அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 28

பாடல்  28. குறிஞ்சித் திணை    பாடியவர் - பாண்டியன் அறிவுடை நம்பி

துறை - தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. 
		இது பகலே சிறைப்புறம்..
.
  மரபு மூலம் - மெய்யின் தீரா மேவரு காமம்

	மெய்யிற் றீரா மேவரு காமமொ
	டெய்யா யாயினு முரைப்பல் தோழி
	கொய்யா முன்னுங் குரல்வார்பு தினையே
	யருவி யான்ற பைங்கா டோறு
5	மிருவி தோன்றின பலவே நீயே
	முருகுமுரண் கொள்ளுந் தேம்பாய் கண்ணிப்
	பரியல் நாயொடு பன்மலைப் படரும்
	வேட்டுவற் பெறலொ டமைந்தனை யாழநின்
	பூக்கெழு தொடலை நுடங்க வெழுந்தெழுந்து
10	கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி
	யாங்காங் கொழுகா யாயி னன்னை
	சிறுகிளி கடிதல் தேற்றா ளிவளெனப்
	பிறர்த்தந்து நிறுக்குவ ளாயி
	னுறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே

 சொற்பிரிப்பு மூலம்

	மெய்யின் தீரா மேவரு காமமொடு
	எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி
	கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே
	அருவி ஆன்ற பைம் கால்தோறும்
5	இருவி தோன்றின பலவே நீயே
	முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணிப்
	பரியல் நாயொடு பன் மலைப் படரும்
	வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின்
	பூக் கெழு தொடலை நுடங்க எழுந்து எழுந்து
10	கிள்ளைத் தெள் விளி இடையிடை பயிற்றி
	ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை
	சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் எனப்
	பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்
	உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே

அருஞ்சொற் பொருள்:

காமம் = அன்பு; எய்யாய் = அறியாய், தளராய்; குரல் = (தினைக்)கதிர்; வார்பு = முதிர்ந்து, கதிர் பால்பிடித்து; 
இருவி = அடித்தட்டை; பரியல் = ஓட்டம்; தொடலை = தொடுக்கப்பட்ட மாலை; 
கிள்ளைத் தெள் விளி = கிளியோட்டும் ஓசை; 

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

தலைவனும் தலைவியும் தினப்புனத்தில் சந்தித்துக் காதல்கொள்கின்றனர். தலைவன் வந்திருக்கும்போது, 
அவனுடன் இருப்பதால் தினைப்புனக் காவலைத் தலைவி ஒழுங்காகச் செய்வதில்லை. அவன் இல்லாத 
நேரங்களிலும், அவனையே நினைத்துக்கொண்டு இருப்பதால் அப்போதும் காவல் மேற்கொள்வதில்லை. 
கதிர்களும் முற்றி, கிளிகளால் உண்ணப்பட்டு தினைப் பயிர் வெறும் கட்டையாய் நிற்கிறது. இதைப் 
பார்க்கிறாள் தோழி. அன்றைக்குத் தலைவன் வந்து சேர்வதற்குள் தலைவியிடம் வந்து, “அவ்வப்போது 
எழுந்துவந்து கிளிகளைக் கடிந்து விரட்டு. இல்லையென்றால் உனக்குக் காவல் காக்கத் தெரியவில்லை 
என்று உன் தாய் வேறு ஒருவரைக் கொண்டு புனத்தைக் காவல்காக்கச் செய்துவிடுவாள். பின்னர், உன் 
தலைவனை நீ பார்ப்பதுவும் கடினமாகிவிடும்” என்று எச்சரிக்கிறாள். 

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	மெய்யின் தீரா மேவரு காமமொடு
	எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி

	எவ்வளவு நேரம் ஒன்றுசேர்ந்து இருந்தாலும் குறைவுபடாமலும் இயைந்தும் உள்ள விருப்பத்துடன்
	தளர்ந்துபோக மாட்டாய் எனினும் (ஒன்று) சொல்வேன், தோழி!

	தலைவனைப் பிரிந்திருக்கும்போது அவனைக் காணவேண்டும் என்ற அவா எழுகிறது. பகற்குறியில் 
தலைவன் வருகிறான். நெடுநேரம் பேசி மகிழ்கிறார்கள். நேரம் ஆக ஆக அந்த அவா தீர்ந்துபோகாதோ? இல்லை. 
அதுதான் மெய்யின் தீராக் காதல். சரி, யாருக்காவது ஒருவருக்கேனும் “போதும்” என்று தோன்றாதோ? இல்லை.
அதுதான் இயைந்த – ஒருவரையொருவர் ஒத்துப்போகிற - harmonius – மேவரு காதல். நாளாக ஆக, 
அலுப்புத்தட்டாதோ? இல்லை. எய்த்தல் என்பது சோர்ந்துபோதல், தளர்வுறுதல், குறைவுறுதல். அதுவும் இல்லை. 
பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பர் – அது இவர்களுக்கு அல்ல. 

