அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 15

பாடல்  15. பாலைத் திணை    பாடியவர் - மாமூலனார்

துறை - மகள் போக்கிய தாய்  சொல்லியது.

  மரபு மூலம் - அறிந்த மாக்கட்டு ஆகுக

	எம்வெங் காம மியைவ தாயின்
	மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர்
	கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
	பாக லார்கைப் பறைக்கட் பீலித்
5 	தோகைக் காவின் றுளுநாட் டன்ன
	றுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
	செறிந்த சேரிச் செம்மல் மூதூ
	ரறிந்த மாக்கட் டாகுக தில்ல
	தோழி மாரும் யானும் புலம்பச்
10	சூழி யானைச் சுடர்ப்பூ ணன்னன்
	பாழி யன்ன கடியுடை வியனகர்ச்
	செறிந்த காப்பிகந் தவனொடு போகி
	யத்த விருப்பை யார்கழற் புதுப்பூத்
	துய்த்த வாய துகணிலம் பரக்க
15	கொன்ற வஞ்சினைக் குழற்பழங் கொழுதி
	வன்கை யெண்கின் வயநிரை பரக்கு
	மின்றுணைப் படர்ந்த கொள்கையொ டோராங்குக்
	குன்ற வேயின் றிரண்டவென்
	மென்றோ ளஞ்ஞை சென்ற வாறே

 சொற்பிரிப்பு மூலம்

	எம் வெம் காமம் இயைவது ஆயின்
	மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர்
	கொம்மை அம் பசும் காய்க் குடுமி விளைந்த
	பாகல் ஆர்கைப் பறைக் கண் பீலித்
5	தோகைக் காவின் துளுநாட்டு அன்ன
	வறும் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
	செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
	அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல
	தோழிமாரும் யானும் புலம்பச்
10	சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்
	பாழி அன்ன கடி உடை வியல் நகர்ச்
	செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி
	அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
	துய்த்த வாய துகள் நிலம் பரக்க
15	கொன்ற அம் சினைக் குழல் பழம் கொழுதி
	வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
	இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஓராங்குக்
	குன்ற வேயின் திரண்ட என்
	மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே

அடிநேர் உரை 
	
	எம்முடைய மிகுந்த விருப்பம் சரியாக அமைந்தால்,
	மெய்மையையே நிறைந்த பெரிய கொள்கையாய்ப் பூண்ட தலைமை சான்ற கோசர்களின் -
	திரண்ட பசிய காய்களின் குடுமிப்பக்கம் பழுத்த
	பாகல்பழங்களை விரும்பி உண்ணும், பறை போன்ற கண்ணையுடைய பீலிகளையுடைய
5	மயில்கள் வாழும் சோலைகளையுடைய - துளுநாட்டைப் போன்று,
	வெறுங்கையுடன் வரும் அயலவர்களை நன்கு உபசரிக்கும் பண்புடைய
	நெருக்கமாக அமைந்த சேரிகளையுடைய தலைமையான முதிய ஊர்கள்
	அறிமுகம் உள்ள மக்களைக் கொண்டது ஆகுக – 
	தோழியர்களும் நானும் தனிமையில் வருந்த,
10	முகபடாம் அணிந்த யானையினைக் கொண்ட - ஒளிர்கின்ற அணிகலன்களைப் பூண்ட - நன்னனின்
	பாழி நகரத்தைப் போன்று மிகுந்த கட்டுக்காவலை உடைய அகன்ற (நம்)இல்லத்தின்
	செறிந்த பாதுகாப்பையும் மீறி அவனோடு போன,
	அரிய சுரத்தில் உள்ள இலுப்பை மரத்தின் ஆர்க்கு கழன்ற புதிய பூக்களைத்
	தின்ற வாயையுடைய, தூசி நிலத்தின்மேல் பரவும்படியாகக்
15	கொன்றை மரத்தின் கிளைகளில் உள்ள குழல் போன்ற பழத்தைத் தடவிக்கொடுத்து-
	வலிய கையை உடைய கரடியின் வலிமை உள்ள கூட்டம்- பரவலாகச் செல்லும்-
	தனது இனிய துணைவனை நினைந்த உள்ளத்தோடு ஒன்றுசேர்ந்து
	மலை மூங்கிலைப் போன்ற திரண்ட என்
	மெல்லிய தோளையுடைய மகள் சென்ற - வழி.

