் புதல்
	வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
	நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே

அடிநேர் உரை 
	
	கொழுத்த இலைகளைக் கொண்ட வாழையின், அடுக்குகள் முற்றிய பெரிய குலையின்
	நன்கு பழுத்த இனிய கனிகள், (மிக்க இனிமையால்)உண்பவருக்குத் திகட்டும்,
	மலைச்சரிவின் பலாச் சுளைகளுடன் (கலந்ததால்), நாட்பட்டு,
	பாறையின் குழிந்த பகுதியில் சுனை போல் உண்டாகிய தெளிந்த சாறை
5     	(தேறல் என)அறியாமல் குடித்த ஆண்குரங்கு, (பின்னர்) அருகிலிருக்கும்
	மிளகுக் கொடிகள் படர்ந்த சந்தனமரத்தில் ஏறாமல்,
	நறிய பூக்களாலான படுக்கையில் களிப்புற்றுத் தூங்கும்
	எண்ணி முயலாத இன்பத்தை எளிதாக, நின் மலையிலுள்ள
	பல்வேறு விலங்குகளும் எய்தும் நாடனே!
10   	(நீ)எண்ணி முயன்ற இன்பம் நினக்கு எங்ஙனம் அரிதாக இருக்கும்?
	மிக்க அழகினையுடைய மூங்கில் போன்ற பருத்த தோளைக் கொண்ட(இவளும்),
	கட்டுப்படுத்த எண்ணியும் அடங்காத நெஞ்சமுடன், உன்னிடம்
	இவளும் இத்துணை காதல் கொண்டவளாயின், (இவளது)தந்தையின்
	கடும் காவலையுடைய காவலர்கள் சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு
15   	இரவில் வருவதுவும் (நினக்கு)உரியதே, பசுமையான புதர்கள் (சூழ்ந்த)
	வேங்கை மரங்களும் நல்ல பூங்கொத்துகளை மலரப்பெற்றுள்ளன,
	மிகுந்த வெண்மை நிறமுள்ள திங்களும் ஒளிவட்டம் கொண்டுள்ளது.

அருஞ்சொற்கள்:

கோழ் - செழுமையான;  கோள் - வாழைத் தாரில் உள்ள பழச் சீப்புகள்;  ஊழுறு - நன்கு பழுத்துக் குழைந்துபோன;  ஊழ்படு - பதம் கனிந்து;  
தேறல் - தெளிந்த மது; கடுவன் - ஆண்குரங்கு;  கறி - மிளகுக்கொடி;  சாந்தம் - சந்தன மரம்;  வீ அடுக்கம் - பூக்களின் அடுக்கிவைப்பு;  
கண்படுக்கும் - உறங்கும்;  வெறுத்த - மிகுதியான;  ஏஎர் < ஏர் - அழகு;  வேய் - மூங்கில்;  பணை - பருத்த;  கடி - காவல்;  
சோர்பதன் - காவல் நெகிழ்ந்திருக்கும் தக்க தருணம்;  ஒற்றி - மறைவாக நின்று ஆய்ந்து;  கங்குல் - இரவு; பைம் - பச்சையான;  
புதல் - நெருக்கமான செடிகொடிகள்;  வேங்கை - வேங்கை மரம், Pterocarpus marsupium;  இணர் - பூங்கொத்து;  
ஊர்கொண்டன்றே - ஒளிவட்டம் சூழப்பெற்றிருக்கிறது - have a halo around.

பாடலுக்கான பின்புலம் (Background for the poem)

