அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 21

பாடல்  21. பாலைத் திணை    பாடியவர் - காவன்முல்லைப் பூதனார்

துறை - பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்து நின்று மீளலுற்ற 
                                    நெஞ்சினைக் கழறியது.

  மரபு மூலம் - எழு இனி வாழிய நெஞ்சே

	மனையிள நொச்சி மௌவல் வான்முகைத்
	துணைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்
	லம்வயிற் றகன்ற வல்குற் றைஇத்
	தாழ்மென் கூந்தற் றடமென் பணைத்தோள்
5	மடந்தை மாணலம் புலம்பச் சேய்நாட்டுச்
	செல்ல லென்றியான் சொல்லவு மொல்லாய்
	வினைநயந் தமைந்தனை யாயின் மனைநகப்
	பல்வேறு வெறுக்கை தருகம் வல்லே
	யெழுவினி வாழியென் னெஞ்சே புரியிணர்
10	மெல்லவி ழஞ்சினை புலம்ப வல்லோன்
	கோடறை கொம்பின் வீயுகத் தீண்டி
	மராஅ மலைத்த மணவாய்த் தென்றல்
	சுரஞ்செல் மள்ளர் சுரியற் றூற்று
	மென்றூழ் நின்ற புன்தலை வைப்பிற்
15	பருந்திளைப் படூஉம் பாறுதலை யோமை
	யிருங்கல் விடரகத் தீன்றிளைப் பட்ட
	மென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பைங்கண்
	செந்நா யேற்றை கேழல் தாக்க
	விரியற் பிணவற் றீண்டலின் பரீஇச்
20	செங்கா யுதிர்ந்த பைங்குலை யீந்தின்
	பரல்மட் சுவல முரணில முடைத்த
	வல்வாய்க் கணிச்சிக் கூழார் கூவல
	ரூறா திட்ட வுவலைக் கூவல்
	வெண்கோடு நயந்த வன்பில் கானவ
25	ரிகழ்ந்தியங் கியவி னகழ்ந்த குழிசெத்
	திருங்களிற் றினநிரை தூர்க்கும்
	பெருங்கல் லத்தம் விலங்கிய காடே

 சொற்பிரிப்பு மூலம்

	மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
	துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்,
	அம் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
	தாழ் மென் கூந்தல், தட மென் பணை தோள்,
5	மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
	செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய்!
	வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நகப்
	பல் வேறு வெறுக்கை தருகம்! வல்லே
	எழு இனி வாழி என் நெஞ்சே! புரி இணர்
10	மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன்
	கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
	மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்
	சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்
	என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்
15	பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை
	இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்ட
	மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண்
	செந்நாய் ஏற்றை கேழல் தாக்க
	இரியல் பிணவல் தீண்டலின் பரீஇச்
20	செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின்
	பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
	வல் வாய்க் கணிச்சி கூழ் ஆர் கூவலர்
	ஊறாது இட்ட உவலைக் கூவல்
	வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
25	இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து
	இரும் களிற்று இன நிரை தூர்க்கும்
	பெரும் கல் அத்தம் விலங்கிய காடே

அடிநேர் உரை 
	
	இளமையான, வீட்டு நொச்சிச் செடியில் (படர்ந்த) காட்டுமுல்லையின் வெள்ளிய மொட்டுகளை
	இரண்டிரண்டாய் வரிசையாக வைத்ததைப் போன்ற, வண்டுகள் விரும்பும் வெள்ளைப் பற்கள்,
	அழகிய வயிறு, அகன்ற அல்குல், அலங்கரிகப்பட்ட
	தாழ்ந்த மெல்லிய கூந்தல், பருத்த மெல்லிய மூங்கில்(போன்ற)தோள்கள்(கொண்ட)
5	தலைவியின் மாட்சிமையுடைய பெண்மைநலம் தனிமையில் வருந்த, தொலை நாட்டுக்குச்
	செல்லவேண்டாம் என்று யான் சொல்லவும் (அதற்கு) உடன்படாமல்
	பொருளீட்டும் செயலை விரும்பி இருந்தாய்; ஆதலால், (நம்) இல்லம் பொலிவுற
	பலவித வேறுபட்ட செல்வத்தை ஈட்டிக் கொணர்வோம் – விரைவாக
	எழுவாயாக இனி, வாழ்க என் நெஞ்சே! புரி போல் சுருண்ட பூங்கொத்துகள்
10	மெல்ல மலரும் அழகிய கிளைகள் வறிது ஆகுமாறு, வலியவன் ஒருவன்
	கிளையின் உச்சியை அடிக்கும் கோல் போன்று, மலர்கள் உதிரத் தாக்கி
	மரா மரத்தை அலைக்கழித்த மணம் வாய்க்கப்பெற்ற தென்றல்
	பாலைவழியில் செல்லும் மள்ளரின் சுருள்முடியில் (அம் மலர்களைத்)தூவிவிடும்-
	வெப்பம் நின்று காயும் புல்லிய இடங்களில் உள்ள ஊர்களையுடைய -
15	பருந்து அடைகாக்கும் பரட்டைத்தலை ஓமை மரங்களையுடைய -
	பெரிய பாறைகளின் இடுக்கில் ஈன்று படுத்திருக்கும்
	மெலிந்த ஈன்றணிமையுடைய அழகிய பெண்நாய் பசியுற்றது என, பசிய கண்ணை உடைய
	ஆண் செந்நாய் ஆண் காட்டுப்பன்றியைத் தாக்க,
	பதறியோடும் பெண்பன்றி உராய்தலால் சிதறி,
20	செங்காய்கள் உதிரும் பசுங்குலைகளைக் கொண்ட ஈந்தின்
	விதைகள் பரவிய மண் மேடுகளான கட்டாந்தரையை உடைத்த
	வலிய வாயையுடைய கோடலியையுடைய கூழ் குடிக்கும் கிணறுதோண்டுவோர்
	(நீர்) ஊறாமையால் விட்டுவிட்டுச் சென்ற சருகுகள் நிறைந்த பள்ளங்களை,
	தந்தங்களை விரும்பிய கடின மனம் படைத்த கானவர்
25	எளிதாக எண்ணி நடக்கும் வழிகளில் தோண்டிய குழிகள் என்று எண்ணி
	பெரிய ஆண்யானையைக் கொண்ட யானைக்கூட்டம் தூர்க்கும் -
	பெரிய பாறைகளைக் கொண்ட பாலைநிலம் முன்னர்நிற்கும் இக் காட்டினில் (செல்ல).

அருஞ்சொற் பொருள்:

நொச்சி = வீட்டு வேலியாக வளர்க்கும் காட்டுச் செடி; மௌவல் = காட்டு முல்லை; வால் = வெண்மை; மா = வண்டு; 
வீழ் = விரும்பும்; வெறுக்கை = பெருஞ்செல்வம்; என்றூழ் = சூரியன், வெப்பம்; பாறு = அழிந்து பரவிக்கிட; 
ஓமை = காட்டு மரம்; விடரகம் = மலைப் பள்ளம்; கேழல் = காட்டுப்பன்றி-ஆண்; பிணவல் = காட்டுப்பன்றி-பெண்; 
ஈந்து = காட்டு ஈச்ச மரம்; பரல் = விதை; சுவல் = மேட்டு நிலம்; கணிச்சி = குந்தாலி; உவலை = தழை, சருகு; 
கூவல் = கிணறு; இயவு = வழி; 

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்துசெல்லும் தலைவன் பாதிவழியில் மனக்குழப்பத்துக்கு 
ஆளாகிறான். இதனை அவனது மனதுக்கும் நெஞ்சுக்கும் நடைபெறும் போராட்டமாகச் சித்திரிக்கிறார் புலவர். பிரிவைப் பற்றிக் 
கூறும் இப் பாடலில் இருங்கல் விடரகம், பரல் மண் சுவல முரண் நிலம், பெருங்கல் அத்தம் ஆகிய நிலங்களும், என்றூழ் நின்ற 
புன்தலை வைப்பு என்று நண்பகலாகிய பொழுதும் பின்புலமாக அமைந்துள்ளன. மராம், மள்ளர், பருந்து, ஓமை, செந்நாய், கேழல், 
பிணவல், ஈந்து ஆகிய கருப்பொருள்கள் பாலைத்திணை என்ற தாக்கத்தை (effect) முன் நிறுத்துகின்றன. 