அருஞ்சொற் பொருள்:

வெம் காமம் = மிகுந்த விருப்பம்; செம்மல் = தலைமைப் பண்பு; கோசர் = துளுநாட்டைச் சேர்ந்த ஒரு குடி மக்கள்; 
கொம்மை = உருண்டு திரண்ட; குடுமி – உச்சி; கா = சோலை; வம்பலர் = புதியவர்; மாக்கட்டு = மக்களைக் கொண்டது; 
சூழி = யானையின் முகபடாம்; பாழி = நன்னர் என்ற குறுநில மன்னரின் மலைநகரம்; கடி = காவல்; 
அத்தம் = கடப்பதற்கு அரிய நிலம்/வழி; இருப்பை = இலுப்பை; ஆர் = ஆர்க்கு, பூவின் புல்லிவட்டம், Calyx; துகள் = தூசி; 
கொழுது = கோதிவிடு; எண்கு = கரடி; வய நிரை = வலிய கூட்டம்; வேய் = மூங்கில்; 
அஞ்ஞை = அன்னை- இங்கு மகளைக் குறித்தது.

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	இது ஒரு பாலைத்திணைப் பாடல். பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்பதே இதன் உரிப்பொருள். இங்கே 
தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற தன் மகளை நினைத்து ஒரு தாய் வருந்திக் கூறிய மொழியே இப்பாடலாய் அமைந்துள்ளது. 
களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவியின் காதல் அவளின் வீட்டாருக்குத் தெரிய வரவே, அவள் இற்செறிக்கப்படுகிறாள். 
ஏற்கனவே கட்டுக்காவல் மிக்க வீட்டில், தலைவிக்கான சிறப்புப் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. ஆனால், 
‘கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா’ என்கிறாற்போல், தலைவி, கட்டுக்காவலையும் மீறித் தப்பித்துத் தலைவனுடன் 
சென்றுவிடுகிறாள். தாயுள்ளம் பதறுகிறது. ‘என் மகள் போகிற பாதை கடிய பாதையாக இருந்தாலும், வழியில் அடுத்தடுத்து 
நன்மக்கள் கொண்ட பழமையான ஊர்களைக் கொண்டதாக இருக்கட்டும், அவர்கள் வெறுங்கையுடன் வரும் அன்னியர்களையும் 
விருந்தினர் போல் பேணித் தாங்கும் பண்பினராக இருக்கட்டும்’ எனத் தனக்குத்தானே பேசிக்கொள்கிற தாயின் கூற்றாக 
அமைந்திருக்கிறது இப் பாடல்.

மாமூலனாரின் வரலாற்றுக் குறிப்புகள்

	புலவர் இப் பாடலில் இரண்டு வரலாற்றுக் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். முதற் குறிப்பு துளுநாட்டைச் சேர்ந்த 
கோசர்களைப் பற்றியது. அவர்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணக்கிடைக்கின்றன. அவர்கள் 
வாய்மையைக் கைக்கொள்வதையே தங்களின் பெரும் கொள்கையாகப் பூண்டவர்கள் என்று இங்கு புலவர் குறிப்பிடுகிறார். 
மேலும் அவர்கள் தலைமைப் பண்பு மிக்கவர்கள் என்பதைச் செம்மல் கோசர் என்ற கூற்றால் குறிப்பிடுகிறார் புலவர். 
இன்றைக்கும் தென்கன்னட மேற்குக் கடற்கரைப் பகுதியில் துளுமக்கள் வாழ்கின்றனர். அவர்கள் பேசும் துளுமொழி திராவிட 
மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்பர் மொழியியலார்.

			

	துளு நாட்டினரைப் பற்றிக் கூறும் ஓர் ஆய்வுக்குறிப்பு கூறுவதைப் பாருங்கள்.

	The Tulu live in southern India in the state of Karnataka. They inhabit a large number of villages and towns 
in the southern portion of the state. The Tulu are a fair-skinned people who are known for their friendliness and hospitality. 
They speak a Dravidian language, also called Tulu, which lacks a script. As a result, the script of the related Kannada 
language is used. Kannada is a common second language, and some Tulu speak English as well. In the regions bordering 
the state of Kerala, the Tulu can also understand the neighboring Malayalam language.
நன்றி: http://www.joshuaproject.net/people-profile.php?peo3=15627&rog3=IN

	துளுநாட்டு மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் துளுநாட்டு மக்கள் வறுங்கை 
வம்பலர்த் தாங்கும் பண்பினர் என்று கூறியிருப்பது எத்துணை உண்மையான கூற்று எனத் தெரிகிறதா?. அவர்களைப் போன்ற 
மக்களைக் கொண்டது ஆகுக, என் மகள் செல்லும் வழி என்று தலைவியின் தாய் கூறுவதாகப் புலவர் படைத்திருக்கிறார். 