	மலைச்சரிவில் (சாரல்) ஒரு சமதளத்தில் அமைந்திருக்கும் குறவரின் குடில்கள். அவற்றுக்கு வெளியே சற்றுத் தள்ளி, மலைக்காட்டை 
அழித்து அமைக்கப்பட்ட ஒரு தினைப்புனம். பாடல் தலைவியின் தந்தைக்குச் சொந்தமானது. அங்கு விதைக்கப்பட்ட தினை வளர்ந்து கதிர்விட்டு, 
அதுவும் முற்றி அறுவடைக்குத் தயாராக இருக்கிறது. தினை கதிர்விட்ட உடனே குருவி, கிளி போன்ற காட்டுப் பறவைகள் கதிர் மீது அமர்ந்து 
அதைக் கொத்தித் தின்ன வரும். அவற்றை விரட்ட நம்பிக்கையான ஆள் வேண்டும். அது மணமுடிக்காமல் வீட்டிலிருக்கும் இளம்பெண்களின் 
பொறுப்பு. நம் தலைவியும், தன் தோழிகளுடன் தினைப்புனம் காக்கத் தினமும் வந்துகொண்டிருக்கிறாள். அப்போது ஒருநாள் ஓர் இளைஞன் 
வேட்டையாடியவண்ணம் அந்தத் தினைப்புனம் வழியே வருகிறான். அவன்தான் நம் தலைவன். ‘அண்ணலும் நோக்க, அவளும் நோக்க', 
‘கண்ணொடு கண்ணிணை நோக்கொக்க', காதல் அரும்புகிறது. அவன் ஒவ்வொரு நாளும் அந்தப் பக்கம் வர ஆரம்பிக்கிறான். இவ்வாறு அவர்கள் 
காதல் வாழ்வு இனிமையாகக் கழிய, அறுவடைக் காலமும் வந்துவிடுகிறது. தலைவனோ காதல் மயக்கத்தில் வேறொன்றையும் பற்றி நினைப்பதாகத் 
தெரியவில்லை. அறுவடை முடிந்துவிட்டால், பின்னர் இற்செறிப்புத்தான். அதாவது, தலைவி வீட்டை விட்டு வெளியில் வர முடியாது. 
அதை எண்ணிய தலைவியின் முகம் வாட்டமுற்று இருக்கிறது. அதைக் கண்ட தலைவன் அதற்குக் காரணம் கேட்கிறான். தலைவிக்குப் 
பேச நா எழவில்லை. அவள் சார்பாகத் தோழி தலைவனை நோக்கிக் கூறுவதுதான் இப்பாடல்.

	‘இவளும் இனையள் ஆயின்' என்ற தொடர்மூலம், இது தோழி கூறுவது எனத் தெரிகிறது. ‘இவள்' என்பது அருகிலிருக்கும் தலைவி. 
‘பல் வேறு விலங்கும் எய்தும் நாட' என்பதிலிருந்து எதிரிலிருப்பது தலைவன் எனத் தெரிகிறது. ‘இன்னும் எத்தனை காலத்துக்கடா இப்படி 
வந்துவந்து போய்க்கொண்டிருக்கப்போகிறாய்? காலாகாலத்தில் மூணு முடிச்சுப்போட்டுக் கூட்டிக்கொண்டு போகிற வழியைப் பார்” என்று 
தலைவியின் தோழி தலைவனிடம் கூறுவதைத்தான், வரைவு காடாவியது என அகத்திணை இலக்கணம் கூறுகிறது. அறுவடை முடிந்துவிட்டால், 
தலைவியை வீட்டிலேவைத்து அடைத்துவிடுவார்கள் என்று கூறுவதையே, செறிப்பு அறிவுறீஇ என்கிறது இலக்கணம். செறிப்பு என்பது 
இற்செறிப்பு (containment in house). பகல்குறி என்பது பகலில் வந்து சந்திப்பது. இவற்றைக்கொண்டுதான், 

	துறை: பகல்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாவியது

	என உரையாசிரியர்களால் துறை வகுக்க முடிகிறது. கொஞ்சம் பழக்கப்பட்டால் உங்களுக்கும் இது கைவசமாகிவிடும்.

