அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 7

பாடல்  7. பாலைத் திணை    பாடியவர் - கயமனார் 

துறை - மகட் போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று நவ்விப் பிணாக் கண்டு சொல்லியது.

  மரபு மூலம் 

	முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின
	தலைமுடி சான்ற தண்தழை யுடையை
	அலமரல் ஆயமொ டியாங்கணும் படாஅல்
	மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய
5.	காப்பும் பூண்டிசின் கடையும் போகலை
	பேதை அல்லை மேதையங் குறுமகள்
	பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென
	ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவித்
	தன்சிதை வறிதல் அஞ்சி இன்சிலை
10.	ஏறுடை இனத்த நாறுயிர் நவ்வி
	வலைகாண் பிணையிற் போகி ஈங்கோர்
	தொலைவில் வெள்வேல் விடலையொ டென்மகள்
	இச்சுரம் படர்தந் தோளே ஆயிடை
	அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தெனப்
15.	பிற்படு பூசலின் வழிவழி யோடி
	மெய்த்தலைப் படுதல் செல்லேன் இத்தலை
	நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு
	புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி
	ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல்
20.	ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த
	துய்த்தலை வெண்காழ் பெறூஉங்
	கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே. 

 சொற்பிரிப்பு மூலம்

	‘முலை முகம்செய்தன, முள் எயிறு இலங்கின,
	தலை முடி சான்ற, தண் தழை உடையை,
	அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்,
	மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய,
5	காப்பும் பூண்டிசின், கடையும் போகலை,
	பேதை அல்லை மேதை அம் குறுமகள்,
	பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து’ என,
	ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவித்,
	தன் சிதைவு அறிதல் அஞ்சி, இன் சிலை
10	ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி!
	வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
	தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள்
	இச் சுரம் படர்தந்தோளே, ஆயிடை
	அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்து எனப்
15	பிற்படு பூசலின் வழிவழி ஓடி,
	மெய்த் தலைப்படுதல் செல்லேன் இத் தலை
	நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு
	புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி
	ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்
20	ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த
	துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
	கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. 

	தலைவனுடன் உடன்போக்காகச் சென்றுவிட்ட தலைவியை எண்ணி, அவளின் பிரிவாற்றாமையால் 
	மனம் வருந்திக் கூறும் செவிலித்தாயின் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது. 
	தலைவி சென்ற வழியிலேயே அவளைப் பின்தொடர்ந்து சென்ற செவிலித்தாய் 
	அங்கு அவள் கண்ட பெண் நவ்வி மானைப் பார்த்துக் கூறுகிறாள்.

அடிநேர் உரை 
	
	“முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன.
	தலையில் கூந்தலும் நன்கு வளர்ந்துள்ளது. குளிர்ந்த தழையாடையையும் உடுத்தியுள்ளாய்.
	சுற்றித்திரியும் விளையாட்டுத் தோழியருடன் எவ்விடத்தும் செல்லாதிருப்பாய்,
	மிகப் பழமை வாய்ந்த இந்த மூதூர் வருத்தும் தெய்வங்களை உடையது.
	(எனவே நீ)காவலுக்கு உட்பட்டிருக்கவேண்டும், வீட்டின் வெளி வாசல் வரைக்கும் போகக்கூடாது.
	சிறுமி அல்லவே நீ, அறிவுள்ள சிறுமகளே!,
	இளம்பெண் பருவத்தில் வெளியில் சென்றாயே” என்று நான் கூற,
	ஒளிரும் விளக்குகளையுடைய நல்ல இல்லத்தின் அரிய கட்டுக்காவலையும் மீறி,
	தன் மனமாற்றத்தை வீட்டார் அறிந்துவிடுவர் என்று அஞ்சி, இனிதாக முழக்கமிடும்
	ஆண்மானைக் கொண்ட கூட்டத்தைச் சேர்ந்த, மோப்பது போல் மூச்சுவிடும் இளைய பெண்மானே!
	வலையைக் கண்ட பெண்மானைப் போலத் தப்பி ஓடி, இங்கு ஒரு,
	தோல்வியையே அறியாத வெள்ளிய வேலை உடைய இளங்காளையொடு என் மகள்
	இந்த வழியே சென்றுவிட்டாள்; அதனால்
	வழிப்பறிக் கள்வர்கள் பசுக்களைத் தொழுவை உடைத்துக் கொண்டுசென்றனராக,
	அவர்களின் பின்னே துரத்திச்செல்வோர் ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி,
	அவளின் மேனியை எதிர்ப்பட்டிலேன், இவ்விடத்தில்
	உன்னிடம் வினவுவதைக் கேட்பாயாக,
	பொன் சரட்டில் புலிப்பல் கோத்த ஒற்றைத் தாலியையும்,
	செழித்த அசோகத் தளிரால் ஆன தழையுடை அணிந்த கீழிடுப்பையும் உடைய,
	ஆய்ந்தெடுத்த சுளைகளைக் கொண்ட பலாக்கனியைத் தின்று, முசுக்கலை உதிர்த்த
	தலையில் வெண்பஞ்சுவைக் கொண்ட வெள்ளிய கொட்டைகளைப் பெறும்
	பாறைகளைக் கொண்ட சிறுகுடியைச் சேர்ந்த கானவன் மகளாகிய என் மகளே.

