அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 37

பாடல்  37. பாலைத் திணை    பாடியவர் - விற்றூற்று மூதெயினனார்

துறை - தலைமகள் தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது 
	(2) பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉமாம்..

  மரபு மூலம் - காமர் வேனில்

	மறந்தவ ணமையா ராயினுங் கறங்கிசைக்
	கங்கு லோதைக் கலிமகி ழுழவர்
	பொங்கழி முகந்த தாவில் நுண்டுகள்
	மங்குல் வானின் மாதிரம் மறைப்ப
5	வைகுபுலர் விடியல் வைபெயர்த் தாட்டித்
	தொழிற்செருக் கனந்தர் வீட எழிற்றகை
	வளியொடு சினைஇய வண்டளிர் மாஅத்துக்
	கிளிபோற் காய கிளைத்துணர் வடித்துப்
	புளிப்பதன் அமைத்த புதுக்குட மலிர்நிறை
10	வெயில்வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடைக்
	கயமண்டு பகட்டிற் பருகிக் காண்வரக்
	கொள்ளொடு பயறு பால்விரைஇ வெள்ளிக்
	கோல்வரைந் தன்ன வாலவிழ் மிதவை
	வாங்குகை தடுத்த பின்றை யோங்கிய
15	பருதியங் குப்பை சுற்றிப் பகல்செல
	மருத மரனிழ லெருதொடு வதியும்
	காமர் வேனில் மன்னிது
	மாணல நுகருந் துணையுடை யோர்க்கே

 சொற்பிரிப்பு மூலம்

	மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசைக்
	கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
	பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்
	மங்குல் வானின் மாதிரம் மறைப்ப
5	வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டித்
	தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை
	வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
	கிளி போல் காய கிளைத் துணர் வடித்துப்
	புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
10	வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசும் குடைக்
	கயம் மண்டு பகட்டின் பருகிக் காண்வரக்
	கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளிக்
	கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை
	வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய
15	பருதி அம் குப்பை சுற்றிப் பகல் செல
	மருத மர நிழல் எருதொடு வதியும்
	காமர் வேனில்மன் இது
	மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே

அருஞ்சொற் பொருள்:

கறங்கு இசை = ஒலிக்கும் இசை; கங்குல் = இருள்; ஓதை = ஆரவாரம்; பொங்கழி = தூற்றாத பொலி; தா = வலிமை; 
மங்குல் = புகைமூட்டம், மூடுபனி; மாதிரம் = திசைகள்; வைகு = விடிதல்; வை = வைக்கோல்; அனந்தர் = மயக்கம்; 
வீட = குறைய; துணர் = கொத்து; வெரிந் = பின்பக்கம்; பகடு = காளைமாடு; குப்பை = நெற்குவியல்; 
வதியும் = தங்கியிருக்கும்; காமர் = அழகிய;  

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	இது பாலைத்திணைப் பாடல். பிரிவைப் பற்றியது. இதற்குரிய நிலம் வறண்ட பாலை நிலம். உரிய 
பொழுதோ நண்பகல். மற்றத் திணைகளில் இருப்பது போல, பாலைத்திணைத் தலைவி பாலைநிலத்தில் 
வசிக்கமாட்டாள். பொதுவாக முல்லை நிலத்தைச் சேர்ந்தவளாக இருப்பாள். ஆனால் தன்னைவிட்டுப் பிரிந்து கொடும் 
பாலைநிலத்தின் வெஞ்சுரத்தில் சென்றிருக்கும் தலைவனைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருப்பாள். ஆனால் 
இப் பாடலின் தலைவி மருதநிலப் பகுதியில் வாழ்பவள். வைகறைப் பொழுதில் எழுந்த தலைவி, 
“இளவேனில் தொடக்கத்தில் வந்துவிடுவேன்” என்று சொல்லிவிட்டுப் போன தலைவன் இன்னும் வராததால் 
“இளவேனிலின் இன்பமெல்லாம் எனக்குக் கிட்டாதோ” என ஏங்குகிறாள்.

