அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                          அகநானூறு - 36

பாடல் 36. மருதத் திணை  பாடியவர் - மதுரை நக்கீரர்

துறை - தலைமகள் பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனொடு புலந்து சொல்லியது.

 மரபு மூலம் - அலரே .. ஆர்ப்பினும் பெரிதே

	பகுவாய் வராஅல் பல்வரி யிரும்போத்துக்
	கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி
	யாம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
	கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந்
5	தரில்படு வள்ளை யாய்கொடி மயக்கித்
	தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
	கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு
	நாட்கய முழக்கும் பூக்கே ழூர
	வருபுனல் வையை வார்மண லகன்றுறைத்
10	திருமரு தோங்கிய விரிமலர்க் காவின்
	நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு
	வதுவை யயர்ந்தனை யென்ப வலரே
	கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழிய
	னாலங்கானத் தகன்றலை சிவப்பச்
15	சேரல் செம்பியன் சினங்கெழு திதியன்
	போர்வல் யானைப் பொலம்பூ ணெழினி
	நாரரி நறவி னெருமை யூரன்
	தேங்கம ழகலத்துப் புலர்ந்த சாந்தி
	னிருங்கோ வேண்மா னியற்றேர்ப் பொருநனென்
20	றெழுவர் நல்வல மடங்க வொருபகல்
	முரைசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக்
	கொன்றுகளம் வேட்ட ஞான்றை
	வென்றிகொள் வீர ரார்ப்பினும் பெரிதே

 சொற்பிரிப்பு மூலம்

	பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்துக்
	கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி
	ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக்
	கூம்பு விடு பன் மலர் சிதையப் பாய்ந்து எழுந்து
5	அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கித்
	தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
	கயிறு இடு கதச் சேப் போல மதம் மிக்கு
	நாள் கயம் உழக்கும் பூக் கேழ் ஊர
	வரு புனல் வையை வார் மணல் அகன் துறைத்
10	திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்
	நறும் பல் கூந்தல் குறும் தொடி மடந்தையொடு
	வதுவை அயர்ந்தனை என்ப அலரே
	கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
	ஆலங்கானத்து அகன் தலை சிவப்பச்
15	சேரல் செம்பியன் சினம் கெழு திதியன்
	போர் வல் யானைப் பொலம் பூண் எழினி
	நார் அரி நறவின் எருமையூரன்
	தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
	இருங்கோ வேண்மான் இயல் தேர்ப் பொருநன் என்று
20	எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல்
	முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செலக்
	கொன்று களம் வேட்ட ஞான்றை
	வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே

அருஞ்சொற் பொருள்:

போத்து = ஆண்; கொடுவாய் = வளைந்த வாய்; இரும்பின் = தூண்டில் முள்ளின்; துற்றி = விழுங்கி; 
மெல்லடை = மெல்லிய இலை; அரில் = பிணக்கம்; மயக்கி = கலக்கி; வாங்க = இழுக்க; கதச் சே = சினமுள்ள ஏறு; 
தொடி = வளையல்; வதுவை = திருமணம்; சுவல் = பிடரி மயிர்; அகலத்து = மார்பினில்; வலம் = வெற்றி; 

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	தலைவன் வேற்றுமகள் ஒருத்தியுடன் கூடியிருந்துவிட்டு வீடு திரும்புகிறான். வந்தவனை எதிர்கொண்ட 
தலைவி அவனது நடத்தையால் ஊரே அவனைப் பார்த்துச் சிரிக்கிறது என்று சாடுகிறாள். 

	தூண்டில் புழுவால் கவரப்பட்ட கொழுத்த வரால் மீன், புழுவை விழுங்க முயன்று மாட்டிக்கொண்டது. 
இருப்பினும் தூண்டில்காரன் இழுத்த இழுப்புக்கு இடம் தராது, குளத்தைக் கலக்கியும், குளத்தில் உள்ள கொடி, மலர், 
இலை ஆகியவற்றைச் சிதைத்தும் உருள்கிறது. கயிற்றால் கட்டுப்படுத்த முடியாத காளை போல வீறுகொண்டு 
திமிறுகிறது.