	தலைவியுடன் இனிமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் தலைவன் பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை கொள்கிறான். 
உணர்வுகளின் பிறப்பிடமாகிய நெஞ்சு தலைவனை இவ்வாறு தூண்டுகிறது. நல்ல உணவு, சிறந்த உடை, வீடு நிறைய அலங்காரப் 
பொருள்கள், கூடுதல் வசதிகள் என்ற பல்வேறு சிறப்புகளைப் பெற்றால் (பல்வேறு வெறுக்கை) குடும்ப வாழ்வு பொலிவுபெற்றுத் 
திகழும் (மனை நக) என்று நெஞ்சு ஆசைகாட்டுகிறது. ஆனால், தலைவியை இதற்காகப் பிரிந்து சென்றால் அவள் பிரிவுத்துயரால் 
ஆட்கொள்ளப்பட்டு தனது பொலிவை இழந்துவிடுவாளே – அவளுடைய முல்லைப்பூப் போன்ற (மௌவல் வால் முகை .. வெண்பல்)
 பற்கள் தம் முறுவலை இழக்குமே! -  அழகிய வயிறு (அவ் வயிறு) சரியாக உணவருந்தாமல் ஒட்டிப்போய்விடுமே! – 
பெரிய பின்புறம் (அகன்ற அல்குல்) வாட்டத்தினால் சிறுத்துப்போய்விடுமே! – பின்னலுற்று நீண்டு தாழ்ந்திருக்கும் கூந்தல் 
(தைஇத் தாழ் மென் கூந்தல்) பேணப்படாமல் பரட்டையாய்ப் போய்விடுமே! – உருண்டு திரண்ட மென்மையான மூங்கில் போன்ற 
தோள்கள் (தட மென் பணைத் தோள்) உருமாறிப்போய்விடுமே! (மடந்தை மாண் நலம் புலம்ப) – எனவே தொலைதூரத்துக்கு 
அவளை விட்டுப் பிரியவேண்டாம் (சேய்நாட்டுச் செல்லல்) என்று தலைவனின் மனம் வாதாடிப் பார்க்கிறது. நெடுநேரம் வாதாடியும் 
நெஞ்சம் கேட்கவில்லை (யான் சொல்லவும் ஒல்லாய்). எனவே தலைவன் பொருளீட்டப் பிரிந்து செல்கிறான். பாதி வழியில் – 
அதுவும் பாலைநிலத்து நட்ட நடுக்காட்டில் – நெஞ்சம் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறது. இனிமேல் ஒரு எட்டுக்கூட 
எடுத்துவைக்க முடியாது என்று அங்கேயே அமர்ந்துவிடுகிறது. வம்படியாக அதன் கையைப் பிடித்துத் தூக்க முயல்கிறது மனம். 
“எழுந்திரு, நல்ல பிள்ளையல்லவா!” (எழு இனி வாழி என் நெஞ்சே!) என்று தாங்குகிறான் தலைவன். “நீ சொன்னவாறே, 
வீடு பொலிவுபெற, பலவித செல்வங்களையும் ஈட்டி வருவோம் – சீக்கிரம் வா” (மனை நகப் பல்வேறு வெறுக்கை தருகம், 
வல்லே எழு” என்று தலைவன் சொல்வதாகப் பாடல் அமைந்துள்ளது.

பாடல் விளக்கம்

	மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
	துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்
	அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇத்
	தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள்
5	மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டுச்
	செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய்

	அழகிய, சிறிய, எளிமையான வீடு. வீட்டைச் சுற்றி நிறைய இடம். அதற்கு எல்லையாக, நொச்சி வேலியாய் 
வளர்ந்துள்ளது. திருமணத்துக்குப் பின் கட்டப்பட்ட புது வீடு. எனவே வேலி நொச்சி பெரிதாகாமல் இளஞ்செடியாகவே இருக்கிறது 
(மனை இள நொச்சி). புதுமணப்பெண் அல்லவா! மாலைநேரத்தில் தலைநிறையப் பூவைக்க, வீட்டைச் சுற்றி காட்டு முல்லைச் 
செடியை வளர்க்கிறாள் தலைவி. அது வளர்ந்து அந்த நொச்சிச் செடிகளின் மீது படர்ந்திருக்கிறது.  அதன் வெண்மொட்டுகள் 
தலைவியின் வெண்பற்களைப் போல் சிரிக்கின்றன. சிறுத்த இடை - பெருத்த அல்குல் - அதுவரை தாழ்ந்து விழுந்து புரளும் 
மெல்லிய கூந்தல் - திரண்ட, மென்மையான மூங்கில் போன்ற தோள்கள் – என அழகுப் பாவையாய் அங்கு வலம்வருகிறாள் 
தலைவி. இந்த நிலையில், இன்னும் சிறந்த வாழ்வினை அமைக்க நெஞ்சுக்கு ஆசை வருகிறது. “வேண்டாம், தலைவி 
தனிமையைத் தாங்கமாட்டாள். அவள் மேனி நலம் கெடும். வெளியூர்ப் பயணம் வேண்டாம்” என்று தலைவன் எடுத்துக் கூறியும் 
நெஞ்சம் அதனைக் கேட்கவில்லை.

	வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நகப்
	பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே
	எழு இனி வாழி என் நெஞ்சே --

	(நெஞ்சத்தின் தொணதொணப்பைப் பொறுக்கமாட்டாத தலைவன் பொருளீட்டப் புறப்பட்டுச் செல்கிறான். 
பாதி வழியில் நெஞ்சம், “வீட்டுக்குச் செல்லலாம்” என்று அடம்பிடித்து அங்கேயே உட்கார்ந்துவிடுகிறது.  
“இதோ பார், நான் சொல்வதைக் கேட்டு, என் செயலுக்கு உடன்பட்டால், வீடு சிறக்கும், பல்வித செல்வங்கள் ஈட்டலாம். 
சீக்கிரம் எழுந்திரு, நல்ல பிள்ளையாய் நடந்துகொள், என் நெஞ்சே” எனத் தலைவன் நெஞ்சத்திடம் எடுத்துக் கூறுகிறான்.

		-- புரி இணர்
10	மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன்
	கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி
	மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்
	சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்
	என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்

	(அதனை அடுத்து, தலைவன் தான் செல்லவிருக்கின்ற வழியைப் பற்றிப் பேசுகிறான்). மரா மரத்தின் கிளைகளில் 
சுருண்டு கிடக்கும் மலர்க்கொத்துகள் (புரி இணர்), தளையவிழத் தொடங்கியுள்ளன (மெல் அவிழ்). மெல்லிதின் வீசிய தென்றல் 
சற்று வேகமாக வீசி, அந்தக் கிளைகளை மோதித் தாக்குகிறது (தீண்டி). வலிய கைகளையுடைய ஒருவன், ஒரு பெரிய கழியால் 
அந்தக் கிளையை ஓங்கித் தட்டியதைப் போன்று (வல்லோன் கோடு அறை கொம்பின்), கிளைகளினின்றும் பூக்கள் உதிர்கின்றன 
(வீ உக).  உதிர்ந்த பூக்களால் அந்தத் தென்றலே மணம்பெறுகிறது (மண வாய்த் தென்றல்). அப்போது அந்த வழியே 
சென்றுகொண்டிருக்கும் போர்மறவரின் சுருட்டைத் தலையில் அந்தப் பூக்கள் சொரிகின்றன (சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்). 
அந்த வழியில் வெப்பம் மிகுந்த வறண்ட சுற்றுப்புறத்தைக் கொண்ட சிற்றூர் ஒன்றும் உண்டு (என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்). 

