அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 20

பாடல்  20. நெய்தல் திணை    பாடியவர் - உலோச்சனார் 

துறை - பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்த் 
                                     தலைமகன் கேட்பச் சொல்லியது.

  மரபு மூலம் - அன்னை கடி கொண்டனளே

	பெருநீ ரழுவத் தெந்தை தந்த
	கொழுமீ னுணங்கற் படுபுள் ளோப்பி
	யெக்கர்ப் புன்னை யின்னிழ லசைஇச்
	செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி
5	ஞாழ லோங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்
	தாழை வீழ்கயிற் றூச ற்றூங்கிக்
	கொண்ட லிடுமணற் குரவை முனையின்
	வெண்டலைப் புணரி யாயமொ டாடி
	மணிப்பூம் பைந்தழை தைஇ யணித்தகப்
10	பல்பூங் கான லல்கினம் வருதல்
	கவ்வை நல்லணங் குற்ற விவ்வூர்க்
	கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை
	கடிகொண் டனளே தோழி பெருந்துறை
	யெல்லையு மிரவு மென்னாது கல்லென
15	வலவ னாய்ந்த வண்பரி
	நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே

 சொற்பிரிப்பு மூலம்

	பெருநீர் அழுவத்து எந்தை தந்த
	கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,
	எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇச்,
	செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
5	ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடும் கழித்
	தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கிக்,
	கொண்டல் இடு மணல் குரவை முனையின்
	வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
	மணிப் பூம் பைம் தழை தைஇ, அணித் தகப்
10	பல் பூங் கானல் அல்கினம் வருதல்
	கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர்க்
	கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு, அன்னை
	கடி கொண்டனளே தோழி, பெரும் துறை
	எல்லையும் இரவும் என்னாது, கல்லென
15	வலவன் ஆய்ந்த வண் பரி
	நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே.

அடிநேர் உரை 
	
	கடற்பரப்பில் (பிடித்து) எம் தந்தை கொண்டுவந்த
	ஏராளமான மீனை உலர்மீனாக்க(காயப்போட), அதைத் தின்னவரும் பறவைகளை ஓட்டி,
	மணல்மேட்டிலுள்ள புன்னைமரத்தின் இனிய நிழலில் தங்கி,
	சிவந்த நண்டின் ஆழமான வளைகளைக் கிண்டிக்கிளறி,
	ஞாழலின் உயர்ந்த கிளையில் கட்டப்பட்ட, வளைந்த கழியை
	தாழை விழுதால் ஆன கயிற்றால் செய்த ஊஞ்சலில் ஆடி,
	கீழ்க்காற்று கொணர்ந்த மணலில் குரவைக்கூத்து ஆடி, அது வெறுத்துப்போய்,
	வெள்ளிய நுரையைத் தலையில் கொண்ட கடல் அலைகளில் தோழியரோடு ஆடி,
	மணி போன்ற மலர்களால் ஆன பசிய தழையுடையைத் தைத்து அழகுபெற (உடுத்தி)
	பலவிதப் பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தங்கி வருதலை,
	பழித்துச் சொல்லல் என்னும் மனநோயுற்ற இந்த ஊரின்
	கொடுமை மட்டுமே அறிந்த பெண்களின் சொற்களைக் கேட்டு, அன்னை
	வீட்டுக்காவலை மேற்கொண்டாளே தோழி, பெரும் துறைகளில்
	பகலென்றும் இரவென்றும் இல்லாமல், ஒலி எழுப்பிக்கொண்டு
	பாகன் ஆய்ந்து தெரிந்த நன்கு வளர்ந்த குதிரைகள் (பூட்டிய)
	நிலா வெளிச்சம் போன்ற வெண்மணலில் சுற்றிச் சுற்றி வரும் ஒரு தேர் உள்ளது என்று –

அருஞ்சொற் பொருள்:

பெருநீர் = கடல்; அழுவம் = நீர்ப்பரப்பு; உணங்கல் = உலர்ந்த பொருள்; புள் = பறவை; ஓப்பி = ஓட்டி; எக்கர் = மணல்மேடு; 
அசைஇ = தங்கி, இளைப்பாறி; செக்கர் = சிவந்த; ஞெண்டு = நண்டு; குண்டு = ஆழமான; அளை = நண்டின் வளை; 
கெண்டி = கிளறித் தோண்டி; ஞாழல் = புலிநகக் கொன்றை; சினை = கிளை; தொடுத்த = கட்டிய; கொண்டல் = கிழக்குக் காற்று; 
புணரி = கடல் அலை; ஆயம் = தோழியர் கூட்டம்; அல்கினம் = தங்கினம்; கவ்வை = அலர், பழிச்சொல்; 
அணங்கு = வருத்தும் தெய்வம்; கடி = காவல்; எல்லை = பகல்; வலவன் = ஓட்டுநன்; கொட்கும் = சுற்றிச் சுற்றிவரும்; 

