அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 12

பாடல்  12. குறிஞ்சித் திணை    பாடியவர் - கபிலர் 

துறை - இரவுக்குறியும் மறுத்து தோழி வரைவு கடாவியது

  மரபு மூலம் - நீ வரின் மெல்லியல் வாழலள் 

	யாயே, கண்ணினுங் கடுங்கா தலளே யெந்தையு
	நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப
	வெவனில குறுமக ளியங்குதி யென்னும்
	யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பி
5	னிருதலைப் புள்ளி  னோருயி ரம்மே
	யேனலங் காவல ரானா தார்தொறுங்
	கிளிவிளி பயிற்றும் வெளிலாடு பெருஞ்சினை
	விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்
	குறவ ரூன்றிய குரம்பை புதைய
10	வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்
	புலிசெத்து வெரீஇய புகர்முக வேழம்
	மழைபடு சிலம்பிற் கழைபடப் பெயரும்
	நல்வரை நாட நீவரின்
	மெல்லிய லோருந் தான்வா ழலளே

 சொற்பிரிப்பு மூலம்

	யாயே கண்ணினும் கடும் காதலளே எந்தையும்
	நிலன் உறப் பொறாஅன் சீறடி சிவப்ப
	எவன் இல குறுமகள் இயங்குதி என்னும்
	யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
5	இரு தலைப் புள்ளின் ஓர் உயிர் அம்மே
	ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்தொறும்
	கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை
	விழுக் கோள் பலவின் பழுப் பயம் கொள்மார்
	குறவர் ஊன்றிய குரம்பை புதைய
10	வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்
	புலி செத்து வெரீஇய புகர் முக வேழம்
	மழை படு சிலம்பில் கழைபடப் பெயரும்
	நல் வரை நாட நீ வரின்
	மெல்லியல் ஓரும் தான் வாழலளே

அடிநேர் உரை 
	
	எம் தாய் (தன்)கண்ணைக்காட்டிலும் (இவளிடம்)மிக்க அன்புடையவள், எம் தந்தையும்
	(இவள்)தரையில் கால்வைக்கப் பொறுக்கமாட்டார். “(உன்) சின்னப் பாதங்கள் சிவக்க
	எங்கே, அடி, சின்னவளே! போகிறாய் என்பார்,
	நானும் அவளும், பிரிவு இல்லாமல் அமைந்த உவர்ப்பில்லாத நட்பினால்
5	இருதலைப் பறவையைப் போல ஓருயிராய் இருக்கின்றோம்.
	தினைப்புனக் காவல் மகளிர் ஓயாது ஆரவாரிக்குந்தோறும்
	கிளிகள் (தம் இனத்தை)பலமுறை அழைத்துக்கூவும் அணில் ஆடும் பெரிய கிளைகளில்
	சிறந்த குலைகளைக் கொண்ட பலாமரத்தின் பழங்களின் பயனைக் கொள்வதற்கு
	குறவர்கள் எழுப்பிய குடிசை மறையுமாறு  
10	வேங்கைப்பூக்கள் உருவாக்கிய தேன்சிந்தும் தோற்றத்தைப்
	புலியென்று எண்ணி வெருண்ட புகர்முக யானை
	மேகங்கள் படர்ந்த மலைச்சரிவில் மூங்கில்கள் முறிபடப் பெயர்ந்துசெல்லும்
	நல்ல மலை நாட்டைச் சேர்ந்தவனே! நீ (இரவில்) வந்தால்
	மெல்லியலாள் (உனக்கு நேரக்கூடிய ஊறுகளை எண்ணி) வாழமாட்டாள்.

அருஞ்சொற்கள்:

கடும் = மிகுந்த; இல = அடியே!; ஏனல் = தினைப்புனம்; ஆனாது = அளவின்றி; ஆர்த்தல் = ஆரவாரித்தல், கூச்சலிடுதல்; விளி = அழைப்பு; 
பயிற்று = பலமுறை செய்; வெளில் = அணில்; கோள் = குலை; குரம்பை = குடிசை; தா = உருவாக்கு, ஏற்படுத்து; தேம் = தேன்; 
செத்து = நினைத்து; புகர் = யானை முகத்தில் உள்ள புள்ளிகள்; சிலம்பு = மலைச் சாரல்; கழை = மூங்கில்; ஓரும், தான் = அசைச்சொற்கள்