15	பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை
	
	(அந்த சிற்றூர்ப்புறத்தில்) ஓமை மரங்கள் நிற்கின்றன. இலைகள் எல்லாம் உதிர்ந்துபோய், நாலாபுறமும் 
நீட்டிக்கொண்டிருக்கும் காய்ந்த குச்சிகளைக் கொண்டு, பரட்டைத் தலையாய் (பாறு தலை)நிற்கும் அந்த ஓமைமரங்களின் உச்சியில் 
பருந்து கூடுகட்டி, முட்டையிட்டு, அடைகாத்துப் படுத்திருக்கிறது.

			
			http://leesbird.com/2010/05/                            www.flickr.com

	இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்ட
	மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண்
	செந்நாய் ஏற்றை கேழல் தாக்க
	இரியல் பிணவல் தீண்டலின் பரீஇச்
20	செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின்
	பரல் மண் சுவல --

	அந்த ஓமை மரங்களை அடுத்து, பெரிய பாறைகள் இருக்கின்றன. அந்தப் பாறைகளின் இடுக்கில் செந்நாய் ஒன்று 
குட்டிபோட்டுப் படுத்திருக்கிறது. மெலிந்துபோயிருக்கும் அந்தப் பேறுகாலத் தாய்க்குப் பசிக்குமோ என்று பக்கத்தில் இருக்கும் 
ஆண்நாய் தன் பசிய கண்களால் பார்த்துக்கொண்டிருக்கிறது. 

			

	அப்போது அங்கு ஆண்-பெண்ணாய் வரும் காட்டுப் பன்றிகளில் ஆண்பன்றியை அந்த ஆண் செந்நாய் தாக்குகிறது. 
அதைக் கண்ட பெண்பன்றி வெருண்டோடுகிறது. 

			

	அது ஓடுகிற வழியில் ஒரு ஈந்தை மரம் சிவந்த காய்களைக் கொண்ட பச்சைக் குலைகளோடு நிற்கிறது. 
அந்த மரத்தினின்றும் விலகியோட முயன்ற பன்றி, அதில் மோதிவிட்டுச் செல்கிறது. அந்த மோதலில் நிலைகுலைந்து, 
ஈந்தின் சிவந்த காய்கள் உதிர்ந்துவிழுகின்றன. விழுந்த காய்கள் காய்ந்துபோய் கால்களை உறுத்தும் பரல்கற்களைப்போல் 
அந்த மேட்டுநிலத்தில் பரவிக்கிடக்கின்றன.

			

	--  முரண் நிலம் உடைத்த
	வல் வாய்க் கணிச்சி கூழ் ஆர் கூவலர்
	ஊறாது இட்ட உவலைக் கூவல்
	வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
25	இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து
	இரும் களிற்று இன நிரை தூர்க்கும்

	இத்தகைய கட்டாந்தரையில், வலிமையான வாய்ப்பகுதியை உடைய குந்தாலியால், கிணறுதோண்டுவோர், 
அவ்வப்போது கூழைக் குடித்துக்கொண்டு, கிணறு தோண்ட முயன்று, நீர் ஊறாததால் கைவிட்டுச் சென்ற பள்ளத்தில் சருகுகள் 
நிறைந்திருக்கின்றன. அந்த வழியே அலட்சிய நடை நடந்து (இகழ்ந்து இயங்கு), ஒரு பெரிய களிற்றியானை முன்நடந்து வர, 
ஒரு யானைக் கூட்டம் வருகிறது. தங்களின் வெண்மையான தந்தங்களை விரும்பிய கொடு மனம் படைத்த கானவர், அந்தக் 
குழியை அகழ்ந்து, இலைகளால் மூடியுள்ளனர் என்று நினைத்த யானைகள், அப் பள்ளத்தைத் தூர்க்கின்றன.

	பெரும் கல் அத்தம் விலங்கிய காடே

	இத்தகைய தன்மையுள்ள பெரிய பாறைகளை உடைய வறண்ட நிலமே நம் முன் இருக்கிறது. 
(விரைவாக இதைக் கடந்து சென்று நம் வினை முடிக்கவேண்டும்)

	-- என்று தலைவன் தன் நெஞ்சினை நோக்கிக் கூறுகிறான்.

பாடல் அமைப்பும் உட்பொருளும்

	இருபத்து ஏழு அடிகளைக் கொண்ட இப் பாடலில், மூன்றில் ஒரு பங்கான முதல் ஒன்பது அடிகளில் நடந்த 
நிகழ்ச்சிகளைப் பற்றியும், அடுத்த பதினெட்டு அடிகளில் இனி கடக்க இருக்கின்ற நிலத்தைப் பற்றியும் தலைவன் கூறுவதாக 
இப் பாடல் அமைந்துள்ளது. எனவே, புறப்பட்ட சிறிது தொலைவுக்குள் (மூன்றில் ஒரு பங்கு) நெஞ்சம் முரண்டுசெய்வதாகவும், 
இன்னும் நெடுந்தொலைவு – அதில் கடினமான பயணம் - செல்லவேண்டியுள்ளது என்று தலைவன் கூறுவதாகவும் கொள்ளலாம். 

	பாடலின் முதற்பாகத்தின் பெரும்பகுதியில் தலைவியின் மாண் நலம் பற்றித் தலைவன் கூறுகிறான். தலைவியின் 
பற்கள், இடை, அல்குல், கூந்தல், தோள் எனப் பெண்ணுக்கு அழகூட்டும் நேர்த்திப் பண்புகளை விவரிக்கும் தலைவன், அத்தனை 
அழகுகளும் பிரிவால் பொலிவிழந்துபோய்விடுமே – அப்புறம் ஈட்டும் பொருளால் என்ன பயன் – என்று நெஞ்சத்துக்கு 
எடுத்துக்கூறி, பயணத்தைத் தவிர்க்கலாம் என்று எண்ணியதாகக் கொள்ளலாம். தலைவியின் பொலிவிழப்பு தற்காலிகமானதே, 
பல்வேறுபட்ட செல்வங்களால் இழந்த பொலிவை மீண்டும் பெறலாம் என்பதை, மனை நகப் பல்வேறு வெறுக்கை பெறுவோம் 
என்று நெஞ்சம் கூறியதை நினைவில்கொண்டு, “இனி வரமாட்டேன்” என்று நெஞ்சம் சொன்னபோது, நெஞ்சம் முன்னர்ச் சொன்ன 
அதே சொற்களைக் கொண்டு, மனை நகப் பல்வேறு வெறுக்கை தருகம் என்று தலைவன் புரட்டிப்போடுவது நல்ல வாதம். 

