அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 22

பாடல்  22. குறிஞ்சித் திணை    பாடியவர் - வெறிபாடிய காமக்கண்ணியார் 

துறை - வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்துத் தலைமகள் ஆற்றாளாகத் தோழி தலைமகனை 
	இயற்பழிப்பத்  தலைமகள் இயற்பட மொழிந்தது.
	தலைமகன் இரவுக் குறி வந்து சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல்லெடுக்கப்பட்டுத் 
	தலைமகள் சொலியதூஉமாம்.
.

  மரபு மூலம் - நக்கனென் அல்லெனோ யானே

	அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதருங்
	கணங்கொள் ளருவிக் கான்கெழு நாடன்
	மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்ல
	லிதுவென வறியா மறுவரற் பொழுதிற்
5	படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
	நெடுவேட் பேணத் தணிகுவ ளிவளென
	முதுவாய்ப் பெண்டி ரதுவாய் கூறக்
	களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி
	வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்
10	துருவச் செந்தினை குருதியொடு தூஉய்
	முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநா
	ளார  நாற வருவிடர்த் ததைந்த
	சாரற்  பல்பூ வண்டுபடச் சூடிக்
	களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கி
15	னொளித்தியங்கு மரபின் வயப்புலி போல
	நன்மனை நெடுநகர்க் காவல ரறியாமைத்
	தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப
	யின்னுயிர் குழைய முயங்குதொறு  மெய்ம்மலிந்து
	நக்கனெ னல்லெனோ யானே யெய்த்த
20	நோய்தணி காதலர் வரவீண்
	டேதில் வேலற் குலந்தமை கண்டே

 சொற்பிரிப்பு மூலம்

	அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும்
	கணம்கொள் அருவிக் கான் கெழு நாடன்
	மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
	இது என அறியா மறுவரல் பொழுதில்
5	படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை
	நெடுவேள் பேணத் தணிகுவள் இவள் என
	முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூறக்
	களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
	வள நகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து
10	உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
	முருகாற்றுப்படுத்த உரு கெழு நடுநாள்
	ஆரம் நாற அரு விடர்த் ததைந்த
	சாரல் பல் பூ வண்டு படச் சூடிக்
	களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
15	ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல
	நன் மனை நெடு நகர்க் காவலர் அறியாமைத்
	தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப
	இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து
	நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
20	நோய் தணி காதலர் வர ஈண்டு
	ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே

அடிநேர் உரை 
	
	தெய்வங்களை உடைய உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கும்
	திரண்ட நீர் உள்ள அருவிகளை உடைய காடுகள் நிறைந்த நாட்டைச் சேர்ந்த தலைவனின்
	மணங் கமழும் அகன்ற மார்பைத் தழுவியதால் ஏற்பட்ட துன்பம்
	இன்னது என்று அறியாமல் (தாய்) மனக்கலக்கம் அடைந்த போழ்து,
5	தனக்குப் படியாதாரை அழித்த, நிறைந்த புகழையும் நீண்ட கைகளையும் உடைய
	நெடுவேளைத் தொழ, நோய் தணியப்பெறுவள் இவள் என
	முதுமை வாய்ந்த பெண்டிர் அதனை உண்மை எனக் கூற,
	வெறிக்களத்தை நன்கு அலங்கரித்து, பூமாலை சூட்டி,
	வளம்பொருந்திய வீடே எதிரொலிக்கப் பாடி, பலி கொடுத்து,
10	அழகிய செந்தினையைக் குருதி கலந்து தூவி,
	முருகனை வரவழைத்த நாளின் அச்சம் பொருந்திய நள்ளிரவில்,
	(மார்பில்) சந்தனம் கமழ, அரிய மலையிடுக்கில் செறிவாய்க் கிடந்த,
	சாரலின் பல பூக்களையும், வண்டுகள் மொய்க்கச் சூடி,
	களிறாகிய இரையைத் தெரிந்துகொள்ளப் பார்வையினாலே ஒதுங்கி,
15	மறைவாக இயங்கும் வழக்கத்தை உடைய வலிய புலியைப் போல,
	நல்ல மனைஉயர்ந்த இல்லங்களைக் கொண்ட ஊரின் காவலர்கள் அறியாவண்ணம்,
	தன் நசை உள்ளத்து, நம்முடைய விருப்பம் நிறைவேற,
	இனிய உயிர் குழையுமாறு தழுவுதோறும், உடல் பூரித்து,
	சிரித்தேன் அல்லவா நான்? எம்மை மெலிவித்த
20	நோயைத் தணிக்க காதலர் வர, இதற்கு
	ஏதும் தொடர்பில்லாத வேலனுக்காக (அந்நோய்)அழிந்தது அறிந்தே.