	காலைப் பொழுதில் தன்னைச் சுற்றி நடக்கும் சுறுசுறுப்பான நடவடிக்கைகளைக் கவனிக்கிறாள் தலைவி. 
பொழுது இன்னும் புலராத அரை இருட்டில் உழவர்கள் அக்கம் பக்கத்தாரை உரக்க அழைத்து எழுப்புகிறார்கள். 
களத்துமேட்டுக்குச் சென்று முந்தின நாள் அறுத்து அடித்துக் குவித்துத் தூற்றாமல் விட்டுவைத்திருந்த நெற்குவியலைத் 
தூற்றத் தொடங்குகிறார்கள். வேறு சிலர் தலையடி முடித்து அடுக்கி வைத்திருக்கும் நெல்தாள்களை எடுத்துப் பரப்பிக் 
காளைகளைக் கொண்டு போரடிக்கிறார்கள். பின்னர் வயிறு முட்டக் காலைக்கஞ்சி அருந்துகிறார்கள். மாலையில் வேலை 
முடிந்து மாடுகளைக் கழற்றிவிட்டு, நிழலில் குவித்திருக்கும் நெல்குவியலைச் சுற்றி அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள். 
நாற்று நட்டதிலிருந்து தொடர்ந்து வந்த பணிகளை எல்லாம் முடித்து, நல்ல அறுவடையும் ஆகி நெல்மணிகளையும் 
சேர்த்தாகிவிட்டது. அடுத்து இளவேனில்காலத் திருவிழாக்களை இன்பமுடன் கழிக்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 
இந்த இன்பமெல்லாம் உள்ளூரிலேயே உழைக்கின்றவர்களுக்குத்தான். பொருள் சேர்க்க வெளியூருக்குச் சென்றிருக்கும் 
தலைவன் இளவேனில் கொண்டாட்டங்களை மறந்து அங்கேயே தங்கிவிட்டாரோ.
 “மறந்து அவண் அமையார், ஆயினும்!!!” என்று ஏக்கத்துடன் துயரில் ஆழ்ந்திருக்கும் தலைவியையே நம் கண் முன் 
கொண்டுவந்து நிறுத்துகிறார் புலவர் விற்றூற்று மூதெயினனார்.

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	மறந்துஅவண் அமையார் ஆயினும் --------

	(என் தலைவர்) என்னை மறந்து வெளியூரிலேயே தங்கிவிடமாட்டார், எனினும்

	புதுப்பூங்கொன்றை
	கானம் கார்எனக் கூறினும்
	யானோ தேறேன் அவர் பொய்வழங்கலரே
	
	என்று உறுதிபடச் சொல்லி ஆற்றியிருக்கிறாள் முல்லைத்திணைத் தலைவி (குறுந் 21).. 
“என்னை மறந்து அங்கு இருக்கமாட்டார்; ஆயினும் இங்கே சேர்ந்து இருப்போர் எல்லாம் எவ்வளவு 
கொடுத்துவைத்தவர்கள்!” என்று பெருமூச்சுவிட்டு, முல்லைக்கும் பாலைக்கும் உள்ள மெல்லிய கோட்டைத் 
தாண்டிவந்துவிட்டாள் இந்த பாலைத் தலைவி.

	----------  ----------  ---------- கறங்குஇசைக்
	கங்குல் ஓதைக் கலிமகிழ் உழவர்
	பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்
	மங்குல் வானின் மாதிரம் மறைப்ப

	கறங்கும் ஒலிகளையுடைய
	பின்னிருட்டில் ஆரவாரத்தை உடைய மிகுந்த மகிழ்ச்சியுள்ள உழவர்
	தூற்றாப் பொலியை முகந்து தூற்ற வரும் கனமற்ற நுண்ணிய தூசுகள்
	மூடுபனி வானத்தைப் போன்று நாற்புரத்தையும் மறைக்க –

	அதிகாலையில் பலவிதப் பறவைகள் எழுப்பும் பல்வேறு ஒலிகள், 
	வீட்டு விலங்கினங்களின் பல்வித அழைப்புக் குரல்கள், 
	காலையில் எழுந்தோர் வீடு வாசல் பெருக்கும் ஒலி, 
	வாசல் தெளிக்கும் ஒலி, 
	பால் கறக்கும் ஒலி, 
	தயிர் கடையும் ஒலி 

	ஆகிய பல்வேறு ஒலிகளின் ஒன்றுபட்ட சேர்க்கையே கறங்கு இசை எனப்படுகிறது. 