அருஞ்சொற்கள்:

முகம்செய்தல் – தோன்றுதல்; இலங்கு – மின்னு; சான்ற – அமைந்தன; அலமரல் = சுழன்று திரிதல்; ஆயம் = விளையாட்டுத் தோழிகள்; 
அணங்கு = வருத்தும் தெய்வம்; காப்பு = காவல்; கடை = வெளிவாசல்; கடி = காவல்; நீவி = அறுத்து, துண்டித்து; சிதைவு = மாற்றம்; 
சிலை = முழக்கம்; நாறு உயிர் = வெளிப்படையாகத் தெரியும் முச்சு; தொலைவு = தோல்வி; பூசல் = ஆரவாரம்; ஒலி = தழைத்து வளர்; 
குழை = இலை, தழை; செயலை = அசோக மரம்; உடை – தழையுடை; கலை = ஆண்குரங்கு; துய் = நுனியில் இருக்கும் மென்மையான பகுதி; 
காழ் = விதை, கொட்டை; சிறுகுடி = கானவரின் ஊர்.

வளர்த்த பாசம்

	குறிஞ்சியும் இல்லாமல், முல்லையும் இல்லாமல் இடைப்பட்ட ஒரு நிலம் அது. வறட்சிக் காலத்தில் பாலைபோல் காட்சியளிக்கும். 
இப்போதோ வளம் நிறைந்த பூமி. அங்கே ஐம்பது அல்லது நூறு குடிசைகளைக் கொண்ட ஒரு சிற்றூர். சிறுகுடி என்று அங்குள்ளோர் அழைப்பர். 
வீடுகளைச் சுற்றி வீதிகளிலும் வெளியிலும் காட்டுப்பலா மரங்கள். பறிப்போர் இல்லாமல் பழுத்து வெடித்துத் தொங்கும் அந்தக் காட்டுப் 
பலாக்களின் இனிய சுளைகளைக் குரங்குகள் தெரிந்தெடுத்து, அவற்றை அரைகுறையாகத் தின்று, கொட்டைகளைத் துப்பிவிட்டுப்போகும். 
பாறைகள் எங்கும் சிதறிக்கிடக்கும் அக் கொட்டைகளைப் பொறுக்கி எடுத்துத் தம் உணவாகக் கொள்வோர் அவ்வூர் மக்கள். அவ்வூரில் 
ஒரு செல்வர் வீட்டில் ஒரு சிறுமி. படு சுட்டி. எப்போதும் அவளுடைய தோழியருடன் ஊர் முழுக்க ஓடியாடி விளையாடிக்கொண்டிருப்பாள். 
அவள் பின்னாலேயே ஒரு விடலைக் காளையும் பின்தொடர்ந்து கொண்டிருப்பான். ஊர்த் திருவிழாவில் வேலெறிதல் போட்டியில் எப்போதும் 
அவனுக்குத்தான் முதற்பரிசு. அவன் வெற்றியைடையும்போதெல்லாம், இவள் விளையாட்டுத்தனமாகக் கைதட்டி ஆர்ப்பரிப்பாள். இருந்தாலும் 
தான் செல்லுமிடமெல்லாம் வந்து தன்னையே அவன் பார்த்துக்கொண்டிருப்பது ஏன் என அவளுக்குத் தெரியவில்லை. 
அவனை அவள் சட்டைசெய்யவும் இல்லை.