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	இது நெய்தல் திணைப் பாடல். கடல் அழுவம், கொழு மீன், எக்கர், புன்னை, நண்டு, ஞாழல், தாழை, மணல், 
வெண்தலைப் புணரி, கானல் ஆகியவை எல்லாம் கடலைச் சார்ந்தவை. எனவே இதன் உரிப்பொருள் இரங்கல் என்ற எண்ணத்தில் 
யாரோ ஒருவரின் புலம்பல் சொற்களைக் கேட்கக் காதைத் தீட்டிக்கொண்டு அமர்ந்தால், ஆடல், பாடல், கூத்து, கும்மாளம் என 
மகிழ்ச்சிப் பெருக்கெடுத்தோடும் மங்கையரின் கலகல ஓசை காதை நிறைக்கிறது. 

	பதினாறு அடிகள் கொண்ட இப் பாடலில் முதல் 10 அடிகள் தலைவி தன் தோழியருடன் ஆடிப்பாடுவதைக் 
காட்டுகின்றன. அடுத்த ஆறு அடிகளில்தான் பாடலின் மையக்கருத்து அடங்கியிருக்கிறது. தலைவியைப் பார்க்கத் தலைவன் அடிக்கடி 
வந்துபோவது, வீட்டாருக்குத் தெரிந்துவிட்டது. எனவே இனிமேல் தலைவியும் தலைவனும் ஒருவரை ஒருவர் நினைத்து இரங்கிக் 
கொண்டிருக்கவேண்டியதுதான். அந்த இரங்கல் துன்பத்தைத் தவிர்க்க, இப்படி வந்து வந்து போய்க்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, 
காலாகாலத்தில் பெண்கேட்டுவா என்று தலைவனுக்கு மறைமுகமாகத் தோழி உணர்த்துவதாகக் கொள்ளலாம். 

பாடல் விளக்கம்

	பெருநீர் அழுவத்து எந்தை தந்த
	கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி

	பெரிய கடற்பரப்பில் எம் தந்தை பிடித்துக் கொணர்ந்த கொழுத்த மீன் குவியலை வெயிலில் காயப்போடுகையில் அதனைத் 
தின்னவரும் பறவைகளை விரட்டிக்கொண்-டிருக்கிறாள் தலைவி தன் தோழியருடன்.

அழுவம் என்பது கடற்பரப்பு. கொழு என்பது மிகவும் நிறைந்த என்ற பொருள் தரும்.

“என்ன இன்னிக்கி எப்படி வேட்டை?”

“கொழுத்த வேட்டை”

	கொழுமீன் என்பது ஒருவகை மீன் என்றும் கூறுவர். உணங்கல் என்பது உலர்ந்த பொருள் – வற்றல். இங்கே கருவாடு. 
ஓப்பு என்பது ஓட்டு, விரட்டு என்ற பொருள் தரும். குறிஞ்சிநிலக் காதலர்களுக்கு தினைப்புனத்தில் தலைவி கிளி ஓட்ட வருவது சந்திக்க 
ஒரு வாய்ப்பு. நெய்தல் நிலத்தில் கருவாடு காதலர்கள் இணைவதற்குக் காரணமாக இருக்கிறது. 

	எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ

	எக்கர் என்பது மணல்திட்டு. ஆற்றின் நடுவே இருக்கும் மணல்மேடு போல, கடற்கரையில் கழிகளுக்கிடையே உள்ள மேடான 
பகுதி. இப் பகுதியில் புன்னை மரங்கள் வளர்ந்துள்ளன. வெயிலில் கிடந்து மீனைக் காயப்போட்டதால் களைத்துப்போன மகளிர், அடுத்து 
இந்தப் புன்னை மரத்தின் நிழலில் தளர்ச்சியுடன் ஓய்வெடுக்கிறார்கள். 

			
			www.ctahr.hawaii.edu

	வெயிலில் கிடந்து காய்ந்து வருவதால் புன்னை நிழல் இனிமையாக இருக்குமன்றோ! எனவே இன் நிழல் என்கிறார். களைக்க 
வேலை செய்து, “உஸ், அப்பாடா!” என்று ஓரிடத்தில் வந்து அமர்வதே அசைதல். பந்தாடிக் களைத்து, “உயங்கின்று அன்னை என் மெய் 
என்று அசைஇ” என்று கூறும் தாயைப் பாடல் 17-இல் பார்த்தோம்.

	செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி

	செக்கர் என்பது சிவப்பு. அந்தியில் சிவக்கும் வானத்தைச் செக்கர் வானம் என்று சொல்கிறோம். ஞெண்டு என்பது நண்டு. 
குண்டு என்பது சிறிய பள்ளம். சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது என்கிறோம் இல்லையா - அந்தக் குண்டு. அளை என்பது இங்கு 
நண்டு வளை. சமதரையில் ஆரம்பித்து, தரைக்குக் கீழே செல்லும் underground metro ரயில் போல, அரவம் கேட்டால், இந்த 
அளைக்குள் ஓடி ஒளியும் நண்டுகள். பொதுவாக அளை என்பது குகை, பொந்து என்ற தரைமட்டத்தில் அமைந்த விலங்குகளின் 
வாழ்விடங்கள். இது தரைக்குள் நண்டுகள் வாழ அமைத்துக்கொண்டது. எனவேதான் குண்டு அளை – பள்ளமான அளை என்கிறார். 
கெண்டுதல் என்பது குத்திக்கிளறித் தோண்டுதல். ஒரு கூர்மையான குச்சி அல்லது ஆயுதத்தால் அளையைச் சுற்றிவரக் குத்தி, மணலைத் 
தோண்டி வெளியில் எடுத்தல் – உள்ளே இருக்கும் நண்டைப் பிடிப்பதற்காக. இது செந்நண்டு – ருசியாக இருக்குமோ? - பிடிப்பதற்காகப் 
பெண்கள் விரட்டியபோது அளைக்குள் ஓடி ஒளிந்துகொண்ட நண்டைப் பிடிக்கப் பெண்கள் அளையைத் தோண்டுகிறார்கள்.

			
			http://animals.nationalgeographic.co.in/animals/invertebrates/red-crab/   www.posterlounge.co.uk

	திரட்சைப் பழங்களைப் பிய்த்து, மிக்சியில் போட்டு அரைத்துப் பழரசமாக அருந்துவதை விட, ஒவ்வொரு உருண்டையாக 
வாயில்போட்டுக் கடித்துச் சுவைத்து மென்று, சப்பி, உறிஞ்சிக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிறக்குவது எத்தனை இனிமை! சங்கப் 
பாடல்களின் சொற்கள் மெல்லிய தோலுள்ள seedless grapes. – எதையுமே துப்ப வேண்டிய அவசியம் இல்லை. பாடலுக்கு மொத்தமான 
பொழிப்புரை – கருத்துரை காண்பதைவிட, ஒவ்வொரு சொல்லாகப் படித்துச் சுவைத்துப் பொருள்கண்டு மகிழுங்கள்.

5	ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடும் கழித்
	தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கிக்

	ஒரு வளைந்த கம்பு - (கொடும் கழி; கொடும் = வளைந்த) அதன் இரு முனைகளிலும் நீளமான இரு கயிறுகளைக் கட்டி, 
அதை ஓர் உயர்ந்த மரத்தின் கிளையில் கட்டினால் ஊஞ்சல் தயார். அந்த ஊஞ்சலைக் கட்டியது ஞாழல் என்ற மரத்தின் கிளையில். 
ஞாழல் என்பது புலிநகக் கொன்றை என்ற மரம். தொடுத்தல் சேர்த்துக் கட்டுதல். வீழ் என்பது விழுது. தாழையின் விழுதே ஊஞ்சலின் 
கயிறாக ஆனது. தூங்கு என்பது தொங்கு என்ற பொருள் இங்கு தரும். ஊசலில் தொங்கினால் அது ஊஞ்சலாய் ஆடாதோ? 