	பல்வித தோல் இசைக் கருவிகளை ‘டிவிங், டிவிங்’ என்று தேய்க்கும்போதும், ‘டும் டும்’ என்று 
	அடிக்கும்போதும் அரிக்கூட்டு இன்னியம் கறங்கும் (மது.612). 

	ஏறு உடைப் பெருநிரைகளின் கழுத்துமணிகள் ‘கணங் கணங்’ என்று ஒலிக்கும்போது 
	கறங்கு மணி துவைக்கும் (மலை.573)

	உடுக்கைகள் ‘டுண்டுண்டுண், டுண்டுண்டுண்; என அடிக்கப்படும்போது பெரும் துடி கறங்கும் (நற் 77/2)

	உயர்ந்த பாறைகளினின்றும் ‘துடும் துடும்’ என்று ஓங்கிவிழும்போது 
	கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் (புறம் 148/1) 

	மற்றும் சில்வண்டுகளின் ‘ட்ரீஈஈஈஈஈஈஈஈ” என்ற ஓசை (பதி 58/13), 

	மழைக்காலத் தவளைகள் கூட்டாக எழுப்பும் ‘கர்ர, கர்ர, கர்ர’ என்ற ஒலிகள் (ஐங் 468/1), 

	கார்கால மேகங்கள் இடிக்கும் ‘கடமுட, கடமுட’ ஓசை (ஐங்.452/2) ஆகியவை எல்லாம் கறங்கு இசைகள். 

	கங்குல் என்பது இருள் – இங்கு அதிகாலைப் பின்னிருட்டு. முதலில் துயில் எழுந்தவர்கள், அடுத்தடுத்து 
மற்றவர்களையும் எழுப்புகிறார்கள். முதல்நாள் ஒரு பெரிய வயலில் கதிரறுப்பு நடந்து முடிந்திருக்கிறது. வயலில் 
அறுத்த கதிருடன் சேர்ந்த நெல்தாள்களைக் கட்டுக்கட்டாய்க் கட்டி களத்துமேட்டுக்குக் கொண்டுவருவார்கள். அங்கு 
அந்தக் கட்டை உயரத்தூக்கி ஒரே அடி – தரையில் – அடிப்பார்கள். உதிர்ந்துவிட்ட நெல்மணி போக, நெல்தாளை 
ஓரமாக அடுக்கிவைப்பார்கள். இவ்வாறு சேர்ந்த நெல்மணிக் குவியல்தான் பொங்கழி - தூற்றாத பொலி. 

	மறுநாள் விடிந்தும் விடியாத விடியற்காலையில் விழித்துக்கொண்ட ஒரு சில உழவர்கள் ஏனையோரை 
வேலைக்கு அழைக்க வீடுதோறும் சென்று உரக்க எழுப்புகின்றனர். இந்த ஆரவார ஒலியே கங்குல் ஓதை. ஓதை என்பது 
ஒரு சிலர் உரக்கப் பேசுவதால் ஏற்படும் அமளி. நேற்று அறுவடையானது இன்று முடியப்போகிறது என்ற உற்சாகத்தில் 
“எலே, சீக்கிரம் வாங்கடா, வெள்ளெனப் போயி வேலய முடிக்கணும்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் உழவர் ஆட்களை 
அழைக்கின்றனர்.

