அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 27

பாடல்  27. பாலைத் திணை    பாடியவர் - மதுரைக் கணக்காயனார்

துறை - செலவுணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது..
.

  மரபு மூலம் - யாங்கனம் விடுமோ அமர்த்த நோக்கே

	கொடுவரி யிரும்புலி தயங்க நெடுவரை
	யாடுகழை யிருவெதிர் கோடைக் கொல்குங்
	கானங் கடிய வென்னார் நாமழ
	நின்றதிற் பொருட்பிணிச் சென்றிவண் டருமார்
5	செல்ப வென்ப வென்போய் நல்ல
	மடவை மன்ற நீயே வடவயின்
	வேங்கடம் பயந்த வெண்கோட் டியானை
	மறப்போர்ப் பாண்டிய ரறத்திற் காக்குங்
	கொற்கையம் பெருந்துறை முத்தி னன்ன
10	நகைபொலிந் திலங்கு மெயிறுகெழு துவர்வாய்
	தகைப்பத் தங்கல ராயினு மிகப்ப
	யாங்ஙனம் விடுமோ மற்றே தேம்படத்
	தெண்ணீர்க் கேற்ற திரள்காற் குவளைப்
	பெருந்தகை சிதைத்து மமையாப் பருந்துபட
	வேத்தமர்க் கடந்த வென்றி நல்வேல்
15	குருதியொடு துயல்வந் தன்னநின்
	னரிவே யுண்கண் ணமர்த்த நோக்கே

 சொற்பிரிப்பு மூலம்

	கொடு வரி இரும் புலி தயங்க நெடு வரை
	ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
	கானம் கடிய என்னார் நாம் அழ
	நின்றது இல் பொருள்_பிணிச் சென்று இவண் தரும்-மார்
5	செல்ப என்ப என்போய் நல்ல
	மடவை மன்ற நீயே வட_வயின்
	வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை
	மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
	கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
10	நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
	தகைப்பத் தங்கலர் ஆயினும் இகப்ப
	யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
	தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளைப்
	பெருந்தகை சிதைத்தும் அமையாப் பருந்து பட
	வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்
15	குருதியொடு துயல்வந்து அன்ன நின்
	அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே

அருஞ்சொற் பொருள்:

கொடு = வளைந்த; தயங்க = தெளிவாகத் தெரிய, to be clear, வரை = மலை; கழை = ; வெதிர் = கெட்டி மூங்கில்; 
கோடை = மேல்காற்று; ஒல்கும் = வளையும்; துவர் = சிவந்த; தகைப்ப = தடுக்க; இகப்ப = கடக்க; 
பெருந்தகை = பெரும் தகை = மிக்க அழகு; வேத்து = வேந்து; அமர் = போர்; அரி = செவ்வரி; வேய் = சூடிய; 
அணிந்த; அமர்த்த = மாறுபாடான, be at strife.

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	தலைவியிடம், “உன் கணவர் பொருள்தேடிக் கொணர வெளிநாடு செல்லப்போகிறார்” என்று அயலார் 
கூறுகின்றனர். அதைக் கேட்ட தலைவி, இச் செய்தியைத் தன் தோழியிடம் கூறுகிறாள். “வெளியூருக்கெல்லாம் 
போகவேண்டாம் என்று சொல்; உன் சொல்லை மீறி அவர் போகமாட்டார்; அப்படியே போக எண்ணினாலும் உன் 
பார்வையாலேயே அவரை மடக்கிவிடலாம்” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	கொடு வரி இரும் புலி தயங்க நெடு வரை
	ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
	கானம் கடிய என்னார் ----------------

	வளைந்த வரிகளையுடைய பெரிய புலி இருக்குமிடம் தெரியும்படியாக, நீண்ட மலையில்
	ஆடுகின்ற தண்டினைக் கொண்ட வலுவான கல்மூங்கில்கள் மேல்காற்றினால் வளையும்
	காட்டு வழி கடினமானது என்னாமல்;

			