அருஞ்சொற் பொருள்:

அணங்கு = வருத்தும் தெய்வம்; கான் = கானம், காடு; செல்லல் = துன்பம்; மறுவரல் = மனக்கலக்கம்; நெடுவேள் = முருகன்; 
இழைத்து = அலங்காரமாகச் செய்து; கண்ணி = உச்சி மாலை; சிலம்ப = எதிரொலிக்க; உருவ = அழகிய; உரு = அச்சம்; 
ஆரம் = சந்தனம்; பார்வல் = பார்வை; நசை = விருப்பம்; ஏது = காரணம், தொடர்பு;

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	தலைவனும் தலைவியும் களவொழுக்கம் பூண்டிருக்கும் காலத்தில், காதல் நோய் வயப்பட்ட தலைவி நாளுக்குநாள் 
மெலிந்துகொண்டே போகிறாள். அதற்குரிய காரணம் என்னவென்று அறியாத தாய் மனக்கலக்கம் கொண்டு முதிய பெண்களைக் 
கேட்கிறாள். அவர்கள் இது அணங்கினால் ஏற்பட்டது என்றும், அதற்கு வேலன் வெறியாட்டு அயர்ந்தால் சரியாகிவிடும் என்றும் 
கூறுகின்றனர். தலைவி வீட்டார் வெறியாட்டு அயர்பவரிடம் கூற, அவர் வெறியாட்டுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, 
வெறியாட்டயர்கிறார். அன்று இரவே தலைவன் இரவுக்குறியில் வந்து தலைவியை மகிழ்விக்கிறான். தலைவியின் காதல் நோயும்
தீர்கிறது. வெறியாட்டயர்ந்ததனால்தான் தலைவி நலம்பெற்றாள் என்று வீட்டார் நினைத்துக்கொள்வார்களே என்று எண்ணும்போது 
தலைவிக்குச் சிரிப்பு வருகிறது.

	இந்த நிகழ்ச்சியைத் தலைவி தோழிக்குச் சொல்வதாகப் பாடல் அமைந்துள்ளது. இதைத் தலைவி தோழிக்குச் 
சொல்லவேண்டியதின் காரணம் என்ன என்பதற்கான விளக்கமே இப் பாடலுக்கான துறையாக அமைந்திருக்கிறது. இதற்கு 
உரையாசிரியர் இரண்டு காரணங்களை முன்வைக்கிறார்.

	தலைவியைத் திருமணம் செய்யும் நோக்கில், அதற்குப் பொருளீட்ட, தலைவன் பிரிந்து செல்கிறான். பிரிவுத் துயரத்தை 
ஆற்றாளாகத் தலைவி துயருறுவதைப் பொறுக்காத தோழி, தலைவனைப் பழித்துப் பேசுகிறாள். அதைப் பொறுக்கமாட்டாத தலைவி, 
தலைவன் எவ்வாறு முன்னொருகால் தனக்கு நேரவிருந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றினான் எனக் கூறுகிறாள். ஒருவேளை 
வெறியாட்டன்று இரவு தலைவன் வராமல் இருந்திருந்தால், தலைவியின் நோய் தணிந்திருக்காது. வெறியாட்டயர்ந்தும் தன் பெண்ணின்
நோய் தீரவில்லையே என்று தாய், நோய்க்கான காரணத்தை ஆராயப்போனால், ஒருவேளை தலைவியின் காதல் வாழ்க்கையைப் பற்றி 
அறிந்துகொண்டிருப்பாள். அவ்வாறு நிகழாவண்ணம் தன்னை அந்த இக்கட்டிலிருந்து காத்த தலைவனைப் பழிக்கவேண்டாம் என்று 
தோழிக்குக் கூறுவதையே தலைவி இயற்பட மொழிந்தது என்பர் உரையாசிரியர்.

	தலைவன் தலைவி காதல் வாழ்க்கை நீடித்துக்கொண்டே செல்வதைக் கவலையுடன் பார்த்த தோழி, ஒருநாள் தலைவன் 
இரவுக்குறியில் வந்துநிற்கும் நேரத்தில், தலைவிக்கு நேர்ந்த வெறியாட்டைப் பற்றிப் பேச்செடுக்கிறாள். அப்போது, அந்த நிகழ்ச்சியை 
மீண்டும் நினைவுகூர்ந்த தலைவி, அது எப்படிச் சிரிப்புக்கிடமானது என்று விவரிக்கிறாள். இவ்வாறு இனியொருமுறை நிகழாவண்ணம், 
தலைவன் உரிய காலத்தில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பதைத் தலைவியின் பேச்சு வழியாகத்  தலைவனுக்கு 
உணர்த்துவதே தோழியின் நோக்கம். 