	அன்பென்ற விருந்தொன்று பரிமாறினேன் – அதைப்
	பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்

	என்பது இந்தத் தலைவிக்குப் பொருந்தும். தினைப்புனக் காவலுக்கென்று வந்துவிட்டு, 
வந்த வேலையைப் பார்க்காமல், வந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தால்?
	
	கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே
	அருவி ஆன்ற பைம் கால்தோறும்
5	இருவி தோன்றின பலவே

	கொய்வதற்கு முன்னரேயே கதிர்கள் தினையை உதிர்க்க ஆரம்பித்துவிட்டன.
	நீர் அற்ற பசிய பயிர்கள்தோறும்
	வெறும் தட்டைகள் தோன்றின, பல இடங்களில்.

	தினைக் கதிர்கள் முற்றிவிட்டால் வீட்டில் சொல்லவேண்டும். அவர்கள் அறுவடைக்கு ஏற்பாடு 
செய்வார்கள். அப்புறம் காவலுக்கு வருவது எப்படி? தலைவனைச் சந்திப்பது எப்படி? எனவே, கதிர் முற்றிய 
செய்தியை வீட்டாருக்குத் தலைவி சொல்லவில்லை. எனவே முற்றிய கதிர்களினின்றும் தினைகள் தாமாய் 
உதிர ஆரம்பித்துவிட்டன. அருவி ஆன்ற பைங்கால்தோறும் என்பதற்கு, நீர் இல்லையான பசிய முதல்தோறும் 
என உரைகள் கூறுகின்றன. கால் என்பது முதல் எனப்படுகிறது. தினைப் பயிரின் அடிப்பகுதி – தண்டு எனலாம். 
ஆன்ற என்பதற்கு இல்லையான என்ற பொருள் கொள்ளப்படுகிறது. அருவி என்பது நீர். நீர் இல்லாவிட்டால் தண்டு 
எப்படி பச்சையாக இருக்கும்? காய்ந்துபோகாதா? பொதுவாகத் தினை என்பது காட்டு வெள்ளாமை – முல்லைநிலப் 
பயிர். தினையை வானம் பார்த்த பூமியில் பயிரிடுவார்கள். மழை சரியான இடைவெளியில் பொய்க்காது பெய்தால்
நல்ல விளைச்சல் இருக்கும். மழை இல்லையேல் பயிர்கள் காய்ந்துவிடும். நாம் காண்பதுவோ குறிஞ்சி நிலத்துத் 
தினைப்பயிர். மலைச்சரிவுகளில் ஏறக்குறைய சமவெளியாய் இருக்கும் பகுதிகளில் தினையை மலைக்குறவர் 
பயிரிடுவர். அங்கு பாறை இடுக்குகளில் பாய்ந்துவரும் காட்டாற்று அருவிநீரின் ஒரு பகுதியைத் தினைப்புனத்துப் 
பக்கம் திருப்பிவிட்டிருக்கின்றனர். மழை பொய்த்தாலும் அருவிநீரைப் பாய்ச்சிக்கொள்ளலாம். ஆன்ற என்பதற்கு 
நிறைந்த என்ற பொருளும் உண்டு. தினைக் கதிர்கள் முற்றியவுடன் இந்த அருவிநீர் பாய்வதை 
நிறுத்திவிடவேண்டும். பயிர் காயவேண்டும். இதனையும் தலைவி செய்யவில்லை. நீர் தொடர்ந்து பாய, பயிரும் 
பச்சையாகவே இன்னும் இருக்கிறது. ஆனால், முற்றிய தினைமணிகள் கதிர்களினின்றும் உதிர்ந்து விழ, 
மீதமுள்ளவற்றைப் பறவைகள் கொத்தித் தின்றுவிட, கதிரே இல்லாமல் தினைப்பயிர் மொட்டையாக நிற்கிறது. 
இதைத்தான் இருவி தோன்றின என்கிறார் புலவர். இருவி என்பது கதிர் ஒழிந்த தட்டை. முதலில் இங்கொன்றும் 
அங்கொன்றுமாக இருந்த இருவி, நாளடைவில் பலவாக மாறிவிட்டது. இந்தத் தலைவி என்னதான் 
செய்துகொண்டிருக்கிறாள்?

			

				நீயே
	முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணிப்
	பரியல் நாயொடு பன் மலைப் படரும்
	வேட்டுவன் பெறலொடு அமைந்தனை

				நீயோ
	பலவகையான மணங்களும் கமழும் தேன் ஒழுகும் தலைமாலையை உடைய,
	விரைந்து ஓடும் வேட்டை நாயுடன் பல மலைகளையும் கடந்து செல்லும்
	வேட்டுவனைப் பெறுவது ஒன்றே போதுமென்று இருக்கிறாய்!

