அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 40

பாடல்  40. நெய்தல் திணை    பாடியவர் - குன்றியனார்

துறை - தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழிக் கிழத்தி தோழிக்குச் சொல்லியது..

  மரபு மூலம் - துறைவன் மார்பில் சென்ற என் நெஞ்சே-வாரற்க

	கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
	நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப
	மீனார் குருகின் மென்பறைத் தொழுதி
	குவையிரும் புன்னைக் குடம்பை சேர
5	வசைவண் டார்க்கு மல்குறு காலைத்
	தாழை தளரத் தூக்கி மாலை
	யழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
	காமர் நெஞ்சங் கையறு பினையத்
	துயரஞ் செய்துநம் மருளா ராயினு
10	மறாஅ லியரோ வவருடைக் கேண்மை
	யளியின் மையி னவணுறை முனைஇ
	வாரற்க தில்ல தோழி கழனி
	வெண்ணெ லரிநர் பின்றைத் ததும்புந்
	தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
15	செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை
	யகமடற் சேக்குந் துறைவ
	னின்றுயின் மார்பிற் சென்றவென் னெஞ்சே

 சொற்பிரிப்பு மூலம்

	கானல் மாலைக் கழிப் பூக் கூம்ப
	நீல் நிறப் பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப
	மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
	குவை இரும் புன்னைக் குடம்பை சேர
5	அசை வண்டு ஆர்க்கும் அல்கு_உறு_காலைத்
	தாழை தளரத் தூக்கி மாலை
	அழி_தக வந்த கொண்டலொடு கழி படர்க்
	காமர் நெஞ்சம் கையறுபு இனையத்
	துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
10	அறாஅலியரோ அவர் உடைக் கேண்மை
	அளி இன்மையின் அவண் உறை முனைஇ
	வாரற்க தில்ல தோழி கழனி
	வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
	தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை
15	செறி மடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை
	அக மடல் சேக்கும் துறைவன்
	இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே

அருஞ்சொற் பொருள்:

கானல் = கடற்கரைச் சோலை; கழி = கடலை ஒட்டிய உவர்நீர்ப் பரப்பு, backwaters;  பாடு = ஓசை; ஆர் = விரும்பி உண்; 
குருகு = கொக்கு; மென் பறை = அங்குமிங்கும் குறுகிய தூரம் பறந்து திரிதல்; தொழுதி = கூட்டம்; குவை = திரண்ட; 
இரும் = பெரிய; புன்னை = கடற்கரை மரம், Alexandrian laurel; குடம்பை = இருப்பிடம்;  அசை = தங்கு; 
ஆர்க்கும் = ஆரவாரத்துடன் ஒலிக்கும்; அல்கு = தங்கு; அல்குறு காலை = (உயிரினங்கள் மாலையில் தத்தம்) இருப்பிடங்களுக்கு 
வந்துசேரும் நேரம்; தாழை = கடற்கரை தாவரம், screw pine, Pandanas oderatissima; தூக்கி = அசைத்து; 
அழிதக = நெஞ்சம் வருந்த; கொண்டல் = கிழக்குக் காற்று; கழி படர் = மிகுந்த தியரம்; காமர் நெஞ்சம் = ஆசைகொண்ட நெஞ்சம்; 
கையறுபு = செயலற்று; இனைய = வருந்த; அறாஅலியரோ = அற்றுப்போகாமல் இருக்கக் கடவதாக; கேண்மை = உறவு; 
அளி = கருணை, கனிவு; அவண் = அங்கே; முனைஇ = வெறுத்து; அரிநர் = அறுப்போர்; ததும்பும் = நிறைந்து ஒலிக்கும்; 
தண்ணுமை = உறுமி மேளம்; தடம் = நீண்ட; தாள் = கால்; மடை = மூட்டுவாய்; வயிர் = கொம்பு வாத்தியம்; 
பெண்ணை = பனைமரம்; சேக்கும் = தங்கும்;

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	தலைவன் பொருள்வயின் பிரிந்து சென்றிருக்கிறான். ஒருநாள் மாலை, தலைவி தலைவனை எண்ணி ஏங்கியவண்ணம் 
அமர்ந்திருக்கிறாள். அப்போது தோழி அங்கு வருகிறாள்.