	திடீரென்று ஒருநாள் அவள் உடலில் சில மாற்றங்கள் தெரிந்தன. ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தவளிடம் 
செவிலித்தாய் வந்து விசாரித்தாள். அப்புறம் என்ன? வீடே பரபரக்க ஆரம்பித்துவிட்டது. எதேதோ சடங்குகள் செய்து அவளைத் தனியே 
உட்காரவைத்துவிட்டார்கள். நாட்கள் நகர்ந்தன. பக்கத்து வீட்டு அக்காக்கள் மார்புபோல் இவளின் மார்புகளும் விம்மிப் புடைக்கலாயின. 
ஒழுங்காகப் பல்தேய்க்கவேண்டும் என்ற கட்டளை வேறு. ஏனென்று கேட்டால், சுத்தபத்தமாக இருக்கவேண்டும் என்றார்கள். சுருண்டு கிடந்த 
தலைமுடியை இழுத்து வாரிவிட்டார்கள். பழைய தோழிகள் வந்து அழைத்தால், இனிமேல் நீ தெருவில் எல்லாம் போய் விளையாடக்கூடாது 
என்றார்கள். ஏனென்று கேட்டால் காத்து கருப்பு அடித்துவிடும் என்றார்கள். காவலுக்கு இரண்டு கிழவிகள் வேறு. வெளி வாசல்வரைகூடப் 
போகக்கூடாது என்ற கண்டிப்பு. இவள் தழையாடை உடுத்தித் தனியே இருக்கும்போது அவன் நினைவு வந்தது. ‘க்ளுக்’-என்று சிரித்துவிட்டாள். 
அப்போது பார்த்து வந்த ஆயா, “என்ன சிரிப்பு” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். “என்ன நினைத்துச் சிரித்தாய்” என்று குடைய ஆரம்பித்தாள். 
எங்கே தான் அவனைப்பற்றி நினைத்தது இவர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சினாள் அவள். அவனது நினைப்பு இவளுக்கு இனித்தது. 
ஒருநாள் காலதர் (ஜன்னல்) வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, தனது வேல்கம்புடன், அவன் இவள் வீட்டையே பார்த்துக்கொண்டு 
சென்றான். இவளுக்கு மனம் குறுகுறுக்க ஆரம்பித்தது. வாசலுக்குச் செல்ல எண்ணி எழுந்தாள். அப்போது வந்த ஆயா, “இனி நீ சின்னப்பிள்ளை 
இல்லை. பெரியவள் ஆகிவிட்டாய். பேசாமல் வீட்டுக்குள்ளேயே இரு” என்று சொல்லித் தற்செயலாக வெளியில் பார்த்தவள் அவனைக் கண்டாள்.
“இந்த வேலைத் தூக்கிக்கொண்டு வீதியில் திரிகிற வேலைகெட்டவனை இங்கே யார் வரச்சொன்னார்கள்?” என்று கோபத்துடன் கூறியவாறு 
வாசல் கதவை இழுத்துச் சாத்தியபடி, இவளைக் கையைபிடித்துக்கொண்டு இழுத்து உள்ளே சென்றாள். வேண்டாவெறுப்பாக உள்ளே சென்றவாறு 
பின்னால் திரும்பிக் காலதர் வழியாகப்  பார்த்த அவளைப் பார்த்து முறுவலித்தான் அவன். குப்பென்று மேனி சிலிர்த்தது அவளுக்கு.
“காலாகாலத்தில் ஒருத்தன் காலில் உன் தாய்தந்தையர் உன்னைக் கட்டிப்போடும் வரை எனக்குத் தூக்கமில்லை” என்று புலம்பிக்கொண்டிருந்தாள்
ஆயா. இவள் திடுக்கிட்டாள். இவளை எங்கோ சிக்கவைக்கத் திட்டம்போடுகிறார்கள் என்று யூகித்த அவள், ஒருநாள் இவர்கள் கட்டுக்காவலிலிருந்து
தப்பி மறைந்தே போனாள்.