	அடர்ந்த மூங்கில் புதர்களுக்குள் புலி பதுங்கி இருந்தால் பார்ப்பவர்க்குத் தெரியாது. அதனுடைய மஞ்சள் 
மேனியும், அதின் மேலிருக்கும் வளைவான கோடுகளும் மூங்கிலின் பின்னணியில் புலிக்கு நல்ல மறைவாக 
(camouflage) இருக்கும். இந்தக் காரணத்தைச் சொல்லித் தலைவனைத் தடுக்க முடியாது. வேனில் காலமாதலால் 
மூங்கிலின் தோகைகள் காய்ந்து உதிர்ந்திருக்கும். வெதிர் வகை மூங்கில் கழைகளும் பருமனாக இருக்கமாட்டா. 
அவையும் ஆடிக்கொண்டே இருக்கும். அடிக்கும் மேல்காற்றினால் அவை நன்கு வளைந்துகொடுக்கும். ஒல்குதல் 
என்பதற்கு சுருங்கிப்போதல், வளைதல் என்ற பொருள் உண்டு. எனவே இப்படிப்பட்ட புதருக்குள் புலி மறைவாகப் 
பதுங்கி இருக்கமுடியாது. எனவே இப்படிப்பட்ட காட்டுவழி அப்படியொன்றும் கடப்பதற்கு ஆபத்தானது என்பதைத் 
தலைவன் ஒப்புக்கொள்ளமாட்டானே என்று தலைவி மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். புலவர் தரும் 
வருணனைக் குறிப்புகளிலேயே காரணங்களையும் உணர்த்தும் திறன்தான் என்னே!

	------------------   -----------------   ----------------   நாம் அழ
	நின்றது இல் பொருள்_பிணிச் சென்று இவண் தரும்-மார்
5	செல்ப என்ப என்போய் நல்ல
	மடவை மன்ற நீயே --------------------
	
	நம்மை அழவிட்டு,
	நிலையற்ற செல்வத்தின் மீது கொண்ட ஆசையினால் சென்று, இங்கு திரட்டிக் கொணரச்
	செல்கிறார் என்று சொல்கிறார்கள் என்கிறாயே, நல்ல
	பேதைப்பெண் நீ,

	எவ்வளவுதான் சேர்த்துவந்தாலும் செலவிட்டுத் தீரப்போகிறது; இதற்காக என்னைத் தவிக்கவிட்டுப் 
போகலாமா என்று கேட்டாலும், தலைவன் கேட்கப்போவதில்லை என்ற குறிப்புப் பொருள் தோன்ற தலைவி 
கூறுவதாகவும் கொள்ளலாம். 

	------------------  ------------------  ------------------  வட_வயின்
	வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை
	மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
	கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
10	நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
	தகைப்பத் தங்கலர் ஆயினும் --------------

	வடக்கிலிருக்கும்
	வேங்கடமலையில் பிடித்த வெண்மையான தந்தங்களையுடைய யானைப்படையுள்ள,
	வீரப் போர் புரியும் பாண்டியர், அறநெறியில் காக்கும்
	கொற்கை என்ற அழகிய பெரிய துறைநகரில் விளையும் முத்தைப் போன்ற,
	முறுவலால் பொலிவுடன் விளங்கும் பற்கள் உள்ள சிவந்த உன் வாய்
	தடுத்து நிறுத்தினால் வெளியில் சென்று தங்கமாட்டார் – எனினும்;

	வேங்கட மலைப்பகுதியில் இருக்கும் யானைகள் மிகவும் வலியவை என்றும், பழக்கினால் 
போர்த்தொழிலில் சிறந்து விளங்கும் என்றும் இலக்கியக் குறிப்புகளினின்றும் அறிகிறோம்.