	களத்துமேட்டுக்குச் சென்றவர்களில் ஒருசிலர் முந்தின நாள் அடித்துப்போட்ட பொங்கழி நெல்லைக் காற்றில் 
தூற்ற முனைகின்றனர். நெல்லை ஒரு சுளகில் முகந்து எடுத்து, தலைக்கு மேலே தூக்கிப் பின் சிறிது சிறிதாகக் கீழே 
கொட்டுவதுதான் தூற்றுதல். இவ்வாறு தூற்றும்போது நெல்மணிகள் கீழே விழுந்துவிடும். அவற்றுடன் சேர்ந்திருக்கும் 
தூசு, பதர் போன்றவை கனம் அற்றவையாதலால் காற்றில் பறந்துவிடும். அவ்வாறு காற்றில் பறந்து செல்லும் 
நுண்துகள்கள் மூடுபனி போன்று நாற்புறமும் சூழ்ந்து பார்வையையே மறைக்கின்றனவாம். 
	
			

			

	மங்குல் வானத்தைப் போல மாதிரம் மறைப்ப என்கிறார் புலவர். இங்கே மங்குல் என்பது இருண்ட மேகம் 
என்ற பொருள் கொள்ளப்படுகிறது. இருண்ட மேகங்கள் மலையுச்சிகளை மறைக்கலாம், சூரியனை மறைக்கலாம். ஆனால் 
சுற்றுப்புறத்தையே மறைக்குமா? எனவே மங்குல் என்பதற்குப் பனிமூட்டம் என்ற பொருள் கொள்வதே இங்கு 
பொருத்தமானதாகத் தெரிகிறது.

			

	தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெறும் முகமாகத் தலையில் தங்கத்தாமரை சூடப்பெற்ற ஒரு 
பெரும்பாணன் கூறுகிறான்:

	மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்
	ஆடுவண்டு இமிரா அழலவிர் தாமரை
	நீடிரும் பித்தை பொலியச் சூட்டி – பெரும்: 480 – 482

	திங்கள் வெண்மையாக இருக்கும் என்பதினால், பாணன் வெள்ளித்தாமரை பெற்றான் என்பர் சிலர். ஆனால் 
புலவரின் உவமைப்படி மங்குல் வானத்துத் திங்கள் மெல்லிய திரை போன்ற மேகமூட்டத்தால் ஏற்பட்ட ஒளிச்சிதறலால் 
பொன்னிறம் அடையும் என்று அறிவியல் கூறுகிறது. இதனை Yellow moon என்பர். எனவே மங்குல் என்பது இருண்ட 
மேகம் அல்ல – மெல்லிய மேக மூட்டமே என்பது பெறப்படும்.

	இன்றைக்குச் சில திருமண நிகழ்ச்சிகளிலோ, சமய நிகழ்ச்சிகளிலோ யாக நெருப்பு (ஹோமம்) நெய்யூற்றி 
எழுப்பப்படும்போது பெருமளவில் புகை எழும்பி அறையே சில நேரங்களில் புகை மண்டிலமாகக் காணப்படுவதைக் 
காண்கிறோம். நடுகல் வணக்கத்தின்போது எழுப்பப்பட்ட புகையைப் பற்றி புறநானூறு இவ்விதமாகக் கூறுகிறது:

	புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
	நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய
	மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும் – புறம் 329:2-5

	எனவே, மங்குல் என்பதற்கு இங்கு குறிப்பிட்ட இடங்களைப் போலவே, இப் பாடலிலும் மேகமூட்டம், 
மூடுபனி, புகைமூட்டம் ஆகிய பொருளே பொருந்தும் எனத் தோன்றுகிறது.