			

	கொண்டல் இடு மணல் குரவை முனையின்
	வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி

	கொண்டல் என்பது கிழக்குக் காற்று. வடகிழக்குப் பருவக்காற்று கொணரும் மேகத்துக்கும் கொண்டல் என்று பெயர். 
இந்தக் காற்று வீசும்போது ஏற்படும் கடல் கொந்தளிப்பால் கரையில் வந்து குவியும் மணலே கொண்டல் இடு மணல். இடு மணல் 
என்பது இடப்பட்ட மணல். குரவை என்பது குரவைக்கூத்து. பெண்களின் அக்காலத்திய group dance. அப்போது எழுப்பப்படும் நாவொலி 
குரவை எனப்பட்டது. இப்போது அதை குலவை என்கின்றனர். குலவைபோடுதல் என்பது மகளிர் ஒன்றுசேர்ந்து தமது நாவை மேலும் 
கீழும் விரைவாக ஆட்டி அண்ணங்களில் உரசியவண்ணம் குரல் கொடுப்பது. இவ்வாறு குரவை ஒலி எழுப்பிக்கொண்டே, மகளிர் 
வட்டமாக நின்று, தமது அருகிலுள்ளோர் இடுப்புகளை வளைத்துப் பிடித்தவாறு சுற்றிச் சுற்றி வருதல் குரவைக் கூத்து. இவ்வாறு 
ஆடியது போதும் என்று நினைத்த போது, அனைவரும் கடலுக்குள் வேகமாக ஓடி, அதில் ஆடிக்களிக்கின்றனர். புணரி என்பது அலை. 
அலைகளையுடைய கடலுக்கும் ஆகிவரும். அலைகள் எழுந்து விழும்போது ஏற்படும் வெண்மையான நுரையையே வெண்தலை 
என்கிறார் புலவர். இவ்வாறு தலைவி தோழியரோடுதான் ஆடுகிறாள் – தலைவனோடு அல்ல – என்பதைக் குறிக்க ஆயமொடு 
ஆடி என்கிறார் புலவர். 

			

	மணிப் பூம் பைம் தழை தைஇ அணித் தகப்
10	பல் பூங் கானல் அல்கினம் வருதல்

	நீலமணி போன்ற பூக்களையும் (கருங்குவளை), பூங்கொடிகளின் பச்சை இலைகளையும் தைத்து உடையாக்கி – இவ்வாறு 
அழகுபெற – (மீண்டும் கரையேறி) பல பூக்களைக் கொண்ட கடற்கரைச் சோலையில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். இவற்றையே 
ஒவ்வொரு நாளும் வழக்கமாகக் கொண்டுவருகிறார்கள்.

	கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர்க்
	கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னை
	கடி கொண்டனளே தோழி --

	இந்தக் கொடிது அறியா இளமகளிர் கூடிக் களிக்கும் இக் காட்சியைக் காணச் சில கொடிது அறி பெண்டிருக்குப் 
பொறுக்கவில்லை. கவ்வை பேசுகிறார்கள். கவ்வை என்பது அவதூறு, வம்பளப்பு, பழிச்சொல் (scandal, gossip, slander).  
இந்த வம்புப்பேய் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.

	“இந்த ஊர்க்காரிகளுக்குப் பேய்பிடிச்சுப்போச்சு”

	“என்னா பேயி பிடிச்சுருக்காம்?”

	“அதான், வம்புபேசுறது, வாயடிக்கிறது, பொல்லாப்பு சொல்றது .. இன்னும் எத்தனையோ பேயி”

	“நல்லா பேய் பிடிச்சுச்சு இவளுகள!”

	‘கவ்வை நல் அணங்கு உற்ற இவ்வூர்க் கொடிது அறி பெண்டிர் சொல்’ 
என்ற தொடரைப் புரிந்துகொள்ள பெண்களின் பேச்சு வழக்கு தெரிந்திருக்கவேண்டும். அணங்கு என்பது வருத்தும் தெய்வம் – 

	இங்கு பேய். அதை ஏன் புலவர் நல் அணங்கு என்கிறார்?  மேற்கொடுத்த பேச்சு இதனைப் புரியவைக்கும்.
	
	“இவளுக பேசுறதக் கேட்டு, ஒன் அம்மாக்காரி வாசக்கதவ இழுத்துப்பூட்டு’ன்றா”

	கடி என்பது காவல். வேண்டுமென்றே தோழி குரலை உயர்த்துகிறாள். அவனுக்குக் கேட்கவேண்டுமே!

         		    -- பெரும் துறை
	எல்லையும் இரவும் என்னாது கல்லென
15	வலவன் ஆய்ந்த வண் பரி
	நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே
	
	“அப்படி என்னாத்த அவளுக பேசிப்புட்டாளுக?”