	தலைவன் இருக்கும்போது அவனிடம் பேசிக்கொண்டிருப்பதிலேயே பொழுது போய்விடுகிறது. 
அவன் இல்லாதபோது, அவனை நினைத்துக்கொண்டிருப்பதிலேயே பொழுது கழிகிறது. தினைப்புனத்திற்கு வருவதே 
அவனைச் சந்திப்பதற்காகத்தான் என்று தலைவி எண்ணும் அளவுக்கு, காவல் காக்கவேண்டும் என்ற நினைவே 
தலைவிக்கு இல்லாமல் போய்விட்டது.

	முருகு என்பதற்கு நறுமணம் என்ற பொருள் உண்டு. தலைவன் பல மலைகளையும் கடந்து வருவதால், 
வரும்வழியில் கண்ணில் காணும் பலவித அழகிய நறுமண மலர்களைக் கொய்து தலையில் செருகிக்கொண்டே 
வருகிறான். எனவேதான் அவனுடைய கண்ணி – தலைமாலை – முரண்பட்ட பலவித மணங்கள் கொண்டதாக 
இருக்கிறது. 

				யாழ நின்
	பூக் கெழு தொடலை நுடங்க எழுந்து_எழுந்து
10	கிள்ளைத் தெள் விளி இடையிடை பயிற்றி
	ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் 
	
				உனது
	பூக்கள் சிறந்த மாலை அசைய, அடிக்கடி எழுந்து சென்று
	கிளிகளை விரட்டும் தெளிந்த ஓசையை அவ்வப்போது எழுப்பி,
	அங்கங்கே சென்று வராவிட்டால்,

	“போட்டிருக்கிற மாலைகூட அசங்காம, அப்படீயே படுத்துக்கெடக்காட்டி, அப்ப அப்ப எந்திரிச்சுப் போயி, 
சித்த நேரத்துக்கு ஒருதரம் அந்தக் கிளியையும் வெரட்டிவிட்டு, அங்கயும் இங்கயும் கொஞ்சம் உலாத்திக்கிட்டு இரு” 
என்கிறாள் தோழி. “இல்லாட்டி என்ன நடக்கும் தெரியுமா?” என்று எச்சரிக்கவும் செய்கிறாள்.

			

				அன்னை
	சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் எனப்
	பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்
	உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே

				நம் அன்னை
	சிறிய கிளிகளை விரட்டுவதற்கு இவள் சரிப்பட்டுவரமாட்டாள் என எண்ணி
	வேறு சிலரை இங்கே கொண்டுவந்து நிறுத்திவிடுவாள் – அப்படியாயின்
	(நீ) அடைவதற்கு அரிதாய்ப்போய்விடும் அவனது அகன்ற மார்பு.

	சரியான காவல் இல்லாமல், தினைப்பயிர்கள் தட்டையாய் நிற்கின்ற கோலத்தை யார் மூலமாகவேணும் 
அன்னை அறிந்தால் என்ன ஆகும்? “பெரிய யானையை விரட்டு, கொடிய பன்றியை விரட்டு என்றா உன்னைச் 
சொன்னார்கள்? ஒரு சின்னக் கிளி - அதை விரட்டிப் பயிரைக் காக்கும் துப்புகூடவா உனக்கு இல்லை?” என்று 
அன்னை கேட்கமாட்டாளா? “சிறு கிளி கடிதல் தேற்றாள்” என்பதில் உள்ள சிறு என்ற சொல்லின் நுணுக்கம் 
புரிகிறதா?

	தேற்றாள் என்ற சொல் தேறு என்பதன் அடியாகப் பிறந்தது. ஒரு மோசமான நிலையிலிருந்து நல்ல 
நிலைக்கு வருதலே தேறுதல். 

“ஏண்டீ, ஒம் மருமவளுக்கு சமையல் ஒன்னுமே தெரியலன்’னு சொன்னியே, இப்ப எப்படி இருக்கா?”

“ஒரு நாலு நாள் பக்கத்திலேயே இருந்து ‘அப்படிச் செய் – இப்படிச் செய்-னு சொல்லிக்குடுத்தேன். 
மொதல்ல கொஞ்சம் அப்படி – இப்படி’ன்னுதான் இருந்துச்சு. இப்ப நல்லா தேறிட்டா. இப்ப எல்லாம் 
அவதான் பாத்துக்கறா”