	புரிந்துகொண்ட ஆயா, புலம்பிக்கொண்டே ஓடினாள். அவர்களைப் பிடித்துவிடவேண்டும் என்று காட்டுக்குள் ஓடிய அவள் களைத்து 
நின்றாள். அங்கே ஒரு பெண்மான் ‘புஸ் புஸ்’ என்று மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது. யாரிடமாவது சொல்லிப் புலம்பவேண்டும்போலிருந்தது 
ஆயாவுக்கு. “ஏண்டா கண்ணு, இந்தப் பக்கம் போன எம் மகளைப் பாத்தியா? கழுத்தில ஒரு புலிப்பல் கோத்த ஒத்தவடம் போட்டிருப்பா. கூட 
ஒரு விடலப் பய வேலோடு இருந்திருப்பான்” என்ற அவளை வெறித்துப் பார்த்தது அந்த மான். “ஐயோ என் மகளே” என்று அவள் சென்ற 
வழியையே பார்த்துக்கொண்டு, அழுது புலம்பி அங்கேயே நிற்கின்றாள் அந்த அன்புத்தாய் – வளர்த்த பாசம்!!!

விளக்கவுரை

	முலை முகம்செய்தன, முள் எயிறு இலங்கின
	தலைமுடி சான்ற, தண் தழை உடையை,
	அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்,
	மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடையை
	காப்பும் பூண்டிசின், கடையும் போகலை.

	பருவம் எய்தும் ஒரு சிறுமியின் நிலையை எத்துணை நயமாகவும், குறிப்பாகவும் விளக்கி உணர்த்துகிறார் புலவர் என்று பார்த்தீர்களா? 
	
	பேதை அல்லை மேதை அம் குறுமகள்
	பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து என,
	
	பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனப் பெண்களை, அவர்களின் வயதைப் பொருத்து 
ஏழு வகையாகப் பிரிப்பர். பேதை என்பது 5 முதல் 8 வயது முடிய உள்ள பருவம். பெதும்பை 9 முதல் 11 முடிய. இந்தப் பாட்டின் தலைவிக்குப் 
பேதைப்பருவம் முடிந்து சில காலம் ஆகியிருக்கவேண்டும். எனவே அவளின் வயது 10, 11 எனலாம். அந்த வயதில் காதலா – காதலனோடு 
உடன்போக்கா? .என்ற வியப்பு இந்தக் காலத்தில் எழுவது இயல்பே. தலைவியின் ஊரான சிறுகுடி வளம் மிக்க ஊர். தலைவியோ செவிலியர்களால் 
ஊட்டி வளர்க்கப்பட்டவள். தன் மகளுக்குப் புலிப்பல் கோத்த பொன்சரடு போடுகின்ற அளவுக்குச் செல்வம் மிக்க தந்தை. எனவே தலைவி 
காலாகாலத்தில் ‘உட்கார்ந்துவிட்டாள்’. ஏழைவீட்டுப் பெண்களென்றால், குளித்து முடித்துவிட்டுக் குடத்தைத் தூக்கிக்கொண்டு தண்ணீர் எடுக்கப் 
போய்விடுவர். இவளோ செல்வர் வீட்டுச் செல்ல மகள். கவனிப்பு அதிகம். காவலும் மிகுதி. கடை வாசலுக்குக்கூடப் போகமுடியாத கண்டிப்பு. 
“ஏம்மா, “இன்னமும் சின்னப்பிள்ளையா நீ (பேதை அல்லை), என் அறிவுச் செல்லம் (மேதை), அழகுக் குட்டி (அம் குறுமகள்), பெரிய மனுஷி 
ஆயிட்ட (பெதும்பைப் பருவத்து), வெளியேவெல்லாம் போகக்கூடாது (ஒதுங்கினை புறத்து) எனச் செல்லமாகக் கண்டிக்கும் செவிலித்தாயின் 
கனிவுடன் கூடிய கண்டிப்பை எவ்வளவு அற்புதமாகக் காட்டியிருக்கிறார் புலவர்! ஆனாலும் அவளுக்கு அலைபாயும் மனம். 

	ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவித்,
	தன் சிதைவு அறிதல் அஞ்சி,

	ஒருநாள்- விளக்கு வைக்கும் நேரம். வயதுக்கு வந்தவள் வீட்டிலிருப்பதால், எங்கேயும் இருட்டு இருக்கக்கூடாது என்று, வீடெல்லாம் 
விளக்கேற்றி வைக்கிறாள் செவிலி (ஒண் சுடர் நல் இல்). மாலை நேரத்தில் தன் மனதுக்கு இனியவனைக் காண அவள் மனம் ஏங்குகிறது. 
செவிலியோ, என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் ஒரு கண்ணை இவள் மீது வைத்தவண்ணம் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் 
(அருங்கடி). தன் மனக்கிடக்கையை ஆயா அறிந்துவிடுவாளோ என அஞ்சிய தலைவி (தன் சிதைவு அறிதல் அஞ்சி), யாருக்கும் தெரியாமல்
 நழுவிவிட்டாள் (நீவி). சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? பறவை பறந்துவிட்டது!