	இதற்கும் முன்னர் திணை குறிக்கவேண்டும். கங்குல் வருதலும் உரியை என்பதால் இரவுச்சந்திப்பு சுட்டிக்காட்டப்படுகிறது. 
எனவே இது புணர்தலும் (சந்தித்தல்), புணர்தல் நிமித்தமும் என்ற உரிப்பொருளாகி, குறிஞ்சித்திணையாகிறது. இருப்பினும் முதற்பொருள், 
கருப்பொருள் ஆகியவற்றை முதலில் தேடலாம். சாரல் என்பது மலைச்சரிவு. மலைப்பகுதி. நிலம் மலையும் மலை சார்ந்த இடமும் ஆகிறது. 
கங்குல் சந்திப்பு என்பதால், பொழுது யாமம். முதற்பொருளான நிலமும் பொழுதும் குறிஞ்சித்திணைக்குரியனவே. சாரல் பலா என்பது 
மலைப் பலா மரம். எனவே வாழையும் மலைவாழை. பாறை, சுனை, தேறல், கடுவன், கறி (மிளகு), சாந்தம் (சந்தனமரம்) ஆகியவற்றுடன் 
வேங்கை மரம் ஆகிய அனைத்துமே மலை சார்ந்தவை. குறிஞ்சிக்குரிய இத்தனை கருப்பொருள்களையும் இப்பாடல் தாங்கியிருக்க, 
இன்னமும் என்ன தயக்கம்? இது குறிஞ்சித் திணைக்கு உரியதுதான். இவற்றை எல்லாம் எத்துணை சாதுரியமாகக் கையாண்டு பாடல் 
புனையப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? இவற்றுக்கிடையில், இப்பாடலை ஆசிரியப்பா வகையைச் சேர்ந்ததாய் அமைத்து, அதன் இலக்கண 
வரம்புக்குள்ளும் புலவர் அமைத்திருக்கிறார். இவை எல்லாம் கற்பனைக்குத் தடைக்கல் அல்ல - மாறாக, கற்பனை ஓட்டத்துக்குக் கரைகளாக 
அமைந்து, ஓட்டத்தை அழகுபடுத்துகின்றன எனலாம். இதுமட்டுமல்ல, இன்னும் எத்தனை சித்து விளையாட்டுகளைக் கபிலர் இந்தப் பாடலில் 
காண்பிக்கிறார் என்பதை அடுத்துக் காண்போம்.

உள்ளுறை உவமம் - விளக்கம்  

	மரத்திலேயே நன்கு பழுத்துவிட்ட குலைகளினின்றும் வாழைப் பழங்கள் கனிந்து, கீழே இருக்கும் பாறையில் உதிர்ந்து விழுகின்றன. 
அருகிலிருக்கும் பலா மரத்திலிருந்து அதன் பழம் பழுத்து, வெடித்துச் சிதறி, அந்த வாழைக்குலையின் மேல் விழுகிறது. அந்த இரண்டு பழங்களின் 
கலவை, சாறாக வழிந்தோடி பாறையின் பெரிய குழிவான பகுதியில் சேர்ந்து, ஒரு சுனை போல் ஆகிறது. நாட்பட்ட அந்தச் சாறு நொதித்துப்போய் 
மதுவின் நிலையை அடைந்து தெளிந்து நிற்கிறது. அந்தப் பக்கம் நீர் குடிக்க வந்த ஒரு குரங்கு இந்தத் தெளிவை நீர் என்று எண்ணிக் குடிக்கிறது. 
அப்புறம் என்ன ஆகும்? போதை தலைக்கேற அது, மிளகுக்கொடிகள் படர்ந்த ஒரு சந்தன மரத்தில் ஏறுவதை விட்டுவிட்டு, அதன் கீழுள்ள மலர்களின் 
குவியலில் படுத்துத் தூங்கிவிடுகிறது.

			
			

	இவ்வளவு விளக்கமான ஒரு குரங்குக் கதையை இந்தப் பதினேழு அடிப்பாடலில், ஏறக்குறைய பாதியளவுக்குப் புலவர் பாடியிருப்பது ஏன்? 
இந்தக் குரங்குக் கதைக்குள், தலைவனுக்குச் சொல்லவேண்டிய ஒரு செய்தி பொதிந்துகிடக்கிறது. இது ஓர் உள்ளுறை உவமம். உள்ளுறை உவமத்தில் 
ஒரு one-to-one-correspondence  இருக்கும். அது என்ன என்று பார்ப்போம். 

	தலைவியின் தாய் வாழைப்பழக் குலை போல ஓர் இனிமையான பெரிய செல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவள் 
(கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை/ஊழுறு தீம் கனி) . 

	தலைவியின் தந்தையோ, பலாப்பழத்தைப் போன்று ஒரே குடும்பமாக, அதன் இனிக்கும் சுளைகளைப் போன்ற பல உறுப்பினர்களைக் 
கொண்ட கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்தவன் (உண்ணுநர் தடுத்த/சாரல் பலவின் சுளை). 