5	வைகுபுலர் விடியல் வைபெயர்த்து ஆட்டித்

	வைகறை புலர்ந்த விடியற்காலையில் வைக்கோலைப் பிடித்துப்போட்டு கடாவிட்டு,

	நள்ளிரவு கடந்த அதிகாலை 2 மணியிலிருந்து காலை 6 மணி வரையிலுள்ள நேரத்தை வைகறை என்றனர் 
நம் முன்னோர். காலை 5 மணி வாக்கில் கிழக்கு வெளுக்கும் அதுவே பொழுது புலரும் அறிகுறி. காலையில் சூரியன் 
அடிவானத்தில் தோன்றும் நேரமே விடியல். இதனையே புலவர் வைகு புலர் விடியல் என்கிறார். களத்துமேட்டுக்கு வந்த 
இன்னொரு சாரார் முந்தைய நாள் தலையடி அடித்துப்போட்ட நெல்தாள் கட்டுகளினின்றும் நெல்தாள்களை எடுத்து கீழே 
பரப்புகிறார்கள். இன்னும் சிலர் கொண்டுவந்த மாடுகளைச் சேர்த்துக் கட்டுகிறார்கள் கட்டிய மாடுகளை பரப்பிய தாள்களின் 
மீது சுற்றிச் சுற்றி நடக்கவிடுகிறார்கள். இதனால் தாள்களின் ஒட்டிக்கொண்டிருக்கும் நெல்மணிகள் கீழே உதிர்ந்துவிடும் 
இதற்குச் சூட்டடி என்று பெயர். இது இரண்டாம் தர நெல் ஆகும். 

			

	தொழில்செருக்கு அனந்தர் வீட எழில்தகை
	வளியொடு சினைஇய வண்தளிர் மாஅத்துக்
	கிளிபோல் காய கிளைத்துணர் வடித்துப்
	புளிப்பதன் அமைத்த புதுக்குட மலிர்நிறை
10	வெயில்வெரிந் நிறுத்த பயில்இதழ்ப் பசும்குடைக்
	கயம்மண்டு பகட்டின் பருகிக் ---------------

	வேலைக் களைப்பால் கள்ளுண்ட மயக்கம் தீர, அழகால் மேம்பட்ட,
	காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில்
	கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட கிளை(யில் தொங்கும்) கொத்துக்களைச் சாறெடுத்து,
	புளிப்புச் சுவை சேர்த்துப் புதுக்குடங்களில் விளிம்புதட்ட நிறைத்ததை,
	வெயிலில் குப்புற நிறுத்திய மிக்க இதழ்களையுடைய பசிய (பனையோலைக்)குடையில்
	குளத்தில் நீரை மண்டும் காளையைப் போலப் பருகி,

	பகல்முழுக்க வேலைசெய்த அலுப்புப் போக இரவில் சிலர் கள் குடிப்பதுண்டு. இது போதைமயக்கத்துக்காகக் 
குடிப்பது அல்ல. எனவே, அதனால் ஏற்படும் போதையைத் தொழிற்செருக்கு என்கிறார் புலவர். இந்தச் செருக்குடன் 
தூங்கியவருக்குக் காலையிலும் மயங்கிய நிலை தீராது. அந்த நிலையே அனந்தர். அதோடு சிலர் வேலைக்கும் 
வந்துவிடுகின்றனர். அவர்களின் போதை தெளிய அவர்கள் புளிப்புச் சாறை அருந்துகிறார்கள். 

	வளியொடு சினைஇய வண்தளிர் மா – என்ற அடியில், சினை என்ற வினைச்சொல்லுக்குக் கிளைவிடு என்ற 
பொருளே கொள்ளப்படுகிறது. அப்படியென்றால் காற்றொடு சினைஇய எனப் புலவர் சொல்வது ஏன்?

	தென்றற் காற்றினால் கிளைத்த - என்கின்றனர் ந.மு.வே.நாட்டார்(கழகம்)/புலியூர்க்கேசிகன்(பாரி)

	காற்றடிக்கப் பூத்த என்கிறார் ந.சி.கந்தையா (தமிழ்மண்).

	தென்றற்காற்றால் தோற்றுவிக்கப்பெற்ற தளிர்களையுடைய என்கிறார்-ச.வே.சு (மணிவாசகர்)

	தென்றல் காற்று எவ்வாறு தளிர்களைத்/பூக்களைத் தோற்றுவிக்கும் என்ற விளக்கம் ஒரு நூலிலும் இல்லை. 

