அகநானூறு - படவிளக்கவுரை

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்      கடவுள்-வாழ்த்து
01   02   03   04   05   06   07   08   09   10  
11   12   13   14   15   16   17   18   19   20  
21   22   23   24   25   26   27   28   29   30  
31   32   33   34   35   36   37   38   39   40  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                          அகநானூறு - 24

பாடல் 24. முல்லைத் திணை  பாடியவர் - ஆவூர் மூலங்கிழார்

துறை - தலைமகன் பருவம் கண்டு சொல்லியது.
	 வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉமாம்.
.

 மரபு மூலம் - வேந்தன் பாசறையேமே

	வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
	வளைகளைந் தொழிந்த கொழுந்தி னன்ன
	தளைபிணி யவிழாச் சுரிமுகப் பகன்றை
	சிதரலந் துவலை தூவலின் மலருந்
5	தைஇ நின்ற தண்பெயற் கடைநாள்
	வயங்குகதிர் கரந்த வாடை வைகறை
	விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி
	மங்குன் மாமழை தென்புலம் படரும்
	பனியிருங் கங்குலுந் தமியள் நீந்தித்
10	தம்மூ ரோளே நன்னுதல் யாமே
	கடிமதிற் கதவம் பாய்தலின் தொடிபிளந்து
	நுதிமுக மழுகிய மண்ணைவெண் கோட்டுச்
	சிறுகண் யானை நெடுநா வொண்மணி
	கழிப்பிணிக் கறைத்தோல் பொழிகணை யுதைப்புத்
15	தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்துக்
	கழித்துறை செறியா வாளுடை யெறுழ்த்தோ
	ளிரவுத்துயின் மடிந்த தானை
	யுரவுச்சின வேந்தன் பாசறை யேமே

 சொற்பிரிப்பு மூலம்

	வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த
	வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
	தளை பிணி அவிழா சுரி முகப் பகன்றை
	சிதரல் அம் துவலை தூவலின் மலரும்
5	தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்
	வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை
	விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி
	மங்குல் மா மழை தென் புலம் படரும்
	பனி இரும் கங்குலும் தமியள் நீந்தி
10	தம் ஊரோளே நன்_நுதல் யாமே
	கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
	நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு
	சிறு கண் யானை நெடு நா ஒண் மணி
	கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு
15	தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து
	கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள்
	இரவு துயில் மடிந்த தானை
	உரவு சின வேந்தன் பாசறையேமே.

அடிநேர் உரை 
	
	வேள்வி செய்யாத பார்ப்பான் அறுக்கும் அரத்தால் துண்டாக்கி எடுத்த
	வளையல்கள் போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற
	கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் போதுகள்
	சிதறுகின்ற அழகிய துளிகள் தூவுதலால் மலர்கின்ற
5	தைத்திங்களில் நின்று குளிரப் பெய்யும் கடைசி நாளில்
	ஒளிவிடும் (ஞாயிற்றின்)கதிர்கள் ஒளிந்திருக்கும் வாடை வீசும் வைகறையில்
	உச்சிவானமே உரிந்து விழுவது போல் அகன்ற வானில் இயங்கி
	பஞ்சுமூட்டத்துடன் பெரு மழை தென்திசையில் சென்று ஏகும்
	பனி கொட்டும் கரிய இருட்டாகிய வெள்ளத்தைத் தனி ஒருத்தியாய் நீந்தித்
10	தனது ஊரில் இருக்கிறாள் நல்ல நெற்றியை உடையவள்; நானோ
	காவலை உடைய கதவை முட்டுவதால் பூண் பிளந்து
	கூரிய முனை மழுங்கிப்போன மொண்ணையான வெள்ளிய தந்தத்தை உடைய
	சிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும்,
	கழியில் பிணித்த கரிய தோல் கேடகத்தில் வந்து தைக்கும் அம்புகளின் ஓசையும்,
15	முழங்கும் ஓசையை உடைய முரசின் ஒலியுடன் சேர்ந்து ஒலிக்கும் யாமத்தில்
	உருவி மீண்டும் உறையில் இடாத வாளையுடைய வலிய தோளினையும்
	இரவில் தூக்கத்தை முடித்துவிட்ட சேனையையும் உடைய
	மிக்க சினம் கொண்ட வேந்தனின் பாசறையில் உள்ளேன்.