	காதற்பரத்தைபால் ஈர்ப்புக்கொண்ட தலைவன் ஊரறிய அவளுடன் ஆற்றங்கரையில் இன்புற்றிருக்கிறான். 
இதனால் ஊராரின் ஏளனப்பேச்சு பெரிதாய் எழுகிறது.

	விடியற்காலையில் வீடுதிரும்பும் தலைவனைத் தலைவி நேரடியாகவே தாக்குகிறாள். “தூண்டில்மீன் 
ஊர்க்காரனே, உன் நடத்தையால் எழுந்த ஏச்சுப்பேச்சு, உன் மன்னன் பாண்டியன் எழுவரைப் போரில் வென்றபோது 
எழுந்த வெற்றிமுழக்கத்தினும் பெரிதாக எழுந்துவிட்டது”.

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்துக்
	கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி
	ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக்
	கூம்பு விடு பன் மலர் சிதையப் பாய்ந்து எழுந்து
5	அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கித்
	தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
	கயிறு இடு கதச் சேப் போல மதம் மிக்கு
	நாள் கயம் உழக்கும் பூக் கேழ் ஊர

	பிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன்
	வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையை விழுங்கி,
	ஆம்பலின் மெல்லிய இலை கிழியுமாறு, குவளையின்
	மலர்கின்ற பல மலர்கள் சிதைந்துபோகப் பாய்ந்து எழுந்து,
	பின்னிக்கிடக்கும் வள்ளையின் அழகிய கொடிகளை உழப்பி,
	தூண்டில்காரன் வளைத்து இழுக்க வராமல்,
	கயிறிட்டுப் பிடிக்கும் சினம் மிக்க காளையைப் போல வெறி மிகுந்து,
	காலையில் குளத்தைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!

	நாட்பட்ட நீர் நிறைந்த நல்ல குளம். காலை நேரம். குளத்தில் அடர்ந்து கிடக்கும் ஆம்பலின் மெல்லிய 
இலைகள் (ஆம்பல் மெல் அடை)நீரில் படர்ந்து மிதக்கின்றன. பலவாய் அரும்புவிட்டு நிற்கும் குவளையின் 
அன்றைய மொட்டுகள் விரியத் தொடங்குகின்றன(குவளைக் கூம்பு விடு பன் மலர்). வள்ளைக்கொடிகள் நீர்ப்பரப்பின் 
மேல் பின்னிப்பிணைந்துகிடக்கின்றன (அரில் படு வள்ளை). நீரின் ஆழத்தில் உள்ள ஒரு பொந்தின் உள்ளே 
இருந்துகொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவண்ணம் அன்றைய நாளுக்குரிய இரையை எதிர்பார்த்து 
இருக்கிறது ஒரு பெரிய ஆண் வரால் (வரால் இரும்போத்து). அப்பொழுது அதன் கண்முன் வந்து இறங்குகிறது 
ஒரு இரை. அது தன்னைக் கொள்வதற்காக (கோள் இரை) வளைந்த இரும்புக் கொக்கியின்(கொடுவாய் இரும்பின்) 
முனையில் செருகப்பட்டு தூண்டிலின் மூலம் மீன்வேட்டைக்காரனால் (தூண்டில் வேட்டுவன்)இறக்கப்பட்டது 
என்பதை அது உணரவில்லை. மெதுவாக அந்த இரையின் அருகில் சென்று அப்படியே ஒரு ‘லபக்’. வாயில் கவ்வி, 
இறுக்க மூடி (துற்றி) வயிற்றுக்குள் அமுக்க நினைத்தால் ‘சுருக்’-கென்ற வலி. கொடுவாய் இரும்பு குத்திக்கிழிக்க – 
வலி பொறுக்காத வரால் துடித்துத் துவள்கிறது. நீர்ப் பரப்பிலிருக்கும் ஆம்பலின் மெல்லிய இலைகளைக் 
கிழித்துக்கொண்டு(ஆம்பல் மெல்லடை கிழிய) மீன் வெளியே துள்ளி எழுகிறது (பாய்ந்தெழுந்து). கூட்டமாய்ப் 
பூத்துக்கொண்டிருக்கும் குவளையின் மலர்ந்தும் மலராத பாதி மலர்களைக் குலைத்து எழுகிறது(குவளைக் கூம்புவிடு 
பன்மலர் சிதைய). எழுந்த மீன் சிறிது தள்ளியிருக்கும் வள்ளிக்கொடிகளின் மேல் ‘தொப்’பென்று விழுந்து, 
நெருக்கமாய்ப் பின்னிக்கிடக்கும் அந்தக் கொடிகளில் புரண்டு உழப்புகிறது (அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கி). 
தூண்டில்காரன் சும்மா இருப்பானா? வளைத்து இழுக்கிறான். தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி மீன் 
திமிறிக்கொண்டு உருள்கிறது (வேட்டுவன் வாங்க வாராது). கயிறுகட்டி இழுத்தும் கட்டுப்படாத சல்லிக்கட்டுக் 
காளையைப் போல (கயிறிடு கதச்சேப் போல மதம் மிக்கு) வெறிகொண்டு அந்தக் குளத்தையே 
கலக்கிக்கொண்டிருக்கிறது அந்தக் கடிபட்ட வரால்.