‘என்னம்மா! மனசெல்லாம் எங்கேயோ இருக்கா?’

“ஆமா, இந்த மனசு அந்த மனுசன்கிட்ட சண்ட போடப். போயிருக்கு”

‘என்னன்னு?’

“விட்டுட்டுபோன மனுசனுக்கு வீட்டுக்குத் திரும்பனும்’னு தோணாதோ?-ன்னு”

‘நல்லதாப்போச்சு, வந்தது வந்துட்ட. எங்கூடவே இருந்துரு’ன்னு அந்த மனுசன் சொன்னா என்ன செய்யுமா அது?’

“இரக்கங்கெட்ட ஒன்னோடு இங்க ஒருநாள்கூட இருக்கமாட்டேன்’னு சொல்லிட்டு ……”

“சொல்லிட்டு?? அப்படியே அத்துப்போட்டு வந்துறுமாக்கும்?”

“ஆமா’ல்ல! வேண்டாண்டியம்மா! அத்துப்போடுற ஒறவா இது? பேசாம அங்கேயே இந்த மனசு இருக்கட்டும் – என்ன கஸ்டம்’னாலும்!”

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
	நீல்நிறப் பெரும்கடல் பாடுஎழுந்து ஒலிப்ப
	மீன்ஆர் குருகின் மென்பறைத் தொழுதி
	குவைஇரும் புன்னைக் குடம்பை சேர
5	அசைவண்டு ஆர்க்கும் அல்குஉறு காலைத்
	தாழை தளரத் தூக்கி மாலை
	அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
	காமர் நெஞ்சம் கையறுபு இனையத்

	கடற்கரைச் சோலை மாலைக் காலத்துக் கழியில் இருக்கும் பூக்கள் குவிய,
	நீல நிறப் பெருங்கடலின் ஓசை மிகுந்து ஒலிக்க,
	மீனை உண்ணும் கொக்குகளின் குறும்பறப்புக் கூட்டம்
	திரண்ட பெரிய புன்னை மரத்தின் கூடுகளைச் சென்றடைய,
	(தம் கூடுகளில் வந்து சேரும்)வண்டுகள் மிகுந்து ஒலிக்கும் அடையும்பொழுதில்
	தாழைகள் தளரும்படி அசைத்து, மாலையில்
	நோகும்படி வந்த கீழ்க்காற்றினால் மிகுந்த துன்பம் கொண்ட
	ஆசைகொண்ட நெஞ்சம் செயலற்று வருந்த

	பகல் முழுக்க மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்த பூக்கள் மாலையில் கூம்பத் தொடங்குகின்றன. காலையிலிருந்தே 
‘இன்று தலைவன் வந்துவிடுவான்’ என்று மலர்ச்சியோடு காத்திருந்த தலைவியின் உள்ளம், மாலையாகியும் அவன் 
வராததினால் கூம்பிப்போய்விடுகிறது – கானல் மாலை கழிப் பூக் கூம்புவதைப் போல.

			

	பகல் முழுக்க அமைதியாக இருந்த கடல், மாலையில் அலைகளை எழுப்பி ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறது. 
நாள் முழுதும் பொறுமையுடன் காத்திருந்த தலைவியின் உள்ளம், மாலையாகியும் தலைவன் வராததினால் பொங்கிப் 
பொறுமத்தொடங்குகிறது – நீனிறப் பெருங்கடல் பாடெழுந்து ஒலிப்பதைப் போல.

			

	மீனை மேய்ந்த கொக்குக்கூட்டம் மாலை ஆனதும் தமது வழக்கமான இருப்பிடத்துக்குப் பறந்து செல்கின்றன.
தலைவனைப் பற்றிய எண்ணங்களையே அசைபோட்டுக்கொண்டிருந்த தலைவியின் உள்ளம், மாலையாகியும் தலைவன் 
வராததினால் அவனை நோக்கிப் பாய்ந்து செல்கிறது – குருகின் தொழுதி குடம்பையைச் சேர்வது போல..