அருஞ்சொற் பொருள்:

துமி = வெட்டு, துண்டாக்கு, அறு; கொழுந்து = முன்பகுதி, நுனி; சுரி = சுருள்; சிதரல் = சிதறிய துளிகள்; 
துவலை = மழைத்தூவல்; வயங்கு = மின்னு; கரந்த = ஒளித்த; மங்குல் = புகை மூட்டம்; கடி = காவல்; தொடி = பூண்; 
நுதி = கூர்மையான நுனி; தழங்கு = முழங்கு; எறுழ் = வலிமை; உரவு = மனத்திண்மை.

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	இது முல்லைத்திணைப் பாடல். எனவே, பிரிந்து சென்றிருக்கும் தலைவன் வரவை எதிர்பார்த்துத் தலைவி 
ஆற்றியிருக்கும் நிலையைக் கூறுவது. எனவே 18 அடிகள் கொண்ட இப் பாடலில் தலைவி ஆற்றியிருக்கும் நிலையைப் 
புலவர் 10 அடிகளில் வருணிக்கிறார். தலைவன் வருவதாகச் சொல்லிச் சென்ற காலம் வந்துவிட்டதன் அறிகுறிகள் 
தோன்றினும், தலைவன் வருவதற்கான அறிகுறிகள் தோன்றவில்லையே என்ற தலைவியின் கூற்றுகள் இந்த வகைப் 
பாடலில் அடங்கும். ஆனால், இங்கோ, திரும்பிச் செல்லும் பருவம் வந்தும், செல்ல முடியாத நிலையிலிருக்கும் தலைவனின் 
கூற்றாக இப் பாடல் அமைந்துள்ளது. இதனையே ‘தலைமகன் பருவங்கண்டு சொல்லியது’ என்று துறை கூறுகிறது. 
போர்மேல் சென்றிருக்கும் தலைவன், போர் முடிந்தும், இன்னும் புறப்படாத நிலையில், வேந்தன் புறப்படுவதற்காகக் 
காத்திருக்க-வேண்டியிருக்கிறதே எனத் தன் நெஞ்சுக்குச் சொல்லிக்கொள்வதாகவும் இப் பாடலை எடுத்துக்கொள்ளலாம். 
எனவேதான் இப் பாடலுக்கு இரண்டு வகைத் துறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாடல் விளக்கம்

	வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த
	வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
	தளை பிணி அவிழா சுரி முகப் பகன்றை
	சிதரல் அம் துவலை தூவலின் மலரும்

	வேள்வியைச் செய்யாத பார்ப்பான் சங்கு வளையல் செய்வதற்காகச் சங்கினை அறுக்கிறான். சங்கின் முகப்பில் 
இருக்கிற கூம்பு போன்ற பகுதியை முதலில் அறுத்து ஒதுக்குகிறான். இந்தப் பகுதியே இங்கு சங்கின் கொழுந்து எனப்படுகிறது. 
கொழுந்து நீக்கிய பகுதியைத் தேவையான அகலத்தில் அறுத்தால் வட்டமான அமைப்பு கிடைக்கும். இதனை அரம் கொண்டு 
அராவிச் சீரான வடிவத்திற்குக் கொண்டுவரவேண்டும். இந்த அரம் சிம்புகளைத் தேய்த்துச் சரிசெய்து பளபளப்பாக்கும். 
இது தட்டையானது. ஆனால், சங்கை அறுப்பதற்கு பற்களை உடைய ஒரு அரிவாள் வேண்டும். இதனைக் கருக்கரிவாள் என்பர்
(serrated blade). இதனையே வாள் அரம் என்கிறார் புலவர். வாளின் அமைப்பில் உள்ள – (பற்கள் உள்ள) அரம் என்பது 
இதன் பொருள். 