	“என்னாமோ இந்தப் பெருந்துறையில ராத்திரிபகலா சத்தம் கேக்குதாம்” – 
பெருந்துறை என்பது இந்த மகளிர் ஆடும் இடத்தின் பெயர்.

	“ என்னா சத்தம்?”

	“பாத்துப்பாத்து வாங்குன குதிரையப் பூட்டிக்கிட்டு, பளீர்ங்ற மணல்ல, சுத்திச் சுத்தி ஒரு தேரு சும்மாசும்மா 
வந்துகிட்டு இருக்கில்ல, அந்தச் சத்தம்”

	எல்லை என்பது பகல். வலவன் = பாகன், தேர் ஓட்டுநன். அவனுக்குத் தெரியும் எது நல்ல குதிரை என்று. அவன் ஆய்ந்து 
வாங்கிய கொழுகொழுவென்ற குதிரையைப் புலவர் வலவன் ஆய்ந்த வண் பரி என்கிறார்.

	நிலவு மணல் என்பது நிலவு வெளிச்சதைப் போன்ற வெண்மையான மணல். கொட்குதல் என்பது சுற்றிச் சுற்றி வருதல். 

பாடலின் துறை விளக்கம்

	நெய்தல் நிலத்துத் தலைவனும் தலைவியும் பகற்குறியிலும், இரவுக்குறியிலும் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள். 
இதனைக் கண்ட ஊர்மக்கள் அலர்தூற்றுகின்றனர். அதனை அறிந்த தாய் தன் பெண்ணை இற்செறிக்க எண்ணுகிறாள். இந் நிலையில் 
பகற்குறியில் தலைவன் பார்க்கவருகிறான். அவன் வந்து நிற்பதைக் கண்ட தோழி, அவனைக் காணாதது போல், தலைவியிடம் 
பேசுகிற சாக்கில், உரத்த குரலில் இற்செறிப்பைப் பற்றிப் பேசுகிறாள். அவளுடைய நோக்கம் தலைவன் சீக்கிரம் மணம்முடிக்க ஏற்பாடு 
செய்யவேண்டும் என்பதே.

	பெரும்பாலான உரையாசிரியர்கள் இவ்வாறுதான் துறை விளக்கம் அளித்துள்ளனர். இதில் பெரும்பங்கு சரியே ஆயினும், 
தலைவனும் தலைவியும் சந்தித்து உரையாடினர் என்பதற்கு நேரிடையான சொற்கள் பாடலில் இல்லை என்பதைக் கவனிக்கவேண்டும். 
புள் ஓப்பி, நிழல் அசைஇ, அளை கெண்டி, ஊசல் தூங்கி, புணரி ஆடி என்பவை எல்லாம் ஆயமொடு தலைவி செய்யும் செயல்களாகவே 
தோன்றுகின்றன. புணரி ஆடும்போது, புலவர் ஆயமொடு ஆடி என்று தெளிவாகவே சொல்லுகிறார். எனவே மற்ற நேரங்களிலும் 
தலைவி ஆயத்தாருடன்தான் இருந்திருக்கிறாள் என எண்ண இடமுண்டு. அப்படியானால் காதல் என்னாயிற்று? இங்கேதான் புலவர் 
ஒரு வேறுபட்ட காதலைச் சொல்லவருகிறார் எனலாம். இது கண்ணும் கண்ணும் கலந்த காதல். கருத்தொருமித்த காதல். ஆனால் 
கலந்துரையாடாத காதல். கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒத்ததால் என்ன பயனும் இலவாய்ப் போய்விட்டன வாய்ச்சொற்கள். 
தன் காதலி காட்டும் கண்ணின் கடைப்பார்வைக்காகத்தான் அவன் காதவழி தேரோட்டி வருகிறான். நிகழ்ச்சிகள் இவ்வாறு 
அமைந்திருக்கலாம்.

	தலைவி தன் தோழியருடன் கடற்கரையில் மீன் உலர்த்திக்கொண்டும் காவல்காத்துக்கொண்டும் இருக்கிறாள். 
அப்போது தலைவன் தேரில் அப்பக்கம் வருகிறான். தலைவியைப் பார்த்தவுடன் அவள் அழகில் மயங்கிப்போகிறான். அங்கேயே 
நின்றுவிடுகிறான். தலைவியும் அவனைப் பார்த்தாலும் காணாதது போல் நடிக்கிறாள். தோழி அவன் நிற்பதைக் கவனித்துவிட்டாள்.

	“என்ன, இந்தாளு இங்கயே நிக்கிறான். கருவாடு காயுற இடத்துல இவனுக்கென்ன வேல?”