	அடுத்து, நன்னன் என்ற குறுநில மன்னனைப் பற்றிப் புலவர் குறிப்பிடுகிறார். நன்னனின் யானைப்படை மிகச் சிறந்தது 
என்பதையும், அவன் ஒளிவிடும் அணிகலன்கள் நிறையப் பூண்டவன் என்பதையும் சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் என்ற 
சொற்களால் குறிப்பிடுகிறார் புலவர். நன்னனின் தலைநகர் பாழி என்னும் ஊர். அது கடுங்காவல் மிக்கது என்பதைப் பாழி அன்ன 
கடியுடை வியல்நகர் என்ற சொற்களால் குறிப்பிடுகிறார் புலவர். இத்தகைய செறிந்த காப்பையும் மீறி தலைவி சென்றிருக்கிறாள் 
என்றால், அது அவளுடைய துணிவு, திறமை, உறுதியான காதல் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்பதாகப் புலவர் கூறுகிறார் 
எனலாம்.

	சங்க இலக்கியங்கள் நன்னன் என்ற பெயர் கொண்ட மூன்று மன்னர்களைப் பற்றிக் கூறுகின்றன. அவர்களில் 
கொண்கான நன்னன் என்று குறிப்படப்படுவன்தான் இங்கு மாமூலனாரால் பாடப்பட்டிருக்கிறான் எனலாம்.

	பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு
	ஏழில் குன்றம் பெறினும் – நற் 391/6,7

	என்ற நற்றிணை அடிகளால் இவன் ஏழில் என்ற மலையை உடையவன் எனத் தெரிகிறது.

	பாழி என்ற இடத்தில் இவன் ஆய் எயினன் என்பவனைப் போரிட்டுக் கொல்கிறான் (அகம் 396). 

	பாரத்துத் தலைவன் ஆர நன்னன்
	ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில் – அகம் 152/12,13

	என்ற பரணரின் பாடலால், இவனது தலைநகர் பாரம் என்றும் ஏழில்மலை என்ற மலையில் பாழி என்ற இடத்தில் 
கோட்டை கட்டியிருந்தான் என்றும் அறிய முடிகிறது. எனவே பாழி என்பது ஒரு மலைக்கோட்டை நகர் எனத் துணியலாம். 
இந்த ஏழில்மலை என்பது வடமொழிகளில் ஏலிமலை என்று எழுதப்பட்டு, மீண்டும் தமிழில் எலிமலை ஆகி, இவனது வம்சம் 
மூசிக வம்சம் (மூசிகம் = எலி, மூஞ்சூறு, shrew mouse) என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவது ஒரு historical accident 
போலத் தோன்றுகிறது. இதைத் தமிழக வரலாற்றாசிரியர்களும் இலக்கிய அறிஞர்களும் சரிசெய்ய முயலவேண்டும். 

	இதைப் பற்றி விக்கிப்பீடியா கூறுவதைப் பாருங்கள்.

	Mushika Kingdom (also called Ezhimalai Kingdom,  Puzhinadu,  Konkanam or Mushaka Rajya) was an ancient 
kingdom of the TamilSangam age in present day northern Kerala, India ruled by the Royal dynasty of the same name. 
They ruled the strip of land betweenMangaluru in the north and Vadagara in the south. It was one of the three kingdom of 
Sangam Age Kerala, along with the Chera kingdom and the Ay kingdom. Ezhimalai Konkanam Nannan was the most powerful 
ruler of Ezhimalai, he expanded the kingdom to Wynad, Gudallore and to parts of Coimbatore. With the death of Nannan 
in a battle against the Cheras, the kingdom dissolved in the Chera kingdom.
	
				
			நன்றி: http://en.wikipedia.org/wiki/Nannan

மாமூலனாரின் உள்ளுறை நயம்

	உள்ளுறையாகச் செய்திகளைச் சொல்வதில் சங்கப்புலவர்கள் ஒருவரை ஒருவர் விஞ்சித் தோன்றுவதைக் காணலாம். 
இப் பாடலில் புலவர் இரு உள்ளுறைகளை அமைத்துள்ளார். கோசர்களின் துளுநாட்டைப் போல விருந்தினர் ஓம்பும் மக்களைப் பெறுக 
என் மகள் சென்ற வழி என்கிறாள் தாய். அந்தத் துளுநாடு சோலைகளைக் கொண்டது. அச் சோலைகளில் மயில்கள் ஆடும். 
அம் மயில்களின் பீலி எனப்படும் தோகைகள் பறை போன்ற கண்களை உடையன. மேலும் அம் மயில்கள் பாகல் பழத்தை விரும்பி 
உண்ணும். அப் பாகல் பழங்களோ, உருண்டு திரண்டு வளர்ந்த பசிய காய்கள் தம் உச்சியிலிருந்து பழுத்து உண்டானவை.