			

	பூக்களில் தேனுண்ட வண்டுக்கூட்டம் மாலை ஆனதும் தம் கூட்டுக்கு வந்து கூட்டைச் சுற்றிப் பறந்தவண்ணம் 
ஆரவார ஒலி எழுப்புகின்றன. தலைவனைப் பற்றிய இனிய நினைப்புகளில் மூழ்கிக் கிடந்த தலைவியின் உள்ளம் மாலை 
ஆகியும் அவன் வராததினால் அவனிடம் சென்று அவனையே வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது – 
அசை வண்டு ஆர்ப்பதைப் போல.

			

	மாலையில் கிழக்கிலிருந்து வீசும் காற்று ஓங்கியடித்துத் தாழையின் விழுதுகள் தளர அசைக்கிறது. 
பிரிவினால் எற்பட்ட பெருந்துயரம், மாலை ஆனதும் தலைவியின் ஆற்றியிருக்கும் உள்ளத்தை அசைத்துப் பார்க்கிறது –
தாழை தளரத் தூக்கும் கொண்டலைப் போல.

			

	அழிதக வந்த கொண்டலொடு என்ற தொடரில், அழிதக என்பதற்கு வருந்த என்று பொருள். ‘யார் வருந்த அல்லது 
எது வருந்த?’ என்று கேட்டால், கழிபடர்க் காமர் நெஞ்சம் என்று புலவர் அடுத்த அடியில் பதிலை வைத்திருக்கிறார். ஏற்கனவே 
இந்த நெஞ்சம் அவன்மீது ஆசைகொண்டு (காமர் நெஞ்சம்) அலைமோதிக்கொண்டு இருக்கிறது. அந்த ஆசையின் விளைவாக 
ஏற்பட்ட துன்பம் மிகுந்துகொண்டே போகிறது(கழி படர்). இப்போது இந்த மாலைநேரக் கொண்டல் வேறு வந்து மனதை 
வாட்டுவதால், நெஞ்சம் செய்வதறியாமல் (கையறுபு) தடுமாறி நிற்கிறது (இனைய). எனவே அழிதக என்பதனை அடுத்துவரும் 
அடியில் உள்ள நெஞ்சத்துடன் தொடர்புபடுத்த வேண்டும். 

	மாறாக, அழிதக என்பதை ஏற்கனவே சொல்லப்பட்ட பொருள்களுக்கும் கொள்ளலாம். (மலர்ந்த)கழிப்பூ கூம்ப, 
(அமர்ந்த)பெருங்கடல் ஒலிக்க, அகன்ற கடலில் மென்பறையாய்த் திரிந்த குருகு குவையிரும் புன்னையின் குடம்பையில் சேர, 
சுற்றித்திரிந்த வண்டுகள் ஒரே கூட்டில் சூழ்ந்து மொய்த்திருக்க, தள்ளாடும் தாழைகளின் விழுதுகளும் ஆட்டங்கொடுக்க – 
இவ்வாறு அத்தனையும் அழிதக வந்தது கொண்டல் என்றும் பொருள்கொள்ளலாம்.

	அல்லது, பூவும், கடலும், குருகும், வண்டும், தாழையும் அழிதக வந்த கொண்டல், காமர் நெஞ்சமும் அழிதக வந்தது 
என்றும் பொருள் கொள்ளலாம்.

	துயரம் செய்துநம் அருளார் ஆயினும்
10	அறாஅ லியரோ அவர்உடைக் கேண்மை

	நமக்குத் துன்பம் விளைவித்து (அது தீர)நம்மீது அருள்கூராராயினும்
	அற்றுப்போகாதிருப்பதாக அவருடைய நட்பு
	
	காமர் நெஞ்சம் கையற்று இனையுமாறு தலைவன் செய்த துயரம்தான் என்ன? தலைவியைவிட்டுப் பிரிந்து 
சென்றதுதான். இத்துணை துயரம் செய்தவருக்கு நம் மீது அருள் இருக்குமா? அருள் இல்லாமல் துயரம் செய்தவர் இப்போதாவது 
சீக்கிரம் திரும்பி வந்து அருள்செய்யக்கூடாதா? அதுவும் இல்லை. இனி அவரைப் பற்றிய நினைப்பையே அறுத்துவிடவேண்டும் – 
அவரிடம் சென்ற நெஞ்சமே! அவர் தொடர்பை அறுத்துக்கொண்டு வந்துவிடு என்று சொல்ல நினைக்கிறாள் தலைவி. வந்த 
அக் கணமே அந்த நினைப்பை அவள் அறுத்து எறிகிறாள். நம் அருளார் ஆயினும் அறாலியர் என்கிறாள் தலைவி. அவருடைய 
உறவு நம்மை விட்டு என்றும் நீங்காமலிருப்பதாக என்கிறாள் தலைவி. 