	தொடக்கத்தில் தலைவனின் மனம், பிரிந்து செல்லவேண்டாம் என்று கூறி அதற்கு மிக வலுவான காரணங்களையும் 
முன்வைக்கிறது. இருப்பினும் நெஞ்சின் ஆசைக்கு உட்பட்டு, தலைவனைப் பயணம் மேற்கொள்ளவைக்கிறது மனம். நடுவழியில் 
தடுமாறும் நெஞ்சின் தளர்ச்சியைப் போக்க, செல்வத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தி வலுவான காரணங்களை 
முன்வைக்கிறது. இப்போது புலவர் இந்தக் காரணங்களைப் பாடலுக்கு அழகூட்டும் வருணனைக் காட்சிகளாக்கி, அவற்றின் 
உட்பொருளை உணர்ந்து தெரிந்து மகிழும் வண்ணம் பாடலைப் புனைந்திருக்கிறார்.

	தலைவன் மேலும் செல்லவிருக்கின்ற காட்டுப்பாதையில் மூன்று மரங்களின் காட்சிகளைக் காட்டுகிறார் புலவர். 
முதலில் வருவது பூத்துக்குலுங்கும் மராமரம். கிளைகளின் நுனியில் புரி போல் முறுக்கிக்கொண்டிருக்கின்றன பூங்கொத்துகள் 
(புரி இணர்). காற்று இக் கிளையில் வேகமாக வீசித் தாக்குகிறது. மிகவும் வலிய கைகளைக் கொண்ட ஒருவன், மலர் உள்ள 
கிளையின் உச்சியை ஒரு நீண்ட கழியால் ஓங்கித் தாக்கினால் பூக்கள் எவ்வாறு ‘சடசட’ வென்று உதிருமோ, அவ்வாறு 
மரத்தினின்றும் பூக்கள் உதிர்கின்றன. அந்தப் பாதையில் நடந்து செல்லும் மள்ளர்கள் அந்த நேரம் பார்த்து மரத்தின் கீழே 
வருகிறார்கள். அவர்களின் சுருட்டைமயிர்த் தலையில் அந்தப் பூக்கள் ‘பூமாரி’யாய்ப் பெய்கின்றன. 

	“இந்தக் கதையெல்லாம் எனக்கெதற்கு?” என்று நெஞ்சம் தலைவனைக் கேட்டதாகத் தெரியவில்லை. 
காரணம் - தலைவன் என்ன சொல்ல வருகிறான் என்பது நெஞ்சத்துக்குப் புரிந்துவிட்டது. தலைவனை முன்னிறுத்திப் புலவர் 
என்ன சொல்கிறார் என்பதைச் சற்றுக் கூர்ந்து பார்ப்போம். மராமரத்துப் பூங்கொத்து புரி இணர் எனப்படுகிறது. தடித்த ஒரு 
கயிறை எடுத்துப்பாருங்கள். அதில் இரண்டு மூன்று மெல்லிய நூலிழைகள் சுற்றிச்சுற்றி இறுக்கமாகப் பின்னப்பட்டிருக்கும். 
முறுக்கப்பட்ட அந்த இழைகளைப் புரி என்பர். இவ்வாறு புரிகளை முறுக்கிச் செய்யப்பட்ட கயிறு வலிமையுள்ளதாக இருக்கும். 
எளிதில் அதை அறுக்கமுடியாது. 

			

	ஒரு கிளையில் உள்ள பூங்கொத்து இவ்வாறு புரி போல் முறுக்கிடந்தால்? அதை எளிதாகப் பிடுங்க முடியாது. 
இந்தப் புரி இணரில் உள்ள பூக்கள் நன்றாக மலரவும் இல்லை. அப்போதுதான் மலரத்தொடங்கியிருக்கின்றன. எனவே அந்தப் 
பூவும் காம்புடன் இறுக ஒட்டிக்கொண்டிருக்கும். புரி இணர் மெல் அவிழ் அம் சினை என்ற தொடரின் ஒவ்வொரு 
சொல்லுக்கும் ஆழ்ந்த பொருள் உண்டு. இப்போது உயரத்தில் இருக்கும் அந்தப் பூ எனக்கு வேண்டும்! பூக்களைப் பாருங்கள் – 
கிளையின் நுனியில் தொங்கிக்-கொண்டிருக்கின்றன. ஒரு நீண்ட மெல்லிய குச்சியை வைத்துப் பூக்களைத் தட்டினால் 
கிடைக்குமா? ஒங்கித் தட்டினால் கிடைக்கலாம். ஆனால் பூக்கள் சிதைந்துவிடும். எனவே பூக்கள் மலர்ந்திருக்கும் அந்தக் 
கிளையின் அடிப்பாகத்தில் தட்டவேண்டும் – அதுவும் வலுவாகத் தட்டவேண்டும். வல்லோன் ஒருவன் வந்து – அவனும் 
நீண்ட கொம்பு ஒன்று வைத்திருந்து – அவன் கிளையின் அடியைக் கொம்பினால் ஓங்கி ஓர் அறைவிட்டால் - (வல்லோன் 
கோடு அறை கொம்பின்) - கிளையின் நுனியில் உள்ள பூக்கள் ‘பொலபொல’-வென்று உதிராவா? ஆனால் நடந்தது வேறு. 
அப்போது பார்த்து அவ்வழியே  சென்றுகொண்டிருந்த மள்ளர் கூட்டம் மரத்தின் கீழே வருகிறது. அதுவரை தென்றலாய் 
வீசிக்கொண்டிருந்த காற்று, ஒங்கி அடித்து மரத்தை அலைக்கழிக்கிறது (மராஅம் அலைத்த .. தென்றல்). வல்லான் 
கொம்பினால் அறையுண்டதைப் போல் கிளைகள் ஆட, பூக்கள் காற்றினால் உதிர (வீ உக) அவை அந்த மள்ளரின் தலைமேல் 
தூவலாய் உதிர்கின்றன (தூற்றும்). 

	பொருளீட்டவேண்டும் என்று ஆசையாய்ப் புறப்பட்ட நெஞ்சம் ஏன் இடையில் முரண்டுபிடிக்கிறது? 
கொளுத்தும் வெயில் (என்றூழ் நின்ற) – பொட்டல்காடாய்க் கிடக்கும் வெளி (புன் தலை வைப்பு). இந்தப் பாறாங்கல் பாதையில் 
(பெருங்கல் அத்தம்) நடந்து செல்வதே கடினம். அப்புறம், செல்வம் என்பது புரி இணர் மெல் அவிழ் மராஅம் பூப் போன்றது! 
அதை எளிதாகவா அடைய முடியும்? அதை அடைய இன்னும் வேறென்ன பாடுகள் படவேண்டியிருக்குமோ? – வல்லான் 
கொம்பினால் அறைவதைப் போல! இப்படியெல்லாம் எண்ணி எண்ணி மாய்ந்துபோய்த்தான் நெஞ்சம் உட்கார்ந்துகொண்டதோ 
என்று நினைத்த தலைவன் இந்தக் கதையின் அடுத்த பகுதியைச் சொல்கிறான். செல்வத்தைச் சேர்க்க நாம் ஒன்றும் பெரும்பாடு 
படவேண்டியதில்லை. இப்போது தென்றலாய் வீசும் வாய்ப்புகள் – மள்ளர் மரத்தடியில் வந்ததைப் போல் – நாம் சேரவேண்டிய 
இடத்தை அடைந்த மாத்திரத்தில் – தென்றல் வீ உகத் தீண்டி அலைத்ததைப்போல் - வாய்ப்புகள் நன்கமைந்து ஒருங்கிணைய – 
மள்ளர் சுருட்டை முடியில் தூற்றியதைப் போல் – மனம், நெஞ்சம், உள்ளம் ஆகிய மள்ளர்களின் சுருண்ட நம்பிக்கையின் மீது 
செல்வம் பூ மாரியாய்ச் சொரியும். எனவே, சேரவேண்டிய இடத்துக்குச் சீக்கிரம் எழுந்து வா (வல்லே எழு இனி) என்று தலைவன் 
உள்ளுறையாகக் கூறுகிறான்.