	கொம்மை அம் பசுங்காய்க் குடுமி விளைந்த
	பாகல் ஆர்கைப் பறைக் கண் பீலித்
	தோகைக் காவின் துளுநாட்டு அன்ன

	என்பது புலவரின் வருணனை. கொம்மை வரி முலைக் குமரியாம் எம் மகளான பெண்பாவை, பழுத்த பாகலைப் போல் 
பருவம் அடைந்து நிற்க,  கொத்திக்கொண்டு சென்றுவிட்டானே – பறைக்கண் பீலி கொண்ட ஆண்மயிலைப் போன்ற ஆணழகன் 
ஒருவன் – என்று புலம்புகின்றாளோ தலைவியின் தாய்?

	அடுத்து, மகள் சென்ற வழியில் அவளைப் பேணிப் புரக்கும் நல்மாந்தர் இருக்கட்டும் என விரும்பி வேண்டுகிறாள் தாய். 
அந்த வழியில் வலிய கைகளை உடைய கரடிகள் கூட்டம் கூட்டமாய்ப் பரவிக்கிடக்குமாம். அவை கொன்றை மரத்தின் அழகிய 
கிளைகளில் பழுத்துள்ள குழற்பழங்களைக் கோதிவிட்டு, நிலத்தில் தூசி பறக்க நடந்துதிரியுமாம் – அவை அந்த வறண்ட நிலத்தில் 
இருக்கும் இலுப்பையின் புறவிதழ்கள் கழன்ற புதிய பூவினை வாயில் மென்றுகொண்டே இருக்குமாம். இதெல்லாம் எதற்காக? 
தாய் குறிப்புமொழியாக எதை உணர்த்த வருகிறாள்? செழித்த நிலத்தில் தேனுண்டு மகிழ்ந்த கரடிக்கூட்டம், இன்று இந்த வறண்ட 
நிலத்தில் இலுப்பைப்பூவை மென்றுகொண்டு திரிவது போல், தந்தையின் செழிப்பு மிக்க வீட்டில் இனிமையுடன் வாழ்ந்த தன் 
மகளுக்கு, இன்று தலைவனுடன் வாழும் எளிய வாழ்க்கையும் இனிக்கின்றதோ? மென்தரையில் மெல்ல நடந்து திரிந்த மகள், 
இன்று வன்தரையில் கரடி போல் புழுதிபறக்க நடந்துதிரிகிறாளோ?  கொன்றையாய்ப் பூத்திருக்கும் தாயையும், அதில் குழற்பழமாய் 
அண்டியிருக்கும் தோழிமாரையும், ஒதுக்கிவிட்டுச் செல்கிற கரடியைப் போல் உதறிவிட்டுப் போனாளே என் மகள்” என்று 
புலம்புகிறாளோ தாய்? 

மாமூலனாரின் சொல்நலம்

1. ஓடிப்போனவளா – இல்லை – இன்துணைப் படர்ந்த மென் தோளாள்

	இலுப்பைப்பூவைப் பற்றிச் சொல்ல வந்த புலவர், ஆர் கழல் புதுப்பூ என்கிறார். ஆர் என்பது ஆர்க்கு – மலரின் புறத்தே 
இருக்கும் புல்லிவட்டம். அது மூடியிருந்தால் அரும்பு இன்னும் மலரவில்லை என்று பொருள். ஆர்க்கு கழன்றுகொள்ள உள்ளிருக்கும் 
இதழ் விரியும். பொதுவாக இதனைத் தளைஅவிழ்தல், கூம்புவிடுதல் என்று புலவர்கள் கூறுவதுண்டு. இங்கே புலவர் மலர்தலைக் 
குறிக்க ஆர் கழல் என்ற புதிய சொல்லைப் பயன்படுத்துகிறார். இலுப்பை மரம் அப்போதுதான் பூக்க ஆரம்பித்திருக்கிறது. இதைத்தான் 
ஆர்கழல் புதுப்பூ என்கிறார் புலவர். அதுவரை கொன்றைப்பழங்களை உண்டுவந்த கரடிகள், இலுப்பைப்பூவின் புதுப்பூவைப் பார்த்ததும், 
கொன்றையின் குழற்பழங்களைக் கோதிவிட்டு, இலுப்பையின் இனிய பூக்களை உண்ண ஆரம்பித்துவிட்டன என்கிறார் புலவர். 
இத்தனை நாள் பழகிய தாய், தோழியர் ஆகியோரைத் துறந்துவிட்டு ‘நேற்று வந்தவனோடு’ அவள் போய்விட்டாளே என்ற தாயர் 
புலம்பலைக் குறிக்கிறதோ இது? இவ்வாறு புதிதாய் ஒன்று கிடைத்தவுடன் பழையதை மறந்துவிடும் பண்புடையவள் அல்ல என் மகள் 
– குழந்தைப் பருவத்து உறவுகள் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தற்காலிக உறவுகளே – கொழுநனின் உறவே கொழுகொம்பான 
நிலைத்த உறவு – இனிமேல் என் மகள் மாறமாட்டாள் என்பதைக் குறிக்கவே தாய், ‘இன் துணைப் படர்ந்த கொள்கையொடு 
ஓராங்கு சென்றாள்’ என் மகள் என்கிறாள் தாய். ஓராங்கு என்பதற்கு ஒன்றுசேர்ந்து, உடனுறைந்து என்று பொருள். 