			

	அளிஇன் மையின் அவண்உறை முனைஇ
	வாரற்க தில்ல தோழி 

	(அவரிடம்) கருணை இல்லாததால் அவ்விடத்தில் தங்குதலை வெறுத்து,
	(திரும்பி)வராமல் இருப்பதாக, தோழி-

	அவருக்குத்தான் நம்மீது கருணையே இல்லையே! அப்புறம் எதற்கு அவருடைய உறவு? என்று நெஞ்சம் கேட்குமோ 
என்று எண்ணிய தலைவி, “அவரிடம் கருணை இல்லாததினால் அங்கே தங்குவதை வெறுத்துத் திரும்பி வந்துவிடாதே 
நெஞ்சமே” என்கிறாள். 

				கழனி
	வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
	தண்ணுமை வெரீஇய தடம்தாள் நாரை
15	செறிமடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை
	அகமடல் சேக்கும் துறைவன்
	இன்துயில் மார்பில் சென்றஎன் நெஞ்சே

	வயல்வெளிகளில்
	வெண்ணெல்லை அரிவோரின் பின்னே நிறைந்து ஒலிக்கும்
	தண்ணுமைப் பறையின் ஓசைக்கு அஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை
	செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றிப் பனைமரத்தின்
	அகமடலில் தங்கும் கடல்துறையில் வாழும் தலைவனது
	இனிய துயில் கொள்ளத்தக்க மார்பினை எண்ணிச் சென்ற என் நெஞ்சமே.

	கழனியில் கதிரறுப்பு நடக்கும்போது குருவி, புறா, காக்கை, கிளி போன்ற பறவைகள் அச்சமின்றி அருகில் வந்து 
செல்லும் – நெல்மணிகளைக் கொத்தித் தின்னவும், நெற்கதிர் இழைகளை எடுத்துச் செல்லவும். அவற்றால் பேரிழப்பு 
ஏற்படாதெனினும் பறவைக் கூட்டம் தொழில்செய்வோருக்கு மிகுந்த இடைஞ்சலாய் இருக்கும். எனவே அவற்றை விரட்ட 
தண்ணுமை கொண்டு ஒலியெழுப்புவர். தண்ணுமை என்பது ஒருவகை நீள் மத்தளம். ஒரு வளைவான கோலால் மேலும் 
கீழுமாய் ஒரு முகப்பை அழுத்தி இழுப்பர் (படத்தில் இடது கை). மற்றொரு வளைகோல் அல்லது நேர்கோலால் அடுத்த 
முகப்பைத் தட்டுவர்(படத்தில் வலது கை). ‘டுவுண் டுவுண் டா, டுவுண் டுவுண் டா” என்று எழும்பும் அந்த ஓசையையே 
புலவர் ததும்பும் ஓசை என்கிறார்.

			

	இதைப் பார்த்துக் கேட்டுக் களிக்க கீழ்க்கண்ட தளத்துக்குச் செல்லுங்கள் .