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	தினைப்புனம் விளைந்திருக்கும் காலத்தில், புனத்திற்குரியவரின் மகள் தன் தோழியருடன் பகலில் காவலுக்குச் செல்வது 
வழக்கம். தினைப்புனம் என்பது மலையின் சமதளப் பகுதிகளில் தினை பயிரிடப்படும் நிலம். அப்போது பயிரை மேயக் காட்டு விலங்குகளும், 
கதிர்களைக் கொத்தித் தின்ன காட்டுப் பறவைகளும் வரும். காட்டு விலங்குகளைத் துரத்த, உயரமான மரத்தில் காவல் பரண் அமைத்துக் 
குறவர் காவலிருப்பர். பறவைகளை விரட்ட, புனத்தின் நடுவே ஓர் உயரமான மேடை அமைத்து, அதில் அமர்ந்தவண்ணம் மகளிர், கவண் 
மூலம் கல்லெறிந்தும், பல்விதத் தோற்கருவிகளைத் தட்டி ஒலி எழுப்பியும், கைகளை உயர்த்தி ஆரவாரக் கூச்சல் போட்டும் பறவைகளை 
விரட்டுவர். அப்போது, காட்டு விலங்கை வேட்டையாட, வேறு ஊரைச் சேர்ந்த ஓர் இளைஞன் அந்தப் பக்கம் வருவான். தற்செயலாகத் 
தலைவியைச் சந்திப்பான். இருவரும் காதல்கொள்வர். இதுவே குறிஞ்சிநிலக் காதல் கதைகள் பலவற்றுக்குப் பின்புலமாக அமையும். 
இதை ஒட்டி ஏற்படும் பல்வேறு பின்விளைவுகளைப் பற்றிப் புலவர் தம் கற்பனைக்கு ஏற்றவாறு பாடல்கள் புனைவர். அப்படிப்பட்ட 
பாடல்தான் இதுவும்.

	தினைப்புனத்தில் கதிர் அறுப்பு முடிந்தவுடன் தலைவி வீட்டினுள்ளேயே அடைந்துகிடப்பாள். வெளியிற் செல்ல அனுமதி இல்லை. 
வேண்டுமானால் அவளின் தோழியர் அவள் வீட்டுக்கு வந்து செல்லலாம். எனவே, தினைப்புனக் காதலின் தொடர்ச்சியில் தோழி பெரும்பங்கு 
வகிப்பாள். பகலில் அதிக நடமாட்டமும் கண்காணிப்பும் இருப்பதால் தலைவன் - தலைவி சந்திப்பு நிகழ்வது கடினம். எனவே அவர்கள் இரவில் 
சந்திக்க இடமும் நேரமும் குறிக்கப்படும். குறிக்கப்பட்ட இடம் இரவுக்குறி எனப்படும். நேரம் பொதுவாக ,நள்ளிருளாகத்தான் இருக்கும். அந்த 
நள்ளிருளில் தலைவன் வந்து திரும்பவேண்டும். வழியில், அடர்ந்த காடுகளைத் தாண்டி – உயர்ந்த மலைகளினூடே – வந்து செல்லும்போது 
தலைவன் எதிர்கொள்ளும் ஆபத்துகள் பல. அவனுக்கு ஏதேனும் ஒன்று நேர்ந்தால் தலைவியின் கதி என்ன? எனவே, இரவுச் சந்திப்பு 
வேண்டாம் – விரைவில் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று தோழி தலைவனை அறிவுறுத்துவாள். இது இரவுக்குறி 
மறுத்தது – வரைவு கடாவியது என்று கூறப்படும். வரைவு என்பது திருமணம். கடாவுதல் என்பது தூண்டுதல். அப்படி அமைந்ததுதான் 
இப்பாடல்.

	தலைவியின் காதல் அவளின் பெற்றோருக்கு இன்னும் தெரியவில்லை. தெரிந்தால், அப்புறம் House arrest தான். அது இற்செறிப்பு 
எனப்படும். தலைவிக்கு இப்போது கண்டிப்பான இற்செறிப்பு இல்லை என்றாலும், அவள் மீது கொண்ட அன்பினால் அவளை நடமாடக்கூட 
அவர்கள் விடுவதில்லை. எனவே தன் உயிர்த்தோழியிடம் அதைச் சொல்லிப் புலம்புகிறாள் தலைவி. எப்படியோ, ஊரின் ஒதுக்குப்புறத்தில் 
தலைவனைச் சந்தித்த தோழி, தலைவியின் நிலையைக் கூறுகிறாள். ‘இரவில் பார்க்க ஏற்பாடு செய்யக்கூடாதா?’ என்று தலைவன் 
வேண்டுகிறான். புலிகளும், காட்டுயானைகளும் மிகுந்திருக்கும் அந்தக் காட்டில், நீ தனியே இரவில் வருவதானால், அதனை நினைத்துப் 
பயந்தே தலைவி தன் உயிரை விட்டுவிடுவாள் என்கிறாள் தோழி. எனவே, ‘இனிமேல் ஒரே வழி, நீ அவளைத் திருமணம் 
செய்துகொள்வதுதான்’ என்று தோழி தலைவனிடம் சொல்லாமல் சொல்லுகிறாள்.