	வினை நவில் யானை விறல் போர் தொண்டையர்
	இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு
	ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர் --- அகம் 213-3

	மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
	காம்புடை நெடுநகர் வேங்கடத்து உம்பர் - அகம் 209-9

	என்ற அகநானூற்று அடிகள் இதனை உணர்த்தும். இத்தைய சிறந்த யானைகளைப் பாண்டியன் 
பெற்றிருக்கிறான் என்றால், அவன் வேங்கடமலைப் பகுதியை வென்று அங்குள்ள சிற்றசர் மூலம் யானைகளை 
இறையாகப் பெற்றிருக்கவேண்டும். இத்தகைய சிறந்த யானைப்படைகளைக் கொண்டு பாண்டியன் தன் கொற்கை 
முத்துக்களைக் காத்திருக்கின்றான். போர் மறத்தில் அவன் சிறந்தவனாயிருப்பது போலவே, ஆள் திறத்தில் அவன் 
அறத்தவனாக இருக்கின்றான். இந்தக் கொற்கையில் விளையும் முத்துக்களைப் போன்று பளிச்சிடும் வெண்மையுள்ள 
பற்களைக் கொண்டிருக்கிறாள் தலைவி. இந்த வெண்மையான பற்களைக் கொண்டிருக்கும் சிவந்த வாய் தலைவன் 
பிரிந்து செல்வதைத் தடுக்கும் என்கிறாள் தோழி. வாய் எப்படித் தடுக்கும்? வாய்ச்சொற்கள் தடுக்கும். எனவே 
தலைவனிடம் தைரியமாகப் பேசு என்கிறாள் தோழி. சில நேரங்களில் பயந்துகொண்டோ, அடம்பிடித்துக்கொண்டோ 
கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருக்கும் சிறுமியரைப் பார்த்து, “வாயத்தொறந்து சொல்லேண்டீ! முத்தா 
உதுந்துரும்?” என்று பெண்கள் பேசுவதுண்டு. அதைப்போல, “முத்து உதுந்திருமோ’ன்னு பேசாம இருந்துராம, 
வாயத்தொறந்து பேசு, போகாதய்யா’ன்னு” என்று தோழி சொல்லிக்கொடுக்கிறாள். 

	“ஆமா, நான் சொன்னாத்தான் கேக்கப்போறாருக்கும்!” என்று தலைவி சொல்ல, “வாயால முடியலே’ன்னா, 
கண்ணால கட்டிப்போடு” என்கிறாள் தோழி.

	(----------------  ----------------  ------------------  இகப்ப
	யாங்ஙனம் விடுமோ மற்றே)

	தேம் படத்
	தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளைப்
	பெருந்தகை சிதைத்தும் அமையாப் பருந்து பட
	வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்
15	குருதியொடு துயல்வந்து அன்ன நின்
	அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே

	இனிமை சொட்ட,
	தெளிந்த நீருக்கு ஏற்ற திரண்ட கால்களை உடைய குவளையின்
	பேரழகைப் பழிக்கும் வகையில் இருந்தும் அமையாது, பருந்துகள் வட்டமிட
	மன்னர்களைப் போரில் வென்ற வெற்றியை உடைய நல்ல வேல்
	குருதியுடன் ஆடுவது போன்ற உன்
	செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களின் மாறுபட்ட பார்வை
	
	(மீறிச்செல்ல
	எப்படி விட்டுவிடும் பார்ப்போம்.)