			
							tarreynland.blogspot.com 

			
			http://www.flickr.com/photos/martinlabar/281211010/ 

	மழை பெய்து மொட்டு மலருமா?. ஓங்கி அடித்தால் ஒருவேளை நடக்கலாம். ஆனால் இங்கு பெய்வதுவோ துவலை. 
இது drizzle. தூவிவிட்டுப் போகும். இதற்கெல்லாம் மொட்டு விரியுமா? ஒருவேளை சிறிது வாய்திறந்த மொட்டு வேண்டுமென்றால் 
விரியலாம். இதுவோ சுரிமுகப் பகன்றை. தளைபிணி இன்னும் அவிழவில்லை. துவலை வாடைக்காற்றினால் ‘பளீர்’ என்று சுழித்து 
அடிக்கிறது என்கிறார் புலவர். பாறைகள் நிறைந்த கடற்கரையில் ஒரு காற்றுக்காலத்தில் நின்றால், பாறையில் மோதிய பேரலையின் 
திவலைகள் பளீரென நம் முகத்தில் தெறித்துவிழும் இல்லையா? அதுபோல, வாடைக் காற்றினால் துவலை சிதரல் ஆகிறது. சிதரல் 
என்பது சிதறித் தெறித்தல் – splashing. இந்த வேகமான மோதுதலால் மொட்டுகள் சேதமடைவதில்லை – மாறாகப் பிணிப்பு 
அவிழ்கின்றன. சுரிமுகப் பகன்றை சிதரல் அம் துவலை தூவலின் மலரும் என்ற தொடரின் ஒவ்வொரு சொல்லுமே ஒரு கவிதையாக 
விரிகிறதன்றோ!

5	தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்
	வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை
	விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி
	மங்குல் மா மழை தென் புலம் படரும்
	பனி இரும் கங்குலும் தமியள் நீந்தி
10	தம் ஊரோளே நன்_நுதல் --------------------

	இது தை மாதத்தின் கடைசி நாள். மழை நின்று பெய்கிறது. குளிரப் பெய்கிறது. மின்னாமல் முழங்காமல் சீராக 
மழைபெய்தால், ‘இன்னக்கி நல்ல மழை, நின்னு பெஞ்சிச்சு’ என்பார்கள். நின்ற பெயல் என்பதற்கு, அன்றைக்குடன் நின்றுவிடப்போகிற 
மழை என்று பொருள்கொள்வாரும் உண்டு. தைத்திங்கள் கடைநாள் என்பது முன்பனிக்கால இறுதி. மாலை நேரத்தில் தொடங்கி, 
முன்னிரவில் கொட்டும் பனி மாறி, நள்ளிரவில் தொடங்கி விடியற்காலையில் குளிரும் பனியையுடைய பின்பனிக்காலத் தொடக்கம். 
எனவேதான் புலவர் வாடை வைகறை என்கிறார். காலையில் ஞாயிறு தோன்றும்போது அதன் கதிர்கள் பளீரென்று உலகமெல்லாம் 
பாய்ந்து வெளிச்சத்தைப் பரப்பும். இந்த வயங்கு கதிர்கள் இன்று வரமுடியவில்லை. காரணம் மேக மூட்டம். மங்குல் என்பது mist. 
மஞ்சு அல்லது மூடுபனி என்று நாம் அழைக்கும் பனிப்படலம். இதனை ஊடுருவிக்கொண்டு ஞாயிற்றின் கதிர்கள் வரமுடியவில்லை 
என்பதையே வயங்கு கதிர் கரந்த என்கிறார் புலவர். கரத்தல் என்பது மறைந்திருத்தல். அடிவானம் தொட்டு நாலாபக்கங்களிலும் 
விசும்புக்கு ஆடையாய் அமைந்து இயங்கிக்கொண்டிருக்கும் இந்த மேகங்கள் (வியல் இடத்து ஒழுகி), அவற்றினின்றும் கழன்று கீழே 
இறங்குவது போல (விசும்பு உரிவது போல்) நிலத்தில் மங்குலாய்ப் படிகிறது. இந்த மேகக் கூட்டம் பின்னர் மெதுவாகத் தென்திசையில் 
சென்று சேர்கின்றன. இத்தகைய பனிக்காலக் ‘கும்’மிருட்டில் தனியளாய்த் தன் ஊரில் இருக்கிறாள் என் சிறந்த நெற்றியாள்.