கபிலர் சொல்நயம்

	தாயன்பைச் சொல்லவந்த புலவர் கபிலர், அவள் தன் கண்ணைக்காட்டிலும் தன் மகளை நேசிக்கிறாள் என்கிறார். தன் தங்கையை 
மிகவும் நேசித்த அண்ணன் ஒருவன் அவளை மணமுடித்துக் கொடுக்கும்போது, மணமகனிடம், “ஆனந்தா! என் கண்ணையே உன்னிடம் 
ஒப்படைக்கிறேன்” என்று சொல்லும் திரைப்பட உரையாடல் தமிழகத்தில் பெரும்பாலோர் அறிந்தது. ஆனால், இந்தத் தாய் தன் 
கண்ணைக்காட்டிலும் அதிகமாகத் தன் மகளை நேசிக்கிறாள் என்று சொல்வதன் மூலம், இப்படிப்பட்ட தாயையும் விட்டுவிட்டு உன்னுடன் வர 
அவள் எண்ணினால், அவளின் காதல் எத்துணை ஆழமானது என்பதைத் தோழி சொல்கிறாற்போல் குறிப்பால் உணர்த்தும் புலவரின் திறம் 
வியத்தற்குரியது. தாய் மட்டுமல்ல, தந்தையும் அவ்வாறே என்பதை அடுத்த இரண்டு அடிகளில் புலவர் குறிப்பிடுகிறார். தலைவி எங்காவது 
போவதற்குத் தரையில் காலடி எடுத்துவைத்தாலே தந்தை மனம் பொறுக்கமாட்டார். எங்காவது கல் இடறிவிடுமோ, முள் குத்திவிடுமோ, 
சரளைக்கல் அழுத்திச் சின்னப் பாதங்கள் சிவந்துவிடுமோ என்று அஞ்சுகிறார். “சின்னத்தாயி, எங்கே’மா போற” என்று செல்லமாக 
வினவுகிறார். இந்தச் செல்லப் பேச்சைக் குறிக்க, “இல, குறுமகள்!” என்று தந்தை மகளை அழைப்பதாகப் புலவர் கூறுகிறார். “எல, எங்கல போற” 
என்று கேட்பது இன்றைக்கும் தென்தமிழ்நாட்டு வழக்கு. “எலேய்” என்று சிறுவர்களை அழைப்பது இன்றைக்கும் மதுரை வழக்கு. இவற்றின் 
பண்டைய வடிவம் ‘இல’ என்பதைக் கபிலர் மூலம் அறிகிறோம். மேலும் தந்தை மகளை “குறுமகள்!” என்று அழைக்கிறார். தன் மகள் 
மணப்பருவம் வந்த பின்னரும் அவளை ஒரு குழந்தையாகவே பார்க்கும் தந்தையின் பரிவை எத்துணை சிறப்பாகப் புலவர் வெளிப்படுத்துகிறார் 
பார்த்தீர்களா? தாய் தந்தையர் மட்டுமல்ல, தோழியும் தலைவியிடம் ‘ஈருடல் – ஓருயிர்; என்பது போலப் பழகுகிறாள். இத்தகைய அன்புப்பிடியில் 
சிக்கியிருக்கும் தலைவியின் காதல் அவன் பக்கம் திரும்பியிருக்கிறது என்றால் அவன் எவ்வளவு கொடுத்துவைத்தவன் என்பதைத் தோழியின் 
கூற்றாக அமைத்திருக்கும் கபிலரின் திறம் வியந்து போற்றுதற்குரியது.