				

	விட்டுப் பிரிந்த மகளை நினைத்த அந்த வேதனையிலும் தாய்க்கு மகளை விட்டுக்கொடுக்க மனமில்லை என்பதை எத்துணை 
நுணுக்கமாகப் புலவர் குறிப்பிடுகிறார் என்று பாருங்கள். மேலும், வன் கையைக் கொண்ட எண்கு போல் என்று தன் மகளை 
எண்ணிவிட்டோமோ என்று எண்ணிப்பார்த்த தாய் கூறுகிறாள், “என் மகளின் தோள் மலை மூங்கிலைப் போல் வழுவழுப்பானது - 
திரண்டிருந்தாலும் என் மகளின் தோள் மெல்லியது” என்று முத்தாய்ப்பாய்க் கூறுகிறாள். மென் தோள் அஞ்ஞை என்கிறாள் 
தன் மகளை. வெறும் இலுப்பைப்பூவை மென்றுகொண்டு திரிகிற கரடியா இவள்? இல்லை, இல்லை. தன் மனதுக்கு இனிய துணையைப் 
பற்றிப் படர்ந்திருக்கிறாள் அவள். கால்களில் தூசி பறக்கக் கண்டபடி பரவிக்கிடக்கின்ற கரடி அல்ல அவள் – தன் தலைவனை 
வரித்துக்கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று அவனுடன் ஒன்றிணைந்து இருப்பவள் அவள். 
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஓராங்கு

	குன்ற வேயின் திரண்ட என்
	மென்தோள் அஞ்ஞை சென்ற ஆறே

	என்ற அடிகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் எத்துணை ஆழமான கருத்தைத் தாங்கி நிற்கிறது என்று எண்ணிப்பாருங்கள்.

				

	அஞ்ஞை என்பதற்கு அன்னை என்பது பொருள்.  ஒரு தாய் தன் மகளை அன்னை என்று ஏன் அழைக்கிறாள்? இன்றைக்கும் 
சில வீடுகளில் பெண்குழந்தைகளைத், “தாயீ” என்று அழைப்பது வழக்கம்.  இரு பெண்குழந்தைகள் இருந்தால், பெரியவளைப் பெரியதாய் 
என்றும், சிறியவளைச் சின்னத்தாய் என்றும் அழைப்பது வழக்கம். இன்றைக்கும் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் தந்தையை ஆஞா என்று 
அழைப்பது வழக்கம். அதன் பெண்பாற்சொல்லான, அன்னைக்குரிய ஆஞை என்ற சொல்தான் அன்றைக்கு அஞ்ஞை என்று வழங்கியது 
எனலாம். 

2. விளைந்த பாகலும், ஆரும் தோகையும்

	விளைந்த பாகல் ஆர்கைப் பறைக்கண் பீலித் தோகை என்கிறார் புலவர். மயில் பாகல்பழத்தை உண்ணுமா? 
உண்ணும் என்கிறார் மாமூலனார்.

	மடக்கண்ண மயில் ஆல
	பைம்பாகல் பழம் துணரிய
	செஞ்சுளைய கனி மாந்தி – பொரு 190-192

	என்ற பொருநராற்றுப்படை அடிகளும் இதை உறுதிப்படுத்தும். இந்தப் பாகல் கொடியில் காய்க்கும் – அதன் வெளிப்பக்கம் 
பலாக்காய் போன்று சொரசொரப்பாக இருக்கும் என்பதையும் இலக்கியங்கள் கூறுகின்றன.

	பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ – அகம் 156/5

	பைங்கொடிப் பாகல் செங்கனி நசைஇக்
	கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை
	…… நரலும் 				- அகம் 177/9-11

	பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல் – அகம் 255/13

	செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல் – புறம் 399/6

	என்ற அடிகள் மூலம் பாகல் கொடி, காய், பழம் ஆகியவை இலக்கியச் சிறப்பு மிக்கவை என்று அறியலாம். 
இந்தப் பாகலில் இரு வகை உண்டு. இரண்டும் கொடி வகையினவே. ஒரு வகைக் காய் சற்று நீளமாக இருக்கும். அடுத்தது சற்று 
குட்டையாக உருண்டு இருக்கும். உருண்டையாக இருப்பதைப் பொடிப்பாவக்காய் அல்லது மிதி பாவக்காய் என்பர். நீளப் பாகல்காயைக் 
கொம்மம்பாவை என்பர். பாகல் என்பதே பாவை என்றானது. புலவர் கூறும் கொம்மை அம் பசுங்காய் என்பதே, இன்று மக்கள் வழக்கில் 
கொம்மம் பாவை ஆனதோ? இந்தப் பாகற்காயின் நுனி கூர்மையாக இருக்கும். இதையே குடுமி என்கிறார் புலவர். பாகற்காயைச் 
சில நாட்கள் வீட்டில் வைத்திருந்தால் விரைவில் அது பழுத்துவிடும். எனவே,அதன் நுனியைக் கிள்ளி வைப்பர். காரணம், அது முதலில் 
நுனிப்பக்கம்தான் பழுக்கத்தொடங்கும் என்பர். இதனையே புலவர் குடுமி விளைந்த பாகல் என்று குறிப்பிடுகிறார் எனலாம். 

				

	குடுமி என்பது தலையின் உச்சியில் உள்ள தலைமயிரைக் குறிக்கும். பொதுவாக, இது உச்சியில் உள்ள ஒரு பகுதியை 
அல்லது உச்சியைக் குறிக்கும். தேங்காய்க் குடுமி, உச்சிக்குடுமி, கீல்ப்பட்டைக் குடுமி என நாம் அறிவது ஒரு பொருளின் மேல் நுனியில் 
இருப்பது. பாகல்காய்க்குக் குடுமி எது? அது செடியுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் பகுதிதானே? இல்லை என்கிறது தமிழ். செடியுடன் 
ஒட்டிக்கொண்டிருக்கும் மேல் பகுதி நுனியைக் காம்பு என்கிறோம். எனவே அடுத்த பகுதியான கீழ்ப்பகுதி நுனிதான் அதற்கு குடுமி 
ஆகிறது.

	தோகை என்பது ஆகுபெயராகத் தோகையைக் கொண்ட மயிலைக் குறிக்கும். மயில் தோகையின் ஒரு கீற்று பீலி எனப்படும். 
அந்தப் பீலியில் கண் போன்ற ஓர் அமைப்பு இருக்கும். அந்தக் கண் முரசின் மேற்பரப்பு போன்ற தோற்றம் கொண்டது என்கிறார் புலவர். 
பறைக்கண் பீலித் தோகை என்பது எத்துணை நயமான வருணனை பாருங்கள்! இத்தகைய அழகு வாய்ந்த ஆண்மகனே என் மகளை 
உடன் அழைத்துச் சென்றவன் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறாளோ தாய்?

				
			(மயிலின் அருகில் இருப்பவர் கட்டுரை ஆசிரியர்)

3. வெறுங்கையை வீசிக்கொண்டு

	தன் மகள் செல்லுகின்ற வழியில் உள்ள ஊர்களில் உள்ள மக்கள், வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின் … 
அறிந்த மாக்கட்டு ஆகுக’ என்று தாய் வேண்டிக்-கொள்கிறாள். உடன்போக்காகத் தலைவனுடன் சென்ற தலைவி, வளையல் உட்பட 
அனைத்து அணிகலன்களையும் கழற்றிவைத்துவிட்டு, வெறுங்கையை வீசிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறாள் என்பதை 
எத்துணை நயமாகப் புலவர் குறிப்பிடுகிறார் பாருங்கள்! 