	பொழுது சாயும் நேரத்தில் புறப்பட்டுப் போய்விட்ட புதல்வியைத் தேடிப் புறப்பட்டுப் போகிறாள் வளர்ப்புத்தாய். 
‘இந்த நேரத்தில் இப்படிப் போய்விட்டாளே, அவளுக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்துவிடுமோ’ என அஞ்சுகிறாள். ‘இல்லை இல்லை, 
உடன் போயிருப்பவன் ஒரு விடலை. அவன் கையிலோ கூரிய வேல். அதுவும் குறிதப்பாது’ என்று மனதைத் தேற்றிக்கொள்கிறாள் 
(தொலைவு இல் வெள்வேல் விடலையொடு என் மகள் இச்சுரம் படர்தந்தோளே). இந்த வழியில் கள்வர்கள் அதிகமாயிற்றே (அத்தக் கள்வர்). 
சென்ற வாரம்கூட ஊருக்கு வெளியில் உள்ள தொழுவத்தில் உள்ள ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு போய்விட்ட பாதகர்கள் அவர்கள் 
(ஆ தொழு அறுத்து). அதைக் கேள்விப்பட்ட ஊர்மக்கள் திரண்டு கூச்சலிட்டவாறே விரட்டிக்கொண்டு போனார்களே (பிற்படு பூசலின்). 
அதைப் போல நானும் இப்போது வழியெல்லாம் புலம்பிக்கொண்டு திரிகிறேனே, அவளைக் காணவில்லையே (வழிவழி ஓடி, மெய்த்தலைப்படுதல் 
செல்லேன்) என்று புலம்பிக்கொண்டு சென்ற அந்தத் தாய், அங்கு ஒரு மான் கூட்டத்தைப் பார்க்கிறாள். அதற்குத் தலைவனான ஆண்மான், 
இவளைப் பார்த்ததும் ஓர் எச்சரிக்கைக் குரல் எழுப்புகிறது (இன் சிலை ஏறு உடை இனத்த). அதனால் இவளைத் திரும்பிப் பார்த்த ஒரு பெண்மான், 
தன் மூக்கை உறிஞ்சி உறிஞ்சி இவளின் மோப்பத்தை உணர முயல்கிறது (நாறு உயிர் நவ்வி). “ஐயோ நான் வேடனல்லள், கையில் வலையும்
இல்லை. வேடனின் வலையைக் கண்டால் நீ எவ்வாறு விரைந்து தப்பி ஓடுவாயோ, அவ்வாறு என் மகள் எங்களிடமிருந்து தப்பி இவ்வழியே 
போய்விட்டாள்” (வலை காண் பிணையின் போகி) என்று அந்த பெண்மானைப் பார்த்துப் புலம்புகிறாள் அவள். “அவளைப் பார்த்தாயா, நான் 
சொல்வது உனக்குக் கேட்கிறதா” என்று வினவுகிறாள் (இத் தலை நின்னொடு வினவல் கேளாய்). அடையாளம் சொல்கிறேன் கேள், என் மகள் 
புலிப்பல் கோத்த பொன்சரடு ஒன்றைக் கழுத்தில் அணிந்திருப்பாள். இடுப்பில், அசோக மரத்தின் அழகுத் தளிரால் ஆன தழையாடை 
அணிந்திருப்பாள் (பொன்னொடு கோத்த புலம்பு மணித் தாலி, ஒலிக் குழ்ழைச் செயலை உடை மாண் அல்குல்)” என்கிறாள் தாய். மான் என்ன 
பதில் சொல்லும்? அவளையே வெறிக்கப் பார்க்கிறது. “இதோ, பக்கத்தில் இருக்கிறதே சிறுகுடி, குரங்கு தின்றுபோட்ட கொட்டைகளாய் 
நிறைந்திருக்குமே , அதுதான் எங்கள் ஊர்” என்று புலம்பிக்கொண்டு செய்வதறியாது திகைத்துப்போய் நிற்கிறாள் அந்தப் பாசம் மிக்க தாய்.