	பனி இரும் கங்குலும் தமியள் நீந்தி என்ற தொடரைக் கவனியுங்கள். நீந்துதல் எப்போதும் ஒரு நீர்ப்பரப்பைக் கடப்பதைக் 
குறிக்கும். எனவே இங்கு கங்குல் என்னும் இருளைப் புலவர் வெள்ளமாக உருவகம் செய்கிறார். கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே 
என்ற குறுந்தொகைப் பாடலை (குறு 387) அறிவோம். இந்த அழகிய சொல்லுக்காகவே இதனைப் பாடியவர் கங்குல் வெள்ளத்தார் என்று 
அழைக்கப்படுகிறார். இங்கே புலவர் கங்குலை வெள்ளம் என்று நேராகக் கூறாமல், அதனை நீந்தி என்ற சொல் மூலம் 
உருவகப்படுத்தியிருக்கிறார். இந்தக் கங்குல் வெள்ளத்தில் தலைவி மூழ்கிப்போகவில்லை. போயிருந்தால் அது நெய்தலாகியிருக்கும். 
இது முல்லை அல்லவா? எனவே இந்தக் கங்குலை அவள் நீந்திக்கொண்டிருக்கிறாள் என்கிறார் புலவர். நீந்தி என்ற சொல்லே 
surviving but struggling என்ற பொருள் கொடுத்து முல்லைத்திணை ஆக்குகிறது. தலைவியோடு உடனுறைவோர், உடன்பழகுவோர் 
எத்தனை பேர் இருப்பினும், இரவில் அவள் தமியள்தானே! இரவில் உடன்துயில்வோர் இருப்பினும், அவள் நினைவுகளால் 
தமியள்தானே! அந்த இருளும் பனிக்கால இருள். தலைவன் உடன் இல்லாததால் நீண்டு தெரியும் இருள். பனி இரும் கங்குல் என்ற 
அழகிய சொல்லாட்சியின் ஆழத்தைக் கவனித்தீர்களா? 

	-------------- ------------------- ----------------- யாமே
	கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
	நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு
	சிறு கண் யானை நெடு நா ஒண் மணி
	கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு
15	தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து
	கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள்
	இரவு துயில் மடிந்த தானை
	உரவு சின வேந்தன் பாசறையேமே.