4. கோட்டைக் காப்பும் குமரிக்குப் பூட்டும்

	தலைவி வீட்டுக்காவலை மீறிச் சென்றதை, நன்னன் பாழி அன்ன கடியுடை வியல்நகர்ச் செறிந்த காப்பு இகந்து என்று புலவர் 
குறிப்பிடுகிறார். இது உண்மையில் நன்னனின் பாழியின் கடுமையான காவலுக்குக் கூறப்படும் பாராட்டுரையா? இந்தச் செறிந்த காப்பையே 
ஒரு சிறுமி இகந்து சென்றுவிட்டாளே! அந்தப் பாழியின் காப்பை இகக்கப் பகைவர்க்கு இயலாதா? என்ற ‘தொனி’ இதில் 
தொனிக்கவில்லையா? உண்மையில் நன்னனைக் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்னும் ஒரு சேரமன்னன் வென்று கொன்றான் 
என்ற செய்தியை,

	பொலம்பூண் நன்னன் பொருது களத்து ஒழிய – அகம் 199/20

	என்ற அடியால் அறிகிறோம். மாமூலனாரின் இந்தப் பாடல்,  இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் பாடப்பட்டதாக இருக்கவேண்டும். 
இப்படிப்பட்ட நன்னனுக்கும் ஒரு வீழ்ச்சி உண்டு என்று கட்டியம் கூறுகிறதோ இந்தப் பாடல்?

சிறப்பு விளக்கங்கள்

1. இருப்பை

	இலுப்பை மரம் என்று நாம் இன்று சொல்லும் மரமே இலக்கியங்களில் இருப்பை எனப்படுகிறது. ஆலை இல்லாத ஊருக்கு 
இலுப்பைப்பூ சர்க்கரை என்ற பழமொழியை நாம் பயன்படுத்துகிறோம். இங்கு ஆலை என்பது கரும்பாலை. இனிப்பான வெல்லம் தருவது. 
அது கிடைக்காதவர்கள் இலுப்பைப் பூவையே இனிப்பாகப் பயன்படுத்துவர் என்பது இப் பழமொழியின் பொருள். எனவே இதை ஏழைகளின் 
இனிப்பு எனலாம். பாலை நிலத்தில் கரும்பு ஏது? தேனும்தான் ஏது? அதனால் கரடிகளும் தேன் இல்லாத நிலத்தில் தெவிட்டுமாம் 
இலுப்பைப்பூ என்று அதனை வாயிலிட்டு மென்றுகொண்டே திரிகின்றன என்கிறார் மாமூலனார்.

	இலுப்பையை, அத்த இருப்பை என்கிறார். அத்தம் என்பது பாலை நெடுவழி. எப்படிப்பட்ட வறண்ட காலத்தும் நிறைய 
இலைகளுடன் நிழல்தரும் மரங்களாக இவை இருக்கின்றன என்று புலவர் சொல்லாமல் சொல்லுகிறார். வேனில் காலத்துத் தொடக்கத்தில், 
இவை இலை களைந்து பூக்க ஆரம்பிக்கும். இந்தப் பூ அந்தப் பகுதி மக்களுக்கு ஆண்டுத் தேவைக்கான இனிப்பை நல்குகிறது. கரடிகளும் 
மரம் ஏறி இதைச் சுவைத்து மகிழ்கின்றன என்பதை, புதுப்பூத் துய்த்த வாய என்பதன் மூலம் குறிப்பிடுகிறார் புலவர்.

				

	கரடிகள் மரம் ஏறுமா? ஏறும் – அவை வலிய கைகளை உடையவை என்பதை வன் கை எண்கு என்பதன் மூலம் 
குறிப்பிடுகிறார் புலவர்.

				

	இலுப்பையின் இனிய பூவைத் தின்றுகொண்டே அவை மகிழ்ச்சியுடன் கால்களைத் தூக்கி எட்டு எடுத்து வைக்காமல், 
நிலத்தைத் தேய்த்துக்கொண்டு புழுதி பறக்க நடக்கின்றன என்பதைக் குறிப்பாக, துகள் நிலம் பரக்க என்று கூறும் நயம்தான் என்னே!. 
அவ்வாறு அவை ‘ஜாலி’யாக நடந்துவந்து அதுவரை இனிப்பு என்று தின்றுவந்த கொன்றைப் பழங்களை இளக்காரமாக ஒரு தட்டுத் தட்டி 
விட்டு நடந்துபோகின்றனவாம். கொன்றை அம் சினைக் குழல் பழம் கொழுதி என்கிற சொற்களில் காணப்படும் இளக்காரத்தைக் 
கவனித்தீர்களா? இந்த ஏற்ற இறக்க உணர்ச்சிகளோடு சேர்ந்து பாடல் வரிகளைப் படிக்கும்போதுதான் நாமும் அதன் இனிமையைச் 
சுவைத்து,  வேறெதனையும் இனிமை என்று சொல்பவர்களை விரலால் ஒரு தட்டு தட்டிவிட்டுப் போகலாம்.

	இந்த இலுப்பை மரத்தைப்பற்றி அதனை வளர்த்துப் பராமரிப்பவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.