	அடுத்து, தலைவன் கூறுவது பருந்து இளைப்படூஉம் பாறுதலை ஓமை. இலைகளெல்லாம் உதிர்ந்து வெறும்
குச்சிகளாய் நீட்டிக்கொண்டு, பரட்டைத் தலையுடன் நின்றுகொண்டிருக்கிறது ஓமை மரம். அந்த மரம் இலையும் கொப்புமாய், 
பூவும் காயுமாய் இருந்த காலங்களில் எத்தனையோ பறவைகள் அதன் இன்னிழலில் தங்கிச் சென்றிருக்கும். ஆனால் இப்போதோ 
பழுமரம் தேடிப் பறவைகளெல்லாம் சென்ற பின்னரும், பருந்துகள் மட்டும் அந்தப் பாழும் குச்சிகளில் கூடுகட்டிக் 
குடியிருக்கின்றன. அந்த வேணா வெயிலிலும் கூட முட்டையிட்டு அடைகாத்துக்கொண்டிருக்கிறது ஒரு பெட்டைப் பருந்து. 
தகிக்கும் இந்தத் தணல்பூமியைத் தாண்டிச் செல்லவே இத்தனை தயக்கம் காட்டுகிறாயே – நெஞ்சமே – இங்கே கூடுகட்டிக் 
குடியிருக்கும் பருந்துகளைப் பார் – நாளை அதன் குஞ்சுகளும் இங்குதான் வாழப்போகின்றன – வாழ நினைத்தால் 
வாழலாம் – வழியே செல்ல சீக்கிரம் புறப்படு என்று தலைவன் கூறுவதாகக் கொள்ளலாம். 

	இறுதியாகத் தலைவன் காட்டுவது ஓர் ஈச்ச மரத்தினை. அந்த மரத்தில் குலைகுலையாகக் காய்த்துத் தொங்குகின்றன 
அதன் செங்காய்கள். அது நிற்பது ஒரு மேட்டு நிலமாகிய (சுவல) கட்டாந்தரையில் (முரண் நிலம்). அதன் அருகில் ஒரு பெரிய 
பாறை இடுக்கு இருக்கிறது (இருங்கல் விடரகத்து). அதில் ஒரு பெட்டைச் செந்நாய் அண்மையில் குட்டிகளை ஈன்று மெலிவாய்ப் 
படுத்திருக்கிறது (ஈன்று இளைப்பட்ட மென் புனிற்று அம் பிணவு). குட்டிகளைவிட்டு வெளியே செல்லமுடியாத நிலையில், 
தன் கணவனான ஆண்நாயைப் (செந்நாய் ஏற்றை) பரிதாபமாகப் பார்க்கிறது. அருகில் இரு காட்டுப்பன்றிகள் – ஆணும் 
பெண்ணுமாய் – வருகின்றன. செந்நாய் ஏற்றை ஆண்பன்றியைத் தாக்குகிறது (கேழல் தாக்க). பார்த்த பெண் பன்றி பதறியடித்து 
ஓடுகிறது (இரியல் பிணவல்). ஓடிய வேகத்தில், பெண்பன்றி ஈச்ச மரத்தின் மேல் மோதிவிட்டுச் செல்கிறது. மரம் அதிர, குலை 
நடுங்க, செங்காய்கள் சிதறி விழுகின்றன. கட்டாந்தரையில் விழுந்த காய்கள் காய்ந்துபோய், பருக்கைக்கற்கள் போல் நடப்பவர் 
பாதங்களைப் பதம் பார்க்கும் (பரல் மண் சுவல). ஈச்ச மரம் நிற்பதால் ஈரம் இருக்குமோ என்றெண்ணிய கூவலர்கள், கூரிய வாய் 
கொண்ட குந்தாலியால் கூவல் (கிணறு) வெட்டத் தோண்டுகிறார்கள். இடையிடையே கூழ் குடித்த வண்ணம் நீண்ட நேரம் 
தோண்டியும் நீர் வராததால், அப்படியே விட்டுவிட்டுச் சென்ற அந்தப் பள்ளத்தைக் காய்ந்த சருகுகள் மேவிவிடுகின்றன 
(உவலைக் கூவல்). அவ்வழியே ஒரு யானைக்கூட்டம் வருகிறது.  தழைகள் மூடிய பள்ளத்தைப் பார்த்ததும் யானைகள் 
காப்புணர்வு கொள்கின்றன. தங்களின் தந்தத்தை எடுப்பதற்காகத் தங்களைப் பள்ளத்தில் வீழ்த்தும் நோக்கத்துடன் கானவர்களால்
தோண்டப்பட்டு பொய்யாக மறைக்கப்-பட்டிருக்கும் பள்ளம் அது என்று எண்ணிய (வெண்கோடு நயந்த அன்பு இல் கானவர் .. 
அகழ்ந்த குழி செத்து) யானைகள், அருகில் கிடக்கும் பெரிய பெரிய கற்களைக் கொண்டுவந்து அந்தப் பள்ளத்தைத் தூர்க்கின்றன. 
அவ்வாறான கற்குவியல்கள் நிறைந்த பாதைகள் நிறைந்த காட்டுவழியேதான் (தூர்க்கும் பெருங்கல் அத்தம் விலங்கிய காடே) 
செல்லவேண்டும். 

	முதலில் செந்நாய் – பன்றிக் கதையைச் சொன்ன புலவர், அடுத்துக் கூவலர் – களிற்று நிரை கதையைத் தொடர்ந்து 
சொல்கிறார். இந்த இரு கதைகளுக்கும் நடுவே, குலை நடுங்கும் ஈச்ச மரத்தை வைக்கிறார் புலவர். அவர் என்னதான் 
சொல்லவருகிறார் என்பதைச் சற்று உன்னிப்பாக நோக்குவோம்.