	ஆளரவம் அற்ற தனிமையின் இருளில் தலைவி. ஆனால் சுற்றிலும் கண்ணுறங்கா மனிதருடன், அரவம் மிக்க பாசறையில் 
தலைவன் என்ற மாறுபட்ட காட்சியைக் காட்டுகிறார் புலவர். போர்ப்பாசறையில் தனிமை ஏது? ஒரு பக்கம் யானைப் படை. அவற்றின் 
வெள்ளிய தந்தங்கள் பகைவர் கோட்டைக் கதவுகளை முட்டித்திறக்க முயலும்போது முறிந்துபோய் மொட்டையாய்ப் போய்விட்டிருந்தன. 
அவற்றில் ஏறப்போட்டிருந்த பூண்கள் வாய்பிளந்து நிற்கின்றன. யானைகள் தம் சிறிய கண்களைச் சிமிட்டிக்கொண்டே அசைந்தவாறே 
நின்றுகொண்டிருப்பதால் அவற்றின் பக்கங்களில் தொங்கும் மணிகள் மாறிமாறி ஒலி எழுப்புகின்றன. இன்னொரு பக்கம் வில்வீரர் கூட்டம். 
அவரின் கைகளில் கழிகளில் பிணிக்கப்பட்ட கரிய தோலால் ஆன கேடயங்கள். எதிரே நிற்கும் வீரர் அவற்றின் மீது அம்பெய்ய, வேகமாய் 
வந்து அவற்றில் குத்திக்கொண்டு நிற்கும் அம்புகள் ‘சரக், சரக்’ என்று ஒலியை ஏற்படுத்திக்கொண்-டிருக்கின்றன. போர்முரசமோ 
‘டம டம டம’ வென்று முழங்கிக்கொண்டிருக்கிறது. அதனைக் கேட்டு வாள்படையினர் தமது குட்டித்தூக்கத்தை முடித்து எழுகின்றனர். 
இந்த நள்ளிரவில் வாளை உறையிலிருந்து உருவி, மீண்டும் அதனை உறைக்குள் இடாமல் கைகளில் பிடித்துக்கொண்டிருக்கிறான் வலிய 
தோள்களையுடைய வேந்தன். பகைவர் மேல் அவன் கொண்டிருக்கும் சினம் குறைந்தபாடில்லை (உரவுச் சினம்). இத்தகைய ஆரவார 
ஒலிகளும், முனைப்புள்ள செயல்பாடுகளும் நிறைந்த ஒரு சூழலில் நம் பாடல் தலைவனுக்கு வீட்டு நினைப்பு வந்திருக்கிறது. இன்னும் 
இந்தப் பாசறை வாழ்க்கை முடியவில்லையே, தலைவி தனியாய்க் காத்திருப்பாளே, ‘வருவேன்’ என்று சொல்லி வந்த நாளும் வந்து 
போய்க்கொண்டிருக்கிறதே என்று ஏக்கத்துடன் தலைவன் கூறுவதாக இந்தப் பாடலைப் புலவர் அமைத்திருக்கிறார்.

சில ஐயங்கள்

	இந்தப் பாடலில் வைகறையில் தென்புலம் படரும் மழைமேகங்கள் கூறப்படுகின்றன. பாசறைக்கண் யாமத்து நடக்கும் 
செயற்பாடுகள் விவரிக்கப்படுகின்றன.

தலைவன் கூற்று நிகழும் நேரம் எது?

	யாமத்துப் பாசறையில் யானை மணியோசை கேட்கலாம்; கேடயத்தில் அம்புகள் வந்து தைக்கும் ஒலி எப்படி வரும்? 
அத்தசாமத்தில் அம்பு விடுபவர்கள் யார்?

யாமத்தில் தழங்குகுரல் முரசம் எதற்கு முழங்குகிறது?

	இரவுத்துயில் மடிந்த தானை என்பதற்கு, இரவில் அயர்ந்து தூங்கும் சேனைகள் என்ற உரையாசிரியர் கூற்றுப்படி, 
இத்துணை ஆரவாரத்தில் சேனைகள் எவ்வாறு அயர்ந்து தூங்கும்?

	வைகறை .... தென்புலம் படரும் என்ற தொடருக்கு, விடிந்தால் தெற்கில் செல்லக்கூடிய என்ற பொருளே சிறந்ததாகப் படுகிறது. 
எனவே, இது வைகறைக்கு முந்தைய காலம் – கடையாமம். அதனால்தான் பகன்றை தானாக மலராமல் நீரடித்து மலர்கிறது. 
எனவே பாடலின் காலம் கடையாமத்துக் கடைசி – வைகறை நேரம்.

	யானைகளின் தந்தங்களைப் பற்றிக் கூறவந்த புலவர், கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து என்கிறார். 
எனவே, தலைவன் சேர்ந்துள்ள தானை மூடிக்கிடக்கும் எயில் கதவை முட்டித்திறக்க முயல்கிறது என்பது தெளிவாகிறது. 
எனவே இது உழிஞைப் போர். (கோட்டையை முற்றுகையிட்டுப் போர் செய்தல்) எனவே, வேந்தனின் பகைவர் கோட்டைக்குள் 
இருக்கின்றனர். வேந்தனின் பாசறை கோட்டைக்கு வெளியே இருக்கிறது ஏற்கனவே போர் பலநாட்கள் நடந்துகொண்டிருக்கிறது. 
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து என்பதில் தழங்கு குரல் என்பது என்ன? தழங்கு என்பதற்கு, ஒலி, முழங்கு எனப் 
பொருள் கூறப்படுகிறது. 