	“ஏன் நின்னுட்டுப்போறான்”

	“நான் போய்க் கேக்கப்போறேன்”

	“சீச்சீ, விடுடீ”

	“சரி வா, எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, சோலைக்குள்ள போகலாம்”

	தலைவனின் தேர் அங்கேயும் வருகிறது. அவன் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.

	“இந்தா, இங்கயும் வந்துட்டான்”

	“பேசாம இருடீ”

	“வா, எல்லாமாப் போயி நண்டுபிடிச்சு வெளையாடலாம்”

	தேர் அங்கேயும் வருகிறது. அவனும் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.

	“இது சரிப்பட்டு வராது, வா, அங்கிட்டுப் போயி ஊஞ்சல் கட்டி ஆடலாம்”

	ஞாழல் மரத்தடிக்கும் தேர் வந்து நிற்கிறது.

	“இங்க பாருடி, வந்துகிட்டே இருக்கான். நான் போயி கேக்கப்போறேன் – ஒனக்கு என்ன வேணும்’னு”

	“இந்தா பாரு, பேசாம ஒன் வேலயப் பாத்துக்கிட்டு சும்மா கிட”

	அப்போதுதான் தலைவியின் முகத்தை உற்றுப்பார்த்த தோழி உண்மையை உணர்ந்துகொண்டாள்.

	“ஓகோ, இப்படிப் போகுதா சங்கதி, சரித்தாண்டியம்மா, நான் ஒன்னும் சொல்லல”
	
	“சீ, போடீ”

	இவ்வாறு அந்த மகளிர் அணி குரவை ஆட, குளித்துக் கும்மாளம் போட, தழையுடை தைத்து தண்ணறுங் கானம் 
அல்க – என்று எங்கெங்கு செல்கிறார்களோ தேர் அங்கெல்லாம் செல்கிறது – அமைதியாக.

	இது ஒருநாள் அல்ல, இருநாள் அல்ல. பகல் மட்டுமல்ல, இரவுமட்டுமல்ல. தலைவன் தேர்வந்து நிற்க, கைகட்டியவாறே 
அவன் அங்கிருந்து பார்த்து நிற்க, மங்கையர் கூட்டத்தில் ஒரு மகள் மட்டும் கடைக் கண்ணால் கண்டு களித்துக் காதல் பார்வை வீச, 
தேன் உண்டு மகிழ்ந்த நரி போல அவன் அவள் அழகில் சொக்கிப்போய் நிற்க – இந்த ஊமை நாடகம் எல்லையும் இரவும் 
என்னாது நடைபெறுகிறது. தேர் வந்து, அங்கங்கு கொட்கிப் பின்னர் திரும்பிச் செல்லும் சத்தத்தைத் தவிர வேறு எந்த ஒலியும் 
இல்லை. ஆனால் இந்தத் தேர் ஏன் வருகிறது, யாருக்காக வருகிறது, எப்போதெல்லாம் வருகிறது என்பதை ஊர்மக்கள் 
புரிந்துகொள்கிறார்கள். அம்பல் எழுகிறது. அது அலராய் மாறி அலையலையாய்ப் பரவுகிறது. அவளின் வீட்டுக்கும் எட்டுகிறது. 
தாய் சுதாரித்துக்-கொண்டாள். மறுநாளிலிருந்து இறுக்கிப்பிடிக்க எண்ணுகிறாள். தோழி இதைத் தெரிந்துகொண்டாள்.

	“அடப் பாவி மனுசா! நாளக்கி நாங்க வருவோமா’ன்னு தெரியாது. நெலம முத்திடுச்சி. பேசாம நாளக் கடத்தாம 
நல்ல நேரம் பாத்து பொண்ணு கேட்டுவா” என்பதைத் தலைவனுக்கு உணர்த்தவே, “அன்னை கடி கொண்டனளே! தோழி!” 
என்று அவனுக்குக் கேட்கிற மாதிரி உரத்துப் பேசுகிறாள் தோழி.