			

			

			

			

	காதற் பரத்தையிடம் இன்பம் துய்த்துவிட்டுக் காலையில் வீடுதிரும்பும் தலைவனை ‘வரவேற்கும்’ 
தாய்க்குலம் இளக்காரமாகக் கூறுகிறது, “வாங்கய்யா, கொக்கியில மாட்டிக்கிட்ட என் கொறவக் குட்டி” 
(குறவை மீன் என்பது வரால் மீனின் ஒரு வகை). அந்தமட்டும் தலைவிக்குக் கொஞ்சம் மன நிறைவு. 
அவள் கூறுவதைக் கவனித்துப் படித்தீர்களா? தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது … .. நாட்கயம் உழக்கும் 
பூக்கேழ் ஊர – என்றுதான் கூறுகிறாளேயொழிய வேட்டுவன் இழுவைக்கு மீன் தன்னை விட்டுத்தரவில்லை -
கொக்கியில் சிக்கிய மீன் குறவனின் கூடைக்குள் போகவில்லை என்பதைக் கூறாமல் கூறுகிறாள். மெல்லடை 
கிழித்து, மென்மலர் சிதைத்து, மென்கொடி மயக்கி, தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, நாட்கயம் உழக்கி – 
கொக்கியினின்றும் தன்னைக் கழற்றிக்கொண்டு, தன் கூட்டைத் தேடி வந்துவிட்டது அந்தக் கொழுத்த வரால் 
(இரும் போத்து) – கொழுப்பெடுத்த வரால்! 

	வரு புனல் வையை வார் மணல் அகன் துறைத்
10	திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்
	நறும் பல் கூந்தல் குறும் தொடி மடந்தையொடு
	வதுவை அயர்ந்தனை என்ப 

	(வற்றாது) வரும் நீரை உடைய வைகையின் நீண்ட மணற்பரப்புள்ள அகன்ற துறையின்
	அழகிய மருதமரங்கள் ஓங்கி வளர்ந்த, விரிந்த மலர்களுள்ள சோலையில்
	நறிய, மிக்க கூந்தலையுடைய, குறு வளையல்களை அணிந்த இளம்பெண்ணுடன்
	மணவாழ்க்கை நடத்தினாய் என்று ஊரார் கூறுகின்றனர் –