	உண்டு மகிழ்தட்ட மழலை நாவின்
	பழஞ்செருக்காளர் தழங்கு குரல் தோன்ற 

	– என்கிறது மதுரைக்காஞ்சி (668-9). நிறையக் குடித்துவிட்டுத் தூங்கியவர்கள், காலையில் போதை தெளியாத நிலையில், 
நாக்குழற பேசுவார்களே அதுவே தழங்கு குரல். எனவே இது ஓங்கி முழங்குவது அல்ல. மழை மேகங்கள் கூடி வரும்போது, 
‘டமால்’ என்ற இடிமுழக்கத்து முன்னர், ‘கடபுட கடபுட கடபுட’-வென்று ஒலி எழுப்புமே அது தழங்கு குரல். அது எதற்காக 
யாமத்தில் முழங்குகிறது? 

	பெருஞ்சோறு உகுத்தற்கு எறியும்
	கடுஞ்சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே – பதிற்றுப்பத்து 30/43-44
	வேறுபுலத்து இறுத்த கட்டூர் நாப்பண்
	கடுஞ்சிலை கடவும் தழங்கு குரல் முரசம் – பதி. 68/2,3

	(கட்டூர் = பாசறை; கடுஞ்சிலை கடவும் = வீரரைப் போர்க்கண் செலுத்தும் குறிப்பு – ஔவை.சு.து. உரை)

	தழங்கு குரல் முரசம் காலை இயம்பக்
	கடுஞ்சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே – ஐங்.448/1,2

	என்பவை போன்ற எடுத்துக்காட்டுகள் முரசின் தழங்கு குரல் ஓர் அறிவிப்பிற்கான ஒலிப்பு ஓசை என்பதை 
உணர்த்துகின்றன. இடுப்பில் தம்பட்டத்தைக் கட்டிக்கொண்டு, இரண்டு வார்களினால் மாறிமாறி அடித்து, தெருமுனைகளில் 
அறிவிப்புச் செய்கிறவர் எழுப்பும் ஒலியைப் போன்றதுதான் இதுவும். முரசறைந்து செய்தி அறிவிக்கும்போது எழும் ஒலியே 
தழங்கு குரல். எனவே, முரசின் தழங்கு குரல் அறிவிப்பிற்கானது. அப்படியென்றால் இப் பாடலில் என்ன அறிவிப்பு 
செய்யப்படுகிறது? வைகறைப்போதில் – அதிகாலை 2 மணிக்கு – முரசறைந்து அன்றைய நாளுக்குரிய பணிகளின் 
தொடக்கத்திற்காகக் கடையாமத்தின் இறுதியில் முரசு அறையப்படுகிறது என்று கொள்ளலாம். முரசின் அழைப்பு கேட்டு 
யானைகள் தயார்செய்யப்படுவதால் மணியோசை எழுகிறது. தோல்கேடயத்தில் அம்புகள் வந்து தைப்பது எப்படி? ஒருவேளை, 
இரவு முழுக்கத் தூங்காமல், வில்வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்திருக்கலாம். கழிப்பிணிக் கறைத்தோலைக் கழியோடு சார்த்தி 
வைத்துத் தொலைவில் நின்று அதன்மேல் அம்பெய்திப் பயிற்செய்திருக்கலாம் – கிரிக்கட்டில் இன்றைய net practice போல. 