	ஏனைய உரைகாரர்கள் கூறுவது போல், புன்னை நிழல், குண்டு அளை, ஞாழல் ஊசல், பல்பூங்கானல் ஆகியவை 
தலைவனும் தலைவியும் சந்தித்து மகிழ்ந்த இடங்கள் என்றால், தலைவன் தன் தேரை ஓரிடத்தில் நிறுத்தி, குதிரைகளின் பூட்டை 
அவிழ்த்துவிட்டு, தலைவியுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவந்திருப்பான். அப்படி இன்றி, தலைவி செல்லுமிடங்களுக்கெல்லாம் 
தேரும் கொட்கிச் சென்றது என்னும்போது, தலைவன் தேரிலேயே இருந்திருக்கிறான், தேரும் தலைவி தன் ஆயமொடு செல்லும் 
இடங்களுக்கெல்லாம் சுற்றிச் சுற்றிச் சென்றிருக்கிறது என்ற பொருள்தான் கிடைக்கிறது.

அருஞ்சொல் விளக்கம்

குரவை

	சங்க இலக்கியங்களில் கூறப்படும் ஒரு மகளிர் ஆட்டம். திறந்த வெளியில் மகளிர் குழுக்களால் ஆடப்படுவது. வட்டமாக 
நின்றுகொண்டு சுற்றிச்சுற்றி வந்து ஆடுவது. இன்றும் கிராமக்களின் முளைப்பாரிகளை நடுவில் வைத்து, மகளிர் சுற்றிச் சுற்றி வந்து 
குனிந்தும் நிமிர்ந்தும், கைகளை ஒரு சேரத் தாள கதிக்குத் தட்டியும் ‘”தானான, தானான” என்று பாடி வருவர். கோலாட்டம், 
கும்மியாட்டம் போன்றவை இதன் வகைப் படுவன.

தழை ஆடை

	சங்க இலக்கியங்களில் மகளிர் தழையாடை அணிவர் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன். இப் பாடலில் பல்வேறு 
விளையாட்டுகளில் ஈடுபட்ட மகளிர், இறுதியில் தம் களைப்புத் தீர கடல்நீரில் குளிக்கின்றனர். அவ்வாறு குளிக்கும்போது, அவர்கள் 
அணிந்திருக்கும் ஆடை நனைந்துவிடும் அல்லவா! பின்னர், அவற்றை உலர்த்துவதற்கு என்ன செய்வார்கள்? மாற்று உடை 
கொண்டுவந்திருக்கலாம். இந்தப் பாடலில், அவர்கள் கருவாடு காயப்போட வந்தவர்கள். எனவே குளிப்பதற்காக வரவில்லை. 
மாற்று உடை கொண்டுவந்திருக்கமாட்டார்கள். Look விட்டுக்கொண்டு பின்னாலேயே வரும் தலைவனிடமிருந்த தப்பிக்கப் பலவிதப் 
போக்குக் காட்டி அலுத்துவிட்ட மங்கையர், இறுதியில் கடலில் குளிக்கச் செல்கிறார்கள். பின்னர், அகலமான இலைகளையும், பெரிய 
பெரிய பூக்களையும் கொய்துகொண்டு, மறைவிடத்துக்குச் சென்று ஆடைகளைக் களைந்து, தழையுடை அணிந்தவாறு, தம் நனைந்த 
ஆடைகளை உலர்த்துகிறார்கள்

	வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
	மணிப் பூம் பைம் தழை தைஇ

	என்ற வரிகளால் தழையுடை ஒரு தற்காலிக மாற்று உடை எனத் தெரியவருகிறது.

மும்மரங்கள்

	பெரும்பாலான நெய்தல் பாடல்களில் புன்னை, தாழை, ஞாழல் ஆகிய மூன்றுமே குறிப்பிடப்படுகின்றன. 
முக்கனி, முத்தமிழ் போல இவை மும்மரங்கள். 

புன்னை

	ஒரு வகை மரம். கடற்கரைப் பகுதியில் வளர்வது. Calophyllum inophyllum is a low-branching and 
slow-growing tree with a broad and irregular crown. It usually reaches 8 to 20 metres (26 to 66 ft) in height 
It is also known as  Alexandrian laurel.

			

தாழை

	Fragrant screw-pine, l.sh., Pandanus odoratissimus என்று அழைக்கப்படும் மரம் போன்ற செடி வகை. தாழை 
என்றால் தென்னை என்றவொரு பொருள் உண்டு. எனவே அதினின்றும் வேறுபடுத்திக்காட்ட இதனை வீழ் தாழை என்பர். 
வீழ் என்பது விழுது. தென்னையை வீழ் இல் தாழை என்றும் கூறுவர்.

			

	ஞாழல் – கொடி ? செடி ? மரம் ?