	இப்பாடல் பாலைத்திணையின்பாற்பட்டது. ஆனால் இங்கு வெஞ்சுரங்கள் காணப்படவில்லை. கதிரவன் தெறுக்கும் நண்பகல் இல்லை. 
பாலைச் சுரங்களில் பறந்து திரியும் பருந்துகள் இல்லை. உலர்ந்த ஓமை மரங்கள் இல்லை. மாறாக, கல் கெழு சிறுகுடி பேசப்படுகிறது. 
கல் என்பது பாறைகள் நிறைந்த குன்று – குறிஞ்சி நிலம். சிறுகுடி என்பது குறிஞ்சி நில ஊர். ஆகோள் என்பது வெட்சித்திணை. வெட்சிதானே 
குறிஞ்சியது புறனே என்று தொல்காப்பியம் கூறுகிறது. பலா மரம், குரங்கு ஆகியவை குறிஞ்சியைச் சேர்ந்தவை. எனவே, இப்பாடலில் 
முதற்பொருளும், கருப்பொருள்களும் குறிஞ்சித் திணைக்கு உரியனவாக அமைந்திருப்பதைக் காணலாம். மேலும், இங்கு தலைவி – தலைவன் 
உடன்போக்கு பேசப்படுகிறது. எனினும் இப் பாடல் பாலைத்திணைக்கு உரியதாகப் பேசப்படுகிறது. ஏன்?

	பாலைத்திணை பிரிவாற்றாமையைப் பாடுவது. பொதுவாக, தலைவன் – தலைவி பிரிவுத் துயரத்தையே பாலைத் திணை பாடும். 
இங்கேயோ, ஒரு பாசம் மிக்க வளர்ப்புத் தாயின் பிள்ளைப் பாசத்தால் ஏற்பட்ட பிரிவுத் துயரத்தை இப்பாடல் தன் மையக் கருத்தாகக் கொண்டுள்ளது. 
எனவே இது பிரிவும் பிரிவின் நிமித்தமும் என்ற ஒழுக்கத்தின்பாற் படும். அதுவே பாலை. 

சிறப்பு உரை – 1 நிரைகவர்தல்

	அக்காலத்தில் செல்வர்கள் நிறைய பசுக்கள் வளர்ப்பார்கள். அவற்றை ஊரை ஒட்டிய தொழுவத்தில் அடைத்து வைத்திருப்பர். 
படையெடுத்து வரும் அண்டைநாட்டு மன்னனின் வீரர்கள் இந்த ஆநிரைகளைத் திருடிக்கொண்டு போய்விடுவர். இதுவே போருக்கு அறிகுறி. 
சில சமயங்களில் திருடர்களும் இவ்வாறு செய்வதுண்டு. இது நிரைகவர்தல் எனப்படும். புறத்திணைப் போர்வகைகளில் இது வெட்சி எனப்படுகிறது. 
இவ்வாறு களவாடப்பட்ட ஆநிரைகளைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்று, அந்த நிரை கவர்ந்தோரிடம் போரிட்டு மீட்டு வருவதும் உண்டு, 
இவ்வகைப் போர் கரந்தை எனப்படும். அண்மையில் புதுக்கோட்டை அருகில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, இவ்வாறான நிரைமீட்டல் போரில் 
மாய்ந்த ஒரு வீரனுக்கு எழுப்பப்பட்ட நடுகல்லில் பொறிக்கப்பட்ட செய்தியைப் பேசுகிறது. 

	"கோவென் கட்டிற் நெதிர, ணறு பொன்கொங்கர் விண்ணகோன், ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு, அங்கபடைத் தாணையன் கணங், குமரன் கல் "

	இங்கு வந்துள்ள ‘ஆ எறிவித்து’ என்ற சொற்றொடர், இப்பாடலில் கூறப்பட்டுள்ள அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்து என்ற தொடரை 
மெய்ப்படுத்துகிறது அல்லவா! 
	மேலும் 2006-இல் தேனி மாவட்டம் புள்ளிமான்கோம்பை என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லின் கல்வெட்டும் நிரைகொள்ளுதல் 
பற்றிப் பேசுகிறது. இங்கு அது ஆகோள் எனப்படுகிறது. ஊர்கொலை ஆகோள் பூசல் மாற்றே என்பது தொல்காப்பியம் (புறத்திணையியல் 61). கூடலூர் 
என்பது தேனியை அடுத்து, கேரள எல்லையில் (அன்றைய சேரநாடு) உள்ள ஊர்.