	இவர்கள் இருவரின் மணம் நடந்து (வாழை.. தீங்கனி, பலவின் சுளையொடு ஊழ்படு) 

	மயக்கும் தேறலின் சுவையைப் போன்ற தலைவி பிறந்து (பாறை நெடும் சுனை விளைந்த தேறல்) வளருகிறாள். 

	ஊழின் முறையால் தலைவன் தற்செயலாகத் தலைவியைச் சந்தித்து, யாரோ ஒரு பெண் என்று பேச்சுக்கொடுத்து, பின்னர் அவளிடம் 
காதல்கொண்டு அவளது காதலின்பத்தைப் பெறுகிறான் (அறியாது உண்ட கடுவன்). 

	கள் குடித்த குரங்கு போல் அந்தக் காதலின்பத்தில் சொக்கிப்போகிறான். அதனால், தலைவியை மணம் முடிப்பதற்கு வேண்டிய 
ஏற்பாடுகளைச் செய்யாமல் (கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது), 

	பூப்படுக்கை போன்ற காதல் சுகத்தில் தன்னை மறந்து சுகித்துக் கிடக்கிறான் (நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்). 

	தலைவனின் கடமை மறந்த நிலையைக் குரங்குக் கதை மூலம் குறிப்பால் உணர்த்தும் தோழியின் திறத்தைப் பார்த்தீர்களா? 

	குறிஞ்சி நிலக் கருப்பொருள்களைக் கொண்டு கபிலர் பின்னியிருக்கும் இந்த உவமைக் கதை எத்துணை ஆழமானது? இதில் 
உவமான உவமேயங்கள் இல்லை. ஆனால் ஒப்பீடு இருக்கிறது.

	இவ்வாறு உன் மலையின் விலங்கினங்கள்கூடத் தாம் நினைக்காத இன்பத்தை எளிதாக அடையும் நாட்டுக்கு உரியவனே! 
நீ நினைக்கின்ற (உன் திருமண) இன்பத்தை அடைவது உனக்கு அரிதோ? எனக் கேட்கும் தோழியின் கூற்றில் எத்துணை ஆழத்தைப் 
பொதிந்துவைத்திருக்கிறார் கபிலர் என்று தெரிகிறதா? “என்னை மணமுடித்துக்கொள்” என்று ஒரு பெண் நேரிடையாகக் கூறுவது பெண்ணுக்கு 
அழகல்ல. அதைத் தோழிகூடச் சொல்வதில்லை என்பதைக் கபிலர் எத்துணை மென்னயத்துடன் (நாசூக்காக) காட்டுகிறார். “குறித்த இன்பம் நினக்கு 
அரிதோ?” என்ற கேள்வி மூலம் மணம் பற்றிய பேச்சைத் தலைவன் பக்கம் திசைதிருப்பும் நுட்பத்தைக் (சூட்சுமம்) கவனியுங்கள். “இல்லை இல்லை, 
நான் அப்படி நினைத்ததே இல்லை” என்று தலைவன் மறுத்துரைக்க முடியுமா?

	விரைவில் மணம் முடிக்கவேண்டும் என்பதையும் தோழி மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் திறத்தை நோக்குங்கள். ‘வேங்கை மரம் 
பூத்திருக்கிறது, வெள்ளி நிலாவை ஒளிவட்டம் சுழ்ந்திருக்கிறது' என்கிறாள் அவள். 

			

	கிழக்கிலே முழுமதி தோன்றும்போது மேற்கில் ஞாயிறு மறையும் - அந்த நாளும் முடியும். மறுநாள் அறுவடை நடைபெறுமோ? 
இருக்கலாம் - வேங்கை பூத்துவிட்டதே! வேனில் முடிந்து கார்காலம் தொடங்குவதற்கான அறிகுறி இது. 
வேங்கை மரம் June - October மாதங்கள் இடையே பூக்கும் என்று தாவரவியல் மூலம் அறிகிறோம்
 (Golden yellow flowers with dark calyx in large panicles appear from June to October.  Flowering season is short). 
June நடுவில் ஆனி பிறக்கிறது - அது கார்காலத் தொடக்கம். மழை வருமுன் அறுவடையை முடித்துவிடுவர். ‘கார்காலம் வந்தால் என்ன? 
மழை வரச் சற்றுத் தாமதம் ஆகலாம் இல்லையா?' எனத் தலைவன் கூறலாம். முழுநிலவு ஒளிவட்டத்துடன் காணப்படுகிறது என்கிறாள் தோழி. 
இது மழை வருவதற்கான அறிகுறி என்ற நம்பிக்கை பலநாடுகளில் இருந்துள்ளது. இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