	கழித்து உறை செறியா வாள் உடை எறுழ்த்தோள்
	இரவுத்துயில் மடிந்த தானை

	உரவுச் சின வேந்தன் -- என்பதில்

	(கழித்து உறை செறியா வாள் உடை எறுழ்த்தோள்) உரவுச் சின வேந்தன்

	(இரவுத்துயில் மடிந்த தானை) உரவுச் சின வேந்தன்

	என்று கொண்டு, முதல் இரண்டு அடிகளையுமே, தனித்தனியாக மூன்றாம் அடிக்கு அடைமொழியாகக் கொள்கின்றனர் 
உரையாசிரியர். இங்கே தானை என்பதை வாள்வீரர் அடங்கிய காலாட்படைக்குக் கொள்ளலாம். அவர்கள் இரவில் தூங்கும்போதும் 
எப்போதும் தயார்நிலையில் இருப்பதற்காக உருவிய வாளுடன் துயின்றனர் என்றும் கொள்ளலாம். அப்படியெனில், முதல் அடியை 
இரண்டாம் அடிக்கு அடைமொழியாகவும், அந்த இரண்டனையுமே ஒன்றாக்கி, அதனை மூன்றாம் அடிக்கு அடைமொழியாகவும் 
கொள்ளலாம். மடிந்து என்பதற்கு அயர்ந்து தூங்கி என்ற பொருள் பொருந்துமா என ஆராயலாம். மடி என்ற வினைச்சொல்லுக்கு
 - தலைசாய்தல், To droop, as the head of one asleep or as sheafs of grain in a field; என்று பேரகராதி ஒரு பொருள் 
கூறுகிறது. எனவே, உருவிய வாளை அருகில் வைத்து, ஏதாவது ஒன்றன்மீது சாய்ந்து தலைசாய்த்து ஒரு குட்டித்தூக்கம் 
போட்டதையே இது குறிக்கிறது எனலாம். துயில் மடிந்த தானை என்பது கடந்தகாலத்தைக் குறிப்பதால், அவர்கள் துயில் மடிந்து, 
முரசொலி கேட்டு எழுகின்றனர் என்று கொள்ளலாம். எனவே, ஒரு நாள் போர் முடிந்து, மறுநாள் போருக்கான ஆயத்தங்களில் 
சிலர் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்க, சிலர் சிறுதூக்கம் போட, அந்த நாளின் கடையாமமும் முடிந்து, வைகறைத் தொடக்கத்தில் 
ஒலிக்கும் காலையை இயம்பும் முரசொலியைக் கேட்ட தலைவன், ‘இன்றைக்கும் போர் இருக்கிறது. அது என்றைக்கு முடிய?’ 
என்று ஏங்கிப் பாடுவதாக இப் பாடலைக் கொண்டால் முன்பு எழுப்பிய கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைக்கும்.

மூலங்கிழாரின் நுட்பச் செய்திகள்

	தளைபிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை துவலையின் சிதரலால் மலர்வதன் பொருளைப் பாடல் விளக்கத்தில் கண்டோம். 
எனவே பகன்றை தானாக மலரவில்லை எனத் தெரிகிறது. பகன்றை என்பது operculina turpethum என்ற morning glory குடும்பத்தைச் 
சேர்ந்த்து என்பர். Most morning glory flowers unravel into full bloom in the early morning என்கிறது விக்கிப்பீடியா. எனவே 
பகன்றை காலையில் மலரும். ஆனால் இங்கு நாம் காண்பது கடையாமம் கழிந்த வைகறைப் பொழுது. அதிகாலை 2 மணி. அப்போது 
பகன்றை மலராது. எனவேதான், ஓங்கி வீசும் வாடைக் காற்றில் தெறித்துவிழும் திவலைகளால் பகன்றை மலர்கிறது என்கிறார் புலவர்.
அவர் இப்படிக் கூறுவதன் காரணம் என்ன? இழுத்துக்கொண்டே போகும் போர் தானாக முடிய இன்னும் எத்தனை நாட்களோ? 
அன்றைய போரில், தெறித்து விழும் நீர்த்துளி போல, அடித்தது யோகம் என நல்வாய்ப்புகள் கூடிவந்தால், பிணி அவிழாப் பகன்றையும் 
மலர்வது போல, முடியாத போரும் முடிவுக்கு வரும் என்று தலைவன் ஏங்குவதாகப் புலவர் கூறுகிறாரோ?