	தலைவனும் தலைவியும் சந்தித்து மகிழ்வதே பாடலின் மையக் கருத்தாக அமைவதால், இது குறிஞ்சிக்குரிய 
உரிப்பொருளான புணர்தலும் அதன் நிமித்தமும் என்றாகி, இப் பாடல் குறிஞ்சித் திணைக்குரியது ஆயிற்று. மேலும் நெடுவரை, 
நடுநாள் ஆகிய முதற்பொருளானும், அணங்கு, அருவி, நெடுவேள், ஆரம், சாரல், களிறு, வயப்புலி ஆகிய கருப்பொருளானும் இது 
குறிஞ்சித்திணையையே உணர்த்திற்று.

பாடல் விளக்கம்

	அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும்
	கணம்கொள் அருவிக் கான் கெழு நாடன்
	மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
	இது என அறியா மறுவரல் பொழுதில்

	தலைவி கூறுகிறாள் – முதலில் தலைவனைப் பற்றி.

	“அணங்கு வாழும் குன்றத்தினானின் மணங்கமழும் அகன்ற மார்பு என்னை அணங்கியது – அதைத் தழுவி மகிழ்ந்த 
என் பெண்மைக்குத் தவிக்கின்ற துயரம் தந்து. இதனை என்னவென்று அறியாத என் வீட்டார் மனக்கலக்கம் கொண்ட பொழுதில்- “

	“ஓங்கி உயர்ந்த மலை – அதன் உச்சிக்குப் போக எவரும் தயங்குவர், காரணம் அங்கு வருத்தும் தெய்வங்கள் உண்டு – 
அந்த உச்சியினின்றும் இறங்கிவருகிறது ஓர் அருவி – நிறைந்த நீரை அள்ளிக்கொண்டுவரும் அந்த அருவி விழுமிடத்தைச் சுற்றிக் 
குளிர்ந்த நிழல் தரும் சோலைகள் – இத்தகைய வளமிக்க இடத்தைச் சேர்ந்தவன் என் தலைவன்”

	‘என் தலைவன் சாதாரணமானவன் அல்லன் - ஒருவேளை நான் அவனுடன் சென்ற பின்னர், என்னைத் தேடி யாரும் வர 
எண்ணினால் அவன் இருப்பிடத்தைக்கூட நெருங்க முடியாது’ என்கிறாளோ தலைவி? ‘இந்த வீட்டைவிட்டு நான் சென்றால் இன்னும் 
சிறப்பான இடத்துக்குத்தானே போகப்போகிறேன்’ என்ற பெருமை – புகு வீட்டின் பெருமை - இதில் பொங்கி வழிகிறதா? 

5	படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை
	நெடுவேள் பேணத் தணிகுவள் இவள் என
	முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூறக்

	‘முருகனைக் கும்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிலும் வினை தீருமே’ என்று தொண்டு கிழவிகள் துயர் நீக்க வழி 
சொல்கின்றனர். ‘தனக்குப் படியாதாரை அவனின் பல்புகழ் தடக்கை படியச்செய்யும். அந்த நெடுவேளுக்கு இந்தச் சிற்றணங்கு 
எம்மாத்திரம்’ என்கின்றனர் அவர்கள்.

	களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
	வள நகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து
10	உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
	முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள்

	ஓடுகிறாள் தாய், உள்ளூரில் உடுக்கடிக்கும் வேலனிடம். விரைந்து வந்த வேலன் ‘பேய்பிடித்த’ பெண்ணைப் பார்க்கிறான். 
‘சாமி இறங்கி ஆட’ நல்ல சமதளம் அமைக்கிறான் (களம் நன்கு இழைத்து). வேல் நட்டு அதன் உச்சியில் மாலை சூட்டுகிறான் 
(கண்ணி சூட்டி). அந்தப் பரிய மாளிகையே அதிரும்வண்ணம் பாட்டெடுத்து (வள நகர் சிலம்பப் பாடி) ஆடுகிறான். உயர்ந்து நிற்கும் 
வேலுக்கு முன்னால் உயிர்ப்பலியும் கொடுக்கிறான் (பலிகொடுத்து). அதன் கொப்பளிக்கும் குருதியைக் குவித்திருக்கும் தினையில் 
கலக்கிறான் (உருவச் செந்தினை குருதியொடு தூஉய்). பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்த அந்தக் குருதி கலந்த தினையை அந்த இடம் 
முழுக்கத் தெளித்துவிடுகிறான் (உருவச் செந்தினை .. தூஉய்). பின்னர், வேலனுக்கு ‘வெறி’ வந்து ஆடத் தொடங்குகிறான் (முருகு 
ஆற்றுப்படுத்த). 
	