			

			கல்
			பேட தீயன் அந்தவான்
			கூடல் ஊர் ஆகோள்

			‘Kal pedu tiyan antavan kudal ur akol.'

சிறப்பு உரை – 2 பலாக் கொட்டைகள்

	“தான் தன், அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன், பெரும் பெயர் புகார் என் பதியே” எனக் கண்ணகி பெருமையாகத் தன் ஊரைப் 
பற்றிப் பாண்டியனிடன் கூறுகிறாள். இப் பாடலில் வரும் செவிலியோ, குரங்குகள் தின்று உதிர்த்த பலாக்கொடைகளைப் பெறும் ஊர் என் ஊர் 
என்கிறாள்!! அப்படி என்ன சிறப்பு அதில்?

	மகளைத் தேடிவரும் செவிலித்தாய், தன் ஊரைப்பற்றிச் சொல்லும்போது, 

	ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த
	துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
	கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே

	என்கிறாள். தானாக வெடித்துத் தொங்கிய பலாப்பழத்தின் நல்ல சுளைகளை ஆய்ந்து தெரிகிறதாம் கலை என்னப்படும் ஆண்குரங்கு. 
பின் அவற்றைக் கையினால் எடுத்து உண்ணக்கூட அதற்குப் பொறுமை இல்லை. அப்படியே குனிந்து வாயினால் கவ்வி இழுத்து உண்கிறதாம் 
அக் குரங்கு. இதனையே மேய்கிற குரங்கு என்கிறார் புலவர். விலங்குகள் புல்லை மேய்வது போல குரங்குகள் பலாப்பழத்தை மேய்கின்றனவாம். 
சுளைகளைத் தின்பதற்கு முன்னர், கொட்டைகளைக் கடித்து இழுக்கும்போது, அதில் கொஞ்சம் நார்ப்பகுதி ஒட்டிக்கொண்டு வரும். இதனையே 
துய்த்தலை வெண்காழ் என்று புலவர் கூறுகிறார். அன்றைக்கிருந்த குரங்கு ராஜ்ஜியம், இந்தக் கொட்டைகளை அவ்வூர் மக்களுக்கு இலவசமாக 
அளித்துவிட்டுச் சென்றிருக்கின்றன. இதனையே வெண்காழ் பெறூஉம் சிறுகுடி என்கிறார் புலவர். இன்றைக்கு வாங்கும் பலாப்பழத்தின் கொட்டைகளைப் 
பலர் தூக்கி எறிந்துவிடுவர். அன்றைக்கு மக்களுக்கு அது சிறந்த உணவாக இருந்திருக்கிறது. பருப்புகளும், பயறுகளும் கிடைக்காத அன்றைய 
மலைப்புறத்தில் இவைதான் ஊட்டச்சத்து தருவனவாக இருந்திருக்கின்றன. பலாப் பழம் அழுகிப்போகும். ஆனால், கொட்டைகள் ஆண்டு முழுதும் 
கெடாமல் இருக்கும். மலைபடுகடாம் பாடலிலும் மலைவாழ் மக்கள் இந்தப் பலாக்கொட்டைகளைச் சேகரித்து வைப்பதைக் காணலாம். 

	மருத நிலத்து வயலில் அறுவடை முடிந்தபின், நெற்கதிர்களைப் பரப்பி, மாடுகட்டிப் போரடிப்பர். மலைவாழ் மக்களின் சிறுவர்களோ, 
மாட்டுக்கன்றுகளைக் கட்டிப் போரடிப்பராம். அவர்கள் எதனைப் பரப்பியிருப்பார்கள்? தாங்கள் உண்டு முடித்து மிஞ்சிய பலாப்பழங்களைக் கீழே பரப்பி, 
கன்றுகளை விட்டு கடாவுறுப்பார்களாம்.

	வண் கோள் பலவின் சுளை விளை தீம்பழம்
	உண்டு படு மிச்சில் காழ் பயன் கொள்மார்
	கன்று கடாவுறுக்கும் மகாஅர் ஓதை – மலைபடுகடாம் 337-339

	எனவேதான் இதனை இங்கு செவிலியின் கூற்று வாயிலாகச் சிறப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் புலவர்.