	http://www.youtube.com/watch?v=8Uy7uBbPxeg&feature=player_embedded

	இந்தத் தண்ணுமை ஒலியைக் கேட்டு அங்கிருந்த ஒரு நாரை வெருண்டு பறந்து சென்றதாம். நாரை 
நெல்மணிகளைத் தின்னாது. எனவே அதை விரட்ட யாரும் முனைய மாட்டார்கள். அதுபாட்டுக்கு மீனைப் 
பிடித்துக்கொண்டிருந்தாலும் யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை. இருப்பினும் இந்த நாரை அந்த ஒலியைக் கேட்டு 
அஞ்சுகிறது. தன்னுடைய நீண்ட கால்களைத் தரையில் ஊன்றி மிதித்து உயரே எழுகிறது. தன்னுடைய கரகரப்புக் குரலை 
எழுப்பிக் கத்துகிறது. மிகவும் பத்திரமான இடத்துக்குச் செல்லவேண்டும் என்ற உள்ளுணர்வின் காரணமாக, உயரமான 
ஒரு பனைமரத்துக்குச் செல்கிறது. பொதுவாக நாரைகள் பறந்து வந்து மரத்தின் உச்சியில் அமரும். இங்கே பனைமரத்தின் 
உச்சியில் அமர்வது எப்படி? எனவே நீட்டிக்கொண்டிருக்கும் பனைமடலின் உள்ளே சென்று நாரை அமர்கிறது.

			

	தண்ணுமை ஒலியைக் கேட்டவுடன் நாரை அச்சத்துடன் ஒலி எழுப்புகிறது. நாரையின் ஒலி கேட்பதற்கு 
இனிமையாக இருக்காது. சற்றுக் கடூரமான குரலில் எழுப்பும் நாரையின் ஒலி, கொம்பு வாத்தியம் ஊதுவதைப் போல் 
இருப்பதாகப் புலவர் கூறுகிறார். விலங்குகளின் வளைந்த கொம்பை நன்கு பதப்படுத்தி, அதன் குறுகிய வாயில் 
ஒரு மடையைச் செருகி, அந்த மடையில் வாய்வைத்து ஊதுவார்கள். ஏரிகளிலிருந்து நீரைச் சீராக வெளிக்கொணர்வது மடை. 
அதன் திறப்பு அளவைப் பொருத்து நீரின் அளவும் வேகமும் மாறும். அதைப் போலவே, தொண்டையிலிருந்து வாய் வழியாக 
வரும் ஒலியைச் சீராகக் கொம்புக்குள் அனுப்ப கொம்பின் சிறிய வாயில் இந்த மடை செருகப்படுகிறது. இதன் 
திறப்பு அளவைப் பொருத்து வெளிவரும் காற்றின் ஒலிப்பு மாறும். இந்தக் கொம்பின் ஒலியும் யானை பிளிற்றுவதைப் போல் 
இருக்கும் என்று உணர்த்தவந்த புலவர் வயிரின் பிளிற்றி என்கிறார்.

			

	ஆக, நாரை, கொம்பு வாத்தியம், யானை ஆகிய மூன்றுமே ஒரே மாதிரியான குரலை எழுப்பும் என அறிகிறோம். 

உள்ளுறை உவமம்

	பாடலின் தொடக்கத்தில் ஓர் இனிய மாலைப் பொழுதின் காட்சிகளைப் புலவர் காண்பிக்கிறார். கழிப்பூ கூம்ப, கடல் 
ஒலிப்ப, குருகு குடம்பை சேர, வண்டுகள் அசைய என மாலைநேரக் காட்சிகளை நெய்தலின் இரங்கலுக்குப் பொருத்தமான 
ஒரு பின்னணியமாகப் புனைகிறார் ஆசிரியர். ஆனால், பாடலின் இறுதியில் அவர் கூறும் நாரைக் கதை எதற்கு? இதுதான் 
தலைவி கூற்றில் உள்ள உள்ளுறை உவமம்.

	ஓர் ஊரில் ஒரு பெரிய மனிதர் இருக்கிறார். மதிப்பாக உடை அணிந்துகொண்டு அவர் தெருவில் நடந்தால் எதிரே 
வருபவர் ஒதுங்கிநின்று வணங்கிச் செல்வர். ஆனால் அவருக்கு உள்ளுரில் ஒரு இரகசியத் தொடுப்பு. தெரிந்தும் 
தெரியாததுபோல் இருக்கிறது ஊர். ஆனால் ஒரு கிழவிக்கு இவர் மேல் கோபம். அவளுக்கு இவரிடம் என்ன பயம்? அவர் 
ஒருநாள் அந்தப் பக்கம் வரும்போது, வெளித்திண்ணையில் கால்நீட்டி வெற்றிலை இடித்துக்கொண்டிருந்த கிழவி கூறுகிறாள், 
“ஹூம், ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்! உள்ளே இருக்கிறது ஈரும்பேனாம்!” இதுதான் உள்ளுறை உவமம் – 
தமிழ் மக்கள் வாழ்க்கைக்கு இனிமையும் ஆழமும் சேர்க்கும் பேச்சு முறை. 