	பூடகமாகப் பேசினால் புரியாதது போல் அவன் மழுப்பிவிடுவான் என்று அஞ்சிய தலைவி நேரிடைத் 
தாக்குதலைத் தொடங்குகிறாள். “நானும் விழாவுக்கு வந்திருந்தேன் – அந்தக் கண்றாவியக் கண்ணால பார்த்தேன்” 
என்று வெடிக்கும் கல்யாண(ப்)பரிசு மாலினி போல. தலை நிறைய மல்லிகைப் பூ – அள்ளி முடிய முடியாத கூந்தல் – 
அடுக்கிவிட்ட வளையல்கள் – கொண்ட இளம்பெண்ணுடன் – புதிதாய் மணம்கொண்டவன் போல் அத்துணை 
நெருக்கத்துடன் – அதுவும் தனிமையிலா? – பலரும் வந்து கூடும் அகன்ற துறை – ஊரே வந்து குழுமும் பேரெடுத்த 
மருதமரத் தோப்பு – இத்துணை வெளிப்படையாகத் தலைவன் அந்த மடந்தையொடு இன்புற்று அயர்ந்த நிலையைக் 
காணாத கண் இல்லை. ஆம்பல் மெல்லடை போன்ற அழகுத் தலைவியின் நற்பெயர் அசிங்கப்பட்டுப்போனது – 
“ந்தா அவ புருசன்’ல இவன்?” குவளை மலர் போன்ற குடும்ப மானம் குலைந்துபோனது – 
“அந்த வீட்டுப் புள்ளை’ல இது?” நல்ல வேளை, காமம் என்னும் தூண்டில் வேட்டுவன் கயிறிட்டு இழுக்கும்போது, 
அரில்படு வள்ளை போன்ற பாசப் பிணைப்பில் சிக்கிக்கொண்டான். எனவே இழுக்கமுடியாத வேட்டுவன் 
இளைத்திருக்கும் நேரம் பார்த்துக் கழற்றிக்கொண்டு வந்துவிட்டது முரட்டுக்காளை(கதச்சே). இருப்பினும் கண்ணால் 
பார்த்த ஊர் கைகொட்டிச் சிரிக்காதோ? ஊர் முழுக்கக் கேட்கும் “கசமுச”ப் பேச்சைக் காதுகொடுத்துக் 
கேட்கமுடியவில்லை.

			அலரே
	கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
	ஆலங்கானத்து அகன் தலை சிவப்பச்
15	சேரல் செம்பியன் சினம் கெழு திதியன்
	போர் வல் யானைப் பொலம் பூண் எழினி
	நார் அரி நறவின் எருமையூரன்
	தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
	இருங்கோ வேண்மான் இயல் தேர்ப் பொருநன் என்று
20	எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல்
	முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செலக்
	கொன்று களம் வேட்ட ஞான்றை
	வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே

			 ஊரார் ஏளனப் பேச்சு,
	கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள் பூட்டிய கொடி பறக்கும் தேர் உடைய நெடுஞ்செழியன்
	தலையாலங்கானத்து அகன்ற போர்க்களம் செந்நிறம் அடைய -
	சேரன், சோழன், சினம் மிக்க திதியன்,
	போரில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,
	நாரால் அரிக்கப்பட்ட கள்ளினையுடைய எருமையூரன்,
	தேன் மணம் கமழும் மார்பினில் பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய
	இருங்கோவேண்மான், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையுடைய பொருநன் என்ற
	எழுவரின் சிறந்த வெற்றிகள் அடங்கிப்போக, ஒரு பகலிலே
	முரசுகளுடன் வெண்கொற்றக்குடைகளையும் கைப்பற்றி, தன் புகழ் எங்கும் பரவ,
	அவரைக் கொன்று களவேள்வி செய்த பொழுது
	வெற்றியடைந்த வீர்ர் எழுப்பிய ஆரவாரத்தினும் பெரிதாக உள்ளது.

	சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் ஆகியோர் கூட்டாகச் 
சேர்ந்து பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறைகூவல் விடுக்க, அவன் அந்த எழுவரையும் தலையாலங்கானம் என்ற 
இடத்தில் சந்தித்துப் போரிட்டு ஒரே பகலில் அவர்களை வீழ்த்தினான் எனத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அந்த 
வெற்றியின்போது பாண்டிய வீர்ர்கள் எழுப்பிய ஆர்ப்பரிப்பின் பேரொலியைக் காட்டிலும் பெரிதாக எழுந்ததாம் வைகைக் 
கரையில் வேற்றுப் பெண்ணுடன் ஆடிக் களித்த தலைவனைப் பற்றிய ஊராரின் புறங்கூற்று.