	ஒட்டு மாங்கனியை உருவாக்குவது எவ்வாறு என்று விளக்கும் ஒரு கட்டுரையில், மாமரங்கள் இயற்கையிலேயே 
ஒட்டு இனத்தை உருவாக்குபவை என்ற செய்தி கிடைத்தது. இரண்டு மா மரங்கள் அருகருகே வளரும்போது, காற்றினால் 
அவற்றின் கிளைகள் தொடர்ந்து உரசிக்கொண்டிருக்குமானால், அதனால் ஒருவிதப் பசை உருவாகி அக் கிளைகள் 
ஒட்டிக்கொள்ளும் என்றும், காற்று நின்ற பின்னர் அந்த இடத்தினின்றும் புதிய கிளை உருவாகும் என்ற செய்தி கிடைத்தது.

	How to grow mango trees?
	
	Grafting occurs in nature, for example, when two trees growing too close together constantly rub limbs in 
the wind scraping them both bare at one spot and they both ‘bleed’ sap and when the windy season ends they are still 
pressed together and grow ‘joined’ together over months into one tree – grafted. There is this type of ‘joining’ in 
root systems too. Many huge groves are really one tree. (http://www.tropicalrainflorist.com/mango_trees.htm)

	மா மரங்கள் தங்களுக்குத் தாங்களாகவே (காற்றால்)ஒட்டிக்கொண்டு, புதிதாகக் கிளைவிடக்கூடியவை என்று 
சங்க மக்கள் அறிந்திருக்கின்றனர். ஆனால் அதைச் செயற்கை முறையில் செய்துபார்க்கும் அறிவியல் ஆய்வு அவர்களிடம் 
இல்லாமற் போய்விட்டதோ அல்லது நமக்கு எட்டாமலேயே மறைந்துவிட்டதோ தெரியவில்லை.

	கிளிபோல் காய என்பது இன்றைய கல்லாமை மாங்காயைக் குறிக்கலாம். சில இடங்களில் அது கிளிமூக்குக் காய் 
எனப்படுகிறது. இது அதிகப் புளிப்பு இல்லாதது. 

			

			

	இந்தக் கொத்தான காய்களினின்றும் சாறு வடித்து, அதனுடன் புளிப்பதற்குரிய பொருள்களையும் சேர்த்து, 
ஒரு புதிய குடத்தில் விளிம்பு வரை தழும்பத்தழும்ப நிறையக் கொண்டுவந்து வைக்கின்றனர். இதனைப் பனையோலையில் 
செய்த குழிவான மட்டையில் வாங்கி வயிறு முட்டக் குடிக்கின்றனர். 

	பசுங்குடை என்பது பச்சைப் பனையோலையால் செய்யப்பட்டது. இந்தப் பனையோலையே பயிலிதழ் எனப்படுகிறது. 
பனையோலையில் ஒரு காம்பில் பல கீற்றுகள் இருக்கும். எனவே இது பயிலிதழ் எனப்படுகிறது. இதன் ஒரு பகுதியை 
நீளவாக்கில் நறுக்கி, நடுப்பகுதியைக் குழிவாக்கி, நுனியின் ஒரு இதழை நகத்தால் கீறி சிறு நார் போல் ஆக்கி, அதனால் 
முனைப்பகுதியைச் சுற்றி இறுக்கக் கட்டினால் பனைக் கோப்பை தயார். அதன் இருபக்கங்களையும் பிடித்துக்கொண்டு, 
குழிவுக்குள் ஊற்றப்படும் குடிப்பதற்கான நீர்ப்பொருளைக் குனிந்து வாய்வைத்து உறிஞ்சிக் குடிக்கவேண்டும். அவ்வாறு இந்த 
உழவர்கள் குடிப்பது, குளத்தில் குனிந்து நீர் மண்டும் காளையைப் போல் இருக்கிறது என்கிறார் புலவர். ஒருவர் வெயிலில் 
வெளியிற் சென்றுவிட்டு வீடு திரும்பி, பானை நீரைக் குவளையில் மொண்டு மொண்டு குடித்தால் ‘ஏண்டா, இப்படி மண்டுற” 
என்போம். ஆர்வத்துடனும், விரைவாகவும், அளவுக்கு அதிகமாகவும் உண்பதுவும் குடிப்பதுவுமே மண்டுதல். 