			
			நன்றி:murugan.org 

	இரவு வெகுநேரம் கழித்து, ‘எல்லாம் முடிச்சாச்சு தாயீ, காலயில சரியாப் போயிடும்’ என்று சொல்லிவிட்டுப் 
போய்விடுகிறான். அனைவரும் தூங்கப் போகின்றனர். தலைவிக்கு ஏது தூக்கம்? நள்ளிரவும் வருகிறது --

	ஆரம் நாற அரு விடர் ததைந்த
	சாரல் பல் பூ வண்டு படச் சூடிக்
	களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
15	ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல
	நன் மனை நெடு நகர்க் காவலர் அறியாமைத்
	தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப
	இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய் மலிந்து
	நக்கனென் அல்லெனோ யானே –

	திடீரென்று சந்தனம் மணக்கிறது (ஆரம் நாற). கூடவே பல வகைப் பூக்களின் சேர்ந்த மணமும் வருகிறது. இது தலைவன் 
சூடி வரும் பூவின் மணமல்லவா!  மலைச் சரிவில் அரிய பாறை இடுக்குகளில் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இந்தப் பூக்களைத் 
தலைவன் சூடிவர (அரு விடர் ததைந்த சாரல் பல் பூ) முன்னர்க் கண்டிருக்கிறாள். இதோ! பூக்களின் கூடவே வந்த வண்டுகளின் 
ரீங்காரமும் கேட்கிறது (வண்டு படச் சூடி). நம் மனையின் நெடிய மதில்களீல் காவலர் (நன் மனை நெடு நகர்க் காவலர்) 
கண்ணுறங்காமல் காவல் காத்திருப்பரே! அவர்கள் அறியாதவாறு, களிற்றை வளைத்துப் பிடிக்க வசம்பார்த்து ஒதுங்கி ஒளித்துப் 
பதுங்கி நடக்கும் வயப்புலி போல (களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல) அவர் 
வந்துகொண்டிருக்கிறாரோ? 

			
       			நன்றி:www.gdefon.com		நன்றி:www.redbubble.com 

	ஆசைகொண்ட நெஞ்சினராய் (தன் நசை உள்ளத்து), என் ஆசையைத் தீர்க்க (நம் நசை வாய்ப்ப)வந்துவிட்டார் என் அரும் 
தலைவன். என் உயிரெல்லாம் நெக்குருக (இன் உயிர் குழைய), ஒவ்வொரு முறையும் என்னை அவர் அணைக்கின்ற போதெல்லாம், 
உடல் குலுங்க எனக்குச் சிரிப்பு வருகிறது – ஏன்? 

		   -- எய்த்த
20	நோய் தணி காதலர் வர ஈண்டு
	ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே

	இதோ என் மேனியை இளைக்கவைத்த (எய்த்த) இந்தக் காதல்நோயைத் தணிப்பதற்கு என் காதலர் வந்துவிட, நாளைக் 
காலையில் “நல்லாப்போச்சு எம் மகளுக்கு – அந்த வேலன் அருளால்” என, எந்தவிதத்திலும் இதற்குத் தொடர்பில்லாத வேலனால் 
நடந்தது என்று அவர்கள் நினைப்பார்களே என்று.