	அடுத்து, தைத்திங்கள் கடைசிநாளில் வானமே உரிந்து விழுவதுபோல் பனி மூட்டமாய் மேகங்கள் கிழிறங்கி, பின்னர் 
தென்புலம் படரும் என்ற செய்தியைப் புலவர் குறிப்பிடுவது எதற்காக? அக்டோபர் 20-வாக்கில் வடகிழக்குப் பருவக்காற்று தமிழகத்தில் 
மழையைக் கொணரும். இது ஐப்பசி தொடக்கம். அதாவது கூதிர்கால ஆரம்பம். சித்திரையிலிருந்து ஆடி வரையிலான வேனில் காலமும், 
ஐப்பசியிலிருந்து கார்த்திகை முடிய கூதிர்காலமும் சங்க கால மன்னர்கள் பேர்மேல் செல்வதற்கு உரிய காலங்களாகக் கொள்வர். 
முன்னது வேனில் பாசறை, பின்னது கூதிர்ப் பாசறை. இப் பாடலில் நாம் காண்பது கூதிர்ப் பாசறை. ஆனால் இந்த கூதிர்ப் பாசறை 
மார்கழியும் கடந்து தையும் முடியும் நாளிலும் முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. காரணம், பகைவேந்தன் தன் கோட்டையை 
இறுக்க மூடிக்கொண்டான். யானைகள் மதில் கதவுகளைக் குத்தித் தம் கோடுகளை மொட்டையாக்கிக் கொண்டதுதான் மிச்சம். ஐப்பசியில் 
ஆரம்பித்த வடகிழக்குப் பருவ மழை மார்கழி வரை தமிழ்நாட்டில் மழையைக் கொணரும். அதன்பின் அது தெற்கு நோக்கி நகர்ந்து 
இலங்கைக்குச் செல்கிறது. இதை நுட்பமாகக் கணித்துள்ள புலவர் மங்குல் மாமழை தென்புலம் படரும் என்கிறார். தை முடிந்து மாசி 
தொடக்கம் பின்பனிக்காலம். நள்ளிரவிலிருந்து விடியும் வரை நடுக்கும் குளிர் இருக்கும். அந்தக் குளிரில், தன்னந்தமியளாய்த் தலைவி 
கங்குலுடன் போராடிக்கொண்டிருக்கிறாள். ஒருவேளை, இந்த முன்பனியும் முடிந்து வேனில் தொடங்கினால், கூதிர்பாசறையை 
வேனிற்பாசறையாய் வேந்தன் தொடர்ந்துவிட்டால்? – என்று தலைவன் எண்ணி நடுங்குகிறானோ?
  
			

சங்கு வளையல் செய்யும் கலை

	சங்கினை வாளரத்தால் அறுத்து வலையல் செய்யும் கலை இன்னும் இருக்கிறது. ஆனால் இக் கலை மேற்கு வங்கத்தில்தான் 
வளர்ந்து வருகிறது. ஆனால், அங்கு சங்கறுப்போர், நல்ல சங்குகளை வாங்க இன்னமும் தூத்துக்குடிப்பக்கம்தான் வருகின்றனர். 

	தமிழ்நாட்டில் அரிக்கமேடு என்ற இடத்திலும் கொடுமணலிலும் நடந்த அகழ்வாய்வுகளில் அங்கு சங்கறுக்கும் தொழில் 
நடைபெற்றதற்கான அடையாளங்கள் பெறப்பட்டுள்ளன.

			

			

			
			http://pcdn.500px.net/4322215/be84c68f084b5d29ee81d596e41ccecbef177d0e/4.jpg

			

	A small amount of chank cutting and engraving is done at Kilakarai in Tamil Nadu, mostly for the local souvenir trade. 
Historically the chank shell industry was based in Dacca (now Dhaka), the ancient capital of Bengal, but after partition the majority 
of the chank workers and their families migrated into West Bengal. Nowadays the main chank emporia are in Calcutta, depending 
chiefly on the material supplied from Tamil Nadu as there is no chank fishery off the coast of Bengal. 
	The best shells are from the Tinnevelly coast and a similar quality but with more shells of a smaller size are those from 
Rameswaram. The sawn slices are also graded; the selected best, cut from Tuticorin shells (titkutti grade)…

நன்றி: http://www.princelystates.com/ArchivedFeatures/fa-03-03d.shtml