	வெயில் வெரிந் நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை என்ற அடியில், வெயில் வெரிந் நிறுத்த என்பதற்குரிய காரணம் 
தெரியவில்லை. வெரிந் என்பது முதுகு. பனை ஓலையைக் குப்புறப்போட்டுச் சிறிது நேரம் வெயிலில் உணர்த்தினால், பின்னர் 
குழிவாகக் குடைகள் செய்ய எளிதாக இருக்கும் என்று சில உரைகள் கூறுவது உண்மையா என்று தெரியவில்லை. 

	காலையில் எழுந்து வெறும் வயிற்றுடன் வேலைக்கு வந்துவிட்டதாலும், முதல்நாள் இரவு கள் குடித்த அனந்தர் 
நீங்கினால்தான் இன்றைக்கு நன்கு வேலைசெய்ய முடியும் என்பதாலும், உழவர்கள் பசுங்குடையில் வார்க்கப்படும் 
புளிப்புச் சாறை மண்டுகின்றனர்.

			

			      

	-----------------  -----------------  --------------  காண்வரக்
	கொள்ளொடு பயறு பால்விரைஇ வெள்ளிக்
	கோல்வரைந்து அன்ன வால்அவிழ் மிதவை
	வாங்குகை தடுத்த பின்றை ------------------

	-------------  -------------  ------------------  அழகு பொருந்த
	கொள்ளும் பயறும் பாலுடன் கலந்து, வெள்ளியால்
	கோலம் வரைந்ததைப் போன்ற வெண்மைநிறமுள்ள நன்கு வெந்த கஞ்சியை
	வளைத்து உண்ட கை தடுத்த பின்னர் –

	மிதவை என்பது மிதக்கும் பொருளைக் குறிக்கும். இங்கே அது உணவைக் குறிக்கிறது. அரிசியினாலும், 
உழுந்தினாலும் மிதவைகள் செய்யப்பட்டு, புளித்த நீரிலும், தயிரிலும் மிதக்கவிடப்படும் எனக் கீழ்க்கண்ட 
அடிகளால் அறிகிறோம்.

	பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் – மலை 417
	வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த – மலை. 435
	உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை – அகம் 86/1
	தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340/15
	ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை – புறம் 215/4

	நன்கு குழைய வேகவைத்த பச்சரிசிச் சோற்றைச் சூடுபொறுக்க அகப்பையில் எடுத்து, உள்ளங்கையிலிட்டு உருட்டிப் 
பெரிய உருண்டைகளாகச் செய்து, புளித்த நீரில் போட்டுவிட்டால், வேண்டிய நேரத்தில் எடுத்துக் கரைத்துக் குடிக்கலாம். இந்த 
உருண்டைகளே மிதவை எனப்பட்டன எனலாம். அல்லது, அரிசிமாவு, உளுந்தம் மாவு, கேழ்வரகு மாவு ஆகியவற்றைக் 
களியாகக் கிண்டி, பின்பு அதனையும் உருட்டிப் போடலாம். வீட்டின் வளமைக்கு ஏற்றபடி, இந்த மிதவைகள் புளித்த நீரிலோ 
(புளிச்ச தண்ணி), மோரிலோ, தயிரிலோ அல்லது பாலிலோ மிதக்கவிடப்படலாம். அவ்வாறு பாலில் போட்ட மிதவைகளில் 
புளிப்பு ஏற, அந்தப் பாலின்மீது வெள்ளிக்கம்பி போலச் சிறிது உறைமோரை ஊற்றிவைப்பார்கள் போலும். உழுந்துக்குப் பதிலாக 
கொள்ளு, பாசிப்பயறு ஆகியவற்றைத் திரித்து மாவாக்கி, அதைக் களியாகக் கிண்டி உருண்டையாகப் பாலில் 
மிதக்கவிட்டிருப்பார்கள் போலும். உழவர் பெருமக்கள் வீட்டில் பாலுக்கும் மோருக்கும் பஞ்சமேது? ஆனால் இவர்கள் 
உழைப்பாளி மக்கள். எனவே கூலிக்குக் கிடைத்த நெல்லை, மலிவாகக் கிடைக்கும் கொள்ளுக்கும் பயறுக்கும் பண்டமாற்றாக 
மாற்றிவைத்துக்கொள்வார்கள். ஐம்பது ஆண்டுகட்கு முன்னர் வரைகூட இப் பழக்கம் கிராமங்களில் நடைமுறையில் 
இருந்துவந்தது.