	ஊராரின் வம்புபேச்சு போர்க்களத்து வீர்ர் உயர்த்தி எழுப்பும் ஓங்கிய குரலினும் பெரிதா? சற்று மிகையாக 
இல்லை??

	அலர் என்பது உரக்கப் பேசுதலோ ஊர்வம்பு கதைப்பதோ அல்ல. அது ‘கிசுகிசு’ குரலில் பரிமாறப்படும் 
‘கிளுகிளுப்பு’ச் செய்தி. இன்றைக்கும் கிராமப்புறங்களில் சந்திக்கும் பெண்கள், அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு, 
தொண்டையில் காற்று மட்டும் வருவது போல, மிகத் தாழ்ந்த குரலில், “ஆமா, ஒனக்குத் தெரியுமா சங்கதி?” என்று 
தாம் கேள்விப்பட்டவற்றைப் பரப்புவார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் இதைக் கேட்க நேர்ந்தால், அந்தப் பேச்சின் 
வெம்மை தாங்காமல் காதைப் பொத்திக்கொண்டு நகர்ந்துவிடுவார்கள். திடீரென்று நம் அருகே ஆயிரம் பேர் உரக்க ஒலி 
எழுப்பினால், நம் காதின் சவ்வுகள் அதைத் தாங்கமாட்டாமல் அதிரும்போது நாம் காதுகளைப் பொத்திக் கொள்கிறோம். 
குடும்பத்தின் மரியாதையைக் குலைக்கும் வகையில் எழும்பும் கிசுகிசுக் குரலாலும் நாம் காதுகளைப் 
பொத்திக்கொள்கிறோம். அந்த ஒலி நம் உள்ளத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகள், செருக்களத்து ஆர்ப்பரிப்பு நம் செவிகளை 
அதிரவைக்கும் தாக்கத்தைவிடப் பன்மடங்கு அதிகமான தாக்கத்தை நம் மனதுக்குள் ஏற்படுத்துகின்றன. எனவேதான் 
தலைவி, “குறுந்தொடி மடந்தையொடு வதுவை அயர்ந்தனை என்னும் அலர் வென்றிகொள் வீர்ரின் ஆர்ப்பினும் 
பெரிதே” என்கிறாள். 

	23 அடிகள் கொண்ட ஓர் அகப்பாடலில் ஏறக்குறைய பாதி அளவுக்கு (11 அடிகள்) ஒரு மன்னனின் போர் 
வெற்றியைப் பற்றிய புகழுரைகள் எதற்கு? இப் பாடல் மட்டுமல்ல, இன்னும் பல பாடல்கள் அகநானூற்றிலேயே இம் 
மாதிரி அமைந்துள்ளன. நக்கீரர் மட்டுமல்ல, கல்லாடனார், பரணர் போன்ற பெரும் புலவர்களும் இது போன்ற 
பாடல்களைத் தந்துள்ளனர். புறப்பாடல்களில் இவ்வாறு பாடிவிட்டுச் சென்றிருக்கலாம். அல்லது, அகப்பாடல்களில் ஓரிரு 
அடிகளில் குறிப்பிட்டுவிட்டிருக்கலாம். இத்துணை நீண்ட வரலாற்றுக் குறிப்பு அக இலக்கியத்தில் குறிப்பிடப்படுவதால் 
பாடலின் நோக்கம் என்ன – தலைவியின் அக உணர்வா அல்லது அரசன் புகழுரையா - என்ற மயக்கம் ஏற்படுகிறது. 

			
		 பாண்டியன் மதுரை – சேரன் கரூர் – சோழன் பூம்புகார் - போர்க்களம்  தலையாலங்கானம்

	பாடலின் முதற்பகுதியில் வரும் வரால் மீன் கதை எத்துணை அழகுடன் உள்ளுறை உவமமாகக் 
கையாளப்பட்டுள்ளது என்பது பாடலின் அடிநேர் உரைப் பகுதியிலேயே விளக்கப்பட்டுள்ளது. உள்ளுறையின் தனிச் 
சிறப்பே உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் உவமமே. அதை உணர்ந்து படிக்கும்போதுதான் புலவரின் இலக்கிய நயம் நன்கு 
வெளிப்படும்.