வேலன் வெறியாட்டு

	இன்றைக்கும் கிராமப்புறங்களில் சாமியாடி என்று அழைக்கப்படும் சிலர் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் 
இயல்பாகவே இருப்பர். திடீரென்று ஆவேசம் கொண்டவரைப் போல் முகம், கை, கால் ஆகிய எல்லா உறுப்புகளும் நடுங்குகிறாற் 
போல், நின்ற நிலையில் ஆடுவர். இதனைச் சாமியாடுதல் என்பர். சாமியாடிக்கு அருள்வந்துவிட்டது அல்லது சாமிவந்துவிட்டது 
என்றும் கூறுவர். இவ்வாறு அருள்வருவதற்குத் துணையாகவோ, அதனை வருவிக்கவோ, வந்த அருளை மிகுவிக்கவோ பலவித 
தாரை தப்பட்டைகள் போன்ற தோற்கருவிகளை விரைவாக இயக்கி ஓங்கி ஒலிக்கச் செய்வர். அப்போது முருகனே அந்தச் சாமியாடியின் 
மீது வந்து இறங்கியிருப்பதாக மக்கள் நம்புவர். அந்த நிலையில் சாமியாடியை முருகக் கடவுளாகவே வணங்குவர். 
நோய்வாய்ப்பட்டவர்களை அவர்கள் முன் கொண்டுவந்து நிறுத்துவர். சாமியாடி அவர்கள் மேல் திருநீறை விட்டெறிந்து குறிசொல்லுவார். 
இதனால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. அந்த நேரத்தில் சாமியாடி தன் வசப்பட்டவர் அல்ல என்பதால், அவர் கூறுவது இறைவாக்கு 
என்பது நம்பிக்கை. சில பெண்களுக்கு சாம்பிராணி போன்ற நறுமணப்பொருள்களை நுகர்ந்தாலே சாமிவந்துவிடும்.  

	திருமுருகாற்றுப்படையில் இந் நிகழ்ச்சி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது (திரு: 227-248). 

	வேலன் வெறியாட்டை மிகவும் சிறப்பாகவும் தெளிவாகவும், அதன் முக்கிய கூறுகளை நுணுக்கமாகவும் 
விவரித்துள்ளதாலேயே, இப் பாடலின் ஆசிரியர் வெறிபாடிய என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார் எனலாம்.

ஒளித்து வரும் தலைவன் 

	காவலர் அறியாது தலைவன் ஒளித்து வருவது அவர்களுக்குப் பயந்து அல்ல என்று கூறவந்த புலவர், தலைவன் வயப்புலி 
போல வந்தான் என்கிறார். இந்த உவமை இல்லாவிடில், அது தலைவனின் வீரத்துக்கு இழுக்காகப் போய்விடும் என்ற நோக்கிலேயே 
புலவர் மிகவும் கவனமாக இந்த உவமையைக் கையாள்கிறார். வயப்புலி ஒளித்து இயங்குவது களிற்றுக்குப் பயந்து அல்ல. தான் வருவது 
களிற்றுக்குத் தெரிந்தால், தனக்கு இரை கிடைக்காமல் போய்விடும் – காரியம் கெட்டுவிடும் என்ற நோக்கில் புலி ஒளித்து இயங்குகிறது. 
அதைப் போல, காவலருக்குத் தன் வருகை தெரிந்துவிட்டால், தான் தலைவியைச் சந்திப்பது கெட்டுவிடும் என்றே தலைவன் ஒளித்து 
இயங்குகிறான் என்பதை ஒரு சரியான உவமைமூலம் வெளிப்படுத்தும் புலவரின் நுண்நோக்கு பாராட்டுதற்குரியதன்றோ!

	அதுமட்டும் அல்ல. தலைவன் பயந்து பயந்து வந்தால், சந்தனம் மணக்க வருவானா? வண்டுகள் இமிழ மணமிக்க மலர்கள் 
சூடிக்கொண்டு வருவானா? இந்த நேரத்தில் என்ன இது மணம் – இது என்ன ஓசை - என்று காவலர் எச்சரிக்கை அடைந்துவிடமாட்டார்களா? 
ஆரம் நாற, பல் பூ வண்டு படச் சூடிவரும் தலைவன் துணிச்சலும், தன்னம்பிக்கையும், திறமையும் கொண்டவன் என்று புலவர் 
மறைமுகமாகக் கூறும் நயத்தினை உற்றுணருங்கள்.

நசை உள்ளங்கள்

	தலைவிக்கு வந்திருக்கும் காதல் நோய்க்கு வேலன் வெறியாட்டு மருந்து ஆகாது. வேலன் தலைவியின் மீது கொண்ட பாசத்தால் 
வெறியாட்டு அயரவில்லை. தலைவியும் எப்படியாவது தன் நோய் தீரவேண்டும் என்று வேலன் முன் நிற்கவில்லை. ஆனால் உண்மையான 
காதலுடன் தலைவன் தலைவியைப் பார்க்க வருகிறான். அவன் வந்து தன் ஏக்கத்தைத் தீர்க்கமாட்டானா என்ற விருப்புடன் தலைவி 
காத்திருக்கிறாள். ஆக, ஓர் ஆசை வந்து, இன்னொரு ஆசையைத் தீர்த்தது என்பதைத் தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப என்று எவ்வளவு 
சிறப்பான தொடரால் விவரிக்கிறார் பார்த்தீர்களா!