கபிலர் வருணனைத் திறம்

	தினைப்புனத்தில் உள்ள கதிர்களைக் கொத்தித் தின்ன வரும் கிளிகள், ஆங்காங்கே கதிர்களின் மேல் அமர்ந்திருக்கின்றன. அவற்றை 
விரட்ட, காவலர் பலவித ஒலிகளை எழுப்புகிறார்கள். இதனால் வெருண்ட கிளிகள் அருகில் உள்ள பலாமரத்தின் பெரிய கிளைகளில் வந்து 
அமர்கின்றன. வந்த கிளிகள் சும்மாவா இருக்கும்? பரபரப்புடன் ஒன்றையொன்று நோக்கித் திரும்பத் திரும்பக் ‘கீச், கீச்’ என்று 
ஒலியெழுப்பிக்கொண்டு இருக்கும் அல்லவா! கிளி விளி பயிற்றும் என எவ்வளவு நுணுக்கமாகக் கிளிகளின் இயல்பைப் புலவர் 
வெளிக்கொணர்கிறார் பார்த்தீர்களா? திடீரென்று ஏற்பட்ட இந்த ஆரவாரத்தால் ஏற்கனவே அங்கிருந்த அணில்கள் அங்குமிங்கும் தாவித்தாவி 
ஓடுகின்றன. இதனையும் மறக்காமல் குறிப்பிடும் புலவர் ‘வெளில் ஆடும் பெரும் சினை’ என்கிறார். வெளில் என்பது அணில். இத்தகைய 
பலாமரத்தில் காய்கள் கொத்துக் கொத்தாக நிறையக் காய்த்துத் தொங்குகின்றன. இதை விழுக் கோள் பலவின் என்ற மூன்றே சொற்களால் 
விளக்கிவிடுகிறார் புலவர். கோள் என்பது குலை, கொத்து. விழு என்பது மிகுதியைக் குறிக்கும். இவை காய்கள் தானே. இவை மரத்திலேயே 
பழுத்தால் குரங்குகள் கடித்துவிடலாம் – பழுத்துக் கீழே விழுந்து வீணாகியும் விடலாம். எனவே இந்தப் பலாக் காய்களைப் பழுக்கவைப்பதற்கென்று 
அங்கே ஒரு சிறு குடிசையை அமைத்திருக்கிறார்கள். இதனைப் பழுப்பயன் கொண்மார் என்கிறார் புலவர். பழுக்க வைத்து அதன் பயனைப் 
பெறுவதற்காக என்பது இதன் பொருள். இந்தக் குடிசை ஒரு வேங்கை மரத்துக்குக் கீழே இருக்கிறது. வேங்கை மரம் பூக்கும் காலம் அது. 
வேங்கையின் மலர்கள் பூத்துப் பின் அந்தக் குடிசையின் கூரையின் மேல் உதிர்ந்து விழுகின்றன. வேங்கையின் பூக்கள் மஞ்சள் நிறத்தவை. இந்த 
மஞ்சள் பூக்கள் உதிர்ந்து கூரையையே மறைத்துவிடுகின்றன (குரம்பை புதைய). இந்த மஞ்சள் கூரையைப் பார்த்த ஒரு யானை அதை ஒரு புலி 
என்று நினைத்து வெருண்டு ஓடியதாம். 

			

	அதெப்படி, புலி மஞ்சள் நிறத்திலா இருக்கும்? மஞ்சள் மேனியை அறுத்து ஓடும் கருநிற வரிகள் இருக்கும் அல்லவா? இது யானைக்குத் 
தெரியாதா என்று கேட்கலாம். கூரையை முழுதும் மறைத்துப் படர்ந்து விழுந்திருக்கும் வேங்கைப் பூக்களினின்றும் பூந்தேன் வழிந்து ஓடுகிறது. 
அது பூக்களை அறுத்துக்கொண்டு ஓடியிருப்பதால், அதனைபே புலியின் வரிகளாக யானை நினைத்து வெருண்டதாம். வேங்கை தாஅய தேம்பாய் 
தோற்றம் என்று எத்துணை கூர்மையான நோக்கமுடைய வருணனையைக் கொடுத்திருக்கிறார் பார்த்திருக்கிறீர்களா? தா என்பதற்குப் படை, 
உருவாக்கு (To create, form, construct) என்ற பொருள் உண்டு. மஞ்சள் மலர்கள் புலியின் நிறத்தைக் கொடுக்க, ஒழுகும் தேன் புலியின் வரிகளைக் 
கொடுக்க, ஒரு புலியின் தோற்றம் அந்த மரத்தால் உருவாக்கப்பட்டது என்பதை நுண்ணிதாகக் கவனித்துக் கூறியிருக்கும் கபிலரின் வருணனைத் 
திறம் போற்றற்பாலது இல்லையா?