	ஞாழல் என்பது ஒரு கடற்கரைத் தாவரம். இது உயரமான புதர்வகைச் செடி என்றும், ஒரு வகைக் கொன்றை மரம் 
என்றும், கொடி வகை என்றும் பல வகை விளக்கங்கள் கிடைக்கின்றன. சங்க இலக்கியங்களை அலசியதில் 
கிடைத்த விபரங்கள் இதோ.

1.Its leaves are small, and branches are large – aing. 145/1. 
(சிறியிலை பெரும் சினை – ஐங் 145/1)

2.Its branches are high (or long) – akam 20/5. 
(ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழி - அகம் 20/5.)

3.The tree is very short enough to enable girls to pluck flowers – akam 216/8
(கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் - அகம் 216/8)

4. Its flowers are small – naR.31/5 and many others 
(சிறு வீ ஞாழல் – நற். 31/5)

5. Its flowers are in bunches – kali. 127/1 and many others .
(தெரி இணர் ஞாழலும் – கலி. 127/1)

6. Its flowers are fragrant – naR.96/1 and many others. 
(இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய் - நற் 96/1.)

7. The buds are green – kuRu 81/3.
( பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை - குறு 81/3.)

8.The fully blossomed flowers are like thinai – a millet – kuRu 397/1 and some others.
(நனை முதிர் ஞாழல் தினை மருள் திரள் வீ - குறு 397/1.)

9.The small flowers are like white mustard – kuRu 50/1. 
(ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் - குறு 50/1)

10.The flowers are golden in color – aing. 169/2. 
(பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ் - ஐங் 169/2)

11.The flowers are red in color – akam 240/1. 
(செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை - அகம் 240/1)

	It is obvious that some of the features contradict others. So, there should be different types of  ஞாழல்.

	Tamil lexicon describes as புலிநகக் கொன்றை (tigerclaw tree), மயிர்க்கொன்றை, பொன்னாவிரை, 
கோங்கு, குங்குமம் and so on.

	இது பற்றித் தமிழ்ப் பேரகராதி தரும் தகவல்களினின்றும் சங்க கால ஞாழல் பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ள 
முடியவில்லை.

ஞாழல் 	āḻal, n.

	1. Orange cup-calyxed brasiletto-climber wagaty. See புலிதகக்கொன்றை.
	      குவியிணர் ஞாழல் (பதிற்றுப். 51, 5) 
	2. Peacock's crest. See மயிற்கொன்றை. (மலை.)
	3. Fetid cassia. See பொன்னாவிரை. (மலை.)
	4. False tragacanth. See கோங்கு. (திவா.)
	5. Jasmine, Jasminum; 
	     மல்லிகைவகை. (W.) 
	6. Cinnamon, cinnamomum;
	     கொடிவகை. (W.) 
	7. Saffron, bulbous-rooted plant.
	    See குங்குமம். (அக. நி.) 
	8. Heart-wood;
	    மரவயிரம். (W.) 
	9. Hard, solid wood;
	    ஆண்மரம். (அக. நி.)

புலிநகக்கொன்றை 	puli-naka-koṉṟai

	n. < id.+.
	Fetid cassia, m.sh., Cassea sophera;
	புலிநகம்போன்ற பூக்களையுடைய கொன்றைவகை. (யாழ். அக.) 
	
	இதைப்பற்றி ஒரு முக்கியமான வலைத்தளம் கூறுவதைப் படியுங்கள். 
	http://mooligaivazam-kuppusamy.blogspot.in/2011/01/blog-post.html

	1.      மூலிகையின் பெயர் :- பொன்னாவிரை.

	2.      தாவரப்பெயர் :- CASSIA SENNA.

	3.      தாவரக்குடும்பம் :- CAESALPINIACEAE.

	4.      பயன் தரும் பாகங்கள் :- இலை வேர் முதலியன.

	5.      வளரியல்பு :- பொன்னாவிரை ஆங்கிலத்தில்ALEXANDRIAN என்று சொல்வர். எல்லா வகை  நிலங்களிலும் 
வளரக் கூடிய சிறு செடி. இது சுமார் 3 அடி   உயரம் கூட வளரக்கூடியது. இதன் இலைகள் கூரான முனையுடையவை. 
வெழுத்த பச்சை நிறமாக இருக்கும்.  நான்கு ஜோடி கூட்டிலையாக இருக்கும். இதன் பூக்கள்  ஆவரம்பூப் போல் மஞ்சளாக இருக்கும்.

(அடிக்கோடிட்ட பகுதிகள் குழப்பம் தருகின்றன)