	இங்கே தலைவியும் இதைப் போலவே சாடைமொழி தன்னைப்பற்றியே கூறுகிறாள். 

	வெண்ணெல் அரிநர் தண்ணுமை ஒலிப்பது நெல்மணியைப் பொறுக்கவரும் பறவைகளை விரட்ட – 
	குடும்பத்தலைவன் பிரிந்து சென்றிருப்பது வீட்டில் இன்மை என்னும் பற்றாக்குறையை விரட்ட. 

	தண்ணுமை ஒலி கேட்டு, நாரை ஏன் அஞ்சிப் பறக்கவேண்டும்? 
	பிரிந்திருக்கும் தலைவனை எண்ணி நெஞ்சம் ஏன் அவனிடம் விழுந்தடித்து ஓடவேண்டும்? 

	பறந்து சென்ற நாரை, வசதியற்ற பனைமரத்துக்குச் செல்கிறது. 
	விரும்பிச் சென்ற நெஞ்சம் தலைவன் வாழும் வேற்றுநாட்டுக்கல்லவா விரைந்துசென்றிருக்கிறது. 

	பனைமரத்து நாரை அங்கேயா இருந்துவிடப்போகிறது? அவண் உறை முனைஇ, அது திரும்பவும் கழனிக்கே 
திரும்பலாம். 

	ஆனால், அங்குச் சென்ற நெஞ்சமே, நீ அவண் உறை முனைஇ வாரற்க தில்ல என்கிறாள் தலைவி. காரணம், 
என் தலைவனின் மார்பு, பனைமரத்து அகமடல் போல – அது இன் துயில் மார்பு எனப் பெருமிதம் கொள்கிறாள் அவள். 

			

அருஞ்சொல் விளக்கம்

1. மென்பறை.

	கழியில் ஆழமற்ற பகுதியில் நின்றவண்ணம் கால்களுக்கு இடையே ஓடும் மீன்களைக் கொக்குகள் 
கொத்தித்தின்னும். சில சமயங்களில் நீருக்குள் ஓடும் மீன்களை விரட்டியும் கொத்தி எடுக்கும். இவ்வாறு செய்யும்போது 
ஓரிடத்தில் மீன்கள் அருகிப்போனால், கொக்குகள் சற்றுத் தள்ளிச் சென்று அங்கு மீன் பிடிக்கப் பறந்து செல்லும். அவ்வாறு 
ஒரு குறுகிய தொலைவுக்குக் கொக்குகள் பறந்து சென்று வேறோர் இடத்தில் அமர்வதையே மென்பறை என்பர். பறை 
என்பது பற என்ற சொல்லை அடியாகக் கொண்டது. இதற்குப் பறத்தல் என்று பொருள். பறத்தலுக்கு உதவும் சிறகுகளையும் 
பறை என்று சொல்வது வழக்கம். எனவே மென்பறை என்பதற்கு மெல்லிய சிறகுகள் என்றும் பொருள் கூறப்படுகிறது. 
கொக்குகளின் சிறகுகள் முரடானவை. எனவே இங்கு மென்பறை என்பதற்குக் குறுகிய பறத்தல் எனப் பொருள்கொள்வதே 
சிறப்பு எனத் தோன்றுகிறது.

	பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி - நெடு 15

	என நெடுநல்வாடை கூறுகிறது. இதற்கும் மெல்லிய சிறகு, குறும் பறத்தல் எனப் பொருள்கொள்ளப்படுகிறது.

	அம் சிறை வண்டின் மென்பறைத் தொழுதி – அகம் 234/12 

	என்ற அகநானூற்றுப் பாடலில் சிறை என்பது சிறகு என்றான பின், பறை என்பது பறத்தல் என்றே 
பொருள்தரவேண்டும். வண்டுகள் தேன் குடிக்கும்போது, மலர்விட்டு மலர்தாவிக் குறுகப் பறந்து செல்லும். அதனையே 
மென்பறை என்கிறார் புலவர். இதுவே மீன் பிடிக்கும் குருகுகளுக்கும் ஆகும்.