	தலைவிக்கென்று வீட்டுப் பொறுப்புகள் உள்ளன. மேலும் அவள் தலைவன் செல்லும் கடினமான பாதைகளில் நடந்து 
செல்ல முடியாது. ஒருவேளை அவளுக்கென்று சில எதிர்பார்ப்புகள் இருந்திருக்கலாம். அன்றாட உரையாடல்கள் மூலம் அவளின் 
மறைமுகக் குறிப்புகள் எனப் புரிந்துகொண்ட (பிணவு பசித்து என) தலைவன் (செந்நாய் ஏற்றை) அவளுக்குக் களிப்பூட்ட (மனை நக)
செல்வம் ஈட்டிவர எண்ணுகிறான் (கேழல் தாக்க). அவ்வாறு சென்றால் அதனால் வெடித்துக் கிளம்புவது (இரியல் பிணவல்) 
பிரிவுத் துன்பம். இந்தத் துன்பம் தலைவனின் ஈச்ச மரம் போன்ற உறுதியான நம்பிக்கையை உலுக்கி எடுக்கிறது. முயற்சிகள் 
கனியும் முன், செங்காயாகவே உதிர்ந்து சிதறிப்போகின்றன. இருப்பினும் வரண்ட நிலம் போன்ற நம்பிக்கையற்ற நிலையிலும், 
தோண்டிப்பார்க்கலாம் என்று எண்ணும் கூவலர்கள் போல், தலைவன் பொருள்தேடிப் புறப்படுகிறான். பாதிவழியில் தோண்டுவதை 
விட்டுவிட்டுச் செல்லும் கூவலர்கள் போல, தலைவனும் பாதி வழியில் வீட்டுக்குத் திரும்பிச் சென்றால் என்ன ஆகும்? உல்லாச 
நடைபோட்டு வரும் யானைகள் பொய்யாக மூடப்பட்ட பள்ளத்தைப் பார்த்து என்ன செய்கின்றன? எச்சரிக்கை உணர்வுகொண்ட 
அவை, பாதுகாப்பாகப் பள்ளத்தைச் சுற்றிப் போயிருக்கலாம். அப்படி இம் முறை போய்விட்டால், ஒருவேளை திரும்பவும் அவ் 
வழியே வரும்போது மாட்டிக்கொள்ளலாம் – அல்லது தங்களுக்குப் பின்னால் வேறு யானைக் கூட்டம் வந்தால் அவை 
மாட்டிக்கொள்ளலாம். எனவே, உறுதியான பாறைகளையும், மண்ணையும் தள்ளிப் பள்ளத்தை மூடுகின்றன யானைகள். 
எடுத்துக்கொண்ட முயற்சியைப் பாதியில் நிறுத்திவிட்டுப் ‘போகலாம்; என்று நெஞ்சம் சொல்லிவிட்டது. ஏதாவது கிடைப்பதை 
வைத்து வாழ்க்கையைத் தள்ளலாம் என்று சொல்லி அரைகுறை முயற்சியையும் மூடிவிட நினைக்கிறது. எளிதாகச் சென்று 
செல்வம் ஈட்டிவிடலாம் என்று இகழ்ந்து இயங்கிய மனம், இப்போது இந்த நெஞ்சின் தளர்ச்சியை எதிர்கொள்கிறது. இதைப் 
புறம்தள்ளிவிட்டு மனம் தொடர்ந்து போயிருக்கலாம். அப்புறம் இன்னொரு முறை இவ்வாறு செல்லநேர்ந்தால் மீண்டும் இந்தத் 
தயக்கம் என்னும் மூடுகுழிக்குள் விழநேரிடலாம். வேறு யாரேனும் பொருள்தேடப் புறப்பட்டால், “பார்த்தாயா, அவனுக்கு நேர்ந்த 
கதியை – பாதியில் திரும்பிவிட்டான். நீயும் ஏன் புறப்படுகிறாய்” என்ற பேச்சால் தயக்கப் படுகுழிக்குள் தடுமாறி விழலாம். 
எனவே, உறுதியான நம்பிக்கை என்ற பாறாங்கற்களைக் கொண்டு தயக்கப்படுகுழியை மூடிவிட்டுத் தன் பயணத்தைத் தொடர 
நினைக்கிறது மனம் என்னும் களிற்றியானை - என்று தலைவன் உள்ளுறையாக இந்தக் கதைகளைக் கூறுவதாகக் கொள்ளலாம்.

புலவர் சொல்திறம்

	மிகச் சரியான சொற்களைத் திறம்படப் பயன்படுத்துவதில் சங்கப்புலவர்களுக்கு இணை அவர்களே. 
புலவர் காவன் முல்லைப் பூதனார் தனது பாடலில் பயன்படுத்தியுள்ள சில சொற்களின் மூலமாக அவரின் சொல்வன்மையைப் 
புரிந்துகொள்ள முயல்வோம்.

1. முகைத்துணை நிரைத்தன்ன

	பெண்களின் பற்களுக்கு முல்லைப்பூவை ஒப்பிடுவது இயல்பே. அது இரண்டன் வெண்மை நிறத்துக்கும் ஒப்புமை 
ஆகும். சிலர் பற்களை முல்லை முகைகளுடன் ஒப்பிடுவர். அரும்பு, முகிழ், முகை, மொக்கு, மொட்டு, போது ஆகியவை 
ஒரு பூ மலர்வதற்கு முந்தைய பலநிலைகளைக் குறிக்கின்றன. இவற்றில் முகை என்பது மலர்வதற்குச் சற்றே முன்பு 
உள்ள நிலை.

	செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் - அகம் 99/2
	முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனை - அகம் 99/5
	மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த - அகம் 238/17

	போன்ற அடிகள் இதனை வலியுறுத்தும். கூம்பியிருக்கும் மொட்டு தன் இறுகிய கட்டு அவிழ்ந்து மலரத் தயாராகும் 
நிலை அது. எனவே அப்பொழுது தன் வெண்மை நிறத்தை முல்லை முழுவதுமாகப் பெற்றிருக்கும். எனவே அந் நிலையில் அது 
வெண்பற்களைப் போல் இருக்கும்.  இந்த வெண்முகைகளை வரிசையாக வைத்ததைப் போன்ற பல்வரிசை என்று புலவர் 
போற்றி மகிழ்வர்.

	மண மௌவல் முகை அன்ன மட வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/3
	முகை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல் - அகம் 162/12

	போன்ற அடிகளில் இதைக் காணலாம். ஆனால், இங்கு பூதனார் என்ன கூறுகிறார் பாருங்கள்.

	மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
	துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்
	
	மௌவல் முகைகளை வரிசையாக வைத்ததைப் போன்ற பல்வரிசை என்றால் அது ஒரு வரிசையைத்தானே 
குறிக்கும்! இரண்டு வரிசைப் பற்கள் இருக்கின்றனவே என்று பூதனார் சிந்தித்திருக்கிறார். எனவே முகை நிரைத்து அன்ன என்று 
சொல்லாமல், முகைத் துணை நிரைத்து அன்ன என்கிறார் புலவர்.

	முகைகளை ஒன்றனை அடுத்து ஒன்றாக வைப்பது நிரை – வரிசை. அப்படி வைக்கும்போது ஒன்றன் கீழ் 
ஒன்றாகவும் வைப்பது துணை நிரை – துணை வரிசை. முன்னது பற்களின் மேல்வரிசை. அடுத்தது கீழ்வரிசை. இவ்வாறாக 
இரண்டு பல்வரிசைகளையும் உவமிக்கும் திறம் புலவரின் கூர்த்த நோக்கைக் காட்டவில்லையா?

2. புரி இணர் மெல் அவிழ் அம் சினை

	இந்த அழகிய சொற்றொடரின் முழுப் பொருளும் பாடல் அமைப்பும் உட்பொருளும் என்ற தலைப்பில் 
விளக்கப்பட்டுள்ளது.

3. மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்

	மராமரம் என்று அழைக்கப்படும் ஆச்சா மரத்தின் மலர்கள் மிகவும் நறுமணம் உடையவை. இவை உள்ள 
கிளைகளை ஓங்கி அலைத்து, பூக்களை உலுப்பி எடுக்கும்போது, பூக்களினின்றும் மணம் ‘கம்’மென்று கிளம்பும். அப்படிக்
கிளம்பிய மணம் தென்றலால் பரவுகிறது. அவ்வேளையில் அந்தத் தென்றலே மணப்பது போல் தோன்றுகிறது. இதனை, 
மணம் வாய்க்கப்பெற்ற தென்றல் என்று அழகிதாகப் புலவர் குறிப்பிடுகிறார்.

4. பாறு தலை ஓமை

	ஓமை மரங்கள் உயர்ந்து நிற்பவை. படர்ந்த கிளைகளைக் கொண்டவை. வெயில் காலத்து வறட்சியினால் 
அவற்றின் இலைகளெல்லாம் உதிர்ந்துவிட்டன. சாதாரணமாக இதனை, இலைகளெல்லாம் உதிர்ந்து மொட்டையாய் நிற்கும் 
மரம் என்று சொல்வோம். அப்படி இல்லாமல், மரத்தின் உச்சியில் சுள்ளிகள் குச்சி குச்சியாய் நீட்டிக்கொண்டிருப்பதால், 
அதனைப் பரட்டைத் தலை ஓமை என்று கூறும் புலவரின் மாறுபட்ட கோணத்தைப் பாருங்கள்.