	பெண்களின் கண்கள் குளிர்ச்சியான பார்வையைக் கொண்டால், அவற்றைக் குவளைக்கண்கள் என்பர். 
பார்வையில் குளிர்ச்சி என்பது என்ன? இனிமையான பார்வை. அந்த இனிமை குவளை மலர்களில் நிறையவே இருக்கிறது. 
தேம் என்பது தேன் என்ற பொருள்படும் என்றாலும் அதற்கு இனிமை என்றுதான் பொருள் கொள்வர். தேன் உள்ள 
பூக்களில் அந்தத் தேன் அப்படி, அங்கு உருவாகிறது? முதலில், பூக்களில் உருவாவது தேன் (honey) அல்ல. அது இனிய 
நீர் மட்டுமே. அதனை Nectar என்பர். நாம் இதனை அமுது என்போம். இந்த அமுது எனும் இனிய நீர் பூவின் இதழ்களின் 
கீழ்ப்பகுதியில் சூலகத்து (Ovary) அடியில் உள்ள nectary என்னப்படும் அமுதகம் என்ற சுரப்பியால் சுரக்கப்படுகிறது. 
பூவினால் கவரப்பட்டு வரும் தேனீக்கள், பூவின் மேலமர்ந்து சூலகத்துள் இருக்கும் அமுதை (Nectar) உறிஞ்சுகின்றன. 
இந்த அமுது, தேனீயின் வாயில் உள்ள எச்சலோடு சேர்ந்து, தேனீக்கள் தேகூட்டைச் சென்று அடையும் நேரத்துக்குள் 
வேதி மாற்றம் அடைகிறது. பின் தேனீ தன் வாயிலுள்ள கலவையை தன் கூட்டில் உமிழ்ந்து சேமிக்கிறது. இதுவே தேன் 
ஆகிறது. தேம்படத் தெள் நீர்க்கு ஏற்ற குவளை என்னும்போது, இனிமையடையும் தெளிந்த நீர் என்ற பொருள் கொண்டால் 
அது அமுது எனப்படும் Nectar –ஐக் குறிக்கும். இன்றைக்குத் தாவரவியலார் கண்டுபிடித்திருக்கும் இந்த உண்மை இந்த 
அடிகளில் பொதிந்துகாணப்படுவது வியத்தற்குரியதே. 

			

	திரண்ட காலை உடைய குவளை மலரின் அமுதகம் நிறைய அமுதைக் கொள்ளும் அல்லவா! அவ்வாறு 
நிறைந்த இனிமையைக் கொண்டன தலைவியின் கண்கள் என்கிறார் புலவர். மகிழ்ச்சியுடன் இருக்கும்போது இனிமைப் 
பார்வையைச் சிந்தும் குவளைக் கண்கள், மறுப்பைக் காட்டும்போது வேலாய்க் குத்துகின்றன. அதுவும் கோபத்துடன் 
இருக்கும்போதும், கொடுந்துயரால் கசக்கும்போதும் கண்கள் சிவந்துபோய், குருதி தோய்ந்த வேலாய்க் காட்சியளிக்கின்றன 
என்பதை எவ்வளவு அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் புலவர் என்று பாருங்கள். 

	புகை உண்டு அமர்த்த கண்ணள் – நற்.120/6
	புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள் – ஐங். 79/1
	புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள் – ஐங். 382/1
	அமிர்து பொதி துவர் வாய் அமர்த்த நோக்கின் – பதிற்.16/12 

	ஆகிய அடிகளின் மூலம் அமர்த்த என்பதற்கு இடத்திற்கேற்றவாறு வெவ்வேறு பொருள் கொள்ளவேண்டும் 
என்று அறிகிறோம். இங்கு அமர்த்த என்பதற்கு மாறுபட்ட, மறுப்பைத் தெரிவிக்கிற, கலங்கிப்போன என்ற பொருள் 
கொள்ளலாம். ஒரு பேதைப்பெண் எவ்வாறு தன் மறுப்பைத் தெரிவிப்பாள்? தலைவனை நேருக்கு நேர் பார்க்கமாட்டாள். 
தலைவன் அவள் நாடியைப் பிடித்துத் தூக்கினும் நேரே பார்ப்பதைத் தவிர்ப்பாள். கருவிழிகள் இடது பக்கமும், வலது 
பக்கமும் மாறி மாறிச் செல்லும். கலங்கிய மனநிலையில் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கண்நரம்புகள் 
புடைத்துக்கொண்டு இருக்கும். அதையே செவ்வரி படர்ந்த கண்கள் என்கிறார் புலவர். இதுவே குருதி படிந்த வேல்நுனிகள் 
பக்கவாட்டில் அசைவதுபோல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார். துயல்வருதல் என்பது பக்கவாட்டில் அசைதல் (swaying). 

	“குவளைக் கண்ணால் பேசிப்பார். மசியவில்லையேல் அவற்றைக் குருதி தோய்ந்த வேலாய் மாற்று” என்று 
தோழி கூறுகிறாள்.