கபிலர் உள்ளுறை

	பூக்களைப் பார்த்துப் புலியென நினைத்து யானை வெருண்டோடும் மலையைச் சேர்ந்தவனே என்று தோழி தலைவனை விளிக்கிறாள். 
ஏதேனும் வேண்டாத ஒன்றனுக்கு வீணாக அஞ்சி மிரண்டால், ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்று சொல்லக் 
கேட்டிருக்கிறோம்.  ஒரு பெரிய செல்வர் வீட்டுச் செல்லக் குழந்தையைக் காதலிக்கிறோமே என்ற எண்ணத்தில் அவளின் வீட்டாருக்கு அஞ்சித் 
திரிகிறானோ தலைவன் என்ற ஐயம் தோழிக்கு உண்டு போலும். யானை வீணாக வெருண்டு ஓடுவதைப் போல நீயும் தேவையில்லாமல் 
அஞ்சிக்கொண்டு தயங்கவேண்டாம் என்ற பொருளில் உள்ளுறையாகத் தோழி கூறுகிறாற்போல் கபிலர் இந்த உவமையைப் படைத்திருக்கிறார். 
தரையில் உதிர்ந்து கிடக்கும் பூக்கள் புலிபோல் தோன்றாது. எனவே அதற்கு ஓர் உருவம் கொடுக்க, குடிசைக் கூரையின் மேல் உதிர்ந்து கிடக்கும் 
பூக்கள் என்று சொல்கிறார் புலவர். காட்டுக்குள் குடிசை எப்படி வரும்? எனவே குறவர் அமைத்த குடிசை என்கிறார். குறவர் அங்கு குடிசை ஏன் 
போடவேண்டும்? பலாக் காய்களைப் பழுக்கவைக்க என்கிறார் புலவர். இதுவரை சரி. கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்சினை என்று 
பலாமரத்துக்கு இத்தனை வருணனை எதற்கு? 

	ஏனல் காவல் முடிந்தபின், தலைவியும் அவளின் தோழிகளும் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர். அங்கே அவர்கள் சும்மாவா 
இருந்திருப்பர். பல்லாங்குழி ஆடிக்கொண்டும், பந்து எறிந்து ஓடிக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்திருப்பர். இளம்பெண்கள் கூட்டமாக 
மகிழ்ச்சியுடன் இருக்கும் இடம் எப்படி இருக்கும்? ஒரு பெண்கள் பள்ளியில், விளையாட்டு நேரத்தில், மைதானத்தை (வெளியிலிருந்து) 
எட்டிப்பாருங்கள்! தங்களின் உரத்த கீச்சுக்குரலில் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டும், கேலிசெய்துகொண்டும் அவர்கள் ஆரவாரிக்கும் காட்சி 
பலாமரத்துக் கிளிகள் விளி பயிற்றுவது போலிருக்காதா? இந்த ஆரவாரத்தைக் கேட்டு அங்கு வந்த தந்தையும் அவர்களின் மகிழ்ச்சியில் 
பங்குகொள்வது கிளிச் சத்தத்தைக் கேட்டு அணில் தாவியோடுவது போல் இருக்காதா? அன்பு, பாசம் ஆகியவை அளவில்லாமல் காய்த்துத் 
தொங்கும் பலாமரத்துக் கிளை போன்ற அந்த இனிய இல்லத்தில், இளம்பெண்ணை வீட்டில் வைத்திருக்கிறோமே என்ற எச்சரிக்கைக் காவல் 
உணர்வும், தேன் போல் வழிந்தோடும் அன்பு மொழிகளின் கட்டுப்பாடும், வெளியிலிருந்து பார்க்கும் களிறு போன்ற தலைவனுக்குப் புலியைக் 
கண்டது போன்ற அச்சத்தை மூட்டியிருக்கிறது என்பதைத் தோழி வாயிலாக எவ்வளவு அற்புதமாகப் புலவர் சித்தரித்துக் காட்டுகிறார் பாருங்கள்!. 

	அடுத்து, யானை வெருண்டது என்று சொன்னால் போதாதா? வெரீஇ, மழைபடு சிலம்பின் கழைபடப் பெயரும் என்ற விளக்கம் ஏன்? 
எங்கோ இருக்கும் தினைப்புனத்து வேங்கைப் பூவைக் கண்டு எடுத்த ஓட்டம், மழைபடு சிலம்பு வரைக்கும் நிற்காமல் போயிருக்கிறது. மழை 
என்பது மேகம்; சிலம்பு என்பது மலைச் சரிவு. பொதுவாக யானைகளுக்கு மூங்கில் தளிர் மிகவும் பிடிக்கும். தான் கொண்ட அச்சத்தினால் 
தனக்குப் பிடித்த மூங்கிலையும் அது முறித்துக்கொண்டு செல்கிறதாம். பொய் அச்சம் கொண்டு போய்விட எண்ணும் தலைவன், அவனது 
மனதிற்கினிய தலைவியின் அன்புள்ளத்தை உடைத்துவிட்டுச் செல்கிறான் என்பதையும் தோழி எத்துணை நுணுக்கமாக அவனுக்குப் 
புரியவைக்கிறாள்!