	திங்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகச் சிறிய பனித்துகள்கள் உருவாகும்போது, அவற்றின் மீது விழுந்த திங்களின் ஒளி, ஒளிச்சிதறல் 
அடைந்து ஒரு வட்டத்தை உருவாக்குகிறது. இதனை halo என்பர். இந்தப் பனித் துகள்களின் உருவாக்கமே இன்னும் ஓரிரு நாட்களில் மழை 
வருவதற்கான அறிகுறி என வானிலையியலார் கூறுகின்றனர் 

	(At night, high thin cirrostratus clouds can lead to halos  around the moon, which indicates an approach of a warm front  
and its associated rain  in one or two days. Typically, a warm front will be associated with a low pressure system which is commonly 
referred to as a storm). 

	இந்த இரண்டு காரணங்களால் மழை வருவது உறுதியாகத் தெரிகின்றது. எனவே அறுவடை சீக்கிரம் நடைபெறும் எனத் தோழி 
கணிக்கிறாள். காலம் கனிந்துவிட்டது; எனவே நேரத்தைக் கடத்தாதே என்பதை வலியுறுத்திக் கூறும் வண்ணம், ஒன்றுக்கு இரண்டாகக் 
காரணங்களை அடுக்கிக்கூறித் தன் உரையை முடிக்கும் தோழியின் அறிவுக்கூர்மையின் பின்னால் தெரியும் கபிலரின் குறிஞ்சித்திறம் உங்கள் 
கண்களுக்குப் படுகிறதா? அதனால்தான் கபிலர், குறிஞ்சிக் கபிலர் எனப்படுகிறார்.

          அறுவடை நடந்துவிட்டால் அப்புறம் இற்செறிப்புத்தான். இன்னும் பதினைந்து நாட்களுக்குள் தலைவன் விரைந்து செயல்பட வேண்டும். 
முழுநிலவுக்குப் பின்னர் தேய்பிறை - நல்ல காரியங்கள் நடத்தமாட்டார்கள். அதன் பின்னர் வரும் வளர்பிறையில் தலைவியின் வீட்டார் 
மண ஏற்பாடுகள் செய்யலாம் - அறுவடைப் பணம் வேண்டிய அளவு இருக்கிறது - திருமணச் செலவுக்காக. இன்னும் காதலின்பத்தில் சொக்கி 
உறங்காமல், விரைவில் காய்களை நகர்த்த வேண்டும். அது உன்னால் முடியும் என்று நம்பிக்கையூட்டவும் செய்கிறாள் தோழி. குறியா இன்பத்தை 
எளிதினில் அடைந்தது போல், நீ குறித்த இன்பமாகிய திருமணத்தை எய்துவதுவும் உனக்கு அரியதோ? என்று நம்பிக்கை ஊட்டுகிறாள் தோழி. 
‘ஒருவேளை தலைவி தயங்குவாளோ என்று கலங்கவேண்டாம் - அவளே நினைத்தாலும் நிறுத்தமுடியாத நெஞ்சத்துடன் தலைவி 
காத்திருக்கிறாள் (நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு /இவளும் இனையள் ஆயின்). இனியும் விட்டால், நீ இரவில்தான் அவளை அவளது 
வீட்டின் வெளிப்புறத்தில் சந்திக்கமுடியும் - தந்தையின் காவல் கடுமையானது - நீ ஒளிந்திருந்து, காவல் தளர்ந்துள்ள நேரத்தை ஒற்றன் போல்
 கண்டுபிடித்து வரவேண்டும் - அப்புறம் உன்பாடு' என்று கூறும் தோழியின் கூற்றில் உள்ள ஆழமான பொருளைத் தலைவன் உணர்ந்தானோ 
இல்லையோ , நீங்கள் மீண்டும் மீண்டும் படித்து இன்புறலாம். என்னே கபிலரின் புலமை!