5. புலவரின் triple ‘இ’

	பொதுவாகக் கிராமத்துச் சாலைகள் ஒருதடப் பாதைகளாகவே (single lane) இருக்கும். அவற்றில் வாகனத்தில் 
செல்லும்போது மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். ஒரே நேர்கோட்டில் எதிரே வண்டிகள் விரைவாக வரும். எனவே 
மிகவும் எச்சரிக்கை தேவை. நகர்ப்புறங்களில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் நான்குதடச் சாலைகளில் (four lane road) 
வாகனங்களை ஓட்டுவதற்கு அவ்வளவு எச்சரிக்கை உணர்வு தேவை இல்லை. நடுவிலும் தடுப்பு இருக்கும். எனவே 
மனதில் இறுக்கம் (tension) இல்லாமல், ஓரளவு மனத்தளர்வுடன் (relaxed mind) ஓட்டலாம். இன்றைய (தவறான) 
பேச்சுவழக்கில் சொல்வதென்றால் ‘அசால்ட்டாக’ப் போகலாம். இப்படி ஓரளவு அலட்சியமாகச் செல்லக்கூடிய பாதையைப் 
புலவர் இகழ்ந்து இயங்கு இயவு – இ இ இ - என்கிறார். யானைகள் இவ்வாறு இகழ்ச்சியாகச் செல்லக்கூடிய பாதைகளில் 
குழிகளை வெட்டிப் பொய்யாக மூடிவைத்தால் யானைகள் எளிதில் அவற்றில் விழுந்துவிடும். இகழ்ந்து இயங்கு இயவின் 
அகழ்ந்த குழி என்பதில் எத்துணை நுணுக்கமான கருத்துகளைப் பொதிந்துவைத்திருக்கிறார் புலவர் என்று பாருங்கள்.

புலவர் சொல்தேர்வு

1. தூற்றல்

	தூறல் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன தூற்றல்? தூற்று என்பது இன்றைக்கு பழி சொல், நிந்தி என்ற 
பொருளில் கையாளப்படுகிறது. ஆனால், அறுவடை நேரத்தில், தூற்ரல் என்ற இச் சொல் நெற்களங்களில் அதிகமாகச் 
சொல்லப்படும். கதிரடிப்பு முடிந்து நெல் குவியலாகக் கிடக்கும்போது அதில் தூசும் தும்பும் நிறைந்திருக்கும். அப்போது 
நெல்லை முறங்களில் அள்ளிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே சிதறவிடுவார்கள். அப்போது நன்கு விளைந்த நெல்மணிகள் 
நேராகக் கீழே விழ, கறுக்கான், பதர் போன்றவை காற்றில் அடித்துக்கொண்டு போகப்படும். இதனைத் தூற்றுதல் என்பர். 
எனவே தூற்றுதல் என்பது தூவிவிடுதலைக் குறிக்கும்.

	மராமரத்துக் கிளை தென்றலால் அலைக்கப்பட்டு, அதினின்றும் பூக்கள் உதிர்கின்றன (வீ உகத் தீண்டி மராஅம் 
அலைத்த). கொத்தாக உதிரும் பூக்களைக் காற்று சிதறடிக்கிறது. சிதறிய பூக்கள் மழைத்தூறல் போல் மள்ளர் தலைகளில் 
விழுகின்றன. இதையே புலவர் மள்ளர் சுரியல் தூற்றும் என்கிறார். கீழே விழும் பூக்களை மள்ளர் தலையில் தென்றல் 
தூற்றிவிடுகிறது என்பது எத்துணை நயமான சொல்தேர்வு பாருங்கள்!

2. இரியல்

	ஈன்று இளைப்பட்ட தனது பெண்நாய்க்குக் கொடுப்பதற்காக, செந்நாய் ஏற்றை ஒரு ஆண் பன்றியைத் தாக்குகிறது. 
அப்போது அந்த ஆண்பன்றியுடன் இருந்த பெண்பன்றி வெருண்டு ஓடுகிறது. இவ்வாறு வெருண்டு ஓடுவதை இரியல் 
என்கிறார் புலவர். ஒரு மரத்தின் உச்சியில் அமைதியாக அமர்ந்திருக்கும் பறவைகள், திடீரென்று மிக அருகில் ஒரு பெரிய 
வெடிச்சத்தம் கேட்டால், எவ்வாறு பதறியடித்துக்கொண்டு பறந்தோடுமோ அதுவே இரியல். மருட்சி, வெருட்சி, பதற்றம், 
கலக்கம், விரைவு - எல்லாம் கலந்த ஒரு ஓட்டமே இரியல். ஒரு கோழியின் இரியல் இங்கு காட்டப்பட்டுள்ளது. இதே போல் 
ஒரு பெண் பன்றி விரைந்து ஓடுவதைக் கற்பனைசெய்துகொள்ளுங்கள்.

			

3. இருங்களிற்று இன நிரை

	அக்காலத்தில் விவசாயப் பெருங்குடி மக்கள் தொழுக்களில் பசுமாடுகள் வளர்ப்பர். ஒரு தொழுவுக்கு ஒரு 
காளையே தலைமைப் பண்புடன் இருக்கும். இதனையே ஏறுடை இன நிரை என்பார் நெடுநல்வாடை நக்கீரர். யானைக் 
கூட்டத்துக்கும் இது பொருந்தும். ஒரு யானைக் கூட்டத்துக் ஒரு களிறு தலைமைதாங்கும். ஏனைய ஆண்யானைகள் இதற்கு 
அடங்கிநடக்க வேண்டும் அல்லது வெளியேறிவிட வேண்டும். இதனை விளக்கும் சொற்றொடரே 
இருங்களிற்று இன நிரை என்பது.

அருஞ்சொல் விளக்கம் 

1. நொச்சி – இது ஒருவகைக் காட்டுச் செடி (vitex negundo). உயரமாக வளரக்கூடியது. உயிர்வேலியாய் அமைக்க வீட்டைச் 
சுற்றி இதனை வளர்ப்பர். இது பலவித மருத்துவக் குணங்கள் கொண்டது. இதன் இலை மயிலின் காலடி போன்று இருக்கும்.
 (மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி – நற் 115/5)

2. மௌவல் – இது காட்டு மல்லிகை (wild jasmine - jasminum abyssinicum). வீட்டில் நொச்சி வேலியின் அருகில் 
வளர்க்கப்படும். இது வளர்ந்து வேலியில் படர்ந்து பூக்கும்.

			

3. அல்குல் – பெரும்பாலும் பலர் தவறாகப் புரிந்துகொண்டிருப்பது. இது மனிதரின் அடி இடுப்புப் பகுதியைக் குறிக்கும் 
(lower hip). இடுப்புக்குக் கீழே உடம்பைச் சுற்றிலும் இருக்கும் பகுதியே அல்குல். பெரும்பாலும் பெண்களின் அடி இடையைக் 
குறிக்கும் சொல்லாகச் சங்கச் செய்யுளில் அல்குல் இடம்பெறும். 

1.பெண்கள் இடுப்பில் தாழ்வாக ஒட்டியாணம் அணியும் பகுதி.

	பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் - திரு 16
	பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அகம் 269/15
	பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் - புறம் 353/2.

2. பெண்கள் இடுப்பில் தாழ்வாக துகில், தழையாடை, மற்ற அணிகலன்கள் போன்றவை அணியும் பகுதி

	துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் - சிறு 262 
	தழை அணி அல்குல் செல்வ தங்கையர் - அகம் 320/3
	இழை அணி அல்குல் என் தோழியது கவினே - கலி 50/24

3. அகன்ற மார்புக்குக் கீழே ஒடுங்கிய இடுப்பு – ஒடுங்கிய இடுப்புக்குக் கீழே மீண்டு அகன்று இறங்கும் பகுதி – இது அழகிய 
பெண்களுக்கான உடலமைப்பாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டாவது அகன்ற பகுதியே அல்குல் எனப்படுகிறது. இது மேலிருந்து 
கீழாக முன்/பின் பக்கம் நோக்கும்போது (front / back view).

	ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் - நற் 245/5.
	ஐது அமைந்து அகன்ற அல்குல் - ஐங் 135/2. 
	அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல் - கலி 14/5.
	அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇ - அகம் 21/3.
	அகல் எழில் அல்குல் அம் வரி வாட - அகம் 307/2.

4. இனி கீழிருந்து மேலாகப் பக்கவாட்டில் (side view) பார்க்கும்போது – 45 degree கோண அளவில் உயர்த்தி ஏந்திய கைகளைப் 
போன்று வளைந்து ஏறி இருப்பது.

	பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் - திரு 146
	கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு - நற் 368/3. 
	ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல் - பதி 18/5. 
	பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அகம் 75/19. 
	கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு - புறம் 240/4. 

5. குலுக்கைக்கும் அல்குல் உண்டு.

	பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவி
	கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்
	ஏணி எய்தா நீள் நெடு மார்பின்
	முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்
	குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும்பாணாற்றுப்படை 243 – 247

	வீட்டு முற்றத்தில் தானியங்கள் சேமித்து வைக்கும் குதிர் நிற்கிறது. ஏணி வைத்துத்தான் ஏறிப் பார்க்கமுடியும். 
அதற்குக் கழுத்து உண்டு. அதன் மேல் தலை இல்லை. கழுத்துக்குக் கீழே உள்ள பகுதியை மார்பு என்கிறார் புலவர். அந்த மார்பு 
முறுகி வந்து இடுப்பாக மாறி, பின்னர் சிறிது அகன்று இருக்கும் அதன் அடிப்பகுதியை அல்குல் என்கிறார் புலவர். 

6. இடுப்புக்குக் கீழ்ப்பகுதி, ஏறி இறங்கும் பகுதி

	அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட
	பகுவாய்ப் பானைக் கிவிமுனை சுரந்த
	அரிநிறக் கலுழி ஆர மாந்தி - அகம் 157/1-3.

	இடுப்பு சிறுத்து அதன்பின் பெரிதாகும் பகுதியில் கள் குடத்தை எடுத்துவரும் பெண், யாரேனும் கள் குடிக்கக் கேட்டால், 
இடுப்பை விட்டுச் சிறிது இறக்கி, பானையைச் சாய்த்து, சரித்து கள்ளை ஊற்றுவாள். இடுப்பிலேயே பானை உட்கார்ந்திருந்தால், 
பானையைச் சரிக்க முடியாது. எனவே இடுப்புக்கும் கீழான பகுதியாகிய அல்குலில் பானையை இறைக்கிவைத்துச் சரிக்கிறாள்.

7. பாம்பின் படம் போன்றது. 
	தவறான கருத்துக்களுக்கு அடிப்படை இதே. பாம்பின் படத்திலுள்ள பொறியைப் போன்ற 
தேமலை உடைய அல்குல் என்பது இதன் பொருள். உருவத்திலும் பாம்பின் படம் போன்றே அமைந்திருப்பது.

	பை விரி அல்குல் கொய் தழை தைஇ - குறி 102
	துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் - குறு 294/5.
	பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் - கலி 125/17.

	இப்படியெல்லாம் கூறப்படும் ‘இது’ ஏற்கனவே கூறப்பட்ட ஒன்றனுள் அடங்கும் என்பது தெளிவு. 
அதைவிடுத்து இது பெண்ணுறுப்பு என்பது பிற்காலக் கற்பனை என்பது உண்மை.

4. புரி – மணலைக் கயிறாகத் திரிக்க முடியுமா? என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வைக்கோலைக் கயிறாகத் 
திரிக்கலாம். வைக்கோலையே கயிறாகத் திரித்து அதைக்கொண்டு மீதி வைக்கோலைக் கட்டிக்கொண்டு வண்டியில் ஏற்றிச் 
செல்வார்கள். இவ்வாறு செய்ய வைக்கோலைத் திரிபோல முறுக்குவார்கள் முறுக்கிய வைக்கோல் புரி எனப்படும். இவ்வாறு 
புரியாக முறுக்கிச் செய்யப்பட்ட சங்கிலியைத்தான் பெண்கள் வைக்கப்பிரி செயின் என்கிறார்கள். அது வைக்கோல்புரி சங்கிலி. 
மூன்று மெல்லிய நூல்களை முறிக்கிச் செய்யப்பட்ட கயிறை அந்தணர்கள் மார்பில் குறுக்காக அணிந்திருப்பர். இதனை முப்புரி 
என்பர். மராமரத்து பூங்கொத்துகள் இயற்கையிலேயே முறுகிகொண்டு புரிபுரியாக இருக்கும் என்கிறார் புலவர்.

			

5. மராஅம் – ஆச்சா என்றழைக்கப்படும் sal tree எனப்படும் மரம் இது. இதன் பூக்கள் வலப்புறமாகச் சுருண்டிருக்கும் என்பது:

	வலஞ்சுரி மராஅம் வேய்ந்த நம் மணம் கமழ் தண்பொழில் – ஐங். 348

என்ற அடியால் பெறப்படும்.

6. ஓமை – ஒருவகைக் காட்டு மரம் (பார்க்க – அகம் -3, அகம்-5 பட விளக்க உரைகள்)

7. செந்நாய் – காட்டு விலங்கு (dhole). மூர்க்க குணம் உள்ளது. 

8. கேழல் – பிணவல் – காட்டுப்பன்றியின் ஆண் – பெண். ஆண் பன்றிக்குத் தந்தங்கள் போன்ற கொம்புகள் உண்டு. 

	பன் மயிர் பிணவொடு கேழல் உகள – மது 174 

	என்று படிப்பது எவ்வளவு உண்மை என்று படத்தில் காண்க.

	இளம்பிறை அன்ன கோட்ட கேழல் – ஐங் 264/1
	வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/2

	என்ற அடிகளால் கேழலின் கொம்பைப் பற்றி அறிகிறோம்.

			
9.	ஈந்து – நம் நாட்டு ஈச்சமரம். Phoenix pusilla. பெரும்பாலான அகராதிகள் இதனை Phoenix doctylifera என்கின்றன. 
ஈச்ச மரங்கள் பனை வகையைச் சேர்ந்தவை. இவற்றில் 12 வகைகள் இருக்கின்றன என்பர் தாவரவியலார். பெரும்பாலானவை 
வெளிநாடுகளில் வளருபவை.  இந்தியாவில், வட பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் வளரும் ஈச்ச மரங்களினின்றும், 
தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமே உள்ள ஈச்ச மரங்கள் வேறுபட்டவை. இதைக் கேரளாவில் சிற்றீந்தல் என்று 
சொல்வர். இதன் பிஞ்சு பச்சையாகவும், காய் சிவப்பாகவும், பழம் கருநீலமாகவும் இருக்கும். செங்காய் – பைக்குலை ஈந்து என்ற 
புலவரின் வருணனையை உற்று நோக்குங்கள். 

	வீடு பெருக்க உதவும் ஈச்சமாறு இம் மரத்தின் இலைகளினின்றும் செய்யப்படுவது.

10. கணிச்சி – குந்தாலி என்ற கருவி. கட்டாந்தரையையும் பிளக்கக்கூடியது. Pick-axe என்றால் நம்மவர்களுக்கு நன்கு புரியும்.