“வீட்டில் விளையாட்டுத்தனமாய் இருக்கும் பெண்ணைத் தினைப்புனத்திற்கு அனுப்பிக் காவல் காக்கச் சொன்னால், 
அவளுக்கும் கொஞ்சம் பொறுப்புணர்வு வரும் என்று நினைத்தால், இப்படிச் செய்திருக்கிறாளே, இவள் 
தேறமாட்டாள்” என்று தாய் நினைப்பாள் என்று தோழி எச்சரிக்கிறாள். அப்படியென்றாள், கிளி கடிதல் தேறாள் 
என்றுதானே வரவேண்டும்? ஒருவர் அவராகக் கற்றுத்தேர்ந்தால், அது தேறுதல் – இன்னொருவர் பக்கத்திலேயே 
இருந்து சொல்லிக்கொடுத்துத் தேறவைத்தால், அது தேற்றல். அன்னை தோழியிடம் சொல்லிவிடுகிறாள், 
“இவளை எப்படியாவது தேற்றிக் கொண்டா” என்று. அப்படியிருந்தும் இவள் தேறவில்லை என்றால், இவள் 
தேற்றாள் – தேற்ற முடியாதவள் – என்ற பொருளில் தோழி கூறுவதாகக் கொள்ளலாம். 

	அகத்திணைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், தொல்காப்பியம் -பொருளதிகாரத்தின் முதல் நூலான 
அகத்திணையியலில், அகத்திணைக்குரிய பொதுவான குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். பின்னர் மூன்றாவது நூலான 
களவியலில் களவுவாழ்க்கைக்குரிய துறைகளை வகுத்திருக்கிறார். அவற்றில் 23-ஆம் நூற்பாவில் தோழியின் கூற்று 
எழுவதற்கான முப்பத்தியிரண்டு சூழ்நிலைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் (களவியல் 23). அவற்றில் ஒன்று – 

	செங்கடுமொழியால் சிதைவுடைத்தாயினும்

	என்பது. சிலவேளைகளில் தலைவியைக் கடுமொழிகளால் அறிவுறுத்தவேண்டியது தோழியின் கடமை. 
எனினும் அதனைச் செவ்விதான வழியில் சொல்லவேண்டும் என்கிறார் தொல்காப்பியர். மற்றபடி, தலைவி அதைக் 
கேட்டு சிதைவுற்றாளாயினும் கவலை கொளற்க என்றும் கூறுகிறார். நச்சினார்க்கினியர் தனது உரையில் இதற்கு 
எடுத்துக்காட்டாகக் கூறும்போது இப் பாடலைக் காட்டுகிறார். 

	அகத்திணை என்பது ஒரு நாடகமேடை அமைப்பு. இன்னின்ன திணைகளுக்கு இவ்விதமான அமைப்பு 
(Settings) தேவை என்று கூறுவது. அகத்திணைத் துறைகள் நாடகத்துக்கான உட்கருக்கள் (themes). அகத்திணைப் 
பாடல்கள் ஓரங்க நாடகங்கள் (one act plays). அதன் காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும், கதைமாந்தரையும் 
உருவாக்குவது புலவரின் வேலை. இந்த உருவாக்கத்தில் ஒரு பாண்டிய மன்னன் எடுத்துக்கொண்ட தலைப்பு – 
காதலினும் கடமை பெரிது – காதலை முன்னிட்டுக் கடமை தவறாதே- என்பது. அப்படித் தவறுகின்றாற்போல 
ஒரு தலைவியைப் படைத்து, அவளைச் செல்லமாக ஒரு தட்டுத்தட்டி திருத்தும் தோழியையும் படைத்து,

	நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே – புறம் 312

	என்ற பொன்முடியார் வாக்கை மெய்ப்பித்துவிட்டான் இந்தப் பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி. 

	இதைத் தோழி எடுத்துக்கூறும் முறையைக் கவனித்தீர்களா? உன் கவலையின்மையால் பயிர்கள் 
நாசமாகின்றன (“போனால் போகட்டுமே”); அவ்வப்போது வந்து கிளிகளை விரட்டிவிடு (“பாவம், கிளிகளும் 
பிழைத்துப்போகட்டும்”); இல்லையென்றால் உன் அம்மா காவலை மாற்றிவிடுவாள் (“செய்யட்டுமே”); இழப்பு 
உனக்குத்தான்;. அவன் மலர்ந்த மார்பு உறற்கு அரிது ஆகும் (“ஐயையோ”). 

	Effective communication பற்றி பாடல் 18 – இல் எழுதியதை மீண்டும் நினைவிற்கொள்க.

“வந்த வேலய விட்டுப்புட்டு, சொந்த வேலயப் பாத்துக்கிட்டு இருந்தா, இந்த வேலையும் போயி, ஒன் கதை 
கந்தலாயிப்போகும்”

	செய்வது என்ன? – 

	செய்யவேண்டியது என்ன? – 

	செய்யவேண்டியதைச் செய்யாவிட்டால் விளைவது என்ன?

	நல்லதொரு வாழ்க்கைப் பாடம்.