			

2. அல்கு VS சே

	அசை வண்டு ஆர்க்கும் அல்குறு காலை – 
	அசைகின்ற வண்டுகள் ஒலிக்கும், எல்லாம் தம் பதிகளிலே சென்று தங்கும் காலமாகிய
	
	பெண்ணை அகமடல் சேக்கும் – 
	பனைமரத்தின் மடலகத்தே தங்கும்.

	இங்கு அல்கு, சே என்ற இரு சொற்களுக்கும் தங்கு என்ற பொருள் கொள்ளப்படுகிறது. இரண்டுக்கும் உள்ள 
வேறுபாடு என்ன? இதற்கு, இவ்விரண்டு சொற்களும் கையாளப்பட்டிருக்கும் பல்வேறு சூழ்நிலைகளை ஆயவேண்டும்.

	அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி – மலை 158
	கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும் – நற். 85/5
	அரிமடப் பிணையொடு அல்கு நிழல் அசைஇ – குறு 338/2
	எல் விருந்து அயர ஏமத்து அல்கி – அகம் 187/13
	கானம் மேய்ந்து வியன்புலத்து அல்கும் புல்வாயிரலை – புறம் 374/1,2

	என்ற அடிகளிலிருந்து அல்குதல் என்பது ஓய்வெடுத்தல், ஓய்வாகத் தங்குதல் – குறிப்பாக இரவு நேரத் தங்கல் 
என்ற பொருள் தரும் எனப் பெறப்படுகிறது.

	சே என்பது ஒரு தற்காலிகமான தங்கல். அதுவும் அவசரத்துக்குத் தேடிப்போய் அடைக்கலமாய்த் தங்குதல். 

	காடைகள், தமது முறையான இருப்பிடமான தினைப்புனத்தினின்றும் கதிரறுப்போரால் விரட்டப்பட்டு, பக்கத்துக் 
காட்டில் புகுவதைக் கட்சி சேக்கும் என்கிறார் புலவர். கட்சி என்பது காடு.

	தொடுப்பெறிந்து உழுத துளர்படு துடவை
	அரிபுகு பொழுதின் இரியல் போகி
	வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
	வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்கால்
	கறையணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 202-205

	வழிப்போக்கர்கள், இராத்தங்கலுக்கு, புலிகள் விட்டுச்சென்ற குகைகளில் ஒருநாள் இரவைக் கழிக்கச் செல்வதைக் 
கல் அளை சேக்கும் மாக்கள் என்கிறார் ஒரு புலவர்.

	ஒலிகழை நிவந்த ஓங்குமலைச் சாரல்
	புலிபுகா உறுத்த புலவுநாறு கல் அளை
	ஆறுசெல் மாக்கள் சேக்கும் – குறுந்.253/5-7

	கடற்காக்கை, தனது வழக்கமான குடியிருப்பான ஞாழல் மரங்களை விட்டு, ஒரு மாறுதலுக்கு, அருகில் உள்ள 
புன்னைமரத்துக்குச் செல்வதை ஞாழல் முனையின் புன்னை சேக்கும் என்கிறார் இன்னொரு புலவர்.

	பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
	ஒள்ளிணர் ஞாழல் முனையின் பொதியவிழ்
	புன்னைஅம் பூஞ்சினைச் சேக்கும் – ஐங்.169/1-3

	முனிவர்கள் யாகம் செய்யும் புகையை வெறுத்த குயில்கள், தம் உறைவிடத்தை விட்டகன்று, அருகில் உள்ள 
புறாக்கூடுகளில் சேரும். துச்சில் என்பது தற்காலிக ஓய்விடம் - temporary abode.

	அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
	ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம்
	மாயிரும் பெடையோடு இரியல் போகிப்
	பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
	தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும் – பட்.54-58

	எனவே, சே என்பது ஒரு அவசரத்தேவையை முன்னிட்டு, தற்காலிகமாக ஓரிடத்தில் தங்குதல் என்பது பெறப்படும்.