	இந்த மிதவையைக் கையால் கரைத்துக் கூழாக்கிக் குடிப்பார்கள். இதுதான் அவர்களுக்கு மதிய உணவு. ஒரே 
குடும்பத்தைச் சேர்ந்த பலபேர் இருப்பதால், மொத்தமாகக் கரைத்து, ஒவ்வொருவருக்கும் உள்ளங்கைகளில் ஊற்றுவார்கள். 
இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்துக் குவித்துக் கூழை வாங்கிக் குடிப்பார்கள். குடிப்பவர்கள் விழுங்கும் வேகத்தைக் 
கணக்கிட்டுச் சீரான வேகத்தில் கூழை ஊற்றினால், வாயெடுக்காமல் குடிப்பவர்கள், ‘மடக் மடக்’கென்று விரைவாகக் 
குடித்து முடித்துவிடுவார்கள். ‘போதும்’ என்ற குறிப்பை உணர்த்த, ஒரு கையை மட்டும் சிறிது உயர்த்தி ஊற்றுவதைத் 
தடுப்பதுபோல் காட்டுவார்கள். 

			      

	----------------  ---------------  ------------  ஓங்கிய
	15	பருதிஅம் குப்பை சுற்றிப் பகல்செல
	மருத மரநிழல் எருதொடு வதியும்
	காமர் வேனில் மன்இது

	உயரமாக,
	சூரியனைப் போன்ற அழகான நெற்குவியலைச் சுற்றிப் பகல் முடிய
	மருதமர நிழலில் காளைகளுடன் தங்கியிருக்கும்
	விரும்பித்துய்க்கும் வேனில் காலம் அல்லவா இது!

			      

	களத்துமேட்டில் தலையடி, சூட்டடி நெல் குவியல் குவியலாய்க் குவித்துவைக்கப்-பட்டிருக்கிறது. புதுநெல் அல்லவா! 
பொன்னிறத்தில் ‘தக தக’-வென்று மின்னுகிறது குவியல். நாலாபுறமும் சிதறிக்கிடக்கும் மணிகளை ஒன்றுசேர்த்து 
வட்டக் கூம்பு வடிவத்தில் குவித்து வைக்கிறார்கள். உருவத்திலும் நிறத்திலும் ஞாயிற்றைப் போல் இருக்கிறதாம் அக் குவியல். 
சுற்றிவர இருக்கும் தூசு தும்புகளைப் பெருக்கித் தள்ளுகிறார்கள். இவ்வாறு பகல் முழுக்க வேலை செய்கிறார்கள். போரடித்துக் 
களைத்துப்போன காளைகளை மரநிழலில் கட்டிப்போட்டிருக்கிறார்கள். வேலை முடிந்த பின்னர், ‘உஸ்! அப்பாடா!” என்று 
காளைகளுடன் அவர்களும் ஓய்வெடுக்கிறார்கள். ஆயிற்று, இந்த வெள்ளாமை முடிந்தது. இனியென்ன? வேனில் திருவிழாவைக் 
களிப்புடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

	மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே – (காமர் வேனில் மன்இது)

	இவ்வாறாகச் சிறப்பான நலத்தினைத் துய்க்கும் துணையைப் பெற்றவருக்கு – 
	(விரும்பித்துய்க்கும் வேனில் காலம் அல்லவா இது!)

	தீம்புனல் உலகமாம் மருதநிலக் காட்சிகளைக் கொண்டு, வைகுறு விடியல் பொழுதை வருணித்து, உழவர், 
அழி, வை, மாமரம், கயம், மருதமரம் ஆகிய மருதநிலக் கருப்பொருள்களைக் கொண்டு பாலையின் உரிப்பொருளான 
இரங்கலைக் கொணர முடியும் என்று காட்டும் புலவரின் திறம் வியந்து பாராட்டுதற்குரியது.