உணவாகும் இலுப்பைப் பூ !

	“ … மரத்தில் ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் இலைகள் கொட்ட ஆரம்பித்து, பங்குனி மாதக் கடைசியில் பூ விட்டு, 
சித்திரையில் பிஞ்சு இறங்க ஆரம்பித்து, ஆவணி-புரட்டாசியில் இலுப்பைக் கொட்டைகள் கிடைக்கும். …..

	பூக்கொட்டும்போது, இலைகளைக் கூட்டி ஓரமா தள்ளி வைத்துவிட்டு, தரமான பூக்களைச் சேகரித்து உணவு மற்றும் மருந்துக்கு 
மக்கள் பயன்படுத்துகிறார்கள்.”
நன்றி:  http://iluppaithoppu.blogspot.in/2012/09/25092012.html

	இவை பங்குனி/சித்திரையில் பூத்துக்காய்க்கும் என்பதனால் இது பனிக்காலம் முடிந்து வேனில் காலம் தொடங்கும் நாள் என 
அறிகிறோம். பனியில் முடங்கிக் கிடந்த (கூ)வீட்டுக்கிளி, வேனில் பிறந்ததும் வெளியேறிப் பறந்துவிட்டது என்கிறார் புலவர்.

இலுப்பை – 	common name : South Indian Mahua
		Botanical name :  Madhuca longifolia var. longifolia 			
நன்றி : 	http://www.flowersofindia.net/catalog/slides/South%20Indian%20Mahua.html
	http://researchandmedia.ning.com/profiles/blogs/for-mental-shock-and-disturbing-sleep-tree-shade-therapy-and-bare

2. பாகலும் கொன்றையும் பழம் தருமா?

	பாகற்காய் என்பது பலர் விரும்பாத காய்கறிகளில் ஒன்று. அது சமையல் காய். எனவே அதன் பழம் எவ்வாறு இருக்கும் எனப் 
பலருக்குத் தெரியாது. வீட்டில் பச்சைப் பசேல் என்ற பாகற்காய் வாங்கிவைத்து, பலநாள் மறந்துவிட்டுப் பார்த்தால் மஞ்சமஞ்சேரென்று 
மாறியிருக்கும். தொட்டால் நெழுநெழுவென்று இருக்கும். கொஞ்சம் அழுத்தினால் தோல் நெகிழ்ந்து செக்கச் செவேலென்ற கொட்டைகள் 
முழித்துப் பார்க்கும். அப்படியே தூக்கிக் குப்பையில் போட்டுவிடுவார்கள். இதனை மயில் மட்டும் பார்த்தால்? அப்படியே ஒரு ‘லபக்’. 
மயிலுக்கு இதன் மீது கொள்ளை ஆசை. செஞ்சுளைய கனி மாந்தி என்று நாம் ஏற்கனவே பார்த்ததற்கு விளக்கம் கீழே!.

				

	கொன்றை என்றாலே அதன் பொன்னிறப் பூச்சரம்தான் நினைவுக்கு வரும். அது காய்த்துப் பழுக்குமா? Indian laburnum என்ற 
பொதுப் பெயர் கொண்ட இந்த மரம், குழல் வடிவான நீண்ட காய்கள் விடும். இதன் பழத்தையே குழற்பழம் என்கிறார் புலவர். 
அது பற்றிய செய்திகள் இதோ!

Botanical name: Cassia fistula.  The results of the present study demonstrate that the Indian laburnum fruit could be a source of 
some important nutrients and energy for humans. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/7784398
Fruits: cylindrical pods, 30-60 cm long, shortly stipulate. 
Seeds: broadly ovate, horizontally immersed in dark coloured sweetish pulp.
Fruits: Fruits are sweet in taste and have cool, emollient, purgative, anti inflammatory, depurative, anti pyretic, diuretic and 
ophthalmic properties. The fruits are useful in conditions such as vitiated conditions of Pitta, burning sensation, leprosy, skin diseases,
 flatulence, colic, inflammations, rheumatism, gout, anorexia, liver and spleen diseases, cardiac debility, intermittent fever, strangury, 
opthalmopathy and general debility.
http://food.sify.com/articles/The_Ayurvedic_Properties_of_Indian_Laburnum-230412
http://neeraitraders.blogspot.com

	கொன்றையின் மரமும், கிளையும், பூவும்தான் அழகே ஒழிய அதன் காயும் பழமும் அல்ல என்பதைக் குறிப்பாக, 
கொன்றை அம் சினைக் குழல்பழம் என்று கூறும் புலவரின் குறும்புதான் என்னே!